வடமொழிக் கவிஞன் வான்புகழ் ரஹீம்

தலைப்பில் மட்டுமாவது ரஹீம் என்று மாற்றிவிடு என்று வல்ல ரஹ்மான் சொன்னான்.  மாற்றிவிட்டேன். கட்டுரையாளர் மன்னிக்கவும். உண்மையில் , இந்தக் கட்டுரை ஒரு இஸ்லாமிய ‘நஜாத்’ இதழில் இடம் பெறவேண்டும்.  இதே போல ரஹ்மானின் அடியானாக ராமன்  உரைப்பது – கணையாழியில் அல்ல, ‘விஜயபாரதம்’ இதழில் இடம் பெற வேண்டும். நடக்கிற காரியமா என்கிறீர்களா? இயலாத ஒன்றை இயம்புவதுதானே நம்ம வேலையே…

தாஜ் அனுப்பிய இமேஜ்களை  தட்டச்சு செய்திருக்கிறேன்.  சுலோகங்களில் ‘அச்மா’ என்ற வார்த்தை  மட்டும் சரியாக விளங்கியது! வேறு தவறுகளிருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள்; உடனே திருத்துகிறேன். நன்றி.  – ஆபிதீன்

***

Tomb_of_Abdul_Rahim_Khan-I-Khana,_Delhi

வடமொழிக் கவிஞன் வான்புகழ் ரஹீம்

சங்கரநாராயணன்
(கணையாழி , ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)

நமது நாட்டின் இரு தொன்மொழிகள் தென்மொழியும் வடமொழியும் ஆகும். இவற்றுள் தென் மொழியான தமிழ் எல்லா இனத்திற்கும் பொதுவாய் நிற்கிறது. ஆதலின் இன்றளவும் இலக்கிய உலகில் கோலோச்சி வருகிறது. ஆனால் வடமொழியைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்தைச் சார்ந்ததாகத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. உண்மையில் வடமொழியும் தமிழைப் போல எல்லாத தரப்பு மக்களுக்கும் இயைந்த மொழியே ஆகும். இந்த உண்மையை வடமொழியில் வெளிவந்திருக்கும் பிற தரப்பு இலக்கியங்கள் நிறுவுவன ஆகும். இன்று பகுத்தறிவு என்னும் பெயரில் வழக்கிலுள்ள கருத்துக்கள் கூட வடமொழியில் உள்ளன. வேதமதத்திற்குப் புறம்பான சைனம் மற்றும் பௌத்த இலக்கியங்களிலும் வடமொழியில் காணப்படுகின்றன. மேலும் இசுலாமிய மதத்தின் கருத்துக்கள் அல்லோபநிஷத் (அல்லா + உபநிஷத்) என்னும் பெயரில் உபநிடத வடிவில் எழுதி வெளிவந்ததும் உண்டு. பாகவத புராணத்தைப் போலக் கிறித்துவின் வாழ்க்கையை விவரிக்கும் கிறித்து பாகவதமும் உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கும் முன் இசுலாமிய அன்பர்களும் கிறுத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் கூட வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பல இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர் அக்பரின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராகத் திகழ்ந்த இரகீம் என்பவர் ஆவார்.

இரகீம்

அக்பரது மெய்த்துணையாகத் திகழ்ந்தவர் பைரம் கான் என்பவர் ஆவார். அவருடைய மகன் இரகீம் என்பவர். இவர் 1556ஆம் ஆண்டு இலாகூரில் பிறந்தார். இவருக்கும் ஆறு வயது ஆனபோது ஹஜ் யாத்திரைக்குச் சென்ற பைரம் கான் மரணம் அடைந்தார். அன்று முதல் அக்பருக்கு இரகீன் செல்லப்பிள்ளையானார். அக்பர் இரகீமிற்குப் பல மொழிகளையும் கலைகளையும் கற்பித்தார். வடமொழி, உருது, பாரசீகம், அரபி, துருக்கி என்று பலமொழிகளிலும் இரகீம் கரைகண்டார். வடமொழியில் வேத உபநிதங்களையும் புராணங்களையும் காவியங்களையும் கற்றுக் கவியானார் இரகீம்.

கவிஞராக மட்டும் இல்லாமல் சிறந்த வீரராகவும் திகழ்ந்தவர் இரகீம். குஜராத்தில் ஒரு கலகமுண்டானபோது இரகீமின் தலைமையில் அக்பர் ஒரு படையை அனுப்பினார். அந்தக் கலகத்தை அடக்கிய இரகீம் அக்பரால் சுபேதார் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அக்பரின் மரணம் வரை இரகிமீன் புகழ் ஓங்கியிருந்தது. அக்பர் இரகீமிற்கு மிர்ஜாகான் என்னும் பட்டத்தையும் கான்கானா என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விரு பட்டங்களும் மிக நெருங்கிய உயர்வான அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பட்டங்கள் ஆகும். இரகீம் மிகச்சிறந்த வள்ளலாகவும் திகழ்ந்தார். முஜாபர்பூர் போரில் வென்றெடுத்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கு அவர் வாரியளித்தார்.

அவருடைய இறுதி வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருந்தது. அக்பருடைய மரணத்திற்குப் பிறகு பதவி ஏற்ற ஜகாங்கீருடன் இரகீமிற்கு ஒத்து வரவில்லை. ஜகாங்கீர் இரகீமைச் சிறையிலடைத்தான். அங்கேயே இரகீம் உயிர் துறந்தார்.

நிலைத்து நின்ற இலக்கியங்கள்

அவர்தம் பூதவுடன் மறைந்தாலும் புகழுடம் மறையாவண்ணம் அவர் இயற்றிய இலக்கியங்கள் இன்றளவும் அவர் புகழ்பாடுகின்றன. அவர் எழுதிய இலக்கியங்களாவன.

1. கேட கௌதுகம்

இந்த நூல் சோதிட நூலாகும். உருது மற்றும் அரபி பதங்கள் இந்த நூலில் நிறைந்துள்ளன. இந்த நூலில் 124 சுலோகங்கள் உள்ளன. இதன்  காப்புச் செய்யுளில் திருமாலையும் திருமகளையும் வணங்கி நூலைத் துவக்கியிருக்கிறார் கவிஞர். ஜாதகங்களில் கிரகங்களில் நிலைகளை வைத்துப் பலன் கூறும் இந்த நூல் சோதிடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப் பயனுள்ள நூலாகும்.

2. த்ரயஸ்த்ரிம்சத் யோகாவளி

இந்த நூலுல் சோதிட நூலாகும். இந்த நூலில் 35 சுலோகங்கள் மட்டும் கிடைத்துள்ளன. ஜாதகத்தில் பல யோகங்களை இந்த நூல் விளக்குகுகிறது.

3. கங்காஷ்டகம்

இரகீமின் இலக்கியத்தில் இந்த துதி மிக முக்கியமானதாகும். இது முழுக்க வடமொழியில் அமைந்தது. கங்கையின் புகழ் பாடுவது. புராணக் கதைகள் பலவற்றையும்க் கூறும் இரகீம் தன்னைச் சிவபெருமானின் பக்தனாகக் கூறிக் கொள்கிறார். கங்கையன்னையே! நான் இறக்கும்போது எனக்குச் சிவ சொரூபத்தை அருள்வாயாக என்ற வேண்டுதல் இதனைத் தெளிவாக்குகிறது. முதாகராத்த மோதகம் என்னும் கணேச பஞ்ச ரத்தினம் அமைந்துள்ள பா வகையை பஞ்ச சாமரம் என்பர். அந்தப் பாவகையில் கங்காஷ்டகமும் அமைந்துள்ளது.

‘சிவோத்தமாங்கவேதிகாவிஹாரஸௌக்ய காரிணீ
ததோ பகீரதாங்கஸங்கமர்த்யலோக சாரிணீ
த்ரிமார்ககா த்ரிதாபஹா த்ரிலோகசோக கண்டிநீ
ஜகத் த்ரிதோஷத : தனு: புநானு ஜஹ்னு நந்தினி’

ஜன்னு முனிவரின் மகளான கங்காதேவி என்னுடலை மூவகை பாவங்களிலிருந்தும் காப்பாற்றட்டும். அவள் சிவனின் தலையாகிய மேடையில் உலவுபவள். பிறகு பகீரதனின் தொடர்பால் பூவுலகில் நடப்பவள். மூன்று தாபங்களையும் போக்குபவள். மூவுலகின் சோகங்களையும் நீக்குபவள் என்பது இந்தச் செய்யுளின் பொருள். மேலும் தன்பெயரையும் முத்திரையாகப் பதித்து இறுதிச் சுலோகத்தை பலச்ருதியாக யாத்திருக்கிறார்.

முராரிபாதஸேவினா விராமகானஸூனுனா
சுபாஷ்டகம் சுபம் க்ருதம் மயா குருப்ரபாவத:
படேதிதம் ஸதா சுசு ப்ரபாதகாலதஸ்து ய:
லபேத வாஞ்சிதம் பலம் ஸ ஜாஹ்னவீப்ரபாவத:

திருமாலின் திருவடிகளை வணங்கும் பைரம்கானின் மகனால் இந்த அஷ்டகம் இயற்றப்பட்டது. இது சுபமானது. குருவின் அருளால் இயற்றப்பட்டது. இதனைத் தூயவராக காலையில் எவர் பாராயணம் செய்கிறாரோ அவர் ஜான்னவியின்  அருளால் விரும்பியதை அடைவார் என்பது இதன் பொருள்.

இப்படிக் கங்கைநதியை அவர் துதித்திருக்கிறார்.

4. மதனாஷ்டகம்

இந்தத் துதி கிருஷ்ணரின் ராஸலீலையை வர்ணிப்பது. அழகிய பாவகைகள் இந்தத் துதியில் இடம் பெற்றிருக்கின்ற்ன. ஆயர்பாடியில் கோபியர் கணவன், குழந்தைகளை மறந்து கண்ணனின் வேணுகானத்தைக் கேட்டவுடன் மதி மயங்கி நின்ற நிலையை மிக அழகாக இந்தத் துதி உருது மற்றும் பாரசீகச் சொற்களைக் கலந்து மணிப் பிரவாள நடையைப் போல யாக்கப்பட்டிருக்கிறது.

5. சில தனி சுலோகங்கள்

இவை தவிர இரகீம் இயற்றிய பல தனி சுலோகங்கள் அவருடைய பக்தியையும் புலமையையும் எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு செய்யுள்

ரத்னாகரரோஸ்தி ஸதனம் க்ருஹிணீ ச பத்மா
கிம் தேயம் அஸ்தி பவதே ஜகதீச்வராய
ராதாக்ருஹீதமனஸே அமனஸே ச துப்யம்
தத்தம் மயா நிஜமன; ததிதம் க்ருஹாண

இந்தச் செய்யுள் மிக அழகானது. பொருள் பொதிந்தது. ஏ கிருஷ்ணா உனக்கு இருப்பிடம் கட,. மனைவியோ திருமகள். நீயோ உலகிற்குத் தலைவன். உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது. உன்னுடைய மனத்தை ராதை எடுத்துக் கொண்டு விட்டாளல்லவா, மனமில்லா நீ என்னுடைய மனத்தை எடுத்துக் கொள் என்பது இதன் பொருள். மேலும் இராமபிரானைத் துதிக்கும் முகமாக

அஹல்யா பாஷாண; ப்ரக்ருதிபசுராஸீத் கபிசமூ:
குஹோயூச் சாண்டால: த்ரிதயமபி நீதம் நிஜபதம்
அஹம் சித்தேன அச்மா பசுரபி  தவார்சாதிகரணே
க்ரியாபி: சாண்டலோ ரகுவர ந மாமுத்தரஸி கிம்

என்னும் செய்யுளை யாத்திருக்கிறார். இந்தச் செய்யுளின் பொருளைப் பார்த்தால் புல்லரிக்கும். ஏ இராமா , அகல்யா கல்லாக இருந்தவள். வானர சேனையோ விலங்கு. குஹன் தாழ்ந்தவன். இந்த மூன்றையும் உன் திருவடியில் சேர்த்துக் கொண்டாயே, நான் மனத்தளவில் கல்லானவன். உன்னை அர்ச்சிப்பதில் விலங்கைப் போன்றவன். செய்யும் செயலால் தாழ்ந்தவன். என்னை கரையேற்ற மாட்டாயா என்பது இதன் பொருள்.

இப்படி பிறப்பால் இசுலாமியராக இருந்து எல்லா மதங்களும் கூறும் இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து வடமொழியில் கரைகண்டு இரகீம் இயற்றிய கவிதைகள் மத நல்லிணக்கத்திற்கு நல்ல வாயிலாக அமைந்துள்ளவை. வடமொழி ஒரு இனத்தாரின் மொழியல்ல என்பதற்கு இரகீம் கவிதைகளே சான்று எனலாம்.

***

நன்றி : சங்கரநாராயணன், கணையாழி , தாஜ்

Image Courtesy : wikipedia

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s