சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ நூலிலிருந்து ..
குங்குமம் இதழில் (மே,1994) வெளியான கட்டுரையின் பிற்பகுதியைப் பகிர்கிறேன், இந்தியாவில் மட்டுமா கூவாகம் இருக்கிறது என்ற கேள்வியுடன்…
**
……..
‘இல்ல சார். நான் ஆம்பளை மாதிரிதான் இருக்கேன். ஆபீஸ் போகும்போது பேண்ட் ஷர்ட் போடறேன். மீசை வெச்சுக்குறேன். இங்க (கூவாகம்) வர்றதுக்காகத்தான் இப்படி. எனக்கு சின்னக் குழந்தையிலிருந்தே பொட்டு வெச்சுக்குறது, பூ வெச்சுக்கிறது, மை போட்டுக்குறது எல்லாம் பிடிக்கும். அது அப்படியே தொடருது. இப்பவும் எங்க வீட்ல நான் பொம்பள மாதிரி நடந்துக்குறேன்னு தெரியுமே தவிர அலியாயிட்டேன்னு தெரியாது. இது ஒரு கலை சார். என்னை அலங்காரம் பண்ணிக்கிறேன். அழகாக் காட்டிக்கிறேன். பொம்பளைதான் அழகு. அதனால் நானும் அப்படியே ஆயிட்டேன். இங்க வர்றதுக்கு ரொம்ப செலவு சார். மேக்கப், அலங்காரம், பஸ்ஸுன்னு செலவாயிடுது.’
பிளஸ் டூ வரை படித்திருக்கும் முரளியின் சகோதரி ஒருவர் எம்.பி.ஏ படித்து ஊட்டியில் பதவியில் இருக்கிறார். தம்பி பி.ஈ. படித்துக் கொண்டிருக்கிறார்.
‘நீங்க இப்படி இருக்குறதுல என்ன அசௌகரியம்?’
‘எனக்கொண்ணும் இல்லை. மத்தவங்கதான் என்னமோ அருவருப்பா பாக்கறாங்க. சில பேரு மேல வந்து ஒரசறாங்க. மார்பு மேல, இடுப்புல கை போட்டுக் கிள்ளுறாங்க. இதெல்லாம் எங்களுக்கே அருவருப்பா இருக்கு.’
‘அலிகளை செக்ஸுக்கு பயன்படுத்தறதாச் சொல்றாங்களே. நீங்க அந்த மாதிரி மாட்டியிருக்கீங்களா?’
‘சில பேரு அப்படியும் இருக்கலாம். நாங்க அப்படி இல்லே. நாங்க பத்து பேரு ஒரு குரூப். எங்களுக்கு ஒரு குரு இருக்காங்க. நாங்க ‘அம்மா’ன்னு கூப்புடுவோம். எங்க நல்லது கெட்டது எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க. இங்க வந்துருக்கமே அவங்கதான் எங்களை கவனமா பாத்துக்குவாங்க. அதனால தப்பா நடக்க முடியாது.’
‘பசி மாதிரி செக்ஸும் எல்லோருக்கும் வர்ற உணர்ச்சி. நீங்க என்ன செய்வீங்க?’
இந்தக் கேள்விக்குக் பதில் சொல்ல முரளி முதலில் தயங்கினார். அவர் முகத்தில் வெட்கம் குடிகொண்டது. பிறகு மெதுவாகச் சொன்னார்.
‘எங்களுக்குள்ள செக்ஸ் வெச்சுக்குவோம்.’
முரளியை படம் எடுக்க முடியவில்லை. ‘எங்க வீட்ல தெரிஞ்சிடும் சார். எனக்கு வருத்தமில்ல. ஆனால் அவங்க வருத்தப் படுவாங்க, வேண்டாம்.’
முரளியிடம் விடைபெற்று நகர்ந்தோம்.
திடலில் அரவான் வைக்கோல் புஷ்டியுடன் உருவாகிக் கொண்டிருந்தார்.
கூவாகம் திருவிழாவின் முக்கிய விருந்தாளிகள் அலிகள்தான். விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டதும் கோவில் சார்பாக அலிகளுக்கு கடிதம் அனுப்பப்படும். விழாவுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.
‘முந்தியெல்லாம் ரொம்ப பொட்டைங்க வருவாங்க. இரண்டு மூணு வருஷமாக் கொறஞ்சிடுச்சு. நம்ப ஆளுங்க அட்டகாசம் பண்ணி வெரட்டறதுல பயந்துடுச்சுங்க’ என்றார் கூத்தாண்டவர் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான வீரக் கவுண்டர்.
ஜன நெரிசலில் பிழியப்பட்ட களைப்பில் வயல்வெளியில் அயர்ந்துவிட்டோம். அதிகாலை மூன்று மணி.
திடீரென்று அதிர்வேட்டும், உயிரூட்டும் மேளமும் முழங்கின. அரவான் புறப்பட ஆயத்தமாகிவிட்டார். கோவிலை நெருங்கினோம்.
கூத்தாண்டவரின் சிரசை ஒருவர் தலை மேல் தூக்கிக்கொண்டு ஆடியபடி தேரை நெருங்கினார். ஜனக் கூட்டத்திலிருந்து பூக்கள் வீசியெறியப்பட்டன. பத்தடி உயரத் தேரின் மீது பதினைந்து ஆட்கள் நின்று சிரசை வாங்கிப் பொருத்தினார்கள். பிறகு மார்பதக்கம், புஜங்கள் என்று மெதுவாக வந்து ஒன்று சேர்ந்தன.
தேரின் முன்னால் பாறை மாதிரிக் கற்பூரக் கட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. அரவானின் தேர் அங்கிருந்து புறப்பட்டு ‘அழுதகளம்’ என்ற இடத்துக்கு வந்து சேரும். பிறகு ஒன்றரை மைல் தூரத்திலுள்ள நத்தம் (பந்தலடி) என்ற இடத்தில் அரவானின் சிரசு பலியிடப்படும். அப்போது அலிகள் தங்கள் தாலிகளை அறுத்தெறிவார்கள். தலையில் சூடிய பூக்களைப் பிய்த்து வீசுவார்கள். பலியான கணவனுக்காக மார்பில் அறைந்து கொண்டு அழுவார்கள். விழாவின் ஆரவாரம் அத்துடன் முடிந்துவிடும்.
அலிகளில் சிலரைத் தவிர பலர் அடிமை வாழ்வு நடத்துபவர்கள். அவர்களுக்கு கூட்டைவிட்டு வெளியே வர அகப்படும் வாய்ப்பு இந்தக் திருவிழா. இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். தமது கற்பனைக் கணவனுக்ககக் கண்ணீர் சிந்திவிட்டு திரும்பக் கூண்டுக்குள் போய்விடுகிறார்கள்.
கூவாகத்தில் விநியோகப்பட்ட துண்டு அறிக்கை ஒன்று நம்மைக் கவனிக்கச் செய்தது. அலிகள் மோசமாக நடத்த்ப்படுவதை எதிர்த்து சங்கம் தொடங்க்ப்பட வேண்டிய தேவையை வற்புறுத்தியது அந்த நோட்டீஸ். நம்மிடையே சரியும் தவறும் இருப்பதுபோல அவர்களிடையிலும் இருக்கிறது. அவர்கள் நம்மிடம் அனுதாபத்தையோ ஆதரவையோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ அனுமதிக்கும்படி சொல்கிறார்கள்.
***
நன்றி : சுகுமாரன், குங்குமம், அன்னம் பதிப்பகம்.
****
தொடர்புடைய பதிவு :
கூத்தாண்டவர் திருவிழா : அரவாணிகள் வாழ்வும்.. தாழ்வும்.. – பொன்.வாசுதேவன்
abedheen said,
01/05/2012 இல் 11:25
நண்பர் ஜமாலனிடமிருந்து மெயில் :
வழக்கம்போல் பின்னூட்டம் இடமுடியவில்லை. ஏதோ கிரப்தார் அவதார் என்று சள்ளையை தருகிறது. எதாவது புரடக்ஷன் இருந்தால் நீக்குங்கள். அல்லது இந்த ஆளுங்க கமெண்டே வேண்டாம் என்ற திட்டமிட்ட சதியா?
சரி கமெண்ட் உங்கள் பார்வைக்கு..
***
திடீரென இப்படி ஒரு பகிர்தல். வாழ்த்துக்கள் நானா. அரவாணிகள், அலிகள் போன்ற பல பெயர்களில் திருநங்கை என்கிற பெயரே சிறப்பாக அவர்களை குறிப்பதாக உள்ளது. இவை பழைய பதிவுகள் என்பதால் அரவாணி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருநங்கைகள் பற்றிய எனது வரிவான (வழக்கம்போல் புரியாத மொழியில் எழுதப்பட்ட) கட்டுரை வலசை இதழில் வெளிவந்தது. எனது பதிவில் உள்ளது. நேரம் இருந்தால் இதை வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். http://jamalantamil.blogspot.com/2012/01/3_24.html