99 வெத்துக் குறிப்புகள் – தாஜ்

‘ஃபேஸ்புக்குல கலக்குறாரே தாஜண்ணே!’ என்றான் அன்று அலுவலகம் வந்த சீர்காழிப்பையன். ‘எப்படி தம்பி?’ ‘சூப்பர் ஃபோட்டோலாம் போடுறாரு!’. போராளி தாஜிடம் இதைச் சொன்னதும் பொங்கியெழுந்துவிட்டார். ‘அவன் கெடக்குறான்யா.. லூசுப்பய.. மீனிங்கா ஸ்டேட்டஜு போடுறேன்யா.. ஒமக்கு அனுப்புறேன், பாரும்’ என்றார். வந்தது 101 வெத்துக் குறிப்புகள். தாஜ் குறிப்புகள் என்று சொன்னாலும் சரிதான். ஆனால் சில குத்தும் குறிப்புகளும் இருக்கின்றன. ரிபீட் ஆன இரண்டை அழித்துவிட்டேன். மேலும் இரண்டு குறிப்புகள் பழைய பதிவில் இருப்பதையும் கண்டுபிடித்தேன்; பரவாயில்லை; பொறுத்துக்கொள்வோம்.  கவிஞர் இப்போ கி.ரா ஐயாவின் சொலவடையை சுடச்சுட அங்கே சுட்டுக்கொண்டிருக்கிறார். ‘கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனை கழற்றிக் கொண்டு போனது’ ரொம்பவும் பிடித்திருந்தது! – ‘ஃபோட்டோ’ எடுத்த ஆபிதீன்

***

Taj-IMG_0681a

வெத்துக் குறிப்புகள் – 99

தாஜ்

முன்குறிப்பு:  என் ஃபேஸ்புக் அனுபவம் சொல்லத்தகுந்த நகைச்சுவையானது. ‘வெத்துக் குறிப்புகள் – 101’ -யையும் சேர்த்து. இந்த வெ.குறிப்புகள் அத்தனையும் என் ஃபேஸ்புக்கில் வந்தவை. சாட்சாத் நான் எழுதியதே! ‘நானும் ஃபேஸ்புக்கும்’ என்றொரு கட்டுரை எழுத எண்ணமுண்டு. அக் கட்டுரையை நான் நினைத்தபடி எழுதும் பட்சம், ஃபேஸ்புக்கில் கண்ட, காணும்  அத்தனைக் கூத்தையும் நிச்சயம் எழுதுவேன். நகைச்சுவை என்று அக்கட்டுரையில் தனியே நான் சமத்துக்காட்ட வேண்டாம், யதார்த்தமாக எழுதினாலே போதும். சிரிப்பு வெடித்துக் கிளம்பும்!

ஃபேஸ்புக்கின் பக்கம் போய் இந்த மூன்று வருடக்காலத்தில், நான் என் மொழியை எப்படியெப்படியோ வகுத்து வகைப்படுத்தி எழுதிப்பார்த்தாயிற்று. நுட்பம் சார்ந்த என் பதிவுகள் எதுவும் அங்கே செல்லுபடியாகவில்லை, கீழே பதிந்திருக்கும் இந்த ஒன்றைத் தவிர. இதற்கு அங்கே நிறைய அபிமானிகள்! ஃபேஸ்புக் பக்கம் உலாத்தும் நண்பர்கள் பலர் இப்படித்தான் கேட்கிறார்கள்.

எத்தனைப் பெரிய உலக சங்கதியாக இருந்தாலும், அரை வரியில்.. மிஞ்சினால் முக்கால் வரியில் அவர்களுக்கு தரவேண்டும். அதில் கொஞ்சம் தேன் தடவிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.

உங்களுக்கே தெரியும், நான் ஆபிதீனின் நட்பைப் பெற்றவன். அதனாலோ என்னவோ, அது சிறுகதையேயானாலும் குறைந்து குறைந்து அறுபது பக்கமாவது எழுதினால்தான் ஓரளவுக்கு நிம்மதி எனக்கு! பத்தியென்றால்… பொத்திப் பொத்தி எழுதினாலும் பத்துப் பக்கமாவது நீள வேண்டும். சிறுகுறிப்பு என்றால் மட்டும் இரண்டு பக்கம் போதும். சாந்தி கொண்டுவிடுவேன். இந்த அளவில் கொள்கைப் பிடிப்போடு இயங்கிய என் கைகள்.., ஃபேஸ்புக்கில் முழுவதுமாக கட்டப்பட்ட நிலை.

பொதுவில், இப்படி கால் வரி அரை வரி மொழிச் சரடுகளை எழுதுகிற போது, எழுதுபவனே அறியாத ஓர் உன்னத நிலை அதற்கு தகித்து விடுகிறது. அது கொஞ்சம் வேடிக்கையானதும் விசேசமானதும் கூட!

வேறு வழியின்றி ஃபேஸ்புக் நண்பர்களுக்காக எழுதப்படும் அந்த மொழிச் சரடுகள், அவர்களின் பார்வையில் ’பஞ்ச்’சாகவும்/ பழமொழியாகவும்/ வியக்கத்தகு உண்மையாகவும்/ வாழ்வியல் தத்துவமாகவும் அது முகம் செய்வதாக உணர வருகிறபோது, என்னளவில் வெளியே சொல்ல இயலாத அவமானத்தில் சோர்வுற்றுவிடுகிறேன்.

இங்கே.., அதன் பொய் மகத்துவம் உடைபட வேண்டும். அதனைக் கண்டு நான் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும். அதற்குரிய வாசகப் பார்வை இந்த வலைப் பூவின் பக்கம் தாராளமாக கிட்டும் என்கிற நம்பிக்கை உண்டு! இங்கே இந்தப் பதிவே அதற்காகத்தான்.

சும்மாவேனும்… நினைத்தமாதிரி எழுதப்படும் எழுத்துக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது மகத்துவ மரியாதை?

நன்றி.

-தாஜ்

***

என் நிழல்

பல திருப்பங்களில்

என்னைவிட

நீள அகலமாக இருக்கிறது!

*

காலத்திற்குள்

கட்டுண்டு வாழ்ந்தாலும்

எல்லாவற்றையும் தாண்டி

பறக்க நினைக்கிறது

எண்ணம்!

*

கடும் குளிரில்

வெப்பத்தின் சூடு

வேண்டிதான் இருக்கிறது!

*

தேடித் தேடி நொடித்தாலும்

தேடலே…

தேடத் தேடவைக்கிறது.

*

வானத்தையும் விடாது

குடைந்தென்ன புண்ணியம்?

மேலே விரிவதெல்லாம் வெற்றிடம்!

*

புத்தியிடம் தோற்பதைவிட

மூடத்திடம் தோற்பதுதான்

வாழ்வின் நடப்பாக இருக்கிறது.

*.

மலை உச்சிக்கு ஏற

தவிக்கும் செருக்கிற்கு

பிடிமானத்தின்

இலக்கணம் பிடிப்படுவதில்லை!

*

தூரம்தான்..

எல்லாமே தூரம்தான்

இங்கே

வேகம் கூடாது

நடந்தேதான் கடந்தாகணும்.

*

கனவு பூக்கிறது

விழித்திருக்கும் போது

தூக்கத்திற்கு!

*

என்னை உனக்கு தெரியும்

உன்னை எனக்கு தெரியும்

என்னை எல்லோருக்கும் தெரியும்

உன்னை எனக்கு மட்டும்தான் தெரியும்!

*

சுழலும் உலகில்

நேற்று இனித்தவைகள்

இன்று கசக்கிறது!

நாளை…

இந்தக் கசப்பும்தான்

என்னவாகும்?

*

எங்கே மோதினாலும்

இரத்தம் கசிகிறது.

மோதாமல்

ஆவதும் எதுவுமில்லை!

*

அறிதாய்

யார் எது சொன்னாலும்

அதன் இன்னொரு பக்கத்தை

திருப்பிப் பார்க்காமல்

ஆகமாட்டேன் என்கிறது.

*

மனிதர்களால்

உலகம்

நிறம் மாறிக்கொண்டிருக்கிறது.

ஒதுங்க நிழலுக்கும்

இடம்தேடி

அலையவேண்டி இருக்கிறது..

*

என் நாட்களின்

இன்னொரு பக்கத்தை

இடம் தேடிப் புதைக்க

நாளும் அலையாத இடமில்லை!

*

இருளில்

வெளிச்சத்தைக் காண

பரிதவிக்கும் மனமே

வெளிச்சத்தில்

இருளை தேர்ந்தெடுக்கிறது.

*

உங்களது கருத்தும்

என் கருத்தும்

ஒரே மொழியில் எழுதப்பட்டாலும்

வெவ்வேறு வார்த்தைகளினால் ஆனது.

*

நட்சத்திரத்தின் மீதான கவர்ச்சி

தூரத்து…..

இடைவெளியில் இருக்கிறது.

*

வண்ணத்துப் பூச்சிகளின்

வண்ணங்களும்

சிட்டுகளின் ரீங்காரமும்

எண்ணத்தை

சிதறடித்து விடுகின்றது!

*

இயற்கையை

அழிக்க நிற்கிறது மனிதம்!

காலாதி காலமும்

வெல்வதென்னவோ…

இயற்கையாகவே இருக்கிறது.

*

உன் உண்மை

எனக்கு உண்மையாகாது.

நான் ஒப்புக் கொள்ளும் உண்மை

அவனுக்கு

இவனுக்கு, இவளுக்கு, அவளுக்கு

எவருக்கும்

உண்மையாகிவிடாது.

*

மரம் கூட வளர்கிறது

மனிதன்,

அது பரிமாணம் கொள்வதை

காணவே செய்கிறான்?

*

ஒன்றை ஒருமுறை சொல்ல

பலமுறை

யோசித்தாக வேண்டியிருக்கிறது.

*

மேடையில்

தலைவர்கள் முழங்கும் முழக்கங்கள்

வெத்து சப்தத்தையே கூட்டுகிறது.

மாவு அரைக்கும்

ஒரு இயந்திரம்

அவர்களைக் காட்டிலும்

அலறும் என்பதனை அறிவார்களா?

*

உனக்கும் எனக்கும்

என்னப் பிரச்சனை?

மதமா?

இருக்க முடியாதே…

நாம் இருவரும் ஒரே மதமாயிற்றே!

ஓ….

நீ காட்டும் பாதையில்

நான் வரவில்லை என்கிறாயா?

அது

உன் இறைவனின்

சித்தமாகக் கூட இருக்குமல்லவா?

*

எந்தக் கொம்பர்

சொல்கிறார் என்பதற்காகவோ

எழுதப்படும் அவர் எழுத்தின்

யுக்திகளில் கிறங்கியோ

எவரது கருத்துக்களையும்

ஒப்புக் கொள்ளாதிர்கள்.

யோசிப்பும், முடிவும் உங்கள் கையில்.

எப்பவுமே

உங்களுக்கு நீங்கள்தான் நீதிபதி.

*

பந்தாட்ட மைதானத்தில்

எவ்வளவு கூட்டம்!

எத்தனைக்கு ஆராவாரம்!

ஒருவன் காலில் சிக்கும்

அதிர்ஷ்டத்தை

அடுத்தவன் தட்டிப்பறிக்க

ஆரவாரம் வெடிக்கிறது.

ஏமாந்தவன் சாதுர்யமாய்

அதிர்ஷ்டத்தை மீட்டெடுத்துப் போய்

கோலும் அடிக்கிறான்.

இடியென கிடுகிடுக்கிறது மைதானம்!

நான் எங்கே நிற்க?

*

யாரையும் நான்

குற்றம் குறை காண்பது கிடையாது.

எதற்குமோர்

தார்மீக சாத்தியப்பாடு தேவை.

*

எந்தப்

பாசமும், பிரியமும்

முழுமையற்று போவதென்பதும்

காலத்தில் சிதைவதென்பதும்

நெருக்கத்தின்

இலக்கணமாகவே இருக்கிறது!

*

நிழலெல்லாம்

நிஜத்தை

ஊர்ஜிதம் செய்ய…

பொய்யெல்லாம்..

உண்மையை உணர்த்த

நீயும் நானும்

முன் வைப்பதென்ன?

*

மிருக காட்சி சாலையில்

சுற்றித் திரிந்து கண்டு களித்து

வீடு திரும்பிய நேரம்

அங்கே ஒவ்வொன்றும்

கம்பிக் கூண்டுக்குள் இருக்க

பயமற்று போனது

நினைவுக்கு வந்தது.

*

மரணம் துரத்துகிறதே என்று

டாக்டர் மாற்றி டாக்டரிடம்

மனிதர்கள் அண்டிக் கொள்வது

வேடிக்கையான விளையாட்டு!

*

ஒருவரின்

இறப்பை கிடத்திப் போட்டு

அதிகத்திற்கும் கதறி அழும்

உறவுகளில் பலர்

அந்த இறப்புக்கு

வாழும் காரணங்களாக இருப்பார்கள்

என்பதுதான் மெய்யான வேடிக்கை.

*

பொய்யை நயமாக சொல்வன்தான்

வெற்றிகரமான வியாபாரி!

சூழ்ச்சியை மறைத்துப் பேசுபவன்தான்

தலைச்சிறந்த அரசியல்வாதி!

லஞ்சத்திற்காக எதையும் வளைப்பவனே

பெயர் பெற்ற அதிகாரி!

சப்தம்காட்டாது வாழ்பவன் சிறந்த மனிதன்!

*

புத்தனை அறியவரும் வயதில்தான்

நமக்கெல்லாம்

ஆசைகளே பிறக்கிறது!

*

வாழும் உலகில்

மாசற்ற சுவாசம்

அரிதாகிவிட்டது!

*

உலகம் அழிந்த மறுநாள்

தப்பி நான்

கவிதை எழுத முடியுமென்றால்…..

வெள்ளைத் தாளில்

பெரிய முற்றுப் புள்ளியை வைத்து,

‘உன்னதக் கவிதை’ எழுதிவிட்ட நிம்மதியில்

என் உயிரை முடித்துக் கொள்வேன்.

*

நாகரீகச் சமூகத்தில்

யாரோடும்

பிணக்கு கொள்ள முடியவில்லை.

நாயாகப் பிறந்திருந்தால் கூட

கல்லெறிபனைப் பார்த்து

குரைக்க முடியும்.

*

சமூகத்தில்

நான் ஏமாந்த ஏமாற்றங்களை

பெரிய பட்டியலிடலாமென்றால்…

என்னைவிட நீளமான பட்டியல்

எல்லோரிடமும் இருக்கிறது!

*

நீங்கள் குதூகலிக்கும்

காட்சிகளுக்குப்

பின்னாலான ஜோடனைகள்

பெரும்பாலும்

அட்டைகளினால் ஆனது.

*

மண்டைக்குள்ளே கேட்கும்

குற்றங்களிலான இரைச்சல்

வெளியுலகம் அறியாது!

*

ராஜவேஷ துடிப்பில்

உடைவாளை விட்டு

கிரீடமும் தரிக்காது

சபையேறிவிடுகிறோம்.

*

மலம் கொண்ட உடல்…

வெறும் வாசனைப் பூச்சில்

மணக்கிறது.

*

சிக்கிக் கொண்டால் திருடன்.

தப்பும் பட்சம்

நாளையும் அவன் மனிதன்!

*

குடும்பத்தோடு

குளிர்காயும் தலைவன்

தொண்டர்களின்

உயிரை

விறகாக்க திட்டமிடுவான்

*

தெளிவின் கதவுகள்

அகத்தின் துருவில்

திறக்கவொட்டாது

எப்போதும்

அடைபட்டே கிடக்கிறது.

*

உன்னதத்தின் உயரம்

எளிதில்

எவருக்கும் எட்டுவதில்லை

*

உனக்கும் எனக்கும்

ஒரே உதயம்தான்!

ஒரே பொழுதுதான்!

இன்றைக்கு உன்னை

அண்ணார்ந்து

பார்க்க வேண்டியிருக்கிறதே….

அது எப்படி?

*

கடலின் ஆழங்களையும்

பால்வீதியின் பரப்புகளையும்

அளக்க முடிந்தவர்களாலும்

மனித மனதின்

ஆழம் காண முடியாது!

*

முதலாம்

இரண்டாம் உலகப் போர்கள்

மன்னிக்க முடியாத

மானிட வர்க்கத்தின் வக்கிரம்!

*

வரலாற்றுப் பக்கங்களில்

ரொம்பிக் கிடக்கும்

புனிதப் போர்களெல்லாம்…

புனிதமானதுதானா?

*

இரத்தம் ஒரே நிறம்!

சுவாசத்தின் ஆதாரமும் கூட

எல்லோரும் சுவாசிக்கும்

அதே காற்றுதான்!

*

அறிந்து தெளிந்த பின்னும்

சரியான மனிதரை

சரியான தருணத்தில்

புகழ்ந்துரைக்கும் போது

ஏதோவோரு நெருடல்

வார்த்தைகளை தடுமாற வைக்கிறது.

*

வாழ வழி சொல்லித் தந்தவன்

தினமும்

தேடித் திரிகிறான்

தன் வாழ்க்கையை!

*

நிஜமும் பொய்யும்

வெகு நெருக்கம் கொண்டது.

நிஜத்திற்கு பொய்யின் சாயலும்

பொய்க்கு நிஜத்தின் சாயலும்

எப்பவும் உண்டு.

*

மக்களின் மறதியை நம்பித்தான்

அரசியல்வாதிகள்

தங்களது அரசியலை

நடத்துகிறார்கள் என்பது…

நம் மஹா ஜனங்களின்

அறியாமையை மறந்த பேச்சு!

*

புகழைவிட

மறைமுகக் கனத்தோடு

வேறொன்று இருக்க முடியாது.

கண்களுக்குப் புலப்படாமல்

அதைச் சுமந்து திரிபவர்களின்

நிலைத் தடுமாற்றமே

அதற்கு சாட்சி.

*

மேடையில்…

“கிழக்கே உதிக்கும் சூரியன்

இனி மேற்கே உதிக்கும்…” என்பான் அவன்!

கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் கூட்டம்.

பொதுமக்கள்

பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

பொதுத்தேர்தல் வரப்போகிறது.

*

லஞ்சத்தை போற்றுவோம்.

எத்தனையோ

பெரிசுகளை

சாதாரணமாக்கி இருக்கிறது!

*

இறந்தவர்களிடம்

நீங்கள் பேசியதுண்டா..?

என் முகம் பார்க்கும்

கண்ணாடியின் முன்னால்

நான் பேசி இருக்கிறேன்!

*

எல்லோருக்கும் அவசரம்

முட்டிமோதிக் கொண்டு

எங்கேயும் முந்துகிறார்கள்.

சுடுகாட்டைத் தவிர!

*

அனுபவங்களினால்

கர்வம் கொள்கிறவனின்

அனுபவம்

அவன் கற்றதைத் தாண்டி

இம்மியும் கூடிவிடாது.

*

நீ பேசுகிற போது

உன் பேச்சை மட்டுமல்ல

உடல்மொழி

பார்வையின் அசைவு

வெளிப்படும்

மெய்யின் தள்ளாட்டம்

என்னை பேச அனுமதிக்கிற நேரம்

உன் பேச்சில் எனக்கான தெளிவு

அத்தனையும் கவனம் கொள்ளப்படும்.

*

நேற்றைக்குப்

பார்த்தவனைத்தான்

இன்றைக்கும் பார்த்தேன்.

அவனா இவன்?

வியப்பான உலகமிது!

தன்னை எப்பவும்

மாசு குறையாது

நிறுவிக் கொண்டே இருக்கிறது!

*

தெளிவான செய்கையும்

பைத்தியக்காரத் தனமும்

மனித நாணயத்தின்

இரண்டு பக்கங்கள்!

*

நிறங்கள் காட்டும்

வண்ணத்தைவிட

அது குறித்து

நாம் இட்டு நிரப்பியிருக்கும்

அர்த்தங்கள் அழகானது!

*

காலத்தைப் பிடித்து நிறுத்த

பயிற்சிகள் ஏதும் செய்யாமல்

நேற்றைக்குப் பார்த்த

அதே நானாகவே

இன்றைக்கும் இருக்கிறேன்.

காலத்தின்

இந்த விசேச கருணை

வியப்பை தருகிறது.

*

நாத்திகவாதியென

என்னை நான்

கூறிக் கொள்ள முடியாது.

அத்தத்துவத்தை எட்ட

இன்னும் நான்

பரிசுத்தமாக வேண்டும்.

*

‘எல்லாவற்றிற்கும் ஆசைப்படு’

போதனை

புத்தன் பிறந்த மண்ணில்தான்

இன்றைக்கு

வேக வேகமாக நடக்கிறது!

*

உண்மையான மனிதனை

தேடித் திரிந்து

சிரமப்பட்டுக்

கண்டுப்பிடித்தும்தான்…..

என்ன செய்ய?

இங்கே எங்கே

அவனை நிறுத்திவைப்பது?

*

செய்திகளை

தொலைக் காட்சிப்

பெட்டியின் வழியே பார்க்கிறோம்.

பத்திரிகைகளின் வழியே

விஸ்தீரணமாக வாசிக்கிறோம்.

உண்மையை தரிசிக்கிறோமா?

*

சொர்க்கத்தையும் நரகத்தையும்

எல்லோருமே

பரிபூர்ணமாக நம்பும் பட்சம்

நாடே மிகப் பெரிய

பஜனை மடமாகி போகும்!

*

உங்கள் கருத்தை

நீங்கள்தான் உரைக்க வேண்டும்.

நான் எப்படி…

உங்களுக்கு பதவுரையாகவே

தெளிவுரையாகவோ முடியும்?

*

என் மண்டைக்குள்

ஸ்தலம் பேணி

வண்ணப் பூச்செடிகளை

வளர்த்தெடுத்தாகிவிட்டது!

மலர்களின் மலர்ச்சியும்

மகிழ்ச்சியை தருகிறது!

*

பழுத்த மரங்கள்

இரைத்து வழங்கும் ஈகையை

பணம் பழுத்த மனிதர்கள்

கண்டதாகவோ

உணர்ந்ததாக தெரியவில்லை!

*

வள்ளுவனின்

குறல்தான்…

முன்கதை, பின்கதை இல்லாத

போதனைகளின் வடிவம்!

‘பஞ்ச்’சுக்கே

பிள்ளையார் சுழி அது!

*

எதிர் காலக் கணிப்பெல்லாம்

கால எல்லைக்கு உட்பட்டது.

தாண்டி

எவராலும் மிஞ்சி

யூகித்துவிட முடியாது.

*

நாளை நான்

எப்படி இருப்பேனென

இன்றைக்கு

என்னால் எப்படி

சொல்ல முடியும்?

விபத்தில்லா நொடியேது?

*

பாதைகள்

நாலாப் பக்கமும் விரிகிறதென்றாலும்

நீ போகும்

பாதை

உனக்குள்தான் இருக்கிறது!

*

என்னை என்ன செய்யச் சொல்கிறாய்…?

நான்

சாதாரண மனிதன்!

மலையேறவும்

என்னால் முடிமென

நீ சொன்னால் ஆயிற்றா!

*

புயல் காற்றுகளில் கூட

தப்பித்துவிடலாம்!

பூங்காற்றிடம் முடியாது.

*

மனிதர்கள்

ஒவ்வொருவருக்கும்தான்

எத்தனை முகங்கள்!

வியப்பாகத்தான் இருக்கிறது.

அதைவிட வியப்பு

எனக்கும்

அப்படியென்றறிய!

*

எல்லா உண்மைகளுக்கும்

எல்லா பொய்களுக்கும்

மனிதகுல வளர்ச்சியே

காரணமென்பதை

மறுக்க முடியாது.

*

சேமிக்க அறிந்தவன்

செலவழிப்பவனை

குறை காண்பான்.

செலவழிப்பவன்

சேமிப்பாளனை

வறுத்தி விமர்சிப்பான்!

சகஜக்காரர்களுக்கு

அங்கே இடமில்லை

அந்த மைதானம்

பணவித்தை கற்றவர்களுக்கானது!

*

நிறங்களின் அழகே

அதற்கு எதிராகப் போய்விட்டது

அரசியல் சக்திகள்

அதனை உடமையாக்கி

கற்பழித்து விட்டார்கள்!

*

செய்துவிட்ட பாவத்துக்கு

பாவமன்னிப்பு கோரி

வணக்கஸ்தலங்கள் அத்தனையிலும்

கூட்டம்…

கட்டுக்கடங்கா கூட்டம்!

*

பூவைக் கிள்ளி எறிவது

குழந்தையை இம்சிப்பது

பெண்ணை ஆட்டிப் படைப்பது

ஏழையை எத்துவது

சிறுபான்மையினரை

பகடைக் காயாக்குவதெல்லாம்

ஆதிக்கச் சக்திகளின் அடையாளம்.

*

விடிகிறபோது விடியட்டும்.

இரவு…

இன்னும் எத்தனை நேரம்தான்

ஆதிக்கம் புரியும்!?

*

பகலில் பறந்து பறந்து

வீடு திரும்பும் நேரமெல்லாம்

இரவென்றாகிவிடுகிறது.

*

அனுபவங்களை

நித்தமும் தேடித் தேடி

உட்கொள்ளும் வாழ்க்கை

அடுத்த நாழிகையில்

செரிமானித்து விடுகிறது.

*

எல்லோரின் பார்வையும்

விழித்திருந்து என்ன செய்ய?

முட்டாளும் புத்திசாலியும்

அச்சு அசலாய்

மனிதர்களாகவே தெரிகிறார்களே!

*

கடலின்

அலைகளும், சீற்றமும்

நொடிக்கு நொடி உணர்த்தும்

காலத்தின் மீதான கோபம்!

*

எல்லையில்லா விரியும்

இந்தப் பிரபஞ்சத்தோடு

சுவாசம்தான்

நாழியும் நம்மை

பிணைக்கிறது.

அந்த மஹா இயற்கைதான்

இறைவனின் பேருவோ!!

*

வெட்டப்படும் மரம் துளிர….

நேற்று நிகழ்ந்த

சிறு விபத்தில்

உயிர் பிழைத்த

மனிதர்கள்

இதோ…

இன்று இறந்து போகிறார்கள்!

*

யாரையும்

யாராலும் காபந்து

செய்ய இயலாது.

அவனாலேயே

அவனை காபந்து

செய்துக் கொள்வதென்பதும்

நடவாது!

*

கொட்டப்படும்

ஒரு குடம் தண்ணீர்

மீன்தொட்டியில்

ஜரூராய்

மீன்கள் திரிகின்றன

அதன் உலகம் அறியாது!

*

இந்த உலகம்

எல்லோரையும் அரவணைக்கிறது.

குஷ்டரோகிகள்

தொழுநோயாளிகள் தொடங்கி

கைச் சுத்தம் பேசும் அரசியல்வாதிகள்

நல்லவர்கள் நாங்களென

சொல்லிக் கொள்பவர்கள் உள்ளீடாக

எவரும் அதற்கு பேதமில்லை!

*

எதிர்க் காற்றில்

விரைவதென்பது சங்கடமானது

அலைக்கழிக்கும்

அதன் அத்தனை வீச்சையும்

எதிர்கொண்டு

தாண்டிச் செல்வதென்பது

இன்னொரு அனுபவமாக இருக்கும்!.

***

உல்லாசத்திற்கு

காணப் போகும்

அலைக் கடலினுள்ளே

இன்னொரு

பேருலகம் இருப்பதை

நம்மால் தரிசிக்க முடிவதில்லை.

*

வேதங்களின் பக்கங்களை

புரட்டிப் புரட்டி

காலம் தோறும்

புதிய விளக்கங்களும்

புத்துயிர் விரிவுரைகளும்

எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

பக்கங்களின் ஓரங்கள்

ரேகைகளின் படிவால்

அழுக்கேறுவதையும்

பொருட்படுத்தாது.

*

போகாத ஊருக்கெல்லாம்

போக நினைத்ததுண்டு

மார்க்கம்தான்

எசகுப் பிசகாக இருக்கிறது.

***

நன்றி : தாஜ் | http://www.facebook.com/tajdeen.sa

14 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  26/03/2013 இல் 13:23

  படம்
  ஆபிதீனின் திறமையை
  மீண்டும் மீண்டும் மெய்ப்பிப்பதாக இருக்கிறது.
  அந்த மரமும் வானமும்தான்……..
  எத்தனை அழகு!!!
  நன்றி.

  குறிப்பு:
  எங்கள் டவுனில் உள்ள ஆலமரங்களில்
  பிடித்தமான ஆலமரம் இது.
  மனம் பேதலிக்கும் போதெல்லாம்…
  இந்த மரம் தேடி போவதுண்டு.
  இடம்: சீர்காழி – L.M.C. உயர்நிலைப் பள்ளியின்
  விளையாட்டு மைதானத்தின்
  கிழக்குப் புற
  வாய்க்கால் ஓரத்தில்
  காலம் காலமாக
  விருட்சம் பல கொண்டு
  அண்டுவோருக்கெல்லாம் நிழல் காத்து
  நிலையாய் நிற்கிற மரம் இது!
  அதை மரம் என சொன்னதற்காக
  அந்த விருட்சம் என்னை மன்னிக்கட்டும்.

  • abedheen said,

   26/03/2013 இல் 13:32

   புகைப்படம் பெரிதாக :

   ஆமா, இதுல வானம் எங்கேய்யா இருக்கு?

   • தாஜ் said,

    26/03/2013 இல் 17:01

    மரத்திற்குப் பின்னால் விரிவது வானமில்லையா?
    நான் சொல்ல வந்த்து…..
    படத்தில் என்னைத் தவிர காணும் எல்லாம்
    நன்றாக இருக்கிறது என்பதைத்தான்.
    படம் பிடித்த நீங்களும்தான் என்ன செய்வீர்கள்?
    பானையில் இருந்தால்தானே
    ஆப்பையில் வரும்!

 2. 26/03/2013 இல் 18:57

  வெறும் மரம் மட்டும் இருந்தால் யாரும் ரசிக்கமாட்டார்கள். அங்கே தாஜ் இருப்பதால் மரத்துக்கு பெருமை சேர்கிறது….!

  • தாஜ் said,

   26/03/2013 இல் 20:55

   நாநா….
   என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
   எது சொன்னாலும் சர்ச்சையாகி போகும்.
   நன்றி கூர்வதொன்றுதான் சிரப்பிங்கே.
   நன்றி நாநா. நன்றி.

   • abedheen said,

    27/03/2013 இல் 09:59

    தாஜ், இடம் நாம் சென்ற கோயில்களில் ஒன்று. அந்த மரமும் ஆலமரம் அல்ல!

   • 27/03/2013 இல் 16:22

    அது என்ன மரம்?

 3. தாஜ் said,

  27/03/2013 இல் 11:59

  ஆமாம் ஆபிதீன்.

 4. 27/03/2013 இல் 16:36

  //அந்த மொழிச் சரடுகள், அவர்களின் பார்வையில் ’பஞ்ச்’சாகவும்/ பழமொழியாகவும்/ வியக்கத்தகு உண்மையாகவும்/ வாழ்வியல் தத்துவமாகவும்//

  தெரிஞ்சிட்டுப் போகட்டும்….
  அதனால் என்ன?

  எப்போதாவது அவையெல்லாம் வேறு அர்த்தங்களும்
  பெறக்கூடும்

  சிலவற்றின் மகத்துவங்கள் உடைபடும்போது அவை
  வேறு மகத்துவங்களாக உருமாறக்கூட நேரலாம்….

  தோன்றியதைத் தோன்றியமாதிரி எழுதுபவர்கள் குறைவாகவும், அப்படி எழுதியவையும் அதிமுக்கியம் பெறாமலும், முலாம்பூசியவை ஜொலிப்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்?

  தோன்றியதை வெளிக்கொண்டுவருவது மட்டுமே உங்கள் வேலை…பலனை பரமம் பார்த்துக்கொள்ளட்டும்….
  இது உங்களுக்காகன்னு இல்ல…….
  பொதுவாச் சொன்னேன்

  • தாஜ் said,

   27/03/2013 இல் 22:59

   எல்லாம் சரிதான் மஜீத்.
   ஒரு கவிதையை தீர எழுதி முடிக்க
   எனக்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பதை
   நீ
   நன்றாகவே அறிவாய்.

   இந்தக் குறிப்புகளை
   எத்தனை துரித சுழுவில் எழுதினேன்!

   ஒரு கவிதை எழுத எனக்கான காலத்தைவிட
   குறைவான காலத்தில்
   இத்தனைக் குறிப்புகளையும் எழுதினேன் என்றால்
   நீ நம்பணும்.

   உழைப்பற்ற எந்தவொரு எழுத்தும்
   மரியாதைக் குறியதல்ல.

   பாறையை உடைத்து
   உளிக் கொண்டு
   வருடக் கணக்கில் செதுக்கப்படும் சிற்பமும்,
   அச்சில் வார்த்தெடுக்கும் சுடுமண் சிற்பமும்
   எப்படி ஒன்றென நினைக்க முடியும்?

   • 28/03/2013 இல் 12:27

    ரென்டுசெகண்ட்ல எழுதுனா என்ன,
    ரென்டுநாள்ல எழுதுனாத்தான் என்ன?

    முகநூலோ வேறெங்கோ….

    பதிவாகட்டும் என்ற முடிவுபெற்ற எதுவும்… கருத்து….பஞ்ச்….பழமொழி… வியக்கத்தகு உண்மை… வாழ்வியல் தத்துவம்
    எப்படியோ உருப்பெறட்டும்..

    அது எழுத்துண்ணே…
    இருந்துட்டுப் போகட்டும்

 5. 29/03/2013 இல் 10:41

  யப்பா…..

 6. HAJAMYDEEN said,

  06/04/2013 இல் 02:58

  EELLORUKKUM PURIUM PADIANA EALUTTU, THODARUNGAL.HAJA.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s