அல்-பத்தானியின் ஆய்வுகளும் பங்களிப்பும் – ஹமீது ஜாஃபர்

எனக்கு பட்டான்தான் தெரியும்! –  ஆபிதீன் 

*** 

அல்-பத்தானி – அருட்கொடையாளர்  9

ஹமீது ஜாஃபர்

நவீன உலகம், உயர்நிலை தொழில்நுட்பம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமே உண்மையிலேயே நாம் அவற்றுடன் / அதில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் என்னுள் லேசாக இருக்கிறது. விரல் சொடுக்கும் நொடியில் உலகை வலம் வருகிறோம் இணையத்தின் வழியாக. இங்கே இருந்துக்கொண்டு எங்கோ இருக்கும் ஒருவருடன்/ ஒருத்தியுடன் பார்த்துக்கொண்டே பேசுகிறோம் கைபேசி, கணினி வாயிலாக. மனிதன் செய்யும் வேலையெல்லாம் ஒரு இயந்திரத்தைச் செய்ய வைத்துவிட்டோம். இவையெல்லாம் உயர் தொழில்நுட்பத்தின் அடையாளமா? “Whenever the company grows more and more our products become smaller and smaller” என்று ‘SONY’ கம்பெனி 50-60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதுபோலத்தான் எல்லாம் சிறிதாகிக்கொண்டு வருகிறது. என்றாலும் என் சந்தேகம் தீரவில்லை.

எவ்வளவுதான் hi-tech ல் இருந்தாலும் ஒரு சுனாமி வருவதை முன்கூட்டியே அறியமுடியவில்லை; ஒரு பூகம்பம் வருவதை அறியமுடியவில்லை. வந்தபின் இத்தனை ரிக்டர் ஸ்கேலில் இருந்தது என பீய்த்துக்கொள்கிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும் நம்மிடையே (முஸ்லிம்) பிறை பார்ப்பதில் குடுமிப்பிடி சண்டை இருந்துக்கொண்டுதானே இருக்கிறது…!

இப்படி எல்லாக் கருவிகளையும் கையில் வைத்துக்கொண்டு குழப்பத்துடன் வாழ்வது நவீனமா? இல்லை எந்த கருவியுமில்லாது, நீயா நானா இல்லாது மிகத் துல்லியமான கண்டுபிடிப்புகள் உலகுக்கு வந்ததே அது நவீனமா? மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த வசதியும் இல்லாது பல டன் எடையுள்ள பெரும் பாறைகளை அடுக்கி பாலைவனத்தில் உண்டாக்கிய பிரமிடின் ரகசியத்தைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இன்ஜினியர் கட்டும் வீடு இருபது வருஷத்தில் பல்லை இளிக்கிறது. கொத்தனார் கட்டிய வீடு ஐம்பது வருஷமானாலும் அப்படியே இருப்பதின் ரகசியம் தெரியவில்லை..! என்ன நவீன தொழில்நுட்பம்?

பூமியை மையமாக வைத்து மற்ற எல்லா கோளங்களும் அதனை சுற்றிவருகிறது என்ற  பண்டைய வானவியலாளர்கள், சூரிய வருடத்தையும் கணக்கிட்டனர். மத்திய காலத்தில் தோன்றிய வானவியலாளார்கள் சற்றே முன்னேறி சூரிய வருடம் இத்தனை நாள் இத்தனை மணி என வினாடி உட்பட துல்லியமாகக் கணக்கிட்டனர். பண்டைய கிரேக்க எகிப்திய அறிஞர்களின் ஆய்வுகளுடன் நின்றுவிடாமல் அவர்களின் ஆய்வுகளை ஆதாரமாக வைத்து அவற்றில் திரிகோணவியல் கணிதமுறையைப் புகுத்தி நவீனத்துவம் கண்டனர். அவர்கள் வகுத்த வழி இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இப்படி முன் நவீனத்துவம் கண்டவர்களில் ஒன்பதாம் நூற்றாண்டுக் கால பெரியாரும் ஒருவர். ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சாமல், அதிகாரத்துக்கும் பதவிக்கும் ஆசை கொள்ளாமல் தன் அறிவை நம்பி இடைவிடா ஆய்வுகள் செய்து தனது கண்டுபிடிப்புகளை உலகுக்கு சமர்ப்பித்த அப் பெரியவர் இதோ….

 

 

AL-BATTANI (850-929)
أبو عبد الله محمد بن جابر بن سنان البتان

Albategnius, Albategni or Albatenius என லத்தின் மொழியில் பல வகையில் அழைக்கப்படும் அல்-பத்தானி புகழ் மிக்க வானவியாலாளரும், கணிதமேதையுமாவார். இவரது முழுப் பெயர் ‘அபு அப்துல்லா முஹம்மது இப்னு ஜாபிர் இப்னு சினான் அல்-ரக்கி அல்- ஹர்ரானி அல்-சாபி அல்-பத்தானி’  என்பதாகும். அரேபிய முறையில் வம்சம், தந்தை, ஊர் எல்லாம் தன் பெயரில் இணைத்துக்கொண்ட இவர் கி.பி 850/858 ல் தற்போதைய துருக்கி, வடமேற்கு மெஸபடோமியாவுக்கும் உர்ஃபா நகரத்துக்கு தென்கிழக்கே பாலிக் நதி அருகே ஹர்ரான் (பழைய ரோமானியப் பெயர் Carrhae) அருகிலுள்ள பத்தானில் பிறந்தார். இப்னு அல்-நதீமின் கூற்றுபடி இவரது தந்தையும், புகழ்பெற்ற விஞ்ஞானியும் கருவிகள் (instruments) செய்பவருமான ஜாபிர் இப்னு சினான் அல்-பத்தானியிடம் ஆரம்ப கல்வி கற்றார். பின் மேற்கல்வி கற்பதற்காக தற்போது சிரியாவிலிருக்கும் யூப்ரடிஸ் நதிக்கரையோரம் இருக்கும் ’அல்-ரக்கா’ வுக்குப் பயணமானார். அங்கு  கல்வி கற்றதோடு நின்றுவிடாமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அங்கேயே கழித்து பெரும்பாலான ஆய்வுகளை நடத்தினார். கி.பி. 900த்துக்குப் பின் ‘சமாரா’ வுக்குப் புலம் பெயர்ந்து எஞ்சிய வாழ்நாளை  கழித்து கிபி. 929. மரணம் அடைந்தார்.

இவரது முன்னோர்கள் சபயீன் அல்லது செபியன் இனத்தவர்கள் என்றாலும் இவர் முஸ்லிமாக வாழ்ந்தார். செபியன் இனத்தவர்கள் நட்சத்திரங்களை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள். எனவே இவர்கள் நட்சத்திரங்களின் குறிப்புகளும் கதைகளும், வானவியல் பற்றிய ஆராய்ச்சிகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே செய்து வந்தவர்கள். எனவே அக்காலகட்டத்தில் வானவியல் பற்றியும் கணிதவியல் பற்றியும் முக்கிய குறிப்புகள் மலிந்து கிடந்தன. இன்னும் பல வானவியலார்களும் கணிதவியலார்களும் அப்பகுதியில் வாழ்ந்தனர், மேலும் பத்தானியைவிட சற்றே மூத்தவரான ‘தாபித் இப்னு குர்ரா’  என்ற புகழ் பெற்ற கணிதவியலாரும் பத்தானியின் இளமைக் காலத்தில் ஹெர்ரானில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்-பத்தானின் ஆய்வுகளும், பங்களிப்பும்

அல்-ரக்காவுக்கு வந்தபின் சுமார் 42 வருட காலம் தொடர் ஆய்வுகள் செய்து வானவியல் அட்டவணை வெளியிட்டார். இப்னு அல்-நதீம் தனது ‘ஃபிஹ்ரிஸ்த்(Fihrist)லும் இப்னு அலிகுத்துபியின் ‘தாரிக் அல்-ஹுக்கமா’ விலும் அல்-பத்தானியைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் ஜியோமிதி, வானவியல்,  மற்றும் சோதிடவியலிலும் கொள்கைவழி விளக்கத்திலும் செய்முறை விளக்கத்திலும் மற்ற எல்லோரையும்விட முதன்மை பெற்ற சிறப்பு வாய்ந்த ஆய்வாளாரக இருந்தார் என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் இவரின் புகழ்வாய்ந்த நூலான ‘கித்தாப் அல்-ஜிஜ்'(Persian: زيج Zij-work with astronomy and tables) ல் சூரியன், சந்திரனின் சொந்த ஆய்வினையும் அவைகளின் சுழற்சி பற்றி  தாலமியின்  புகழ் பெற்ற நூலான Almagest  ல் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கித்தாப் அல்-ஜிஜ், 57 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில் விரிவாகவே ஒவ்வொன்றையும் விளக்கியுள்ளார். கோளங்கள்/celestial sphere [1] முதல் இராசிமண்டலக்(signs of the zodiacs) கோணங்கள் வரையிலான விளக்கங்கள் முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்குகிறது; கணித மூலங்கள், செய்முறைகள் sexagesimal [2] மற்றும் திரிகோண(trigonometric) செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. நான்காம் அத்தியாயத்தில் தனது சொந்த ஆய்வுகள் குறித்து விவரிக்கிறார். 5 முதல் 26 வரையிலான அத்தியாயங்களில் பல்வேறு வானவியல் ஆய்வுகளில் வரும் இடர்பாடுகள் குறித்தும் Almagest லுள்ளவைகளையும் விரிவாக்கம் செய்கிறார்; இதில் 13-16 வரையிலான அத்தியாயங்களில் spherical astronomy யில் ஏற்படும் அனேக குழப்பங்களையும் தெளிவாக்குவதுடன் அவைகளுக்கு தீர்வு காணும் வழியையும் தொகுத்திருக்கிறார் 27 முதல் 31 ம் அத்தியாயம் வரை சூரியன், சந்திரன், மற்றும் ஐந்து கிரகங்களின் (Mercury, Venus, Mars, Jupiter, and Saturn) அசைவு (motion in longitude) பற்றி விவாதிக்கிறார்.

அத்தியாயம் 28ல் தாலமியின் Almagest IIIல் விளக்கப்பட்ட  Hipparchus [http://en.wikipedia.org/wiki/Hipparchus] முறையை பின்பற்றி நான்கு பருவகாலங்களைப் பற்றி விவாதிக்கும் அல்-பத்தானி சூரியனின் மையப் பிழற்சியும்(eccentricity), apogee [3] யும் மாறுபடுவதைக் கண்டறிந்தார். சூரியனின் Apogee  65° 30′ என்கிறார் Hipparchus. ஆனால் அதில் 16° 47′ குறைவு இருப்பதை அறிந்து 82° 17′ எனவும் சூரிய மையப்பிழற்சியில் 2° 29′ 30″ லிருந்து 2° 4′ 45″ இருப்பதாக அல்-பத்தானி அறிவித்தார்.

இருந்தபோதிலும் இங்கே ஒரு முரணான செய்தி கிடைக்கிறது. அல்-பத்தானி முதன்முதலில் அவ்வாறு கண்டறியவில்லை என அபு ஜாஃபர் அல்-காஜினி (900-971),  தன்னுடைய ‘commentry on the Almagest’ ல் குறிப்பிட்டிருப்பதாக அல்-பைரூனி(973 – 1048) கூறுகிறார்.  கி.பி 830 ம் ஆண்டு பாக்தாதில் apogee ஐ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டன, அப்புதிய ஆய்வுகள் மிகவும் பிழையுள்ளதாகவே இருந்தன, அது 20° கும் குறைவானதாக இல்லை. ஓராண்டுக்குப் பின் தாபித் பின் குரா அல்லது பனு மூசா சகோதரர்கள் தாலமியின் பழைய முறையைப் பயன்படுத்தி அது(apogee) 82° 45′ ஆகும்.  இது ஹிப்பார்கஸ் (65° 30′), தாலமியின் மதிப்பும் தவறானது, the motion the apogee 66 வருடங்களுக்கு 1° என காணப்பட்டது என்று மேலும் அதில் விவரித்துள்ளார்.

அவர் உருவாக்கிய அட்டவணைகளை புரிதல் பற்றிய விளக்கமும் மாறுபட்டக் காலவரையரைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி கணக்கிடும் நுணுக்கங்களும்(data)16 அத்தியாயங்களில் கொடுத்துள்ளார். இதில் 39-40 ம் அத்தியாயம் பூமியிலிருந்து சந்திரனின் தூரத்தையும் தோற்றத்தில் நேரிடும் இடமாறு தோற்றத்தையும்(parallax) பற்றி விரிவாக்கம் செய்கிறார். 49 முதல் 55 வரையிலான அத்தியாயங்களில் சோதிடவியலில் எழும் பிரச்சனைகளுக்குத் தெளிவு காணுகிறார். 56 ம் அத்தியாயத்தில் சூரிய மாணி (sundial) அமைப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார். இறுதியாக 57 ம் அத்தியாயத்தில் பல்வேறு வானவியல் கருவிகள்(astronomical instruments) தயாரிப்பது எப்படி என சொல்லிக்கொடுக்கிறார், இதில் அல் பைதா(Al-baidha – the egg) என்று பெயரிட்ட armillary sphere ம் அடங்கும்.

சந்திரன், இன்னும் ஒரு சில கிரகங்களின் சுற்றுப் பாதைகளில் தாலமியின் தவறான கணிப்புகளையும், சூரியனின் annular ecalips (கங்கண கிரகணம்) சாத்தியக்கூறுகளையும், பருவகால ஓரயம் பற்றி மிகநுணுக்கமான கணிப்பும், அயனமண்டலத்தின் சரியான மற்றும் தோராய சுற்றுப் பாதையையும்(true and mean orbit of ecliptic), வெப்ப மண்டல பருவகால(tropical) சுற்றுப் பாதையின் சரியான மற்றும் தோராய அளவையும், சூரியனின் இரு சுற்றுப் பாதைகளையும்(true and mean orbit of sun) மிகவும் நுணுக்கத்துடன் கணித்துள்ளார் என ஆய்வாளர் Prof. Phillip Hitti கூறுகிறார். மேலும் சூரிய வருடம் 365 நாள், 5 மணித்துளி, 46 நிமிடம்,  24 வினாடி என துள்ளியமாக கணித்துள்ளார், இது இன்றைய கணிப்பில் மிக அருகாமையிலுள்ளது என்கிறார். (சரியானது: 365 நாள், 5 மணி, 48 நிமிடம், 45.25 வினாடி; வித்தியாசம் 2நி, 21.25வி குறைவு.  தாலமியின் கணிப்பு: //tropical year as 1/300 of a day less than 365 1/4 days // ie: 365நா, 5ம, 55நி 12வி; வித்தியாசம் 6நி 26.75வி அதிகம்).

கித்தாப் அல்-ஜிஜ்ஜில் வரையப்பட்ட சாதனைகளில், 489 நட்சத்திரங்களின் நிலைகளை கணித்துள்ளதும் அடங்கும். மேலும் சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் இரு இடங்களின் சரியான நிலை-precession of the equinoxes[4]  ஒரு வருடத்துக்கு 54.5″ என்று கணிப்பும் பூமியின் சரிவு-inclination of the ecliptic[5]  23° 35′ ஆகும், தாலமி குறிப்பிடுவது 23° 51′ 20″ (actual figure of 23 degrees, 27 minutes, and 8.26 seconds). [equinox :  The equinox is the time of the year when the noon sun is overhead at the equator making day and night equal in length. Equinoxes occur about 21st March and 23rd September.]

அல்-பத்தானி, தான் சுயமாக உருவாக்கிய கருவிகள் துல்லிய அமைப்பாக இருந்தது. வளையங்கள் கோர்க்கப்பட்ட இன்றைய மாதிரி உலக உருண்டை இருப்பதுபோல் armillary sphere கருவியை உருவாக்கினார். இதில் அமைக்கப்பட்ட பல வளையங்கள் கிரகங்களின் அசைவுகளை குறிப்பதாக இருந்தது. இதை இவர் கண்டுபிடிக்காவிட்டாலும் பண்டைய வானவியலாளர்கள் கண்டுபிடித்ததை மேன்படுத்தினார். இது ஏற்கனவே இருந்த கருவிகளைவிட மிகத் துல்லியமாக இருந்தது. இதனுதவியால் பல வானவியல் ஆய்வுகளை கணக்கிடமுடிந்தது, மேலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் நிரந்தரமானதல்ல,  மாறக்கூடியது, இத்தூரம் எப்போது உச்ச உயர்வாக இருக்கும் என்பதையும் கணக்கிட்டார். இவ்வாறு ஏற்படும் மாறுபட்ட தூர வித்தியாசம் சூரிய கிரகணம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதையும் கணக்கிட்டார்.   அபூர்வமாக நிகழும் முழு சூரியக் கிரகணத்தின்போது (annular ecalips) பிரகாசமான ஒளிவட்டம் தெரிவது சூரியன் பூமியிலிருந்து அதிக பட்ச தூரத்திலிருக்கும்(the sun was at its greatest distanance from the earth) காரணத்தால் என்பதையும் அறிவித்தார்.

வான் ஆய்வுகளுக்கு தாலமியைப் போல் ஜியோமிதி முறையைப் பின்பற்றாமல் திரிகோண(trignometry) முறையைக் கையாண்டது குறிப்பிடத் தக்கதாகும். உதாரணமாக அல்-பத்தானி திரிகோணமுறையில் செங்கோண முக்கோணத்தை b sin(A) = a sin(90° – A) என கணக்கிடுகிறார். இம்முறை இடைக்கால (midle age) விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது என Nicolaus Copernicus (d 1543) என்ற இத்தாலிய வானவியலார் தன்னுடைய  ‘De Revolutionbus Orbium Clestium’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

திரிகோணவியலில்(trignometry) கிரேக்க அறிஞர்களின் உபயோகத்தில்ருந்த இரட்டைக் கோண(chord) முறையை மாற்றி முதன்முதலில் sine ஐ அல்-பத்தானி கொண்டுவந்து cosine, tangent, cotangent முறையையும் மேன்படுத்தி பயன்பாட்டில் ஆக்கினார். இது இன்றைய கணிதவியலுக்கு பெரும் துணையாயிருப்பதாக ஜோசஃப் ஹெல் கூறுகிறார்.

இவரது கித்தாப் அல் ஜிஜ், 12ம் நூற்றாண்டை சேர்ந்த இத்தாலிய அறிஞர் Plato Tiburtinus (Plato of Tivoli) என்பவரால் De motu stellarum (On the motion of the stars) என்ற பெயரில் 1116 ல் லத்தினில் மொழிபெயர்ப்பு செய்தார். அது 1537 லும் பின் 1645 லும் பதிவாகியது. இதன் பழைய பிரதி வாடிக்கனில் காண கிடைக்கிறது 1899 ல் இத்தாலிய மொழியில் பிரசுரமாகியது.

அல்-பத்தானி தன் வான்வெளி ஆய்வுகள் பெரும்பாலனவற்றை அல்-ரக்காவில்(now in Syria) செய்திருக்கிறார். அல்-ரக்கா  பாலிக் நதி யூப்ரடிஸ் நதியுடன் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது; அனேக குடும்பங்கள் ஹர்ரானிலிருந்து  இங்கு குடிபெயர்ந்தனர், தவிர அவருடைய ஆய்வுக்கு ஏதுவான நகரமாக அமைந்திருந்ததோடல்லாமல் 5ம் அப்பாஸிய கலிஃபா ஹாரூன் ரஷீத்(786 – 809) பதவி ஏற்றபின் அங்கு கட்டிய அரண்மனை இவரின் ஆய்வுக்கு உதவியாயிருந்தது.

கி பி 900 ல் கித்தாப் அல் ஜிஜ் எழுதிய பிறகு 901 ல் சிரியாவிலுள்ள அண்டியோச்(Antioch) நகரில் இருக்கும்போது ஒரு சூரிய கிரகணமும் ஒரு சந்திரக் கிரகணமும் முறையே 23 ஜனவரியிலும், 2 அக்டோபரிலும் நிகழ்ந்தபின் அதன் ஆய்வை ஜிஜ்ஜில் மீண்டும் குறிப்பிட்டார்.

கி பி 877 க்கும் 918 க்கும் இடைப்பட்ட காலத்தில் தன் ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொண்டார், கி பி 888 ல் நட்சத்திரங்களின் அட்டவனையை உருவாக்கினார். தன்னுடைய அந்திம காலத்தில் , அதிக வரி விதிக்கப்பட்டதைக் கண்டு வெகுண்டெழுந்து அல்-ரக்காவிலிருந்து சிலரை அழைத்துக்கொண்டு பாக்தாத் சென்று  தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அல்-ரக்கா திரும்பினார் என்கிறார் இப்னு அல் நதீம் தனது ஃபிஹ்ரிஸ்த்தில். ஆனால் திரும்பும் வழியில் கஸர் அல்-ஜிஸ்( ஈராக்) என்னும் இடத்தில் இயற்கை எய்தினார் என்கின்றனர் JJ O’Connor and EF Roberson.

இஸ்லாமிய வானவியலாளர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்களிடையே அல்-பத்தானி தனி இடத்தை வகிக்கிறார், அவரின் பங்களிப்பு உன்னதமானது என்று அல்-பைரூனி  தனது நூலான ‘ஜலா அல்-அத்ஹான் ஃபி ஜிஜ் அல்-பத்தானி'(Elucidation of Genius in al-Battānī’s zīj) லும் இஸ்லாமிய வானவியலில் இவரது பணி மகத்தான சாதனை என்று இப்னு கல்தூன்(1332 -1406) ம் புகழ்கின்றனர். அல்-பத்தானின் கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், சாதனைகள் பின்னால் வந்த அறிஞர்களான டைக்கோ ப்ரஹெ, கெப்லர், கலிலியோ  மற்றும் கொப்பெர்னிகஸ் போன்றோர்களின் ஆய்வுகளுக்கு பெருமளவில் பின்துணையாக இருந்தது.

கொப்பெர்னிக்ஸைக் காட்டிலும் அல்-பத்தானின் கண்டுபிடிப்புகள் மிகத்துல்லியமாக இருப்பது வானவியல் அறிஞர்களிடையே இன்றும் பெரும் வியப்பை அளித்துவருகிறது.
 
[1] celestial sphere: 
 The celestial sphere is the sphere on which the stars appear to move in the sky.

[2] sexagesimal:
 In the sexagesimal system calculations are done in the base 60 as used by the Ancient Babylonians.   The remnants of sexagesimal notation remain in our method of telling time and measuring angles.

[3] apogee: 
 The apogee is the point where a heavenly body is farthest away from the centre of its orbit.    The nearest point is called the perigee.

[4] precession of the equinoxes:
 The precession of the equinoxes is a slow westward motion of the equinoctal points along the ecliptic caused  by the greater attraction of the Sun and Moon on the excess of matter at the equator, so that the times at   which the Sun crosses the equator come at shorter intervals than they would otherwise do.

[5] obliquity of the ecliptic:
 The obliquity of the ecliptic is the “tilt” of the Earth’s axis of rotation relative to the ecliptic plane. It is currently about 23.4 and slowly   decreasing

***

Download SunDial and Spherical Triangle Files ( interactive flash animation in html)

**

Sources:

http://www.muslimtents.com/almarja/battani.html

http://www.gap-system.org/~history/Biographies/Al-Battani.html

http://wzzz.tripod.com/BATTANI.html

http://www.britannica.com/EBchecked/topic/56092/al-Battani

http://www.martinfrost.ws/htmlfiles/oct2009/al-battani-iran.html

http://www.answers.com/topic/al-battani

http://ayyampetaifriends.blogspot.com/2011/01/blog-post.html   

http://en.wikipedia.org/wiki/Mu%E1%B8%A5ammad_ibn_J%C4%81bir_al-%E1%B8%A4arr%C4%81n%C4%AB_al-Batt%C4%81n%C4%AB

http://www.encyclopedia.com/doc/1G2-2830900300.html

Encyclopaedia  Britannica Article Battānī-Al

***

 

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

10 பின்னூட்டங்கள்

 1. 12/12/2011 இல் 14:17

  நானாவின் இந்தக் கட்டுரையும் வழக்கம்போல நிறையத் தகவல்களோடு அருமையாக வந்துள்ளது;
  மேலும் தொடரட்டும் இப்பணி ….

  (ஆமா, ஃபோட்டோ எடுக்கும்போது மச்சி எதுக்காக ’வடக்கெ’ திரும்பிக்கிட்டு, தள்ளி நின்னுக்கிட்டாஹ?)

 2. 13/12/2011 இல் 08:48

  அற்புதமான கட்டுரை. நவீனத்தை நக்கல் செய்யும் நகைச்சுவையான கேள்விகள் கூடுதல் சுவராசியம்.

 3. 13/12/2011 இல் 12:12

  கட்டுரை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. இன்னும் இன்னும் எழுதுங்க நானா.

 4. 13/12/2011 இல் 12:45

  நானாவின் (பழைய நினைவு) மகிழ மரத்து கதைகளையும் இடையிடையே எதிர்பார்க்கிறோம்.

  • 13/12/2011 இல் 23:40

   ஆக்கப் பூர்வமா பாய்ந்து கொண்டிருக்கும் நானாவின் அறிவு வெள்ளத்தை மகிழ மரத்தின் பக்கம் திருப்பி விட்டு மடைமாற்றம் செய்யாதீர்கள் காதர் பாய்.

   • 14/12/2011 இல் 11:45

    நீங்கள் சொல்வது சரியேயானாலும் கூட,
    வகுப்பில் படிக்கும்போது ஒரு சயின்ஸ் பீரியட், ஆங்கில பீரியட், சரித்திர – பூகோள பீரியட் நடுநடுவே ‘நான்டீடைல்’ கதை சொல்லும் பீரியடும் இருக்குமே நூருல் அமீன் பாய்.

  • 14/12/2011 இல் 15:40

   அட ‘மகிழமர’த்த விடுங்க, ஆப்பக்குச்சி சிலம்பம் மாதிரி கட்டுரைகளும் எப்படிக்கிடைக்கும், நானாட்ட இருந்து? அதனால அவர் ‘பழைய நினைவுகளு’க்கு -அப்பப்ப போய்த்தான் ஆகனும். இதுவே இந்த நாட்டாமையின் தீர்ப்பு (மாத்தில்லாம் சொல்லமுடியாதுங்கோய்)

 5. 14/12/2011 இல் 19:00

  நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டா வீட்டாமை மீற முடியுமா? சிலம்பாட்டம் இல்லாமெ திருவிழாவா? ஆடலாம், இன்னும் ஒருத்தர் பாக்கி இருக்கார் அவரை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துட்டா அப்புறம் நான் Freeதானே! வரிஞ்சுக் கட்டிக்கிட்டு இறங்கிடவேண்டியதுதான் கோதுவுலெ….!

 6. 27/12/2011 இல் 18:57

  lol


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s