’கவிஞர்களுக்கு செய்தி உண்டா ஆபிதீன்?’ ‘கவிதை எழுத வேணாம்னு சொல்லுங்க தாஜ்!’

மகா மோசமான ’விஷம்’ சிறுகதையை (சுட்டி : http://www.panbudan.com/story/visham ) ஒருவர்கூட படிக்காமல் தப்பித்துவிட்டார்களே என்ற கவலை , ஈ.எம்.ஹனீபா பற்றி ’சமநிலைச் சமுதாயம்’ ஜனவரி  இதழில் வந்த கட்டுரையை யாரும் ஸ்கேன் செய்து அனுப்பாத கடுப்பு (அத்தோடு இணைக்க அபூர்வமான ஒரு பாட்டு வைத்திருக்கிறேனாக்கும்) , கம்பெனி கார்பெண்டர்சிங் திடீரென்று நேற்று முன்தினம் இறந்த அதிர்ச்சி (இறந்தவன் நேரில் வந்தால்தான் சம்பளம் கொடுக்க இயலும் என்று ’ரூல்ஸ்’ பேசுகிறது – எக்ஸ்சேஞ்ச் ), அஸ்மாவை நேற்று பார்க்காத ஆனந்தம் (ஆமாம், ஆனந்தம்தான்), இன்னும் இரண்டொரு பதிவுகள்தான் இலவசமாக என்று வேர்ட்பிரஸ் மிரட்டுவதில் எரிச்சல் என்று கலவையான உணர்ச்சிகளோடு இருந்தபோது புத்தகச் சந்தைக்குப்போகும் தா’ஜின் (இந்த ’ஜின்’ என்று எழுதினாலே வியாழக்கிழமை இரவின் ’ஜெதபு’ மட்டுமல்ல, அரஃபாத் ஆலிம்ஷாவின் அட்டகாசமான ’ஜின்’ கதையும் ஞாபகம் வருகிறது) கேள்வி கோபத்தைக் கிளப்பிற்று. துபாயில் அதுதான் கிளம்பும். அதனால்தான் அப்படியொரு பதில் சொன்னேன். மற்றபடி கவிஞர்கள் மேல் கோபமே கிடையாது எனக்கு. படித்தால்தானே!. நிற்க . புத்தாண்டு வாழ்த்துக்களை ’இவ்ளோ சீக்கிரமா’ சொல்லும் தாஜ் அத்தோடு தன் பழைய கவிதையையும் அனுப்பியிருக்கிறார் நைஸாக. அதுதான் ஏற்கனவே திண்ணை / கீற்று இதழ்களில் வந்துவிட்டதே.. தனது வலைப்பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். மீண்டும் இங்கே எதற்கு?

கணையாழி நடத்திய கவிதை வாசிப்பு கூட்டத்தில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதாவிடம் தாஜ் கேட்டாராம் : ‘கவிதை எப்படி சார்?’

‘புரியலே தாஜ்’.

அதற்குத்தான்!

‘தொடர்ந்து பேசவும் நேரம் கிடைக்கவில்லை. என்றாலும், அவர் ‘புரியவில்லை’ என்று சொன்னதே எனக்கு போதுமானதாக இருந்தது. கவிதை புரியாமை ஓர் உலக நியதி! புரிந்ததென்று சொல்லி இருந்தால்தான் சங்கடம்! படித்த உடனே புரிந்துவிட்டால் அந்தக் கவிதைக்குத்தான் மதிப்பேது?’ என்கிறார் ’கவிஞர்’ தாஜ்.

ச்சே….ச்சே.., தாஜின் கவிதைகள்தான் ஒருமாதிரியே தவிர அவருடைய நகைச்சுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘பா. வெங்கடேசன்ற ’தாண்டவ ராயன் கதை’ வேணும்ங்க..’ என்றேன். ‘எதுக்கு, லைஃப் முழுக்க படிக்கிறதுக்கா? என்றார்.  ஊருக்குப் போய் கோர்ட் கேஸ் என்று திண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு நண்பரைப் பற்றி கேட்டபோது பிரமாதமாக உண்மை சொன்னார் : ‘ அட , ஒரு பிராப்ளம்னா முடிவு தேடணும்னு ஆசைப்படனும். இவனுங்க என்னாடான்னா முட்டிக்கிட்டு அலையிறானுங்க.. இதுக்கிடையிலே நான் வேற யோசனை சொல்றேன். உருப்படும்டு  நெனைக்கிறீங்க?’

உருப்படவே உருப்படாது – ஆபிதீன் பக்கங்கள் போல!

ஆபிதீன் 

***

அன்புடன் வாசகர்களுக்கு…
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தாஜுக்கு என்னவாயிற்று?
ஜனவரி பிறந்தும் கழிந்தும்
ஒருபாடு நாட்கள் ஆகிவிட்டதென்பது
அவருக்கு தெரியாதா?

நீங்கள் சிரிப்பதை ரசிக்கிறேன்.
ஓம்.. பிழைதான்
ஒப்பும் கொள்கிறேன்.
மறந்துவிட்டது என்ன செய்ய?
நிழலை விரட்டித் திரிபவனுக்கெல்லாம்
பகலின் ஆட்டங்கள்
பிடிபடுமா என்ன?

ஆனாலும்…
‘மறந்துவிட்டது’ நினைவுக்கு வந்ததும்
மறக்காமல் வாழ்த்து சொல்ல
உங்களைத் தேடி வந்துவிட்டேன் பாருங்கள்.
அதுதான் நான்.
ஒரு மறதியாளனுக்கு அதுதானே அழகு!
சரியா?

ஆக
உங்களுக்கு என்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நேற்று…
தலைவர் ஆபிதீன் போன் செய்தார்.
“35-ம் புத்தகச் சந்தைக்கு போகலையா?” என கேட்க
இன்றுவரை
அங்கு போக இயலாமல் போவதின்
காரணங்களைக் கதைக்க கதைத்துவிட்டு
நாளை மறுநாள் போவேன் எனவும்
அங்கே
நான் சந்திக்கும் கவிஞர் பெருந்தகைகளுக்கு
உங்களது பிரத்தியோக செய்தி ஏதேனும் உண்டா? என்றேன்.

தாமதம் சிறிதுமின்றி
“அவர்களை கவிதை எழுத வேண்டாமென
சொல்லுங்கள்” என்றார்.

என் கவிதைகள் மீதான கோபத்தில்
அவர் அப்படிச் சொல்கிறார் என்பதை நான் அறிவேன்.
அதனை அறிய வராத கவிஞர்களிடம் போய்
ஆபிதீனின் செய்தியை எப்படி சொல்ல முடியும்?
நான் அதைச் சொல்ல…
அவர்களும் அதனை ‘சீரியஸாக’ எடுத்துக் கொண்டு…
கவிதைகளை  விடுத்து
கதைகள் எழுதத் தொடங்கிவிட்டால்?
ஆபிதீன் யோசிக்காமல் சொல்லச் சொல்லிவிட்டார்.
கவிதைகள் கொஞ்ச நேரத்து தொல்லைகள் மட்டும்தான்.

எனக்கு
நல்ல கவிதை எழுதுபவர்களின் மீது
இரக்கம்தான் எழும்.
அவர்கள் தங்களுக்கு தாங்களே
குழிபறித்துக் கொள்பவர்கள்.

இவர்களில்
வாழ்வில் செல்வச் செழிப்பாகச் செழித்த
எவர் ஒருவரையேனும்
நான் கண்டதில்லை.
எல்லோருமே பாவங்கள்.
அவர்களது வரிசையை கடைசிவரை
நீங்கள் காணும்பட்சம்
அனேகமாக நான் சிக்கினாலும் சிக்குவேன்.

ஆனால்…
எதுகை மோனையில்…
அடுக்கு மொழியில்…
கொள்கை முழக்கங்களில்…
மார்கழி மாத ஜீவன் மாதிரி
காதலில் கசிந்து..
– ஏனேதானோவென
கவிதை எழுதுபவர்களின்
வெற்றியென்பது எந்தக் காலத்திலும் உறுதியானது.
உலம் மெச்சும் உன்னதத்தை அவர்கள் அடைவார்கள்.
பட்டம் பதவியெல்லாம்
அவர்களுக்கு சாதாரணமாகிப் போகும்.
நடப்பை கவனிப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
வாஜிபேயி / கருணாநிதி / வைரமுத்து /
டி.ஆர் என்கிற ‘விஜய்’ டி.ராஜேந்திரன் போன்றோர்
அந்த வரிசையின் நட்சத்திரங்களாக
மலைக்கவும் வைப்பவர்கள்!

கவிதை எழுதுபவர்களை
ஒத்துமொத்தமாக
கரித்துக் கொட்டும் ஆபிதீன்…
ஒரு கணம்
இந்த அதிர்ஷ்ட சங்கதிகளை யோசித்திருக்க வேண்டும்!

வாசக அன்பர்களுக்கு
மறக்காமல்
புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னேன்.
ஆனாலும் பரிசளிக்க மறந்து விட்டேன்.
மறதியே நினைவை எழுப்பும் உந்துதல்!
மறதியைப் போற்றுவோம்.
இப்போது மறக்காமல் பரிசு.
என் இனிய… 
‘அரங்கேற்ற நேரம்’
உங்களுக்காக.

*

பார்வைக்கு திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்.
கறுப்பின் பரப்பில்
மையலான சித்திரம்
எக்ஸ்ரே பாணி –
நிர்வாணம் –
தலைப்பின் காட்சிகளைப் பரப்பியிருந்தேன்

மூளையின் மூளி –
முதுகுத் தண்டின் வளைவு –
கண்களின் ருசி –
கால்களின் சதிர் –
கைகளின் தாளம் –
நாவின் ஜதி –
விரல்களின் அரக்கம் –
நகங்களின் ரத்தப் பூச்சு –
பற்களின் மழுங்கல் –
குறியின் மகரந்தம் –
புத்தகப் பருவம் –
லார்வா புழு
வண்ணத்துப் பூச்சி
மறந்துபோன சிரிப்பு –
அர்த்தநாரீஸ்வர இருப்பு –
உயிரின் வதைப்பு –
ஹிருதய சுழிப்பு –
ஆணிக்கால் நடப்பு –
இறக்கையற்றப் பறப்பு –

கண்டு கொண்டவர்கள்
அருகி போனார்கள்
பார்வையாளர்களுக்கான குறிப்பு புத்தகத்தில்:
பகல் தூக்கம் போனது –
பண்டைய மிருகக் காட்சிகள் அபாரம் –
கழிப்பறை சுத்தமாக இருக்கிறது –
நிர்வாணத்தைக் காணோம் –
பெண் விரிவுரையாளர்களை அமர்த்தியிருக்கலாம் –
மின் விசிறி சுழலவில்லை –
இருட்டின் தேடல்கள் –
சரவிளக்கு மங்கிவிட்டது –
காலம் பொன் போன்றது –

சித்திரங்களை அள்ளி
எறிவதற்கு பதிலாக
பூட்டிப் பத்திரப் படுத்தினேன்.

***
கவிதையின் காலம்:1995
***

நன்றி : தாஜ் (தமிழ்ப்பூக்கள்) | satajdeen@gmail.com

6 பின்னூட்டங்கள்

 1. 12/01/2012 இல் 12:16

  விஷம் சுட்டி வேலை செய்ய வில்லை

 2. 12/01/2012 இல் 13:57

  சரி நானா, நான் வீட்டிற்கு போய் பார்க்கிறேன். பிரேக் டயத்தில் டிரை பண்ணி பாத்தேன், வரலை.. ஆபிஸ்ல தடுத்திருக்காஹல்வோ போலருக்கு

 3. 12/01/2012 இல் 15:20

  இப்பல்லாம் வெளக்கத்த முதல்ல எழுதிட்டு
  கவிதைய அப்பறமா எழுதுறது ஃபேஷனோ?:-):-)

  வாழ்க்கைச் சுழலின்
  பவித்திரங்கள் அனைத்தையும்
  பார்ப்போரின் களங்கம் படாமல்
  பாதுகாத்துக்கொண்ட சித்திரங்கள்!

  பத்திரப்படுத்தத்தான் வேண்டும்.
  வேறு வழி?

 4. 14/01/2012 இல் 05:38

  ‘விஷம் ‘ விசமம்தான் காக்கா.நீங்க மந்திரிச்சா பலிக்கும்.ஆப்தீன் பக்கங்களில் என்னா இசும் பண்ணுறீங்களோ தெரியாது இன்னும் சிலர் உங்கள வசியப்படுத்த படும் பாடு. ஆனா நீங்க அவங்கட இசுமுக்கு வசியப்படாம இருக்கிறிங்க பாருங்க.அதுதான் உங்கட கராமத்து.உங்களச்சுற்றி நல்ல காவல் போட்டிரிக்கி .
  எஸ்.எல்.எம். என்ற ஜின் உங்கள சுற்றிச்சுற்றி வருவதும் கெட்ட ஆவிகள் உங்களை அண்டாமல் இருப்பதும் நல்ல காவல்தான் நம்புனா நம்புங்க..

 5. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  14/01/2012 இல் 17:20

  அன்பு மகனார் தாஜுக்கு,
  நாகூருக்கு வந்து உங்களின் அருமை முகத்தைப் பார்க்கக் கிட்டவில்லை. ஆபிதீன் பக்கங்களிலாவது பார்த்தேனே. ஊரிலும் கவிஞர்கள் தொல்லை பெருந்தொல்லை. தெருவுக்கு இருபது கவிஞர்கள். கூடவே என் பேத்தியும் கவிதை எழுதப் புறப்பட்டு விட்டாள். இனிமேல் தூக்கம் தொலைந்து போய் விடும் போல்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s