கதிர்வேல்பிள்ளையின் கலகம்

ஆபிதீன்,

உங்கள் தேசத்துக்குப் போயிட்டீங்களா வாப்பா?

ஒரே பிசியாக்கும். முச்சந்தி இலக்கியத்திலிருந்து ஒரு பாடலை கவிதையாகப் பிரகடனம் செய்து நானும் மகன் ஸபீரும் அனுப்பியிருக்கிறோம்.

தமிழ்த் தேசியவாதிகளுடன் கொஞ்சம் உரசிப் பார்க்கிற குணந்தான். நல்லதாகப் பட்டால் போடுங்கள்.

நாகூர் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்து என்று உங்க ஊரைச் சேர்ந்த முகம்மது அண்ணாவியார் சிங்கைப் பதிப்பகம் மூலம் 1985ல் ஒரு நூலைக் கொண்டு வந்துள்ளதாக முச்சந்தி இலக்கியத்தில் வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார். அவரைப் பற்றி ஜாபர் நானாவை கேட்டுப் பாருங்களேன்.

உடல் நலம் அவ்வளவு உற்சாகமாக இல்லை. பழைய ஹனீபா காக்கா இன்னும் பழசாகிக் கொண்டு போகிறார் போல் தெரிகிறது.

அனைவருக்கும் என்னுடைய பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்

***

காலத்தை வென்ற கவிதை 3

ஸ்ரீலங்கா தேசத்தில் 1915ல் நிகழ்ந்த சிங்கள-முஸ்லிம் இனச்சங்காரம் உலகறிந்தது. முஸ்லிம் சிறுபான்மை இனத்தவருக்கெதிராக சிங்களவர் அன்று அவிழ்த்து விட்ட அராஜகத்துக்கான வயது இன்னும் இரண்டாண்டுகளில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

சிங்களவரின் அராஜகத்தை நேரில் பார்த்த அன்றைய பிரிட்டிஸ் கவர்னர், கலவரத்தை அடக்கியதுமல்லாமல், சிங்களவருக்கெதிரான கர்ண கடூர அறிக்கையன்றையும் மகாராணிக்கு சமர்ப்பித்தார்.

சிங்களவருக்கு பெரும் தலைகுனிவை உண்டாக்கிய அந்த அறிக்கைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த சிங்களத் தேசியவாதிகள், தங்கள் சார்பில் தமிழ்த் தேசியப் பெருந்தகை சேர். பொன் ராமநாதன் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை பிரித்தானியாவுக்கு அனுப்பி, முஸ்லிம்களே கலவரத்தை உண்டாக்கியவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் கருத்தையும் மகாராணியிடம் எடுத்துக் கூறி, சிங்களரின் அராஜகத்துக்கு தமிழ்த்தேசியவாதிகள் அத்தர் பூசினர். இது சத்தியம்.

இதில் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள் தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்களே. குறிப்பாக, நாகூர், மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, காயல்பட்டணக்காரர்களே ஆகும்.

வரலாற்றில் கறைபடிந்த அந்தக் கலவரம் பற்றி திருச்சி ஷர்ப்பந்துகடை கதிரவேலுப்பிள்ளை அவர்கள் பாடிய ‘சிலோன் கலக சிந்து’வை காலத்தை வென்ற கவிதைகள் வரிசையில் சேர்த்துக் கொள்வோம்.

இத்தனையாண்டுகளில் நான் படித்த நூறு நூல்களை பட்டியலிட்டால், பேராசிரியர் டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களின் ‘முச்சந்தி இலக்கியம்’, பட்டியலில் முதன்மை பெறும்.

ஆதாரம்: முச்சந்தி இலக்கியம்
பதிப்பாசிரியர்: பேராசிரியர் டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி
காலச்சுவடு பதிப்பகம்

SLM. HANIFA

***

சிலோன் கலக சிந்து
திருச்சினாப்பள்ளி ஷர்ப்பந்துகடை கதிர்வேல்பிள்ளை
திருச்சி
ஸ்ரீகிருஷ்ணவிலாசம் அச்சுயந்திரசாலை
நெ.10, பழய மைலஞ்சந்தை, திருச்சி

1915 பை:6

கும்மி

இஸ்லாமானவருக்கும் சிலோனில்
இருக்கும் சிங்கள ஜாதியருக்கும்
பேசிய கலகம் வந்துதென்று சொல்லி
பெண்களா நீங்களும் சொல்லுங்கடி    (1)

நேஷனல் பாங்கியின்னெதிரினிலன்று
நேர்ந்தக் கதையை என்ன சொல்வேன்
பேசிய நோட்டைப் பிடிங்கிக்கொண்டு
போட்டாராம் பூசையும் பாருங்கடி   (2)

பெருத்த கலகமாய் முடிந்திடவே அங்கங்கே
பூட்டிய கடைகளை சாத்திக் கொண்டு
வருத்தமாகவே ஊரை விட்டெல்லோரும்
வோடியே போனாராம் பாருங்கடி   (3)

ஜனங்களை அடித்ததும் போதாமால் பிறகு
சாத்திய கடையையும் உடைத்து விட்டு
பணங்களைக் கொள்ளையடிக்கவென்று
பாவியான சிங்களவர் கூடிவிட்டார்  (4)

பனிரண்டு லட்சம் மதிப்புள்ள கடையன்றில்
பாங்குடன் சாமானைத் தானெடுத்து
வண்டிகள் செல்லும் பாதையிலேயிவர்கள்
வாரியே போட்டாராம் பாருங்கடி   (5)

சிலோனில் நடைபெறும் இஸ்லாம் மித்திரனென்னும்
சிறந்த பேப்பராபீஸ்யன்றை
கலகக்காரர் சேதப்படுத்தி விட்டு
காற்றாய் பறந்தாராம் நேசர்களே   (6)

ஓடிப்போகவே எண்ணமிட்டொருவர் அன்று
உண்மையாய் ரெயிலடி வந்திருக்க
கூடியே நோட்டையும் பறிகொடுத்துயிவர்
குந்தியழுததைப் பாருங்கடி   (7)

நாகூர், மதுரை, புதுக்கோட்டை யிந்த
நாகப்பட்டணமுதல் தூத்துக்குடி
சாகாமல் வெகுஜனம் ரெயிலேறி அப்போ
சடுதியில் வந்துமே சேர்ந்து விட்டார்  (8)

திருச்சினாப்பள்ளி நானா மூனா வென்னும்
சீமானென்பவர் தன் வீட்டெதிரில்
இருக்கும் பள்ளியில் அடிபட்டு வந்தவர்
இரங்கியே இருந்தார் பாருங்கடி   (9)

நாடெங்கும் கலகமாய் முற்றிடவே நம்மை
யாழும் கவர்மெண்டார் யேது செய்தார்
தேடிய துருப்புகள் வந்தவுடன் பாரா
தெருவெங்கும் காவல் போட்டுவிட்டார்  (10)

கர்ணல், கமிஷனர், சார்ஜெண்டு துரையும்
கெவர்னர் செக்டேரி சூப்ரண்டுடன்
தர்மதுரைமார் ரங்கிருந்து அப்போ
தாவிய கலகத்தை அடக்கி விட்டார்  (11)

நாம் செய்த புண்ணியத்தாலல்லவோ நம்
இங்கிலீஸ் அரசாட்சி இருந்ததடி
யெமனைப் போல் வந்த கலகத்தை பிரிட்டன்
எப்படியோ பிடித்தடக்கி விட்டார்  (12)

ஜாதி பேதம் வையாமல் பெரும்
சண்டைகள் நம்மவர் செய்யாமல்
நிதியானசிலோன் தேசத்தை யிப்போ
நிலைக்கச் செய்தார் துரைத்தனத்தார்  (13)

தேசக்குடிகள் செழிக்கவென்றே நம்ம
ஜியார்ஜ் சக்கரவர்த்தி எண்ணமடி
மோசம் செய்வோரை சிறையிலிட்டு நம்மை
முற்றிலும் ரட்சித்திடுவாரெண்ணுங்கடி  (14)

ஐநூறென்று சொல்வார் காயப்பட்டோர்
அறுநூறென்று சிலர் சொல்வார்
பையவே மாண்டவர் தன் கணக்கை மித்திரன்
பேப்பரை பாருங்கள் நேசர்களே  (15)

முனிசிபாலிடியார் செய்த நன்மைகளை
முச்சூடும் சொல்லவும் கூடுமோதான்
கோணி கோணியா அரிசிகளை வாங்கி
கொட்டியே வித்தாராம் பாருங்கடி  (16)

நடந்த சங்கதி யாவற்றையும் மித்திரன்
பேப்பரைப் பார்த்துச் சொன்னேனடி
கடந்த மாதத்தில் நடந்த செய்தியை
கதிர்வேலன் சொல்லி முடித்தேனடி  (17)

***

நன்றி :  எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்

***

மேலும் பார்க்க :

குஜிலி – இரா. வசந்த குமாரின் பதிவு

முச்சந்தி இலக்கியம்  –  நாஞ்சில் நாடனின் விமர்சனம்

4 பின்னூட்டங்கள்

 1. 15/12/2011 இல் 15:54

  //தமிழ்த் தேசியவாதிகளுடன் கொஞ்சம் உரசிப் பார்க்கிற குணந்தான்//

  பின்னே?
  நீங்க சொல்றது போனமாசம் (1915)
  அவுக சொல்றது இந்தமாசம் (83க்குப் பிறகு)

  எது குறைவாக இருந்தாலும், உண்மை எவ்வாறிருந்தாலும், வீராப்பு மட்டும் குறைவாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளக் கூடாத ஒரு இனம் நாம்.

  தங்கஊசியென்று குத்திக்கொண்டு குருடாகிவிட்டாலும், ஊசி சொக்கத்தங்கத்தில் செய்யப்பட்டதென்று பெருமைபாட வேண்டும்.

  இல்லையெனில், இனவுணர்வற்றவனென்று ஒப்புக்கொள்ளவேண்டும்.

 2. 16/12/2011 இல் 14:18

  ///உடல் நலம் அவ்வளவு உற்சாகமாக இல்லை. பழைய ஹனீபா காக்கா இன்னும் பழசாகிக் கொண்டு போகிறார் போல் தெரிகிறது.///

  ஹனிபா காக்கா, கவலை கொள்ளாதீங்க, மரம் பழசானா நிலக்கரி, நிலக்கரி பழசானா வைரம். மதிப்பு கூடுதுன்னு சொல்லுங்க.. உங்க பின்னாலெதான் நானும் இருக்கேன்.

 3. தாஜ் said,

  16/12/2011 இல் 22:57

  அருமையானப் பதிவு!

  //ஆபிதீன்,
  உங்கள் தேசத்துக்குப் போயிட்டீங்களா வாப்பா?//

  காக்காவின் தொடக்கமே அமர்க்களம்.

  ஆபிதீனின் பக்கங்களில்
  ஹனிபா காக்கா
  தொடர்ந்து
  கட்டுரைகள் எழுத வேண்டும்.
  எதிர்ப்பார்க்கிறேன்.
  நன்றி.
  -தாஜ்

 4. nafeel said,

  17/01/2012 இல் 08:09

  angal makathu salvai hanifa sir…ungal alutthai padika aaval malidukerathu..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s