அறிவும் அனுபூதி நிலையும் – சூபிசத்தின் தோற்றம் குறித்து எச். பீர் முஹம்மது

’சொல் புதிது’ 10ஆம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  பிரியத்திற்குரிய நண்பர் எச்.பீர் முஹம்மதின்  வலைப்பதிவில் –  சூபிஸம் பிரிவில் – தற்போது ‘ஹசரத் இனாயத்கான்’ பற்றிய அறிமுகம் (’ஒலியலை மிதக்கும் வெளி) மட்டும்தான் இருக்கிறது. இந்தக் கட்டுரையையும் அவர் இணைத்துக்கொள்வார் என்று நம்புகிறேன். இந்தப் பதிவுக்காக வஹாபிகள் என் மேல் கோபம்கொள்ளலாம். நல்லது,  ‘சூபிசம் என்பது கோபதாபங்களை நிராகரிக்கிறது’! தட்டச்சு செய்ததில் தவறிருந்தால் மட்டும் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். நன்றி. – ஆபிதீன்

***

sufism_and_tasawwuf_by_essani666-d464bu6

அறிவும் அனுபூதி நிலையும்

எச். பீர் முஹம்மது

மூலாதாரத்திற்குத் திரும்புவது என்பது அதன் அர்த்தத்தை அறிவதாகும். வெறும் தோற்றங்களைத் தொடர்வது என்பது அதனை நழுவ விடுவதாகும்.

மூலாதாரத்தோடு ஒன்றிவிடுவதே நோக்கமாக இருக்க வேண்டும். வெறும் அறிவு என்பது மனிதனின் வெளித்தோற்றமாகவே இருக்கிறது. அனுபூதி நிலையில் மட்டுமே அதனை அறிய முடியும். நாம் வெறும் உடைகளை மட்டுமே மாற்றி கொள்கிறோம். மூலாதாரம் என்பது இந்த உடைகளுக்கு வெளியே இருக்கிறது. இந்த உள்ளறிவு நிலையைத் தனக்கான தத்துவமாகக் கொண்டார்கள் சூபிகள்.

இவர்களின் தோற்றம் குறித்ததான பல்வேறு விதமான கருத்தாங்கங்கள், வரலாற்று விளக்கங்கள் நிலவுகின்றன. அன்றைய அரேபிய மண்டலத்தில் இஸ்லாமின் வருகையானது சமூக மாறுதல்களுக்கான முக்கிய காலமாக இருந்தது. சமூகம் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்தது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் நபியின் வருகைக்கு பின் ‘இஸ்லாமியக் கோட்பாடு’ தன்னை மதமாக வடிவமைத்துக் கொண்டது. பின்னர் உலகம் முழுவதுமாக அதன் பரவலாக்கம் நிகழ்ந்தது. வலுவான இஸ்லாமிய அரசானது அதன் மூலம் அரேபிய மண்டலத்தில் ஏற்படுத்தப்பட்டது. ‘அரசு’ என்பதன் வழியாக சமூகம் வடிவமைக்கப்படும்போது நியதிகள், நடைமுறைகள், சட்டதிட்டங்கள் விதியொழுங்குகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக அரசு என்பதே ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் அரசாகவே இருக்கும். இந்த அரசமைப்பிற்கான சட்ட திட்டங்கள், விதியொழுங்குகள் அரபு சொல்லின்படி ஷரீஆ எனப்பட்டன. (இஸ்லாமிய நாடுகளில் சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடைமுறையாக இந்த ஷரீஆ இருக்கிறது. இந்தியாவில் வெறும் சிவில் நடைமுறையாக இருக்கிறது.) சூபிகள் ஷரீஆ எனப்படும் கட்டமைப்பின் எல்லைக்குள் தங்களைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அதனையும் தாண்டி ‘சுய இருப்பை’ நிர்ணயித்தார்கள். நபிகளின் காலத்தில் கூட அவருடைய தோழர்கள் ஒரு சிலர் மத்தியில் இதற்கான ஆன்மீகத் தேடல் இருந்தது. உதாரணமாக அம்மார்-பின்-யாசின், சல்மான் பார்சி, அப்துல்லா-பின்-மசூத் போன்றோரைக் குறிப்பிடலாம். சில வரலாற்றாசிரியர்கள் உவைசுல்-குரானியை இந்தப் பட்டியலில் இணைக்கிறார்கள்.) ‘இறைவன்’ என்ற கருத்துருவமே சூட்சுமமானதாக அவர்களுக்குத் தென்பட்டது. சுயம் என்ற மனித நிலையானது குறுக்கல் பார்வையாக நம்மிடத்தில் இருக்கிறது. அவர்கள் சுயத்தை இறைவன் அல்லது கடவுள் என்ற அபிரபஞ்ச நிலையோடு இணைத்தார்கள். சூபிகள் முழு வாழ்க்கையை நான்கு நிலையாகப் பிரித்தார்கள்.

1. வாழ்க்கைக்கான நியதி அல்லது ஒழுங்கு (ஷரீஆ)

2 சுயத்தை அறிதல் ( தரீகத்)

3. எதார்த்தத்தை அறிதல் (ஹகீகத்)

4. ஒருமையை அடைதல் (மஅரிபத்)

இதனை யோகிகளின் அபானன், விபானன், உதானன், சமானன் என்ற மூச்சின் நான்கு நிலைகளோடு ஒப்பிடலாம்.

சூபி என்ற சொல்லானது Tasawouf என்ற அரபி சொல்லின் வேர்ச்சொல்லாகும். கம்பளி என்பது இதன் பொருள். இதனை நீட்டித்து சொல்லும்போது ‘சூபிகள்’ என்றறியப்படுவர்கள் கம்பளியால் தன்னைப் போர்த்திக் கொண்டவர்கள். அன்றைய அரபுச் சமூகத்தில் இஸ்லாமின் துவக்க காலத்தில் புனிதர்கள் எல்லாம் கம்பளியால் தன்னைப் போர்த்திக் கொண்டார்கள். இதிலிருந்தே இந்த வார்த்தையாடல் வெளிவந்ததாகக் கூறுகின்றனர் சிலர்.

இன்னும் சிலர் ‘Suf’ என்ற அரபுச் சொல் அரபு இலக்கணப்படிச் சரியானதாக அமையவில்லை, அது Sufateh என்ற சொல்லிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்கள். ‘Sufateh’ என்பதற்கு மெல்லிய செழ் என்பதாகும். காரணம் சூபிகள் தன்னைச் சுயவருத்தம் செய்தார்கள். எடையற்று போதலாக மாற்றி கொண்டார்கள். அகநிலைக்குத் தன்னை உட்சுருக்கம் செய்யும்போது எல்லாமே எடையற்று வீழ்கிறது . இதன் வழி Sufateh என்ற சொல் வந்ததாக அவர்களுடைய கருத்து.

மேற்கண்டவற்றிற்கு மாறாக சில சிந்தனையாளர்கள் ‘Sufi’ கிரேக்க சொல்லான ‘Soph’ என்பதிலிருந்து வெளிவந்தது என்கிறார்கள். ‘Soph’ என்பதற்கு ஞானம் அல்லது அறிவு என்று அர்த்தம். ஆனால் பொருத்தமானதாக இல்லையென்று தோன்றுகிறது. காரணம் சூபிகள் சில காலம் கிரேக்க தத்துவத்தை எதார்த்தைத்தை அறியும் கருவியாகப் பார்க்க மறுத்தார்கள். எப்படிப்பட்ட வேறுபட்ட விளக்கங்கள் சூபிசத்திற்கு எழுந்தாலும் சாராம்சத்தில் உள்ளறிவு நிலையே பிரதானமாக இருந்தது.

Tasawouf என்ற சொல்லை இமாம் சாதிக் தனித்தனி எழுத்தாகப் பிரித்து அர்த்தப்படுத்தினார்.

ஒவ்வொரு எழுத்தும் சூ·பிகளின் பல்வேறு வழிநிலைகளை, தரங்களை வெளிப்படுத்துகிறது. அரபியில் (TSVF) என்ற நான்கு சொற்களில் குறிக்கப்படுகிறது.

T – Tark (துறத்தல், சுய ஒப்படைப்பு)

S – Sabr, Safa (பொறுமை, தூய்மை)

V – Vud (அன்பு)

F – Fana, Fard (தனிமை, நிர்மூலத்தன்மை)

மேற்கண்ட வார்த்தைச் சுருக்கங்களின் நீட்சியானது சூ·பிகளின் இயல்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ஒருவிதமான துறவு நிலையே அவர்களில் இயல்பூக்கமாக இருந்தது.

நபிகளின் மரணத்திற்குப் பின் அன்றைய அரபு மண்டலத்தில் அரசுகளின் நிறுவதலும் பல துண்டுகளாக பிரதேச அடிப்படியில் சிதறுதலும் ஏற்பட்டன. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, லெபனான், எகிப்து போன்ற நாடுகளில் வலுவான இஸ்லாமிய அரசுகள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, இந்த நாடுகளில் அரசு அடிப்படையில் அமைந்த சிந்தனை முறைகளும், செயல்பாடுகளும் ஏற்பட்டன. (தற்பொழுது இது மரபானதாக நீட்டிக்கப்பட்டு வருகிறது) சூபிகள் இந்த நாடுகளில் அன்றைய அரசு முறைக்க்கு எதிராகவே இருந்தார்கள். நபிகளின் காலத்திற்கு பின்னும் அதனை ஒட்டியும் வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளாக சூபி சிந்தனை பிரிய ஆரம்பித்தது. உள்ளறிவு அல்லது அனுபூத நிலைக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் சொல்லப்பட்டன. தரீக்கா என்ற அறிதல் களமே அவர்களின் அசலாக இருந்தது. (புத்தரின் பிக்குகள் சங்கத்தைக் குறிப்பிடலாம்) காதிரிய்யா, நக்ஷபந்தியா, ஜிஸ்திய்யா என்பதாக உலகம் முழுவதும் பல்வேறு விதமாக சூபிச சிந்தனைகள் (கிளை) விடத் தொடங்கியது.  சிலர் முழு வாழ்க்கையுமே ஒரு கனவு என்றார்கள். மேற்கத்திய மறுமலர்ச்சிகால தத்துவவாதியான பிஷப் பெர்க்லியும் இந்த நிலைப்பாட்டையே மேற்கொண்டார். ஆனால் அதில் அவர் முழு முற்றாக நம்பிக்கை கொள்ளவில்லை. அதிலும் அவர் கனவு கண்டார். ஒரு தடவை பெர்க்லி தன்னுடைய நண்பர் டாக்டர் ஜான்சனுடன் வெளியில் உலவிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நண்பரிடத்தில் ‘இந்த முழு வாழ்க்கையுமே ஒரு கனவு’ என்றார். இவ்வாறு சொல்லி முடித்தவுடன், இருவரும் சிறிது தூரம் சென்றார்கள். உடனே ஜான்சன் ஒரு கல்லை எடுத்து அவர் மேல் எறிந்தார். உடலிலிருந்து ரத்தம் வழிந்தது. உடனே அலறினார் பெர்க்லி. அவர் சொன்னார் ‘இந்த கல் உண்மையானது’ அதற்கு பெர்க்லி ‘இதுவே ஒரு கனவுதான், நீ கனவில்கூட இதுமாதிரி கண்டிருக்க முடியும். அலறல் சத்தத்தைக் கேட்டிருக்க முடியும். தீக்கனவுகள் காணும்போது நாம் அழுகிறோம். அலறுகிறோம்’.  உலகிற்கு இம்மாதிரிபட்ட விளக்கங்கள் இந்தியத் தத்துவ மரபுகளில் தொடர்ந்திருந்தன. சூபிகளின் ஒரு பிரிவினரின் நிலைபாடு இவ்வாறாக இருந்தது.

சூபிகள் மதம் எனப்பட்ட சதுரமான எல்லையை மீறி அனைவரையும் நேசித்தார்கள். அனைவருக்குமான மனிதநேயமே அவர்களிடத்தில் இருந்தது. மனிதநேயம் என்ற சொல்லாடல் தற்பொழுது மேலாதிக்க வர்க்கத்தின் சொல்லாடலாகவே இருக்கிறது. முதலாளித்துவ மனிதநேயம் அனைவருக்குமான பிரதிபலிப்பு தன்மை கொண்டது. ஆனால் சூபிகளோ இந்த பிரிவினைக்குள் விழவில்லை. இஸ்லாம் என்ற மத நடைமுறையில் அவர்கள் நின்றாலும் அவர்களின் ஆன்மீகத் தேடல் சார்ந்த உள்ளறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்தது. காஜா முயினுத்தீன் சிஷ்தியின் சீடரான ஹசரத் ஹமீதுத்தீன் நாகோரி , தான் ஏற்பாடு செய்த விருந்தில் சாதி, மத எல்லைகளைத் தாண்டி அனைவரையும் பங்கேற்க வைத்தார். இமார் ரூமி, பூஷ்ரி, ரபி இப்னு கைஸம், அப்துல்லா போன்றவர்கள் அடிமைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். சூபிசம் என்பது கோபதாபங்களை நிராகரிக்கிறது. ஒரு விதத்தில் கோபம் என்பதும் கவலை என்பதும் ஒன்றுதான். இரண்டுமே உடலியல் நடமுறைதான். சூபிசம் இறைநிலையை அடைவதை நோக்கமாகக் கொள்ளும். (மரபான உலக நடைமுறையில் அல்ல).  அது வடிவமற்ற சாரம். அனுபூதியானது. உள்தூய்மை சார்ந்தது. எதார்த்தத்தோடு நெருங்கியது. சூபிகள் அவர்களிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார்கள். நான் / நீ என்ற இருமை எதிர்வுக்குள் சாட்சியாக (Witness)  அவதானித்தார்கள். தியானமும் தியானச் செயல்பாடுகளுமே அவர்களுக்கானது. குறிப்பாக சுழல் தியான முறையே பெரும்பாலானவர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஸகஸ்ரார் நிலையை அடைவது அந்த தியானத்தின் நோக்கமாக இருந்தது.

உலக வரலாற்றில் சூபிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார்கள். அதன் விளைவாக பல்வேறு விதமான ஒடுக்குதலுக்கும் கொடூரங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். ஹல்லாஜ் மன்சூர் என்ற சூபி ‘தானே உண்மை (அனல்ஹக்)’ என்று மொழிந்ததன் காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்டு அவர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. இஸ்லாமிய மத உலகியலின் விதியொழுங்குகளுக்கு முரணாக அவர்களுடைய தத்துவ தரிசனம் இருந்ததால் அவ்வாறாகச் சித்திரவதை செய்யப்பட்டனர்.  சூபிசம் இஸ்லாமிய மற்றும் பிற அனைத்து பிரிவினருக்குமான தோழமை தரிசனமாகும். இந்த தரிசனமே இன்று உலகம் முழுவதும் பல்வேறு சிந்தனைப் புள்ளிகளாக, பல்வேறு நடைமுறைகளாக வளர்ந்து வருகிறது.

பின் நவீன உலகில் சூபிசத்திற்கான இடம் தனித்தே இருக்கிறது. எல்லாமே வெளித் தோற்றங்கள்தான். (Manifestation).

‘நீ புனித புத்தகத்தின் புறநிலையாக இருக்கிறாய். நீயே கேள். யாரை உற்று நோக்குகிறோம் என்று’ – மௌலானா ஷாமக்சூத்

***

References :

1. Sufi Thought – S.R. Sharda (Manohar Lal Publishers Pvt. Ltd.,)

2. An Introduction to the History of Sufism ( Orient Longman)

3. http://sufism.org/

4. http://ias.org/

5. http://www.naqshbandi.org/

6. Osho : Just like That  (pdf courtesy : Osho Foundation)

***

நன்றி : எச். பீர் முஹம்மது, சொல்புதிது

2 பின்னூட்டங்கள்

 1. 18/02/2013 இல் 19:03

  தக்க சமயத்தில் தரும் ஊட்ட மருந்து. ஆம் மருந்து என்றாலே நோயுள்ளவர்களுக்குரியதுதானே. தரீக்கா என்பது ஆன்மத் தேடல்தானே, ஆன்மத் தேடல் தான் இருக்கும் ஷரிஅத் என்ற கூட்டைப் பிய்த்துக்கொண்டு வெளிவந்து சுயத்தைத் தேடுவது. சுயத்தை தேடுபவனுக்கு உணவு அவசியமில்லை. மருந்தே உணவு. அந்த உணவை இல்லை மருந்தை உரிய சமயத்தில் தந்திருக்கிறார் நண்பர் அவர்கள். எமது பாராட்டுக்கள்

 2. ச.ரவி. said,

  15/02/2016 இல் 12:02

  . [Welcome to Osho World Audio Discourses] is good,have a look at it! http://www.oshoworld.com/discourses/audio_eng.asp?album_id=45
  தங்களின் கவனத்திற்க்கு
  .ஓஷோ அவர்களின்
  பார்வையில் சூபி மார்க்கம்.
  தமிழகத்தில் சூபி மார்க்கம் எங்கு செயல்படுகிறது.?நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s