ARPITA CHAKRABORTYயிடமிருந்து நண்பர் சாதிக் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த இமேஜ் இது. கீழேயுள்ள பத்தி நண்பர் தாஜ், அவருடைய ஃபேஸ்புக்கில் (20th Nov 2012) போட்ட ஸ்டேட்டஸ். அல்லாஹ்விடம் அவர் துஆ கேட்கும் ஸ்டேட்டஸும் இதுதான். ஆன்மீகவாதிகளிடம் கேட்டால் அழிவு நடப்பதற்கு ஓர் அர்த்தமிருக்கும் என்பார்கள். ஹூம்ம்ம்.. – ஆபிதீன்
***
பாலஸ்தீன் போர் ஓயவேண்டும் , சமாதானம் தழைக்க வேண்டும்
தாஜ்
பாலஸ்தீன் பிரச்சனைக் குறித்து நான் பதிவு ஏதும் போடாததில் என் நண்பர்கள் சிலருக்கு மனத்தாங்கள் உண்டு. உலக அரசியலில் நான் வெகுகாலமாக கூர்ந்து கவனிக்கும் பிரச்சனைகளில் இந்த பாலஸ்தீன் பிரச்சனையும் ஒன்று. தவிர அந்தப் பிரச்சனையின் முன் தொடர்புகள் குறித்து மூத்த பெரிசுகளிடம் நிறைய தெரிந்ததும் உண்டு. அது குறித்த வாசிப்பும் செய்திருக்கிறேன். நான் சௌதியில் இருந்த போது இப்பிரச்சனையில் அதிகம் கவனம் செய்த எகிப்து நாட்டினரிடம் வலியப் பேசி உள்ளார்ந்த சங்கதிகளை கேட்டும் அறிந்திருக்கிறேன்.
மதத்தை முன் வைத்தும் பகைமை முன்வைத்தும் உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீண்ட ஆண்டுகளை கொண்ட போர் ஒன்று உண்டென்றேல் அது இதுவாகத்தான் இருக்கும்.
இஸ்லாம் தொடங்கிய காலத்தில் இருந்தே யூதர்களை எதிரிகளாக நிறம் காட்டப்படுகிறது. அந்த அளவுக்கு அந்த மக்களும் கொடூர சிந்தை கொண்டவர்களாக இருந்தும் இருக்கிறார்கள். இஸ்லாத்திற்கு மட்டுமல்ல, கிருஸ்துவத்திற்கும் அவர்கள் எதிரிகள்தான். ஏசுவை காட்டித்தந்ததே யூதர்கள்தான் என்று கிருஸ்துவின் சரித்திரம் சொல்கிறது. எல்லோரிடமும் பகைமை பாராட்டும் அளவில் அவர்களை அலைக்கழித்தது அவர்களது அதிமிஞ்சிய அறிவுதான் என்றொரு பேச்சு உண்டு.
முதல் இரண்டாம் உலக போர்களின் போது, அமெரிக்காவின் ஸ்நேகிதராகி ஹிட்லருக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்ததினால்
அந்த மக்கள் பெரிய இழப்பை எதிர் கொண்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த சரித்திர உண்மை. இன்னொரு பக்கம் அன்று தொட்டு அவர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகியும் போனார்கள் என்பது இன்னொரு சரித்திர உண்மை. இன்றைக்கும் அமெரிக்காவின் முதன்மை நேச நாடு அது.
எகிப்தில் நாசர் ஆண்ட போது, பாலஸ்தீன் மக்களுக்காக அவரது நாடும் மக்களும் கிளர்த்தெழுந்து யூதர்கள் மீது படையெடுத்து, கடையில் யூதர்களிடம் சமாதானம் பேச வேண்டிய நிலை. அந்த அளவுக்கு எகிப்து படை போரில் பெரிய இழப்பை சந்தித்தது. இன்றைக்கு அவர்கள் இஸ்ரேலுடன் வலிய நட்பு பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெரிய இஸ்லாமிய நாட்டின் இந்த நிலை, பிற அரபு நாடுகளுக்கு ஓர் பாடமாகவும், மௌனிக்கவும் செய்துவிட்டது. அங்கே அமைதி நிலவ அமெரிக்காவையே அரபு நாடுகள் அன்ணாந்து பார்க்கும் படிதான் இருக்கிறது.
இத்தனைக்கும் இஸ்ரேல் கையகல நாடு. இது இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் சொந்தமான பூமி. ஆதி கணக்குப் படி இருவர்களுமே ஒருதாய் வயிற்று மக்கள். மத எழுச்சிகளுக்குப் பிறகு அவர்களுக்குள் பகைமை தானாகவே வளர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சனை உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை. மாட்டேன் என்கிறார்கள். பலதரம் பேசி சமாதானம் ஆன போதும் கூட எழுத்தில் அதனை அழித்து விடுகிறார்கள். உலகப் பொருளாதார அரசியல் பொருட்டு சில வல்லரசுகளும் கூட இந்த இரு மக்களின் சமாதான வாழ்வோடு விளையாடுபவர்களாக இருக்கிறார்கள்.
என் வயதில், இந்த இரு மக்களுக்கிடையே ஆன சச்சரவு இது எத்தனையாவது தடவை என்று எண்ண முடியாத நிலை.
இத்தனைக் காலமாய் மாறி மாறி, விட்டு விட்டு நடந்தேறிய போரினால் ஆன இழப்புகள்இந்த இருதரப்பு மக்களுக்கும் உறைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். மதம் அவர்களது கண்களையும், மூளையையும் கட்டிவிடுகிறது!
மானுட நாகரீகம் பொருட்டேனும் இந்த மக்கள் சமாதானமாக போக வேண்டும். இனியேனும், வல்லரசுகள் இவர்கள் இடையே அரசியல் நிகழ்த்தக் கூடாது.
இப்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் சச்சரவில் மாண்டு போகிறவர்கள் குறித்து அனுதாபம் அதிகம்.
இன்றைக்கு இந்த இரு மக்களுக்கிடையே எகிப்தில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமாதான பேச்சு வார்த்தை வெற்றிபெற வேண்டும்.
‘பாலஸ்தீன் போர் ஓயவேண்டும்
சமாதானம் தழைக்க வேண்டும்.’
நானும், இதற்காக வேண்டி ‘அல்லாவிடம்’ துவா செய்கிறேன்.
வேறு என்னதான் செய்ய…?
***
நன்றி : தாஜ்
***
தொடர்புடைய கவிதை :
abedheen said,
25/11/2012 இல் 10:24
கூகிள்+ல் நண்பர் சித்தார்த் சொன்ன கருத்து :
தாஜ் அவர்கள் தனது பதிவில் அமெரிக்கர்களுக்கு உதவியதால் ஹிட்லர் யூதர்களை பழி வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தார். இல்லை… ஐரோப்பாவிற்கும் யூதர்களுக்குமான உறவு என்றுமே இப்படி தான் இருந்துள்ளது. 2000 வருட வெறுப்பு ஹிட்லரின் வடிவில் வெடித்தது. கி.பி 72ல் யூதர்கள் இஸ்ரேலில் இருந்து துரத்தப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் அப்படியே ஐரோப்பாவினுள் நுழைந்தனர். அன்று முதல் அவர்கள் வந்தேறிகளாக பார்க்கப்பட்டனர். பெரும் இடம்பெயர்வுகள் நிகழாத ஒரு நூற்றாண்டு கூட அவர்களது வரலாற்றில் இல்லை. இதன் விதிவிலக்காக ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய ராஜ்ஜியமாய் திகழ்ந்த அல் அந்துலூஸ் (இன்றைய ஸ்பெயின்) மட்டுமே. இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் யூதர்களும் 600 ஆன்டுகள் அமைதியாக வாழ்ந்த இடம் அது.
இஸ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சனை உண்மையாகவே சரி/தவறு என்று ஒற்றை வரி முடிவுகள் சொல்ல இயலாத பிரச்சனை. ஒரு புறம் 2000 ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருந்த ஒரு இனம், துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த ஒரு இனம் ஒரு கட்டத்தில், போதும்… தாயகம் போவோம் என்று முடிவெடுக்கிறது. தன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை இனவெறிக்கு பலிகொடுத்தவுடன் இந்த முடிவில் தீர்க்கமாக இறங்குகிறது.
இன்னொரு புறம், இந்த வரலாற்றில் இடம்பெறாத… 2000 ஆண்டுகளாக இது என் நிலம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்த ஒரு இனத்திற்கு ஒரு சவால் வருகிறது. கையளவு மட்டுமே இருந்த யூதர்கள் திடீரென எண்ணிக்கையில் கூட ஆரம்பிக்கின்றனர். மெல்ல இவர்களின் நிலங்கள் எல்லாம் கைமாறுகின்றன.
அந்த ஆரம்ப கட்டத்திலேயே முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை இது. இன்று காலம் கடந்துவிட்டது. இரண்டு தரப்புகளுமே கடந்த 60 ஆண்டுகளில் எதிரணி குறித்த பல்வேறு mythகளை கட்டமைத்துக்கொண்டார்கள். இனி இது சாஸ்வத சுழற்சி தான்… 😦
தாஜ் said,
25/11/2012 இல் 21:56
நண்பர் சித்தார்த் அவர்களுக்கு
நன்றி.
தாங்கள் சுட்டிக் காமித்திருக்கும்
யூதர்கள் குறித்த சில சரித்திர பிழைகளை
திருத்திக் கொள்கிறேன்.
மீண்டும் நன்றி.
-தாஜ்
தாஜ் said,
25/11/2012 இல் 21:59
நடைப்பெறும்
பாலஸ்தீன் பிரச்சனையையொட்டி
ஃபேஸ்புக்கில் நான் ஏனோதானோவென
வெளிட்டிருந்த
என் மனகிலேசத்திற்கு
வடிவமும் உயிரும்
தந்திருக்கும்
என் ஆபிதீனுக்கு
மகத்தான நன்றி.
-தாஜ்