ஆ. மாதவனின் கிருஷ்ணப் பருந்து – நாஞ்சில் நாடனின் ‘யாத்ரா’ விமர்சனம்

yathra1982cover34-36a

என் ‘குழந்தை‘ வெளியான அதே ‘யாத்ரா’ (1982) இதழில் அண்ணன் நாஞ்சில்நாடனின் இந்த விமர்சனம் வெளியாயிற்று. வெங்கட் சாமிநாதன் ஐயா கேட்டதற்காக விமர்சனத்தை அனுப்பியதாகவும் சிற்றிதழில் வெளியான அவருடைய முதல் கட்டுரை அதுவென்றும் துபாயில் சந்தித்தபோது நாஞ்சிலார் சொன்னதாக நினைவு. ‘ஒரேதரியா என் பின்னாலேயே அலையாதீங்க..’ என்று அஸ்மா என்னை விரட்டியதால் பழைய ‘ஹஜானா’வை இன்று கிளற ஆரம்பித்தபோது இது கிடைத்தது. பதிவிடுகிறேன் – அலையாதவர்கள் வாசிக்க.

பொக்கிஷமாய் நான் வைத்திருக்கும் ஒரு கையெழுத்து/கடிதம் அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ். யார் அந்த எழுத்தாளர்? யூகித்துக்கொண்டு இருங்கள்! – ஆபிதீன்

***

கிருஷ்ணப் பருந்து

நாஞ்சில் நாடன்

ஆ. மாதவனின் சிறுகதைகளில் எனக்கு ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள் என்று யார் பட்டியல் போட்டாலும் அதில் அவர் பெயர் இருக்கும். வைப்பு முறை அவரவர் மனோலயங்களைப் பொறுத்து இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்கையில், ‘எட்டாவது நாள்’, ‘காளை’, ‘நாயனம்’, ‘புறா முட்டை’, கோமதி’ என்று நாலைந்து கதைகள் நெஞ்சில் நெருடுகின்றன. (தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடும்படியான இன்னொரு கோமதியும் உண்டு. அது கி.ராஜநாராயணனுடையது) திருவனந்தபுரத்து சாலைக்கடைத்தெருவும் அதன் உயிர் இயக்கங்களும் மாதவன் கதைகளில் பூச்சுமானங்கள், தற்குறிப்பேற்றங்கள் இன்றி அழகாக வெளிப்படும். இந்தக் கலை ஆ. மாதவனுக்கு ‘புணலும் மணலும்’ என்ற முதல் நாவலில் கை கொடுக்கவில்லை. ஒரு நாவலாசிரியனாக அதில் அவர் வெளிப்படவேயில்லை. இந்தப் பின்னணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவரது இரண்டாவது நாவல் ‘கிருஷ்ணப் பருந்து’.

புத்தகத்தை எடுத்தவுடன் செவளையில் அறைவது அதன் முகப்பு அட்டை. இந்தியாவைப் போல் புத்தகங்களை இவ்வளவு ஆபாசமாகத் தோற்றுவிக்கும் தேசம் மற்றொன்று இருக்கும் என்றுதோன்றவில்லை என்கிறான் ஜே.ஜே. இது புத்தகத்தின் தயாரிப்புக்கு சொல்லப்பட்டதல்ல. தயாரிப்புக்கு மாத்திரம் என்று எடுத்துக்கொண்டால் இந்த அட்டை நல்ல எடுத்துக்காட்டு.

நாவலின் ஆரம்பத்தில், ஐம்பது ஐம்பத்திரண்டு வயதில் தாடியும் எளிமையும் பத்தியம்போல் சாப்பாடும் பற்றற்ற நலையுமாக நமக்கு அறிமுகமாகும் குருஸ்வாமி, புற உலகுக்கு சாமியப்பா, உள்ளுக்குள் குருஸ்வாமியாக இருக்கவும் முடியாமல் சாமியப்பாவாக மாறவும் முடியாத தத்தளிப்பு, இந்தத் தத்தளிப்பு நாவல் முழுவதும் நன்றாக வந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் குருஸ்வாமியின் வாழ்வில் பல நிகழ்வுகள் ஏற்பட்டுப் போயின. சிறு வயதில் அம்மாவின் இறப்பு, ஆடம்பரங்களும் அச்சிகளுமாய் ஆடித்தீர்த்த அப்பா, செவிலியாக வளர்த்த அம்மு அம்மையை பச்சை பச்சையாய் அப்பாவுடன் பார்த்த அருவருப்பு, முப்பது வயதில் சுப்புலக்ஷ்மியுடன் திருமணம், ஆறேழு வருஷம் அவளுடன் வாழ்வு, இரண்டு மூன்று பெற்று பிரசவ அறையிலேயே பறி கொடுத்தது, மூன்றாவது பிரசவத்தில் கூடவே போனது எல்லாமுமாக குருஸ்வாமியை துறவின்பால் செலுத்தியபோது  அங்கிருந்து திருப்பி உள்முகமாக அவரைச் செலுத்துவது பாலுணர்வு. ‘தன்னை யாராவது அழைக்க மாட்டார்களா என்ற தாக உறக்கத்தின் கனவும்’, ‘இனிமையான இசை லயம் மனதை நெருடும் போதெல்லாம் குருஸ்வாமி இனம் புரியாத ஒரு சல்லாப லயத்தில் அமிழ்ந்து போவதும்’ அதனால்தான்.

பள்ளிப் பருவத்தில் ‘பச்சை பச்சையாக பிறந்த மேனியில் அப்பாவின் நரைத்துப்போன நெஞ்சு ரோமத்தை வருடியவாறு , அப்பாவின் வெற்றிலைச் சாயம் படிந்த தொங்கும் உதட்டைக் கடித்தவாறு’ அம்மு அம்மையைப் பார்த்து, ‘அம்மு அம்மோவ் நீ சுத்த அமுக்க.. நீ எனக்கு வேண்டாம். ஆரும் என்னைத் தொடாண்டாம்’ என்று அருவருப்பில் அலறும் குருஸ்வாமி  ஏழாவது படிக்கும்போது ‘அம்மு அம்மையின் சாயல் இருக்கிறபடியால் சுகந்தாவை ‘லவ்’ செய்கிறான். ‘சுப்புலட்சுமியை மணந்த புது இரவுகளிலும் கூட பின்னணியில் ஊதுபத்தியாக மணத்தது அம்மு அம்மையும் அம்மு அம்மையின் சாயலைக் கொண்ட சுகந்தாவும் என்பது தெரியும்போது குருஸ்வாமியின் பாலுணர்வின் முளை கூடும் புள்ளி அம்மு அம்மை என்பது தெளிவாகிறது. இந்த ‘நினைவு விதைத்து விட்டுப் போன சூன்யப் பொறி’தான் வேறு வேறு இடங்களில் வேறு வேறு விதங்களில் தெறிக்கின்றது.

ராணியின் மீது பாலுணர்வின் படர்வு எப்போது ஏற்பட்டது என்று குருஸ்வாமிக்கே தெரியாது. ஆனால் ஏற்பட்டுவிட்டது என்பதை நாம் அனுமானிப்பதைப்போலவே வேலப்பனும் நுணுக்கமாக உணர்ந்து விடுகிறான். ராணிக்கும் கூட ‘குருஸ்வாமியின் தேவையின் அழுத்தம் என்னவென்று புரிய ஆரம்பித்தபோது வெளிச்சம் சுற்றுமெங்கும் நெருப்பாக எரிவதாகத் தோன்றியது. எத்தனையோ நாட்களின் அந்தப் புகையை பனி மூட்டமென்று எண்ணியிருந்ததை ஊதி எறிந்த எரியும் நெருப்பு…! இந்த நெருப்பை அணைக்காமலேயே நாவலை முடித்து விடுகிறார் மாதவன். குருஸ்வாமியின் உடலுறவுத் தேவை ஒரு ஆன்மிகத் தளத்தைச் சார்ந்தது என்றும் ராணி அதற்கொரு விலை கேட்பது லௌகீகத் தளத்தைச் சார்ந்தது என்றும் மாதவன் கருதுவது எனக்கு உடன்பாடாக இல்லை. ஆன்மீகத் தளத்தில் இருந்து படிப்படியாக இறங்கி வருவதை நாவலின் மற்றப் பகுதிகள் எல்லாம் சொல்கிறபோது ராணி கேட்கும் விலைக்கு குருஸ்வாமி8 அதிச்சி அடைவதற்கும் காரணமில்லை.

இனியொன்று, இந்த நாவலின் சின்னச் சின்னப் பாத்திரங்கள்.  இந்த நாவலின் வாழ்க்கைச் சாலை மண்ணில் இருந்தே துளிர்ப்படுவதால் பாத்திரங்களில் அதன் ஜீவ சத்துக்கள் காணக்கிடக்கின்றன. வேலப்பன், ராணி, பார்வதி, ரவி, வெங்கு பாகவதர் எல்லாவற்றிலும் மாதவன் தன் சாயத்தை ஏற்ற முயற்சிக்காமல் அவரவர் சொந்தச் சாயத்தோடு உலவவிட்டிருப்பது ஒரு வெற்றி என்றுதான் நினைக்கிறேன். குருஸ்வாமியை ஒரு பகைப்புலனாக வைத்துக்கொண்டு வேலைப்பனை பார்ப்போமானல் பிந்திய தலைமுறையின் மதிப்பீடுகள் மாறிவருவது துல்லியமாகத் தெரிவதைக் காணலாம்.

சாலைப்பின்னணி மாதவனுக்கு தன் காலத்தைப் பற்றிச் சிந்திக்க இந்த நாவலில் நிறைய இடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மாதவனின் படைப்புப் பயணத்தில் இந்த நாவல் ஒரு புதிய திருப்பம் என்கிறார் நகுலன். தமிழுக்கு சமீபத்தில் கிடைத்த அருமையான சேர்மானங்களில் ஒன்று இது என்று எனக்குத் தோன்றுகிறது.

***

நன்றி : ஆ. மாதவன்நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன்

3 பின்னூட்டங்கள்

 1. அனாமதேய said,

  01/05/2013 இல் 00:03

  தி. ஜா. வா?

 2. அனாமதேய said,

  01/05/2013 இல் 07:43

  1982 இல் தமிழ் நாட்டில் யாத்ரா வந்துவிட்டதா? நான் இலங்கையிலிருந்துதான் இந்தப்பெயரில் முதலில் வருவதாக நினைத்திருந்தேன். நீங்கள் கைக்குள் பொத்தியிருக்கும் அந்த கடிதத்தை படிக்க ஆவல்.

 3. தாஜ் said,

  03/05/2013 இல் 10:04

  ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலை நான் வாசித்ததில்லை. 1982 ‘யாத்ரா’ வில் வந்திருக்கும் நாஞ்சில் நாடனின் விமர்சனத்தை படிக்க வாய்ப்பளித்த ஆபிதீனுக்கு நன்றி. அதே இதழில் வெளிவந்திருக்கும் ஆபிதீனின் ‘குழந்தை’ பிற்காலத்தில் படிக்க கிடைத்து படித்திருக்கிறேன். ஆபிதீனின் ‘குழந்தை’ மொழியின் வீச்சை நான் அறிவேன். தமிழக இஸ்லாமியர்கள் எவருக்கும் கிடைக்காததோர் ‘நிகரற்ற மொழி’ அதனை நான் நினைவில் அளந்த போது… நாஞ்சில் நாடனின் இந்த ‘கிருஷ்ணப் பருந்து’ விமர்சன மொழி மனதில் ஒட்டவே இல்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s