வாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா? – எஸ்.எல்.எம். ஹனீபாவின் ’கடுகு’

அன்புள்ள ஆபிதீன்,  நல்ல கதை எழுத வேண்டுமென்றால், கொஞ்சமாவது பைத்தியம் பிடிக்க வேண்டும் போல் தெரிகிறது. நமது குருநாதர் வைக்கமுக்கும் அதுதானே நடந்தது. லௌகீக வாழ்வின் தேடலுக்கான முனைப்பில் ஹனீபா காக்கா மற்ற எல்லாவற்றையும் மறந்தார். வாசிப்பை மட்டும் மறக்கவில்லை. கடுகு கதையில் வருகின்ற கண்ணுக்குட்டி கண்ணனையும் கதை சொன்ன எனது மகள் மாஜிதாவையும் முப்பது வருடங்களுக்கு முதல் ஹனீபா காக்காவையும் இந்தப் புகைப்படத்தில் காணலாம் – எஸ்.எல்.எம்

***

கடுகு

எஸ்.எல்.எம். ஹனீபா

***

வாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா?

இஞ்செ இரிக்கேலாது வாப்பா, பொழுது விடிஞ்சா ஒரே சண்டெதான். நானாவும் ராத்தாவும் என்னப் போட்டுப் படுத்துற பாடு.

அதுக்குப் புறவு ஸ்கூல் இரிக்கிதே. அங்கேயும் ஒரே கூத்துத்தான்.

எல்லாப் புள்ளெகளயும் ஒண்டாப் போட்டு மவ்லவி சேர் கதவெல்லாம் அடெச்சிப் போடுவாரு. எங்கட பள்ளிக்கு அவரு மட்டுந்தான் சேரு வாப்பா.

சாந்தி டீச்சரும் மாறிப் பெய்த்தா. அவெடெ வீட்டெயும் பத்த வெச்சிப் போட்டானுகளாம். அவெ இரிக்கி மட்டும் ஒரே பாட்டும் கதெயுந்தான்.

“வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்குது பார் பறக்குது பார்”. அவ வண்ணாத்திப் பூச்சி போல பறப்பா.

மவுலவி சேர் வருவாரு.

பிள்ளைகளெல்லாம் எழும்புங்க – கைய உசத்துங்கெ. எல்லாரும் இரிங்கெ. நான் வாரமட்டும் இதப் பாத்து எழுதுங்கெ.

சொல்லிப் போட்டு ஆள் மாறிடுவாரு.

இனி எங்கட கூத்துத்தான்.

வெளிநாட்டுக்கு அரபுக் கடிதம் எழுத எங்கட பள்ளிக்கு ஆக்களெல்லாம் வருவாங்கெ.

ஒரு கடிதம் எழுதினா இருவது ரூபா.

அப்படி யாரும் வந்தா அவரு பர்ர பாடு.

பிள்ளெகளெ கடிச்சித் தின்றுவாரு.

இப்பெ நான் மொனிட்டர் இல்ல. அவள் மகாரிதான் மொனிட்டராம்.

சேரில்லாட்டி அவ பெரிய வாத்தியம்மா என்ட நெனப்புத்தான்.

இதுக்கு இவள் என்ன விடக் கறுப்பி.

சாந்தி டீச்சர்தான் என்ன மொனிட்டராக்கினவ. நாந்தான வகுப்புலெயும் முதலாவது.

மவுலவி சேர் வந்து மாத்திப் போட்டாரு. மகாரிட மூத்தப்பா முதலாம் மரைக்காரப் பத்தி நீங்க மேடையில பேசினயாம். அதுக்கு என்ன மாத்திப் போட்டாங்க.

என்ன வேல பாத்தீங்களா?

இதுக்கு இவரு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வாரயுமில்லெ.

இவங்கெ என்ன படிச்சா தாராங்க? நாங்கள்ளாம் பாத்திருப்பெம். சேர் மாரெல்லாம் கென்டீன்ல பெட்டிசு வாங்கித் தின்பாங்க.

பாறுக் மாமா படிச்சித் தரக்கொள ஆளுக்கொரு ஜொக்கு விஸ்கொத்துதான் குடுப்பாரு.

இவரெண்டா ரினோஸாக்கு ரெண்டு ஜொக்கும் அலியார் சேர்ர மகளுக்கு ரெண்டு ஜொக்கும் குடுப்பாரு.

இடெவேளெக்கு விஸ்கத்த வாங்கிட்டு நானாட பக்கம் போகத்தேவல்ல. பறிச்சித் தின்றுவான். சின்னப் புள்ளெகளுக்குக் குடுக்கிறத பெரியாக்கள் தின்னலாமா?

எங்கட சேர் இரிக்காரே, ஒவ்வொரு நாளும் விஸ்கொத்தோடான் ஊட்ட போவாரு.

என்னெ வேல வாப்பா இது.

பகல் உம்மா முட்ட பொரிச்சித்தான் சோறு தந்தா.

ஹருத்தாளாம்

இண்டைக்கு சந்தையிலெ ஒண்டுமில்ல. .

சோறு பொறுக்கத் தொடங்கிட்டு. என்ட பீங்கான்லெ இரிந்த முட்டெய நானா களவெடுத்துப் போட்டான்.

சின்னப் பிள்ளெகள்றத்த பெரியாக்கள் களவெடுக்கலாமா?

இன்னா போகுது நம்மட ராணிப் பசு. காலெல உம்மா பால் கறந்தா, கண்ணன் உதெச்சிப் போட்டான்.

வரவர ஆளுக்கு பெரிய கெப்பறு.

வாப்பா, நம்மட கழுத்தறுப்பான் கோழி குட்டி பொரிச்சிட்டு தெரியுமா?

கறுப்பு – புள்ளி – சிவப்பு வெள்ளெயெல்லாம்… இஞ்செப் பாருங்க. நேத்து என்டெ கையக் கொத்திப் போட்டுது.

இந்த ரோட்டால போகாதீங்க. இந்தியா கொமாண்டஸ் வருவான்.

நானும் உம்மாவும் இந்த ரோட்டால போனம். இந்த ஊட்டச் சுத்தி ஆரோ சில்காம், வெளிநாட்டுப் பொம்புளெயாம், ஒரே பொலிசிதான், வாப்பா.

இப்ப, நம்மெட ஊரில ஆர்ர வாயப் பாத்தாலும் வெளிநாட்டுக் காரியெப் பத்தின கதெதான்.

சீ அவள் பெரிய மோசமாம். ஆனா நல்ல அழகியாம் வாப்பா.

கொஞ்சம் சைக்கிள நிப்பாட்டுங்க. செருப்பு உழுந்துட்டு

செரி போவம்

நேத்து யூசுப் நானா கெம்பஸ்லயிருந்து வந்தாரு.

அங்க ரோட்டெல்லாம் புலிதானாம்.

துவக்கெயெல்லாம் வெச்சிட்டடு நிப்பானுகளாம்.

புலியெண்டா எப்படி வாப்பா இரிப்பானுகள்?

நம்மட ஊட்டெ வாற சபா மாமாவையும் கொமாண்டஸ் கொண்டு பெய்த்தானாம்.

அவருக்குச் செரியான அடிதானாம்.

நரேஷ் நானாட மாமி சொன்னா.

காலும் உடெஞ்சி பெய்த்தாம்.

அந்தத் தாடி வெச்ச கண்ணாடி போட்ட மாமா ஏன் வாப்பா நம்மட ஊட்டெ வாறல்ல?

நேத்து ஒரே வெடிலும் முழக்கமுந்தான்.

பெரு நாளைல சுடுவெம அப்பிடித்தான் இரிந்திச்சி

நம்மட ஊட்டுக்கு மேலால ஹெலி போனிச்சி

நேத்து ராவெல்லாம் நித்திரையே இல்ல.

நானும் ராத்தாவும் மேசைக்குள்ள பூந்துட்டம்.

நானா மட்டும் வெளியே போய் ஒழிச்சிப் பாத்துக்கிட்டு இருந்தான்.

குண்டுகள் தலைல விழுந்தா என்ன நடக்கும்?

ஏன்தான் இவனுகள் சண்டெ புடிக்கானுகளோ?

இண்டெக்கி ஓடாவியார்ர ஆயிஷா வந்தாள். ஸ்கூல் கலகலத்துப் போச்சி அவள்ற புதினம்.

டிஸ்கோ மின்னி, வெளிநாட்டு மெக்சி, குதிகால் சப்பாத்து, அவளுக்கிட்டெ குளோன் எப்பிடி மணத்திச்சி.

நம்மட உம்மாவெயும் வெளிநாட்டுக்கு அனுப்புவோமா?

நம்மளுக்கு ரேடியோவுமில்ல, ரிவியுமில்ல.

அவள்ற உம்மா முன்னெயெல்லாம் கறுப்புத்தானாம். இப்பெ வெளிநாட்டில இருந்து வெள்ளக்காரியப் போல வந்திருக்காவாம்.

சதீக்கிட தங்கச்சியப் போல வெள்ளெயாம். பெரும அடிச்சிக்கிட்டா.

ஆயிஷாட உம்மா ஊட்டெலயும் மெக்சிதான் போறயாம். தாவணியெல்லாம் போட மாட்டாவாம்.

வாப்பா உங்களுக்குத் தெரியுமா?

நேத்து ராவு உசன் போடியார்ர ஊட்ட கள்ளனுகள் வந்து, அவர்ர பொஞ்சாதிர காப்பு, கொடி, காசு எல்லாத்தெயும் கொண்டு பெய்த்தானுகளாம். நம்மட வண்டிக்காரன்ட மயில மாட்டெயும் கொண்டு போய் அறுத்துப் போட்டானுகள்.

அந்த மாடு குத்தெயும் மாட்டாது. புள்ளெ போல வாப்பா.

உம்மா ராவெக்கெல்லாம் படுக்கிறயுமில்ல. நம்மட பசுவெயும் கொண்டு அறுத்துப் போட்டானுகளெண்டால்,

இஞ்ச இப்ப கள்ளனுகளால செரியான கஷ்டம்.

எனக்கு இந்த மாசச் சம்பளத்தில கட்டாயம் குதிகால் சப்பாத்து வாங்கித் தரணும்.

போன மாசம் வாங்கித் தரணும் எண்டீங்க. வாங்கித் தரல்ல.

ராவெக்கி என்ன கறி வாங்குவம், வாப்பா. ஒட்டி மீனெண்டா எனக்கு விருப்பம்.

அரெச்சி ஆக்கிப் பொரிச்சா நல்லாரிக்கும்.

ராத்தாக்கு மீன் பொரிக்கத் தெரியா. தீய வெச்சிப் போடுவா.

எனக்கு மேலெல்லாம் ஒரே கடியும் சொரியுந்தான். வேர்க்குரு பவுடரும் முடிஞ்சி பெய்த்து.

மடவளெல நோனா ராத்தாட்ட இப்படியெல்லாம் வேர்க்காது. அங்கெயெல்லாம் எந்நேரமும் கூதல்தான்.

நேத்து ராவும் நம்மட ரோட்டால எவ்வளவு ஆமிக்காரன் போனான்.

புதிசா வந்த ஆமிக்காரன் ஒரு பொம்பளெட சொக்கெயும் கடிச்சிப் போட்டான்.

ஒவ்வொரு நாளும் நோன்பு புடிக்க எழுப்பெ வருவாரே பாவா மாமா அவரெயும் ஆமிக்காரன் சுட்டுப்போட்டான். பாவம் வாப்பா.

உம்மா கேத்தப் போய் பூட்டிப் போட்டா.

நான் உங்கட மேசெக்கு மேல நிண்டு ஜன்னலுக்குள்ளால எட்டிப் பார்த்தேன். ஒரே புழுதிதான்.

பெரிய பெரிய சப்பாத்தெயும் போட்டுக்கிட்டு, தோளில துவக்கெயும் மாட்டிக் கிட்டு போரானுகள்.

மெய்தானா வாப்பா சின்னப் புள்ளெகளயும் சுடுவானுகளாம்.

என்னெ செய்ய எனக்கிட்ட துவக்கிருந்தா நானும்..?

” ? “

***

நன்றி :  ஹனீபாக்கா  | E-Mail :  slmhanifa22@gmail.com

1 பின்னூட்டம்

  1. 27/03/2012 இல் 13:23

    கடுகு பொரிந்து தள்ளிவிட்டது!

    கண்ணில் காணும் அத்தனை விசயங்களையும் ‘பொடுசு’ தனது வாயால் சாதுர்யமாக அடுக்கும்போது – வயதை மறந்து – எந்த நேரத்திலும் அதிகம் பிரசங்கிக்கவில்லை.

    ஹனிபாக்காவின் உத்தி அழகே அழகுதான். அங்கங்கே ‘சுருக் சுருக்’ வைத்து, போரால் குழந்தைகள் மனம் சிதிலமடைவதையும் பதிந்திருக்கிறார். GREAT.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s