எஸ். ஆல்பர்ட் சார் – ‘முன்றில்’ உரை

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்களின் கவிதைகள் கிடைக்குமா என்று கேட்டபோது,   ‘எஸ். ஆல்பர்ட் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார். ‘இல்லாத கிழவியின் கதை’ என்ற தலைப்பில். அந்த கவிதையை முழுவதுமாக நகுலன் தன்னுடைய ‘ நாய்கள்’ நாவலில் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியாக மேற்கோள் காட்டியிருப்பார். ‘நாய்கள்’ கைவசம் இருந்தால் பாருங்களேன்’  என்று பதில் தந்திருந்தார் நண்பர் எம்.டி.எம் . ‘நாய்கள்’ ஊரில் இருக்கு, பார்க்கிறேன்  என்று எழுதிவிட்டு அன்போடு அஸ்மாவை விசாரித்தால்… குலைநடுங்குமாறு குலைக்கிறாள்! என் சுபாவம் ஒட்டிக்கொண்டது போலும். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆல்பர்ட் சாரின் பிரியத்திற்குரிய மாணவராக இருந்த நம்ம நாகூர்ரூமி சாரிடமும் கேட்டேன். நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் நாகூர் ரூமிக்கு அதிகமாகவும் ஆபிதீனுக்கு  ரொம்பக் கொஞ்சோண்டும் அறிமுகப்படுத்திய ஆளுமையாயிற்றே ஆல்பர்ட்சார்… ( மிக முக்கியமான இன்னொருவரின் பெயரையும் இங்கே அவசியம்  குறிப்பிடவேண்டும்; ஆனால் அவர்  , ஆல்பர்ட்சாருக்கே இலக்கியம் போதித்தவன் நான், தெரியுமா? என்று அலட்ட ஆரம்பித்துவிடுவார். வேண்டாம்).   கவிதையை  இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரூமி. ‘ஆல்ஃபார்ட் சார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறாரோ ஆல்ஃபா மன்னர்? சரி, அதுவரும்வரை , சத்யஜித்ராய் பற்றி ஆல்பர்ட்சார் எழுதிய கட்டுரையை இங்கே மீள்பதிவிடலாம் என்று யோசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருந்தபோதுதான் கிடைத்தன மா.அரங்கநாதனின் அவர்களின் தளத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் (MP3). என் சந்தோசத்தைச் சொல்ல வார்த்தையில்லை போங்கள். மா.அரங்கநாதன் அவர்களுக்கு நன்றி.

1980 என்று நினைக்கிறேன், ‘சென்னையிலிருந்து ’பிரக்ஞை’ ரவிஷங்கர் வந்திருக்கிறார்.. வாருங்கள் பொன்மலைக்கு..’ என்று நாகூர்ரூமியுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போய் உரையாடிக்கொண்டிருந்த எங்கள் ஆல்பர்ட்சாரின் குரலை மீண்டும் இப்போது கேட்டதும் உற்சாகமாகிவிட்டேன்.  ஆல்பர்ட்சார் சென்னையில்தான் இருக்கிறாராம். ரூமி சொன்னார். ஊர் சென்றால் அவசியம் பார்ப்பேன் (ரூமியை அல்ல, ஆல்பர்ட் சாரை!) . 1991-ல் நடந்த இந்த ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் பேசும் அசோகமித்திரன் அவர்கள் , தனக்கு எஸ். ஆல்பர்ட்டை 22 வருடங்களாகத் தெரியும் , தமிழ் சிறுகதைக்காக நிறைய உழைத்திருக்கிறவர்’ என்று சொல்கிறார். சிறுகதை வடிவம் பற்றிய ஆல்பர்ட் சாரின் உரையை டைப் செய்து இரண்டொருநாளில் பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை ’தமிழின் ஆகச்சிறந்த மற்ற படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின்’ குரலையும் கேளுங்கள்.

மா.அரங்கநாதனின் அற்புதமான ’முன்றில் நினைவுகள்’ சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன். அவசியம் வாசியுங்கள். அவ்வளவு சீரியஸான ஆளுக்கு ஹாஸ்யமும் பிய்த்துக்கொண்டு வருகிறது. அவர் ஓய்வு பெற்ற நாளில் – பெற்றுக்கொண்டே இருக்கும்போது – அலுவலகத்திற்கு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் வந்தாராம். அன்று முதல் முதலாக அரங்கநாதனைப் பார்த்தவர் அரண்டுபோய் கவலையுடன்  நெருங்கியிருக்கிறார். ’வேறு ஒன்றும் இல்லை ஓய்வு பெறும் நாளன்று அலுவலகத்தில் மாலை ஒன்று போட்டு. நாற்காலியில் என்னை உட்கார வைத்து இருந்தபடியால் என்னமோ ஏதோ என்று எண்ணி பதறிவிட்டார்’ என்கிறார் மா. அரங்கநாதன்! சாதாரண கோலத்திலேயே அப்படித் தோன்றும் நான் வெடித்துச் சிரித்துவிட்டேன். –  ஆபிதீன்

***

நன்றி : மா.அரங்கநாதன் ( முன்றில் நினைவுகள்)

6 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  13/03/2013 இல் 09:09

  எங்களூர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த கலை இலக்கிய விழாவுக்காக வந்திருந்தார் எழுத்தாளர் பிரபஞ்சன்! விழா ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் என்

  நண்பர். பள்ளி விழா முடிந்தவுடன், பிரபஞ்சனை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். நான் பிரபஞ்சனின் ரசிகனாக இருந்து அவர் எழுதியப்

  படைப்புகள் அத்தனையையும் வாசித்தவன் என்பதினால், பிரபஞ்சனுடான என் பேச்சு சுவாரசியமாக போய்கொண்டிருந்தது. என் புத்தக வாசிப்பில்

  வியப்புற்றவராக… “மா.அரங்கநாதனின் படைப்புகளை வாசித்திருக்கின்றீர்களா? குறைந்தப் பட்சம் அப்படி ஒரு படைப்பாளி இருப்பதையாவது அறிவீர்களா?”

  என்றார்!

  “நவீன இலக்கிய வாசிப்பில் என்னை பெரிதும் கவர்ந்தப் படைப்பாளிகளில் மா.அரங்கநாதன் முக்கியமானவர். அவரது எல்லா எழுத்தையும் வாசித்திருக்கிறேன்.

  தவிர, அவரோடான என் ஸ்நேகம் குறிப்பிடத் தகுந்தது. பெரிய அண்ணன் மாதிரியான… ஆனா சுதந்திரம் கொண்ட ஸ்நேகம்! நிறைய பேசிப் பழகி

  இருக்கிறேன். நவீன இலக்கியத்தின் இன்னொருப் பக்கத்து சந்தேகங்களுக்கு எனக்கு விடைசெய்தவரே அவர்தான்!” என்றேன். பிரபஞ்சன் வியப்புற்று போனார்.

  பிரபஞ்சன், அப்படி என்னை கேட்க அர்த்தமிருந்தது. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், வியக்கத்தகும் எழுத்தை எழுதி வந்தவர் மா.அரங்கநாதன்!

  அவரது படைப்புகளை, வாசித்தவர்கள் பிரமித்துப் போய் அவரைத் தேடி சந்திக்கச் சென்றவர்களே அதிகம்!

  மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ அலுவலகம், தி.நகர் / ரெங்கராஜன் தெரு – ஸ்டேஷனை இட்டிய ஒரு காம்லக்ஸ் மாடியொன்றில் இருந்தது. அதனாலேயே,

  பலரும் அவரை எளிதாக தேடிப்போகும் இடமாக மட்டுமல்லாது, எழுத்தாளர்களின் மீட்டிங் ஸ்பார்ட்டாகவும் அது விளங்கியது. தவிர, அங்கே புத்தக

  விற்பனைப் பிரிவும் இருந்தது.

  நான் அங்கே புத்தகம் வாங்கச் சென்றவன்தான். முன்பே முன்றில் வாசித்திருந்ததினால், அதன் ஆசிரியர் என்கிற அளவில், மா.அரங்கநாதன் அவர்களிடம்

  பேசினேன். அவர் சரிசமாக உட்கார்ந்து, என்னோடு சேர்ந்து புகைப் பிடித்தப்படிக்கு மொழி நுட்பத்தின் பலகதவுகளை திறந்து பேச பேச நான் மலைத்துப்

  போனேன். அன்றுவரை சுவைக்காத புதுமைப் பித்தன் கதைகள் அவரிடம் பேசிய பின்னாளில்தான் சுவைத்தது! திருநெல்வேலி பிள்ளைமார். அவர் மதப்

  பற்றாளர் இல்லை என்றாலும், அவரது கருத்துக்கள் சைவம் சார்ந்து இருக்கும். அத்தனைக் காலமும் என் கண்ணுக்குப் புலப்படாத, உணரமுடியாத பிராமண

  ஆதிக்கம் கொண்ட தமிழில் வகுத்துப்பாராது சஞ்சரித்து வந்திருக்கிறேன் என்பது மாதிரியான தாக்கத்தை அவரது பேச்சு உணர்த்தியது.

  தொடர்ந்து நானும் விடாது, சென்னை போகிற போதெல்லாம், தேடிப் போய் அவரை சந்தித்து அவர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆதியோடு அந்தமாக

  கேள்விகள் வைத்தவனாகவே இருந்தேன். அவரும் சளைக்காமல் பதில் தந்துக் கொண்டிருந்தார்.

  அவரது அலுவலகத்துக்கு போகத் தொடங்கிய போதுதான், பல்வேறு நவீன இலக்கியப் படைப்பாளிகளை சகஜமாக சந்திக்கத் தொடங்கினேன். அத்தனை

  பேர்களும் அவரிடம் பணிவுக் காட்டியதையும் கண்டேன். பிரமிளும் அதில் அடக்கம். அங்கே வைத்து பிரமிளிடம் ஓரிரு முறை இலக்கியம்யொட்டிய சிறு

  சர்ச்சைகள் கூட நான் செய்திருக்கிறேன்.

  நான் எழுதத்தொடங்கியப் பிறகு, விமர்சனத்தையும் விட்டு வைக்கவில்லை. பயம் அறியாது பலரையும் வம்பிற்கிழுத்தேன். அதில் கருணாநிதியும் அடக்கம்!

  தமிழில் நான் வாசித்த எந்தவோர் படைப்பாளியின் படைப்புகளையும் தோன்றும் போது, தங்குத் தடையின்றி விமர்சனம் செய்பவனாகவே வளர்ந்தேன்.

  இன்றைக்கும் அப்படித்தானென நம்புகிறேன். ஆனால், மா.அரங்கநாதனின் படைப்புகள் ஒன்றைத் தவிர! அவரது படைப்பின் எழுத்துக் காட்டும் வர்ண ஜாலம்

  மகத்தானது! வாசிப்பவனின் வாசிப்பில் சட்டென சிக்கிவிடக்கூடியதல்ல அது. நவீனத்தில், அபூர்வமாக சுட்டிக்காட்டப்படும் நகுலனைக்கூட மையம் கண்டு

  நெருங்கிவிடலாம், மா.அரங்கநாதனிடம் அது சாத்தியமாவதில்லை. சாத்தியமென்றாலும் கூட அவரது எந்த ஒரு தனிக்கதை விமர்சனம் மட்டுமே சாத்தியம்.

  அவரது சிறுகதைத் தொகுப்புக்கு அது சாத்தியமில்லை. ஒரே கதாப்பாத்திரம், எல்லா கதைகளிலும், வித்தியாசக் கோணத்தில் முகம் காட்டும். சங்கிலித் தொடரான

  ஓர் ஒற்றுமை மட்டும் அதனிடம் இருக்கும். அதனை புரிந்து தெளிவது எளிதல்ல! அவரது சிறுகதை தொகுப்பான ‘காடன் மலை’ க்கு விமர்சனம் செய்ய

  பலமுறை நான் முயன்று தோற்றிருக்கிறேன். இன்றும் அது என்னால் இயலாமலேயே போய்கொண்டிருக்கிறது!

  சில வருடங்களுக்கு முன், தன் உறவினரோடு நாடிஜோடிடம் பார்க்கவென்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு காரில் வந்த மா.அரங்கநாதன், சீர்காழியில் நான்

  இருப்பதை நினைவில் கொண்டு, வீடுத்தேடி வந்து நாலுவார்த்தையும், ஒரு டம்ளர் பச்சைத் தண்ணீர் மட்டுமே குடித்து போனார்.

  பஞ்சம் பிழைக்கும் வாழ்க்கையில் அந்த பெரிய மனிதரை திரும்ப சந்திக்க நேரம் வாய்ப்பேனா என்கிறது!
  என்றாலும்….
  சந்திப்பேன்.
  பாண்டியிதானே இருக்கிறார்!
  பார்க்கலாம்.
  -தாஜ்

  • abedheen said,

   13/03/2013 இல் 11:22

   //பாண்டியில்தானே இருக்கிறார்!
   பார்க்கலாம்.// நம்ம கி.ரா ஐயாவையும் பாருங்க. முடிஞ்சா நானும் வர்றேன்.

   • 13/03/2013 இல் 13:11

    இப்டித்தான் நானும் தாஜ்ட்ட சொல்லி வருசம் ரெண்டாச்சு…நீங்களாவது போங்க…

 2. Nagore Rumi said,

  13/03/2013 இல் 16:13

  அன்பு நண்பகளுக்கு, ஆபிதீன் சொன்ன பிறகு, நான் ஆல்பர்ட் சாரிடம் பேசினேன். அவர் கைவசம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். நான் ஒருநாள் நேரில் வந்து பேட்டி மாதிரி எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
  S Albert
  5, Corner Stone Flats
  Ragupathi Nagar
  5th Street
  Ezhoor Amman Koil Street
  Nanganallur
  Chennai — 114 என்ற முகவரியில் இருக்கிறார்.
  அவரது செல் எண்: 9444606683
  இன்னொரு முகவரியும் இருக்கிறது. நுங்கம்பாக்கம் ஸ்டேஷனுக்குப் பின்பக்கம் உள்ள ஒரு தெரு. அங்குதான் நான் அவரை சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு! அதே மாதிரி இருக்கிறார்! பேச்சும் உருவமும் கூட மாறவில்லை. அவரைப் பற்றி நான் எழுதலாம் என்றுதான் எண்ணியுள்ளேன். ஆபிதீன் சொன்னமாதிரி. ஆனால் ஆபிதீனே ரொம்ப சிரமப்பட்டு அல்லது சிரமப்படாமல் இணையத்தளம் மூலமாக சில அருமையான உரைகளை எடுத்துக்கொடுத்துவிட்டார். அவைகளும் எனக்கு நிச்சயம் உதவும்!
  தாஜ் படிக்காத எழுத்தாளர்களே இல்லை போலுள்ளது! ஒரு கட்டுரைக்கு மறுமொழியாக ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது! நானும் தாஜை ஒரு தொகுப்பாவது கொண்டுவாருங்கள் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். பார்க்கலாம்.

  ஆபிதீன் போகிற போக்கில் சில உண்மைகளைச் சொல்லியிருக்கிறார் அவரைப் பற்றி! பாராட்டுக்கள்.
  அன்புடன்
  ரூமி

  • தாஜ் said,

   13/03/2013 இல் 20:11

   அன்பு
   ரூமிக்கு…..
   நன்றி.

   நலம்தானா…..?

   -தாஜ்

  • abedheen said,

   14/03/2013 இல் 10:04

   //போகிற போக்கில் சில உண்மைகளை// எது, எனக்கு கொஞ்சோண்டு தெரியும்ங்குறதா? பொய். உம்மோடு சேர்ந்து ஒண்ணுமே தெரியாம பொய்டுச்சி.. ‘தகவல் திலகம்’ தாஜ்தான் இப்போ உதவுறார். அவர் தொகுப்பை நீர் கொண்டு வாரும். அட்டை ஓவியம் ஆபிதீன். ஒகே?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s