கந்தூரி ஸ்பெஷல் : காணிக்கை நிலைத்த கதை

கந்தூரியைக் களமாக வைத்து ஆபிதீன் எழுதிய ‘கடை’ படிக்காதவர்களுக்கு இந்தக் கதை தரப்படுகிறது.  எழுதியவர் மர்ஹூம் எஸ்.எஸ்.அலீ (கமலப்பித்தன்) . நூல் : ‘மாபெரும் ஞானி நாகூர் யூசுஃப் தாதா’. கதைக்கு ஆதாரம் கேட்பவர்கள் கந்தூரி பற்றி கவிதை எழுதிய ஜபருல்லாநானாவை தொடர்பு கொள்ளலாம். கண்டிப்பாக ‘தப்ரூக்’ கிடைக்கும்! சரி, இன்றைய ஸ்பெஷலாக கவிஞர் சலீம் எழுதி  ஈ.எம். ஹனீபா பாடிய பழைய பாடல் இங்கே உண்டு. கேட்டுக்கொண்டே வாசியுங்கள் – வாசல் தேடிப் போக.  மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் நாகூர் சேத்தானுடன் இணைந்து பாடிய  ‘வாராரே வாராரே ஞானக்கிளியே’ பாடல் , இன்ஷா அல்லா, ஹத்தத்திற்கு  வரும். அஹ்ஹஹ்ஹாங்….. கூடு வருது பாருங்கடி….! – ஆபிதீன்

***
ஈ.எம்.ஹனீபா பாட்டு : உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே…

***
இறைவன் ஒருவனைக் கடுமையாய்த்
தண்டிக்க நாடினால் அவன் மனத்துள்
இறைநேசர்களைப் பற்றித் தாழ்வான
எண்ணத்தை உண்டாக்கி விடுகிறான்

– மவுலானா ஜலாலுத்தீன் ரூமி
***

nagoe-dargah

காணிக்கை நிலைத்த கதை

ஒரு கட்டத்தில் , ‘ரிக்வத் என்கிற அற்புதத் திருவோட்டை இன்னொரு கூட்டத்தின் உபயோகத்திற்காக (ஷாஹூல் ஹமீது) பாதுஷா நாயகம் தானம் செய்துவிட்ட பிறகு, ஃபக்கீர்களின் உணவு முதலிய தேவைகள், பாதுஷா நாயகத்திற்கு அன்பர்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்கிற காணிக்கைப் பொருட்களைக் கொண்டு நிறைவேறி வந்தன.

சமயங்களில் ஃபக்கீர்மார்கள், நாகப்பட்டினம் முதலான சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று தம் தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

அந்த ஆரம்ப நாட்களில் இருந்து பாதுஷா நாயகத்தை மிகவும் பெருமைபடுத்திக் கொண்டாடிய சிறப்பு நாகப்பட்டினம் வாசிகளுக்கு உண்டு. சின்ன எஜமான் தம் ஊருக்கு விஜயம் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தை ஃபக்கீர்களிடம் அடிக்கடி தெரிவிப்பார்கள்.

இருந்தும் தாதா நாயகம் தம் தந்தையை விட்டு எங்கும் செல்வதில்லை. உள்ளத்தாலும் உடலாலும் சுத்தத் துறவியாயிருந்த அவர்கள் மனத்துள் வேறு ஆசை எதுவும் இல்லாமல் இருந்ததும்தான் காரணம்.

எனினும், ஃபக்கீர்களின் நச்சரிப்பு தாளாமல் தந்தையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஒரு நாள் நாகப்பட்டினம் போய்வரத் துணிந்தார்கள்.

இச்செய்தி நாகப்பட்டின வாசிகளைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திற்று. தெருவெல்லாம் தோரணம் கட்டி வள்ளல் பாதுஷாவின் மைந்தரை வரவேற்றார்கள். மாலை போட்டு மரியாதை செய்தார்கள். ஊர் கூடி விருந்தளித்தார்கள்.

கடைசியில் ஒரு தாம்பாளத்தில், வெள்ளியும் பொன்னும் பணமும் கொண்டு வந்து தாதாநாயகத்தின் எதிரே வைத்து “இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்” என வேண்டினார்கள்.

“இல்லை; சன்மானம் பெற்றுக்கொள்ள நான் அனுமதி பெற்றிருக்கவில்லை” என்றார்கள் தாதா நாயகம்.

“இது சன்மானம் அல்ல; உங்கள் தந்தைக்குச் சேர வேண்டிய காணிக்கை. தந்தைக்கு உரியதை மைந்தரிடம் ஓப்படைக்கிறோம்” என்றார்கள்.

பாதுஷா நாயகத்திற்கு தினந்தோறும் காணிக்கைப் பொருட்கள் வந்தாலும், அவற்றை வள்ளல் நாயகமோ தாதா நாயகமோ கை நீட்டி வாங்குவதில்லை. கொண்டு வருகிறர்கள் அவற்றை ஆண்டவர்களுக்கு எதிரே வைத்து விட்டுச் செல்வார்கள். அல்லது ஃபக்கீர் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போவார்கள்.

இந்த நடைமுறையை அனுசரித்து மாத்திரம் தாதா நாயகம் அப்படி மறுக்கவில்லை; தந்தையாரிடம் முன் அனுமதி பெறாத ஒரு காரியத்தை எப்படிச் செய்வது என்று தயங்கினார்கள்.

வற்புறுத்தலும் மறுப்பும் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் ஃபக்கீர் ஒருவர் குறுக்கிட்டு, “இவற்றைப் பெற்றுக் கொள்வதால் தங்கள் தந்தையார் கோபித்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னவானாலும் இவை உங்களுக்குச் சேர வேண்டிய பொருள்கள்தானே?” என்று சமாதானம் செய்தார்.

அல்லாஹ் நாடி விட்டான்.
தாதா நாயகம் கைநீட்டி விட்டார்கள்.
தங்கக் கிணறு வற்றியது.

இச்செய்தி செவிப்பட்டதும் பாதுஷா நாயகம் யோசனையுடன் மௌனமானார்கள். மைந்தரை இரக்கத்துடன் பார்த்தார்கள். சொன்னார்கள் : “அல்லாஹ்வின் நாட்டம் முந்திவிட்டது.”

“நான் தவறு செய்து விட்டேனா?” எனக் கைகளைப் பிசைந்து கொண்டார்கள் தாதா.

வேதனைச் சிரிப்புடன் பாதுஷா சொன்னார்கள்: ”மகனே, நீரும் உமது சந்ததியினரும் உலகத் தேவைகளுக்காகச் சிரமப்படாதிருக்கக்கூடிய ஒரு ரகசியத்தை உமக்கு கற்றுத் தர நாடியிருந்தேன். இறை நாட்டம் வேறு விதமாகிவிட்டது., நீரும் உமது சந்ததியினரும் கைநீட்டித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் நாடி விட்டான். அல்ஹம்துலில்லாஹ்! ஆனாலும் மகனே, நீர் வருந்த வேண்டியதில்லை. எனக்கென்று வரக்கூடிய காணிக்கைப் பொருட்களுக்கு முடிவே கிடையாது. அவற்றை உமக்கும் உமது சந்ததியினருக்கும் வல்ல நாயன் ஹலால் ஆக்கி வைத்துள்ளான்.”

***
நன்றி : ஹாஜி A.T. அலிஹஸன் சாஹிபு பைஜீ , அசனா மரைக்காயர்

***

தொடர்புடைய பதிவு :
இந்த ஹந்திரி இருக்கே… – ‘நாகூரி’

1 பின்னூட்டம்

  1. 11/04/2013 இல் 20:36

    பதிவுக்கும், பாடலுக்கும் நன்றி நானா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s