யாரோ யாரையோ வெட்டிக்கொண்டிருந்தார்கள் – அதிகாலைக் கனவில். இத்தனைக்கும் சுரேஷ் சொன்னாரே என்று Les sentiments பார்த்துச் சிரித்துவிட்டு உறங்கியிருந்தேன். இப்போது உடல் நடுங்க என்ன காரணம்? படித்ததெல்லாம் வந்து தொலைகிறதோ கனவாக? எழுந்து டி.வியைப் போட்டால் (போட்டேன் என்றால் நிஜமாகவே போட்டேன், அப்போதான் அது இயங்கும்) குளோஸ்-அப்பில் வாசித்துக் கொண்டிருந்தார் குன்னக்குடி. குலுங்கக் குலுங்க அவர் முன்னே ஆடிக் கொண்டிருந்த பெண்மணிக்கு குறைந்தது ஐம்பது வயசு இருக்கும். எழுந்து ஓடாமல் பொறுமை காத்து ஏழெட்டு சானல்கள் மாற்றியது நல்லதாகப் போயிற்று. நாலு நல்லவார்த்தை சொன்னார் அடுத்துவந்த சுகி.சிவம் ஐயா ) அவருடைய மதநல்லிணக்க ‘பேக்கேஜ்’ மனசுக்கு இதமாக இருந்தது. ஆடியோ ரிகார்டிங் செய்ததை அப்படியே பகிர்கிறேன். இதன் வீடியோ லிங்க் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள், இணைக்கிறேன். நன்றி. – ஆபிதீன்
**
”நான் ஒரு சாமி கும்பிடுறேன் என்பதற்காக மத்தவன் கும்பிடுற சாமியையெல்லாம் கேவலமாப் பேசலாமா? குறைவா பேசலாமா? (இதெல்லாம்) கூச்சமில்லாம நடக்குது இந்த நாட்டில! ஒரு சமய நல்லிணக்க மாநாடுல கலந்துக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. கவிக்கோ அப்துல்றகுமான் அவர்களும் பேசினாங்க. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஒரு கருத்து சொன்னேன். நான் அடிப்படையில ஒரு மதத்தை சார்ந்தவனா இருந்தாலும் மத்த மதங்களோடு என்னை இணைச்சிக்கிறதுக்கு ஒரு கொக்கி வச்சிருக்கேன். நீங்க ரெயில்வே ஸ்டேஷன்ல பாருங்களேன். ரெயில்பெட்டி இருக்கு, இல்லையா? அதுக்கு முன்பக்கத்து பெட்டியோட மாட்டிக்கிறதுக்கு ஒரு கொக்கி இருக்கும். பின்பக்கத்து பெட்டியோட மாட்டிக்கிறதுக்கு ஒரு கொக்கி இருக்கும். இந்த கொக்கிகள் மூலமாகத்தான் இணைப்பாங்க, ரெயில் பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும். அதுமாதிரி , அடிப்படையிலெ நான் ஒரு மதம் சாரந்தவனா இருந்தாகூட இன்னொரு மதத்தோட என்னை இணைக்கிறதுக்கு ஒரு கொக்கி வச்சிருக்கேன். என்ன கொக்கி? எனக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது சார், நீங்க உங்க கடவுள கும்பிடுறீங்க, உங்க கொள்கையை கும்பிடுறீங்க, அது எல்லாமே சிறந்ததுதான், அதை நான் குறை சொல்ல மாட்டேன், உங்களோட வழிபாட்டு முறையை நான் குறை சொல்ல மாட்டேன், அப்படீன்னு… இப்ப அடிப்படையில நான் ஒரு மதம் சாரந்தவனா இருந்தாலும் எனக்குள்ளே இன்னொரு மதங்களுக்கு உரிய அந்த இணைப்பு கொக்கி இருக்கு. அப்படி இருக்கணும். அப்படி இருந்தா பிரச்சனை இல்லை. இது உள்ளவர்கள் , நல்லா யோசிச்சி பாருங்க, எல்லா மதத்தவரோடும் இணங்கிப் போறாங்க. எல்லா மதத்துலேயும் ஞானிங்க இருந்திருக்காங்க, எல்லா மதத்துலேயும் உயர்ந்த சிந்தனை உள்ளங்க இருந்திருக்காங்க, எல்லா மதத்துலேயும் இறையனுபவம் பெற்றவங்க இருந்திருக்காங்க. ஒரு குறிப்பிட்ட மதத்துலதான் இறையனுபவம் உள்ளவங்க பொறப்பாங்க, மத்த மதத்திலே இறையனுபவம் உள்ளவங்க பொறக்க மாட்டாங்கன்னு சொல்ல முடியுமா? குழந்தைத்தனமான பேச்சு! உலகம் முழுக்க எல்லா மதங்களிலும் நல்ல இறையனுபவம் உடைய – noble solesன்னி சொல்றோம் பார்த்தீங்களா, மேன்மைதங்கிய ஆன்மாக்கள் – எல்லா மதத்துலேயும் பிறந்திருக்காங்க. குறிப்பிட்ட மதத்துலேதான் பிறப்பாங்க, குறிப்பிட்ட ஊர்லதான் பிறப்பாங்கன்னு சொல்றதெல்லாம் வளர்ச்சியடையாதவர்கள் பேசுற பேச்சு…
அந்த சமயநல்லிணக்க மாநாட்டுலே கவிக்கோ ரொம்ப அழகா ஒரு கருத்து சொன்னாரு. இந்த பக்குவப்படுத்துவது – அதுதான் சமயம்னு பேரு, சமயம்னா சமைப்பதுன்னுதான் அர்த்தம் – நம்ம குக்கர்லெ என்னா பண்றோம் ஒரு பொருளை வேக வைக்கிறதுக்கு இத்தனை விசில் விடுறதுன்னு ஒரு கணக்கு வச்சிருக்கோம் (பா.பருப்பு, து.பருப்பு, க.பருப்பு பற்றியெல்லாம் சொல்கிறார்). இப்ப கடினமான மாமிசம் வேகணும்னா ஏழெட்டு விசில் அடிச்சாதான் வேகும். ரொம்ப அழகா கவிக்கோ சொன்னார், ‘இந்த மனுசன் ஒரு மோசமான மாமிசம். இவன வேகவைக்கிறதுக்கு ஏகப்பட்ட விசில் வேண்டியிருக்கு’ன்னார். எல்லா தீர்க்கதரிசிகளும் – பல மதங்கள்லேர்ந்து வர்றாங்க பாருங்க.. இவங்கள்லாம் அத்தனை விசில் மாதிரி. பல லட்சம் விசில் அடிச்சாதான் இந்த மனுசன் வேகுவான். இல்லேண்ணா சுலபத்துலெ வேகமாட்டான். அப்படீன்னாரு.. யோசியுங்க. மனுசனை பக்குவப்படுத்துறது அவ்வளவு கஷ்டமா இருக்கு. இன்னொரு கருத்து ரொம்ப வேடிக்கையா சொன்னாரு. அழகான உவமை ஒண்ணு சொன்னாரு. கோயில் யானை அறுத்துக்கிட்டு ஓடிப்போச்சு. ஏண்டான்னு கேட்டா ‘அதுக்கு மதம் பிடிச்சிடுச்சி சார்’ங்குறான். அப்துல் றஹ்மான் சார் சொன்னாரு ‘ அதுக்கு மதம் பிடிக்கலைடா, அதனால்தான் அறுத்துக்கிட்டு போச்சு!’ ஒரு கோயிலுக்குள்ளே (மட்டும்) இருக்கவேணாம்னு…பொயடிக்கா கருத்து சொன்னாரு. என்ன குறிப்பு? மதம் பிடிப்பதென்பது நல்லதா? நல்லதல்ல. மதப்பற்று என்பது வேறு. மத உணர்வு என்பது வேறு. மதங்களின் பெயரால் சண்டையிடுவது என்பது வேறுதான். எல்லா மதங்களிலும் தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்காங்க. ராமாயணத்துல என்ன செய்தி வருதோ அதே மாதிரியான செய்தியை வேற மதங்கள்ல பார்க்க முடியாதா? உதாரணம் சொல்றேன் பாருங்களேன், ராமனுக்கு தேனும் மீனும் கொண்டுவந்தான் குகன் அப்படீன்னு இருக்கு. அவன் மனசு நோகக்கூடாதுன்னு ‘உண்டனம்’ அப்படீன்னு சொன்னாராம். அத சாப்பிட்டேம்பா! தேனும் மீனையும் அருவருப்பா சொல்லலையாம். பரிவினில்… ‘இது எங்களுக்கு ரொம்ப பவித்திரமானதுப்பா’ என்றார். பவித்ரம்னா புண்யமானது, உயர்ந்ததுன்னு அர்த்தம். இதே மாதிரி ஒரு வரலாறு அண்ணல் நபிகள் அவர்களின் வாழ்க்கையில் காட்டட்டுமா? அண்ணல்
நபிகள் உட்கார்ந்திருக்காரு. ஒரு அம்மா கொண்டுவந்து திராட்சைப்பழங்கள் கொடுக்குது. அதை நீங்களே சாப்பிடனும்னு சொல்லுது. நபிகள் நாயகத்திடம் ஒரு நல்ல பழக்கம் என்னான்னா என்ன கொடுத்தாலும் எல்லார்க்கும் கொடுத்துட்டுதான் சாப்பிடுவாரு. அப்பேர்ப்பட்ட பண்பாளர். இந்த அம்மா ஒரு குலை திராட்சைப்பழத்தை கொடுத்து நீங்களே சாப்பிடுங்கன்னு சொல்லுது! ஒரு பழத்தை எடுத்து வாயில போட்டாரு. பேசிக்கிட்டே அவர்பாட்டுக்கு எல்லா
பழத்தையும் பிச்சி தன் வாயிலே போட்டுக்கிட்டாரு. கூட இருந்த நபித்தோழர்கள் எல்லாம் யோசிக்கிறாங்க. என்னடா இது, இப்படி பண்ணமாட்டாரே. அப்படீன்னு. அந்த அம்மா ரொம்ப சந்தோஷத்தோட எந்திரிச்சி போச்சு. அது போனபிறகு எல்லாரும் கேட்டாங்க, பெருமானே நீங்க இப்படி சாப்பிட மாட்டீங்களே, என்ன இப்படி இன்னக்கி’ன்னு. மிஞ்சியிருந்த ஒரு திராட்சையை எடுத்து ஒருத்தர்ட்ட கொடுத்து சாப்பிடுங்கன்னு சொல்றாரு நபிகள். அவர் வாயிலே போட்டு, ’தூ, புளிக்குது’ங்குறாரு. ‘ஆங்…இப்படி நடந்துடக்கூடாதுன்னுதான் எல்லாத்தையும் சாப்பிட்டேன்., நீ இப்படி துப்புனியே, அந்த அம்மா மனசு நொந்துபோகாதா?’ன்னாரு. அப்ப யோசிச்சுப் பாருங்க, பிறர் மனம் நோகக்கூடாதுன்னு ராமர் நெனைச்சாரு. நபிகளும் நெனைச்சாரு. எங்கேயும் உயர்ந்த பண்புகள் இருக்குங்குற அடையாளம்தானே இது? அப்புறம் என்ன மதங்கள் பெயரால சண்டை?
நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் ஒரு விழாவுக்குப் போறாரு. குத்துவிளக்கு ஏத்தச் சொல்றாங்க. அதை ஏத்துறதுக்கு அவர் கையில மெழுகுவர்த்தி கொடுத்தாங்க. எவ்வளவு Presence of Mind பாருங்க! ’ஒரு இஸ்லாமியனான நான் கிருஸ்துவமதத்தின் அடையாளமான மெழுகுவர்த்தியைக் கொண்டு ஹிந்துமதத்தின் அடையாளமான ‘குத்துவிளக்கை ஏற்றுகிறேன். இவையெல்லாம் இணைந்தால் ஒளி பிரகாசிக்கும். இந்தியா ஒற்றுமையோடு இருந்தால் ஒளியோடு இருக்கும்’னு ஒரு கருத்து சொல்றாரு. யோசிக்க வேண்டாமா?”
**
நன்றி : சுகி.சிவம் அவர்கள், சன்.டிவி.
Bonus : அமைதி பற்றி சுகி.சிவம் (Youtube)
**
நல்லா யோசிச்சாச்சா? நாகரீகமா அடிச்சுக்குங்க! – ஆபிதீன்
மறுமொழியொன்றை இடுங்கள்