எஸ். ஆல்பர்ட் கவிதையும் நகுலனின் ‘நாய்கள்’ முன்னுரையும்

மதிப்பிற்குரிய ஆல்பர்ட் சாரின் – ஒரே ஒரு? – கவிதை நகுலனின் ‘நாய்கள்’ நாவலில் இருப்பதாக நண்பர் எம்.டி.எம் சொன்னார். நாற்றமிகு நாகூர் வந்ததுமே நாய்களைத்தான் முதலில் பார்த்தேன் 🙂 .  ‘இன்று’ பத்திரிகையில் அன்று வெளியான எஸ். ஆல்பர்ட் கவிதை முதலில்…

இல்லாத கிழவி

விரிந்திருந்த பழம் பலகையை
இல்லாத கிழவி தின்றாள்;
தின்றலும் கிழவியும் முடிந்ததும்
சென்றவன் பார்க்க நேர்ந்தது
பலகை சிறுத்திருந்தது
வயிறு பெருத்திருந்தது

***

சில வார்த்தைகள் – நகுலன்

nakulan-naaykal1இது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் “நிழல்கள்”, “நினைவுப் பாதை” இவ்விரண்டும் புஸ்தக – ஸ்தாபனங்கள் வெளியிட்டவை. “ரோகிகள்” “குருஷேத்ரம்” என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று – ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். இது இப்பொழுது பிரசுரமாகிறது.

இந்த நாவல் எழுதுவதற்கும் பிரசுரமாவதற்கும் காரணம் எனது சமீப காலத்தியச் சில அனுபவங்கள். இப்பொழுது சில காலமாகப் “பசுவய்யா” எழுதிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவர் எழுதிய “நான் கண்ட நாய்கள்” என்ற கவிதைதான் இதற்கு மூல வித்து. நாவலில் முதல் அதிகாரத்தில் இந்தக் கவிதையை நான் வேறு வகையில் அப்படியே எழுதியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் ந.முத்துசாமி “பசுவய்யா” எழுதிய “ஆந்தைகள்” என்ற கவிதையில்  “ஆந்தை” என்று குறிப்பிடப்பட்டவன் நான்தான் என்றும் (ஞானரதம் – அக்டோபர்-73. ரசமட்டம் பக்கம் 15) இதைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி (பசுவய்யா) இது இப்படியில்லை என்றும் , எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களாகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளியிட “பாத்திரப் படைப்பிற்கான நோக்கங்கள் என்ற பாதுகாப்பில்” முதல் முதலாக நாவல் எழுதினவன் நான்தான் என்றும் (ஞானரதம் – நவம்பர் 1973 – ரசமட்டம் பக்கம் 21) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே சமயத்தில் ‘ஸிந்துஜா’ என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை ஒன்றை வைத்துக்கொண்டு “தனக்கே” (?) தெரியாமல் கவிதை எழுதும் கவிஞர்களில் நான் ஒருவன் (சதங்கை – செப்டம்பர் 73 – அலுப்புத் தரும் நிழல் யுத்தம் – பக்கம் 24) என்று குறிப்பிட்டிருந்தார். இதே பத்திரிகையில் திரு. வெங்கட்சாமிநாதன் என்னுடைய எந்த எழுத்தும் அவருக்கு ஆண்டர்ஸனின் சக்கரவர்த்தியின் ஆடையைத்தான் (சதங்கை – டிசம்பர் 73, பக்கம் 3) நினைவுறுத்துகிறது என்று எழுதியிருந்தார்.

இதையெல்லாம் நான் இங்கு எழுதுவது ஒரு விவாதத்தைக் கிளப்புவதற்கு அன்று. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நான் அனுபவத்தை எப்படிக் கையாள்கிறேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்கே. “பசுவய்யா” எழுதிய “நான் கண்ட நாய்களி”ல் வரும் நாய்களில் நிச்சயமாகப் “பசுவய்யா” என்னை ஒரு நாயாகக் குறிப்பிடவில்லை! ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறியீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் “சக்கரவர்த்தியின் ஆடை என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விசயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில்அமைத்தேன். பிறகு நண்பர் ‘ஸிந்துஜா’ குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொண்டு  அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம்!.பிறகு இந்நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு. டி.கே.துரைசாமி வேறு! இந்தப் புதுக்-கவிதை சகாப்தத்தில் அதிகமாக சர்ச்சைக்கு உட்பட்டவர் அமரகவி சி.சுப்ரமண்ய பாரதி. அவர் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வந்து சேர்ந்தது
அகஸ்மாத்தாக வந்த விளைவு என்று மாத்திரம்.

கடைசியாக ஒரு வார்த்தை – நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள்; ஆனால் எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் “நகல்கள்” (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்!) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.

இந்த நாவல் உருவாவதற்குரிய சூழ்நிலையைச் சிருஷ்டி செய்த மேற்கூறிய என் நண்பர்களுக்கு என் நன்றி. இந்த நாவலைப் படித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்கு என்னைத் தூண்டி உற்சாகமளித்த நண்பர்கள் சர்வ ஸ்ரீ ஷண்முக சுப்பையா, ஸ்ரீ நீல. பத்மனாபன் ஆகியவருக்கும், இதை அச்சுப் பிழையின்றி தங்களுக்கே உரிய சிறப்பான முறையில் சிறப்பாக வெளியிட்டு இதை விநியோகிக்க முன் வந்த “வாசகர் வட்ட”த்திற்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

“நகுலன்”
18-2-74
திருவனந்தபுரம்
***

நன்றி : எஸ். ஆல்பர்ட்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s