தாஜின் ‘துப்பாக்கி’ லேட்டா வெடிக்கும்!

ஆனால் வெடிக்கும், எல்லாரும் ’வெடிவெடியென்று’ வெடித்தபிறகு (இதில் கௌதமசித்தார்த்தன் வெடித்தது பிரமாதம்) . உண்மையில், போன மாசம் தாஜ் எழுதி அனுப்பிய கட்டுரை இது , வேறொரு பத்திரிக்கைக்காக. அங்கண தாமதாறதால அவசரமா இங்கண. நம்ம சகோதரர்கள் இந்த ’மூன்றாம் பார்வை’யை அவசியம் வாசிக்க வேண்டும் என்று வேண்டிவிரும்பி கேட்டுக் கொன்று… .

**

Vijay-Thuppaki-Photos-03‘துப்பாக்கி’ இந்திய இஸ்லாமியர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படமா?

-தாஜ்

துப்பாக்கி படம் வெளிவந்து, அதில் இடம்பெற்ற சிலபல காட்சிகளுக்காக, இஸ்லாமிய சமூத்திற்கென அரசியல் நடத்தும் சில இயக்கங்களின் சிப்பாய்களால் பிரச்சனைகள் வெடித்து, கூக்குரல் பெரிதான போது, படத்தயாரிப்புக் குழுவினர் பணிந்தார்கள். அதன் தலைவர்களை அழைத்து சுமூக பேச்சு நடத்தியதின் பொருட்டு ஓர் இணக்கமான தீர்வு காணப்பட்டது. அதன்படிக்கு, துப்பாக்கி படத்திலிருந்து சுமார் கால்மணி நேரக்காட்சிகள் நீக்கப்பட்டதாக செய்தி.

துப்பாக்கி, அப்படி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் நான் அந்தப் படத்தை பார்த்தேன். படத்தில் காட்டப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள் யார்? அவர்கள் இந்தியர்களா? லக்க்ஷரே தொய்பாவை சேர்ந்த பாக்கிஸ்தானியர்களா? அல்லது ‘ஒரிஜினல்’ ஆப்கானிஸ்தானிய லக்க்ஷரேகளா? என்பதெல்லாம் விளங்காமலும், ஏன்? எதன்பொருட்டு பம்பாயின் பதிமூன்று இடங்களில் அவர்கள் குண்டு வைக்க குறிவைக்கிறார்கள்? எதன் பொருட்டான  தீவிரவாதிகள் அவர்கள்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாத நிலையிலும், ஒருவித புதிர் தன்மையோடு பார்த்து முடித்தேன்.

ஏ.ஆர். முருகதாஸின் அதிர்ஸ்டமோ என்னமோ சென்ற ஆண்டுகளில், லக்க்ஷரே தொய்பாவை சேர்ந்த பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளால், பம்பாயில் பதிமூன்று இடங்களில் குண்டு வைத்து தகர்க்க முற்பட்ட செய்திகளையும் அதனூடான பரபரப்பு தகவல்களையும் படித்து அதிர்ந்த அதிர்வுகள் இன்றைக்கும் அதன் எச்சமென நிழவுகள் மனதில் பசுமையாக இருந்ததினால், படத்தில் துண்டுவிழுந்த பகுதிகளையொட்டிய கேள்விகளுக்கு சட்டென விடைக் கண்டு பொருத்தி கொள்ள முடிந்தது. ஆனாலும் அது சரியா?யென சொல்லத் தெரியவில்லை.

இப்படம் வெளிவந்த தருணத்தில் ஃபேஸ்புக்கின் வழியே, இஸ்லாமிய இயக்கங்களின் வழிப்பாட்டாளர்கள் படத்தை தடைசெய்ய சொன்ன குற்றச் சாட்டுகளையும், அப்படத்தில் அப்படியெல்லால் இல்லை என்பதான மறுப்புகளையும் என் ஃபேஸ்புக் பக்கங்களில் வலிய பதிந்தபடி இருந்தேன். நான் பதிந்த இன்னொரு குறிப்பிடத் தகுந்த மறுப்பு, ‘சினிமா என்கிற மீடியாவை சரிவர புரிந்துக் கொள்ளாத இஸ்லாமிய அமைப்புகளின் போதாத எதிர்ப்பு இது’ என்பது.

நம்ம சினிமாக்காரர்கள், கோடிகளை குவிக்கவல்ல கதைகளை தேடுவதில் பேரார்வம் கொள்பவர்கள். இத்தேடலின் பொருட்டு, வடக்கிலும் தெற்கிலும் தேசிய உணர்வு மேலோங்கும் கதைகளை, முந்தைய முஸ்லீம் தீவிரவாதிகளின் அடாவடி நடப்புச் செய்திகளில் இருந்து தேடி, அதையொட்டி திரைக்கதைகளை முயன்று அவ்வப்போது வடிவமைக்கிறார்கள்! ‘தேசிய உணர்வுகள் மேலோங்கும் திரைக்கதை’ என்பது ஜெயிக்கும் சினிமா தியரிகளில் ஒன்று. சரியான முன் உதாரணம் ‘மணிரத்தினத்தின் ரோஜா’. இந்திய மொழிகள் அனைத்திலும் அப்படம் பெற்ற வெற்றி மகத்தானது!

இந்திய ராணுவ பின்புலம்/ ‘சிப்பாய்’ ஹீரோ/ வில்லனாக பாக்கிஸ்தான் பக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் அல்லது காஷ்மீரத்து இஸ்லாமிய தீவிரவாதிகள்/ அவர்களின் அடிப்படை வாதத்தின் அலட்டல்கள்/ நம் மண்ணின் மாட்சிமை மிகுந்த வீரத்தை மூவுலகிற்கும் பறைசாற்றும் நாயகனின் பக்கம் பக்கமான வசனங்கள்/ தீவிரவாதிகளையும், அவர்களுக்கு மறைமுகமாக உதவும் பாக்கிஸ்தானியர்களையும் ஹீரோ முறியடிக்கும் கிளைமாக்ஸ்!/ தேர்ந்த இயக்குனர்/ தேர்ந்த இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்/ பதுமையான நாயகி… இப்படி எல்லாமான திரை நுட்பக் கலவையோடு மனம் பரப்ப தாளிக்கப்படும் படம், நிச்சயம் அவர்களை ஏமாற்றுவதில்லை. அதனால்தான் நம் சினிமாக்காரர்கள் சிலருக்கு தேசிய உணர்வு திடும் திடுமென மேலோங்கிவிடுகிறது.

நிஜத்தில், இதுமாதிரி படங்களில், கதையையொட்டிய மேலுமான உண்மைகளை பெரும்பாலும் பேசமாட்டார்கள். இந்திய முஸ்லீம்களிடம் தீவிரவாதம் என்பது காஷ்மீரத்தில் இன்றைக்கும் வாழக்கூடியது. இத்தீவிரவாதத்தின் அடிப்படையான யதார்த்த உண்மைகளென்பது சங்கிலித் தொடரான நீண்ட அரசியல் சங்கதிகளை கொண்டது. இன்றைக்கும், அதிகாரத்தின் அரசியலின் எண்ணப்படி, காஷ்மீரத்து தீவிரவாதிகளை நம் ராணுவம் தினம்தினம் மரண பயத்தில் ஆழ்த்திக் கொண்டும் இருக்கிறது. ஆனாலும், நாட்டில் எல்லோரும் காஷ்மீர் தீவிரவாதிகளையே சாடிக் கொண்டிருக்க வேண்டும்! அதன்படிதான் திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கும்! இது இறையான்மையோடு தொடர்புடைய சங்கதியாகிப் போனதினால், பெரிதாக கேள்வி எழுப்ப இயலாத சுதந்திரத்தோடு நாம் மௌனிக்க வேண்டிய சூழல்!

காஷ்மீரத்து தீவிரவாதிகளை நம் ராணுவம் எதிர்கொள்வது குறித்த திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படும் பட்சம், அதன் திரைக்கதை, ராணுவத்தின் பக்கம் நின்று அதன் மாட்சிமையை மட்டுமே தூக்கிப் பிடிக்கும். திரைக்கதையில் மறந்தும் யதார்த்த உண்மையை கொஞ்சமும் காட்சிப்படுத்த மாட்டார்கள். எத்தனைப் பெரிய இயக்குனராக இருந்தாலும் இதுதான் நிலை! சொல்ல முனையும் பட்சம், அதிகாரத்தின் மறைமுகமான நெருக்கடிகள் அவர்களை ஏனென கேட்க வாய்ப்புண்டு.

அமெரிக்கப் படங்கள் மாதிரி, சொந்த நாட்டின் அரசை விமர்சனத்திற்கு உட்படுத்தும் ‘திரை ஜனநாயக’ பக்குவம் இன்னும் நம் நாட்டில் வளராத நிலை. வியட்நாம் போரையொட்டி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படங்கள் 460! அதில் 400-க்கு மேற்பட்ட படங்கள் அமெரிக்க அரசை எதிர் நிறுத்தி கேள்விகள் எழுப்பி, விமர்சனத்திற்கு உள்ளாக்கி, தங்கள் நாட்டின் தோல்வியையும், முரண்பாட்டையும் அப்பட்டமாக சொன்னப் படங்கள். இப்படியான விமர்சன சுதந்திரத்தை எல்லாம் நம் நாட்டு திரைப் படங்களில் காண இயலாது. எழுத்து சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் வெறும் சப்தத்திற்கு மட்டுமே செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் அரசும் விரும்புகிறது! இப்படியானதோர் சூழலில், துப்பாக்கி மாதிரியான படங்களின் இயக்குனர்களை நாம் குற்றம் காண முடியாது.

நமது இன்னொரு அண்டை நாடான சீனா, நம் மீது போர் தொடுத்து பகைமைப் பாராட்டிய நாடுதான். இன்றைக்கும் கூட, மறைமுகமாக பகைமை பாரட்டிக் கொண்டிருக்கும் நாடு. நம் நாட்டின் எல்லைப் பகுதியில் ஆயிரமாயிரம் சதுர கிலோமீட்டர்களை தனதாக்கிக் கொண்டிருக்கிறது என்பது இன்னொரு நிதர்சனம். தேசப்பற்றைக் காசாக்கும் நம் இயக்குனர்கள், மறந்தும் இந்தச் சீன நிஜத்தை திரைக்கதையாக்க மாட்டார்கள். சீனாவை எதிர் நிலைப்படுத்தி, ராணுவ ரீதியானப் படங்கள் எடுக்க நம் இயக்குனர்களே நினைத்தாலும், அரசு அனுமதிக்காது என்பதுதான் ஆச்சரியமான உண்மை! இது ஓர் உறுத்தலான, புரிந்து கொள்ள இயலாத திரைமறைவு அரசியல்! ஆனால், பாக்கிஸ்தான் அல்லது காஷ்மீர் முஸ்லீம் தீவிரவாதிகளின் திரைக்கதைக்கோ தங்கு தடையில்லா இரட்டை ஓகே!

சில இந்திய கட்சிகளால், காழ்ப்புணர்சிகளோடு பரப்பப்பட்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் சில காலமாக நம் நாட்டில் சகஜமாகி இருக்கிறது. தேசியத்தை முன்நிறுத்தி இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்க முனையும் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு, நாட்டின் இத்தகைய அரசியல் சூழல் சாதகமாகிவிடுகிறது. கேட்பாரற்ற சுதந்திரத்தோடு அவர்கள் இயங்கத் தொடங்குகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளோடு போராடி அவர்களை துவம்சம் செய்த விஜயகாந் படங்கள் எல்லாம் இந்தக் ‘கேட்பாரற்ற சுதந்திரம் கொண்டு’ இயக்கப்பட்டவைகள்தான்!

சில நூறு, அல்லது சில ஆயிரம் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்நாட்டில் முரணான நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள் என்பதினால், இங்கே வாழும் இருபத்தி ஐந்து கோடி இஸ்லாமியர்களையும் மெல்லமெல்ல தேசிய அரசியலில் இருந்தும், அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணின் தேசப்பற்றிலிருந்தும் தூர விலக்கி, கேள்விக் குறியோடு அன்னியப்படுத்தும் விதமான நடவடிக்கைகளுக்கு மையஅரசு எப்படி அனுமதிக்கிறது? என்கிற கேள்வி இங்கே மிகுந்த அர்த்தமுடன் எழுகிறது. சென்ஸார் போர்டு இத்தகையப் படங்களை தடையின்றி அனுமதிப்பதற்கு பின்னால் இருக்கும் அதிகாரத்தின் அரசியலை யோசிக்கும் எவருக்கும் மைய அரசின் இந்த மாறான போக்கு, மிக எளிதில் பிடிப்படவே செய்யும்.

சினிமா என்கிற சக்திமிக்க பொதுமீடியாவின் வழியாக பரப்பப்படும் ஓர் கருத்தால், பொதுஜன மத்தியில் தாங்கள் சமூகம் எத்தனைதூரம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை பாமர முஸ்லீம்களும் உணரவரும் நேரம், மறைந்து தெரியும் அதிகாரத்தின் அரசியலின் சதி, அவர்களுக்கு எளிதில் விளங்கிவிடும். அந்த நிஜம் நிச்சயம் அவர்களை உறுத்தவே செய்யும். உறுத்தவும் தொடங்கிவிட்டது.

பிடிபடாத ஏதோவோர் சதியின் அடிப்படையில் பொதுவெளியில் தொடர்ந்து நிராதரவாக ஆக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம் என்கிற யதார்த்த நிலை அவர்களைச் சுட, கொதிநிலைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் என்னவோ, கொஞ்சகாலமாகவே திரையில் தன்சமூகத்தினர்கள் கொண்ட கதாபாத்திரத்தையோ, அவர்கள் மீதான விமர்சனத்தையோ காணும் நொடியில், பரந்துப்பட்டு யோசிப்பதைவிட்டும் குமுறத் துவங்கிவிடுகிறார்கள். அந்தக் குமுறல் அவர்களை வீதிக்கும் கொண்டுவந்து விடுகிறது. துப்பாக்கி வெளியீட்டின் போது நடந்ததும் இதுதான்.

துண்டாடப்பட்ட துப்பாக்கி படத்தை பார்த்ததினாலோ என்னவோ, இஸ்லாமியர்களின் உணர்வுகளில் இயக்குனர் எவ்விதமான உரசலை நிகழ்த்தினார் என்பதை என்னால் முழுமையாக அறுதியிட்டு புரிந்துகொள்ள முடியவில்லை. காஷ்மீர் பிரச்சனையின் பின்புலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை சித்தரித்து இருந்தாலும், இந்தியா மீது பகைமைப் பாராட்டும் பாக்கிஸ்தானின் பின்புலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை காட்டியிருந்தாலும் இந்தியாவின் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் தேசப்பற்றை கேள்விக்குறியாக்கும் அபத்தத்தை இயக்குனர் செய்யாதிருந்திருக்க வேண்டும். ஆனால், படத்தின் போக்கில், அதாவது காட்சிகளை அழுத்தந் திருத்தமாக இயக்குனர் சொல்ல முற்படும் வேளை, அவரையும் மீறி அந்த ‘கேள்விகுறியாக்கும் அபத்தம்’ மேலோங்கிவிட அதிகம் வாய்ப்புகள் உண்டு.

இரண்டாவது, தீவிரவாதிகளின் பக்கம் வாழும் நியாயமான காரணங்களில் சிலவற்றையேணும் சுட்டி எப்படியேணும் காண்பித்திருக்கவேண்டும். ஆனாலும் முடிந்திருக்காது. இயக்குனர் அதனை காட்சிப்படுத்தி இருந்தாலும் சென்ஸார் அனுமதித்திருக்காது. ரோஜா படம் சென்ஸாருக்கு போனபோது அதுதான் நடந்தது. மணிரத்தினம் ஓர் பேட்டியில் முன்வந்து சென்ஸார் வஞ்சித்ததைப் பற்றி குறிப்பிட்டு சொன்னார்!

தேர்ந்த சினிமா கலைஞனாக, இயக்குனராக அறியப்படும் ஏ.ஆர்.முருகதாஸ், இந்திய இஸ்லாமியர்களை களங்கப்படுத்தும் விதமாகவோ, அவர்களை குறிவைத்து இப்படத்தை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயம் நம்புகிறேன். இந்திய திரைப்படங்களின் எழுதப்படாத சரத்தாக, ‘படத்தில் சொல்லப்படும் கதாபாத்திரங்களின் காட்சி வர்ணனையைகள் அழுத்தி சித்தரிக்கப்பட வேண்டும்’ என்பது. அந்தக் கணக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பற்றி அழுத்தத் திருத்தமாக சொல்லப் போக, மேலே நான் குறிப்பிட்ட முதல் தவறு, தவறுதலாக நடந்திருக்கலாம். இப்படத்திற்கு எதிர்ப்பு செய்த இஸ்லாமிய இயக்கங்களின் சிப்பாய்களை, இத்தகைய தவறுதல்களே அதிகம் கலங்கடித்திருக்குமென நினைக்கிறேன். அவர்களும் உடனடியாக கூக்குரலோடு வீதிக்கு வந்துவிட்டார்கள்! என்றாலும், அவர்கள் இன்னும் பொறுப்போடு கொஞ்சத்திற்கு அதிகமாக பொறுமை காத்து யோசித்திருக்க வேண்டும்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சென்னைக்கும் தென்மேற்கே வெகுதொலைவில் இருக்கும் ஓர் எளிய நகரத்தில் இருந்து வந்து, வியாபார சினிமாவின் எண்ணற்ற நுட்பங்களை இத்தனை சின்ன வயதில்; இத்தனை சுழுவாய் எப்படி அறிந்தார்? என தென்னிந்திய திரையுலகில் பலரும் வியக்கும் இயக்குனர் அவர்! ஒரு கட்டத்தில் வெற்றி எட்டாக் கனியாக போன விஜயகாந்துக்கும், சிரஞ்சீவிக்கும் மறுவாழ்வு தந்தப் படங்களை இயக்கியவர் அவர்! இந்தி சினிமா உலகில் தமிழ் இயக்குனரின் திறனான திறனை பதித்துவந்தவர் அவர்! அவரது முந்தைய படங்களாகட்டும், இந்தத் துப்பாக்கி படமாகட்டும் எல்லாமே வியாபார சினிமாவின் வெற்றிக்கான நெளிவு சுளிவுகளை மட்டுமே ஆதாரமாக கொண்டது!   இந்தத் துப்பாக்கி படத்தில் அவர் காதலை சொல்லியிருக்கும் வண்ணமான விதமும், நடிகர் ஜெயராமை வைத்து நகைச்சுவை பின்னியிருக்கும் விசேசமும், படம் முழுக்க அவர் நிரவியிருக்கும் திரைக்கதை டுவிஸ்ட்டுகளும், பம்பாயை பின்னணியாக கொண்ட கதையாடலும் அவரது தனித்தன்மையை காட்டுவதாக இருக்கிறது. அப்படியொரு ஜனரஞ்சமான வியாபார சினிமா இயக்குனராகத்தான் தன்னை முன்நிறுத்திக் கொள்ள விரும்புபவராக மட்டுமே தெரிகிறது. அப்படியான அவர், தேவையற்று இஸ்லாமிய சமூகத்தை சீண்டுவார் என்று நான் ஒரு போதும் கருத மாட்டேன். அது அவருக்கு தேவை இல்லாத ஒன்று. திரைக்கதையில் அவர் காட்டிய அழுத்தம், இப்படி ஒரு பழி/பாவத்திற்கு அவரை ஆளாக்கி இருப்பதாகவே கருதுகிறேன். இதனைக் குறித்து இஸ்லாமியர்கள் இன்னொரு முறை யோசிக்க வேண்டும்.

பொதுவாகவே இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்தினர்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள ஏனோ அச்சம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். புனிதமாக கருதும் தங்களது மதத்தின் மீது எந்தவொரு விமர்சனத்தையும் ஒருபோதும் அவர்கள் ஏற்பதே இல்லை. பொதுவெளியில் வந்து விழுந்துவிடும் அப்படியான விமர்சனங்களை சகித்துகொள்வதும் கிடையாது.1400 வருட பழமை கொண்ட, இன்றும் வளர்ந்து வரும் அம்மதமும், அது சார்ந்த சமூகமும் இப்படியான விமர்சனங்களால் மாசுபட்டுவிடுமென அஞ்சுவதில் அர்த்தமிருக்க முடியாது. மற்றுக் கருத்தை உரிய முறையில் வெளிப்படுத்த நிறைய வழிகள் இருக்கும் நிலையில், இப்படி அஞ்சுவதும் ஆத்திரம் கொள்வதும் ஏனென்று என்று விளங்கவில்லை.

படைப்பாளிகளுக்கு ‘ஃபத்வா’ கொடுப்பதும், அவர்களின் தலையை துண்டித்து வருபவர்களுக்கு பரிசு அறிப்பதும், ஃபத்வாபெற்ற படைப்பாளிகள் எங்கேனும் பேசும் போது, பொதுவிடம் என்றும் பாராது மேடையென்றும் பாராது செருப்பை கழட்டி அடிக்க நிற்பதும், அவர்களை ஊர் விலக்கு செய்வதும் அநாகரீகமானது. சகிக்க முடியாத அபத்தமானது. நவீன உலகின் நாகரீக சமூகம் இத்தகைய மனிதாபிமான மற்ற போக்கை ஒருபோதும் சகிக்காது.

இங்கே பேசப்படும், இஸ்லாமியர்களின் ‘சினிமாத்துறை எதிர்ப்பு’ என்பதையும் சமூகம் அப்படித்தான் பார்க்கிறது. சினிமா எதிர்ப்பென்கிற பெயரில் சென்னை மவுண்ட் ரோட்டை ரொப்பி நின்று கொள்வதும், அங்கேயே தொழுகை நடத்துவதென்பதும், வாகனங்களை நொறுக்கி கோபம் கொப்பளிக்க சினம் கொள்வதென்பதெல்லாம் பழைய காலத்தின் பழைய யுக்தி. இன்றைக்கு எல்லாவற்றிற்கும் நவீன மாற்று இருக்கிறது. நாகரீகமான முறையிலேயே எதிர்ப்பை காட்ட ஆயிரம் வழிகளுண்டு இங்கே. சம்மந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

துப்பாக்கிப் படத்தை தடைசெய்ய சொன்ன அந்த இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களை அழைத்து, அவர்களை கலந்து, எடிட் செய்யப்பட்ட அப்படத்தில், இன்றைக்கும் கூட வில்லன்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான்! அதனை நீக்க வைக்க அவர்களாலேயே இயலாது போனதுதான் இங்கே விசேசம் கொண்டது. ஏனென்றால் அதுதானே முந்தைய யதார்த்த நிஜம்! நாளையும் அந்தத் தீவிரவாதிகள் இந்திய நகரங்களில் குண்டுவைக்கவே திட்டம் கொண்டவர்களாகவே இருப்பார்கள் என்பதுதானே நிஜமும் கூட. அழிவைத் தேடாமல் அவர்களுக்கேது நிம்மதி! நம்மிடம் இருக்கும் குறைகளை தீர களையாதவரை, அடுத்தவர்களின் சுட்டுதல் விமர்சனம் குறித்தும், அல்லது அது திரைப்படமாக கட்டப்படுவது குறித்தும் நம்மவர்கள் கோபம் கொள்வதில் அர்த்தமே இருக்க முடியாது.

இன்றைக்கு, இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை பணியவைக்க நினைத்தார்கள், அவரும் பணிந்தும் போனார். சரி, இந்த  எதிர்ப்பாளர்களால், இஸ்லாமிய தீவிரவாதிகளின் தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா? அவர்களை ஜனநாயகப் பாதைக்கு திரும்படி சொல்லவும்தான் முடியுமா? முடியாது.., நிச்சயம் முடியாது. அது முடியாதென்கிறபோது, ஓர் திரைப்பட கலைஞனிடம் வீராப்பாக எதிர்ப்பு காட்டியது எந்த வகையில் நியாயம்?

***

taj3

நன்றி : தாஜ்

4 பின்னூட்டங்கள்

 1. Nagore Rumi said,

  12/01/2013 இல் 15:53

  இறுதியில் தாஜ் கேட்டிருக்கும் கேள்வி மிக முக்கியமானது. அதற்குத்தான் பதில் தேவை. என்ன செய்யப்போகிறோம்?

  • தாஜ் said,

   13/01/2013 இல் 08:56

   அன்பிற்குறிய ரஃபி…
   உங்கள் கருத்துப் பதிவில்…
   சந்தோஷம்… நன்றி.
   -தாஜ்

 2. கண்ணன் said,

  17/02/2013 இல் 06:48

  நியாய உணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளாது; இவருக்கு ஃபட்வா வராமலிருக்க அல்லா அருளட்டும்.

 3. 18/04/2013 இல் 22:43

  இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்தினர்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள ஏனோ அச்சம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். புனிதமாக கருதும் தங்களது மதத்தின் மீது எந்தவொரு விமர்சனத்தையும் ஒருபோதும் அவர்கள் ஏற்பதே இல்லை. பொதுவெளியில் வந்து விழுந்துவிடும் அப்படியான விமர்சனங்களை சகித்துகொள்வதும் கிடையாது.1400 வருட பழமை கொண்ட, இன்றும் வளர்ந்து வரும் அம்மதமும், அது சார்ந்த சமூகமும் இப்படியான விமர்சனங்களால் மாசுபட்டுவிடுமென அஞ்சுவதில் அர்த்தமிருக்க முடியாது. ….. – இதைப் படிக்கிறவர்கள் யாரும் உங்கள் ஊரில் இல்லை, இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s