‘ஃபாஸ்ட் ஃபூட்’ புத்தகச் சந்தை

’பண்புடன்’ 2012 சிறப்பிதழில் ஆபிதீனின்  ‘விஷம்  (அட, பழைய அடப்பு சிறுகதையின் தலைப்புங்க..) இருப்பதைச் சொல்லும் முன்னோட்ட வீடியோவைப் பதிவிடலாம் என்றால் ஹனீபாக்காவிடமிருந்து அருமையான மெயில் வந்துவிட்டது – அவர் சிபாரிசு செய்யும் கனமான புத்தகங்களுடன். தாஜ், எனக்கு கருணாமணாளன் கதைகள் வாங்கினால் போதும்.

***

அருமை ஆபிதீனுக்கு,

புதுவருடத்தில் புதிய எண்ணங்களுடனும் தளராத நம்பிக்கையுடனும் வாழ்வைத் தொடங்குகிறோம். வருடக் கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வாழ்வை நாம் ஏமாற்றியிருப்போம். அல்லது நாம் கனவு கண்ட வாழ்வு நம்மைக் கைவிட்டிருக்கும். சில நாட்கள் மட்டும் கண் சிமிட்டும். இதுதான் அனேகம் பேருடைய கதை. ஆனாலும், வாழ்வின் நினைவுகள் மட்டும் பழைய பாடல்கள் போல், மனசை களி கொண்டாடும். அல்பர்  காமியோ அந்நியனில் சொல்கிறான்: ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஒரு நாள் அவனுக்கு உண்மையாக வாழ்ந்திருந்தால் போதும், அந்த வாழ்வின் நினைவை மீட்டு மீட்டு நூறாண்டு வாழலாம் என்கிறான். அப்படித்தான் நானும். அதில் வரும் மிருசோதான் ஹனீபா காக்கா, ஆபிதீன் எல்லோரும் என்று எண்ணுகிறேன்.

மெய்தான், சென்னையில் 35ஆவது புத்தகத் திருவிழா ஆரம்பம். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கொண்டாட்டம் என்கிறார் நமது மதிப்புமிகு கவிஞர் மனுஷ்ய புத்திரன். அப்படியென்றால் பதிப்பகத்தார் பாடு பலே பலே. 13 ஆண்டுகளுக்கு முன்னம், சுந்தர ராமசாமி இங்கு யேசுராசா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலீடும் புத்தகங்களை செம்மையாகத் தயாரிப்பதும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன என்கிறார். இன்று நிலைமை அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் புத்தகங்கள். சுடச்சுட, ஃபாஸ்ட் ஃபூட் சப்ளை.

வெளியீட்டு விழாக்களும் திருமண விழாக்கள் போல். ஆனாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அளவுக்கு ஆத்மார்த்தமான வாசகர்கள் எம்மில் எத்தனை பேர். 2007ல் தமிழில் வெளிவந்த நூல்களில் யுனைட்டட் ரைட்டஸ் கொண்டு வந்த நாடு விட்டு நாடு (முத்தம்மாள் பழனிசாமி) மிக அருமையான நூல். அது பற்றி யாராவது பேசுவார்களா, எழுதுவார்களா என்று கடந்த நான்கு வருடங்களாக நான் எதிர்பார்த்து வந்துள்ளேன். பல பள்ளிகளில் அந்த நூலைப் பற்றிப் பேசியும் இருக்கிறேன். பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்காக முன்மொழியக்கூடிய அருமையான எழுத்துக்கள். சென்ற மாதம், காலச்சுவடு ஒரு மதிப்புரையை வழங்கியிருக்கிறது. புத்தகமும் ரொம்ப நேர்த்தியான தயாரிப்பு. ஆனாலும் ஒரு சிறப்பான நூல் பற்றிய மதிப்புரை நாற்பத்தெட்டு மாதங்கள் தவமிருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு காலத்தில் எழுத்து, புத்த வெளியீடுகள் என்றால் அது ஒரு தவமாகவே போற்றப்பட்டது. இம்முறையும் புத்தகச் சந்தையில் 1000 நூல்களுக்கும் குறையாத புதிய நூல்கள் படையெடுக்கும். ஆன்மீகம், மருத்துவம், அதிஷ்ட எண் ஜோதிடம், எண்டமூரி என்றுதான் நமது மாண்புமிகு வாசகர்கள் அள்ளிக்கட்டுவதாக அறிகிறோம். வாசகர்களுக்கு நல்ல நூல்களை யார் வழிகாட்டுவது. அதிர்ஷ்டவசமாக நமது வாசகர்கள் பலருக்கும் வல்லிக்கண்ணன் பார்வை வாய்த்திருப்பது நமது பதிப்பாளர்களின் பாக்கியமே. யார் என்ன திட்டினாலும் க.ந.சு. போல் குறைந்தது ஐந்து பேராவது ரசமட்டக் கோலுடன் கிளம்ப வேண்டும் போல் படுகிறது.

ஆபிதீன், நான் எழுத வந்தது, நான் முதல் முதல் கண்ட புத்தகச் சந்தை பற்றி. நினைவுகளும் எண்ணங்களும் வேறெங்கோ அழைத்துப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் நகுலனின் நிலையில் நான். அந்தளவு வயசுமில்லை. நகுலனின் நினைவுப் பாதை நாவல் படித்திருப்பீர்கள்தானே. நெஞ்சில் நிறைய நிறைந்து போய் கிடப்பதனால், நினைவுகள் கட்டுக்கடங்காமல் பாய்கிறது. மூக்கணாங் கயிறு அறுபட – கொம்புகள் தீட்ட – கட்டுக்கடக்காத மனசு…

1990 பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி, காயிதே மில்லத் கல்லூரி மைதானம். அடைமழை வேறு. சேறும் சகதியும். மைதானத்தைச் சுற்றி கிடுகுகளாலும் பொலித்தீன் சீற்றுகளாலும் கொட்டில்கள். நூற்றுக் குறைவான விற்பனை நிலையங்கள். இன்றைய பிரமாண்டங்கள் ஒன்றும் அன்றில்லை. ஆட்டோ பிடித்துப் போனேன். அன்னம், நர்மதா, கலைஞன், நியூசெஞ்சரி, வானதி, க்ரியா, ஐந்திணைப் பதிப்பகம்…. என்று தேடிப் பிடித்து வாங்கினேன். கடைசியாக மிகச் சிறிய பெட்டிக்கடை போல் ஒரு தடித்த அட்டை – ஒரு தடித்த அட்டையில் க்ரியா என்று தொங்கியது. என் வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். நான் ஸ்ரீலங்கன் என்றறிந்தும் அவர் உசாரானார். கடையில் நானும் அவருந்தான். க்ரியாவின் வெளியீடுகளான அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கட்டினேன். அந்த ஆண்டில்தான் அவர்களின் புகழ்பெற்ற தற்காலத் தமிழ் அகராதியும் வெளிவந்திருந்தது. புத்தகங்கள் கொள்முதல் முடிந்ததும், உடனே அவர் “நிரபராதிகளின் காலம்” மொழிபெயர்ப்பு நாடக நூலைத் தந்து, இது உங்கள் தேசத்துக்கும் பொருந்தும் என்றார். அன்று இரவே அந்த நூலைப் படித்ததும்தான், அவர் சொன்ன நான்கு வார்த்தைகளின் தாத்பரியம் புரிந்தது. அன்றைய எங்களின் தேசம், எங்களின் மறைந்த மாண்புமிகு ஜனாதிபதி பிரேமதாஸா எல்லோரும் அந்தச் சிறிய நூலில் வேறு வேறு பெயர்களில் அடக்கப்பட்டிருந்தார்கள். கடைசியாக அவரும் நானுமாக ஒரு படம் பிடித்துக் கொண்டோம்.

நான் இலங்கை திரும்பிய சில நாட்களில், நண்பர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் என் அல்பத்தை பிரட்டிய போது, “எங்கே திலீப்குமாரையும் சந்தித்தீர்களா?” என்றார்.

திலிப்குமாரா? சிறுகதை எழுதும்?”

“ஆம்” என்றார்.

அவரும் தன்னை எழுத்தாளன் என்று சொல்லவில்லை. நானும் லேசுபட்டவனா? நானும் சொல்லவில்லை. ஆனாலும் பின்னாளில் சென்னை செல்லும் போதெல்லாம் நானும் மனைவியும் அவர் வீடு தேடிச் சென்று கதைத்துக் கொட்டியிருக்கிறேன்.

திலிப்குமாரின் தாய்மொழி குஜராத்தி. அவர் மனைவியின் தந்தை வழி யாழ்ப்பாணம். இவ்வாண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லும் வாசகர்கள், திலிப்குமாரின் கடவு நூலையும் ஒரு கண் பாருங்கள்.

இப்படிக்கு ஹனீபா காக்கா.
————–

இம்முறை புத்தகச் சந்தையில் நான் வாங்கும் நூலின் பட்டியல்

க்ரியா பதிப்பகம்:

1. சின்னச்சின்ன வாக்கியங்கள், மொழிபெயர்ப்பு வே. ஸ்ரீராம்
2. மேற்கத்தி கொம்பு மாநாடுகள், ந. முத்துசாமி
3. பூமணியின் புதிய நாவல்

காலச்சுவடு
1. லண்டன் உங்களை வரவேற்பத்திலை, இளைய அப்துல்லாஹ்
2. உண்மையும் பொய்யும், வைக்கம் பஷீர்
3. ஆனைவாரியும் பொன்குருசும், வைக்கம் பஷீர்
4. நிழலின் தனிமை, தேவி பாரதி
5. ஓதி அறியப்படாத முட்டைகள், மீரான் மைதீன்

கிழக்குப் பதிப்பகம்
1. மருந்து, புனத்தில் குஞ்சப்துல்லாஹ்
2. அகம் புறம், வண்ணதாசன் (ஆனந்த விகடன் பிரசுரம்)

உயிர்மை

1. இசையின் ஒளியில் (ஷாஜி)
2. வானில் பறக்கும் புள்ளெல்லாம், தியோடர் பாஸ்கரன்

விடியல் பதிப்பகம்

1. போர் உலா, மலரவன்
2. மீன்குகை வாசிகள், கீரனூர் ஜாகிர்ராஜா
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை (பூவுலகின் நண்பர்கள் வெளியீடு)

இந்தத் தம்பட்டம் அடிப்பதற்கான காரணம், ஆபிதீன் பக்க வாசகர்கள் இம்முறை புத்தகச் சந்தையில் வாங்கும் நூல்களின் பட்டியலை இந்தப் பக்கங்களில் இவ்வாறு பதிவேற்றம் செய்தால், நமது வாசகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அச்சொட்டாகக் கண்டு கொள்ளலாம்.

அன்புடன் ஹனீபா காக்கா (E-Mail :  slmhanifa22@gmail.com  )

9 பின்னூட்டங்கள்

  1. 08/01/2012 இல் 18:56

    unga perleye vara povuthaa… aacharyamaa irukke…

    Visham… subhu nerathula kathavai thattunaa ethaavathu Vishayam irukkum

  2. 09/01/2012 இல் 14:55

    ஹனிபாக்காவின் பட்டியலும், மற்ற வாசகர்களின் பட்டியல்களைப் பார்க்க அவர் படும் ஆவலும் மலைக்க வைக்கிறது.

    இங்கு வருபவர்களிலேயே வயதால் மிக்கவும் இளையவர் ஹனிபாக்காதான்

  3. தாஜ் said,

    09/01/2012 இல் 16:21

    ஹனிபாக்கா…
    வணக்கம்.
    உங்களது இலக்கியத் தாகம்
    மலைக்க வைக்கிறது.
    நீங்கள் இத்தனைக்கு
    இனிய மனிதறாக விளங்குவதற்கு
    நீங்கள் கொண்டிருக்கும்
    இலக்கியத் தொடர்பு
    பெரிய காரணம் என்று விளங்கினாலும்
    உங்களது இலக்கியக் காலதல்
    மானுட காதலைத் தாண்டி நிற்கிறது.
    எங்களது…
    க.நா.சு.வையும்
    நகுலனையும்
    திலிப் குமாரையும் பற்றிப் பேசும் நீங்கள்
    எனக்கு வியப்பானவரே!
    நீங்கள் ‘க்ரியா’வைப் பற்றிப் பேசி இருப்பதில்
    கூடுதல் மகிழ்ச்சிக் கொண்டேன்.
    ஆபிதீனை கண்டுக் கொண்டு
    நட்புக் கரம்(அதையும் தாண்டி)
    நீட்டியது மிகுந்தச் சரி.
    ஆனால்…
    அன்றைக்கு உங்களை
    இத்தனை ஆழமானவர் என்று
    துளியும் நினைக்காதுப் போனதற்கு
    இன்றைக்கு…
    எனக்குள் நான் சங்கடம் கொள்கிறேன்.

    35-வது புத்தகச் சந்தையை நேரத்து
    அன்போடு
    -தாஜ்

  4. 09/01/2012 இல் 16:54

    //அன்றைக்கு உங்களை
    இத்தனை ஆழமானவர் என்று
    துளியும் நினைக்காதுப் போனதற்கு
    இன்றைக்கு…
    எனக்குள் நான் சங்கடம் கொள்கிறேன்//

    எனக்குத் தெரிந்த அழகான சங்கடங்களில் ஒன்று!

    காக்காவின் ஆழம் இந்த சுட்டியிலும் இருக்கிறது:

    http://www.noolaham.net/project/01/90/90.htm

    இறங்கி முக்குளித்துவிட்டு வந்து ஆசுவாசப்படவும்!

  5. 09/01/2012 இல் 18:13

    எஸ்.ராமகிருஸ்னன், ஜெயமோகன் சிறந்த சிறுகதைகளை தொகுத்தளித்தது போல தனக்கு பிடித்த சிறந்த நூல்களின் பட்டியலை ஹனிபா காக்கா ஆபிதீன் பக்கத்தில் வெளியிட வேண்டுகின்றேன்.

    சுஜாதா அப்படி அறிமுகம் செய்ததில் தான் ஓரளவு நல்ல நூல்களின் பரிச்சயம் ஏற்பட்டது.

    தொடர்ச்சியாக அருமை தாஜும், ஆபிதீன் நானாவும் வெளியிட வேண்டுகின்றேன்.

  6. அ.மு.செய்யது said,

    10/01/2012 இல் 09:43

    ஹனீபா காக்காவின் கடிதம் சுவாரஸ்யம் மிகுந்தது.நாடு விட்டு நாடு க‌ண்டிப்பாக‌ வாங்க‌ வேண்டுமென‌ முடிவு செய்திருக்கிறேன்.

    இட‌ப்ப‌க்க‌த்தில் எத்த‌னை எழுத்தாளர்க‌ளின் சுட்டிக‌ள்…!!!!!!!! வாசிக்க‌ வேண்டிய‌து நிறைய‌ இருக்கிற‌து. ஒரு மிக‌ப்பெரிய‌ புத்த‌க‌த்தை வாங்கிய‌ திருப்தி ஏற்ப‌டுகிற‌து.

    ந‌ன்றி நூருல் அமீன்.

  7. nafeel said,

    17/01/2012 இல் 11:13

    anna manithar neengal… palapalankalai thaniya saapedu vedeerkala?

  8. Siraj Deen said,

    24/01/2012 இல் 09:01

    now only joining


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s