‘காலம் என்பது கையில் அள்ளிய நீர் மாதிரி..’ – பாரதி பாஸ்கர் , ராஜா உரையாடல்

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கரை எனக்கு பிடிக்கும். களையான முகமும் சிரிப்பும் கலகலப்பான பேச்சும் கொண்டவர். ‘பொம்பள சிவாஜி’ மாதிரி குதித்து மேடையை துவம்சம் செய்கிறவர் அல்ல. நம்ம ராஜா? கேட்கவே வேண்டாம். இயல்பாக அவர் அள்ளித் தெளிக்கும் ஜோக்குகள் நம் யாவருக்கும் பிடித்தமானவை. பொழுதுபோக்கும் தேவைதானே நமக்கு…  சாலமன் பாப்பையா அவர்களின் ஆசி பெற்ற இந்த இருவரும் கலந்துகொள்ளும் ’சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியை சென்ற வருட இறுதியில் பார்க்க நேர்ந்தது என் நல்ல நேரம் என்று நினைக்கிறேன். காலங்காத்தாலயே ‘காலம்’ பற்றி இவர்கள் கதைத்ததைக் கேட்டதும் கவனிக்க ஆரம்பித்தேன். ஆடியோவை மட்டும் ரிகார்ட் செய்தேன். Time Travel  பற்றியெல்லாம்  அவர்கள் பேசியதைக் கேட்டபோது , ஆச்சரியமாக இருந்தது. ’Back to the Future’ஐ  தியேட்டரில் பார்த்த அந்த காலத்திற்குப் போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு,   imdb லிஸ்ட் பார்த்து டோரண்ட் இறக்கும் இந்த காலத்திற்கு மீண்டும் வந்தேன்.  ’Theory of Relativity’ எல்லாம் பேசினார் பாரதி பாஸ்கர்.  திசை நோக்கி ஒரு கும்பிடு!  பிரமிள் எழுதிய கவிதை ( E=mc2) இது சம்பந்தமானது என்று நினைக்கிறேன். ‘இன்று கண்டது   நேற்றையது,   இன்றைக்கு நாளைக்கு.’ நம்ம தாஜ் ஏதாவது ‘கவிட்டுரை’ எழுதியிருக்கலாம்.  H. G. Wells-ன் ’The Time Machine’-ம்  இதுவரை படித்ததில்லை. சரி, சில வாரங்களாக இணையம் தகித்துக்கொண்டிருப்பதால் இதம் கொடுக்க  பாரதி-ராஜாவின் உரையாடலை இங்கே பதிவிடுகிறேன்.  புரியாத சில வார்த்தைகளை புள்ளிகளிட்டு சமாளித்திருக்கிறேன். வேறு தவறுகள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து திருத்துங்கள். இந்த நிகழ்ச்சியின் வீடியோ சுட்டி கிடைத்தால் தெரியப்படுத்துங்கள், சேர்க்கிறேன். தகவற்பிழை ஏதுமிருப்பின் அவர்களுக்குச் சொல்லுங்கள். காலம் பற்றி திருக்குர்ஆனில்.. , எங்கே ஓடுகிறீர்கள்?, சரி, இந்தப் பேச்சுக்கு தொடர்புடைய , எனக்கு பிடித்த  ‘TEN-MINUTES-OLDER-CELLO’-ல் வரும் ஒரு பகுதியை (’The Mythology of Vishnu’ by Bernardo Bertolucci)  இந்தப் பதிவிற்காக கடைசியில் இணைக்கிறேன். ’நேரம்’ இருக்கோ இல்லையோ, அவசியம் நீங்கள் பார்க்க வேண்டிய குறும்படம் அது.

காலத்தை ஒழுங்காக நான் செலவழித்தது பற்றி கமெண்ட்ஸ் போட்டுவிட்டு, வழக்கம்போலவே சும்மா இருங்கள். நன்றி!  – ஆபிதீன்

***

சூரிய வணக்கம்…

bharathi-raja-sooriyavanakkam1

பாரதி பாஸ்கர் : இரண்டு நாளைக்கு முன்னால்  உங்கள் பழைய ஆல்பத்திலேர்ந்து ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.

ராஜா : அடையாளமே தெரிஞ்சிருக்காதேங்க..

ஆமா, எனக்கு நிச்சயமா தெரியலே. நீங்க இதுதான் நான்னு சொன்னபிறகுதான் தெரிஞ்சது. அது கிராமத்து பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட டிபிக்கல் புகைப்படம். எல்லாரும் கேமராவை முறைச்சி பாத்துக்கிட்டு இருப்பாங்க..

ஆமாங்க.. கேமரான்னாலே என்னன்னு தெரியாது. இப்ப இருக்குற மாதிரி அவ்வளவு பேர் கையிலேயும் கேமராக்கள் இல்லாத காலம். ஒரு பெரிய ஸ்டாண்ட் போட்டு அந்த ஸ்டாண்டுக்குள்ள ஒரு துணியைப் போட்டு அவரு அதுக்குள்ளாற போயி படுத்துப்பாரு.. அவர் சத்தம் மட்டும்தான் கேட்கும்.

அந்த ·போட்டோ எடுக்கப்பட்ட அந்த கணம், அந்த வினாடி, அந்த நேரம் உங்களுக்கு ரொம்ப preciseஆ ஞாபகம் இருக்குமில்லே? யார் பக்கத்துலே இருந்தாங்க, சூழ்நிலை..

அப்ப ரொம்ப சின்னவயசுங்கறதால அதப் பாக்கும்போது சில நினைவுகள் வருதே தவிர i am not very..

எனக்கு அத மாதிரி என் ரெண்டாங் கிளாஸ் ·போட்டோவுல எடுத்த அந்த வினாடி பாருங்க, அவ்வளவு நல்லா ஞாபகம் இருக்கு.. இப்ப நடந்தமாதிரி இருக்கு. என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் தலையில் வைத்துக்கொண்டிருந்த அந்தப் பூவினுடைய மணம் கூட எனக்கு ஞாபகம் இருக்கு இன்னும்…

எப்படி உங்களாலே இவ்வளவு தூரம் பின்னோக்கி போக முடியுது?

உங்களாலேயும் அப்படி பின்னோக்கி போக முடியும். உங்க அம்மாவுடன் இருந்த நேரங்கள், அப்பாவுடன் இருந்த நேரங்கள், அத மாதிரி சில நிமிஷங்கள ரொம்ப துல்லியமா நம்மால விவரிக்க முடியுது இல்லையா? ஆனா, இப்ப திடீர்னு பார்த்தா பக்கத்துல நடந்து முடிந்த ஒரு விசயம் போறபோக்கிலே இருபது முப்பது வருஷம் கடந்து பொய்டுது.. இப்பதான் நடந்தமாதிரி இருக்கு.. நம் எல்லோருக்கும் தோன்றுகிற ஒரு விசயம்.. நம்ம குழந்தை பிறந்த உடனே இப்பதான் கையில எடுத்தமாதிரி இருக்கு. இப்ப பாரு அதுக்குள்ள

நமக்கு மேலே பெரிய ஆளாயிடுது!

பாத்துக்கிட்டே இருக்கும்போது பிள்ளைங்க மளமளவென்று வளர்ந்துடுறாங்க.. இந்த காலம் வந்து.. கையில் எடுத்த நீர் எப்படி கைவழியாக வழிந்துபோகிற மாதிரி காலம் என்பது கையில் அள்ளிய நீர் மாதிரி,  பார்த்துக்கிட்டே இருக்கும்போது போய்க்கிட்டே இருக்கு.

…தறியடிக்கிறவங்க ஊடாடுகிற ஒரு இது இருக்கில்லையா.. குறுக்கும் நெடுக்குமா ஓடும் அது. அந்த ஊடுபாவு மாதிரி அது ஓடுகிற வேகத்தில காலம் கடந்துபோகிறது. நாம கூட பாருங்க, இந்த ரெண்டாயிரத்து பனிரெண்டு தொடங்கியது என்று நினைச்சோம், டிசம்பர் வந்துடுச்சி! அதுக்குள்ள முடியப்போகிற ஒரு மாதம் வந்தாச்சு.. எத்தனை நிகழ்வுகள்.. எவ்வளவு வேகம்! காலண்டர் என்பது வாங்கி மாட்டிய அந்த நேரத்தைவிட இப்ப கிழிச்சது மறைந்து போச்சு.. இப்ப காலண்டர் இத்தனூண்டா போய்டுச்சி.. We are just counting the days.. it is flying… நாம எண்ணிக்கிட்டிருக்கோம் அது பறந்துக்கிட்டிருக்கு.. காலம் என்பது பற்றி சரியான கணக்கு வைத்தவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருக்க முடியும், இல்லையா? காலத்தை கணிக்க முடிந்தவர்களும் மனத்திலே அதை கணக்கு வைத்தவர்களும் ரொம்ப குறைவாகத்தானே இருப்பாங்க?

barathibaskar1காலம் என்பது ஒரு நதிமாதிரி என்பதை உருவகப்படுத்தி நிறைய சித்தாந்தங்கள் உண்டு. அதன் கரையில உட்காந்துகொண்டு நம்மாளால பார்த்துக்கிட்டேதான் இருக்க முடியும். இறந்தகாலம் என்பது நமக்கு பின்னால் இருக்கிற நதி, எதிர்காலம் என்பது இனிமேல் போகப்போகிற நதி.. அந்த நதியோடு நாம் போய்க்கொண்டே இருக்கிறோம். ஒருவேளை அது கடலில் கலக்கிற நிலை வந்தாலும் கலந்துவிட்ட நீர் திரும்பவும் வானத்திற்கு போய் ஆவியாகி மழையாகப் பொழிந்து திரும்பவும் அது நீராக ஓடிக்கிட்டே இருக்கும். இதுதான் ‘சைக்கிள் ஆ·ப் லைஃப் ‘ என்று சொல்கிற நிறைய தத்துவங்கள் உண்டு. மனிதன் மிகமிக மிக பயப்படவேண்டிய விசயம் என்பது காலம்தான் என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு மகத்தான பேரரசர்கள், காலத்தினால அவங்க பெயர்கூட ஞாபகம் இல்லாம அப்படியே கரைஞ்சி போய்ட்டாங்க.. மண்ணோடு மண்ணா..

raja2செங்கிஸ்கான் என்று ஒரு பெரிய பேரரசன் இருந்திருக்கிறான். காபூலிகான் என்று அரசன் இருந்திருக்கிறான். இவன் செங்கிஸ்கானின் பேரன் என்று சொல்றாங்க. காபூலிகான் சைனாவை ஜெயிச்சிருக்கான். சைனாவிலிருந்து ஜப்பானுக்கு படையெடுத்து போயிருக்கிறான். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வீரர்களோடு போனானாம். அவ்வளவு முரடர்கள்..  எப்படியும் ஜப்பானை வென்றே தீர்வோம் என்று நாள் குறிச்சாங்களாம். நாள் குறித்து அவர்கள் போகும்போது (அவர்களுட) பதினாலாயிரம் கப்பல்கள் போச்சாம். வழிநெடுக ஜெயிச்சிருக்கான். எவராலும் (அவன் எதிரே) நிற்க முடியலையாம். சீனர்களை வேறு படையில சேர்த்து கொண்டு போயிருக்கிறான். ஆனா, அவன் கெட்ட நேரம் அங்க போயி கரையை நெருங்குவதற்கு கொஞ்சநாள் முன்னாடி மிகப்பெரிய டைஃபூன் (சூறாவளி) வந்துடுச்சாம். பதினாலாயிரம் கப்பல்களையும் துவம்சம் பண்ணிடிச்சாம். மீதிப்பேர் ஓரளவு நீந்தி போயிருக்காங்க.. அவனுங்களை ஈஸியா ‘காலி’ பண்ணிடுவானே ஜப்பான்காரன்.. கடைசில அவன் சொன்னானாம், ’இந்தக் காற்று கடவுள் அனுப்பிய காற்று’ அப்படீன்னானாம்.. காலம் என்பது நம் கணக்குகளை தூக்கித் தூரப் போட்டுவிடுகிறது..

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தோற்றுப்போனபோது அவரை ஜெயிச்சது ரஷ்யர்களா என்ன? இல்லை. ரஷ்யாவின் குளிர்தான் அவரை ஜெயிச்சது. அப்ப அவருடைய கணக்கு மட்டும் கொஞ்சம் சரியா இருந்தது.. – விண்டர்ல போகக்கூடாது என்று முடிவு செய்திருந்தார்னா.. இரண்டாம் உலகப்போரினுடைய முடிவே வேற மாதிரி இருந்திருக்கலாம். அப்ப…  மனிதன் செய்கிற எல்லா சாதனைகளையும் சில சமயம் காலம் ஒன்றுமே இல்லாததாக செய்து விடுகிறது..

இப்ப ‘டைம்’ அப்படீங்குறது என்ன? Scientificஆ பார்த்தா என்ன, Philosophicalஆ பார்த்தா என்ன? Science… சொல்கிற விதத்தில் காலம் என்பது ஸ்திரமான ஒன்று, கணக்குகள் கொண்டது.. அதை measure  செய்றதுக்கு second, minute, hour இதல்லாம் வச்சிருக்கோம். இதன்படி கணக்கிடப்பட்டு துல்லியமாக நிற்பது காலம். காலம் என்பது ஸ்திரமானது. ஏன்னா, உங்களுக்கு ஒன்று நடக்கிறது என்றால் இன்னொருவருக்கு இன்னொன்று நடக்கலாம். பத்து வருஷத்துக்கு முன்னாடி வேற யாருக்கோ வேற ஏதாவது நடந்திருக்கலாம். You can’t travel in time. காலத்தில் நீங்கள் நடக்க முடியாது. அந்தந்த காலத்தில வாழ்ந்து முடிச்சிட்டு போயிடனும் நாம். ஆனால்,  ஐன்ஸ்டீனுடைய relativity theoryதான் காலத்திற்கான கணக்குகளை மாற்றிப்போட்டது…

அவர் ஒரு பகல் கனவு கண்டாராம். அதுதான் அவருடைய கண்டுபிடிப்புக்கு காரணம்டு சொல்றாங்களே..

பகல் கனவா என்று தெரியவில்லை ஒரு intutionஆகத்தான் relativity theory வந்ததுன்னு சொல்றாங்க.. பல வருஷங்கள் செய்த ஆராய்ச்சிகளினால் அவர் கண்டுபிடித்தார் என்பதை விட ஒரு பிரவாகம் போல அந்த தியரினுடைய தத்துவம்  வந்தது அப்படீன்னுதான் சொல்றாங்க. அவர் என்ன சொல்றாகிறார்னா.. ஒளியின் வேகத்தோடு ஒருவேளை நீங்கள் பிரயாணம் செய்தால் – ஒளியின் வேகத்தை இன்னும் மனிதன் அடையவே இல்லை , அடைய முடியுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி..

ஒலியின் வேகத்தில் போயிட்டான், ஆனா ஒளியின் வேகத்தில் அவனால போக முடியலே..

ஒளியின் வேகத்தில் ஒருவர் பிரயாணம் செய்தால் அவரால் காலத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் அப்படியென்று ஐன்ஸ்டீன் சொன்னார். அப்ப Three Dimension இருக்கு இல்லையா..  Length, Breadth, Height..  இது மூணும் மூணு டைமன்ஸன்.  Time is the Fourth Dimension அப்படீன்னு ஐன்ஸ்டீன் சொன்னார். இத visuvaliseஏ பண்ண முடியாது. காலத்தில் எப்படி முன்னும் பின்னும் நகர முடியும்? எனக்கு இப்ப திடீர்னு தோணுது.. 20 வயசுல நான் ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டேன்..  திரும்ப அங்கே போய் சரி பண்ணிட்டு இங்கே வந்து சேர்ந்துட முடியுமா?

காலச்சக்கரத்தை பின்னோக்கி திருப்ப முடியாது..

ஆனா ஐன்ஸ்டீன் சொல்றாரு!  அத எப்படி அவர் சொல்றான்னா.. Muon என்று ஒரு சப் அடோமிக் பார்ட்டிக்கிள்… ஒரு அணுத்துகள்.. அந்த அணுத்துகளின் வாழ்நாள் நேரம் மிகக் குறுகியது. ரொம்ப சில வினாடிகளுக்குள் அது போயிடும் .  ஆனால் அந்த அணுத்துகளை கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தை நோக்கி செலுத்துகிறபோது அதனுடைய வேகத்தை ஜாஸ்தியாக்கி ஜாஸ்தியாக்கி பார்த்தால் – அதனுடைய லைஃப் ஸ்பான் ரொம்ப அதிகமாயிடுது..

ஓஹோ?!

so இப்படித்தான் ஐன்ஸ்டீன் ஏதோ prove பண்ணுனாரு.. நீங்கள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க காலத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் என்று ஐன்ஸ்டீன் சொன்னாரு.. இத விசுவலைஸ் பண்றதுக்கே  ரொம்ப அபாரமா இருக்கு..

கொஞ்சம் சயின்ஸ் பத்தி தெரிஞ்சிருக்கணும். அப்புறம்.. இதபத்தி யோசனை வேணும் நமக்கு . ஏன்னா நாம யாருமே..’டைம் என்னாச்சி..’ ‘ஓடுதுய்யா.. சூப்பரா பறக்குதுய்யா’ இப்படித்தான் நாம் சொல்லிக்கிட்டிருக்கோமே தவிர நாம் வாழுகிற காலத்தை நமதாக்கிக்கொண்டிருக்கிறோமா அப்படீங்குறது ஒரு கேள்வி. ஏன்னா, ராமாயணத்துல ராமனை ‘காலமும் கணக்கும் நீத்த காரணன்’ என்று கடவுளை காட்டுறாங்க. அவனுக்கென்று காலம் கிடையாது, எந்த கணக்கும் கிடையாது. அதற்கெல்லாம் அடங்காத ஒரு பெரிய மூலப்பரம்பொருள் கடவுள். ஏன்னா, எல்லாத்தையும் கடந்தவன்தானே கடவுள்? எல்லா சமயங்களும் அப்படித்தான் சொல்லுது. இந்தமாதிரியான காலத்தைப் பற்றிய சிந்தனை மனிதனுக்கு வந்தால் இருக்குற காலத்தை நல்லபடியா பயன்படுத்துவான்.

இப்ப நாம எல்லாருக்கும் நம்ம பேங்க அக்கவுண்ட்டுலெ ஒவ்வொரு நாளும் காலையிலே 86400 ரூபாய் கிரெடிட் ஆகுதுன்னு வச்சுக்கோங்க… ஆனா ஒரு கண்டிஷன், நீங்க அன்றைக்குள் அத செலவழிச்சிடனும். அப்படி செலவழியிலேன்னா அந்தப்பணம் உங்கள் கணக்கிலேர்ந்து நீக்கப்பட்டுவிடும் அப்படீன்னா நாம என்ன செய்வோம்?

ஓடி ஓடி…

பதறிக்கிட்டு செலவழிப்போம்ல அத?

கடைசி நிமிசம் வரைக்கிம், யோவ்.. எதாவது இருக்காய்யா…!

அருணாச்சலம் படத்துல வர்ற மாதிரி ஓடிஓடி அத செலவழிச்சி முடிச்சிடுவோம்ல? கிட்டத்தட்ட 86400 ரூவா கொடுத்தால் என்ன மதிப்போ அதைவிட பல மடங்கு மதிப்புள்ள நேரம் 86400 வினாடிகள் ஒவ்வொருநாளும் நமக்கு கிடைக்கிறது.. கடவுள் சொல்லிக்கொடுக்குறாரு.. இது உன் கணக்கிலே இன்னைக்கி மாத்திரம்தான்தான் இருக்கும். இன்னைக்கு நீ சரியா செலவழிக்கலேன்னா உன் கணக்கிலேர்ந்து நீக்கப்பட்டுவிடும்னு.. ஆனா அத சரியா செலவழிக்காமலேயெ எவ்வளவு வினாடிகளை நாம வேஸ்ட் பண்ணிக்கிட்டே இருக்கோம்!

அந்த காலத்துல ஒரு பெரிய பக்தர் சொன்னார்..  ‘வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும், பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு, பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே…

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக…

அந்த காலத்துல நூறு வயசுன்னு சொன்னாங்க..  இப்பவும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. இப்ப பிறக்கப்போகிற அல்லது இனி பிறக்கப்போகிற பிள்ளைகளில் பத்தில் மூன்று நூறுவயசு வரை இருக்கும் என்கிறார்கள். ஏன்னா, அந்த அளவுக்கு மெடிகல் வசதிகள் வந்துடுமாம் கொஞ்சநாள்லெ.. எல்லா வியாதிகளுக்கும் ஓரளவு மருந்து கண்டுபிடிச்சிடுவாங்க.. அப்ப நூறுவயசு வரைக்கும் இருப்பாங்களாம்.. அப்படி நூறு வயசு ஒருத்தன் இருந்தால்கூட அதில பாதி தூங்கிடுறான்.. அப்புறம் பேதை பாலகனாக இருப்பான். இது தவிர அவன் என்னென்ன வகையில அவன் செலவு பண்றான், எவ்வளவு நேரம் ‘டாஸ்மாக்’லெ உட்கார்ந்திருக்கான், எவ்வளவு நேரம் ‘பப்’லெ உக்காந்திருக்கான்.. எவ்வளவு நேரம் சத்சங்கங்கள்லெ உட்கார்ந்து நல்ல விசயம் கேக்குறான், எவ்வளவு நேரத்தை மத்தவங்களுக்கு நல்லது செய்வதற்கு செலவு பண்றான்..

அல்லது எவ்வளவு நேரம் அவன் சந்தோஷமா இருக்கான்…

எவ்வளவு நேரம் மத்தவங்களை கெடுக்குறதுக்காக பிளான் பண்ணுறான்.. இதல்லாம் யோசிக்கனும்லெ.. காலம் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் அது. அதை பயன்படுத்த மீதி நாட்களையாவது எதையாவது செய்வோம்..அப்படீங்குற சிந்தனை எல்லார் மனசிலேயும் வந்தா ஒவ்வொருநாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.. ஓடுது ஒரு வருஷம், ஐய்யயோ ஓடிப்போச்சே, அடுத்து 2013 வரப்போவுதே.. அப்படீன்ற கேள்வி வரும்போது இதுவரைக்கிம் என்ன செய்தோம், எவ்வளவு சேர்த்திருக்கோம்..

பாரதி பாஸ்கர் : கொடுக்கப்பட்ட நேரத்தை ஒழுங்கா நாம செலவழிக்கணும்..

ராஜா : மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்..  டென்த், ப்ளஸ்டூ படிக்கிற மாணவர்கள் ‘யேய்.. டிசம்பர் வந்தாச்சு.. அப்புறம் பரிட்சை வந்துடும்..’னு வீட்ல கதறும்போது ‘கிழிச்சாரு..  பாத்துக்குவோம்.. ‘ அப்படீன்னு பேசுறான்லே.. அவனுக்குலாம் இது எச்சரிக்கை மணி. ஓடிப்போகும்டா இந்த நிமிஷம்.. கொஞ்சம் கவனமா இரு..’

***

நன்றி : சன் டி.வி., திருமதி பாரதி பாஸ்கர், திரு. ராஜா

***

குறிப்பு : திரு. ராஜா குறிப்பிடும் ’நாலாயிரத் திவ்விய பிரபந்தம்’ பாடலை இங்கிருந்து எடுத்தேன்.  வலைப்பதிவர் சண்முகம் அவர்களுக்கு நன்றி.

இனி அந்த அற்புதமான குறும்படம் பார்க்கும் பொற்காலம் உங்களுக்கு வாய்க்கட்டுமாக, ஆமீன்!

Thanks to : TimeAndTheImage

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s