மெய்ஞானத் தம்பதிகள் : இறசூல்பீவி – பரிமளத்தார்

அஞ்ஞானத் தம்பதிகளான அஸ்மா – ஆபிதீன் இடையே தினமும் நடக்கும் கேள்வி-பதிலை நினைத்தவுடன் இந்த மெய்ஞானத் தம்பதிகள் பற்றி பதிவிடத் தோன்றியது. மர்ஹூம் அப்துற்-றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன். முஸ்லிம்கள் மட்டும் வாசிக்க முயற்சிக்கவும். நன்றி.
***

’என்னாளும் ஒருகுடையில் அவனிஅர சாள்கின்ற
இறையோன் அமைத்த சடலம்
இதனுடைய நுட்பத்தை இலங்கைமா நகர்தனில்
எடுத்து ரைத்த குருவின்
தன்னிறை யோனருள் பெற பரிமளத்தாரினுடை
சங்கைக் கிசைந்த மயிலே!
தருணம்இது ஏழைதனை காத்து ரட்சித்திடத்
தயைபுரி ந்தாள் அம்மணி!!
இந்நாளில் எங்கள்துயர் தீர்க்கவோர் வடிவாகி
இங்கு(உ) தயமான பொருளே!!!
இருபானின் அறிவாகி இறைதாத்துல் கிபுரியா
எல்கையில் அமர்ந்த தாயே!
பன்னாளும் போற்றும் எளியோர்க் குதவிசெயஉன்
பாத பங்கயம் தந்தருள்
பரமவெளி எல்லையின் பதிகடந்(து) ஆதியிடம்
பணித்தன்பு கொண்ட தாயே!!’

என்று ஒருவர் தம் குருபத்தினியைப் புகழ்ந்து பாடி வேண்டி நிற்கிறார். அவரின் குரு தென்காசியின் வாழ்ந்து சின்னமீறான் என வழங்கப்பெற்ற முகம்மது மீறான் சாஹிப் ஈன்ற முகம்மது காசிம் என்ற பரிமளத்தார். பரிமளத்தாரின் மனைவி இறசூல்பீவி. அவரின் தந்தையார் நெய்னார் முகம்மது லெப்பை. பரிமளத்தாரும் இறசூல்பீவியும் இல்லறத்தை  நல்லறமாகச் செய்து கொண்டு ஞானப்பாட்டையில் கைக்கோத்து நடந்து சென்றனர். அப்பொழுது அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த ஞானப்பாக்கள் கி.பி. 1910-ஆம் ஆண்டில் அவர்களின் அருந்தவப் புதல்வர் முகம்மது அப்பா சாஹிபால் நூலுருவில் அச்சிட்டு வெளியிடப்பட்டன. பரிமளத்தார் பாடல் என்ற அந்த நூலின் பிற்பகுதியில் இறசூல்பீவியின் ‘ஞானமிர்த சாகரம்’ என்ற நூலும் இடம் பெற்றுள்ளது.

அவர்கள் இருவரும் தென்காசியில் பிறந்தபோதினும் திருவனந்தபுரம், புனலூர், கொழும்பு ஆகிய ஊர்களுக்குச் சென்று ஞான வழியை மக்களுக்குக் காட்டினர். எவருக்கு ஷைகு (ஞான வழிகாட்டி) இல்லையோ அவருக்கு ஷைத்தான் (சாத்தான்)தான் ஷைகு என்பது பெரியோர் வாக்காதலின் பலர் அவர்களிடம் தீட்சை பெற்று நெறி வாழ்க்கை வாழலாயினர்.

கணவன் மனைவி ஆகிய அந்த இரு ஞானிகளும் இஸ்லாமிய ஷரீஅத்தைப் பேணி நடந்த உண்மை ஞானிகளென்பது அவர்களின் பாடல்களினால் நன்கு தெரிய வருகிறது.  பரிமளத்தார் தம்முடைய பாடல்களில் ‘நல்ல ஷரீஅத்தை நாடார் நரகாள்வார்’ என்றும் ‘ஐந்து வக்தும் தொழாதவன் அறிவு கெட்டோன்’ என்றும் கூறுகின்றார். இறசூல்பீவி தம்முடைய நூலில் தம் கணவரை நோக்கி ஐயத்தெளிவு பெறுவதற்காக கேள்வி கேட்பது  போன்றும் அதற்கு அவர் பதில் கூறுவது போன்றும் பாடியுள்ளதில் இஸ்லாமிய ஷரீஅத்தின் மீது அவர்களுக்கிருந்த பிடிப்பு நன்கு தெரிய வருகின்றது.

இறசூல்பீவி தம் கணவர் பரிமளத்தாரை நோக்கி, தொழுகையின் அவசியத்தைப்பற்றி வினவுவது போன்றும் அதற்கு கணவர் பதிலளிப்பது போன்றும் பாடியுள்ள கவிதை அருமையாக உள்ளது.

‘தீனறிந்து தெளிவுடைய தொழுகை தொழாதவர்க்கு
தீயினுடை கடிவாளம் பூட்டப்படும் நரகில்
வானவரும் வந்துநின்று வாள்சுழற்றிக் கேட்கும்
போது ஜவாப் என்ன சொல்வாய் பெண்ணே றசூல்பீவி!’

இவ்வாறு துணைவியை மடக்கிக் கேள்வி கேட்கும் பரிமளத்தார் நமக்கு மேலும் தொழுகையின் அகமியத்தைப் பற்றி எடுத்துரைப்பதை இறசூல் பீவியே பின்வரும் பாடலில் கூறுகிறார்.

‘தொழுகையுடன் நோன்பின்ருசி உள்ளறிந்து தொழுவோர்
தோற்று மிராஃஜ் அறிவார்; தோஷமது நீங்கும்
அழுகையுள்ள தொழுகைதொழு துள்நிலையைத் தொழுதோர்க்(கு)
ஆகிரிலும் பதவிகொடுத் தளிப்பதுவும் நீயே!’

இதன்பின் இறசூல்பீவி, தம் கணவரை நோக்கி, ‘உளுவின் ஃபர்ளு என்ன?’ என்று வினவ உடனே அவர்,

‘உளுவின் ஃபர்ளு நாலதுவின் விவரம் முகம்கழுவல்
உற்றமுழங்கை வரையும் இரண்டுகரம் கழுவல்
மலுகரிதாம் சிரசதற்கு மஸஹூ செய்தலுடனே
மணிஇரண்டு கால்கழுவல் மனவிறசூல் பீவி’

என்று பதில் உரைத்ததாகவும் முழுக்கின் ஃபர்ளு பற்றி இறசூல்பீவி வினவியபொழுது,

‘முழுக்கில் ஃபர்ளு மூன்றாவதற்கு விவரம்வாய் கொப்பளித்தல்
மூக்கதற்கு நீர்செலுத்தல் முண்டம் நனைந்தோடல்
அழுக்கறுத்த சுழினைவட்டத் தழகு ‘மகாம்’ தன்னில்
அல்லும்பகல் சுஜூது செய்யென் னடியே றாசூல்பீவி’

என்று விடை பகர்ந்ததாகவும் இறசூல்பீவி பாடுகின்றார்.

அவர்கள் இருவரும் இவ்வுலகில் எவ்வாறு இணைபிரியாது இன்ப வாழ்வு வாழ்ந்து வந்தனரோ அதுபோன்று மறுமையிலும் இருக்கவேண்டுமென்று தம் கணவரிடம் இறசூல்பீவி கூறுவது அவர்களின் அன்பின் ஆழத்தை நமக்கு நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

‘மயில் குயில்போல் கூடினமே மாநிலத்தில் மனமே
மறைந்தாலும் இதுபோலெ மண்ணறையில் இருக்க
துயிலுடைந்து எழுந்ததுபோல் துணைமஹூலில் இருக்க
துலக்கும் ரஹ்மான் ஆணை துய்யோன் பரிமளமே’

என்று பாடும் இறசூல்பீவி உலகத்துப் பெண்களை நோக்கிக் கூறும் அறிவுரை ஒவ்வொரு பெண்ணும் பின்பற்ற வேண்டியதாகும். இதோ அந்த அறிவுரை :

‘பாரதனில் பர்த்தாவுடன் பதிவிரதை யானால்
பாவையரே! பாலமது கடந்திருப்பீர் நாளை’
கூறுலீன்கள் தோழியாகக் குலாவிடுவார் அங்கே;
கோதைகளே! குணக்கேடுகொள் ளாதீர்கள்’ (ஈ(து) அறிவே’

இவ்வாறு பாடிய இறசூல்பீவி இறைவன்மீது தமக்குள்ள காதலைப் பற்பல கவிதைகளில் பாடிப் புலம்புகின்றார்.

’மறைவாக நீஇருந்து மல்லாடி திரியாமல்
இறையோனே என்முகம் எதிர்ப்பாய் றகுமானே!
இறையோனே உன்னை நான் இருகண்ணால் காணுமுன்னே
கறையான் பிடித்திடுமோ கண்ணே றகுமானே!
காலம் வருமுன்உன் காலத்தழுவி விடில்
வாலை ஜவாபு சொல்ல வாய்க்கும் றகுமானே!’

என்று ’றகுமான் கண்ணி’யில் பாடும் அவர்,

’கடுகளவாகிலும் உன் கசனா திறந்துவிட்டால்
விடியவிடியக் கொள்ளை விளைப்பேன் பரானந்தமே!
அழுதேன் அழுதேன்நான் ஆலமெல்லாம் தானறிய
கழுதை கதறிப் பலன் காணேன் பரானந்தமே!
கரைந்து கண்ணீர் சிந்துவதால் கல்லும் அசைந்திடுமே
உறைந்த மெழுகோ நீ! உணர்வே பரானந்தமே!!’

என்று ‘பரானந்தக் கண்ணி’யில் பாடி நைந்துருகிறார். அத்துடன் அவர் நில்லாது,

‘மூலா தாரத்தில் முடிதரித்த மன்னவரை
வாலை இவள்காண வயிறுருகி வேகுதையோ
சாகுமுன் செத்துத் தான்தரணி மாய்ப்பதற்கு
தாகியே வெண்தீ தமர் நாசி வேகுதையோ
நானெனவும் எண்ணி நடந்தநாள் தான்போக்கி
தானெனவும் நீயாய்த் ததும்பிடவும் வேகுதையோ’

என்று பாடுவதும் நம் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. இக்கண்ணிகளில் அமைந்துள்ள ஆழிய ஞானக்க்கருத்துக்கள் இறசூல்பீவி தன்னையும் தன் நாயனையும் அறிந்த மெய்ஞானி என்பதை நன்கு விளக்குகின்றன.

**

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் அண்ட் புக் செல்லர்ஸ்

**

தொடர்புடைய பதிவு :

மீள் வாசிப்பில் சூபிசம் – ஹெச்.ஜி.ரசூல்

4 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  18/03/2012 இல் 16:16

  //மர்ஹூம் அப்துற்-றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன்.//

  ஆபிதீன்….
  நான் பலமுறை உங்களிடம் தெரிவித்த
  இஸ்லாமியப் புலவர்களைப் பற்றிய
  அந்த கனமானப் புத்தகம்
  இதுவாகத்தான் இருக்கும்.
  நீங்கள்
  உங்களது இல்லத்து அம்மாவைப் பற்றி
  குறிப்பிட முனைந்த துரிதத்தில்
  பல காலமாய்…
  கிடைக்கவில்லையேயென
  நான் புலம்பிக் கொண்டிருந்த
  சங்கதியை
  மறந்தே போய்விட்டீர்கள்.
  என்றாலும்,
  நான் குறிப்பிடுவது அந்தப் புத்தகம்தானா என்று
  நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  சென்னை-யுனிவர்சல் பதிப்பகத்திற்கு
  போக வேண்டாமா என்ன?
  நன்றி.
  -தாஜ்

  • abedheen said,

   19/03/2012 இல் 09:58

   அன்பின் தாஜ், ‘அதாண்ணே இது’ என்று சொல்லமாட்டேன். அப்ப, இதுதான் அதுவோ? இருக்கலாம். எதற்கும் பதிப்பகத்தாரைக் கேட்டுப்பார்க்கவும். இந்த வலைப்பக்கத்தில் – ஆசியா உம்மாள் மாதிரி – பல பதிவுகள் இதே நூலிலிருந்துதான் எடுக்கப்பட்டன. (இல்லத்து அம்மாவிடம் கேட்டே இதை எழுதினேன்). அதெல்லாம் இருக்கட்டும்; முஸ்லிம்களுக்கு மட்டும் என்று முகப்பில் சொல்லியிருந்தேனே. ஏன்யா இத வாசிச்சே?

   • தாஜ் said,

    19/03/2012 இல் 22:48

    அது வேற இது வேற இல்ல.
    அது அதுதான் இது இதுதான்.
    தெளிவா புரிஞ்சிக்கிற புண்ணியவான்களுக்கு
    அது இதுவெல்லாம்…
    அப்படி அப்படியே
    தெள்ளத் தெளிவா புரியும்.

    *

    அது போகட்டும்…
    இஸ்லாமியர்களுக்காக
    காஷ்மீர் அவலத்தை முன்வைத்து
    குடம் குடமாக
    நான் அழுததை
    நாளைக்கு
    அனுப்ப இருக்கிறேனே
    அதற்கு என்ன
    சொல்லப் போகிறிங்க ஆபிதீன்?
    -தாஜ்

 2. 18/03/2012 இல் 20:26

  இப்ப பாருங்க
  தலைவர் பதிலடியை…

  அது வேற…
  இது வேற….ன்னு
  சொல்லப் போறார்.

  நம்ம அவர்ட்ட மோதி
  என்னைக்கு ஜெயிச்சுருக்கோம்? 😦


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s