ஆஸ்தானம் கலகலவென்று இருக்கிறது

இது கடைசி பதிவு.  ‘வேறொரு பெயரில் / முகவரியில் தொடரலாம் என்றால் வேண்டாம் என்று மனசு சொல்கிறது. உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்று நண்பர் தாஜிடம் கேட்டால், ‘ கரெக்ட். மீறிட்டா நாளைக்கு அது தொல்லை தாங்காது. ஆனா, இப்பத்தான்  நம்ம ஃபிளைட் டேக்ஆஃப் ஆகியிருக்கிறது. பறக்கவிட்டுப் பார்ப்பதென்பதுதான் இத்தனை நாள் கொண்ட சிரமத்திற்கு சரியான அர்த்தமாக இருக்க முடியும். என்றாலும்… the ball is in your court’ என்கிறார் . யோசிப்போம்… இப்போது  பெர் லாகர்குவிஸ்ட் ( Pär Lagerkvist ) எழுதிய ‘குள்ளன்’ நாவலிலிருந்து (தமிழில் : தி. ஜானகிராமன்) கொஞ்சம் பதிவிடுகிறேன். க.நா.சு அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த புகழ்பெற்ற ‘அன்பு வழி’ (barabbas) பற்றி தாஜ் விரைவில் எழுதுவார், அவரது வலைப்பக்கத்தில்.  ‘அன்பு வழி’ மாதிரி ஒரு நாவல் என்னால் எழுத இயலுமா? என்று நம் வண்ணநிலவன் ஏங்கியதையும் சேர்த்து அவர் எழுதவேண்டும். ஆபிதீன் பக்கங்களுக்கு பங்களித்த எல்லாருக்கும் நன்றி. – ஆபிதீன்

***

ஆஸ்தானம் கலகலவென்று இருக்கிறது. வினோதப் பிரகிருதிகளெல்லாம் அங்கு நிறைந்திருக்கிறார்கள். தலையைக் கையில் தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் பொருளைக் கண்டுபிடிக்க முயலும் அறிஞர்கள் வயதாகி பஞ்சடைந்த தங்கள் கண்களால் விண்மீன்களின் போக்கைத் தொடர்ந்து பார்க்க முடியும் என்றும் மனிதனுடைய விதியே இந்த நட்சத்திரங்களில் பிரதிபலிக்கப்படுகிறது என்றும் நம்புகிற வானியல் பண்டிதர்கள் ஒருபுறம். தூக்குமேடைக்கு லாயக்கானவர்கள் ஒருபுறம். ஆஸ்தானத்திலுள்ள பெண்மணிகளுடன் தாங்கள் செய்த போதை நிறைந்த செய்யுட்களை வாசித்துக் காட்டும் சாகஸிகள் ஒருபுறம். இவர்கள் மறுநாள் காலையில் சாக்கடையில் ரத்தம் கக்கியவாறு குப்புற விழுந்து கிடப்பார்கள். (இப்படிக் கிடக்கும்பொழுதுதான் ஒருவன் முதுகில் குத்திக் கொல்லப்பட்டான். கவலியர் முரசெல்லிக்கு எதிராக ஒரு நையா|ண்டிப் பாட்டு எழுதியதற்காக இன்னொருவன் நன்றாகப் புடைக்கப்பட்டான்.) வரம்பில்லாமல் வாழும் கலைஞர்கள் ஒருபுறம். பக்தி விக்ரகங்களை மாதா கோயிலுக்குச் செய்து கொடுக்கும் வேலை இவர்களுக்கு. புதிய மாதா கோயிலின் மணிமண்டபத்தைக் கட்டுவதற்காக வந்த சிற்பிகளும் பிளான் எழுதுபவர்களும் ஒருபக்கம். இன்னும் எத்தனையோ பேர் கனவு காண்பவர்களிலிருந்து வைத்தியர்கள் வரையில் எத்தனையோ பேர். இந்த நாடோடிகள் வந்து போய்க்கொண்டே இருப்பார்கள். சிலர் என்னவோ இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி நீண்டகாலம் தங்குகிறார்கள். எல்லோருமே இளவரசரின் விருந்தோம்பும் பண்பை துஷ்பிரயோகம் செய்கிறவர்கள்.

இவர் (இளவரசர்) உபயோகமில்லாத எந்த ஆட்களை எதற்காக வைத்துச் சோறு போடுகிறார் என்றே எனக்குப் புரியவில்லை. இதைவிடப் புரியாதது அவர்களோடு உட்கார்ந்து அவர்களுடைய பிதற்றல்களையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிறாரே அதுதான். யாராவது கவிகள் அதுவும் எப்பொழுதாவது தாங்கள் எழுதிய பாட்டுகளைச் சொல்லும் பொழுது ஒருவர் கேட்கலாம். இந்தக் கவிகளெல்லாம் ஆஸ்தானத்தில் வளர்கின்ற கோமாளிகளைப் போல மனித ஆத்மாவின் தூய்மையைப் பற்றியும்  பெரிய சம்பவங்களயும் வீரச் செயல்களையும் போற்றிப் பாடுவார்கள். இதைப் பற்றி எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. அதுவும் இந்தப் பாட்டுகள் அவரை முகஸ்துதி செய்தால் வரவேற்க வேண்டிய விஷயம்தான். மனிதர்களுக்கு முகஸ்துதி தேவை. இல்லாவிட்டால் பிறந்த நோக்கமே நிறைவேறவில்லை என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். தங்கள் கண்ணில் தாங்களே மட்டமாகி விட்டதாக அவர்களுக்குத் தோன்றும். பழைய காலத்திலும் இந்தக் காலத்திலும் அழகான உன்னதமான எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. அப்படி அவைகள் இருக்கக் காரணம் அவற்றிற்கு அளிக்கப்பட்ட புகழ்ச்சிதான். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிகள் காதலின் புகழைப் பாடுகிறார்கள். இது மிகவும் அவசியம். இந்த உலகத்தில் இன்னொன்றாக பரிணமிக்கக்க் கூடிய தேவை காதல் மாதிரி வேறு எதற்குமே இல்லை. பெண்மணிகள் ஏக்கம் நிறைந்து மார்பு விம்ம பெருமூச்செறிகிறார்கள். ஆண்கள் கனவு காண்பது போல சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களின் இந்த அவஸ்தையின் காரணம் தெரியும். தங்கள் அழகான கவிதையே காரணம் என்று அவர்களுக்கு ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. மக்களுக்கு மத சம்பந்தமான படங்கள் வரைய கலைஞர்கள் இருக்க வேண்டுமென்பதும் எனக்குப் புரிகிறது. ஏனெனின் தங்களைப் போல வறுமையும் அழுக்குமில்லாத ஒன்றைத்தானே மக்கள் தொழ வே|ண்டும்? உயிரைத் தியாகச் செய்தவர்களின் உருவங்களை. அழகாக மண்வாடையே இல்லாமல் இந்தக் கலைஞர்கள் வரைகிறார்கள். உயிரைத் தியாகம் செய்த இந்த மகான்களுக்கு உயர்ந்த ஆடைகளும், தலையைச் சுற்றி ஒரு தங்க ஜோதியும் வரைகிறார்கள். தாங்கள் செத்துப்போன பிறகு மக்கள் இப்படி தங்களையும் கௌரவிப்பார்கள் என்ற எண்ணம் இந்தக் கலைஞர்களுக்கு. இந்தப் படங்கள் பாமர மக்களுக்கு என்ன காட்டுகின்றன? அவர்களுடைய பிரபு சிலுவையில் அறையப்பட்டார். ‘இந்த பூமியில் ஏதோ அவர் நல்லது செய்ய நினைத்த பொழுதுதான் இது நிகழ்ந்தது. ஆக இந்த மண்ணில் எந்தவித நம்பிக்கைக்கும் இடமில்லை’ என்று மக்களுக்கு உரைக்கின்றன இந்தப் படங்கள். இத்தகைய எளிய தொழிலாளிகள் ஒரு இளவரசருக்கு மிகமிக அவசியம். ஆனால் அரண்மனையில் அவர்களுக்கு என்ன வேலை என்றுதான் புரியவில்லை.

***

நன்றி : ஐந்திணைப் பதிப்பகம்

25 பின்னூட்டங்கள்

 1. senshe said,

  19/01/2012 இல் 14:57

  என்னாச்சு.. ஏன் இந்த முடிவு?? :((

 2. 19/01/2012 இல் 15:54

  இதே பெய்ரில் பிளாக்ஸ்பாட்டில் தொடருங்கள். இதன் லிங்கை அங்கே கொடுத்து விடலாம்.

  ஒரு நாளைக்கு நாலு தடவையாவது வரும் என் போன்றவர்களை ஏமாற்றி விடாதீர்கள் நானா! என்று அபலைப் பெண்ணைப் போல் புலம்ப வைத்து விடாதீர்கள்.

 3. 19/01/2012 இல் 16:01

  அபலை எண்: 3 😦 😦

 4. 19/01/2012 இல் 16:20

  ஒத்துக்கவே முடியாது…

  உங்கள் தளம் ஒரு பத்திரிக்கையை போல்…

  உங்கள் தளம் ஒரு நூலகம் போல்

  உங்கள் தளம் எனது பள்ளிகூடங்களில் ஒன்று

  ஒத்துக்கவே முடியாது

 5. அக்பர்தீன் - பொதக்குடி said,

  19/01/2012 இல் 16:38

  அண்ணே! வேண்டாம்! தொடருங்கள்….

  நூருல் அமீன் சொன்னதுபோல், ஒரு நாளைக்கு நாலு தடவையாவது வரும் என் போன்றவர்களை ஏமாற்றி விடாதீர்கள் அண்ணே!

 6. தாஜ் said,

  19/01/2012 இல் 17:12

  அருமை ஆபிதீன்…
  நம் வாசகப் பிள்ளைகள்
  மிக யதார்த்தமாக
  மனதைத் திறந்து கமித்திருக்கிற விதம்
  எத்தனை இயல்பாக இருக்கிறது பார்த்தீர்களா!!

  இதுதான்…
  உங்களுக்கான
  உங்கள் இலக்கிய ஈடுப் பாட்டிற்கான
  நோபல் அவாட்.
  சரியாகச் சொன்னால்….
  அதைவிட மேல்..

  நான் வாசித்த
  மொழிமாற்றக் கதைகள்/ நாவல்கள்
  அத்தனையிலும்
  ‘குள்ளன்’
  உயர்ந்து தெரிந்த மாதிரி
  இன்னொன்றை நான் வாசித்ததில்லை.

  ‘சுவீடிஸ்’ நாட்டுக்காரரான
  பேர் லாகர் குவிஸ்டு எழுதிய
  ‘அன்பு வழி’
  நோபல் பரிசை வென்றிருந்தாலும்
  அவரது
  இந்தக் குள்ளந்தான்
  என்னை ரொம்பவும் கவர்ந்தது.

  குள்ளனில் இருந்து
  ஆபிதீனால்
  வாசகர்களுக்குத் தரப்பட்டுள்ள
  தேர்வைவிட
  வளமானப் பக்கங்கள்
  அந் நாவலில் ஏராளம்.
  மூன்று முறைகளுக்கு மோல்
  அதனை வாசித்திருந்த போதும்
  இன்னும் அதன் மீதான
  கவர்ச்சி குறையவில்லை.
  இத்தனைக்கும் அது
  1950-வாக்கில் எழுதப்பட்ட ஒன்று!

  வாசகர்கள் ‘குள்ளன்’ நாவலை
  வாழ்வில் ஒரு தரமேனும்
  வாசிக்க வேண்டும்.
  அதன் மொழி மாற்றக்காரரான
  நம் ஜானகி ராமனின்
  இன்னொருப் பக்கத்தை/
  இன்னொரு மொழியை/
  அவர் ஈடுப்பாடு கொள்ளாத
  பின் நவீனத்துவ கட்டமைப்பை
  இந் நாவலில்
  வியந்து வியந்து ரசிக்க முடியும்.

  ‘அன்பு வழி’ பற்றிய
  என் மதீப்பீட்டை
  கொஞ்சம் முன்னமே
  ஆபிதீனின் பக்கங்களில் எழுதியிருப்பேன்.
  அந் நாவல் மதம் சார்ந்த விமர்சன கொண்ட நாவல்!
  ஏசுவின் இறப்பையும்
  அவரது சக்திகள் சார்ந்த
  இன்னும் பிற சங்கதிகளையும்
  தாராளமாக விமர்சிக்கிறது.
  கடவுளின் மகன் என்று சொல்லப்படும் ஏசு
  பேர் லாகர் குவிஸ்டு-வின் பார்வையில்
  தலை கீழாய் தெரிகிறார்!
  இப்படி
  நம் மதத்தைப் பற்றி விமர்சனம் வைத்தால்
  நம் மக்கள் பதறிப் போய்விடுவார்கள்!
  ஆனால் பாருங்கள்
  மேற்கே
  அந்த நாவலுக்கு
  நோபல் பரிசு (1951)
  வழங்கப் பட்டிருக்கிறது.

  அன்பு வழி குறித்த
  என் கணிப்பை
  நிச்சயம் எழுதுவேன்
  அதுவும்
  இந்த
  ‘ஆபிதீன் பக்கங்கள்’ பக்கம்தான் எழுதுவேன்.
  இன்ஷா அல்லா…
  அது நடக்கும்.
  -தாஜ்.

 7. 19/01/2012 இல் 17:40

  ஏன் நல்லாதானே போய்கிட்டிருக்கு!! யாரும் ஏதும் சொன்னாங்களா?? அப்படியே சொன்னாலும் கவலைப் படுகிற ஆள் அல்லவே நீர். அது தான் டவுட்டு. சொல்லுங்கனி!!

 8. 19/01/2012 இல் 17:41

  நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.. ஒருவேளை புதிய முகவரியில் தொடர இருந்தால், அதன் முகவரியை கொடுக்கவும் சார்…

 9. maleek said,

  19/01/2012 இல் 18:28

  ஒய் திஸ் கொலைவெறி ?

 10. தாஜ் said,

  20/01/2012 இல் 01:01

  குள்ளன் நாவலில் எனக்குப் பிடித்த பல இடங்கள் உண்டு.
  ‘ஆபிதீன் பக்கங்கள்’ இன்றைக்கு கேள்விக் குறியானதில் வாசகர்கள் மிகவும் ஆதங்கப்படுவதால், அவர்கள் அசுவாசப்பட குள்ளனில் இருந்து எனக்குப் பிடித்த ஒருசில வரிகள்.

  // இளவரசியின் படமும் பாதியில் நின்றுவிட்டது. அவனுக்கு முடிக்க முடியவில்லையாம். அவன் ஊடுருவ முடியாத,விளக்க முடியாத ஏதோ ஒன்று அவளைச் சுற்றி சுவாசமிட்டிருக்கிறதாம். ஆக இதுவும் கிறிஸ்துவின் கடைசி விருந்தைப் போல முற்றுப் பெறாமல் நிற்கிறது.

  இளவரசியின் அறையில் ஒரு தடவை அதைப் பார்த்தேன். அதில் ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை. மிகவும் உயர்ந்த சித்திரம். அவளை அப்படியே தத்ரூபமாக, ஒரு நடு வயது விபசாரியைப் போலவே வரைந்திருக்கிறான். அவளே அச்சாக இருக்கிறது படம். காமம் சுமந்த முகம், அடர்த்தி யான இமை மயிர்கள், போதை கொண்ட புன்சிரிப்பு. எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவளுடைய ஆத்மாவையே சித்திரத்தில் வடித்து விட்டான். அவள் பண்புகளை எல்லாம் தேவதையைப் போல வெளிப்படுத்தி விட்டான்.

  அவனுக்கும் மனித இயல்பைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பது போல்தான் தோன்றுகிறது.//

  -‘குள்ளன்’ – பேர் லாகர் குவிஸ்டு.
  நன்றி: அமரர். தி.ஜானகிராமன்

  -தாஜ்

 11. 20/01/2012 இல் 05:41

  இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.ஆப்தீன் பக்கங்கள் மூலம் தான் நான் பல நண்பர்களையும் ,ஆப்தீன் என்ற அனுபசாலியையும் படைப்பாளியையும் சந்தித்தேன்.வேண்டாம் .இந்த விபரீத முடிவு.என்ன வேலை இருந்தாலும் உங்கள் வலைப்பக்கம் பார்ப்பதும் ரசிப்பதும் என் அன்றாடப்பணியாகிவிட்டது. தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்.அது சரி திடீரென்று ஏனிந்த கொலை வெறி?

 12. தாஜ் said,

  20/01/2012 இல் 06:30

  ஆபிதீன்…
  காதில விழுதில…
  பாட்டு?
  -தாஜ்

 13. 21/01/2012 இல் 10:13

  என்னடா “அதை” இன்னும் இங்க காணோமேன்னு பாத்தேன். வந்துருச்சு. கோல்டன் அவார்டு வாங்கிட்டு
  இசைவெறி புகழ் ஆபிதீன் பக்கங்கள்ல வல்லைன்னா அப்பறம் நம்ம ‘பிரதமர் விருந்து’க்குத்தான் என்ன மதிப்பு?

 14. 22/01/2012 இல் 07:08

  ஐந்து நாட்களுக்குப் பிறகு நானும் மகன் ஸபீரும் மடிக்கணினியைத் திறந்தோம். ஓ மை காட்! ஆபிதீன் பக்க‍ங்கள் எனக்கு மருந்தாக இருந்த்து. ஆபிதீன் கதைகளைப் படித்த‍தும் கிட்டிய அதே பரவசம் ஆபிதீனுடைய சகல எழுத்துகளிலும் பீறிட்ட‍தை என்ன‍வென்பேன். ஆபிதீனுடைய எள்ள‍ல் புதுமைப்பித்த‍னின் நீட்சியோ.

  தாஜ், நம்ம‍ ஜானகி ராமன் “அன்னை” என்ற இமில்டா என்ற சுவீடிஸ் எழுத்தாளரின் நோபல் பரிசு பெற்ற‍ நாவலையும் மொழிமாற்ற‍ம் செய்திருந்தார். படித்திருக்கிறீர்களா?

  குள்ள‍ன் நாவல் பற்றி முன்கூட்டியே சொல்லியிருந்தால், புத்த‍கச் சந்தையில் கொள்முதல் செய்திருக்கலாம். அந்த நாவலைப் படிக்கும் வரையில் ஹனீபா காக்காக்குத் தூக்க‍ம் வராது.

  நிற்க, இன்று ஆபிதீன் பக்க‍ங்களில் “நான் புலி நினைவுகள்” எனும் மகுடத்தில் கடந்த முப்ப‍தாண்டு கால போர்வாழ்வில் எனக்குக் கிட்டிய அனுபவங்களில் சிலதை பொறுக்கி எழுத திட்ட‍மிட்டு அதில் ஒரு பத்தியை இன்று எழுத வந்தேன். ஆபிதீன், அவருடைய பக்க‍ங்களை ஸலவாத்துடன் முடிப்ப‍தை அறிந்து நானும் பின்வாங்குகிறேன். என்ன‍த்தை எழுதிக் கிழிக்க‍ என்ற வழமையான கூண்டுக்குள் புகுந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்க‍ள்.

  அன்புடன் ஹனீபா காக்கா

  • தாஜ் said,

   22/01/2012 இல் 22:06

   //தாஜ், நம்ம‍ ஜானகி ராமன் “அன்னை” என்ற இமில்டா என்ற சுவீடிஸ் எழுத்தாளரின் நோபல் பரிசு பெற்ற‍ நாவ லையும் மொழிமாற்ற‍ம் செய்திருந்தார். படித்திருக்கிறீர் களா?//

   – ஹனிஃபாக்கா… அந் நாவலை பாதியே படித்திருக்கி றேன். நம் ஜானகிராமன் தான் அதனை மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்றாலும், நாவலின் தளம் மனதில் ஒட்டாத கோணத்தில் விரிவடைய, போதுமென்றாகி பாதியில் அதை மூடிய நான் இன்னும் திறந்தேனில்லை. விமர்சன மற்றது. மதக் கோட்பாடுகளின் புனிதத்தில் விரிவடைய முயல… போதும் போதுமென்றாகி விட்ட தெனக்கு. தவிர, அந் நாவல் கதையோட்டத்தை விட்டு, புறச் சூழல்களின் வர்ணனையையே அதிகத்திற்கும் அதிகம் அதில். அன்னை, குள்ளனின் பாத உயத்தை கூட எட்டாது.

   ஹனிஃபாக்கா, குள்ளன் நாவல் மீது கொள்ளும் ஆர்வம், சரியான ஒன்று. ஹனிஃபாக்கா, தனது வீட்டு தபால் முக வரியை எனக்கு மெயில் செய்யும் பட்சம் குள்ளன் உங் களை தேடிவருவான். என் அன்பு குள்ளன் காக்காவிடமே இருக்கட்டும்.

   குள்ளன் மீது ஆர்வம் கொள்ளும் காக்காவுக்காக, அந்த நாவலில் இருந்து. இன்னும் சில வரிகள்:

   //இந்த உலகமே பைத்தியம் பிடித்து அலைகிறதா? நிரந்தர சமாதானமாமே! இனிமேல் போரே கிடையா தாம்! என்ன அபத்தம்! என்ன குழந்தைத்தனம்! பிரப ஞ்ச ஒழுங்கையே மாற்றி விடமுடியும் என்று நினைக் கிறார்களா இவர்கள்? என்ன அகம்பாவம்! பழமையிட மும், மரபின் பாலும் இவ்வளவு துரோகமா பாராட்டு வார்கள்! போரே கிடையாதாமே! யுத்தத்தின் புகழும், கௌரவமும் இனிமேல் கிடையவே கிடையாதா? கொம்புகள் இனிமேல் ஊதவே ஊதாதா? வீர மரணமே கிடையாதா? மனித வர்க்கத்திற்கும், இந்த அகம்பாவ த் திற்கும் முட்டாள்தனத்திற்கும் எல்லையே இல்லை யோ! மக்களின் மீது ஆட்சி செலுத்தும் சக்தி எது என் பதை காண்பிக்க இனி ஒரு பொக்கரோஸாவும் வரமா ட்டானா? வாழ்க்கையின் அடிப்படை எல்லாம் குலைக் கப் போகிறார்களா?

   சமரசமாம்! இதைப்போல வெட்கக்கேடு இருக்க முடி யாது! அதுவும் யாரோடு? தீராத பகைவர்களோடு! நம் சேனைக்கும், உயிர் நீத்த வீரர்களுக்கும் இதைவிட வேறு அவமானம் ஏது? போர்க்களத்தில் மாண்ட நம் வீரர்களின் தியாகத்திற்கு இதுதானா கைம்மாறு!

   இந்த சிந்தனைதானா இளவரசருக்கு…. இப்போழுது! அவர் மனநிலை சரியாகி விட்டது. முன் போல் பேசுகி றார். கலகலவென்று இருக்கிறார். யாருக்குமே வராதா மகத்தான ஒரு எண்ணம் தோன்றிவிட்டதாக அவரு க்கு நினைப்பு.

   என் வெறுப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இளவரசரிடம் நான் வைத்திருந்த ஒரு பெரிய நம்பிக் கைக்கு அதிர்ச்சி. அதிலிருந்து மீளவே முடியாது போலிருக் கிறது. இவ்வளவு கேவலமான நிலைமை க்கா போய்விட்டார் அவர்? நிரந்தர சமாதானமாம்! நிரந்திர போர் நிறுத்தமாம்! இப்போர்ப்பட்ட ஒரு எஜமா னனிடம் யார் தான் குள்ளனாக சேவகம் பண்ண முடியும்?//
   – தாஜ்

 15. 22/01/2012 இல் 10:05

  அன்புள்ளம் கொண்ட சென்ஷி, நூருல் அமீன், மஜீத், இஸ்மாயில், அக்பர், தாஜ், காதர், சரவணவடிவேல், மாலிக், அறபாத், ஹனிபா காக்காவுக்கு…

  ஒரேயடியாக சந்தோஷப்பட வேண்டாம்; வேர்ட்பிரஸ் கொடுத்த தொந்தரவால்தான் அப்படி ஒரு முடிவெடுத்தேன். ஆபிதீன் பக்கங்கள் http://abedheen.blogspot.com/ என்ற முகவரியில் விரைவில் தொடரும். ‘அன்பு வழி’ பற்றிய தாஜ் கட்டுரை / ஹனிபாக்காவின் ‘நான் புலி நினைவுகள்’ தொடர் அங்கே வரும், இன்ஷா அல்லாஹ். இந்த இன்ஷா அல்லாஹ்வை போடலேன்னா நமக்கு தூக்கமே வராது!

 16. 22/01/2012 இல் 18:19

  ஆபிதீன்,
  உம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குலாம் முஹைதீனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இப்னு அல் நஃபீஸைப் பற்றி சொன்னேன். அவர் வியப்புற்று அந்த கட்டுரையை அனுப்பிவைக்கும்படி சொன்னார். அதை அனுப்பிவைத்துவிட்டு மற்ற கட்டுரைகளின் முகவரியையும் கொடுத்துள்ளேன்.

  முகவரி மாறுவது கவலை அளிக்கிறது. தொலைபேசியில் நீண்ட நேரம் பேசமுடியவில்லை. என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. தயவு செய்து மின் அஞ்சல் அனுப்புங்கள்

 17. 23/01/2012 இல் 10:32

  அன்புள்ள நானா,

  உங்கள் தாயாரின் உடல்நிலை பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். புதிய பதிவுகள் போடுவதில்தான் இங்கு பிரச்சனையே தவிர வேர்ட்பிரஸ் முகவரி அப்படியேதான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே கவலை வேண்டாம். ஆனால் http://abedheen.blogspot.com/ ல் வரப்போகும் கதைகள், கட்டுரைகள் பற்றி நீங்கள் கவலை கொள்ளத்தான் வேண்டும்!

 18. 24/01/2012 இல் 04:57

  அல்ஹம்துலில்லாஹ்.ஆப்தீன் காக்கா உங்கள் அட்டகாசங்களை ஆர்வமுடன் எதிர்பார்ப்பவர்களில் நானுமொருவன்.

 19. s.naleem said,

  24/01/2012 இல் 10:08

  ஒரு இளைஞனைப்போல் புதிய உற்சாகத்தோடு ஆபிதீன் பக்கத்தை முணுமுணுத்தபடி எஸ்.எல்.எம்.இயங்கியபோது
  நான் நம்பினேன்
  அவரது ‘கை நழுவிப்போன பட்டத்தின் நூலை’ ஆபிதீன்
  பக்கம் கண்டு பிடித்துக் கொடுத்து விடும் என்று.
  ஆனால்
  உங்களது இறுதிப் பதிவையும் எஸ்.எல்.எம்மின் கருத்தையும் பார்க்க ஏமாற்றமாக இருந்தது.
  என்றாலும் பதிவைத் தொடரும் உங்கள் முடிவு நல்லது, வாழ்த்துக்கள்.

 20. 24/01/2012 இல் 10:44

  அல்ஹம்து லில்லாஹ்! இவ்வளவு நாள், அல்ல அல்ல இத்தனை வருஷம் உழைத்த உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகிவிடுமோ என பயந்தேன். அது அப்படியே இருக்கட்டும்; இருக்கவேண்டும்.

  இனி புதிய பாதையில் பயணம் செய்வோம். ஆபிதீன் என்ற பெயருடைய ஆபிதான மனிதருடன் ஹராமி ஹமீது ஜாபர் தொடரவேண்டாமா?

  இப்போதுதான் சற்று ஓய்வு கிடைத்துள்ளது. நேற்றிலிருந்து இப்னு பதூதாவின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறேன்.

  • மஜீத் said,

   24/01/2012 இல் 13:43

   ஆ – ஆ &
   ஹ – ஹ
   ….ம்ம்ம்..

   அப்ப ம – ம ?

 21. 24/01/2012 இல் 16:35

  நானா, ஆரம்பமாகிவிட்டது உங்கள் கட்டுரையோடு :
  http://abedheen.blogspot.com/2012/01/2.html

 22. தாஜ் said,

  26/01/2012 இல் 11:44

  வணக்கம்.

  முதல் அத்தியாயம் முடிந்தது.
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s