வரங்களை சாபமாக மாற்றும் மோடிமஸ்தான்கள்

*முஸ்லிம்களுக்கு மட்டும்…

நண்பர் குளச்சல் மு.யூசுப் எழுதிய பழைய கட்டுரை, ‘செங்கொடி’யிலிருந்து நன்றியுடன்…

***

kulachal-yusuf1என்னுடைய இந்தக் கட்டுரை சமூக அக்கறையுள்ள ஒரு  எழுத்தாளனின் ஆதங்கம் மட்டும்தான்; ஊர் அமைப்புகளுக்கு அறிவுரை சொல்வதல்ல! இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படை சார்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதாக நாம் சொல்லிக்கொள்வதால்  இதற்கெதிரான நம்முடைய செயல்பாடுகளையும் மற்றவர்கள் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் புரிந்து கொள்கிறார்கள். இதன்  காரணமாக பல்வேறு மௌனங்களை அனுபவித்தவன் என்பதால் இதை எழுதியிருக்கிறேன்.

அண்மையில், என்னை மிகவும் பாதித்த சம்பவத்தைப் பற்றிய  தகவல் இது. ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கு முன் திருமணமான  ஒரு  தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்குள் இப்படியான மன வேறுபாடு இருப்பது எதிர் வீட்டிலிருப்பவர்களுக்குக் கூட தெரியாது என்பதிலிருந்து  இது, மாமியார் – மருமகளுக்கிடையிலான, மிகச்சிறு அளவிலான பிரச்சினைதான் என்பதையும் இதுதான் தம்பதியர்களுக்கிடையில் மனவிரிசலை உருவாக்கியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம். மட்டுமல்ல, அந்த மணமகன் வெளி நாட்டில் பணி புரிந்து வருபவர்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இரண்டு மாதவிடுமுறையில் ஊருக்கு  வருகிற அந்த மணமகன், தன்னுடைய வாழ்க்கைத் துணைவியுடன் வாழ்ந்த காலம், அதிகபட்சமாக இரண்டே மாதங்கள் மட்டும்தான். கணவன் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு சில நாட்களுக்கு முன் மனைவி, பிறந்த வீட்டுக்குப் போயிருந்தாள். மாமியார்– மருமகளுக்கிடையில் ஏற்கனவே இருந்த முரண்பாடுகளும் மருமகள் தாய்வீட்டுக்குப் போயிருந்ததுமாகச் சேர்ந்து கணவன், ஊருக்கு வந்த ஒரு மாதத்தினுள் ஃபஸ்க் சொல்கிற அளவுக்குக் (ஃபஸ்க்-இ-நிக்காஹ் – திருமணத்தை முறிப்பது ) கொண்டுபோய் விட்டு விட்டது என்பதுதான் அந்தச் சம்பவத்தின் உச்சபட்சக் கொடுமை.

மணமுறிவு நடந்த அன்று மணமகன் இல்லத்தைச் சேர்ந்த ஜமாஅத்தாரிடம் கொடுப்பதற்காக மணப்பெண்ணின் ஆட்கள் தயார் செய்து கொண்டு வந்த ஒரு குறிப்பை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அதில்: இரு தரப்பு சம்மதத்தின்பேரில் இந்த நிக்காஹ் மணமுறிவாக முடிவுக்குக்கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும், மணமகள் ஃபஸ்க்? செய்து மணமகனின் ஜமாஅத்திற்குக் கொடுத்திருப்பதாகவும் ஆகவே, இது சம்பந்தமாக இரு சாராரும் இனி சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கோ ஜமாஅத்துகள் மூலமாகவோ எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்றும் எட்டு சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட்டுக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.    இந்த மணமுறிவைப் பற்றி நியாயமான, சட்டபூர்வமான விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடைபெற்ற அவசரகோல நடவடிக்கையைப்பற்றி சற்று  தீவிரமாக யோசிக்க வேண்டியதிருக்கிறது. தம்பதியர் இணைவதற்கான சிறு இடைவெளிகூட ஏற்பட்டுவிடாமல் எல்லாப் பக்கத்திலுமுள்ள கதவுகளை உடனடியாக இழுத்து மூடுவதற்கான தேவை, ஜமாஅத்துகளுக்கு என்ன வந்தது?

மணமகள் தரப்பிலிருந்து கூறப்படுகிற, தொலைபேசியில் ஆபாசமாகப் பேசுகிறான் என்ற குற்றச்சாட்டை நீண்ட நாட்களாக மனைவியைப் பிரிந்து வாழும் ஒரு இளைஞனின் தரப்பில் நின்று உளவியல்ரீதியாக அணுகிப்பார்க்கும் முயற்சியை ஜமாஅத் தரப்பில் யாராவது மேற்கொண்டார்களா? தமது இணை களின் குரலை தொலைபேசியில் மட்டுமே கேட்கும் நிலையில் இளம்தம்பதி யரின் மனவுணர்வு குறிப்பாக, ஆணின் மனவுணர்வு எப்படிச் செயல்படும்  என்பதை ஜமாஅத்தார்கள் உணர்ந்திருந்தால் இந்த மணமுறிவு நிகழ்ந்திருக்குமா? ஜமாஅத்துகளின் பணிகளா இதெல்லாம் என்று கேட்பவர்கள் மன்னிக்க வேண்டும்; என்னிடம் பதில் இல்லை!     இரு மனுதாரருமே மணமுறிவைக் கோரும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று ஜமாஅத்தார் கேட்கலாம். சரிஅத் சட்டத்தின் அடிப்படையில் தான் மணமுறிவை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கலாம்; குறைந்தபட்சமாக சம்பந்தப்பட்ட இரண்டு சாராருக்கும் யோசிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியிருக்கலாம்; உங்கள் பிரச்சினையை நீங்கள் காவல்துறையோ நீதிமன்றமோ மூலம்தான் தீர்க்க வேண்டிய திருக்கும் என்று சற்றுக் கடுமையாகப்  ‘பேசியிருந்தா’லே பிரச்சினை வேறு மாதிரி ஆகியிருக்கும். ஜமாஅத்தார் இப்படி   எதையாவது  செய்தார்களா?

தம்பதியருக்குக் குழந்தையில்லை என்பதை முக்கியப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்ட ஜமாஅத்துகளும் ஒருவேளை திருமணம் நடந்த காலகட்டத்தைக் கணக்கில் கொண்டிருக்கலாம்; அவர்கள் கூடிவாழ்ந்த ஓரிரு மாதங்களினுள்ளிருக்கும் உயிர் உற்பத்திக்கான  மணித்துளிகளைக் கணக்கில் கொண்டார்களா? இந்த மணித்துளிகள் விரல்களுக்குள் அடங்கி விடுமே? செய்தார்களா?   மீண்டும் ஒருவேளை இந்தத் தம்பதியர் இணைந்து விடும்பட்சத்தில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு உருவாகி விடுமென்பதும் பிறகு பிரித்து வைக்கும் வேலை (கர்ப்பிணியாக இருந்தால் இத்தா காலம் நீளும்.) சிரமமாகிவிடும் என்பதால் இந்த அவசர மணமுறிவு நிகழ்ந்திருக்கலாம். அப்படியென்றால் சிறுசிறு மனஸ்தாபங்களுக்கு மண முறிவுகள் மட்டும்தான் தீர்வா?     தாம்பத்ய சரடின் தொடக்க நிலையில் வந்து விழும் இந்தச் சிடுக்குகள்,  மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்த்த கண்காணிப்பிலும், உடல்தேவைகளின் அடிப்படையிலும் மிக எளிதாக அவிழ்ந்து விடக்கூடியவை என்பதை இவர்கள் அறிவார்களா?           நாங்கள் சேர்த்து வைக்கத்தான் முயற்சி செய்கிறோம் என்று ஜமாஅத்துகள் சொல்லுமென்றால் இவர்களது முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவுவதற்கான காரணம் என்ன? ஒருதடவை பேசி விட்டோம் இனி பேச்சு வார்த்தைகள் இருக்கக்கூடாது என்று முடிவாகச் சொல்லி விடும் இந்த ஊர் அமைப்புகள் இறுக்கத்திலிருந்து தங்களை சற்றாவது நெகிழ்த்திக் கொள்ளுமா?  ஜமாஅத்தை வழி நடத்தும் வசதிபடைத்தவர்கள் வீட்டுப் பிரச்சினைகளிலும், இதே இறுக்கத் துடன்தான் நடந்துகொள்கின்றனவா?

மணமக்கள் பரஸ்பரம் புரிந்துகொள்வதற்கான காலஅவகாசமில்லாத இந்தத் திருமணங் களை அவ்வளவு சீக்கிரம் மணமுறிவாக அறிவித்துக்கொள்வதில்  ஜமாஅத்துகளுக்கு அப்படி என்ன அவசரம்? இரு தரப்பு குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பவர்கள் தம்பதியரா, அவர்களது குடும்பத்தினரா? ஒருமணி நேரமா வது தம்பதியர்களை பரஸ்பரம் சந்திக்க வைத்து அவர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படையான சிறு முயற்சிகளையாவது இந்த ஜமா அத்துகள் மேற்கொள்கின்றனவா? ஸைத்தான் என்று நாம் சொல்வோமே, அந்த மனக்குரங்கின் சேட்டைகளை சற்று உளவியல் பூர்வமாக அணுகத்தெரிந்த யாரையாவது இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது பயன்படுத்திக்கொள்ளலாமே? பெண்களின் பிரச்சினைகளை ஆண்கள் மட்டுமே கூடி முடிவு செய்யும் பட்சத்தில் பெண்களையும் இதில் பங்குபெற செய்யலாமே?

இரு வேறுபட்ட ஜமாஅத்தைச் சார்ந்த குடும்பங்களினிடையில்தான் முரண்பாடுகள் ஏற்படும் பெரும்பாலான திருமண உறவுகளும் முடிவுக்கு வருகின்றன. ஒரே  ஜமா அத்தைச் சேர்ந்த திருமண உறவுகளில் இவை மிக அபூர்வமாகவே நிகழுகின்றன. அப்படியென்றால் மணமுறிவுகளின் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஜமா அத்துக்களுக்கிடையிலான புரிதலின்மையா?  பெரியண்ணன் மனோபாவமா?

பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினர்களது மனநிலையும் சிக்கலுக்குள்ளாகி, தம்பதிகளைப் பிரிப்பதுதான் நோக்கமென்று அவர்கள் கச்சைக்கட்டி நிற்கும்போது இது அவரவர் விருப்பம் என்று விட்டு விடுகிற வேலையை ஜமாஅத் செய்யலாமா?

வேறுபட்ட வளர்ப்பு முறைகள், குடும்பப் பின்னணிகளுடன் தாம்பத்திய வாழ்க்கைக்குள் நுழைகிறபோது தம்பதியருக்குள் சிறு முரண்பாடுகள் எழுவது இயல்பான விஷயம் என்பதையும் இந்த முரண்பாடுகளில் பெருமளவும் பெரியவர்களினிடையே உருவாகும் தன்முனைப்பு சம்பந்தமானது என்பதையும் பெரும்பாலான தலாக்குகளும் இந்தக் கால கட்டத்தில்தான் நிகழ்கிறது என்பதையும் ஜமாஅத்துக்கள் உணர்ந்திருக்கின்றனவா?

மக்களின் முறையீட்டுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊர் அமைப்புகள் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படலாமா? தலாக் பிரச்சினைகளை தாம்பத்திய வாழ்க்கை சார்ந்தும் உளவியல்கூறுகள் சார்ந்தும் சரீஅத் சட்டத்தின் அடிப்படையிலும் ஜமாஅத்துகள் அணுகுகின்றனவா?

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியாபோன்ற நாடுகளில் மதம் சார்ந்த தங்களுடைய குடிமையியல் விவகாரங்களுக்காக நீதிமன்றத்தை நாடுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவே, இந்த இடத்தில் ஜமாஅத்துக்களின் பொறுப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த மாபெரும் பொறுப்பை ஜமாஅத்தினர் உணர்ந்திருக்கிறார்களா?

ஜமாஅத்துகளின் கணக்குப் புத்தகத்தில் முடிவுக்கு வந்து விடும் உறவுகள், பிறகு, குடும்பப் பகைகளாகவும் மன ரணங்களாகவும் மாறி சமூக உறவுகளையும், நல்லெண்ணங்களையும், கல்வியையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை. தலாக் சொல்லிப் பிரிந்த தம்பதியரின்  குழந்தைகள் ஆரோக்கியமான ஒரு பிரஜையாக உருவாவதில் ஏற்படுகிற உளவியல் சிக்கல் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையல்லவா?

ஆன்மிக சிந்தனைகள் சார்ந்து மட்டுமே கருத்துப் பரிமாற்றங்களையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்கிற, குடும்பம், வாழ்க்கைபோன்ற விஷயங்களை விவாதிப்பதில் நம்பிக்கையில்லாத ஒரு சமூகத்தின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்க முடியாதென்பதை நாம் மறந்து கொண்டிருக்கிறோமா? இஸ்லாம் என்பதே வாழ்வியல் சார்ந்த ஆன்மிகமல்லவா?

ஒவ்வொரு தலாக் பிரச்சினையும் அதற்கான நியாயங்களுடன்தான் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இறுதித் தீர்வான மணமுறிவு என்பதனுள் எந்த நியாயங்களுமில்லாத பிரிவுதான் மிச்சமாகிறது என்பதையும், ஏற்கனவே நாம்  சமூகம், அரசியல் மற்றும் சமூக வாழ்வு சார்ந்து எதிர்கொள்கிற பிரச்சினைகளை இது மேலும் தீவிரப்படுத்தும் என்பதையும் ஜமாஅத்துகள் உணர்ந்திருக்கின்றவா?   1939ஆம் வருடம் ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் பெண்களின் நலனை முன்வைத்து அடைந்த ஃபஸ்க் உரிமையைக் கூட நாமிப்போது தவறாகப் பயன்படுத்துகிறோம். மணமகளின் ஒப்புதலில்லாமல் பெற்றோர்கள் அவளை திருமணம் செய்து கொடுத்திருந் தாலோ, மனைவிக்கான உரிமைகளை கணவன் மறுக்கும்பட்சத்திலோ, அல்லது, சரீஅத் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி  மனைவியை தலாக் சொல்வதிலிருந்து வேண்டு மென்றே காலதாமதம் செய்தாலோ உபயோகிப்பதற்கான சட்டம் இது. மட்டுமல்ல, இந்தப் பிரிவு குடிமைச் சட்டம்  சார்ந்தது. ஆகவே, இது நீதிமன்றம் மூலம்தான் அணுகப்பட வேண்டும். குறிப்பிட்ட பிரச்சினையில்  மணமகன் வெளிநாட்டில் இருந்த நிலையில் பெண்ணின் உரிமைகள் இயல்பாகவே மறுக்கப்பட்டிருப்பதாக ஜமாஅத் கருதியதா? அப்படியென்றால் இந்தத் திருமணத்தை முதலில் எப்படி ஜமாஅத் அங்கீகரித் தது? தன்னுடைய  அனுமதியில்லாமல் இந்த நிக்காஹ் நடந்திருப்ப தாக  மணப்பெண் முறையிட்டாரா? இப்படி, சட்டத்திற்குப் புறம்பான ஒரு அறிக்கையை மணமகனின் ஜமாஅத்தார் எப்படி ஃபஸ்க்காக ஏற்றுக் கொண்டார்கள்?   சரி, குறைந்தபட்சம் சரீஅத் சட்டத்தின் அடிப்படையிலாவது இந்த மணமுறிவு கள் நிகழ்கின்றனவா என்றால் நாமறிந்த வகையில் சொல்லிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லவே இல்லை!

பரஸ்பரம் இனி ஒத்துப்போகவே முடியாது என்ற முடிவுக்கு வரும் தம்பதியர்கள், குடும்பத்திலுள்ளவர்களிடம் இதை நிரூபிக்க வேண்டும். இவர்கள் தங்களது குடும்பங் களிலுள்ள இரண்டு பேர்களைக்கொண்ட ஒரு குழுவில் இந்தப் பிரச்சினையை முன்வைக்க வேண்டும். இவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டும். பிரச்சினை, இதன் பிறகும் முடிவுக்கு வரவில்லையென்றால் கணவன், முதல் தலாக்கைச் சொல்லலாம். இப்படி, தலாக் சொல்லப்பட்ட மனைவி, கணவன் வீட்டிலேயே மூன்று மாத காலம் வாழ வேண்டும். இந்த இத்தா காலமென்பது, அவர்களினிடையே மீண்டும் இணக்கம் ஏற்படுவதற்கான, மனைவி கர்ப்பமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடு. இந்நிலையில் அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டால் அவர்கள் முன்போல் கூடி வாழலாம். கர்ப்பிணியாக இருந்தால் இந்த இத்தா காலம் மேலும் நீளும். அதாவது கர்ப்பிணியாக இருப்பதால் இணக்கத்திற்கான கால அவகாசம் கர்ப்பக்காலம் வரை நீட்டிக்கப்படுகிறது. திரும்ப ஏற்றுக் கொள்ளவும் விரும்பாமல் இத்தா காலமும் முடிந்து விட்டால் அவர்களிடையிலான உறவு முடிந்துபோய் விடுகிறது. அதோடு அவள் அன்னியமாகி விடுகிறாள். பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மற்ற  இரண்டு தலாக்குகளையும் சொல்லி பரஸ்பரம் பிரிந்து விடலாம்.

ஒரு பெண் தனக்கு, மணமுறிவுதான் ஆறுதலைத் தரும் என்று நம்புகிற பட்சத்தில் சற்று தாமதமானாலும்கூட இதன்மூலம் அவளுக்கு விவாகரத்து கிடைத்து விடுகிறது. விவாகரத்தே வேண்டாம் என்று தம்பதியர் முடிவு செய்கிற பட்சத்திலும் இது உதவியாக இருக்கிறது.   இந்தக் கால இடைவெளிகளைப் பற்றி சிற்சில முரண்பாடுகளிருந்தாலும் முத்தலாக் கையும் ஒரே நேரத்தில் சொல்வதற்கான அனுமதி சரிஅத்தில் இல்லையென்பதாகவே பெரும்பாலான மத அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இப்படி எல்லாமே சரியாக இருக்கும்போது தவறு எங்கிருந்து உருவாகிறது என்பதை நாம் சிந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

முத்தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்கிற நடைமுறை, உலகில் இஸ்லாமிய புரட்சி நடந்த ஒரே நாடான ஈரான்; இஸ்லாமியர்களுக்கென்றே உருவான பாகிஸ்தான் உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளில்கூட  கிடையாதென்பதுவும் அவர்கள் இம்மாதிரி விஷயங்களுக்கு நீதிமன்றத்தைத்தான் அணுகு கிறார்கள் என்பதுவும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள். இந்தியாவைப்   பொறுத்தவரைக்கும் இந்த இடத்தில் ஜமாஅத்துக்கள் தங்களுடைய பொறுப்பை,  ‘….(இதைப்பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்.’ எனும், அல் குர்ஆன் 65ஆம் அத்தியாயம், ஸூரத்துத் தலாஃக், 6ஆவது வசனத்தைச் சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

***

நன்றி : குளச்சல் மு. யூசுப் ( http://www.facebook.com/KulachalMuYoosuf ) , தாஜ்

12 பின்னூட்டங்கள்

 1. Nagore Rumi said,

  24/02/2013 இல் 18:28

  ரொம்ப அற்புதமான கட்டுரை. குளச்சல் யூசுஃப் மாதிரி ஊருக்கு, ஜமாஅத்துக்கு ஒரு ஆள் இருந்தால் மண முறிவு விஷ்யங்களில் இந்த மாதிரியாக அயோக்கியத்தனங்கள் நடக்கவே நடக்காது. பாதுகாக்க வேண்டிய கட்டுரை.

  • தாஜ் said,

   24/02/2013 இல் 19:41

   நாகூர் ரூமியை
   நான்
   வழிமொழிகிறேன்.

  • 27/02/2013 இல் 22:29

   அது சரி. தடுக்க முடிகிற இடத்தில் இருப்பவர்கள், உட்கார்ந்து, கட்டுரையா எழுதிக்கொண்டிருப்பார்கள். இதெல்லாம் வெறும் வலிநிவாரணி மட்டும்தான். அல்லது, தப்பித்தல். வார்த்தைகள் வழுக்கி விழ, இருபத்து நான்கும் ஒன்றாகி விடுமோ என்ற சர்வ ஜாக்கிரதையுடன் தன்னை த்ற்காத்துக்கொள்வதே பெரும்பாடு. அனைவருக்கும் நன்றி.

 2. 25/02/2013 இல் 10:20

  அருமையான கட்டுரை அண்ணே.. பகிர்ந்தமைக்கு நன்றி!

  • abedheen said,

   25/02/2013 இல் 10:34

   அதெல்லாம் சரி, மறுமொழியில் வழிமொழியும் ஆட்களை ஒருவழி பண்ண மாட்டீர்களா?

 3. 25/02/2013 இல் 11:33

  தாஜ் அண்ணனை வழிமொழிகிறேன்னு சொன்னா திட்டுவீங்கன்னுதான், சொந்தமா யோசிச்சு, நன்றி சொல்லி இருக்கேன்’ண்ணே :))

  • தாஜ் said,

   25/02/2013 இல் 14:03

   சென்ஷி…
   சும்மா சொல்லக் கூடாது,. ம்ம்ம்…
   ரொம்ப சரி.

   • 26/02/2013 இல் 16:58

    ஏ(ன்) வலி தனி வலி.
    அதனால் சென்ஷியை
    வலி மொலிகிறேன்

 4. Sadayan Sabu said,

  25/02/2013 இல் 16:24

  ஆபிதீன் வழியும் என்கிறீர்களா ? வழிமொழியும் என்கிறீர்களா .. இரண்டும் ஒன்றே என சொல்லாமலிருந்தால் சரி

  நல்ல கட்டுரை

 5. 25/02/2013 இல் 16:26

  மிக அருமையான கட்டுரை. என் பெரியம்மாவுக்கும் இதுதான் நடந்தது.

 6. Sargunam Shafi said,

  26/02/2013 இல் 07:11

  மிக அருமையான, அவசியமான கட்டுரை.
  தெற்காசியாவையே பீடித்திருக்கும் பேய் இது.
  சமயங்களில் இது போன்ற சம்பவங்களைக் கேட்கும் போது நெஞ்சமெல்லாம் பதறும்.

  கவனத்திற்கு எடுத்து வந்த சகோதரர் ஆபிதீன் அவர்களுக்கு நன்றி.

  • 26/02/2013 இல் 17:03

   ஷாஃபி சொன்னது மிகச் சரி
   நகைச்சுவைகளெல்லாம்
   பதறும் நெஞ்சுகளை ஆற்றிக்கொள்ளத்தான்

   சுயமாகச் சிந்தித்து
   உண்மைநிலை கண்டறிந்து
   சுயமான முடிவை
   சம்மந்தப்பட்ட
   ஆண்மகன் எடுத்தால்
   தவறு நடப்பது குறையும்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s