‘நம் திறமையை நாம் உணர வேண்டும்..!’ – ஓவியர் ஆதிமூலம்

நவீன தமிழ் எழுத்துருக்களின் நாயகரான மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களின் நேர்காணல் ஏதாவது கிடைக்குமா என்று யுடியூபில் நேற்று தேடிக்கொண்டிருந்தபோது கோட்டோவியத்தில் காந்திஜீயை (மீண்டும்) அவர் வரையும் அபூர்வமான வீடியோ கிடைத்தது. பதிவின் அடியில் இணைத்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக்கொண்டே 2002-ல் குமுதம் வெளியிட்ட (ஆமாம், கு-மு-த-மேதான்) இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்தேன். நன்றி : மணா / குமுதம் (29.4.2002) &  Artist Anikartick . இது பத்தாதே என்பவர்கள் (எனவே, சிறுபத்திரிக்கை சம்பந்தப்பட்டவர்கள்) காலச்சுவடில் வெளியான டிராட்ஸ்கி மருதுசா.கந்தசாமிந. முத்துசாமியின் அஞ்சலியைப் பார்க்கலாம். வேறு சில சுட்டிகளும் பதிவின் அடியில் உண்டு. பார்த்துவிட்டு உணர்ந்துகொள்ளுங்கள் – ஆபிதீனுக்கு திறமை பத்தாதென்று!

‘(எந்த கஷ்டம் வந்தாலும்) அதற்காக என்னுடைய தொழிலை மலிவுப்படுத்திக்கொள்ளவும் தயாரில்லை’ என்கிறார் ஆதிமூலம். ஓவிய விமர்சகர் தேணுகாதான் ஒரு நேர்காணலில் இப்படிச் சொன்னார் : ‘தங்கள் தரத்தை வளர்த்துக்கொள்ளும்முன் தங்களை முன்னிறுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். படைப்பில் கவனம் செலுத்துவதைவிட புகழைத் தேடி அலைகிறார்கள். இதனால் படைப்பு மறப்பு (creative menopausity) ஏற்பட்டுவிடும். ஆதிமூலத்தின் மாணவரே அவரின் படைப்புகளைக் காப்பியடித்து, அதையெல்லாம் கண்காட்சியாக வைத்து, அதைத் திறந்துவைக்க, ஆதிமூலத்தையே அழைக்கிறார். ‘ஏன் இப்படி அனுமதிக்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டால், ‘உண்மையான திறமை இல்லாமல் ரொம்ப நாள் நீடிக்க முடியாது’ என்பார். இப்படிக் காப்பி அடித்துப் பலர் முன்னேறுகிறார்கள். இப்படி ஏறுவது, பரமபத ஏணி மாதிரி. பாம்பு கடித்தால் கீழே விழுந்துவிடுவார்கள். சுயமாக முன்னேற வேண்டும். விஷயம் இல்லாமல் புகழுக்கு அலைந்தால் ரொம்ப நாள் நீடிக்காது’ – தேணுகா

சரி, மணாவின் கட்டுரைக்குப் போவோம்…

***

adhimoolam1ஆதிமூலத்திற்கு அப்போது ஏழு வயது. கையில் சதா ஒரு குறுகுறுப்பு. தலைவர்களின் போட்டோக்களைப் பார்த்தால் விரலில் தனித்துடிப்பு சேர்ந்து விடும். பென்சிலால் திரும்பத் திரும்ப வரைந்து பார்த்தபோது அழகாகத்தானிருந்தது. விதவிதமான கறுப்புக் கோடுகளால் நிரம்பும் பல காகிதங்கள்.

அப்பா, அம்மா இருவரும் விவசாயக் குடும்பம். பையன் வரைவது அவர்களுக்கு ஆச்சரியம். இருந்தாலும் ‘வித்தியாசமா இருக்கானே… உருப்படுவானா?’ – சந்தேகம்.

திருச்சி துறையூருக்குப் பக்கத்திலுள்ள கீரம்பூர் பள்ளியில் படிக்கும்போது மனதுக்குள் கணகணவென்று பிஞ்சுத் தீ. சிலேட்டில் குச்சியால் படங்களை வரைய, ஆசிரியர் பக்கத்தில் வந்தார். ‘அட, பரவாயில்லையே…’

துறையூரில் ஆறாம் வகுப்புப் படிக்கப் போனபோது அக்கா கணவரின் மளிகைக் கடையில்தான் வாசம். புழுக்கம் வீசும் பலசரக்குச் சாமான்கள் அங்கிருந்தாலும் விரல்கள் துடிப்புடன் வரைந்து கொண்டே இருந்தன. வரைய வரைய கண் முன்னால் பேப்பர்களில் காட்சிகள் விரிவதில் ஒரு சந்தோஷம். ’எப்படியாவது ஓவியனாக வேண்டும்..’

பத்தொன்பது வயதில் ஒரு படம் வரைந்து ‘முரசொலி’க்கு அனுப்பியதும், பொங்கல் மலரில் அந்தப்படம்! அதற்குக் கீழ் கலைஞரின் கவிதை! மளிகைக் கடையில் அதைப் பார்த்தபோது சின்னச் சிறகடிப்பு. ‘இங்கேயே இருந்தால் போதாது.. நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும், .. ஓவியத்தை இன்னும் படிக்க வேண்டும்..’

வீட்டிலோ ஒரே எதிர்ப்பு. விவசாயக் குடும்பத்தில் சிறு சலசலப்பு. ‘முழுநேரமா படம் வரைஞ்சு சம்பாதிச்சுப் பிழைக்க முடியுமா?’

பிடிவாதத்துடன் ஆதிமூலம் சென்னைக்கு ரயில் ஏறியபோது கையில் வரைந்த சில ஓவியங்கள். கூடவே அதன் மீது ஒரு விடாப்பிடியான நம்பிக்கை. ‘என்ன கஷ்டம் வந்தாலும் தோல்வின்னு ஊர் திரும்பிடக் கூடாது’ – மனதில் ஓர் உறுதிமொழி.

நாற்பத்திரண்டு வருஷங்கள் கழித்து இதை நினைவுகூர்ந்து சொல்கிறபோது ஆதிமூலத்தின் முகத்தில் ஒருவிதத் தன்னிறைவு.

‘சென்னையில் சினிமாவுடன் சம்பந்தப்பட்டிருந்த பி.எஸ்.செட்டியார் என்பவருக்கு ஒரு கடிதம் கொடுத்து விட்டிருந்தார்கள். போய்ப் பார்த்தேன். என் ஓவியங்களைப் பார்த்ததும் என் மீது அவருக்குப் பிரியம். பலரிடம் கூட்டிக்கொண்டு போனார். அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ஓவியர் கோபுலுவைப் பார்த்தபோது ‘இப்போ பத்திரிகை வேலையெல்லாம் வேண்டாம். முதலில் நல்லாப் படிக்கட்டும்’ என்று சொல்லி அனுப்பினார். ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த தனபால் என் ஓவியங்களைப் பார்த்ததும், ‘இந்தப் பையனைக் கல்லூரியில் சேர்த்து விட்டிருங்க.. இல்லாட்டி வீணாப் போயிடுவான்..’ என்று சொன்னார்.

பி.எஸ். செட்டியாரும் தனபாலும் காட்டிய ஆதரவை மறக்க முடியாது. மயிலாப்பூரில் உள்ள செட்டியார் வீட்டில் அவரது பிள்ளை மாதிரி ஆறு வருஷங்கள் இருந்தேன். அங்கேயே தங்கி அவருக்கான வேலைகளைச் செய்துகொண்டு ஓவியக் கல்லூரியில் படித்தேன். தனபால் வீட்டுக்கு சைக்கிளில் போய்க் கற்றுக் கொள்வேன். கையில் அவ்வளவு பணம் இருக்காது. கமர்ஷியல் வேலைகள் சிலவற்றைச் செய்து கொடுப்பேன். இறந்துபோன வயதானவர்களின் படங்களை வைத்து ஓவியமாக வரைந்து கொடுத்திருக்கிறேன். ஐம்பது அறுபது ரூபாய் கிடைக்கும்.

ஓவியக் கல்லூரியில் பணிக்கர்தான் முதல்வர். அவர் தட்டிக் கொடுப்பார். உற்சாகப்படுத்துவார். ஓவியக் கல்லூரியிலிருந்து வெளிவரும் முன்பே கோட்டுச் சித்திரங்களில் எனக்கென்று ஒரு பாணி உருவாகி விட்டது.

அப்போதெல்லாம் நவீன ஓவியங்களுக்கு அங்கீகாரமில்லை. அர்த்தமற்ற கிறுக்கல்கள் என்கிற கேலியும் குத்தலான பேச்சுக்களும்தான் நிலவின. ஓவியனுக்குச் சமூக அந்தஸ்து இல்லை. சரியான பார்வையாளர்களும் இல்லை. ஆனால் கடுமையான விமர்சனங்கள்.

ஓவியப் படிப்பு முடித்ததும் – அப்போது சிலர் சினிமா ஆர்ட் டைரக்டர்களுக்கு உதவியாளர்களாகப் போவார்கள். சிலர் விளம்பரக் கம்பெனிகளுக்குப் போவார்கள். சிலர் அவ்வப்போது பத்திரிகைகளின் ஆண்டு மலர்களில் வரைவார்கள். 66-ல் கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது ‘சோழமண்டல்’ கலைஞர்களுக்கான கிராமத்தை உருவாக்கும் திட்டம் தயாரானது. 68-ல் எனக்குத் திருமணம். அப்போது வேலையிலாமல்தான் இருந்தேன். கண்காட்சிகள் தொடர்ந்து வைத்தபோதும் நிரந்தரமான வருமானம் இல்லை. பொருளாதாரத் தட்டுப்பாடு இருந்தது. அதற்காக என்னுடைய தொழிலை மலிவுப்படுத்திக்கொள்ளவும் தயாரில்லை.

gandhi-adimoolam1003_9_bigமனதில் பொங்கிய வேகத்துடன் காந்தியை விதவிதமான கோட்டோவியங்களாக வரைந்தேன். தனித்துவமான ஆளுமையுடன் கோடுகள்; வலிமை; அதேசமயம் வசீகரம். வீச்சுடன் காந்தி என்னுடைய காந்தியாக ஓவியங்களில் பதிவாகியிருந்தார். காந்தி நூற்றாண்டு விழா சமயம் நூறு காந்தி ஓவியங்களைத் தொகுத்து நடந்த கண்காட்சி ‘எசன்ஸ் ஆஃப் காந்தி’. பக்தவச்சலம் தலைமை. நெடுஞ்செழியன் திறந்து வைத்தார்.

பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இன்னும் அந்த ஓவியக் கோடுகளுக்கு அதே வலிமை. அதே இளமை. காந்தி மியூஸித்திலிருந்து ஒரு சில ஓவியங்களை வாங்கினார்கள். ஒரு ஓவியத்தின் விலை நூறு ரூபாய் என்று ஓவியத்திற்குக் கீழே மெலிதாக எழுதியிருந்தேன். விலை போகவில்லை. இருபத்தைந்து வருஷங்கள் கழித்து அதே ஓவியம் அறுபதாயிரம் ரூபாய்க்குப் போனது. பத்திரிக்கைகள் கவனிக்க ஆரம்பித்தன. வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் ஓவிய விமர்சகர்கள்வரை என்னைக் கவனித்தது அங்கீகாரத்திற்கான முதல் முயற்சி.

டெக்ஸ்டைல் துறையில் எனக்குக் கிடைத்த வேலை கைத்தறித் துணிகளுக்காக நிறைய டிசைன்களைப் பண்ணினேன். பப்பிள் ஜெய்கர் என்பவர்தான் இதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தார். முழுச் சுதந்திரம் கிடைத்தது. அதேசமயம் எங்களுடைய தனித்த ஓவிய முயற்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சிறு இலக்கியப் பத்திரிக்கைகளுக்கு, புத்தக அட்டைகளுக்கு வரைய ஆரம்பித்தேன். ’நடை’ என்கிற பத்திரிக்கையை ந.முத்துசாமி கொண்டுவந்திருந்தபோதும் , ‘கசடதபற’ வெளியானபோதும் இயங்க ஆரம்பித்தேன். பல எழுத்தாளர்களுடம் நெருக்கம் ஏற்பட்டது. ஓவியம் பற்றிய புரிதலும் விமர்சனங்களும் துவங்கின.

89-ல் நானாகவே ஓய்வு பெற்று விட்டேன். வேலையிலிருந்து விடுபட்டதும் ஒரு அலுவலகம் என்னை எந்த அளவில் முடக்கி வைத்திருந்தது என்பதை உணர் முடிந்தது. என்னுடைய நேரம் முழுக்க எனக்கும் என் படைப்புகளுகும் என்கிற சுதந்திர உணர்வை அனுபவித்தேன். வந்ததும் நிறைய ஓவியங்கள். வருஷத்திற்கு அறுபது ஓவியங்களுக்கு மேல் வரைந்தேன். கண்காட்சிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் போயின எனது ஓவியங்கள்.

79-ல் நேஷனல் லலித் அகாடமி விருது கிடைத்தது. தொடர்ந்து ஓவியத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வாய்ப்பு. 93-ல் நானே தனி ஆளாக ஜுரியாக இருந்தேன். ஒரு தேசிய விருதுக்காக ஏங்கிய நிலை மாறி நானே ஜூரியாக இருந்து இருபது கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்க முடிந்தது.

‘என்ன வசதிகள் வந்தாலும் நான் வியாபாரியாகி விடவில்லை’ என்று இதமான குரலில் தன்னுடைய சிறகைக் கோதிக்கொள்கிற மாதிரி சொல்கிறார்.

சென்னையிலிருந்து மகாலிபலிபுரம் போகிற சாலையில் சோழமண்டல் அருகில் அடர்த்தியான மரப் பச்சைக்கிடையில் வீடு. மனவி; இரு மகன்கள். எதிரே உயிர்க்க வைக்கிற ‘கேன்வாஸ்’

பேசும்போது பேச்சில் ஊற்று மாதிரி கொப்பளிக்கிறது தன்னம்பிக்கை. விவசாயக் குடும்பத்திலிருந்த இவரை நவீன ஓவியராக உருமாற்றியதும் இதுதான். ’லாபங்களைக் கருதி என்னை என் படைப்புகள் மூலம் தாழ்த்திக்கொள்ளாமல் இருப்பதுதான் எனக்கான எதிர்நீச்சல்’ என்றபடி சிரிக்கிறார் 63 வயதான ஆதிமூலம்.

‘அங்கீகாரம் கிடைக்கிறதா இல்லையா என்பதெல்லாம் வேறு. நாமே முதலில் நம் திறமையை எந்த அளவுக்கு உணருகிறோம் என்பதே முக்கியம். அதை உணர்ந்தால் போதும். செயல்படுவதற்காக உந்துதால் தொடர்ந்து நம்மிடமிருந்தே கிடைக்கும்’ – ஆதிமூலம்

***

தொடர்புடையவை..:

ஓவியர் ஆதிமூலம் மரணம் – மோனிகா

ஓவியர் ஆதிமூலம் மறைவு பற்றி – கோ.சுகுமாரன்

திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள் – பாவண்ணன்

கோடுகள் தந்தவர் (ஆதிமூலத்திற்கு அஞ்சலி கட்டுரை) – செழியன்

மாடர்ன் ஆர்ட் பற்றிய கேள்வியும் பதிலும் :

மாடர்ன் ஆர்ட் – பலருக்கு இது ஒரு புதிராகவே இருக்கிறது. ஒரே படத்தை பலர் பார்க்கபலவிதமான தோற்றத்தை, காட்சியை பார்ப்பவர்களாகவே யூகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. மாடர்ன் ஆர்ட்டும் தீட்டப்படவதற்கு முன்பு, ஓவியர் இந்த படம்தான் வரையப் போகிறோம்.இதுதான் மக்களுக்கு தெரிய வேண்டும் – என்கிறமுடிவில்தான் வரையப்படுகிறதா?

ஆதிமூலம் : மாடர்ன் ஆர்ட் என்பதை நவீன ஓவியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப்படம் வரையப் போகிறோம் இந்த கோடு இந்த மலை, ஆறு, பூ – இப்படித்தான்வரையப்பட வேண்டும் என்கிற வரைமுறை ஏதும் தேவையே இல்லை. இந்த நிலைமாற்றம்தான் மாடர்ன் ஆர்ட் என்பது. புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ரிலாக்ஸ்டாக ஓவியனுக்கென்று கட்டுப்பாடு இல்லாமல் அதே நேரத்தில் ஒருகுறிக்கோளோடு வரைவது. அப்படிவரையும் போது ஓலியனுக்கே புதிதுபுதிதாகஏதாவது தோன்றும். அதை அப்படியே வைத்து மேலும் மேலும் வரைவது.முழுபடமும் வரைந்து போதும் என்று தூரிகையை கீழே வைத்து படத்தைப் பார்த்தால்..அந்த ஓவியனே வியக்கும் அளவிற்கு அதில் புதிதாக ஒரு காட்சி இருக்கலாம்.மாடர்ன் ஆர்ட் ஆரோக்கியமான விஷயம்தான்.

***

அந்த வீடியோ இதுதான்…Lines of Mahatma . Thanks to : Magic Lantern Movies

.. after a gap of almost 3 decades, K. M. Adimoolam once again attempts to do a sketch of Gandhi.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s