பெருநாள் நெஞ்சம் – புரட்சிக் கமாலின் கவிதை வட்டிலப்பம்

எம்.எம். சாலிஹ் (1928 – 1996)

புரட்சிக் கமால் எனும் புனைப்பெயரில் விளங்கும் கவிஞர் ஜனாப் எம்.எம். சாலிஹ், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 

தமிழிலக்கியத் துறையில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் கொண்ட இவர், மாணவப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை, நாடகம் முதலான இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுப் பிரகாசிக்கலானார்.

வித்துவான் எஃப்.எக்ஸ்.சி. நடராசா, பண்டிதர் வி.சி. கந்தையா, ஜனாப் ஏ.கே. முகைதீன் சாஹிபு (தமிழ்நாடு), திரு எஸ்.டி. சிவநாயகம் நல்லறிஞர்களின் நட்பும் தொடர்பும் ஜனாப் எம்.எம். சாலிஹ் அவர்களின் இலக்கிய முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. 

‘கமால்’ எனும் புனைப்பெயரில் தனது 18ம் வயது முதற்கொண்டு கவிதைகள் புனையத் தொடங்கினார். இவரது கவிதையின் சிறப்பம்சங்களைச் சுவைத்து மகிழ்ந்த ஜனாப் ஏ.கே. முகைதீன் சாஹிபு அவர்கள் தனது இஸ்லாமியத் தாரகை எனும் வார இதழில் கமாலை “புரட்சிக் கமால்” ஆக்கி விமர்சித்ததோடு, வாரந்தோறும் புரட்சிக் கமால் கவிதைகளுக்கு சிறப்பிடம் வழங்கி வந்தார். 

கவிஞர் புரட்சிக் கமாலின் கவிதைகள் சுதந்திரன், தினகரன், வீரகேசரி, தேசாபிமானி, தோழன் முதலான இலங்கைப் பத்திரிகைகளிலும் திராவிட நாடு, மணிவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, மலையாள நண்பன் முதலான பிறநாட்டு ஏடுகளிலும் வெளிவரலாயின. 

அன்னாரின் “நாளை வருவான் ஒரு மனிதன்” என்ற புகழ்பெற்ற கவிதை 1960களின் ஆரம்பத்தில் சீன மக்கள் குடியரசின் மக்கள் தினசரியில் சீன மொழியில் வெளிவந்திற்று. எனது அறிவுக்கெட்டிய வரையில் சீன மொழியில் வெளிவந்த முதல் தமிழ் கவிதை இதுவாகத்தானிருக்கும் என நம்புகிறேன். அன்று அந்தக் கவிதை வெளிவருவதற்கு காரணமாக இருந்தவர், இலங்கை கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த மர்ஹ¨ம் சகோதரர் எச்.எம்.பி. முகைதீன் அவர்களாவார். புரட்சிக் கமால் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கவிதை, ’பெருநாள் நெஞ்சம்’ என்ற தலைப்போடு ஆப்தீன் பக்க அன்பர்களுக்கு வழங்குகிறோம். 

எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்

***

பெருநாள் நெஞ்சம் – புரட்சிக் கமால்

 

“கண்டாயா? தோளுக்குச் சற்றாய், சற்று

கன்னத்தைச சரித்துப் பார்! என்ன?” “ஆமாம்!

உண்டே ஓர் சுரைக்காயின் தண்டும் ஓ ஓ…

உங்கள் சுவை மீசைபோல், நிலவுப் பிள்ளை!

கொண்டாட்டம்தான்; நமக்கு கொள்ளை இன்பச்

சரக்கேற்றி வந்த பிறைத் தோணி; எங்கள்

பண்டமைந்த திரு வாழ்வின் விளக்கு! ஈதுல்

அளுஹாவின் வாழ்த்துமடல், வாழி, வாழி!

 

“இன்றாகச் சுவைக்கின்றேன்! எனினும், மச்சான்

இரு நெஞ்சம் மருவி ஆறஞ் சூழ்ந்து, ஆண்டு

ஒன்றாச்சே! எங்கள் மணத்தேதி காட்டும்

ஒளிநிலவு; பெரு மகிழ்வின் பஞ்சு மெத்தை!

நன்றாச்சே; இருக்கின்றேன்! நமது கொல்லை

மருதோன்றி மேய்ந்திடுவார்; சிறுவர்! இன்னே

சென்றுதளிர் ஆய்கின்றேன்; சந்தனத்தின்

செஞ் சார்ந்து படைக்கின்றேன்…” செல்வமே; நில்!

 

மருதோன்றிக் கலவைக்கும்; மாற்றுயர்ந்த

மாலைக்கும், புத்துடைக்கும் பெருநாள் என்றா

கருதுகின்றாய்? பெருமாட்டி; இற்றை நாளின்

கருத்திதுவோ? உனைப்பழியேன்! “வாழ்க்கை, தொண்டு

மரணமெலாம் இறையருவன் ஆணை”க் கென்ற

மாணடியார் பெருவாழ்வைச் சித்திரிக்கும்

திருநாளின் உணர்விழந்தோம்! ஆடை சூடித்

திளைத்துண்டு ஆடுவதே பெருநாள் என்றோம்!

 

மணநாளின் குறிப்புணர்த்திக் காட்டுகின்ற

மணிப் பொறியாய் பிறைகண்டாய்! மானே, உன்னைச்

சினப்பேனா? முன்னிருந்த மகளிர்க்கெல்லாம்

சிந்தைக்கு விளக்கேற்றி, ‘நம்றூத்’ என்பான்

தணற்காடும் உள்ளுருகத் தவத்தில் மூத்த

தாதை இபு றாஹீம் தன்பாதை காட்டும்

குணப் பொருளாய் நின்ற பிறை; இன்றுமட்டும்

கொண்டவனின் மீசையினை விண்டதென்ன?

 

அல்லாஹ்வின் தோழமையே அல்லால், வேறு

அணுப்பிளவின் சிறுமுனையும் நண்ணேன்! என்னைத்

தொல்லையிட வருகின்ற கோடி கோடித்

துன்பத்தும் வல்லவனின் சுவையே காண்பேன்

எல்லையிலான் பேராணை இயற்ற லொன்றே

என் வாழ்வு, நாடு, நிதி, மக்கள்!” என்ற

நல்லாரின் நெஞ்சத்துப் பூங்கா பூத்த

நாளின்று; நம்கடமை என்ன? என்ன?

 

“பிழை சுமந்தேன் மன்னிப்பீர்; மச்சான்…” இல்லை இல்லை

பிழை சுமக்கும் பிழை சூழ்ந்தோம்! சமுதாயத்தின்

விளை புலமாம் மகளிரினைப் பொட்டலாக்கி

விட்டதனால் வீழ்கின்றோம்! அவற்றின் பேறாய்

களைபடிந்தோம், பதரானோம்! ஹாஜறாக்கள்

கண்ணிழந்த துணையானார்! இஸ்மாயீலின்

விளைவிழந்தோம்; ஆஸர் எனத் தாழ்ந்தோம்! மேலும்

விசையடிந்த பொறியானோம், விழலாகின்றோம்!

 

வீழ்ச்சியினை நினைந்துருகி விம்முகின்றீர்

விம்மலினால் மாற்றுண்டால்; விம்முகின்றேன்

காழ்ச்சிந்தை உணர்வினராய்த் திட்டமீந்தால்

கருத்தளையேன் கண் பெற்று வாழ்வே னன்றோ?

தாழ்ச்சியினைச் சாணளவும் தரியேன்; இந்தத்

தகு நாளின் மணிப்பரிசாய், சுவடுபற்றி

வாழ்க்கையுறத் தாவுகிறேன்! மச்சான், உங்கள்

வழிபயிற்றிச் செயல்தருவீர்; விரைவீராக!

 

‘ஹாசிம் வாய்ச் செந்தமிழே; கண்ணே! வா, வா!

கரமுயர்த்தி வல்லவனை வழுத்து. ‘அல்லாஹ்

மாசடைந்தோம்; மன்னிப்பாய்! திருநா ளின்று

மாற்றுயர்ந்தோம்! மனையறத்தின் மூச்சொவ்வொன்றும்

தேசுமிழும் கஃபாவின் தச்சர்; உன்றன்

திருத்தோழர்; தூதர்களின் தந்தை; அன்னார்

வீசுபுகழ் மலரடிக்கே தந்தோம்! எங்கள்

வேட்கை யெலாம் வழிபாடாய் விளங்கச் செய்வாய்!

***

நன்றி :  ’நமது முன்னோடிகள் எவ்வளவு சிறப்பாக தமிழ் மொழியை தங்களுக்கு வாலாயமாக்கிக் கொண்டார்கள் என்பதற்கு கமாலின் கவிதை ஒரு சோற்றுப்பருக்கு’ என்று சொல்லி அனுப்பிய மதிப்பிற்குரிய ஹனிபாக்காவுக்கும் , தம்பி ஸபீர் ஹாபிஸுக்கும்.

***

‘ஏறாவூரை நினைக்கும்போது முதலில் எனக்கு ஞாபகம் வரும் பெயர் புரட்சிக்கமால். 1950- 60களில் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதை எழுச்சியடைந்தபோது அதன் முக்கிய தூண்களுள் ஒன்றாக நிமிர்ந்து நின்றவர் புரட்சிக்கமால். ஐரோப்பாவின் நோயாளி என்று கருதப்பட்ட துருக்கியை மதச்சார்பற்ற ஒரு நவீன துருக்கியாக மாற்ற முயன்ற முஸ்தபா கமாலை ஆதர்சமாகக் கொண்டு சாலிஹ் என்ற தன் சொந்தப் பெயருக்குப் பதிலாக புரட்சிக் கமால் என்று புனைபெயர் பூண்டபோதிலும் முஸ்தபா கமால்போல் மதச்சார்பற்ற மேலைமயமாக்கலின் ஆதரவாளராக அன்றி ஆழ்ந்த இஸ்லாமிய உணர்வுமிக்க சமூக சீர்திருத்தக் கவிஞராகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் புரட்சிக் கமால். 1950- 60களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ உணர்வு ஸ்தாபனமயப்பட்ட சூழலில் அதன் கவித்துவக் குரலாக ஒலித்தவர் இவர்.’  – பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

4 பின்னூட்டங்கள்

 1. 07/11/2011 இல் 12:32

  அப்போது…
  1950-60 களிலே சுதந்திரமாக
  நெஞ்சுயர்த்தி பாடியது
  புரட்சிக் கமா லல்ல – அது
  பீரங்கிக் கமால்…!

  இப்போது…
  நாங்கள் மட்டுமே நபிவழி – என
  புரட்டுப் பாடும் பெட்ரோலியங்களே..!
  நீங்கள் நபி வழி என்றால் – அப்பொ
  நாங்கள்….? சொல்ல
  வவர்த்தை வரவில்லை…

 2. sugan said,

  07/11/2011 இல் 22:41

  perunaaZh vaazhththukkaL

 3. 08/11/2011 இல் 07:37

  ‘நிச்சாமம்’ சுகனுக்கு நன்றி – ஹனிபாக்கா சார்பாக. கனல் தெறிக்கும் ‘கமெண்ட்’ எழுதிய ஜாஃபர்நானாவுக்கும் நன்றி. நானாவுக்கு ஒரு செய்தி உண்டு. ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரத்தை அறிவிக்க ஆட்டோவில் அலைந்த ஒரு பிரிவினர் , ‘நபிவழியில் —- இடத்தில் தொழுகை நடைபெறும்’ என்று சொன்னபோது ‘அப்ப நாங்கள்லாம் சூத்த காம்ச்சிக்கிட்டா தொளுவுறோம்?’ என்று வேறொரு பிரிவினர் வெடைத்தார்கள். ‘அல்லாவுக்கு பயப்படனும்’ என்று சொன்னபோது ‘நாங்கள்லாம் ஆட்டுக்குட்டிக்கா பயப்படுறோம்?’ என்று என்று கேட்ட அதே ஆட்கள். திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது!

 4. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  08/11/2011 இல் 19:00

  ஆப்தீன், எங்க ஊர்லயும் சூத்த காம்ச்சிக்கிட்டா தொழுவுறோம் எண்டு கேக்கிற கொஞ்சப் பேரு இருக்காங்க. உண்ட மறுமொழியப் பார்த்ததும் நானும் ஸபீரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அல்லாஹ் நம்மட பாவங்கள மன்னிச்சாலும் நம்மட அறுவான்கள் நம்மள மன்னிக்கமாட்டான்கள் போல. ஜாபர் நானாக்கு எங்களுடைய பெருநாள் வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s