அல்-ஃபராபி : அருட்கொடையாளர் -8

’அனாவசியமாக ஆற்றலை வீணடிப்பதுதான் தத்துவம்’ என்று கிண்டல் செய்யும் ஓஷோ,  அதே ஆற்றல் தியானமாகவும் ஆக முடியும் என்பார். இது ஜாபர்நானாவின் தியானம்….

***

அறிஞர் அல்-ஃபராபி

இசை – என்று உலகம் பிறந்ததோ கூடவே இசையும் பிறந்துவிட்டது எனலாம். இயற்கை மீட்டும் இசைக்கு எதையும் ஈடாக்க முடியாது. தூரத்தே விழும் அருவியின் இரைச்சலும், அருகில் ஓடும் நீரோடையின் சல சலப்பும், மரங்களின் இடையே கிழித்துக்கொண்டு வரும் காற்றின் ஓசையும் எந்த இசைக்கும் ஈடாக்க முடியுமா? குயிலின் கூ…கூ..வுக்கும் வண்டுகளின் ரீங்காரத்துக்கும், புல் புல்லின் சீழ்க்கைக்கும் முன்னால்….!?  இசைக்கு மயங்காத மனித இனமோ இல்லை புல்லினமோ இருக்கமுடியாது, ஏன் பயிற்கள் கூட இசையினால் வளம்பெறுகிறது என அறிவியல் கூறுகிறது. இத்தகைய இசையை  இஸ்லாத்தில் வெறுக்கப்பட்டது, அறவே கூடாது, கவிஞர்கள் வீணர்கள் என்றெல்லாம் வலியுறுத்துகிற அறிஞர்கள் ஒரு பக்கம். இல்லை, இது வெறுக்கப்படவுமில்லை கூடாததுமல்ல; ஏற்புடையதுதான், கீழ்த்தர உணர்ச்சியைத் தூண்டக்கூடிய இசையை இஸ்லாம் வெறுக்கிறது  என இசையை வேறுபடுத்திக் காட்டும் அறிஞர்கள் வேறொரு பக்கம்.  இசையே கூடாது, இசைக் கருவிகளை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மன்னர்களும் வரலாற்றில் உண்டு. இந்திய துணைக் கண்டத்தைப் பொருத்தவரை  வடக்கில் இசையில் விற்பண்ணர்களாக இஸ்லாமியர்கள் மிகைத்து நிற்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

இசை வெறுக்கப்படவேண்டியது என்றால் பாங்கொலி ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். மாறாக மக்காவில் சொல்லும் பாங்கிற்கும் மதினாவில் சொல்லும் பாங்கிற்கும், நமதூரில் சொல்லும் பாங்கிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. குர்ஆனை ஓதுபவர்களிடையே வித்தியாசம் காணப்படுகிறது. காரணம் ஒலி, நடை, சந்தம்,  இவைகளில் ஏற்படும் அதிவுர்களின் ஏற்ற இறக்கம். குர் ஆன் கவிதை வடிவில் இருப்பதால்தான் ராகம் சேர்த்து ஓத முடிகிறது, மனனம் செய்ய முடிகிறது. உரை நடை வடிவில் இருந்தால் இசைக்கவும் முடியாது மனனமும் செய்ய முடியாது. தவிர நபி தாவுத்(அலை) அவர்களுக்கு அருளிய ‘சபுற்’ வேதம் தூய இசை வடிவிலானது என்பது வரலாற்று உண்மை. எனவே இசைக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

இசையைப் பற்றி ஆராய்ந்து அதற்காக நூல் எழுதியிருக்கிறார் பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஒரு அறிஞர், தத்துவஞானி, பல் மொழி வல்லுனர் என பல்வேறு துறைகளில் அறிஞரான இஸ்லாமிய சிந்தனையாளர் அல் ஃபராபி

AL-FRABI – (AD 870-950)
The Second Teacher

அல் ஃபராபி, அபு நாஸர் அல்-ஃபராபி,  எனவும் அல் ஃப்ராரபியஸ் என மேற்கத்தியர்களாலும் அழைக்கப்படுகிற  இவரின் முழுப் பெயர் ‘அபு நாஸர் முஹம்மது இப்னு அல்-ஃபராபி’ என்பதாகும். (‘முஹம்மது இப்னு முஹம்மது இப்னு தர்கான் இப்னு உஜ்லக் அல்-ஃபராபி’ என்பதும் சிலர் கருத்து). அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு இரண்டாம் ஆசிரியர்(al Mu’allim al-Thani) என்ற சிறப்பையுடய இவர் தத்துவம், தர்க்கம், மூலதத்துவம்(Metaphysics), இசை, அறவியல்(Ethics), இறைஇயல்(Mysticism), அறிவுநெறியியல்(Epistemology), அறிவியல் என பல துறைகளில் சிறந்து விளங்கிய இவர், எழுபது மொழிகளில் பேசும் ஆற்றல் படைத்தவர். தன் வாழ்நாளில் ஆறு அப்பாஸிய கலிஃபாக்களின் ஆட்சியைக் கண்டவர்.

வாழ்க்கை வரலாறு

இவர் துருக்கிஸ்தானிலுள்ள அல் ஃபராப் அருகிலுள்ள வஸிஜ்என்ற சிறிய கிராமத்தில் பிறந்ததார். இவரது பிறந்த பகுதி பற்றி தெளிவான குறிப்பு ஏதுமில்லை, ஆனால் சமகாலத்தில் வழ்ந்த சிலரின் வாய்மொழி வழியிலும் அல்லது யூகத்தின் அடிப்படையிலுமே இளமைக் கால சரிதைக் கிடைக்கிறது.  சிலர் ஈரானின் வடமேற்கு எல்லை காஸ்பியன் கடலின் சற்றே தூரத்து ஃபராப் என்றும் மத்திய ஆசியாவிலுள்ள ஒதரார்  (பழைய பெயர் ஃபராப்)ல் பிறந்ததாகவும் சொல்கின்றனர். வரலாற்றாசிரியர் இப்னு அல் நதீம்  கூற்றுபடி இவர் கொரஸான் மாகாணத்திலுள்ள ஃபர்யாப் என்ற இடத்தில் பிறந்தார்(மின் அல்-ஃபர்யாப் மின் அர்ளு கொரஸான்) என அறிய முடிகிறது.

ஆப்கானிஸ்தானிலும் ஃபர்யாப் என்ற பகுதி உள்ளது. இப்படி பிறந்த பகுதி தெளிவின்மை இருப்பதுபோல் பிறந்த வருடம் 872 என்பது ஒரு சிலரின் கருத்து என்றாலும் எகோபித்த முடிவு  கி.பி. 870 என்பதாகும். தனது எண்பதாவது வயதில் கி.பி. 950 டிஸம்பர் 14 க்கும் 951 ஜனவரி12 க்கும் இடையில் டெமாஸ்கஸில் இறந்தார்.

இப்னு கல்லிகான் என்ற துருக்கி வரலாற்றாசிரியர் சொல்கிறார், அல்-ஃபராபி வஸிஜில் கவுரவமான துருக்கி பெற்றோர்களுக்குப் பிறந்தவர். ஆனால் மத்திய கால வரலாற்றாசிரியரான  இப்னு அபி ஒசைபியா வும், முஹம்மது இப்னு மஹ்மூது அல்-ஷஹ்ருஜி(கிபி 1288) யும் மேற்கத்திய வரலாற்றாசிரியர் Peter J. King ம் இவர் பாரசீக மரபை சேர்ந்தவர் என்கின்றனர். மேலும் இவர் சூஃபி மரபை சார்ந்த மிக உன்னதமான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் பாரஸீகத்தை சேர்ந்தவர்கள். இவர் தந்தை  துருக்கிஸ்தான் கலிஃபாவுக்கு பாதுகாவலராக அல்லது உயர் ராணுவ அதிகாரியாக இருந்தார். இளமைக் கால கல்வி சொந்த நகரான ஃபராபிலும், பின் புக்கராவிலும் நிகழ்ந்தது.

முப்பதாண்டு காலத்திற்குப் பிறகு கி.பி. 901 ல் மேற்படிப்பிற்காக பாக்தாத் வந்தார். அங்கு அவர் நெஸ்தோரிய கிருஸ்துவரும், மொழிபெயர்ப்பு வல்லுனரும், கிரேக்க தத்துவ ஞானியுமான அபு பிஷர் மத்தா பின் யூனுஸிடமும் பின் மற்றொரு நெஸ்தோரிய கிருஸ்துவரான  யுஹன்னா பின் ஹைலானிடமும் தத்துவம், தர்க்கம்(Aristotelian logic), அறிவியல் ஆகியவற்றைக் கற்றார். பாக்தாத் வந்த பின் சுமார் 40 ஆண்டு காலம் அங்கே இருந்ததாகவும் அப்போது பல்வேறு மொழிகளைக் கற்று அவற்றில் நிபுணத்துவம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

இப்னு கல்லிகானின்(இறப்பு 1282) இவர் குர்து இனத்தை சேர்ந்தவர் என்பதால் தன் தேசத்தை நிலை நாட்ட இப்னு அபி ஒசைபியாவின் கூற்றை மறுத்து அல்-ஃபராபி துருக்கியைச் சேர்ந்தவர் குடும்பப் பெயர் ‘நிஸ்பா அல்-துர்க்’ என்கிற கூற்றை பல அறிஞர்கள் மறுக்கின்றனர்.  அல்-ஃபராபியின் மாணவர் யஹ்யா பின் அதியும் இப்னு அல் நதீமும் சமகாலத்தவர்கள், எனவே நதீமின் குறிப்பை ஆதாரமாக வைத்து கூறும் இப்னு அபி ஒசைபியாவின் குறிப்பே சரியானதாக இருக்கும் ஆகவே அல்- ஃபராபி பாரசீகத்தை சேர்ந்தவர் என்பதே வரலாற்றாசிரியர்களின் முடிவு.  எப்படி இருந்தாலும் 40 ஆண்டு கால வாழ்வுக்குப் பின் கி.பி. 941 ல் ஹலப்(அலப்போ) சென்றார். அங்கு ஹம்தானி வகுப்பைச் சேர்ந்த சிரியாவின் ஆட்சியாளர் சைஃப் அல்-தவ்லா என்பவரால் நீதிபதி பதவி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின் கெய்ரோ, ஹெர்ரான், டெமாஸ்கஸ் என பயணப்பட்டாலும் பாக்தாதுக்கே திரும்பிவிடுவார்.  முடிவில் டெமாஸ்கஸிற்கு வந்து  மரணம் வரை அங்கே வாழ்ந்தார். நீதிபதியாக சிறிது காலம் பணியாற்றிய பின்  ஆசிரியராகப் பணியாற்றியபோது நூல்கள் எழுதினார். ஆசிரியர் பணியும் எழுத்தும் தன் தலையாயக் கடமையாக்கிக்கொண்டார். பிந்திய காலத்தில் தனது சமூகத்தை மாற்றி அமைப்பதிலும் சூஃபிஸத்திலும் உத்வேகம் கொண்டிருந்தார்.

எழுபது மொழிகளில் ஆற்றல் பெற்ற இவர் இரசவாதத்தில் ஆர்வம் கொண்டிருந்ததார். இவரது பிறப்பில் தெளிவான விளக்கம் இல்லாததுபோல் மரணத்திலும் தெளிவான செய்தி இல்லை.  டெமாஸ்கஸில் இயற்கையான மரணம் எய்தினான் என்ற செய்தியும் உள்ளது.  இவரிடமிருந்த தாழ்ந்த உலோகத்தை தங்கம் அல்லது வெள்ளியாக மாற்றக்கூடிய மூலகக் கல்லை பறிப்பதற்காக டெமாஸ்கஸிலிருந்து அஸ்கலான் செல்லும் வழியில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு என்கிறது நியு வேல்டு என்சைக்ளோபீடியா.

பங்களிப்பு

தர்க்கம், கணிதம்,  மருத்துவம்(Medicine), இசை, தத்துவம், மனோயியல், சமூகவியல் என பல துறைகளில் இவரின் பங்களிப்பு மகத்தானது. இவர் எழுதிய அனேக நூல்களில் கிடைப்பது என்னவோ சில, மற்றவை மறைந்துவிட்டன அல்லது 13ம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் தாருல் ஹிக்மா (House of Wisdom) தீக்கரையானபோது அவைகளும் எரிந்திருக்கலாம். 117 நூல்களில் 43 தர்க்கம், 11 மூலத்தத்துவம் (Metaphysics), 7 நன்னெறி(Ethics), 7 அரசியல் அறிவியல், 11 விளக்கங்கள்(Commentaries), 17 இசை, சமூகவியல், மருத்துவம்(Medicine) ஆகியவை. அவற்றில் சிறப்பு வாய்ந்தது கித்தாப் அல்-மதீனத்துல் ஃபளீலா(The Ideal City).

தத்துவம்

அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ தத்துவங்களின் தாக்கம் பெற்றிருந்த அல்-ஃபராபி, தத்துவத்துக்கும் மதத்திற்கும் இடையே தனித்தன்மை வாய்ந்த மேன்மையை உருவாக்கிய முதல் இஸ்லாமிய சிந்தனையாளர் ஆவார். இவரின் சிந்தனை, கோட்பாடு மற்றும் கற்பனையைவிட தூய்மையானதான அறிவு கண்ணோட்டம் அரசியல், சமூகவியல் சார்ந்த நடைமுறை வாழ்க்கை வழிமுறை மற்றும் உண்மைத் தத்துவத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. குர்ஆனுடன் தத்துவ உண்மையைப் போதிப்பது, தூய்மைப் படுத்தும் நோக்கமாக இருப்பதே மதத்தின் உ ண்மை வடிவம் என்கிறார். மதத்தைவிட தத்துவம் தூய்மையானது ஏனென்றால் அது அறிவார்ந்த சமூகத்தில் சோதிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டிருக்கிறது, ஒரு தத்துவவாதி இந்த உலகத்தில் தன் யதார்த்தத்தைத் தேடிக்கொள்கிறான். மதம் தன்னை தத்துவக் கருத்து வழி நிலைப் படுத்திக்கொள்கிறது. ஆக ஒவ்வொரு கலாச்சாரமும் தனது சொந்த குறியீட்டை நிறுவிக்கொள்கிறது, எனவே தத்துவம் மதத்தைவிட மேலானது என அல்-ஃபராபி நம்பியதோடு நின்றுவிடாமல் மதம் அதன் இன்னொரு பக்கத்தை திறப்பதற்காக தத்துவக் கருத்துக்களை ஏற்படுத்தவேண்டும் என்றார். என்றாலும் பாமரர்கள்(uneducated) தத்துவக் கோட்பாடை புரிந்துக்கொள்ள மதம் அவசியமாகிறது என்கிறார்.

இவர் எழுதிய முதல் நூல் ‘இலட்சிய நகரம் (அல் மதீனத்துல் ஃபளீலா-The Ideal City). இது ப்ளாட்டோவின் ‘குடியரசு’ என்ற நூலைத் தழுவி இருந்தது. இந்நூலில் அல்-ஃபராபி ஒரு கற்பனை சமுதாயத்தின்(a virtuous society) மீது தன் கோட்பாட்டை நிறுவுகிறார். இதன் அரசியலமைப்பு, இஸ்லாமிய நம்பிக்கையை ஒட்டியதாக தத்துவம், நடைமுறை அறிவியல், கணிதம், மதம் சார்ந்த ஒன்றான கட்டமைப்புடன்  இருக்கவேண்டும் என்கிறார். இந்நூலில் முதற் பகுதி மூலதத்துவம்(Metaphysics), இதில் தத்துவம் மற்றும் மதம் பற்றிய தனது கோட்பாட்டை விரிவாக்கம் செய்கிறார். இரண்டாம் பகுதி உளவியல் குறித்து விவாதிக்கிறார். மனித உளவியலில் புறவய உலகில் ஏற்படும் சலனங்கள், சிதிலங்கள் குறித்த பார்வையாக இருக்கிறது. மூன்றாம் பகுதி முழுமையான நல்லதோர் மக்கள், அரசு என்ற கோட்பாட்டை நிறுவி சமுதாயம் அடையவேண்டிய இலக்கை தெளிவுபடுத்துகிறார்.

அல்-ஃபராபியின் அரசியல் தத்துவத்தில் மக்களின் மகிழ்ச்சி(சாஅதா-sa’adha)க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இலட்சிய நகரம் (மதீனத்துல் அல் ஃபளீலா) இலட்சிய சமுதாயம்(அல்-இஜ்திமத்துல் ஃபளீலா) என்ற நூலிலும் நன்னெறிகள் மூலம் மகிழ்ச்சியைப் பெற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்கிறார்.

மேலும் சமூக மனோயியலைப் பற்றி கூறும்போது தனிமையில் அல்லது தனிமைப் படுத்தப்பட்ட ஒரு மனிதன், தன்னால் எதையும் சாதித்திட முடியாது அடுத்தவருடைய உதவி இல்லாமல். எனவே ஒவ்வொரு மனிதனும் அயலாருடன்(neighborhood) இணக்கம் இருக்கவேண்டும் என்கிறார். இலட்சிய நகரத்தின் 24ம் அத்தியாயத்தில் எதிர்கால கனவும் அதன் புரிதலும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியதின் அவசியத்தைக் கூறுகிறார்.

ப்ளாட்டோவின் கணக்கீடு போலவே அல்-ஃபராபியும் ஆட்சியாளரைப் பற்றி கூறும்போது அவர் சுறுசுறுப்பும் புத்திக்கூர்மையும் வாய்ந்தவராக இருக்கவேண்டும். அவர் நல்லொழுக்கம் அமையப்பெற்று சரியான தடத்தில் செல்பவராக மட்டும் இருந்திடாமல் நல்ல பேச்சாற்றலும், அன்பும், எளிதாக புரிந்துக்கொள்ளும் தன்மையும், நல்ல நினைவாற்றலும், உடலாரோக்கியமும் இருக்கப் பெற்று மக்கள் தங்கள் திறன்களை அறிந்து மகிழ்வுடன் சரியான தடத்தில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்.

தர்க்கவியல்

தத்துவஇயலில் அரிஸ்டாட்டில் ப்ளாட்டோவின் கொள்கையை உள்வாங்கியவர், தர்க்க சாத்திரத்தில் அதை விரிவுபடுத்தவில்லை. பல, அரிஸ்டாட்டில் சாராக் கொள்கையாக இருக்கிறது.  Al-Farabi was the first muslim logician to develop a non-Aristotelian logic. He established logic within Islamic culture, and this is why he is known as the ‘Second Teacher’ (after Aristotle). தர்க்கத்தை கோட்பாடு ஒன்றாகவும் நடைமுறை மற்றொன்றாகவும் இரண்டாகப் பிரிவுப் படுத்தி, முன்னதில் மூலதத்துவம்(Metaphysics), உளவியலையும் இரண்டாவதில் அறிவியல் மற்றும் அரசியலை விரிவாக்குகிறார். மேலும்  எதிர்பாராமல் நிகழப்போவதைப் பற்றி  இலக்கணத்துக்கும் தர்க்கத்துக்கும் அறிவுப்பூர்வமான தொடர்பின் யூகம் அரிஸ்டாட்டிலின் கொள்கையிலிருந்து அல்-ஃபராபி வேறுபட்டு நிற்கிறார்.

தர்க்கத்தின் வாயிலாக இஸ்லாமியப் பண்பாட்டில் ஓர் கலாச்சார ஒற்றுமையை நிலை நிறுத்தவேண்டும் என விரும்பினார். எனவே இவரது தத்துவத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் அரசியல் விஞ்ஞான அமைப்பு குர்ஆன் வழியில் அமைந்துள்ளது.  அறிவின் நோக்கம் இறை அறிவாக இருப்பதால் மனிதன் செய்யும் சாதனை அவனது  அறிவு மற்றும் நுட்பத்திறனின் உயர் நிலை. எனவே கல்வி, சமூக அந்தஸ்துக்களில் மிக முக்கியமான  ஒன்று என வலியுறுத்துகிறார். 

அறிவுநெறியியல் (Epistemology)

அரிஸ்டாட்டில் மற்றும் நியோபிளாட்டோனிய கோட்பாடுளை உள்ளடக்கியதாக அல்-ஃபராபியின் இக்கோட்பாடு இருக்கிறது. ‘ரிசாலா ஃபில் அக்ல்’ (epistle on intellect) என்ற நூலில் அறிவாற்றலை ஆறு வகையாகப் பிரிக்கிறார். முன்மதி ; பொது அறிவு; அடிப்படை  உண்மைகளைப் புரிந்துக்கொள்ளும் இயற்கையாக அமையப்பெற்ற விவேகம்; நல்லவை கெட்டவைகளைத் தெளிவாகப் புரிந்துணரும் அனுபவத்தின்மூலம் கிடைக்கப்பெற்ற அப்பழுக்கற்ற மனசாட்சி; புத்திக்கூர்மை அல்லது அறிவாற்றல்; எல்லா அறிவுகளும் தெய்வீகத் தன்மைப் பெற்றது என உணரும் ஆற்றல். ஐந்தாம் பிரிவான புத்திக்கூர்மையை நான்காக வகைப்படுத்துகிறார். 1.உள்ளார்ந்த அறிவாற்றல் (potantial intellect-அக்ல் பில் குவ்வா); 2. நடைமுறை அறிவாற்றல்(actual intellect-அக்ல் பில்-ஃபில்); 3.முயன்று பெற்ற அறிவாற்றல் (acquired intellect-அக்ல் முஸ்தஃபாத்); 4. இயக்க அறிவாற்றால்(active intellect-அக்ல் அல்ஃபால்). ‘கித்தாப் இஹ்சா அல்-உலூம்'(The Book of Enumeration of Science) – மதவியலையும் தத்துவயியலையும் அல்-ஃபராபியினால் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பேரகராதி என சொல்லலாம். இதில் மொழி அறிவியல், தர்க்கம், கணிதவியல்(arithmatic, geometry, optics, astronomy, music, weights and mechanics), இயற்பியல், மூலதத்துவம், அரசியல் விஞ்ஞானம்(jurisprudence and scholastic theology) என ஐந்து வேறுபட்ட அறிவியலை விரிவாக்குகிறார்.

இசை

இசைத்துறையில் அல்-ஃபராபியின் பங்களிப்பு மகத்தானது. இவரது இசைப் பற்றிய ஆய்வுகள் அரபுலகம் மட்டுமல்ல மேற்கத்திய இசைக்கும் தூண்டுகோலாக இன்றும் இருக்கிறது. இவர் எழுதிய ‘கித்தாப் அல்-மியூசிக்கா அல்-கபீர்(The Grand Book of Music) என்ற இசைப் பற்றிய நூலில் பிதகோரஸின் இசைக்கோளத்திலுள்ள பிழைகளை  சுட்டிக்காட்டுகிறார். ஒலியானது புறசூழலின் அதிர்வுகளிலிருந்து எழும்பும் ஒன்றாக இருக்கிறது, இசை அதிலிருந்துதான் பிறக்கிறது, அதை அனுபவிப்பதன் மூலம் ஒலியின் சாரத்தை உணரலாம் என்கிறார். வேறு வார்த்தையில் சொன்னால் இவரைப் பொருத்தவரை ஒலியின் ஸ்பரிசமே இசையாகும்.  இசை, ஆன்மாவுக்கு இதமளித்து நோய் தீர்க்கும் மருந்தாகும் என அவரது நூலில் குறிப்பிடுகிறார். மத்திய கிழக்கின் இசைக் கருவிகளாகிய ‘ரபப்‘-ربابة  மற்றும் ‘கானுன்’-قانون ஆகியவைகள் இவரது கண்டுபிடிப்பு என்கின்றனர் சிலர், இவை பிற்காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டதற்கு வித்திட்டவர் என்கின்றனர் வேறு சிலர்.

கல்வியின் முக்கியத்துவம்

கல்வியின் அவசியத்தைப் பற்றி  education is one of the most important social phenomena என்கிறார் அல்-ஃபராபி. ஒரு மனிதன் சமூக அந்தஸ்து பெறவும் சாதனைகள் மூலம் தனித்துவம் பெறவும் கல்வி இன்றியமையாதது, ஒரு மனிதன் முழுமைப் பெற கல்வி முக்கிய பங்கு வகுக்கிறது, முழுமையான மனிதன்(perfect human/Insaan al-kaamil),  அவன் எண்ணம், செயல், சாதனை, தலமைத்துவம் ஆகியவை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைகிறது. இத்தகையவர் சமுதாயத்தில் இருக்கும்போது சமுதாயம் பயனடைகிறது, மாறாக அவன் சமூகத்தைவிட்டு விலகி நின்றாலோ அல்லது பெற்ற அறிவைப் பயன் படுத்தாமல் இருந்தாலோ காட்டில் வாழும் மிருகத்தைப் போன்றவன் என ஒப்பிடுகிறார்.

உடலுக்கு உணவு தேவைப்படுவதுபோல், கப்பலுக்கு மாலுமி தேவைப்படுவதுபோல், மக்களுக்கு தலைவன் தேவைப்படுவது போல் அறிவுக்கு கல்வி தேவை என்கிறார். கல்வி என்பது வெறும் பெறுவதில் மாத்திரமில்லை அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.  எனவே செயல்முறை இல்லாத தத்துவக் கல்வியை ஏட்டுச் சுரைக்காய் எனும் அவர், நற்பண்பை கலைநயத்துடன் இணைத்து “உயர்வே அழகு, அழகே உயர்வு”. இத்தகைய அழகு அறிவாற்றலுக்கு அவசியமானது எனவே முழுமையான கல்வி எதிர்பார்ப்பது தூய்மையான அறிவாற்றலும் நற்பண்பும் ஒருங்கிணைந்து இருப்பதே என்கிறார்.

அரபியில் இமாம்(வழி நடத்துபவர்) என்று சொல்லப்படுவர் சமுதாயத்தை வழி நடத்துபவராகவும், பிரச்சினைகளை தீர்க்கும் சட்ட நுணுக்கம் தெரிந்தவராகவும், நேர்மை மிகுந்தவராகவும், ஆளுமை உள்ளவராகவும், அன்புள்ளவராகவும் இருக்கவேண்டும் என இலக்கணம் வகுக்கும் அதே நேரம் கல்விக்கான நிதியை தர்மம்(ஜக்காத்) நில வரி(கர்ஜ்) இவைகளிலிருந்து ஒரு பங்கு ஒதுக்கவேண்டும். வரி, சுங்கம் இவை இரண்டும் முக்கியமான அம்சங்கள், முன்னதை கல்வி நிலையங்களுக்காகவும் பின்னதை  இளைய சமுதாயக் கல்விக்காகவும் பயன் படுத்தவேண்டும் என்கிறார்.

ஒழுக்கம், மதிப்பீடு, பயிற்சி, வழிகாட்டல், அறிவுரை, செய்முறை விளக்கம் என பல்வேறு நுட்பங்களை கல்வி முறையில் வகைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆசிரியரின் தகுதி, பாடம் புகட்டும் முறைகளையும், மாணவனின் நிலைபாட்டையும் விரிவாக விளக்குகிறார்.

தத்துவம் என்பது மிக நேர்த்தியான மனித உள்ளத்திலிருந்து உற்பத்தியாகும் ஒன்று, சில உண்மைகள் சாதாரண உள்ளங்களிலிருந்தும் வெளிப்படலாம், அகிலத்துக்கும் பொதுவானது. தத்துவம் – மனித மனத்தின் உயர்வான செயல்  இறை அதிகாரம் என்கிறார். குர்ஆன் தன் வரைமுறை பண்பாட்டுக்குள்ளேயே உண்மையை குறியீடாக  விளக்குகிறது, உதாரணமாக சொர்க்கத்தப் பற்றி குறியீடாக சொல்வது சாமானியர்கள் புரிவதற்காக, தவிர இஸ்லாம் தன் கலாச்சாரத்தை வேறொரு கலாச்சாரத்தின் மீது திணிக்கவில்லை என்கிறார்.

அல்-ஃபராபியின் தத்துவக்கண்ணோட்டம் அல்-கிந்தியின் தத்துவத்துடன் வேறுபட்டு நின்றாலும் அரபுலக சிந்தனையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது தத்துவத்தால் எழுச்சிப் பெற்றவர்களில் நால்வர் முக்கியமானவர்கள். யஹ்யா பின் ஆதி- இவர் பாக்தாதில் அல்-ஃபராபியிடம் பயின்ற மாணவரும் சீடரும் ஆவார். அபு சுலைமான் அல்-சிஜிஸ்தானி, இவர் யஹ்யாவிடம் பயின்று ஃபராபியின் தர்க்க சாத்திரத்தில் கைவல்யமானவர் எனவே இவருக்கு சிஜிஸ்தானி அல்-மன்திக்கி(logician) என்ற பெயரும் உண்டு. அபுல் ஹசன் முஹம்மது இப்னு யூசுஃப் அல்-ஆமிரி, இவர் ஃபராபியினால் கவரப்பட்டிருந்தாலும் ஒரு நிலையில்(one point) கருத்துவேறுபாடு கொண்டு ஃபராபியை மறுக்கிறார். அபு ஹையான் அல்-தவ்ஹிதி, இவர் யஹ்யாவிடமும் சிஜிஸ்தானியிடமும் பயின்று ஃபராபியின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்.

அல்-ஃபராபியின் தத்துவம் மற்றும் சூஃபிஸக் கொள்கை பிற்காலத்தில் இப்னு சினா, இப்னு ருஷ்த், இப்னு கல்தூன் ஆகிய சிந்தனையாளர்களின் தத்துவக் கோட்பாடுக்கு வழி வகுத்தது. மேலும் கணிதவியலில் எண்கணி வளர்ச்சியின் பங்கில் இப்னு ஹைதம், அல்-குவாரிஜ்மி வரிசையில் இவரது பங்கும் நீள்கிறது. இவரது கணிதவியல் ஆய்வுகள் அரபு மற்றும் மேற்கத்திய கணிதவியல் ஆய்வுக்கு முன்மாதிரியாக அமைந்தன.

தனது இறுதி காலத்தில் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டபிறகு ஹலபுக்கு(அலப்போ-சிரியா) திரும்பி அங்குள்ளவர்களிடம் தத்துவம், அரசியல், அறிவியல் குறித்த உரையாடல்கள் நடத்தினார். ஆட்சியாளர் சைஃபுத்தீன் தௌலாவின்  அரசவையில் ஒருமுறை சொர்பொழிவாற்றியபின் மன்னர் விருந்தளிக்க விரும்பினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் ‘லூட்‘  என்ற இசைக் கருவியில் இசைக்கத்தொடங்கினார். அவரது இசையில் மயங்கிய பார்வையாளர்கள் அழவும் பின் சிரிக்கவும் செய்தனர். இத்தகைய இசையில் வல்லமை பெற்றவர் எஞ்சிய நாட்கள் மன்னருடன் கழித்தார், இது மரணம் வரை நீடித்தது.

Sources:

http://www.absoluteastronomy.com/topics/Al-Farabi

http://www.encyclopedia.com/doc/1G2-3404707939.html

http://www.arabicmusic4u.com/al_faraabi.htm

http://www.absoluteastronomy.com/topics/Al-Farabi

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=276

http://www.newworldencyclopedia.org/entry/Al-Farabi

http://users.ox.ac.uk/~worc0337/authors/al-farabi.html

http://wzzz.tripod.com/FARABI.html

http://muslimmedianetwork.com/mmn/?p=2785

http://forum.urduworld.com/f1006/great-phylosopher-al-farabi-336751/

http://www.muslimphilosophy.com/ip/rep/H021.htm

http://en.wikipedia.org/wiki/Al-Farabi

http://www.ibe.unesco.org/fileadmin/user_upload/archive/publications/ThinkersPdf/farabie.pdf

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. நாகூர் ரூமி said,

  26/11/2011 இல் 14:42

  ஜாபரின் உழைப்பு ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறது. பிரமிப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் என்று சொல்வது போதாது. நிச்சயம் இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவர வேண்டும்.

 2. 26/11/2011 இல் 19:22

  நன்றி ரூமி அவர்களே..!

  இன்னும் இருவர் பாக்கி உள்ளனர். (என்னைப் பொருத்தவரை இன்னும் ஒருவர்) அவர்களையும் வெளியிட்டவுடன் முதல் பத்து பேர் அடங்கிய அருட்கொடையாளர்களை உங்கள் விருப்பப்படி செய்துவிடலாம்.

 3. 27/11/2011 இல் 13:45

  ரூமி ரொம்பச் சரியாச் சொல்லிருக்கிறார்கள்
  சீக்கிரம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுட்டு,
  மேலும் உங்கள் முயற்சி தொடரணும் நானா..

 4. 27/11/2011 இல் 23:05

  பத்தும் முடிந்து புத்தகம் வெளிவர வாழ்த்துகள் நானா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s