‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அசோகமித்திரனின் தேர்வும் முன்னுரையும்

காப்பி செய்யத் தெரியாத கவிஞர் தாஜ் (ஹராமாம்!) –  நான் கேட்டேன் என்பதற்காகவே – இரண்டு நாளாக மீண்டும் தட்டச்சு செய்து இப்பொழுது அனுப்பியிருப்பது முழுமையான முன்னுரை (’ஆம்னிபஸ்’ தளத்தில் அ.மி-யின் முன்னுரை ஓரளவு இடம்பெற்றுள்ளது).  நன்றி நண்பரே நன்றி..  மதிப்பிற்குரிய அசோகமித்திரன் தேர்வில் இடம்பெற்ற சிறுகதைகளில்   -ஜெயந்தனின் ’பகல் உறவுகள்’ தவிர – மற்ற எல்லா கதைகளும் ’அழியாச் சுடர்கள்’ தளத்தில் உள்ளன. (அந்தக் கதையையும் எங்கேயாவது மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருப்பார்கள்!) நண்பர் ராமுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்ல வேண்டும்.  எல்லா கதைகளுக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன் – கடைசியில் ,  முன்னுரையை படித்துவிட்டு கதைகளைப் படிக்கவேண்டும் என்பதற்காக. அப்போதும் படிக்கவில்லையென்றால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டி வரும். – ஆபிதீன்

***

taj3முன்னுரைக்கு முன்… நண்பர் தாஜ் :  ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – தொகுப்பாசிரியர் : அசோகமித்திரன். இந்த (2013) வருடத்திய சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. 1984-ம் வருடம் முதல் பதிப்பைக் கண்ட இந்த தொகுப்பு, இன்றைக்கு ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கிற நிலையில் இதனை வாங்கி இருக்கிறேன். வீட்டில் வந்து புத்தக அட்டையை கைகளில் வைத்தபடிக்கு யோசித்த போது,  இப்புத்தகம் என் சேமிப்பில் முன்னரே இருப்பதை அறிய வந்தேன். என்றாலும் ஆவலுடன் படிக்க தவறவில்லை. கிட்டத்தட்ட பெரும்பாலான கதைகள் ஏற்கனவே படிக்கப் பட்டிருந்தாலும் இன்றைக்கு அவைகள் புதிய வண்ணங்களைக் காட்டியதில் குதுகலமானேன். அசோகமித்திரனின் தேர்வு அப்படியானது! குற்றம் காணமுடியாத தேர்வும் கூட. சில நண்பர்கள் இந்த தேர்வில் மறுப்பட்ட கருத்தைக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. என்றாலும், அசோகமித்திரனின் தேர்வு, அவரது ஆய்வின், ரசனையின் பாற்பட்டது என்பதை யோசிக்க தலைப்படும்போது, நண்பர்கள் இத் தேர்வின் யதார்த்தை உணர்ந்தறிய வாய்ப்பிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் அசோகமித்திரன் அவர்களால் தேர்வான கதைகள் மொத்தம் பதினாறு. பெருமைக்குரிய அந்தப் படைப்பாளிகளையும் அவர்களது ஆக்கங்களையும் கீழே பட்டியலிடுகிறேன்.

மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி , மிலேச்சன் – அம்பை , நிழல்கள் – ஆதவன்,  எஸ்தர் – வண்ணநிலவன், உத்தியோக ரேகை – சார்வாகன், தொலைவு – இந்திரா பார்த்தசாரதி,  சண்டையும் சமாதானமும் – நீல.பத்மநாபன்,  நாயனம் –  ஆ.மாதவன், நகரம் – சுஜாதா, ஒரு வருடம் சென்றது – சா.கந்தசாமி, ஒரு ‘இந்நாட்டு மன்னர்’ – நாஞ்சில் நாடன், தனுமை – வண்ணதாசன், நாற்காலி – கி.ராஜநாராயணன், அந்நியர்கள் – ஆர்.சூடாமணி, பகல் உறவுகள் – ஜெயந்தன், காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்.

வாசகர்கள் கட்டாயம் ஒருதரம் அசோகமித்திரனின் பார்வை கொண்டிருக்கிற நேர்மையை அறியும் பொருட்டேனும் இத் தொகுப்பு கதைகளை கட்டாயம் வாசிக்க விருப்பம் கொள்ள வேண்டும்.   இங்கே பதியப்பட்டிருக்கிற அந்த தொகுப்பில் காணும் அசோகமித்திரனின் முன்னுரை எனும் நீள அகலம் கொண்ட தெளிவு, உங்களுக்கு இன்னுமான இன்னுமான பல தகவல்களை கூடுதலாக தருமென நினைக்கிறேன்.

– தாஜ் / 12/2/2013

***

ami-sol

‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ அசோகமித்திரனின் முன்னுரை

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுக்குப் பின் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு வளமூட்டிய படைப்பாளிகளும் கொண்ட தொகுப்பு ஒன்றை அளிக்கும் முயற்சி இது.

இந்த இருபதாண்டுகளின் தொடக்கத்தில்தான் அணு ஆயுத யுத்தம் வந்தேவிட்டது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த ஆபத்து தற்காலிகமாக விலகியது என்றாலும் உலக அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியோர் எளியோரை நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தும் நிலை நீடிக்கத்தான் செய்கிறது. புதுப்பார்வை பெற்ற இளைஞர் சமூதாயம் உலகின் மனச் சாட்சிக்கு நெருக்கடியை உண்டு பண்ணியது. ஆண்டாண்டு காலமாகப் பழக்க ரீதியில் கடைபிடிக்கப்பட்டு வந்த நெறி முறைகள், கொள்கைகள், கோட்பாடுகள் கடுமையான மறுபரிசீலனைக்கு ஆளாயின. பல ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. உலகம் ஒரு புதிய ஒழுங்குக்கு வழிதேடத் தொடங்கியது.

இலக்கியவாதிகள் தீர்க்கதரிசிகள் என்ற கூற்று வெகு சாதாரணமாக வெகுகாலமாக ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று. ஆனால் இலக்கியத்தின் தன்மை, அது காலத்துக்குச் சற்றுப் பின் தள்ளியிருப்பதுதான்.  ஒரு நிகழ்ச்சி அது நிகழ்ந்த உடனேயே இலக்கியமாகிவிடுவதில்லை. அதை ஊடுருவிப் பார்த்தறிய ஒரு குறைந்தபட்ச இடைவெளி தேவைப்படுகின்றது. தகவல் பரிமாற்றச் சாதனங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் எழுத்துத் துறையிலும் நிகழ்ச்சிகளின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே பரபரப்புச் சிறுகதைகளும் கவிதைகளும் (நாவல்களும்கூட) நிறையவே தோன்றிவிடுகின்றன. ஆனால் அந்த நிகழ்ச்சியின் பரபரப்பு அமுங்கும் போது அந்தப் படைப்புகளும் அமுங்கிப்போய் விடுகின்றன. பரபரப்பை மட்டும் முக்கியமாகக் கொள்ளாமல் பரிமாணத்தின் ஒவ்வொரு காலத்திய சூட்சுமங்களைக் கலையுணர்வோடு வடித்துத் தருபவை என்று எனக்கு உறுதியாகத் தோன்றும் கதைகளில் சிலவற்றை இத்தொகுப்பின் அமைப்புக் கட்டுத் திட்டங்களுக்கு இணங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதே தொகுப்பு இன்னொருவர் தேர்வில் வேறு கதைகளையும் கதாசிரியர்களையும் கொண்டிருக்கக்கூடும் என்றும் உணர்கிறேன்.

தமிழ்ச் சிறுகதைத் துறையின் பின்னணியை ஓரளவு கூர்ந்து பார்த்தால் 1960 அளவில்கூட இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய எழுத்தில் பிரதானமாயிருந்த ரொமாண்டிஸமும் இலட்சியவாதமும் தொடர்ந்து இருந்து வந்ததை உணரலாம். அந்நாளில் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் அனைவருமே இந்திய சுதந்திரத்திற்கு முன்பு மக்களிடையே நிலவிய ஒரு குறிப்பிட்ட இலட்சிய வேகத்தை மேலும் பிரதிபலிப்பதாகவே எழுதினார்கள். சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய இலட்சிய வேகத்தில் மேற்கத்திய வாழ்க்கை முறையம்சங்கள் இங்கு அப்படியே ஏற்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நம் நாட்டுப் பண்பாட்டுச் சிறப்பும் சம்பிரதாய வாழ்க்கை நெறியும் வலியுறுத்தப்பட்டன. பழமையை அனுசரித்துப் போகும் இப்போக்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே மறுத்தவர்கள் இருந்தார்கள் எனினும், பொதுவாக மக்கள் உணர்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மறுப்பு வளர்ந்திருக்கவில்லை. மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்குப் பின் தமிழ் தமிழ் உரைநடையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, தமிழ்ச் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோர் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் முன்னேற்றப் போக்கை வடித்துத் தந்தார்கள். இவர்கள் பணியைத் தொடர்ந்து சம்பிரதாயக் கண்ணோட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற இயக்கம், இந்த நூற்றாண்டின் பின் பாதியின் துவக்கத்தில் தமிழ் வாசகர்களிடையே கணிசமான அளவு அறிமுகம் பெற்றது ஜெயகாந்தனால்.

ஜெயகாந்தனைப் போலவே இளம் வயதில் பிரபலமடைந்த தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஜெயகாந்தன் சிறந்த கதைகள் மட்டுமல்லாமல் காலத்திற்குத் தேவையான கருத்துக்களை முன் வைத்தவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அவர் ஒதுக்கி விடுவதில்லை. தமிழ் எழுத்துலகில் யதார்த்த பூர்வமான சமுதாயமாற்றக் கருத்துக்கள் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெற வைத்ததில் ஜெயகாந்தனின் பங்கு கணிசமானது.

நவீன தமிழ் இலக்கியம் மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது வெகுஜனப் பத்திரிகைகளால் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் நல்ல இலக்கியம் வளர இதே பத்திரிகைகள் முட்டுக்கட்டையாகவும் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் இப்பத்திரிகைகள் இலட்சக்கணக்கான வாசகர்களைத் திருப்திப்படுத்துவதை முதற்கோளாகக் கொள்ள வேண்டியிருப்பதாலும் அதில் பெரும்பான்மையோர் தீவிர எழுத்துக்களை ஏற்கத் தயாரில்லை என்று நினைப்பதாலும் எளிமைப் படுத்தப்பட்ட எழுத்து, கருத்துக்களையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகின்றன; விற்பனைப் போட்டாபோட்டியில் திருப்தியுடன் மட்டும் திருப்தியடையாமல் போதையூட்டுவது போலவும் கிளர்ச்சியூட்டுவது போலவும் பத்திரிகையை மாற்றிவிடவும் வேண்டி வருகிறது. இந்தப் போக்கில் முதலில் ஊனமுறுவது இலக்கியம்தான்.

இதில் உண்மையில்லை என்று இன்று யாரும் கூறிவிடுவதில்லை. ஆனால் வெகுகாலம் வரை பிரபலமடையும் எழுத்தே சிறப்பான எழுத்து என்ற எண்ணம் பல தமிழ்ப் பிரமுகர்களிடம் நிலவியது. இவர்கள் சமூக நிறுவனத்தின் தலைவர்களாகவும் இருந்ததால் தீவிர இலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் கூர்மையடைந்திருந்தது. பத்திரிகை எழுத்து, தீவிர இலக்கியம் இவற்றின் வேறுபாடுகளை ஒரு சிறு வட்டம் வரையிலாவது நன்குணர்த்த அயராது பாடுப்பட்டவர்களில் க.நா.சுப்ரமணியன் மிகவும் முக்கியமானவர். துர்ப்பலமான எழுத்துத்துறையை ஆரம்ப முதலே வாழ்க்கைச் சாதனமாக ஏற்றுக்கொண்டதோடு, அத்துறையிலே மிகவும் துர்பலமான அம்சமாகிய தீவிர இலக்கியத்தையே அவர் சார்ந்திருந்தவர். நாவல், சிறுகதை, கவிதை முதலியன எழுதியதோடு விமர்சனக் கட்டுரைகளும் எழுதிவந்தார். முப்பது-நாற்பது-ஐம்பதுகளில் க.நா.சு.வுக்கு பாதகமான முறையில் அவருடைய விமர்சனக் கட்டுரைகளும் அவர் தீவிர இலக்கியம், பத்திரிகை இலக்கியம் என்று பாகுபாடு செய்து குறிப்பிட்டதும் அமைந்தாலும் அறுபதுகள் தொடக்கத்திலிருந்து தமிழ் வாசகர்-எழுத்தாளர் மத்தியில் இப்பாகுபாடு பற்றிய சிந்தனை பரவலாகத் தோன்ற ஆரம்பித்தது. இதன் ஒரு விளைவு பல சிறு பத்திரிகைகளின் தோற்றம்.

க.நா.சு.வே சிறு பத்திரிகள் நடத்தினார். ‘தாமரை’, ‘சரஸ்வதி’, ‘சாந்தி’, ‘கிராம ஊழியன்’ ஆகியவை அந்நாளைய வேறு சில குறிப்பிடத்தக்க சிறு பத்திரிகைகள். சி.சு.செல்லப்பா, ‘எழுத்து’ எனும் பத்திரிகையைப் புதுக்கவிதைக்கு ஒரு தளம் அமைத்துத் தருவதாக நடத்தினார். அறுபதுகளில் தோன்றிய சிறுபத்திரிகைகளில் முக்கியமானவை கணையாழி, தீபம், நடை, ஞானரதம், கண்ணதாசன், எழுபதுகளில் கசடதபற எனத் தொடங்கி பல பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டிவரும். அறுபதுக்கு முற்பட்ட சிறு பத்திரிகைகளுக்கும் இந்த இருபதாண்டுச் சிறு பத்திரிகைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு, முந்தைய பத்திரிகைகளும் அவற்றின் ஆசிரியர்களும் பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளும் அவை ஆதரிக்கும் எழுத்தும் போரிட்டு அகற்றக்கூடியதொன்று, அகற்றவேண்டியதொன்று எனச் செயல்பட்டார்கள். இன்றைய சிறு பத்திரிகைகள், பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளை இந்தக் காலக்கட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஏற்றிருப்பதையும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தம்மட்டில் தீவிர இலக்கியப் பணிகளில் ஈடுபடுவதை ஓர் எதிர்வினையாகக் கொள்ளாமல் சுயமாகச் செய்யவேண்டிய பணியாக நினைப்பதையும் காண முடிகிறது.

அறுபதுகளில் தொடங்கிய சிறு பத்திரிகை இயக்கம் ஆரம்பத்தில் ஏளனத்துக்குரியதாகத்தான் பெருவாரிப் பத்திரிகைகள் தயாரித்திருந்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது இச்சிறு பத்திரிகைகள் பற்றியும் அதில் ஈடுப்பட்டிருப்போர் பற்றியும் பெருவாரிப் பத்திரிகைகள் மிகவும் துச்சமாகக் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆனால், சிறு பத்திரிகைகள் இயக்கம் பெருவாரிப் பத்திரிகைகளின் வாகர்களைக் காட்டிலும் முன்னதாக அப்பத்திரிகைகளின் எழுத்தாளர்களிடம் பாதிப்பு ஏற்படுத்தியது. சிறு பத்திரிகைக் கதைகளின் கரு, நடை, அபத்தம், சிற்சில மாற்றங்கள் பெருவாரிப் பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்பட்டன. உருவம் பொருத்தவரையில், இன்று தமிழில் வெளியாகும் கதைகளில் பெரும்பான்மை தீவிர எழுத்துச் சாயல் கொண்டுதான் படைக்கப்படுகின்றன. பிரசுரிக்கப்படுகின்றன. ஆனால் உள்ளடக்கம், நோக்கம், அழுத்தம், போன்ற அம்சங்களில் விளைவு சாதகமாக உள்ளது என்று கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் அடியெடுத்து வைத்திருக்கையில் இன்றைய தமிழ் பெருவாரிப் பத்திரிகைகளின் சிறுகதைகள் அனைத்திலும் அப்பத்திரிகைகளில் இடமே பெறாத தீவிர எழுத்தாளர்களின் சாயலைத் தவறாமல் காண முடிகிறது. சிறுகதையும் ஒரு தொழில் விஞ்ஞான நுட்பத் துறையாகக் கருதினால் இதர டெக்னாலஜித் துறைகளைப் போலச் சிறுகதைத் துறையும் ஒரு காலக்கட்டத்தின் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவிவிடும் தொழில்நுட்ப அம்சமாகிவிட்டது. ஓர் ஆரம்ப எழுத்தாளனின் முதல் படைப்பில்கூட குறைந்தபட்சத் தேர்ச்சியும் திறமையும் காண முடிகிறது. நல்ல கதை, நன்கு எழுதப்பட்ட கதை, என இனங்கண்டுபிடிப்பது கடினமாவதுடன் அத்தியாவசியமும் ஆகிறது.

புதுக் கதாசிரியர்களை அவர்கள் பொதுத்தன்மை குறித்து விவாதித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை; பல்கலைக்கழங்களில் புது இலக்கியம் பாடமாகக் கற்பிக்கத் தொடங்கியும் புதுநோக்குடன் வெவ்வேறு காலகட்ட எழுத்துக்கள் பற்றிச் சுலபமாகவும் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் அபிப்ராயங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையில் க.நா.சு. தற்காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடம் ஒரு பொதுச் சரடு காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்திய சுதந்திற்கு முந்திய எழுத்தாளர்களிடம் இருந்த இலட்சியவாதம் இப்போது மறைந்துபோனதோடு மட்டுமல்லாமல் ஒருவித நம்பிக்கையின்மையும் இடம் பெற்றிருப்பதை உணர முடிகிறது என்றார் அவர். இன்று இன்னும் சில கருத்துக்களும் கூற இயலும். எல்லாப் பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக அன்னியர் ஆதிக்கச் சுமை தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களின் ஆத்மாவை அன்று அழுத்தியது. பிரச்சனைகளுக்கு அவற்றினூடே தீர்வு காண இயலுவதாக இன்றைய தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன. ஒரு பொது எதிரியை மனதில் வைத்து இயங்கியதால் தம் சமுதாயத்தினுள் உள்ள வேறுபாடுகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் அன்று அதிகம் பெரிதுபடுத்தப் படவில்லை. ஆனால் இன்றைய சிறுகதைகள் இவ்விஷயங்கள் குறித்துப் பகிரங்கமாக விவாதிக்கக் தயங்குவதில்லை. பிராந்திய வாழ்க்கை நுணுக்கமாகவும் விவரமாகவும் பிரதிபலிக்கப்படுகிறது. மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஓர் எளிதான, கைக்கெட்டும் தொலைவிலுள்ள சர்வ வியாதி நிவாரணியாக விநியோகிக்கப்படுவதில்லை. பெண்கள் சம்பிரதாயக் கூட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பலவித பரிமாணங்கள் கொண்ட நபர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இப்போக்குகளைப் பெருவாரி விற்பனையுடைய பத்திரிகைகளில்கூட இன்று காணலாம்.

சிறு பத்திரிகைகளுடன் சில நூல் பிரசுரங்களும் கடந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டுபண்ணின. இவற்றில் முதலானதும் முக்கியமானதும் ‘குருசேஷத்திரம்’ ஆகும். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு நாடகம் ஆக மொத்தம் சுமார் நானூறு பக்கங்கள் கொண்ட இந்நூலை 1967-ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் வசிக்கும் நகுலன் என்ற எழுத்தாளர் தொகுத்து வெளியிட்டார். அதே ஆண்டில்தான் இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு சென்னையில் நடந்தது. தமிழ் மொழிக்கு வளமூட்டும் இவ்விரு நிகழ்ச்சிகளில் எது முதன்மையிடம் பெறும் என்று கூறுவது கடினம் என நினைக்கும் அளவுக்கு ‘குருசேஷத்திரம்’ பிரசுரமானது தீவிர இலக்கிய அன்பர்களிடம் சலசலப்பு ஏற்படுத்தியது. இந்நூலில் பங்கு பெற்றவர்கள் அநேகமாக அனைவரும் பெருவாரிப் பத்திரிகைகளில் இடம்பெறாதவர்கள். ‘குருசேஷத்திரம்’ வெளியானபோது இவர்களில் ஓரிருவரே நூல் வடிவத்தில் பிரசுரமானவர்களாக இருந்தார்கள். இருப்பினும் அந்தக்காலக் கட்டத்தின் புதுத்தமிழ் எழுத்தின் உன்னத எடுத்துக்காட்டாக ‘குருசேஷத்திரம்’ அமைந்திருந்தது. பிற்காலத்தில் பல பரிசோதனைப் பிரசுர முயற்சிகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியது. முழுக்க ஒரு தனிநபரின் முயற்சியும் தேர்வுமான ‘குருசேஷத்திரம்’ நவீன தமிழ் எழுத்தின் ஒரு மைல் கல்லாக நிலைபெற்றது.

‘குருசேஷத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருசேஷத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்த்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்கு முன்னோடியாகவும் அமைந்தது.

அரசியல் கலப்பற்ற எழுத்து சாத்தியமா? சம்பிரதாய இலக்கியப் பார்வைகளில் அரசியல் தனியாகக் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சோவியத் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பொதுவுடமைக் கருத்துகளும் கோட்பாடுகளும் கவனம் பெறத் தொடங்கின.  தமிழ் எழுத்தாளர்களிடமும் ‘நீங்கள் எந்தப்பக்கம்?’ என்றதொரு வினா ஐம்பதாண்டுகளாகவே நிலவி வருவதாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் சில சிறுகதையாசிரியர்கள் வெளிப்படையாகவே தமது கட்சி அரசியல் உறவுகளை அறிவித்துக் கொண்டனர். இலக்கிய விமரிசனத் துறையிலும் எழுத்தாளர்கள் அவர்களின் கட்சிக் கண்ணோட்டத்திலும், அவர்கள் எழுத்து தெரிவிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியின் அடிப்படையிலும் போற்றப்பட்டனர், அல்லது கண்டனம் தெரிவிக்கப்பட்டனர். பெருவாரிப் பத்திரிகைகள் இச்சர்ச்சையில் ஈடுபடாத நிலையிலும் சிறு பத்திரிகைகள் அணிவகுத்துக் கொண்டு தீவிர விவாதங்கள் நடத்திக் கொண்டன. இவ்விவாதங்கள் நேரடியாகச் சிறந்த எழுத்தாளர்களையோ படைப்பாளிகளையோ சாத்தியமாக்காத போதிலும் தமிழ்ச் சிறுகதைகளின் தளத்தையும் எழுத்தாளர் கவனத்திற்குப் பல புதிய நுட்பங்களையும் சேர்த்துக் கொடுத்தன. அதே நேரத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரிச்சயம், தொழில் நுட்ப விவரங்களைக் கதைகளில் பொருத்தி வைப்பதைச் சாத்தியமாக்கிற்று. பாட்டாளி மக்கள், கிராமவாசிகளின் வாழ்க்கை நுட்பங்கள் இடம் பெறத் தொடங்கியது. போலவே இயந்திர நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள்; உயர்மட்டவாசிகள், கதாப்பாத்திரங்களாகி அவர்கள் மூலம் அதுவரை வாசகர்களுக்கு அறிமுகமாகாத பரிமாணங்கள் எடுத்தளிக்கப்பட்டன.

இந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் பிற இந்திய மொழிகளில் நிறையவே மொழிபெயர்ப்புகள் மூலம் படிக்கக் கிடைத்திருக்கின்றன. ‘இண்டியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ்’ வெளியீடான ‘இண்டியன் ஹொரைஜன்ஸ்’ காலாண்டுப் பத்திரிகையில் பல தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் மற்றும் அராபிய மொழிகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இங்கிலாந்து பென்குவின் நிறுவனத்தாரின் ‘நியூரைட்டிங் இன் இந்தியா’ தொகுப்பு நூலில் மூன்று தமிழ்ச் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. பல தேசிய தினப் பத்திரிகைகளும் வார மாத இதழ்களும் ஆங்கில மொழி பெயர்ப்பில் பல தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பல அயல் நாடுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் தகவலும் இந்த இருபது ஆண்டுகளில்தான் அதிகம் தெரிய வந்திருக்கிறது. இது பரஸ்பரம் மக்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மட்டுமின்றி, தமிழ்ச் சிறுகதை உலக இலக்கிய அரங்குகளில் மதிக்கத் தக்கதொரு இடம் பெற்றிருப்பதையும் குறிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே எக்காலத்துக்குமான தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத்தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது உறுதி.

pts-as-1

அசோகமித்திரன் செப்டம்பர் 19, 1980

*

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்

முதல் பதிப்பு 1984 ,  ஆறாம் பதிப்பு 2010

***

அசோகமித்திரன் தேர்வு செய்த சிறுகதைகள்

மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி

மிலேச்சன் – அம்பை

நிழல்கள் – ஆதவன்

எஸ்தர் – வண்ணநிலவன்

உத்தியோக ரேகை – சார்வாகன்

தொலைவு – இந்திரா பார்த்தசாரதி

சண்டையும் சமாதானமும் – நீல.பத்மநாபன்

நாயனம் –  ஆ.மாதவன்

நகரம் – சுஜாதா

ஒரு வருடம் சென்றது – சா.கந்தசாமி

ஒரு ‘இந்நாட்டு மன்னர்’ – நாஞ்சில் நாடன்

தனுமை – வண்ணதாசன்

நாற்காலி – கி.ராஜநாராயணன்

அந்நியர்கள் – ஆர்.சூடாமணி

பகல் உறவுகள் – ஜெயந்தன்

காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்

***

நன்றி: நேஷனல் புக் டிரஸ்ட், அசோகமித்திரன், தட்டச்சு செய்த நண்பர் தாஜ், அழியாச்சுடர்கள் , சிறுகதைகள்.காம்

9 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  13/02/2013 இல் 14:58

  அன்பு
  ஆபிதீன்…
  ரொம்ப சிரமம் கொண்டு
  இந்தப் பதிவை பதித்திருக்கின்றீர்கள்.
  நம் பக்கத்தில்
  இதுவோர் ஆவணம் என்று
  சொல்லத்தக்க விதமாய் செய்து இருக்கின்றீர்கள்.
  இம்மையிலும் மறுமையிலும்
  இதற்காகவேணும்
  இறைவன் உங்களை பொன்னெனக் காப்பான்.

  நம் சொந்தங்கள்தான்
  இதனை வாசித்து
  உங்களையும் விஞ்சும் விதமாய்
  இன்னுமான
  புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்!
  துவாவும் செய்கிறேன்.
  -தாஜ்

  • abedheen said,

   13/02/2013 இல் 15:21

   ரெண்டு கெழங்களும் சேர்ந்துகொண்டு நம் சமூகத்து பிள்ளைகளுக்காக என்னென்னவோ செய்கிறோம். படிக்க மாட்டேங்குதுவளே பக்கிளுவ…!
   //துவாவும் செய்கிறேன்.// தமிழில் கேட்கவும்!

 2. 13/02/2013 இல் 15:59

  தாஜ் அண்ணன் துஆவுக்கு (தமிழ் துஆ) ஆமின் சொல்லிக்கறேன். (தமிழ் ஆமின்).

 3. shah said,

  13/02/2013 இல் 16:13

  இது நான் சேவை வழங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. கேட்டிருந்தால் நானே அனுப்பியிருப்பேன்.

  • abedheen said,

   13/02/2013 இல் 16:29

   ஷாஜஹான் சார், வருகைக்கு நன்றி. புத்தகம்தானே அனுப்புவீர்கள். எங்களுக்கு யூனிகோட் டெக்ஸ்ட் வேணுமே..!

 4. 13/02/2013 இல் 16:46

  ஆபிதின் அண்ணே, புத்தகத்தை எனக்கு அனுப்பட்டும். நான் உங்களுக்கு யுனிகோட் டெக்ஸ்ட்டாக்கி அனுப்பறேன்.

 5. 13/02/2013 இல் 22:00

  நன்றி தாஜ், ஆபிதீன் நானா! தாஜ் சொன்னது போல் இது ஒரு ஆவணம் தான்.

  • தாஜ் said,

   14/02/2013 இல் 10:46

   அன்பு அமீன்…
   மிகுந்த நன்றி.
   ஃபேஸ்புக் அகெவுண்டெல்லாம் திறக்கலையா?
   அந்தப் பக்கமும் வந்துப் பாருங்க.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s