’குணங்குடி மஸ்தானைப் பலரும் அறிவர். ஆனால் சமகாலத்தில் சூஃபி ஞானி , செய்யிது ஆசியா உம்மாவைப் பலர் அறியவில்லை. இவர் எழுதியுள்ள மெய்ஞ்ஞானப் பாடல்கள் எவ்விதமான போலித்தனமும் அற்ற சுயமுத்திரை கொண்ட எளிமையான உயிரோட்டத்தில் பிறந்தவை’ – பிரமிள் ( பாதையில்லாப் பயணம்)
***
செய்யிது ஆசியா உம்மாள்
– அப்துற் றஹீம் அவர்களின் ’முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து…
இவரின் பாரம்பரியமோ பெருமையுடயது. வள்ளல் சீதக்காதியின் இளவல் பட்டத்து மரைக்காயர் என்னும் முகம்மது அப்துல் காதிர் மரைக்காயரின் மகன் முகம்மது அபூபக்கர் மரைக்காயருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மகள் சாறா உம்மாவுக்கும் பிறந்த வள்ளல் அவ்வாக்காறு மரைக்காயர் எனப் புகழ்பெற்ற அப்துல்காதிர் மரைக்காயர். இவரே கீழக்கரை ஜூமாப் பள்ளிவாயிலையும் கீழக்கரை புதுப் பள்ளிவாயிலையும் காயல்பட்டணம் புதுப்பல்ளி வாயிலையும் கட்டுவித்தவர். அவரின் மகள் வயிற்றுப் பேரரே இரண்டாம் சீதக்காதி என அழைக்கப்பெறும் ஹபீபு அரசர் எனப் பீடும்புகழும் பெற்ற ஹபீபு முகம்மது மரைக்காயர். அவரின் வள்ளன்மையின் நறுமணம் இந்நாட்டில் மட்டுமின்றி அரபு நாட்டிலும் பரிமளித்துக் கமழ்ந்தது. அங்குள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் அறிஞர்களுக்கும் வாரி வாரி வழங்கியதோடல்லாது புனித யாத்திரிகர்களின் வசதிக்காக ஜித்தாவுக்கும் மக்காவிற்கும் இடையில் கிணறுகளும் தோண்டுவித்தார் அவர். அவரின் இளவல் அப்துல் காதின் மரைக்காயரின் வழிவந்த ஹபீபு முகம்மது மரைக்காயரின் அருந்தவத்துத் திருமகளே செய்யிது ஆசியா உம்மாள்.
கருவிலே திருவாய்க்கப் பெற்ற அம்மங்கை நல்லார் இளமையியே தனித்திருந்து இறைநேசச் செல்வர்களின் துதிப்பாடல்களை மனனம் செய்து பாடிக்கொண்டிருக்கும் இயல்பினைப் பெற்றிருந்தார். இறைத் தியானத்திலேயே இலயித்து இன்புற்று அவற்றைப் பாடிப் பரவினார். பிறரிடம் அதிகமாகப் பேசாது தம் இல்லத்தின் மேல்மாடியில் தம் பெருமாபாலான நேரத்தைக் கழித்துவந்ததன் காரணமாக ‘மேல் வீட்டுப் பிள்ளை’ என்று அழைக்கப் பெற்ற அவர் அக்காலை தாமாகவே பல பாடல்களைப் பாடினார். அத்துடன் நில்லாது அக்காலை கீழைமாநகரின் ஆன்மீகச் செங்கோலோச்சி வந்த இறைநேசச் செல்வர் கல்வத்துநாயகம் அவர்களை அணுகி அவர்களிடம் தீட்சை பெற்றுச் சீடருமானார். அவர் கி.பி 1948-ஆம் ஆண்டில் தம் எண்பதாவது வயதில் கீழக்கரையில் காலமானார்.
அவர் பாடிய பாடல்கள் ‘மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்’ ‘மாலிகா இரத்தினம்’ என இரு பகுதிகளாக இருக்கின்றன. அவற்றில் இறைவனைப் பற்றியும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் பற்பல இறைநேசச் செல்வர்களைப் பற்றியும் அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தும் அரபுத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.
… …. ….
செய்யிது ஆசியா உம்மாளின் சில பாடல்கள் :
தொண்டியில் அடங்கப் பெற்றுள்ள ஷைகு அபூபக்கர் வலி அவர்கள் மீது பாடியது..
சிந்தையும் நாவையும் ஜெயிக்க முடியவில்லை
ஜெயிக்க வலுதாரும் வலியே!
சித்தி ஆனந்தமெனும் சிவராஜ யோகமென்னில்
தெளிவாக்க அருளும் வலியே!
தன் மூதாதையான சதக்கத்துல்லா அப்பா அவர்களின் அருள் வேண்டி…
எந்தனுக் குள்ளே இலங்கும்உயர் சூட்சியத்தை
விந்தையுடன் காட்டியருள் வேதா சதக்வலியே!
பேசமுடி யாதஉயர் பேரின்ப சாகரத்துள்
ஆசையுடன் முழுக அருளும் சதக்வலியே!
திறமான இம்மல்யகீன் தெளிவுடைய ஐனுல்யகீன்
தரமான ஹக்குல்யகீன் தவமருள் சதக்வலியே
இறைவனை நோக்கி…
தன்னை அறிந்துணர சதானந்த நிஷ்டையருள்
என்னை உன்னில் சேர்த்தே ஏகபராபரனே!
ஆவி அகலுமுன்னே ஆண்டவனே உன்னருளை
ஏவி என்னில் வரச்செய் ஏகபரி பூரணனே!
என்னை உற்றுணர்ந்தேன் ஏதுமில்லை உன்னையன்றி
என்ன கதிதருவாய் ஏகபரி பூரணனே..
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வேண்டி…
சீமான் தனத்துடடைய செல்வர் முஹம்மதென்னுள்
ஈமானைத் தான் நிரப்பும் இறசூல்நபி நாயகமே!
ஈமான் தனை நிரப்பி என்றென்றும் உம்முடைய
கார்மான மாக்கிஎன்னைக் காரும்நபி நாயகமே!
***
நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹ்மீது ஜாஃபர் said,
11/12/2011 இல் 19:45
//என்னை உற்றுணர்ந்தேன் ஏதுமில்லை உன்னையன்றி//
‘இறைவா, எனக்கு எந்த அறிவும் தெரியாது..!’ என்ற அறிவு மட்டும் எனக்குத் தெரியும். –
இது இருந்தால் அது வரும்
–
abdulqaiyum said,
12/12/2011 இல் 11:19
அன்புசால் ஆபிதீன்,
முபீன் சாதியா என்ற இப்பெண்மணியைப் பற்றி உங்கள் கருத்து என்னவோ?
http://mubeensadhika.blogspot.com/
மஜீத் said,
12/12/2011 இல் 12:10
சபாஷ், சரியான கேள்வி.
(நானா என்ன சொல்றாஹன்னு பாக்க ஆசை)
எழுத்தெல்லாம் பாத்தா ஒரு ‘மேதாவி’ன்னு சொல்லத் தோணுது.
ஆனா, ஏதாவது புரிஞ்சாத்தானே அதையும் சொல்லமுடியும்? படிக்கலாம்னா………. “ முடியல”
அது இருக்கட்டும், அடிக்கடி இங்கிட்டு வாங்க
எதையாச்சும் அப்பப்ப எடுத்துவுடுங்க கையூம் சார்.
’நாகூரி’ தளத்தில் மீண்டும் பொங்க ஆரம்பிச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு!
ஆபிதீன் said,
12/12/2011 இல் 12:24
அட, வந்தாச்சா? இனி துபாய் களை கட்டும். அப்புறம்.. நானா என்னா சொல்வாஹா, ’பிரமாதமாக்கிது; இன்னும் படிக்கலே’ம்பாஹா!