வந்தான்… வென்றான்… சென்றான்

பிரியத்திற்குரிய சடையன் அமானுல்லா அவர்கள், ‘பண்புடன்’ குழுமத்திலும் ‘முத்தமிழ்’ குழுமத்திலும் எழுதிய பதிவை – அவரது அனுமதியுடன் – மீள்பதிவிடுகிறேன் . ’இதற்கெல்லாமா அனுமதி கேட்பீர்கள். உங்கள் சித்தம்’ என்றார் சடையன். என் பாக்கியம்!

***
1992ம் ஆண்டு GITEX என அழைக்கப்படும் Gulf Information & Technology Exhibition உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். அமீர்கத்திற்கு ஆப்பிள் டீலராக இருந்ததால் வருடா வருடம் எங்களுக்கு அந்த எக்ஸ்போவில் அரங்கம் அமைத்துக் கொள்ள முன்னுரிமை தரப்படும் அப்படி அந்த ஆண்டு 60 சதுர அடி அமைத்துக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. எங்கள் உரிமையாளர் அரபி முதுகலை படித்தவன். சடையன் வா இங்கே எனக் கூப்பிட்டு இந்த ஆண்டு நம் அரங்கம் நெ 1 ஆக இருக்க வேண்டும். ஆபீஸ் ஊழியர்கள் அனைவரையும் பயன் படுத்திக் கொள் அரங்கம் எல்லோராலும் பேசப்பட வேண்டும் மேலும் இந்த ஆண்டு நம் அரங்கை பார்வையிட ஷேக் மொஹம்மது வருகிறார் கூடவே அமெரிக்காவிலிருந்து ஸ்டீவ் ஜாப் வருகிறார், எனச் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டான் அரபி.

என்ன செய்வது என தெரிய வில்லை ஆளாளுக்கு யோசனை சொன்னார்களெ தவிர உருப்படியாக ஏதும் சொல்லவில்லை. மனதில் ஒரு ஐடியா உதித்தது. டிரைவரை அழைத்துக் கொண்டு அவீரில் உள்ள ஸ்டோருக்கு சென்றேன். பழைய கணினிகள் போர் போல குவித்துக் கிடந்தது. அதிலெ வகைக்கு ஒன்றாக எடுத்து வந்து அலுவலகத்தில் சேர்ர்த்து டெக்னீசியன்களை கூப்பிட்டு ஒரு அமர்வை வைத்து எனது ஐடியாவை சொன்னேன் அதாவது ஆப்பிளின் பரிணாம வளர்ச்சி ( Evolution of Apple) என்ற தீமிலே அரங்கம் அமைய வேண்டும் அதற்கான வேலையை செம்மையாக செய்ய வேண்டும் என சொல்லி விட்டேன். எனது டெக்னீசியன் குழுவில் இரு மலையாளிகள் ஒரு தமிழன் ஒரு ஃபாலஸ்தீனியன் (தின்று கொண்டே இருப்பான் அதனால்தான் தீனியன்) ஒரு எகிப்தியன் ஒரு பாகி ஒரு வடக்கத்தியன்

எல்லோருக்கும் முகம் சரியில்லை தமிழனும் மலையாளியும் முதலில் களமிறங்கினார்கள். பழைய ஆப்பிள் கணினியை செப்பனிட என்னவேணும் என ஆராய்ந்து பொருள்கள் வாங்க கிளம்பிவிட்டார்கள்.

இரவு பகலாக உழைத்து நான் எதிர்பார்த்த விதமே பழைய ஆப்பிள் கணினிகளை (Apple 1 Apple II ,IIG Apple Lisa (ஸ்டீவ் ஜாபின் மகள் பெயர் லிசா ) , Apple Profile)  சரிக் கொணர்ந்து விட்டார்கள். அரங்கம் நிர்மானிக்க வேண்டிய வேலை. அதையும் சரி செய்து விட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு அரங்கம் திறப்பு விழாவை எதிர் பார்த்திருந்தோம். உள்ளூர் ஷேக்கை விட cupertino விலிருந்து வரப்போகும் ஸ்டீவ் ஜாபையே அதிகம் எதிர்பார்த்திருந்தோம். அமெரிக்காவிலிருந்து வரும் ஆப்பிள் நிறுவனரை வரவேற்க கோட்டு சூட்டு அணிந்து நின்றோம்.அமெரிக்காவிலிருந்து ஸ்டீவ் வருகிறார் அவரும் கோட்டு சூட்டு அணிந்துதான் வருவார் என்ற யூகம்

வழக்கும் போல ஷேக் வந்தார், எங்கள் அரபியின் மூக்கோடு மூக்கை உரசிவிட்டு எங்களுக்கும் ஹாய் சொல்லி விட்டு சென்றார். அடுத்து ஸ்டீவ், வந்தார் கோட்டு சூட்டோடு வருவார் என எதிர்பார்த்திருந்த எங்களுக்கு மடிந்து மக்கிப்போன ஒரு டெனிம் ஜீன்சும் கருப்பு ஆப்பிள் டீ ஷர்ட்டுமாக அரங்கத்தில் நுழைந்து பார்த்தார்.

very nice and good, but this is not the way to exhibit Apple’s evolution என்றார். நான் ஆப்பிள் 1 கீழே வைத்து படிப்படியாக அதன் வளர்ச்சியை மேலே மேலே கொண்டு போய் கடைசியில் G3  எந்திரத்தில் முடித்திருந்தேன். மேலே பழைய ஆப்பிளை வைத்து கிழே கடைசியில் G3 யில் முடித்திருக்க வேண்டுமாம். அவர் சொன்னதும் சரிதான் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என மனிதனின் பரிணாம வளர்ச்சியை காட்டும் போது முதலில் குரங்கை காட்டி படிப்படியாக கடைசியில் தானே மனிதன் வருவான். நான் உல்டாவாக செய்து விட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு செய்தும் தவறாகப் போய்விட்டதே என ஒரு மன உளைச்சல். அந்த உளைச்சல் அன்றிரவே சரியாகி விட்டது. 

Mac ED என ஒரு குட்டி கணினியை எடுத்து உள்ளே இருந்த அதன் குடல் குந்தானி எல்லாவற்றையும் உருவி விட்டு வெறும் கூட்டை (shell) ஐ வைத்து , பார்வையாளார்கள் தங்கள் பிசினெஸ் கார்டை போடும் விதமாக Please drop your business card என எழுதி வைத்திருந்தேன். அதில் ஸ்டீவ் தனது கார்டை டிராப் செய்து விட்டு see you later என விடை பெற்று சென்று விட்டார்.

அன்றிரவு ஸ்டீவ் க்கு UAE யின் மெயின் டீலரான Arab Business Machine இண்டர் காண்டினெண்டல் ஓட்டலில் மிடில் ஈஸ்ட் டீலர்களுக்கும் ஸ்டீவிற்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஸ்டீவ் Apples main task is innovation and imagination, that innovation and imagination exhibited by one of the UAE dealer by the way of Apple’s evolution  என்றார்.

இது ஸ்டீவிடம் நான் வாங்கிய ஷொட்டு (Pat) அதே சமயம் மற்றோரு தருணத்தில் அவரிடம் குட்டும் வாங்கியிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் அது..

ஒருநாள் காலை எனது ஆப்பிள் ஷோரூமில் அன்றைய தினம் Ingram MicroD  நிறுவனத்திலிருந்து வந்திருந்த மக்கிண்டோஷ் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர்கள் அடங்கிய பார்சலை திறந்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன். நுழைவாயிலில் ஒரு நெடிய உருவம் நுழைந்து மக்கிண்டோஷ் கணினிகளை பார்த்துக் கொண்டிருந்தது. பின் என்னிடமே வந்து எங்கே முதிர் (மேனேஜர்) என அரபியில் கேட்டது  நாந்தேன் என்ன வேண்டும் என அரபியிலேயே பதில் சொன்னேன். அந்த மனிதர் பேசிய அரபி சற்று வித்தியாசமாக இருந்தது. நாம் சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், தஞ்சைத்தமிழ் என்பது போல அங்கெ அரபியர்கள் பேசும் அரபி வழக்கை வைத்தே அவன் எந்த அரபு நாட்டிலிருந்து வந்திருக்கிறான் என கண்டு பிடித்து விடலாம். எ.கா ஒரு பொருளை காட்டி

ரஃபீக் ஹாதா கம் (அமீரக வாசி ) இதன் விலை என்ன
யா ஷேக் ச்சம் ஹாதா (சவூதி )
மாஅல்லிம் கத்தேஷ் ஹாதா (ஜோர்டான்/பலஸ்தினி)
போல்லகே கம் கினி ஹாதா (எகிப்தியன்)

ஆனால் வந்திருந்தவனின் அரபி வித்தியாசமாக இருந்தது. மேலே எனது ஆபிசுக்கு அழைத்துச் சென்று நான் அரபி மொழியைக் கொல்ல அவன் ஆங்கிலத்தை கொத்தி கீமா போட ஒன்றும் விளங்கவில்லை. பாதி புரிந்தது லிப்யாவிலிலிருந்து வந்திருக்கிறான்  மக்கிண்டோஷ் ஜி3 கணிணி வாங்க கைப்பையிலிருந்து கட்டு கட்டாக அமெரிக்க டாலரையும் எடுத்து காட்டினான். பட்சி ஒன்று மூளையில் படபடத்து, நீ தலையிடாதெ உன் முதலாளியை கூப்பிடு நீ ஒதுங்கிக் கொள் என்றது. முதலாளிக்கு போன் செய்தேன் ஆளை விடாதே சுலைமானி சாண்ட்விச் கொடுத்து ஆளை அமுக்கிவை அரைமணி நேரத்தில் நான் அங்கிருப்பேன் என்றார் முதலாளி. சரியாக இருபது நிமிடத்தில் எங்கள் அரபி வந்து விட்டான். வழக்கம் போல இருவரும் மூக்கோடு மூக்கை உரசி கட்டித் தழுவி குசலம் விசாரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சங்கதி இதுதான் வந்திருந்தவன் துனிசியாக்காரன். லிப்யாவின் கத்தாபி அரசிற்கு கணினி வாங்க வந்திருக்கிறான் (அதான் அரபி வித்தியாசமாக இருந்தது) டீலை முடித்து விட்டான் எங்கள் அரபி. மொத்தம் 120 ஜி3 கணினி. அதுவும் கத்தாபியின் மிலிட்டரிக்கு .

வேண்டாம் இந்த டீல் சரியாக வராது என்றேன்.

மக்கிண்டோஷ் டீலர்ஷிப்பின் முக்கியமான சட்டம். ஆப்பிள் தயாரிப்புகள் எதுவும் ஈரான்,ஈராக்,கொரியா,லிப்யா,கியுபா நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. மீறிச் செய்தால் டீலர்ஷிப் கேன்சலாகிவிடும் என்ற சட்டம். அதில் கையெழுத்து போட்டால்தான் டீலர்ஷிப் கிடைக்கும். அதை நினைவூட்டினேன். அதையெல்லாம் நான் சரி செய்து கொள்கிறேன். நீ உன் வேலையைப் பார் என்றான்.

முதலில் 40 ஜி3 கணினிக்கு ஆர்டர் செய்தேன். எப்போதும் 10 கணினிக்கு ஆர்டர் செய்யும் எங்களிடமிருந்து 40 கணீனிக்கு ஆர்டர் வந்த போதே மெயின் டீலர் உஷாராகி விட்டான். ஏன் எதற்கு என்ற கேள்வியோடு 40 கணினி வாங்குபவர்களின் database வேண்டும் என்றான். ஏற்கனவே வாங்கியிருந்தவர்களின் முகவரியோடு, காலித் பின் வலீத் ரோட்டில் இருந்த டீக்கடை,ஷவர்மா கடை,தையல் கடை என இஷ்டத்திற்கு தகவலை அளித்து விட்டு 40 ஜி3 யை கொண்டு வந்து சேர்த்தேன். அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் 40 ஜி3 க்கு ஆர்டர் செய்தேன். மெயின் டீலர் தரமாட்டேன் என அடம் பிடித்தான். காரணம் எங்களிடம் வந்த லிபியாக்காரன் மெயின் டீலரிடமும் போய் சுலைமானி குடித்திருப்பான் போல. நீ லிப்யாவிற்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறாய். ஆப்பிள் சட்டபடி அது தவறு. உனது ஏஜன்சியை ஏன் ரத்து செய்யக் கூடாது என நோட்டீஸ் விட்டான்.

எனது அரபி நேராக மெயின் டீலரிடம் சென்றான். நான் மண்ணின் மைந்தன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று சண்டை போட்டு வந்து விட்டான் ( மெயின் டீலர் லெப்னானைச் சேர்ந்தவன்) லிப்யாக்காரனிடம் கை நீட்டி மொத்த பணத்தையும் அட்வான்சாக வாங்கி விட்டோம்.என்ன செய்வது. GCC நாடுகள் அனைத்திலும் கேட்டுப் பார்த்தோம். ஒன்றும் நடக்கவில்லை. no chance of selling beyond our territory என முகத்தில் அறைந்தாற் போல சொல்லி விட்டார்கள். வேறு வழி grey marketing,

எந்த நாட்டில் லிபியாவிற்கு விற்கக் கூடாதென்றானோ அவன் நாட்டிலேயே ஜி3 வாங்குவதென முடிவு கட்டி அமெரிக்காவில் உள்ள சில ஆப்பிள் ஸ்டோரிடம் கேட்டோம். முதலில் அவன் கேட்ட கேள்வி துபாய் எங்கிருக்கிறது, சவூதி அரேபியாவிலா என்றான். அடங் கொய்யாலெ என அவனுக்கு படம் வரைந்து பாகங்களைக் குறி என்பது போல துபாய் மேப்பை விளக்கினேன். அடுத்து பேமெண்ட், LC எடுத்து தருகிறேன் என்ற என்னிடம் அப்படி என்றால் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டான். அமெரிக்கனுக்கு தெரிந்ததெல்லாம் கிரெடிட் கார்ட் அல்லது வயர் ட்ரான்ஸ்ஃபர் மட்டுமே.

இப்படி பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, சில லோக்கல் ஈரானியர்கள் வந்து நீ அமெரிக்காவில் ஜி3 வாங்கப் போகிறாயா அப்படி என்றால் எங்களிடம் பணத்தை கட்டி விடு, நாங்களே கம்ப்யூட்டரை வரவழைத்து துபாய் ஏர்போர்ட்டில் தருகிறோம் என்றார்கள். இதென்னடா அமெரிக்காவில் போன் செய்து கம்ப்யூட்டர் கேட்டால் துபாயில் பதில் தருகிறான். ஏதேனும் தாவூத் இப்ராஹிம் வேலையா என ஆச்சரியப் பட்டு அரபியிடம் சொல்லி விட்டேன்.

பிறகென்ன மீண்டும் மூக்கோடு மூக்கு உரசி, சுலைமானி குடித்து ஒரே வாரத்தில் ஈரானியர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தான் அரபி.  மீதமுள்ள 80 ஜி3 கணினியையும் 10 நாளில் கொண்டு வந்து சேர்த்தேன். விசாரித்ததில் கிடைத்த தகவல், அமெரிகாவில் ஆப்பிள் ஸ்டோர் வைத்து நடத்துபவர்கள் பெரும்பான்மையினர் ஈரானியர்கள் ஆனால் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாம்.

கம்ப்யூட்டர் வந்த அன்று, மீண்டும் சண்டை செய்தான் மெயின் டீலர் இது grey marketing கஸ்டம்சை விட்டு பொருள்கள் வெளியே வரக் கூடாதென தடை வாங்கி விட்டான். ஏர்போர்ட் கஸ்டம்சில் இருந்து அரபிக்கு போன் செய்தேன். அங்கே ஏர்போர்ட் மேனேஜர் பெயரை மட்டும் சொல் அரை மணி நேரத்தில் பொருள்களை வெளியே கொண்டு வந்து விடுகிறேன் என்றான். அதை செய்தும் காட்டினான்.

ஜாம் ஜாமென்று இரு கண்டெய்னர்களில் கணினி, மானிட்டர், கீபோர்டு என லிப்யாவிற்கு ஏற்றுமதி செய்தேன்.

யே ட்ரைலர் ஹை மெயின் பிக்ச்சர் பாக்க்கி ஹே தோஸ்த்

எங்கள் ஒப்பந்தப்படி ஜி3 சப்ளை மட்டுமல்ல , லிபியா வரை சென்று அதை இன்ஸ்ட்டால் செய்து, நெட் ஒர்க்கிங் வரை செய்து கொடுப்பதுதான் ஒப்பந்தம். கம்ப்யூட்டர் வாங்கி சப்ளை செய்வதில் தாமதம், லிபியா செல்வதற்கு ஒரு இந்தியனின் பாஸ்போர்ட், ஒரு ஃபலஸ்தினியன் பாஸ்போர்ட் இரண்டையும் கொடுத்து விசாவிற்கு அப்ளை செய்திருந்தேன். இந்திய பாஸ்போர்ட்டுக்கு உடனே விசா கிடைத்து விட்டது, பலஸ்தினியனுக்கு விசா கிடைக்கவில்லை. லிப்யா செல்வதற்கு வேறு யாரும் தயாராக இல்லை. இதற்கிடையில் லிப்யாவிலிருந்து ஃபோனுக்கு மேல் ஃபோன் தாமதமாகிறது. உடனே விரைந்து வந்து எல்லா கம்ப்யூட்டரையும் இயக்கத்திற்கு உள்ளாக்கு, மேலும் ஜி3 ஆர்டர் செய்ய வேண்டும் என்றார்கள். விசா பிரச்சினையை சொன்னேன். லிப்யாவிலிருந்து பதில் வந்தது, ஃபலஸ்தினியக்கு ஆன் அரைவல் விசா தருகிறோம் உடனே புறப்பட்டு வரச்சொல் என.

இதற்கிடையில் லிப்யா மிலிட்டரியில் உல்ள ஒரு வெளங்காவெட்டி,  அமெரிக்காவில் படித்தவனாம் எனக்குரிய ஜி3 யை கொடு நான் முன்பே ஜி3 யை பாவித்திருக்கிறேன் என்ற அந்தப் பாவி, ஜி3 யை எடுத்து இன்ஸ்டால் செய்திருக்கிறான். arabic enabled  செய்யத் தெரியாமல் முழித்துவிட்டு ,  கடைசியில் லிப்யாவிலிருந்து மக்கிண்டோஷ் தலைமையகத்திற்கு (cupertino) மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறான் , எப்படி அரபிக் OS  இன்ஸ்டால் செய்வதென்று, பிரமித்துப் போன ஆப்பிள் தலைமையகம், உனது ஜி3 யின் பார்ட் நம்பரை அனுப்பு என்று பதில் அனுப்பியிருக்கிறது. திருவாளர் உடனே உதவி கிடைக்கப் போகிறது என்ற உற்சாகத்தில் நம்பரை அனுப்பியிருக்கிறார். நம்பரை வைத்து கண்டு பிடித்து விட்டார்கள். அந்த ஜி3 அமீரகத்திற்கு அனுப்பப் பட்டதென. அவ்வளவுதான் மெயின் டீலரை கிழி கிழி (நன்றி கலா மாஸ்டர்) என கிழித்து விட்டார்கள். அது மட்டுமல்ல AMME (African,Mediteranian & Middle East) ரீஜினல் ஆபிஸ் டென்மார்க்கில் உள்ளது அங்கிருந்து இருவர் நேரடியாக துபாய் வந்து விட்டார்கள். விசாரனைக்காக,

விசாரனை துவங்கியது, என் முதலாளி நீயே சமாளித்துக் கொள் நான் வர முடியாது என்று ஜகா வாங்கி விட்டான். நல்லவேளை நாங்கள் அனுப்பிய கம்ப்யூட்டர் அனைத்திற்கும் invoice ஜோர்டானில் உள்ள ஒரு கம்பெனியின் முகவரிக்கு bill செய்திருந்தேன். சத்தியம் செய்து விட்டேன், நாங்கள் விற்பனை செய்தது  ஜோர்டானுக்குத்தான், அங்கிருந்து அவர்கள் லிப்யாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள், எங்களுக்கு தெரியானல் என சொல்லி விட்டேன். அவர்கள் நம்பவில்லை என்பது அவர்களின் முகத்திலிருந்து தெரிந்தது. மெயின் டீலரும் எங்களை போட்டுக் கொடுத்து விட்டான். இது முதல் தடவை என்பதால் உங்கள் டீலர்ஷிப்பை ரத்து செய்யவில்லை, ஆனால் இனிமேல் உங்களுக்கு ஜி3 ஜி4 கணினி ஆறு மாதத்திற்கு சப்ளை கிடையாதென எழுதிக் கொடுத்துவிட்டு போய்விட்டான். அடுத்த வாரமே ஸ்டீவிடமிருந்து, ஒரு கண்டனக் கடிதம் வந்து விட்டது.

இப்படியெல்லாம் ஆப்பிளை வளர்த்த ஸ்டீவ் ஜாப் இன்று நம்மிடையே இல்லை. ஆப்பிள் ஸ்டிக்கரை பார்த்துவிட்டு என் மகள் (அப்போது 5 வயது) துபாயில் இருந்த போது கேட்ட கேள்வி டாடி ஆப்பிளை கடித்தது யார் ? நானும் விளையாட்டாக நண்டு கடித்து விட்டது என்பேன். அது இப்போது உண்மையாகி விட்டது நண்டு(cancer) கடித்ததால் ஸ்டீவ் ஜாப் நம்மிடையே இல்லை. creative man attacked by (pan)creatic cancer .  May his soul rest in peace.

***

நன்றி : சாபத்தா (சடையன் அமானுல்லா) | sadayan.sabu@gmail.com 

***

தொடர்புடைய பதிவு : எனர்ஜி டானிக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s