இசை என்ற புலத்தின் கேள்விகள் – யுவன் சந்திரசேகர்

லால்குடியை விட அம்ஜத் அலிகான் வாசிப்பு பிடிச்சிருந்தது என்று முடியும் யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ பின்னுரையிலிருந்து… –  அநியாயமாக அலட்டிக்கொள்ளும் என்போன்ற அசடுகளுக்காக…

***

.. இசை கேட்பது வேறு; கேட்பதால் கிடைக்கும் அனுபவத்தை எழுத்துக்குள் கொண்டுவருவது வேறு. வெறும் கேள்வி ஞானம் கொண்டு இசையின் அந்தரங்கம் பற்றி எழுத முயலும்போது தவிர்க்கவியலாமல் ஒரு ரொமாண்டிக் பார்வை தூக்கலாகப் படிந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்த நாவலிலும் தழுதழுப்பின் அழுத்தம் சற்று அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றத்தான் செய்கிறது. இசையின், அதிலும் ஹிந்துஸ்தானி, இசையின் நுட்பங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதாலோ என்னவோ.

என்றாலும் எழுதும்போதும், எழுதி முடித்தபின்னும் கேள்விகள் ஊறுவது ஓயாமல் நிகழ்கிறது. என்னுடைய கேள்விகள் மட்டுமல்ல; இசை என்ற புலத்தின் கேள்விகள்.

இசையின் நுகர்முனையில் இருந்து நான் கொள்ளும் அனுபவமும் அதை சிருஷ்டிக்கும் இளைஞனின் அனுபவமும் ஒன்றேதானா? நான் சப்த ரூபமாகக் கேட்டு ஆனந்திக்கும் ஒலிக்கோவை அவ்வாறு வெளிப்படுவதற்கு முன்னால் இசைஞனுக்குள் என்ன வடிவத்தில் இருக்கும்? அதை அவன் எங்கிருந்து தோண்டியெடுக்கிறான்? வெறும் ஞாபகத்தின் மூலம் இத்தனை அபாரமான நுண்தளத்தைத் தமக்குள் பத்திரப்படுத்திக்கொள்ள முடியுமா? எனக்கு ஒலியாக இருப்பது அவர்களுக்கு காட்சியாக இருக்குமோ, ஒருவேளை?

சாஸ்திரிய சங்கீதம் கேட்பதை வெறும் பூர்வீக ஞாபகம் என்று சொல்கிற ஒரு தரப்பும் இருக்கிறது. அப்படியானால், இசை கிளர்த்தும் ஞாபக அடுக்கு எந்தக் காலகட்டம் சார்ந்தது?

மேற்கத்திய இசை மரபுகளிலும், ராக், ஜாஸ் போன்ற மேற்கத்திய நாட்ட்டுப்புற மரபுகளிலும் உள்ள தறிகெட்ட பாய்ச்சலும் உன்மத்தமும் இந்திய சங்கீதத்தில் இல்லையா?

நான் பிறப்பதற்கு முன்பே இறந்துபோன இசைக்கலைஞர்கள் பலரிடமும் இப்போது எனக்குள் இருக்கும் அந்நியோன்யம் எத்தகையது? அவர்கள் எனக்குள் படிய வைக்கும் வாஞ்சையின் தன்மை எத்தகையது? எல்லாருக்காகவும் பாடும் ஒருவன் எனக்காகப் பிரத்தியேகமாக நிகழ்த்துவதுதான் என்ன?

இசையை எதற்காகக் கேட்க வேண்டும்? சிந்தனையைக் கிளர்த்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் இலக்கியம் உதவுகிறது என்றால், இசையின் பணி என்ன? சிந்தனையை தற்காலிகமாக மழுங்கச் செய்வதா?

சிந்தனை ஓய்ந்த மனத்தில் இசை கிளர்த்தும் அனுபவத்துக்குப் பெயர் என்ன? ஒருங்கிணைக்கப்பட்ட இசைவடிவத்தில் சுதந்திரமாகத் திரியும் இசைஞன் எனக்குள் உருவாக்கும் கட்டற்ற நிலையை உத்தேசித்துத்தான் திரும்பத் திரும்ப அவனிடம் போய்ச் சேர்கிறேனா?

மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டதற்குப் பிறகும் ஒரு இசைக்கோவை புதிதாகவே இருக்கும் மர்மம் என்ன?

இசை பற்றிய அடிப்படை நுணுக்கங்களும் அடையாளங்களும் அறியாதவர்களின் இசையனுபவம் இன்னமும் ஆழமாய் இருக்குமோ?

***

நன்றி : யுவன் சந்திரசேகர், உயிர்மை

1 பின்னூட்டம்

  1. 21/01/2013 இல் 06:26

    கானல் நதி வாசித்திருக்கிறேன். ஒரு இசைக்கலைஞனின் வாழ்வைச் சொல்லும் நல்ல நாவல்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s