‘சிட்டி கேர்ள்’ சபிதா இப்ராஹிம் – சிலாகிக்கிறார் ’சீர்காழி பாய்’

ஃபாத்திஹா ஓதாத குறையாக பவித்திரம் கொண்டு தெரிகிறதாம்,  ஆபிதீன் பக்கங்கள். கிண்டலடித்திருக்கிறார் தாஜ். அதை மாற்ற , இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்களோடு ஒரு  பாடல். விசுவசிக்கு மகனே, நாலு வருடமாக தினமும் கேட்கிறேன் இதை.  ஃபாதர் பீட்டர் சேராநல்லூர் இயற்றிய பாடல் என்று என்று மலையாள நண்பன் சொன்னான். பாடியது யார் என்று ‘லார்ட் ஜீஸஸ்’ ஆல்பத்தின் ஜாங்கிரி எழுத்தைப் பார்த்து பிறகு சொல்கிறேன். நாத்திகன் என்று என்னை தவறாக நினைத்துக்கொண்டு ‘கடவுள் இருப்பது உண்மைதான்’ என்று சுட்டிகள் அனுப்பி மகிழும் குழுவினருக்கு இது அர்ப்பணம். பின்னே, விலயனூர் ராமச்சந்திரன் பற்றிய கட்டுரையின் சுட்டியையா பதிலாக அவர்களுக்கு கொடுக்க முடியும்? தெய்வ  ஸ்நேஹம் மாறுகில்லா… மறையுகில்லா! – ஆபிதீன்

 

Download Song (mp3)

***

அன்புடன்…
ஆபிதீன்

எப்படி இருக்கீங்க?

உங்களுக்கு என்ன…
மீண்டும்
சொந்த மண்ணில்
சிம்மாசன வாசம்!

ம்..
என் வேலைப்பளு காரணமாய்
தொடர்ந்து நான்
ஆபிதீன் பக்கத்திற்கு எழுதாததில்
உங்களுக்கு வருத்தம்
இருக்காதென்றே நினைக்கிறேன்.
விட்டது சனி… இல்லையா.

தவிர,
ஆபிதீன் பக்கம்
சமீப காலமாக
கூட்டிப் பெருக்கி
பாத்திஹா ஓதாத குறையாக
பவித்திரம் கொண்டும் தெரிகிறது.
தோற்றம்தான அல்லது நிஜமா?
தெரியவில்லை.

இஸ்லாமியன் இஸ்லாமியனுக்காக
இஸ்லாத்தைப் பாடுவதில்
தவறு காண முடியாது.
மிகுந்த ’தர்ஜா’வான செயல்.
ஒண்ணுக்கு ஆயிரம்
நன்மைகள் பயக்கும் செயல்.
உங்களுக்கு
சுந்தரிகளோடான சொர்க்கம் ஊர்ஜிதம்.
வாழ்த்துக்கள்.

என் பணியின்
சிக்கலான சிடுக்குகளில் மாட்டி
அதில் வெல்லும் ஆவேசம் கொண்டு
மீண்டும் மீண்டும்
அடுக்கடுக்கான சிடுக்குகளில் சிக்கிச் சிக்கி
காலத்தை அதற்கே செலவழித்தாலும்
எழுத்தின் வழியே
இந்தக் கவிதைக்காரனின்
கலகம் ஓயாது.
இன்று இல்லாவிட்டால் நாளை..
நாளை இல்லாவிட்டால்
அதற்கும் அடுத்த நாள்
கட்டாயம் எழுதுவேன்.
என்னால் எழுதாமலும்தான் முடியுமாயென்ன?
வீங்கி வெடித்துவிட மாட்டேனா?

*
பக்கா வியாபார இதழ் ஒன்றில்
சமீபத்தில் நான் படித்தபோது
அதில் எனக்குப் பிடித்த…
ஒருவரது எழுத்தை
வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அதாவது…
என்னை மறந்து போன
என் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

குறிப்பாய்…
இஸ்லாம் சார்ந்த
சங்கதிகளை மட்டும் வாசிக்கும்
என் இஸ்லாமிய வாசக மணிகள்
உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
இது…
இஸ்லாமியப் பெண் ஒருவரின் எழுத்து!
பெயர்… சபிதா இப்ராகிம்!

யார் இந்த சபிதா இப்ராகிம்?
தெரியாது.
அனேகமாக கல்லூரி மாணவியாக இருக்கக்கூடும்
உள் நகரத்திலிருந்து
தலைநகரத்துக்கு வந்து
படிப்பவராகவும் இருக்கவேண்டும்.

இந்தக் கவிதை
அவரது ஆரம்பக்கால கவிதைகளில்
ஒன்றாக இருக்கும்..
தலைநகர கலாச்சாரச் சிடுக்கில் சிக்கி
சிதையும் சக பெண்களுக்காக
உள்ளார்ந்து கசிந்திருக்கிறார்.
இந்தக் கவிதை
சதாரண தளத்தில் சொல்லப்பட்டிருந்தாலும்
வருங்காலத்தில்
மிகச் சிறந்தக் கவிதைகளை
அவர் நிச்சயம் தருவார்.
அதற்கான அத்தனை அறிகுறிகளும்
அவரது
இந்தக் கவிதை காட்டி நிற்கிறது.

சபிதா இப்ராகிம்
இதற்கு முன் எழுதிய
கவிதை எதனையும்
நான் வாசித்ததில்லை.
வரும்
அஞ்சு – ஜனவரி பார்க்க
சென்னையில் புத்தகத் திருவிழா
போய்வர எண்ணமுண்டு
அப் புத்தக மாகடலில்
சபிதாவின் கவிதைத் தொகுப்பு
கிட்டும் பட்சம்
வாங்கி வாசித்து வாசகர்களுக்கும்
அறிமுகப் படுத்துவேன்.

இப்படி…
இஸ்லாமிய கவிதைப் பெண் ஒருவரை
புதிதாய் கண்டெடுத்து
நான் பதிவு செய்திருப்பதை
என் இஸ்லாமிய இலக்கிய நண்பர்கள்
கவனிக்க வேண்டும்.
உங்களுக்காக நான்
இறங்கி வந்திருக்கிறேன் என்பதை
நீங்கள் யூகிக்க தவறக் கூடாது.
சரியா…
சந்தோஷம்.

நீங்கள்
நமுட்டுச் சிரிப்பு சிரித்தாலும்
மூக்கு வெளுத்து சிவந்தாலும்
உங்களில் ஒருவனாகவே இருப்பேன்.
ஆனாலும்…
என் விமர்சன வரிகள் ஓயாது.
என்றைக்கும் எப்பவும்
விடாது கருப்பு.
-தாஜ்

*

பின் குறிப்பு:

அது எப்படி ஆபிதீன்…!?
தமிழில் கவிதை எழுத
இப்படி
நம் இஸ்லாமியப் பெண்கள்
இத்தனைப் பேர்
திடுதிப்புன்னு
வரிசையாய் கிளம்பி வருகிறார்கள்?

சல்மா‘ த கிரேட்
‘ஃபஜிலா ஆஸாத்‘ எனும் இன்னொரு கிரேட்
அப்புறம்..
கிரேட் அண்ட் கிரேட் ‘அனார்
இப்போ…
நட்சத்திர கிரேட்டாக
சபிதா இப்ராகிம்!
இதெல்லாம் எப்படி ஆபிதீன்?

நாமெல்லாம்
தமிழ் இலக்கிய வட்டத்திற்குள்
காலடி வைத்து
வலம் வர தொடங்கிய போது
கவிதை எழுதும் பெண்கள் என்பதுதான் ஏது?
அங்கொன்று இங்கொன்று என
இருந்தார்கள் என்றாலும்…
அவர்களை
அபூர்வ சங்கதியாகவே பார்க்கப்பட்டது.

அன்றைக்கு
கவிதை எழுதும்
இஸ்லாமியப் பெண்கள்
என்பதே இல்லை.
தேடினாலும் கிடையாது.
கிட்டத்தட்ட
தமிழின் நுட்ப இக்கியத்தில்
நம்மவர்கள் என்பதே சைஃபர்.
நாமெல்லாம்
அந்தப் பக்கமே
மூச்சுக்காட்ட முடியாது
என்பதுதானே நிஜம்.

இஸ்லாமியப் பெண்கள்
இந்த அளவுக்கு
நவீன கவிதை எழுத வருவார்களென
நாம் கனவேணும் கண்டிருப்போமா?
கால ஓட்டத்தில்
எல்லாம்
மாறுதல்களுக்கு உட்பட்டது என்பதும்தான்
எத்தனை சத்தியம்!

இப்படி
மாறும் காலத்தைப் பற்றியும்
மாற்றும் காலத்தைப் பற்றியும்
கவனம் கொள்ளும்படி
நீங்கள்தான்
நம் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும்.
தாஜ்

*

‘சிட்டி கேர்ள்’
சபிதா இப்ராகிம்

 

நைட் கிளப் வாசலில்
நடுநிசியில் காணலாம்
நகரம் எனும் பீடத்தில்
அடுத்த பெண் பலி

மெள்ள மெள்ள
மென்மை இழக்கிறாள்
முட்டுச் சந்தில்
மாட்டிக்கொண்ட பூனை
புலிக் குணம் கொள்வதைப்போல்

செயற்கையாய் இமை அசைக்கிறாள்
செயற்கையாய் நடக்கிறாள்
செயற்கையான செடிகள் வளர்க்கிறாள்
செயற்கையாய் சிரிக்கிறாள்
முறைக்கிறாள்
பேசுகிறாள்
இயற்கையானதொரு
வெப்பம் தகிக்கிறது – அவள்
தாய் வழிக் கதிரொளியிடமிருந்து

முக நூலின்
நண்பர் வட்டாரம்
தொள்ளாயிரத்தைத் தொட்டுவிட்டது
அடுத்த மாடியின்
ஒற்றைச் சுவர் பிரித்த
அடுத்த வீட்டுப் பெண்
அனிதாவோ அலமேலுவோ?!

காளை அடக்க வேண்டாம்
கல்யாணக் கல் தூக்க வேண்டாம்
காதலி இருந்தாலும் மன்னிக்கப்படும்
காதலன் இல்லாதவனாய் இருந்தால்
மட்டும் விண்ணப்பிக்கவும்

மெல்லிய கொடி இடையாள்
மருண்ட மான் விழியாள்
வழக்கொழிந்தன
கணினிக் கன்னி
கை பேசிச் சொல்லினள் என
மாறின சொலவடைகள்

செந்தேன் தாய்
தமிழ் மொழி மறந்து
உடைந்த ஆங்கிலத்தை
ஒட்டவைக்க முயற்சிக்கிறாள்
நகர் எனும் பெருங்கடலின் அலைகளில்
கால் நனைக்கத் துவங்கியவள்

மாதமொரு
அழகு நிலையம்.

தோல் பராமரிப்பு
சிகை அலங்காரம்
புருவம் திருத்துதல்
நகம் களையவும்கூட….

வீடிருக்கும் ஊர் சென்று
விடுதி திரும்பும்போதெல்லாம்
மறவாமல் இட்டு வருகிறாள்
முற்றத்து மருதாணியை
வட்ட வட்டமாக.

விளக்கு வைக்கும் முன்
வீடு வந்து சேர் என்கிறாள்
பத்தாம் பசலிகளில்
பதினோராம் தாயாக.

முகமறியா இளம் பெண்
சிதைந்த சேதி அறியும்போதெல்லாம்
அடைகாக்க முயல்பவளைப்போல

அப்படித்தான் இருப்பாள்
அம்மா.

கிராமத்துத் தோழி கேட்கிறாள்
“எப்படி இருக்கிறது நகரம்?” என
மேகங்களின் வடிவங்களுக்குப்
பெயர் சூட்டியபடி…

மின் கம்பிகளின் நடுவே
திட்டுத் திட்டாய் வானம்
ஒட்டியிருக்கிறதென்றும்
பகிர்ந்துண்ணுவதில்லை
பறித்து உண்ணுகின்றன
காகங்கள் என்றும்
ஒலிப்பான்களின் நடுவே தேய்ந்தன
பட்சிகளின் காணமென்றும்
என் பசைக் கோலம் கண்டு
ஏமாந்த எறும்புகள்
‘பிடி சாபம்’ என்றதையும்
எப்படிச் சொல்ல!

***
நன்றி: ஆனந்த விகடன்/ 2.11.11
வடிவம் & தட்டச்சு: தாஜ் | satajdeen@gmail.com
11:41 PM 23/12/2011

8 பின்னூட்டங்கள்

 1. jafar sadiq said,

  24/12/2011 இல் 12:20

  Abideen, Kadavul iruppadhu unmaidhaan endra suttiyai naandhaan ungalukku anuppinen. Adhu kuthuvadharkaaga alla. Summa oru information-kku. Adhai naan pala nanbargalukkum auppiyullen.

  • 25/12/2011 இல் 10:34

   அந்த தட்ஸ்தமிழ் சுட்டில இருக்கிற “மேட்டரை” விட தலைப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? தவிர கடவுளை இத்தனைக்குச் சிறிதாக்கிப் பார்ப்பதில் ஏன் மக்களுக்கு இத்தனை ஆர்வம்னு ஆன்மிகவாதியான ஆபிதீனைக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்ததுதான் எனக்குக் கிடைத்த அவரது பதில்.

   அது இருக்கட்டும்; விலயனூர் ராமச்சந்திரன் பற்றிய கட்டுரையில் வரும் கடவுள் பெரிதாக இருக்கிறார். (‘Higgs Boson’ என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள்ஸை விட)

 2. 24/12/2011 இல் 16:53

  நவீனத்தை வலிந்து பூசிக்கொண்ட நங்கையின் கையறுநிலை சொல்லும் வரிகள்:

  //காதலி இருந்தாலும் மன்னிக்கப்படும்
  காதலன் இல்லாதவனாய் இருந்தால்
  மட்டும் விண்ணப்பிக்கவும்//

  சபிதாவின் கிண்டல் வளம்.

  //மின் கம்பிகளின் நடுவே
  திட்டுத் திட்டாய் வானம்
  ஒட்டியிருக்கிறதென்றும்// சொல்வது
  அவரது கூர்மைப்பார்வையின் விஸ்தீரணம்

  திடீரென்று தன்னிலை கொள்ளும் வரிகள்:

  //என் பசைக் கோலம் கண்டு
  ஏமாந்த எறும்புகள்
  ‘பிடி சாபம்’ என்றதையும்
  எப்படிச் சொல்ல!//

  இத்தனைக்குப் பின்னும்
  ஏமாந்தவை “எறும்புகள்”தானாம்.

  மறக்காமல் பெயரின் பிற்பாகத்தைச் சேர்த்துக்கொண்டதுபோலவே
  அதீத புத்திசாலித்தனம்;
  அருமை.

  • தாஜ் said,

   24/12/2011 இல் 20:28

   மஜீத்…
   நான் என்னத்தைச் சொல்ல.
   பிரமாதம் போ!

   கவிதையின் மென்னியை
   நச்சென்று நீ
   கவ்விப் பிடித்திருக்கும் விதம்.
   வியப்பிற்குறியது.

   ஆக
   சிதம்பர ரகசியம்
   பட்டவர்த்தனமாகிவிட்டது உனக்கு..
   இனி நீ
   கவிதை எழுதலாம்.
   அந்த வண்ணப் பொழுதுக்காக
   காத்திருப்பேன்..
   வாழ்த்துக்கள்.
   -தாஜ்

 3. 25/12/2011 இல் 13:02

  /மின் கம்பிகளின் நடுவே
  திட்டுத் திட்டாய் வானம்
  ஒட்டியிருக்கிறதென்றும்
  பகிர்ந்துண்ணுவதில்லை
  பறித்து உண்ணுகின்றன
  காகங்கள் என்றும்
  ஒலிப்பான்களின் நடுவே தேய்ந்தன
  பட்சிகளின் காணமென்றும்
  என் பசைக் கோலம் கண்டு
  ஏமாந்த எறும்புகள்
  ‘பிடி சாபம்’ என்றதையும்
  எப்படிச் சொல்ல!/ எளிமையான இனிய கவிதை.

  எங்களுக்காக இறங்கி வந்த தாஜுக்கு நன்றி!

  நீங்கள் தந்த சுட்டியில் தந்த சபிதாஇப்ராஹிமின் கனவு பயணத்தில் வரும் ‘இல்லாமல் இருந்தால் நல்லது’ – கலக்கலான வரிகள்.

  கனவுப் பயணம் :

  ஆறு வயது மகளின்

  கனவுக்குள் பிரவேசிக்க

  நேரிட்டது ஒருநாள்

  பட்டாம் பூச்சி மீது பயணம்

  சித்திரக்குள்ளன் சிநேகம்

  சாக்லேட் வீடு

  ஐஸ்க்ரீம் சாலை

  கனவிலிருந்து வெளியேற

  வழி தேடினேன்

  இல்லாமலிருந்தால்

  நல்லது !

 4. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  25/12/2011 இல் 15:56

  அருமைத் தம்பி தாஜ்!

  சபிதா இப்ராஹீமின் கவிதையைத் தந்ததற்காக வாழ்த்துக்கள். தமிழ்க் கவிதை, இஸ்லாமியக் கவிதை, பெண் கவிதை… இன்னும் கவிதைகளில் என்னென்னமோ நானறியேன்.

  அவருடைய ஏனைய கவிதைகள் ஒன்றிரண்டையும் எடுத்து விடுங்கள். எங்கள் மண்ணில், அனார், பஹீமா ஜஹான் என்று ஜமாய்க்கிறார்கள்.

  சபிதா இப்ராஹீமை இவர்களின் கவிதையையும் படிக்குமாறு எடுத்துச் சொல்லுங்கள்.

 5. தாஜ் said,

  26/12/2011 இல் 00:02

  காக்காவுக்கு
  தம்பி தாஜ்…

  நம் வாசக அன்பர்களை
  கவிதையின் பக்கம் நகர்த்தவும்
  அவர்களை
  அதன் சுகந்தத்தில்
  திளைக்க விடவும்
  கவிதைக் குறித்த அறிமுகத்தை
  பல தினுசுகளில் எழுத வேண்டி இருக்கிறது.
  கவிதை…
  கவிதையைத் தவிர
  வேறு ஒன்றுமில்லை.

  சபிதா இப்ராகிம் என்று மட்டுமல்ல
  பின்தங்கிய
  நம் சமூகத்திலிருந்து
  கவிதை என்கிற உயர்ந்த தளத்திற்கு வரும்
  நம் பெண் பிள்ளைகளை
  தொடர்ந்து நான்
  சீர் தூக்கி எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்..

  சல்மா/
  ஃபஜிலா ஆசாத்/
  அனார் –
  போன்றோர்களின் கவிதைத் தொகுப்பு குறித்து
  நான் எழுதி இருக்கிறேன்.
  அந்த வரிசையில்
  இப்போது
  சபிதா இப்ராகிம்.

  ஆபிதீன் பக்கங்களில்
  கவிதைக் குறித்த சங்கதிகளை
  அவ்வப்போது எழுதி வருவதை
  ஆர்வமுடனேயே செய்து வருகிறேன்..
  இனியும்
  தொடர்ந்து எழுதுவேன்.

  காக்கா என்னை
  ஆசீவதிக்க வேண்டும்.
  -தாஜ்

 6. அனாமதேய said,

  21/05/2013 இல் 21:37

  சபிதாவின் முதல் கவிதை தொகுப்பு “ஒரு புன்னகையின் தொலைவில்” என்று பெயரில் விஜயா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறார்கள் தவிர பிப்ரவரி 14 ஆ னந்த விகடன் ‘ல் ஒரு சிறுகதையும் வந்து இருக்கிறது படியுங்கள் தோழர்களே


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s