நண்பர் எம்.டி.எம்-ன் வலைப்பதிவிலிருந்து, நன்றிகளுடன்… பந்தா இல்லாமல் அவர் எழுதியிருந்தது பிடித்தது. அதற்காகவே இந்த மீள்பதிவு! அழைப்பிதழ் காண இங்கே க்ளிக் செய்யவும். நன்றி.
***
ஓவியர் கே.எம்.ஆதிமூலம் அவர்களின் நினைவு சொற்பொழிவினை எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் ஜனவரி 20, 2013 மாலை ஆறு மணிக்கு வழங்க இருப்பது தமிழ் நவீனத்துவத்தின் அடித்தளம் என்ன என்பதினை அறிவதற்கான அரிய சந்தர்ப்பமாகும்.
க்ரியா பதிப்பக வெளியீடாக வந்த சுந்தரராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ அட்டையில்தான் ஆதிமூலம் அவர்களின் ஓவியத்தை நான் முதன் முதலில் பார்த்தேன். திருச்சியில் அன்னம்-அகரம் புத்தகக்கடையில் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலை அட்டையிலிருந்த ஆதிமூலம் ஓவியத்திற்காகத்தான் வாங்கினேன்; அப்போது நான் ஆங்கில இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சிற்றிதழ் இலக்கிய சூழலுக்கோ எழுத்தாளர்களுக்கோ எந்தவித அறிமுகமும் இருக்கவில்லை. அன்னம்-அகரம் கடையின் அந்த விற்பனை அலமாரியில் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ அட்டை தனியாக ஒரு வித்தியாசமான அழகோடு இருந்தது. அன்னம்-அகரம் கடையிலிருந்த விற்பனையாளர் அந்த அட்டை ஓவியத்தை வரைந்த ஆதிமூலம் முக்கியமான நவீன ஓவியர் என்று கூறினார். நவீன ஓவியர் புத்தக அட்டைக்கெல்லாமா ஓவியம் தருவார் என்று எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. இரண்டொரு மாதங்கள் சென்ற பின் சென்னையில் க்ரியா பதிப்பகத்தின் அலுவலகத்திற்கு வந்தபோதே நவீன ஓவியர்களுக்கும் நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே அபூர்வமான நட்புறவு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் உருவாகியிருப்பது தெரிய வந்தது.
ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் நமக்கு அணுக்கமான நேரடியாக அனுபவபூர்வமாகக் கண்ட தமிழ் நிலப்பகுதியின் அம்சங்களைக் கொண்டிருந்தன ஆனால் அவை நவீனமாகவும் இருந்தன. ஆதிமூலம் தமிழ் எழுத்துக்களையே பல புத்தக அட்டைப்படங்களில் ஓவியம் போல எழுதியிருப்பார். நவீனமாகும் மனோ நிலையின் காட்சிப்படுத்தல்களாக அந்த ஆதிமூலத்தின் புத்தக அட்டைகள் இருந்தன. ஆதிமூலத்தின் ஓவியம்தான் என் புத்தக அட்டைக்கு வேண்டும் என பிடிவாதம் செய்யக்கூடிய எழுத்தாளர்களும் பதிப்பகத்தினரும் உருவானார்கள். உண்மையில் நல்ல வளமான கலை பண்பாட்டுச் சூழல் என்று ஒன்று இருக்குமானால் அங்கே சகல கலைத் துறையினரும் ஒருவரோடு பழகக்கூடியவர்களாகவும் ஒருவரையொருவர் தங்கள் கலைகளினால் பாதிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழல் தமிழில் உருவாகவில்லையென்றாலும் எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையில் மட்டுமாவது அப்படி ஒரு நட்புறவு ஏற்பட்டது தமிழின் நவீனத்துவத்தும் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
சிற்றிதழ் இலக்கிய சூழலைச் சார்ந்த எழுத்தாளர்கள் சுமார் முன்னூறு பேர் தமிழகம் முழுவதும் இருந்தார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் எழுத்தாளர்கள் என்று அவர்கள் வசிக்கும் தெருவில் கூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் குடும்ப உறுப்பினர்களுக்கே அவர்கள் எழுத்தாளர்கள் என்று பல சமயங்களில் தெரிந்திருப்பதில்லை. தமிழ் சிற்றிதழ் இலக்கிய எழுத்தாளர்கள் ஒரு ரகசிய சங்கத்தினர் போலவே செயல்பட்டார்கள். கிட்டத்தட்ட நவீன ஓவியர்களின் நிலையும் அதுதான். சோழமண்டலமும், கலை கைவினைக் கல்லூரியையும் தாண்டி நவீன ஓவியர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே பரவலாக அறியப்படாமல் இருந்தது. இந்தக் காரணமே கூட ஓவியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே பரஸ்பர நட்புறவுகளை உருவாக்கியிருக்கலாம்.
ஆதிமூலம் வரைந்த ஓவியங்களே அவற்றைப் பெருமையுடன் தாங்கிய புத்தக அட்டைகளே நவீன ஓவியத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் முக விலாசங்கள் தந்தன.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இவ்வாறாக நெல்லின் இமை திறந்து பூமி பிளந்து உயிர் தளிர்த்ததுபோல எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையில் உண்டான உறவு எத்தகையது என்பதினை ஆதிமூலம் பங்களிப்புகள் பற்றிய எழுத்தாளர் சா.கந்தசாமியின் உரையின் மூலம் நாம் அறியலாம். தவிர, தமிழின் நவீனத்துவம் எனப்படுவது ஓவியர்களாலும் உருவாக்கப்பட்டதே. ஆதிமூலத்தின் ஓவியங்களை அறிவது தமிழின் இதர ஓவியர்களையும் அவர்கள் தமிழ் சமூகமும் கலையும் நவீனமடைய ஆற்றியிருக்கும் பங்களிப்புகளையும் அறிவதற்கான வாசல்களைத் திறப்பதாக அமையும்.
மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களை நான் நன்கு அறிவேன். அன்னாரின் நினைவுச் சொற்பொழிவினை முன்னிட்டு அவரை நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது. ஆதிமூலம் அவர்களின் மகன் ஓவியர் அபராஜிதன் என் நண்பர். அவர் சார்பாகவும் நண்பர்கள் அனைவரையும் எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் சொற்பொழிவுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
***
தொடர்புடைய சுட்டி :
’நம் திறமையை நாம் உணர வேண்டும்..!’ – ஓவியர் ஆதிமூலம்
சித்திரவீதிக்காரன் said,
21/01/2013 இல் 06:20
ஆதிமூலத்தின் கோட்டோவியங்களுடன் வாடிவாசல் நாவல் வாசித்திருக்கிறேன். காளை மற்றும் மனிதர்களை கோட்டுச்சித்திரங்களிலேயே அருமையாக வரைந்திருப்பார். அவரைக் குறித்த விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துகள்.
abedheen said,
21/01/2013 இல் 11:02
சித்திரவீதிக்காரரே (இயற்பெயர் என்ன சார்?) , விழா சிறப்பாக நடந்ததாம்..
’ராஜராஜனுடைய கல்வெட்டுக்களில்- தஞ்சாவூர் பிரகஸ்தீஸ்வரர் கோயிலில் பெருவுடையார் கோயிலின் சுற்றுச் சுவர்களில் – மிக அற்புதமான எழுத்துகள் இருக்கிறது. அந்த எழுத்துக்களைப் பின்பற்றி ஆதிமூலம் நவீனகாலத்தில் -20வது நூற்றாண்டில் – அதன் தொடர்ச்சியாக, மரபு என்பது உடையக்கூடியது இல்லை, தொடர்ந்து வரக்கூடியது என்பதை கையில் எழுதி , எழுத்துக்களை ஸ்தாபித்துக்கொடுத்தார். அவருடைய எழுத்துக்கள்தான் தமிழ் புத்தகங்களினுடைய முகத்தை மாற்றியது.’ – சா.கந்தசாமி அவர்கள் நேற்றைய விழாவில் பேசியது. சன்நியூஸ் தொலைக்காட்சி மேலும் இன்று இவ்வாறு கூறியது : ஓவியர்களின் படைப்புகள் தேச உடமையாக இதுவரை அறிவிக்கப்பட்டதாக முன்னுதாரணம் இல்லையென்று சா,கந்தாமி கூறியுள்ளார். ஆதிமூலம் உள்ளிட்ட முதல்தரமான ஓவியர்களின் படைப்புகளை அரசுடமையாக்கி நிரந்தரகண்காட்சி அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். காந்தியின் நூற்றுக்கணக்கான ஓவியங்களை தாமே வரைந்து கண்காட்சியில் இடம்பெறச் செய்து ஆதிமூலம் மக்களின் ஆதரவைபெற்றதாக அவருடைய நண்பர் கூறியுள்ளார். ஆதிமூலம் தன் இளமைக்காலத்தில் கோட்டுச்சித்திர பாணியில் கறுப்பு/வெள்ளை ஓவியங்களை ஏராளமாக வரைந்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்றும் சிற்பி தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்பின் தன் வாழ்வின் இறுதிவரை தைலவண்ண ஓவியங்களையும் அரூப ஓவியங்களையும் ஆதிமூலம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.