‘செத்தநாழி’ சிரிக்கும் மின்சாரமும் சீர்காழி தாஜும்

ஆண்டி:- “ஏன்ய்யா; தமிழகம் முழுவதும் மின்வெட்டு கடுமையாகவும் மிகமிக மோசமாகவும் உள்ளதே… “

போண்டி:- “ஜெயலலிதா மக்களிடம் ஓட்டு கேட்டப்போ… ஆட்சியில் அமர்ந்தவுடன் என் முதல்வேலை மின்வெட்டை அறவே நீக்குவேன்னு ஆங்காரமாகச் சொன்னாரு…  ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின்சார சப்ளையையே அடியோடு நீக்கிட்டாரு…! அவர் நீக்குவேன்… நீக்குவேன்னு சொன்னதற்கு இதுதான் அர்த்தமோ!” 

நன்றி : முரசொலி

முழு இருட்டில் தாஜ் எழுதிய முதல் கடிதத்தை பகிர்கிறேன்…

***

To:

செல்வி, அம்மா, புரட்சித் தலைவி, தமிழக முதல்வர், டாக்டர். ஜெயலலிதா அவர்கள்

பொருள்: சரித்திரம் காணா மின்வெட்டு

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு….
அனேக நமஸ்காரங்கள்.

இருண்டு கிடக்கும் தமிழகத்தின்
ஏதோவொரு திக்கிலிருந்து…
அவ்வப்போது கிட்டும்
துளிநேர மின்சாரக் கசிவில்
இக் கடிதத்தை
உங்களது மேலான பார்வைக்கு எழுதுகிறேன்.

நான் யார்?
சொல்லிக் கொள்ளும் அளவிலான நபரல்ல நான்.
என்றாலும் சொல்லலாம்.
தமிழகத்தின் இன்னொரு சாதாரணப் பிரஜை.
அல்லது…
சரித்திரம் காணா மின்வெட்டால்
கடந்த பத்து மாதங்களாக அவதியுறும்
பலகோடி ஜனத்திரளில் ஒருவன்!

நீங்கள் ஆட்சிக்கட்டில் ஏறும்முன்
கருணாநிதி அதில் அமர்ந்திருந்தார்.
யாரும் தன்னை
வீழ்த்திவிட முடியாதென்ற இறுமார்ந்த சிந்தனை!
என்றாலும்..
தன்னை வீழ்த்திவிடக் கூடாதென்ற எண்ணத்தில்
ஓட்டுப் போட்ட / ஓட்டுப் போடப்போகும்
மக்களுக்காக என்னென்னவோ உபகாரச் சேவைகளை செய்தார்.

குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும்
ஒரு டி.வி./ ஒரு ரூபா அரிசி/
மழை பெய்தால்… வெள்ள நிவாரணி/
உயர் நிலைப் பள்ளி
மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்/ பஸ் பாஸ்/
திருமண நங்கைகளுக்கு தாலிக்குத் தங்கம்/
மேலும், அவர்களுக்கு நிதியுதவி என்றெல்லாம்
பெரிய உபகாரியாக செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.
இன்னொரு பக்கம்…
பாலம்/ ரோடென்று ஆங்காங்கே
நாட்டுக்கான செயல்பாட்டு செயல்களும் தாராளம்!

(சொந்தக் குடும்பத்திற்கான அவரது
2ஜி ரகசிய செயல்பாடுகளை மட்டும்
இங்கே நான் குறிக்கவில்லை.
அதில் அவரது தலைமை இன்னும் ருசுப்படவில்லை.
அது வெளிச்சத்திற்கு வரவில்லை என்றாலும் உணரத்தக்கதே.
அது வெளிச்சத்திற்கு வரும் பட்சம்…
அதனை அவரது செயல்பாடுகளிலேயே
அறியதோர் செயல்பாடாக கணக்கில் கொள்ளலாம்!)

இப்படி…
அத்தனை செயல்பாடுகளிலும் அவர் ஜரூர் காட்டினாலும்
நாட்டில் அன்றைக்கு 
அப்பட்டமாக நிலவிய மின் தட்டுப்பாட்டை
கவனம் செய்ய விட்டு விட்டார்!
செய்யும் தர்மம்(அரசு இனாம்!)
தலைகாக்கும் என்கிற நினைப்பு.
ஆனால், அந்தக் கருப்பு
அவரைத் துரத்தி கொண்டே இருந்தது.

இத்தனைக்கும்,
அவரது காலத்து மின்வெட்டென்பது..
உங்களது ஆட்சியில் இன்றைக்கு நிலவும் அளவிலான
இத்தனை உக்கிரம் கொண்டதல்ல.
ஏதோ இரண்டு மணி நேரம்…
மூன்று மணி நேரம் மட்டும்தான்.

நீங்கள் அறிவீர்களோ இல்லையோ
உங்களது ஆட்சியில்
இன்றைக்கு நிலவும் மின்வெட்டு.
புலரும் தினங்களின் அதிகாலையிலேயே ஜரூராகிவிடுகிறது.

காலை ஆறு மணிக்கு மின்வெட்டுத் தொடங்கி
மின்சாரம் மறைந்து போனால்…
ஒன்பது மணிக்குத்தான் திரும்பும்.
அடுத்து,
முன்மத்தியம் பண்ணிரெண்டு மணிக்கு
போய்த் தொலைந்தது என்றால்…
மாலை மூணு மணிக்குத்தான் ஆஜர் கொடுக்கும்.
அப்புறம்…,
மாலை ஆறு மணிக்குப் போய்
இரவு ஏழு மணி பார்க்க ‘செத்தநாழி’ சிரிக்கும்.
தெண்டம் சிரிக்கிறதே என்று பார்த்தால்
ஒன்பது மணியிலிருந்து
இரவு நேரத்து தீவிர விளையாட்டாக
கண்ணாமூச்சி ஆடத்தொடங்கிவிடும்.
ஒன்பதே முக்காலுக்கு அகப்பட்டு,
இரவு பதினோரு மணிக்கு ஓடி ஒளிந்து கொள்ளும்.
நள்ளிரவு பண்ணிரெண்டு பார்க்க
பளிச்சென்று வரும்.
ஒண்ணறைக்குப் காணாமல் பதுங்கி
இரண்டே காலுக்கு சிக்கும்.
பின்னர்…
முக்கால் மணிக்கு ஒருதரம்…
முக்கால் மணிக்கு ஒருதரமென
அரைமணி நேரம் அரைமணி நேரம்
கட்டாயம் இல்லையென்று ஆகிவிடும். 
அதன் உயிரெடுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு
விடியும்வரை தொடரும்.
நரகவேதனையோ நரக வேதனை.
விடிந்தாலோ…
மீண்டும் இதே அட்டவணை கணக்கில்
அதே கண்ணாமூச்சி விளையாட்டு!

[இந்த அட்டவனை
எங்கள் டவுனை மையப்படுத்தியது.
தமிழகத்தின் பிற இடங்களில்
மின் வெட்டின்
அவலக் கணக்கு எனக்குத் தெரியாது.
ஆனால்,
சென்னைவாசிகள் மட்டும்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதும்
அவர்கள் மேன்மக்கள் என்பதும் தெரியும்.]

கருணாநிதி அரசின்
முன்னால் மின்துறை மந்திரி
ஆற்காடு வீராசாமி ஒருதரம் சொன்னார்:
“இந்த அரசு , தேர்தலில் தோல்வி அடையுமென்றால்…
மின் தடையால்தான் தோல்வி அடையும்” என்றார்
அவர் வாயில் ஜீனி போடவேண்டும். 
அப்படியேதான் ஆனது.
 
அம்மா… அவர்களே….
நீங்களே கூட,
சென்ற பொதுத் தேர்தலுக்கான பொதுக்கூட்டங்களில்
இதே காரணத்திற்காகத்தான் கருணாநிதி அரசு
தோற்கும் என்றீர்கள்.
அதுமட்டுமா சொன்னீர்கள்…?

அன்றைக்குத் தமிழகத்தில் நிலவிய
மின்பற்றாக்குறைக்கு
என்னென்னக் காரணமென்று பட்டியலிட்டீர்கள்!

கருணாநிதி அரசு…
எப்படியான தவறுகளையெல்லம் செய்கிறது,
அதனை எப்படியெல்லாம்
நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூட சொன்னீர்கள்!

தவிர,
புதுப்புது வழிகளில் மின்சாரத்தை
எப்படியெப்படியெல்லாம்
உற்பத்தி செய்து பெருக்கி
தமிழத்தின்
மின் பற்றாக்குறையை களையாலாமென
வழிகளையும் சொன்னீர்கள்!

கடல் அலைகளில் இருந்தும்/
குப்பை மேடுகளில் இருந்தும்/
சர்க்கரை ஆலைக் கழிவுகளில் இருந்தும்/
சூரிய ஒளியின் சக்தியில் இருந்தும் என்று….
நாட்டின் மின் உற்பத்திப்பெருக்கிற்கு
விந்தை வழிகள் ஒருபாடு சொன்னீர்கள்!!
அதோடு நீங்கள் நிற்கவில்லை…

“நான் ஆட்சிக்கு வந்தால்…
அடுத்த சில நாட்களிளேயே
உங்களுக்கு முழுமையான
மின்சாரம் கிடைக்கும்” என்று
சத்தியம் செய்யாத குறையாக அறுதியிட்டீர்கள்!
மக்கள் நம்பினார்கள்.
கருணாநிதி குப்புற விழத் தோற்றார்.
ஆனால்…. மின்சாரம்?

நான் ஐம்பதைத் தாண்டியவன்.
எனக்கு கருத்து தெரியவந்த காலம் தொட்டு
இப்படியோர் மின்பற்றாக்குறையை கண்டதில்லை!
இன்றைக்கும் கூட
இந்தியாவின் பிற எந்த மாநிலமும்
இந்த அளவுக்கு
மின் பற்றாக்குறை கொண்டு
பாதிக்கப்படுவதாக அறியவில்லை.

சுதந்திரம் பெற்று…
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும்
மக்கள் இருட்டுக்குள் இப்படி
மின்வெட்டால் வலியத் தள்ளப்படுவதை
இங்கே குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும்!

“இருட்டில் கிட்டிய சுதந்திரம்
இன்னும் விடியவே இல்லை!” என்றான்…
ஒரு புதுக் கவிதைக்காரன்!
அது மிகையேயல்ல!

வரும் ஜூலையில் மின்பற்றாக்குறை
சரி செய்யப்படும் என்கிறீர்கள்…
சரி செய்யுங்கள்.
சரிசெய்தே ஆகவேண்டும்.
ஆனால்…,
(மன்னிக்கணும்.)
கூடாங்குள அணுமின் செயல்பாட்டை
நீங்கள் ஆதரிக்கவே ஆறு மாதங்கள் ஆனது.
சங்கரன் கோவில் இடைத் தேர்தலை
வென்றெடுத்த பிறகே
நீங்கள் கூடாங்குளம் பக்கம்
அனுசரனைப் பார்வையை திரும்பினீர்கள்.

மின்சாரத் தட்டுப்பாட்டால் அவதியுறும்
உங்கள் குடி மக்களைக் காட்டிலும்…
ஓட்டு அரசியல்
உங்களுக்கு பெரிதாகப் போயிற்று!
தொடர்ந்தும்…
எங்கள் நலனில்
அரசியலற்று அக்கறைக் கொள்வீர்கள் என்பதற்கு
என்ன உறுதி இருக்கிறது?

கூடாங்குளம் இயங்க ஆரம்பித்துவிட்டது.
விரைவில், அதன் மின்சாரம் நமக்கு கிடக்கும்.
தவிர,
வரும் ஜூலை மாதத்தில்
தமிகத்தில் வீசத்தொடங்கும் மேலைக் காற்றால்…
காற்றாலை மின் உற்பத்தி அதிகப்படும்.
ஆக,
ஜூலையில்
தமிழக மின்சாரப் பற்றாக்குறை குறையும் என்பதில்
எங்கள் யாருக்கும் சந்தேகம் கிடையாது.

மின்சாரத்தின் ஜூலை வரவில்…
உங்களது ஆட்சியின்/
உங்களது விசால விசயதான யுக்திகளின்
பங்குதான் என்ன?
உங்களது தனி முயற்சிகளிலான
பங்களிப்பும் தான் என்ன?
எத்தனை தரம் யோசித்தாலும்
நாங்கள் சந்தோஷப்பட இதில் எதுவும் கிடையாது.
மாறாய்…
இன்றைய சரித்திரம் காணா மின்வெட்டை
அமுல்படுத்திக் கொண்டிருக்கும்…
மின்சார உபயோகத்திற்கு அதிகத்திற்கு அதிகம்
கட்டண உயர்வை அறிவித்திற்கும்
உங்களது அசாத்திய தைரியத்தைத் தவிர!

சரி…
முந்தைய
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இல்லாத அளவிற்கான
அதிகப்படியானதோர் மின்வெட்டு
திறமை கொண்ட உங்களது ஆட்சிக் காலத்தில் 
எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

உங்களது மின்சாரத்துறை மந்திரியும்
இன்னும் பிற கழக மந்திரிகளும்
இயக்க மேடைப் பிரசங்கிகளும்
ஆதரவு பத்திரிகைக்காரர்களும்
மேற்கண்ட கேள்விக்கு குத்து மதிப்பாய்
பதில் சொல்லத்தான் செய்கிறார்கள்.

1.மின்சாரத் தட்டுப்பாட்டை போக்க
அம்மா தூரநோக்கு செயல் திட்டங்களுடன் இயங்குகிறார்.

[இத்தனைக்கும்,
உங்களது முந்தைய
இரண்டு ஆட்சிக் காலத்தின் போதும்
நீங்கள்…
தமிழகத்தின் மின்சார உற்பத்திக்கென்று
தூரநோக்கு சிந்தைக் கொண்டு
சிறு கல்லையும் தூக்கிப் போட்டதில்லை!
நாளை மலரப்போகும்
கூடாங்குள மின் உற்பத்தி யூனிட்டையும் சேர்த்து!]

2.வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறுவதில்
நிறைய மின் இழப்பு ஏற்படுகிறது.

3.வெளி மாநிலங்களில் இருந்து பெறும் மின்சாரம்
இழப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு
புதிய கருவியை கண்டுபிடித்து தரவேண்டும்.

4.வெளி மாநிலங்களில் வாங்கும் மின்சாரத்திற்கு
மத்திய அரசு குறைவான தொகையைப் பெறவேண்டும்.

5.கருணாநிதி அரசு வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கி
ஊதாரித்தனம் செய்துவிட்டது.

6.மோடியின் குஜராத் அரசை வழிகாட்டியாகக் கொண்டு
தமிழக அரசு செயல்படத் துவங்கி இருக்கிறது.

-இப்படி
இன்னும் பல காரணங்களுமாக சேர்த்து
முன்னுக்குப் பின் முரணான
ஏதேதோ காரணங்களை சொல்கிறார்கள்.

பொதுவில்….
வெளியில் இருந்து மின்சாரம் பெறுவதில்
அரசுக்கு அதிக செலவுபிடிக்கிறது என்றும்
ஜூலையில்…
வர இருக்கும் கூடாங்குள மின்சாரத்தையும்
காற்றாலையால் கிட்டும் மின்சாரத்தையும் கொண்டும்
செலவே இல்லாமல்
எளிதாக சமாளித்துவிடலாம் என்று
நீங்கள் கருதுவதாகக் கொள்ளலாமா?

வெளி மாநிலங்களில்
கருணாநிதி அரசு மின்சாரத்தை
அதிக விலைக் கொடுத்து வாங்கி வழங்கியது போல்
நாமும் ஊதாரித்தனமாக
செலவு செய்யத் தேவையில்லை என்றும்
மக்கள் இன்னும் கொஞ்ச காலம்
இப்படியே…
மின்வெட்டில் இருக்கப்
பார்த்துக் கொண்டால் போதும் என்றும்,
ஜூலை மாதத்திற்குப் பிறகு
மின்சாரத்தை 
வழங்கத் தொடங்கும் நாளில்
மக்கள் தாங்கள் கொண்ட சிரமங்களை
மறந்து போவார்கள் என்றும்
நீங்கள் இன்றைக்கு கருதுவதாக கருதலாமா?
ஆம்,
அப்படித்தான் கருத வேண்டி இருக்கிறது.
பத்திரிகையின் வழியே
அறியவரும் செய்திகளும்
அதையேதான் ஊர்ஜிதப்படுத்துகிறது.

அம்மா….
இப்படியான கொள்கை முடிவை
நீங்கள் நடைமுறைப் படுத்துகின்றீர்கள் என்றாலும்…
இதனை நீங்கள்
உங்களது மதியுக சகாக்களிடம்
கலந்தாலோசிக்காமல்
இப்படி நடைமுறைப் படுத்த
முன்வந்திருக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.
ஆக,
அவர்களது ஆலோசனையைப் படியே….,
இன்றைக்கு நாட்டில்
தலைவிரித்து ஆடும் மின்தட்டுப்பாட்டைக் கண்டும்
வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறுவதை
தவிர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.
மக்களின் இன்னல்களைக் காட்டிலும்
உங்களது மதியுக சகாக்களின் கருத்து
உங்களுக்கு உகந்ததாகத் தெரிகிறது.

இந்த மதியுக சகாக்கள் எவரொருவராவது
இன்றைக்கு நிலவும்
மின் வெட்டின் கடுமையை அனுபவித்திருப்பார்களா?
மின்சாரமற்றப் பொழுதுகளின்
சுட்டெரிக்கும் வெய்யிலின் புழுக்கத்தை உணர்ந்திருப்பார்களா?
மின்சாரமற்ற இரவுகளின்
பரவலான தொல்லைகளை எதிர் கொண்டிருப்பார்களா?
மின்விசிறி சுழலாத தருணங்களில்
கொசுக்கடியினால் தூக்கத்தை பறிகொடுக்கும்
பறிதவிப்பையாவது அவர்கள் அறிந்திருப்பார்களா? 

எந்நேரமும் ஏதோ ஒருவகையில்
மின்சாரத்தைப் பெற்று
குளிர்சாதன வசதிகளோடு
வாழ்பவர்கள் அல்லவா அவர்கள்!
உங்கள் அரசு பொருளாதார ரீதியில்
இழப்பை சந்தித்துவிடக் கூடாது என்று
கற்ற கணக்குகள் அத்தனையும் போட்டு
வாய் வலிக்கமல்…
மிக எளிதாக
புத்திசொல்லிப் போய் இருப்பார்கள்!

இவர்களது சொல்லையா…
நீங்கள்
இத்தனை கடுமையாய் நடைமுறைப் படுத்துகின்றீகள்?
முதல்வர் அவர்களே…
கருணைகொண்ட  உங்களது தாயுள்ளத்தை
நம்பி அல்லவா நாங்கள் வாக்களித்தோம்! 
அந்த தாயுள்ளம் என்னவானது?
பற்றாக்குறை நேரங்களில்
வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்குவது குறித்து
நீங்கள் இப்படி யோசிக்கலாமா?

இன்றைக்கு நாங்கள் எதிர்கொள்ளும்
‘மின்சாரம்’ தட்டுப்பாட்டை மாற்றி…
‘அரிசி’த் தட்டுப்பாடு என்று வையுங்கள்
அன்றைக்கும் இப்படிதான்
கணக்கு பார்த்து
வெளி மாநிலங்களில் இருந்து அரிசியை வாங்காது
மக்களை தவிக்க விடுவீர்களா?
அரைப் பட்டினியாகவும்
கால் பட்டினியாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமென்று?
விட்டுவிடுவீர்களா என்ன?

தமிழகத்தை குஜராத் மாதிரி மாற்ற
உங்களது ‘மதியுக’ சகாக்கள்
பெரிய பெரிய திட்டங்களை வகுத்து தந்திருக்கலாம்…
ஆனால்…
பூகோள ரீதியாகவோ
கலாச்சார ரீதியாகவோ
இரண்டும் வேறு வேறு நிலை கொண்டது.
ஒரே சீரில் என்றைக்குமே
இரண்டும் ஒன்றாகிவிட முடியாது.
அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் புறம்தள்ளி
மோடியை உங்கள் முன் அவர்கள் நிறுத்தலாம்
பிரதமர் பதவி ஆசையையும் கூட காட்டலாம்.
நீங்களும் அதனில் மயங்கலாம்.
ஆனால்…
இந்தத் தமிழகம்
நிச்சயம் அண்ணாவை/ எம்.ஜி.ஆரை
மறப்பதென்பது நடக்காது.

இன்றைக்கு உங்களுக்கு அறிவுரை வழங்கும்
இதே மதியுக சகாக்கள்தான்
சென்ற உங்களது ஆட்சிக் காலத்திலும்
உங்களை வட்டமிட்டார்கள்.
அவர்களது சொல்லைக் கேட்டுத்தான்
மதமாற்ற தடைச்சட்டம்/
சிறு தெய்வங்களுக்கு பலியிடத் தடை/
ரேஷன் கார்டில் பொருள் வழங்குவதில் கெடுபிடி/
வீட்டுக்கு வீடு, மழை நீர் சேகரிக்க நிர்பந்தம் என
மக்கள் மிரளும்படியான சில பல
சட்டங்களை அமுல்படுத்தினீர்கள்!
என்னவானது…???
தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில்
மக்கள் உங்களை கடுமையாகப் புறக்கனித்தார்கள்.
இன்றைக்கு மீண்டும்
அவர்களது ஆலோசனைகளையா நீங்கள் கேட்பது?
‘பிரதமர் ஆசை’ காட்டுகிறார்கள் என்பதற்காக
உங்களது இருப்பை நீங்கள் மறந்துவிடுவது
இரண்டுமே சரியாக வரும் என்று தோன்றவில்லை.

இனி…
நீங்கள்தான் யோசிக்கணும்.
கடுமையான மின் தட்டுப்பாட்டில்
அவதியுறும் எங்களை இனியேனும்
கருணைக் கண் கொண்டு பாருங்கள்.

புழுக்கத்தில் நாங்கள் கொள்ளும் சங்கடங்களில் இருந்து
எங்களை திசைத் திருப்பி ஆசுவாசப்படுத்த…
‘சசிகலா நீக்கம்!!’ ‘சசிகலா இனைப்பு!!’
‘சசிகலா குடும்ப பெரிசுகள் தொடர்ந்து கைது!!!’
‘சசிகலாவுக்கு சாதகம் காட்டும் கட்சித் தலைவர்கள்/
அதிகாரிகள் என்று எல்லோரும் பதவி நீக்கம்!!!’ என்றெல்லாம்
நீங்கள் கைக் கொண்டுவரும்
அதீத நடவடிக்கைகள் எல்லாம் போதும்.
அதெல்லாம் எங்களது மனச்சங்கடத்திற்கான மருந்தல்ல.
எங்களை கருணை கொண்டு பாருங்கள்.
கருணைக் கொண்ட
ஓர் நல்ல தீர்வை விரைவில் தாருங்கள்.
நன்றி.
வணக்கம்.

***

நன்றி :

தாஜ்  | E-Mail  satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s