அறிவுக்கு ஆயிரம் கண்கள்…

’மழைதான் பெய்யலே.. கூடத்துல கொளமாவது வரட்டும்’ என்று சொல்லும் அஸ்மாவுக்கு (என் முழு அறிவையும் இவளிடம் கொடுத்துவிட்டேன்!) ’குலமகள் ராதை’யில் வரும் கண்ணதாசனின் இந்தப் பாடலை (இசை: K.V. மஹாதேவன்) அர்ப்பணிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ‘எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?’ என்ற வரியை முடிந்துபோன (?) என் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தேன். முழுதாக இங்கே போடவேண்டும் என்று இருந்திருக்கிறது பாருங்கள்! தவறாமல் தினமும் கேட்கும் சுசீலாம்மாவின் வேறொரு பாடல் பற்றி – ஒரு நாளைக்கு ஒரு வரி வீதம் எழுதிவரும் 91 பக்க –  சிறுகதையில் குறிப்பிட்டிருக்கிறேன். அது சஸ்பென்ஸ். இப்போது இந்தப் பாடலைக் கேளுங்கள்- தேவிகாவை பார்க்காமல். மனசு லேசாகும். நன்றி.  – ஆபிதீன்

***

 

Thanks : klcb1968 ( http://www.youtube.com/watch?v=7-MeOefFKHs )

***

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று

கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

***

Thanks : http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/kulamagal-raathai/iravukku-aayiram-kangal.php

16 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  16/09/2012 இல் 22:21

  16.09.2012….
  இன்று எனது திருமணநாள்.
  வாழ்த்துங்கள்.
  வாழ்த்துப் பெறுவதென்பது
  எப்பவும் எனக்குப் பிடித்தமான ஒன்று.

  *
  ஆபிதீனின் இப்பதிவை ஒட்டி
  ஓர் இனிய நினைவொன்றை
  இங்கே பதிவதில்….
  அதுவும் இன்றைக்கு பதிவிடுவதில்
  கூடுதல் மகிழ்ச்சியுண்டு.
  அதற்கான முகாந்திரத்தை யதார்த்தமாக நல்கிய
  ஆபிதீனுக்கு ஆயிரம் நன்றிகள்.

  *
  // ‘எங்கே நடக்கும் எது நடக்கும்
  அது எங்கே முடியும் யாரறிவார்?’//
  -பதிவு குறித்த உரையில் ஆபிதீன்

  ‘செந்தமிழ்ச் செல்வி’ என்று பெயர்
  கல்லூரி புகுமுக வகுப்பில் கூட படித்த பெண்.
  படிக்கிற காலத்தில்
  அவள் அறியாமல் நானும்
  நான் அறியாமல் அவளும்
  வருடம் பூராவும்
  மனதுக்குள்
  அன்பு பாராட்டிக் கொண்டிருந்தோம்!

  வருட முடிவில்
  அவள்தான்
  அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாள்.
  வெளிப்படாது எங்களுக்குள் தத்தளித்த
  அந்த அன்பின் சங்கதிகள்…
  ஒரு குறுநாவல் எழுதத் தகுந்த
  வீச்சுக் கொண்டது.

  *
  “பிரியம் கொள்பவர்களை
  எங்கே எப்போது சந்திக்கிறோம் என்பதையும்
  அவர்களை
  எங்கே எப்போது பிரிய போகிறோம் என்பதையும்
  முன்கூட்டியே சொல்லிவிட இயலாததுதான் வாழ்க்கை!”

  – அந்த ஆண்டு முடிவில்
  என் ஆட்டோகிரஃபில்
  அவள் கையொப்பமிட்டு தந்த போது
  கூடுதலாக
  அவள் எழுதித்தந்த
  நான்கு வரிகள்தான் இவை.

  *
  ‘பிரிய நேர்ந்த
  பிரியம் கொண்டவர்கள்
  மீண்டும்
  எங்காவது… எப்போதாவது… எதற்காகவாவது…
  சந்திக்கவும் கூடுமோ என்பதை
  முன்கூட்டியே சொல்லிவிட இயலாததுதான் வாழ்க்கை!’

  -இது நானே எனக்குள் எழுதி
  கையெழுத்திட்டு வைத்திருக்கும் வரிகள்.

  *
  இன்றைக்கு என்னை
  வாழ்த்துவதோடு மட்டுமில்லாமல்
  இதற்காகவும் துவா செய்யுங்கள்.
  -தாஜ்

  ***

  • abedheen said,

   17/09/2012 இல் 10:01

   அன்புள்ள எங்கள் தாஜய்யா, வாழ்த்துகள். ஏதாச்சும் நேத்து ’ஸ்பெஷலா’ நடந்ததாய்யா? செந்தமிழ்ச்செல்வியை சீர்காழியம்மாவுக்கு தெரியுமாய்யா? சொல்லுங்க.

   • 17/09/2012 இல் 11:08

    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
    (இதை கொஞ்சம் முன்னால கேட்ருக்கக்கூடாதா?
    அடுத்த நாளில்தானா நாங்கள் வாழ்த்துவது?)

 2. 17/09/2012 இல் 11:23

  வாழ்த்துக்கள் நண்பர் தாஜ் அவர்களுக்கு. தனது திருமண நாளான்று.. அவரது மலரும் நினைவுகள் அருமை. )) சீர்காழியம்மாவிடம் சிக்கலை உருவாக்குவதில் அப்படி என்ன மகிழ்ச்சி ஆபிதின் அய்யா அவர்களுக்கு. )))

 3. தாஜ் said,

  17/09/2012 இல் 14:16

  அன்பார்ந்த நண்பர்களுக்கு……

  சீர்காழி அம்மாவுக்கு
  திருமணமான மாதத்தில்
  நான் தந்த சில பரிசுகளில்
  இந்தச் செய்தியும் ஒன்று.

  எனக்கும் மனைக்குமான
  வாழ்வு நிலை..
  சுத்தமான அசல் நம்பிக்கையினாலானது.

  அன்றைக்கும் இன்றைக்கும்
  என்னை
  ‘நல்லவன்’ என்று நம்புவதுதான்
  அவள் எனக்கு தந்துக் கொண்டிருக்கும்
  மிகப் பெரிய வாழ்நாள் பரிசு!

  எல்லோருக்கும் நன்றி.
  அன்புடன்
  -தாஜ்

  • abedheen said,

   17/09/2012 இல் 15:18

   கடவுளைக்கூட நம்பலாம். ’வழிகேடர்களான’ கவிஞர்களை நம்பலாமோ? பாவம் சீர்காழியம்மா.

   • தாஜ் said,

    17/09/2012 இல் 19:59

    உங்களது தெரியாது நான் நல்லவனுமில்லை
    உங்களுக்கு தெரியாது நான் கெட்டவனுமில்லை.

    சொல்லுங்க தல…..
    ஒரு பேச்சுக்கேனும்
    நான் நல்லவனா இருக்கக் கூடாதா என்ன?
    -தாஜ்

 4. 17/09/2012 இல் 15:56

  தாஜுக்கு சின்ன திருமண பரிசு:

  சுமார் 23 வருடங்களுக்கு முன்னால் “காதல் அனாடமி” என்ற என் சிறுகதையில் ( அசோகன் நடத்திய பாக்கெட் நாவலில் வந்தது) ஒரு தாத்தா தன் பேரனின் காதல் பற்றிய கேள்வியின் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதியாக infatuation ஐ ( இனக்கவர்ச்சியை) கிண்டலடிப்பதாக எழுதிய கவிதை? இது:

  “எனக்கு தெரிந்து தெய்வீக காதல் என்பது
  கண்கள் தெரியாத இரண்டு குருடர்களுக்கிடையே மட்டுமே சாத்தியாமாகிறது
  கண்ணே நான் உன்னை தொட்ட போதே
  நம் காதல் கற்பிழந்து விட்டது.”

  இளஞர்களை கொஞ்சம் கவர்ந்தது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் இதற்கு நான் வைத்த தலைப்பு “வாலிபத்தின் பாடலுக்கு ஜே” என்பது. இதை பிரசுரத்திற்கு அனுப்பு முன் படித்த மறைந்த சொல்லரசு ஜாபர் முஹைதீன் நானா “நூருல் அமீனுக்கு ஜே!” என கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள். எழுத்து பயிலும் என் முயற்சியை உற்சாகப்படுத்தும் விதமாக. என்றும் இளமையானவர்கள் அவர்கள்.

  அரசவைக்கு செல்லும் போது ஏழைப் புலவர்கள் எடுத்து செல்லும் எலுமிச்சை காயைப்போல கவிஞர் தாஜுக்கு இது என் திருமணப்பரிசு.

  கவிதை உங்களைப் பற்றியுமில்லை. என்னைப் பற்றியுமில்லை. நம்மைப்பற்றியது.

  அந்த கதை எங்கே காணாமல் போய் விட்டது. கிடைத்தால் கூட ஆபிதீன் பக்களில் வெளியிடும் அளவு நல்ல கதையல்ல.

  அப்புறம் உங்களுடன் எனக்கு இன்னும் ஒரு ஒற்றுமை தாஜ். என் திருமண நாளும் செப்டம்பர் தான். என் திருமண நாளுக்கு வாழ்த்து சொன்னால் நீங்கள் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுவீர்கள். வாழ்த்துக்கள் தாஜ். உங்களின்
  தொடர்ச்சியை உங்களுக்கு வழங்கிய எங்கள் அன்பு சகோதரிக்கும் எங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள் தாஜ்.

  • 17/09/2012 இல் 17:43

   /அப்புறம் உங்களுடன் எனக்கு இன்னும் ஒரு ஒற்றுமை தாஜ்./ என் மகள் பெயரும், உங்கள் மகள் பெயரும் ஒன்றாய் இருப்பது மனதில் வந்ததால் “இன்னும்” என்ற வார்த்தையை உபயோகித்து விட்டேன்.

  • தாஜ் said,

   17/09/2012 இல் 20:41

   அன்பு
   நூர்…

   இன்னொருவர் வாழ வாழ்த்துவதும்
   அவர்களின் நலத்திற்காக இறைஞ்சுவதும்
   மனிதாபிமானம் மிக்கதாகத்தான் கருதுகிறேன்.
   எனக்கும் பிடிக்கும்.

   என் பகுத்தறிவு பற்றிய
   வழிமுறைகள்
   கொஞ்சம் வித்தியாசப்பட்டது.
   இது,
   நான்
   என் சிந்தைக்கேர்ப்ப வடிவமைத்தது.
   கொஞ்சம் கவிதை மாதிரி!

   பெரியார் வாழ்கதான்.
   என்றாலும்….
   என் சிந்தைக்கு
   நான் மதிப்பளிக்காவிட்டால்
   வேறு யார்தான் அதைச் செய்வார்கள்?

   நூர்…
   உங்களை
   மத தீவிரவாதியாகவே நான் கருதாத போது
   தீவிரவாதியாக எப்படி உங்களை கருதமுடியும்.

   தொடர்ந்து பலவேறு தருணங்களில்
   உங்களையும் உங்களது மததீவிரத்தையும்
   கொஞ்சம் நகைச்சுவையாய் சுட்டியிருக்கக் கூடும்.
   தருணங்களின் விமர்சனம் மாதிரி.
   அதையெல்லாமா…
   நினைவில் கொண்டு சுட்டுவது?
   சிரிக்கவும் பழகுங்கள் நூர்.
   ஆன்மீகத்தில்
   அதற்கு இடமே இல்லை என்கிரீர்களா.
   தேடிப்பாருங்கள்.
   எதாவது சூஃபி எங்காவது நிச்சயம் சிரித்திப்பார்.

   *
   அப்புறம்…

   //“எனக்கு தெரிந்து தெய்வீக காதல் என்பது
   கண்கள் தெரியாத இரண்டு குருடர்களுக்கிடையே மட்டுமே
   சாத்தியாமாகிறது//

   -அப்படியா சொல்கின்றீர்கள்?
   அனுபவற்ற ஏரியா அது!
   எதுவும் உறுதியாய் அறிதிட முடியாதுதான்.
   என்றாலும்…
   அனுமானம் கொண்டு சொல்லலாம்..
   நீங்கள் சொல்கிற ‘சாத்தியம்…’
   உறுதியாய் சாத்தியமில்லை என்றுதான்படுகிறது.

   நன்றி…
   சந்தோஷம்
   -தாஜ்

   • 18/09/2012 இல் 09:30

    என் திருமண நாள் செப்டம்பர் 11 என்பதை தான் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தேன்.

    என் நகைசுவையையே இப்படி சோகமாக்கிட்டீங்களே! தாஜ் வாழ்த்துகளில் காயப்படுத்துவது வக்கிரம் என்பது எனக்கும் தெரியும் தோழா! உங்கள் மீது பூக்களைத் தான் எறிந்தேன். காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

    அப்புறம் இன்னொரு விஷயம் ஆன்மீகம் மனதை மலர வைக்கும், இறுக்கமாக்காது.

 5. 17/09/2012 இல் 17:28

  தாஜ் அண்ணனுக்கு வாழ்த்துகள் :))

  • தாஜ் said,

   17/09/2012 இல் 21:43

   அன்புடன்
   தம்பிக்கு…
   உனது வாழ்த்துக்கு மிக்க நன்றி.
   -தாஜ்

 6. abedheen said,

  17/09/2012 இல் 21:51

  //நான் நல்லவனா இருக்கக் கூடாதா என்ன?// இனிமேலா? வேணாம் தாஜ், எங்களைப்போலவே இருந்துவிடுங்கள்!

 7. 18/09/2012 இல் 16:28

  நல்லாருக்குய்யா நம்ம கதை!
  கல்யாணநாளுக்கு வாழ்த்துங்கன்னா
  ஒருத்தர ஒருத்தர் தீவிரவாதின்னு சொல்லிக்கிறோம் 🙂
  இதுல எங்கிட்டு ஒரு பேச்சுக்காவது நல்லவனா இருக்குறது?
  (எனக்கும் செப்டம்பர்லதான் கல்யாணநாள் வருது!)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s