நன்றி கெடல் – ஸபீர் ஹாபிஸ் சிறுகதை

1980இல், எழுத்தாளர் வல்லூர் செல்வாவின் முதலாவது சிறுகதையான ‘அக்கினிப் பூக்கள்’ தினபதியில் வெளியானது. அதிலிருந்து 1990இல் வெளியான ‘நாகரிகக் குழந்தைகள்’ சிறுகதை வரையிலான பத்து வருட காலத்தில் 148 சிறுகதைகளை அவர் எழுதி முடித்திருந்தார். பத்து சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருந்தார். சிறுகதை இலக்கியம் தொடர்பான பல ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார். இலங்கையில் நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளில் சிறுகதை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார். 80களின் பிற்கூறில், தேசிய தமிழ் சிறுகதை இலக்கிய ஒன்றியம் வெளியிட்ட இலங்கையின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தொகுப்பில் செல்வாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடையாளங்களூடு இலங்கையில் பிரபலமான தமிழ் சிறுகதை எழுத்தாளர்களிடை முக்கிய புள்ளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் வல்லூர் செல்வா.

செல்வாவின் முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘நினைவுத் துயரின்’ அணிந்துரையில் பேராசிரியர் சொ. சண்முகம், ‘செல்வாவின் எழுத்துகளில் மனித நேயம் செறிந்துள்ளது’ என எழுதியிருந்தது பலரையும் வியப்பிலாழ்த்திற்று. ஏனெனில், அத்தொகுதியில் இடம்பெற்றிருந்த பத்துக் கதைகளிலும் வன்முறை குமுறும் இறுக்கமே கருத்தியலாக்கப்பட்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்தை நோக்கிய எதிர்க்குரல்களை வன்முறைக்குள் தோய்த்து வடித்திருந்தார் செல்வா. தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை, ஆயுதக் கலாசாரத்தின் பால் இளைஞர்களை உந்தித்தள்ளும் வீரியத்துடன் கதையாகச் செதுக்கியிருந்தார்.

செல்வாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவின் போது சிறப்புரையாற்ற வந்த பேராசிரியர் சொ. சண்முகம், ‘தன் இனத்தின் மீதான பற்றும், பேரினவாதத்துக்கெதிராகப் பதிவு செய்யப்படும் விடுதலைக் குரலும், உரிமை மீட்புக்கான போராட்ட ஊக்குவிப்பும் மனித நேயத்தின் பிரதான பண்புகள்’ எனப் பேசி, தன் அணிந்துரையிலிருந்த மயக்கத்தைத் தளர்த்தினார். இரண்டாவது தொகுதியிலும் செறிந்திருந்த செல்வாவின் ‘மனித நேயம்’ இலங்கையின் முதன்மைப் போராட்ட எழுத்தாளராக அவரை முன்னிறுத்திற்று.

தொடர்ந்து அவர் எழுதிய சிறுகதைகளில், காதல் பறவைகள், கொஞ்சும் கிளியே, அவளும் கவிதைதான் முதலான ஒரு சில கதைகளைத் தவிர்த்து, ஏனைய அனைத்திலும் போராட்டத்தைப் போர்த்திக் கொண்ட இரத்தவாடையே நிறைந்திருந்தது.

தமிழ் மக்கள் பலரும் செல்வாவைப் பிரமிப்புடன் நோக்கினர். ஈழப் போராட்டத்தில் எழுத்தாயுதத் தேவையைப் பூர்த்தி செய்ய வந்த ஞானியென மனதுக்குள் அவரை ஆராதித்தனர். தாம் எதிர்நோக்கும் சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் நிரந்த முற்றுப்புள்ளியை அவரது பேனா முனையில் தேடினர்.

மறுபுறத்தில், பேரினவாதத்துக்கெதிரான ஆயுதக் கலாசாரம் பெரு விருட்சமாய்ச் செழிக்க, அவரது இறுக்கமான எழுத்து பயனுள்ள பசளையாயிற்று. ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்புப் பிரசாரங்களில் செல்வாவின் எழுத்துகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. எழுத்தாளர் செல்வா இப்படிச் சொல்கிறார் என்றதும், மக்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொள்வர். செல்வாவின் செல்வாக்கு மிகப் பலமான விசையாக எழுந்த்து. ஆட்சேர்ப்புக்காக இன்னும் உணர்ச்சிபூர்வமாக பிரசாரம் பண்ணத் தேவையில்லை எனுமளவுக்கு, செல்வாவின் எழுத்துகள் உணர்ச்சிக் கொதிப்பில் மிதந்தன.

பின்னால் தோன்றிய குட்டி எழுத்தாளர்கள், செல்வாவைத் தம் மானசீக குருவாக்கி, அவரது பாணியையே தமது பாதையென வரித்துக் கொண்டனர். அவரது எழுத்துகள் சிலவற்றை, சில மாற்றங்களுடன் தமது படைப்புகளில் உட்புகுத்தும் திறனும் அவர்களுக்கிருந்தது.

தனக்கு ஏற்பட்டு விட்ட இந்தப் பிரபலத்தை, செல்வா சாதாரணமாகக் கருதிவிடவில்லை. தனது திறமையினதும் மகத்தான ஆளுமையினதும் விசை செறிந்த ஈர்ப்பில், இத்தகைய பிரபலங்கள் இழுபட்டு வந்து சேர்வது இயல்பானதே என அவர் எண்ணினார். ஓய்வு நேரங்களில் தான் எழுதியுள்ள கதைகளை அவர் வாசித்துப் பார்ப்பார். ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் அவருக்கு வியப்பாகவே இருக்கும். என்னால் எப்படி இவ்வளவு அற்புதமான அழகுணர்ச்சியுடன் கதை படைக்க முடிகிறது?

ஆரம்பத்தில் கதை எழுதுவதற்காகப் பேனாவைப் பிடித்த போது, கருவைக் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்திற்குள்ளாகித் தவித்தது அவருக்கு இன்னும் நினைவிலிருந்தது. நீண்ட யோசனையின் பின் மூளைக்குள் சிக்கிய பேரினவாதக் கொடுமைகளும், தமிழர் அவலங்களும் அவரது பேனா முனையூடாக சிறுகதை அவதாரமெடுத்த போது, அந்தக் கதைக்கு இவ்வளவு பிரபலம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பிரபலமும் வரவேற்பும் ஏற்படுத்திய கிறுகிறுப்பு, தொடர்ந்து அதே பாணியிலான கதைகளைப் படைக்க வேண்டிய சுயநிர்ப்பந்தமாய் அவரை அழுத்திற்று.

‘சிறுகதைத் துறையில் வல்லூர் செல்வாவின் உத்தியும் போக்கும்’ போன்ற தலைப்புகளிலான அவரது நண்பர்களின் விமர்சனக் கட்டுரைகள், இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் சிம்மாசனத்தில் அவரை அழைத்துச் சென்று இருத்தின. அவர் புளகாங்கிதமடைந்தார். தலையில் கனம் ஏறுவதாக உணர்ந்தார். அதனால், தனது கதைகளின் இறுக்கத்தை மேலும் பலமாக்கினார். பேரினவாதத்தின் மீதான எதிர்க்குரல்களின் கடின இறுக்கம் துவேஷம் எனப் பெயர் மாற்றம் பெறும் என்பதை அவர் அறிந்திருந்த போதிலும், அது பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. இனப் பாதுகாப்புக்கான பங்களிப்பு, உரிமை மீட்பு என்பவற்றுக்கு அப்பால், தனது சிறுகதைகள் தனித்து மிளிர வேண்டும், தன் இனத்தவர் மத்தியில் பிரபலம் பெற வேண்டும் என்பதே அவரது பிரதான குறிக்கோளாயிற்று. தனது இலக்கிய ஸ்தானத்தைத் தொடர்ந்தும் தக்கைத்துக் கொள்வதில் அவர் வெகு அவதானமாகச் செயற்பட்டார்.

செல்வாவின் கதைகளில் மனித நேயம் தழைத்தோங்கிற்று. அரசினதும் இராணுவத்தினதும் செயற்பாடுகளும் முன்னெடுப்புகளும் அவரது எழுத்துகளுக்குள் சிக்கித் துவம்சமாயின. தமிழர் போராட்ட உணர்வுகள், அவரது எழுத்துகளின் உஷ்ணத்தில் கொதிப்பேறின.

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இராணுவத்தை வரவழைத்து, எதிர்க்குரல்களை நசுக்க முனைந்த காலப்பகுதியில், போராளிகள் பங்கர்களுக்குள்ளும் காட்டு மரங்களிடையேயும் தலைகளை மறைத்து வைத்துக் கொண்டனர். சத்தமின்றி மூச்சுவிடவும் பழகினர். அந்தக் கால கட்டத்திலும் கூட செல்வாவின் பேனா ஓய்வுற்றிருக்கவில்லை. சரியாகச் சொல்வதானால், அந்தக் காலகட்டத்தில்தான் அவரது பேனா முன்னெப்போதும் இல்லாதவாறு வீரியமாய் உஷ்ணம் கக்கிற்று. இந்திய-இலங்கை அரசுகளைச் சாடி கதை புனைவதன் மூலம் தன்னைத் தேசிய எழுத்தாளர் என்ற படித்தரத்திலிருந்து சர்வதேச எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும் என செல்வா நம்பினார். அதைப் பரீட்சித்தும் பார்த்தார். தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்த விகடனில் பிரசுரமான அவரது ‘விடுதலைக் குரல்’ சிறுகதை புகழின் உச்சியில் அவரை அமர்த்திற்று. இலங்கையிலும் சில பத்திரிகைகள், செல்வாவின் கதைகளுக்கு முன்னுரிமையளித்துப் பிரசுரித்தன. செல்வாவின் கதைகள், தமது பத்திரிகையின் தமிழ் வாசகர் பரப்பை விஸ்தரிப்பதற்கான ஓர் உத்தியாக அமையும் என அப்பத்திரிகாதிபர்கள் எதிர்பார்த்தனர். இது செல்வாவை மேலும் ஒரு படிக்கு உயர்த்திற்று.

தன் கதைகளில் அரசினையும் இராணுவத்தையும் நோக்கிய எதிர்ப்போக்கை செல்வா தொடர்ந்தும் தக்க வைத்திருந்தார். அரசுக்கெதிராகப் போராடும் தன் இனத்தவரின் குரல்களில் நியாயவாதத்தைப் பூசி மெழுகினார். அப்போதெல்லாம் இலங்கை அரசின் ஜனநாயகப் போக்கையிட்டு செல்வா பிரமிப்பதுண்டு. தனது எழுத்துகளை அரசு கண்டு கொள்ளவில்லையா? அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்றதா? அல்லது ஜனநாயகத்தை முன்னிறுத்தி தனது எதிர்ப்போக்கை ஜீரணிக்க முயல்கின்றதா? உண்மையில் ஜனநாயகம் என்பது இதுதானோ? மனதுக்கு உறைத்த போதிலும், அவரது பேனாவோ அவற்றை உள்வாங்கிக் கொள்வதில் முரட்டுப் பிடிவாதம் பிடித்தது. தொடர்ந்தும் சர்வாதிகார, ஜனநாயக மறுப்பு வார்த்தைகளுக்குள் அரசின் செயற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அழுத்தி மூடியது.

90களின் பின், செல்வா பெரும் சங்கடங்களை எதிர்கொண்டார். வடக்கில், ஈழப் போராட்டத்தின் பெயரில், முஸ்லிம்கள் சொத்து முழுவதும் பறிக்கப்பட்டு அகதிகளாகத் துரத்தப்பட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் ஊர்களில் படுகொலைச் சம்பவங்கள் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் செல்வாவின் பேனா தடுமாறிற்று. உண்மைகளை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை இன உணர்வு கட்டிப் போட்டது. அவரது எழுத்துகள் நியாயங்களைப் புதைத்தன. அக்கிரமங்களைப் போர்த்தி மறைத்தன. மனசாட்சிக்கு விரோதமான எழுத்துகள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருந்தன. காலப்போக்கில் அதுவே அவருக்குப் பழக்கப்பட்டுப் போயிற்று. ‘எழுத்தாளன் சிந்தனைத் தூய்மையுடையவனாக இருக்க வேண்டும்’ என்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் கூற்றை அடிக்கடி நேர்காணல்களில் குறிப்பிடும் செல்வா, அதனைத் தன் எழுத்து நடைமுறையில் பின்பற்ற முடியாமல் தடுமாறினார். அந்தக் குற்ற உணர்ச்சி மிக நீண்ட காலமாக அவரது ஆழ்மனதின் அடியில் தொடர்ந்தும் துருத்திக் கொண்டிருந்தது. அந்த உணர்ச்சியின் நெருடலைத் தவிர்ப்பதற்காக, ‘பாவமன்னிப்பு’ எனும் சிறுகதையை செல்வா எழுதினார். வழமைக்கு முரணாக, தான் சார்ந்துள்ள இனத்தின் தவறை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் கருத்தியலை முன்னிறுத்திய அந்தச் சிறுகதையை அவரது ஆதர்ச பத்திரிகைகள் பிரசுரிக்க மறுத்து விட்டன. செல்வா கலங்கி விட்டார். தன் எழுத்துகளுக்குக் கிடைத்த தண்டனையாக அதனைக் கருதினார்.

ஆனாலும், மனதைத் தைரியப்படுத்திக் கொண்டே அக்கதையை தேசிய பத்திரிகைக்கு அனுப்பினார். இரண்டு வாரங்களின் பின் தேசியப் பத்திரிகையில் பிரசுரமான அக்கதை, உடலும் உள்ளமும் காயமுற்றுக் கிடந்த முஸ்லிம்களுக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்திற்று. அதேவேளை, ஆயுதக்குழுக்கள் மற்றும் இனவாதப் போக்குடையோர் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் அக்கதை ஏற்படுத்திற்று. இவ்வாறான ஒரு கதை பிரசுரமாகியுள்ளது என்பதை விட, அதை வல்லூர் செல்வா எழுதியுள்ளார் என்பதுதான் அனைவரது புருவங்களையும் உயர்த்திப் பிடித்தது.

தனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பாராட்டையும் வரவேற்பையுமே பார்த்துப் பார்த்துப் பழகிப் போன செல்வா, முதன் முதலாக கடிதங்களில் எதிர்ப்பு முகத்தையும் அச்சுறுத்தலையும் கண்டு கலங்கியது இந்தக் கதைக்குப் பின்னர்தான். பெரும் அதிர்ச்சுக்குள்ளும் திடுக்கத்துக்குள் விழுந்தார் செல்வா. முற்றிலும் எதிர்பாராத ஓர் அவஸ்தையாக அந்நிகழ்வு அவரைப் பாதித்தது. மறுபுறம், அந்த அச்சுறுத்தல்களிலிருந்த தீவிரவாத, மற்றும் அநீதியியற் போக்கு அவரைச் சீற்றத்துக்குள்ளாக்கவும் செய்தது. இதற்கு முன்னர் தான் எழுதிய கதைகளிலிருந்த கருத்துச் சுதந்திரப் பிடிவாதத்தை நினைவுக்குள் மீட்டிப் பார்த்தார். சுதந்திரத்திற்கான தடை, இலக்கிய விமர்சனமாய் அமைவதை அவர் வெறுத்தார். புதிய தீர்மானம் எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் தன் பேனாவை மூடிவைத்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் எழுத்து முயற்சிகளைக் களைந்து மௌனம் காத்தார்.

செல்வாவின் மௌனம், இலக்கிய ஆய்வாளர்களிடையே முக்கிய ஆய்வுப் பொருளாயிற்று. சிலர், ‘வல்லூர் செல்வாவின் பேனா முதிர்ந்து விட்டது’ என எழுதிச் சிரித்தனர். வேறு சிலரோ, ‘வல்லூர் செல்வாவின் மௌனம் புயலுக்கு முந்திய அமைதி’ என எழுதித் தூண்டினர். இன்னும் சிலரோ, ‘உயிருக்குப் பயந்து ஊமையாகி விட்டார் வல்லூர் செல்வா!’ என எழுதி நகைத்தனர்.

இக்காலப் பகுதியில்தான் க.பொ.த. (உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த செல்வாவின் ஒரே புதல்வனான மோகன் போராளிக் குழுவில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டான். செல்வா மன்றாடினார். போராட்டத்துக்கான தனது பங்களிப்பைக் குறிப்பிட்டு, மகனைத் திரும்பத் தரும்படிக் கெஞ்சினார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆளணி திரட்டப்படுவதாகவும், மறுத்தால் பிள்ளையைப் பிணமாக அள்ளிச் செல்லலாம் என்றும் அவருக்கு விடை கிடைத்தது. நாடித்துடிப்பெல்லாம் அடங்கிச் சரிந்தார் செல்வா. வாழ்க்கை அவருக்கு வெறுமையாயிற்று. மனதுக்குள் இரத்தம் வழிய வழியக் கலங்கி நின்றார். வேதனை அவரை வாட்டிற்று.

மகனை இழந்த பின், அவரது வாழ்க்கை களையிழந்து போயிற்று. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த துயரம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று நைத்தது. ஆனாலும் சில தெளிவுகள் அவருக்குப் பிறந்திருந்தன. ஏற்கனவே குழம்பிக் கைவிட்ட விடயங்களில் முடிவான சில தீர்மானங்களை எடுக்க முடியுமென அவருக்குத் தோன்றிற்று. தூசு தட்டிப் பேனாவை எடுத்தார். கொதித்துக் குமுறும் அவரது உணர்வுகள் பேனா முனையூடு ஆவேச கோஷங்களாய் வழிந்து பதிந்தன. அவரது மனக்குமுறல்கள் சிறுகதையாய் உயிர்ப்பெடுத்தன. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை, கதையின் ஒவ்வொரு வரியிலும் சோகம் இழையும் வெஞ்சினத்துடன் செதுக்கிய செல்வா, ‘நன்றி கெடல்’ எனும் பெயரிட்டு அதனைத் தேசியப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். மறுவாரமே கதை பிரசுரமாயிற்று. பிரசுரமான கணத்திலேயே அவரின் முடிவையும் அது எழுதிற்று.

செல்வாவுக்கு அன்று 45 வயது பூர்த்தியாகியிருந்தது. எழுத்தாள நண்பர்கள் சிலர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். அவரது நன்றி கெடல் சிறுகதை பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். கலாநிதி சிவராஜா மிகக் கவலையுடன் செல்வாவைக் கடிந்து கொண்டார். ‘அரசாங்கத்துக்கு எதிராக எழுதுவது போல், போராட்டக் குழுவுக்கு எதிராகவும் எழுதி விட்டு உயிருடன் இருக்கலாம் என்று எண்ணி விடாதே. சுட்டுக் கொன்று விடுவார்கள்’ என்று அச்சமூட்டினார். ஆனால் கவிஞர் கமால், ‘துணிச்சலான முயற்சி’ என செல்வாவைப் பாராட்டினர்.

இரவு, செல்வாவுக்குத் தூக்கம் வரமறுத்தது. தோளைச் சுற்றியிருந்த மனைவியின் கையை விலக்கியவாறு கட்டிலை விட்டு எழுந்தார். முன்னறைக்கு வந்து, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து குளிர்நீரை எடுத்துப் பருகினார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனது பயமுறுத்திக் கொண்டிருந்தது.

மின்விளக்கை எரிய விட்டார். சோபாவில் அமர்ந்தார். டீப்போவிலிருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்டினார். எட்டாம் பக்கத்தில் அவரது நன்றி கெடல் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. ஆர்வத்துடன் மீண்டுமொரு முறை அதனைப் படித்தார். உண்மையில் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசுக்கு எதிராக எழுதிய போது கூட இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதியதில்லையே. இவ்வளவு தத்ரூபமாகவும் உணர்ச்சிகரமாகவும் எப்படி இந்தக் கதை உருவாயிற்று? கலப்படமற்ற உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடு என்பதாலா?

திடீரென தடதடவென்று வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. செல்வா சற்றுத் தடுமாறித்தான் போனார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்து சென்று கதவைத் திறந்தார். இரவிருளுக்குள் கறுப்புடையில் மறைந்து நின்ற இரு முகமூடி உருவங்கள் அவர் கண்களுக்குத் தென்பட்டன. ஓர் உருவம் கையிலிருந்த பிஸ்டலை உயர்த்தி செல்வாவின் நெஞ்சுக்கு முன் நிறுத்திற்று. செல்வா, மிரண்டு பின்வாங்குவதற்குள் டப் டப் என்ற இரு சத்தங்களுடன் உள்ளிருந்து பாய்ந்து வந்த நெருப்புத் துண்டங்களிரண்டு அவரது நெஞ்சைத் துளைத்து உட்புகுந்து, இதயத்தின் இரத்தம் சதைகளிடை உஷ்ணம் தணிந்து இளைப்பாறிற்று. இரத்தம் கொட்டி வலி குமுறிய நெஞ்சைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டே சத்தமிடவும் திராணியற்று மல்லாந்து விழுந்தார் செல்வா. எம்பிக் குதித்து, வீட்டு மதிலைத் தாண்டி ஓடும் அந்த ‘இனந்தெரியாதோரின்’ கறுப்புருவங்கள், அவரது மூடும் விழிகளிடை மங்கலாகத் தெரிந்தது.

***

நன்றி : ஸபீர் ஹாபிஸ் (http://irukkam.blogspot.com/ )

13 பின்னூட்டங்கள்

 1. 20/11/2011 இல் 21:37

  ஏகத்துவம் எட்டு மணிநேரம் மட்டும்தானா?

 2. மதுபாலன் said,

  21/11/2011 இல் 17:18

  இது என்ன, நடந்த சம்பவமா? அல்லது நடந்ததாக எழுதப்பட்ட கற்பனைச் சம்பவமா?

  ஏனெனில், போராட்டக் காலத்தில் இது போன்ற சில எழுத்தாளர்கள் இருந்துள்ளனர். வீரகேசரி, தினக்குரல், சுடரொளி போன்ற பத்திரிகைகள்தான், இப்படியான எழுத்தாளர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தன.

  பின்னர் அவர்கள் கஷ்டத்தில் விழுந்த போது கண்டுக்காமல் விட்டுவிட்டன.

  நன்றிகெடல், தலைப்பும் கதையும் சிறப்பாக உள்ளது.

 3. 21/11/2011 இல் 17:52

  சிறுகதை என போட்டுவிட்டு ஒரு மனிதனின் உண்மை சம்பவம் எழுதப்பட்டுள்ளதே என தடுமாறியபோது தலைப்பை மீண்டும் பார்த்துக் கொண்டேன். நல்ல கதை.

 4. முருகானந்தன் said,

  21/11/2011 இல் 20:11

  விடுதலைப் புலிகள் பற்றியும் விடுதலைப் போராட்டம் பற்றியும் கொச்சைப்படுத்துதல் இப்போது ஒரு ஃபெஷனாகி விட்டது.

  வேடிக்கை என்னவென்றால், விடுதலைப் புலிகள் இருந்த போது, யாரும் அவர்களை எதிர்த்தோ விமர்சித்தோ எழுதியதுமில்லை, அவர்களுக்கு அறிவுரை கூறியதுமில்லை.

  அவர்கள் இல்லையென்று தெரிந்ததும் இஷ்டத்திற்கு ஆடிக் கொண்டிருககிறார்கள்.

  வேறு என்ன செய்ய, பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்…

 5. 21/11/2011 இல் 22:59

  ///வேடிக்கை என்னவென்றால், விடுதலைப் புலிகள் இருந்த போது, யாரும் அவர்களை எதிர்த்தோ விமர்சித்தோ எழுதியதுமில்லை, அவர்களுக்கு அறிவுரை கூறியதுமில்லை. ///

  யாராவது எதிர்த்திருந்தால் அவ்வளவுதான் அவன் உயிர் அவனுடையதல்ல.

  இப்ப மட்டும் என்னவாம்? எங்க தமிழ் நாட்டுலெ தப்பா பேசினா வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவதற்கு வைகோ, நெடுமாரன், சீமான் என மும்மூர்த்திகள் இருக்காங்க.

 6. அய்யனார் said,

  22/11/2011 இல் 09:42

  ///விடுதலைப் புலிகள் பற்றியும் விடுதலைப் போராட்டம் பற்றியும் கொச்சைப்படுத்துதல் இப்போது ஒரு ஃபெஷனாகி விட்டது. ///

  உண்மைதான்.

  புலிகள் இருக்கிற போது பேச முடியாத உண்மைகளை, அவர்கள் இறந்து பிறகும் பேசவில்லையென்றால், நமது எழுத்துக்கும் உணர்வுக்கும் என்ன அர்த்தமிருக்கப் போகிறது?

 7. அருள்நிதி said,

  22/11/2011 இல் 09:56

  தீமைகளைச் செய்பவனும்
  அதற்குத் தூண்டுகோலாய் இருப்பவனும்,
  அந்தத் தீமைகளினாலேயே
  அழிவுக்குள்ளாவான் என்ற
  உண்மையை எடுத்துக் கூறும் இக்கதை
  என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

  மட்டுமன்றி,
  இப்படியான புதிய உத்தியை
  நான் எந்தக் கதையிலும் படித்ததில்லை.
  இது எனது
  குறைவான தேடலாகக் கூட இருக்கலாம்.

  எனினும்,
  நல்ல கதையொன்றை
  எமக்குத் தேடியெடுத்து வழங்கியமைக்காக
  சகோதரர் ஆப்தீன் அவர்களுக்கு
  எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அது ஒரு புறமிருக்க,
  புலிகள் பற்றிய சிறந்ததொரு
  ஆவணக் கதையாகவும்
  இது அமைந்துள்ளது.

  ஏனெனில்,
  புலிகளின் அரசியற் கொள்கைகளுள் ஒன்று
  எதிர்ப்பவரை மட்டுமன்றி
  விமர்சிப்பவரையும் தூக்குவது

  இக்கொள்கையை
  தயக்கமோ
  மனிதாபிமானமோ
  கருணையோ
  சற்றுமின்றி சத்தமாக
  அவர்கள் செய்து வந்துள்ளனர்.

  இன்று புலிகளைத் தூக்கிப் பிடிப்பவர்
  நாளை அதே புலிகளினால்
  கொன்றொழிக்கப்படுவார்.

  இந்தப் புலிக் கொள்கைக்குப் பலியானோரின்
  எண்ணிக்கை
  இலங்கை இராணுவத்தினால்
  யுத்தத்தில் கொலை செய்யப்பட்ட
  தமிழர்களின் எண்ணிக்கையை விடவும்
  மிக அதிகமானதாகும்.

  புலகளினால் பாதிப்புக்குள்ளாகாத
  தமிழர்களின் எண்ணிக்கை
  வெகு சொற்பமே

  அவ்வாறே,
  இன்று
  புலிகளுக்கு ஆதரவாகக்
  குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையும்
  வெகு சொற்பமே.

 8. முகைதீன் said,

  22/11/2011 இல் 11:58

  “இனந்தெரியாதோர்” பற்றிய ஸபீர் ஹாபிஸின் சுட்டுதல் அற்புதமான குறியீடு.

  இலங்கையில், குறிப்பிட்ட காலங்களில் இயங்கும் “இனந்தெரியாதோர்” என அழைக்கப்படும் குழுக்கள் பற்றி எல்லோருக்கும் தெரிந்தேயிருக்கும் என்பது இங்குள்ள நியதி.

  விடுதலைப் புலிகள் சில காலங்கள் இனந்தெரியாதோராக இருந்தனர். அவர்களுக்குப் பின் கொஞ்ச காலம் வெள்ளை வேன்காரர்கள் இனந்தெரியாதோராய் இருந்தனர்.

 9. 22/11/2011 இல் 16:50

  மிகவும் அருமை ஸபீர்.
  உத்தியும் நடையும் உங்களது
  உள்ளக்கிடக்கையை / உண்மையை
  நன்கு வெளிப்படுத்தியுள்ளது.

  1948ல் ’வெள்ளைக்காரன்’ இந்தியரிடம் இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள்:
  “எங்களை எதிர்த்த உங்கள் காந்தியை நாங்கள் பல பத்து வருடங்கள் பாதுகாத்தோம். ஆனால் உங்களை ஆதரித்த அவரை நீங்கள் ஒருவருடம் கூடப் பாதுகாக்க முடியவில்லை”

  கதையைப் படித்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது

 10. 22/11/2011 இல் 18:57

  இச்சிறுகதையைத் த‌னது தளத்தில் பதிவிட்ட‍ ஆபிதீன் நானா அவர்களுக்கும்,

  கதையைப் படித்து இங்கு கருத்துகளையும் உரையாடல்களையும் பகிர்ந்துள்ள‍ சகோதரர்கள் மதுபாலன், ஒ.நூருல் அமீன், முருகானந்தன், ஹ்மீது ஜாஃபர், அய்ய‍னார், அருள்நிதி, முகைதீன், மஜீத் ஆகியோருக்கும்

  என் மனமார்ந்த நன்றிகள்.

  • அம்ரிதா ஏயெம் said,

   24/11/2011 இல் 20:17

   புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஊடாடியிருக்கிறீா்கள். அருமையாக வந்திருக்கிறது. பல நுாறு செல்வாக்கள் யதார்த்தத்தில் இருக்கலாம். சு.ரா.வின் ஜே.ஜே. யின் சில மூலகங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. என்னைப் பொறுத்தவரை மிகவும் கனதியான படைப்பு. வாழ்த்துக்கள். தொடா்க..

 11. 24/03/2013 இல் 21:47

  அம்ரிதா சொன்னதைத்தவிர வேறேதும் சொல்ல இல்லை. கதை படிப்பதான உணர்வே தோன்றவில்லை. படித்து முடித்த பின்பு கதை எங்கே என்று தோன்றி, மீண்டும் படிக்த வைத்தது. கடைசியில் பின்னூட்டம் தெளிவைத்தந்தது. அாரமான உத்தி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s