காதில் விழுந்த கானங்கள்

வெள்ளை கலர் செருப்பு போட்டுச் சென்ற நதீமைப் பார்த்து அவன் கூட்டாளி அலறினானாம் : ‘டேய்.. காலுக்கு கீழே மடையான் ஒக்காந்திக்கிதுடா!’ .

நாகூர் பிள்ளைகளின் இம்மாதிரி ’வெடை’களெல்லாம் நாகூர் கவிஞர்களின் கிண்டல்களிலிருந்துதான் பிறக்கின்றன. முக்கியமாக நம் சலீம்மாமா. உதாரணம் சொல்கிறேன், பாருங்களேன்.மூன்று தினங்களுக்கு முன்பு சலீம்மாமாவைப் பார்க்கப்போனபோது முதல் கேள்வியாக ‘அந்த மோதிரம் கிடைச்சிடிச்சா, இல்லையா?’ என்பதைத்தான் கேட்டேன். அது என்னாண்டா… ’பேரறிஞர்’ அண்ணாவின் மரணத்திற்காக எல்லா பாடகர்களும் – பெரிய கவிஞர்களின் உதவியுடன் – அழுது புலம்பியிருக்க (இந்த மாதிரி தம்பிகளால்தான் அண்ணா மரணமே அடைந்தார்),  ’ நாந்தான் முந்தி பாடியிருக்கணும் ; பிந்திட்டேன். இப்போ எல்லாரையும் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு பாட்டு எழுதித் தாங்க. அது ’சக்சஸ்’ ஆனா ஒரு பவுனு மோதிரம் கொடுக்குறேன்’ என்று ஈ,எம்.ஹனிபா அன்று சொன்னாராம்.  அப்போதெல்லாம் சைக்கிளில் வந்துதான் – வாசலில் காத்திருந்து – பாட்டு எழுதிக்கொண்டு போவாராம் அவர். சலீம்மாமா பெரிய தி.மு.க அனுதாபி. அண்ணா சமாதியை வைத்து பிழைக்க விரும்பாதவர். ’நாகூர் மண்ணுல பொறந்திருக்கேன்; (அதனாலெ) மற்றவர்களுக்கு தாழ மாட்டேன்ற மனோபலம் இருக்கு’ என்று சொல்லி பாட்டை எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். ‘பட்டு மணல் தொட்டிலிலே’ என்ற அந்தப் பாடல் பெருவெற்றி பெற்றுவிட்டது. மோதிரம் ? அது இன்றுவரை வரைவில்லை. அதனால்தான் கேட்டேன்.

‘மோதிரம் வரலே; அதனால்தான் மோதுறோம்..!’ – சலீம்மாமா.

சொன்னார்களே தவிர, உடல்நலமில்லாமல் படுத்தபடுக்கையாக இப்போது நாகூரில் இருக்கும் ஹனீபாவை பார்த்திருக்கிறார்கள். ‘அண்ணன்ற புள்ளைங்க நாசர், நௌஷாத் ரெண்டுபேருக்கும் என்பேர்ல ரொம்ப மதிப்பு. அதனால்தான் போனேன்’ என்றார்கள். ஹனிபாஅண்ணன், ‘தெரியலையே…யாரு நீங்க?’  என்று கேட்டாராம். மறதியாக இருக்கும்.

சங்கீதவித்வான்கள் பாடுவது மாதிரி – தர்ஹா வித்வான் எஸ்.எம்.ஏ,. காதர் அவர்களிடம் ட்யூன் போடுவதற்காக – சலீம்மாமா எழுதிவைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தூக்கிச் சென்றவர் ஹனிபா அண்ணன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் : சலீம்மாமா குரலில் என்னிடம் இருக்கிறது!). அது எங்கே  இப்போது போயிற்றென்று அல்லாவுக்குத்தான் தெரியும் என்கிறார். சரி, பழைய ’கிஸ்ஸா’வைக் கிளறவேண்டாம். அதுதான் ஹனிபாவுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு அருமையாக சலீம்மாமா சொல்லிவிட்டார்களே இப்படி :

‘நாலு சுவர் எழுப்பி நடுவே இருப்பதெல்லாம்
பாலர்கள் விளையாடும் மணல்வீடு
நாளை இருப்போமோ, யாரைப் பிரிவோமோ
நமக்குள் பகை எதற்கு, அருள் தேடு’

வேறு விசயம் போவோம். அருள் தேடுவது அவசியம்.

கலகலப்புக்கு கவிஞர் சலீம் அவர்களை விட்டால் வேறு ஆளில்லை. பாட்டு எழுதுவதோடு பல தொழில்களையும் செய்திருக்கிறார்கள். ’விவசாயம் செஞ்சேன்; என் சாயம் வெளுத்துப்போச்சு’ என்றார்கள். ‘சாகுபடி செஞ்சேன். செத்தேன்; படிச்சேன்’ என்று அதையே வேறு மாதிரியும் சொன்னார்கள். அவர்கள் சென்னையில் வைத்திருந்த ‘ஷாப் கடை’ ஓலைப்பொட்டி கடை’ கதைகள் கேட்க ஜாலியாக இருந்தது. ‘முதலை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் போனா மொதலை மாதிரி பாப்பாஹா வூட்டுலெ! என்று சொல்லி சிரிக்க வைத்தார். வீட்டுக்கு வீடு முதலை!

குடும்பத்திலுள்ள ஒருவரைப் பற்றி கேட்டேன். ‘அடடா.. ரொம்ப உயர்வான ஆளாச்சே அவர்’ என்று சொல்லிவிட்டு, ‘நான் ரொம்ப மோசமானவண்டு அர்த்தம் கிடையாது இதுக்கு!’ என்று உடனே சொன்னார்கள்.

‘நான் அப்படி சொல்லலையே மாமா..’

‘மனசுக்குள்ள நெனைப்பீங்களே? அதுக்கு சொன்னேன்!’

‘தெரிஞ்சிடுச்சா உங்களுக்கு!?’

சிரித்தார்.

’வெண்பா ஒண்ணு தாங்க’ என்று தத்துவக் கவிஞர் ஒருவர் கேட்டாராம் அன்பா. ‘எடுபடாது என் பா’ என்று சொல்லிவிட்டார்கள்! மேலும்  பல விசயங்கள் சொன்னார். மருமகன் நாகூர்ரூமி பற்றி ரொம்பவும் உயர்வாகச் சொன்னார். ரூமிசாருக்கு முஹம்மது ரஃபி என்று பெயர்வைத்ததே அவர்தானாம். ‘என்ன ஒண்ணு, குரல் மாத்தமா பொய்டுச்சி!. ஆனா..’ என்று இழுத்தார். ’ஆனா?’ ‘ அதயெல்லாம் சேர்த்து எழுத்துல அல்லா கொடுத்துட்டான்ல!’ என்றார். மாமா, எனக்கு ரஃபியின் விஸ்கி எழுத்தும் பிடிக்கும், ஹஸ்கி குரலும் பிடிக்கும். அதுவும்  அவர் என்னைப்பற்றி அள்ளிவிடும்போது  , ஆஹா, ரொம்பவே பிடிக்கும். ஆபிதீன் பற்றி அவர் லேட்டஸ்டா பேசியதை பார்த்தீர்களா? சுட்டி (காணொளி) :  http://www.youtube.com/watch?v=VM5wawlV_cY   . 70 பக்கத்திற்கு சிறுகதைகள் எழுதுகிறேனாம்! அபாண்டமான பழியாக அல்லவா இருக்கிறது. கடைசியாக எழுதிய கதை அறுத்தொன்பதேமுக்கா பக்கம்தானேங்கனி. அப்புறம்… எதுவோ பீறிட்டு அடிக்கிறதாம் ஆபிதீனுக்கு. அட, அஸ்மாவும் அப்படித்தான் சொல்கிறாள்!

சலீம்மாமாவிற்கு வருகிறேன். அன்று சென்றபோது புத்தகம் ஒன்று கிடைத்தது. 7500 பாடல்களுக்கு மேல் அவர்கள் எழுதியிருந்தாலும் ’காதில் விழுந்த கானங்கள்’ என்கிற இந்தப் புத்தகம் முக்கியமான 118 பாடல்கள் மட்டும் கொண்டது. இசைத்தட்டு, சிடி, கேஸ்ஸட்டுகளில் வெளிவந்த பாடல்கள். ஈ.எம்.ஹனிபா, காயல் ஷேக் முஹம்மது, திருச்சி யூசுப், ராமநாதபுரம் வாஹித், நெல்லை உஸ்மான், ஷாஹுல்ஹமிது, ஜெய்னுலாப்தீன் பைஜி, அத்தாஅலி ஆஜாத், குத்தூஸ், சரளா, வாணி ஜெயராம், ஸ்வர்ணலதா மற்றும் பலர் பாடிய பாடல்கள். நூலிலிருந்த கலைஞர் கருணாநிதியின் அணிந்துரை, ’கவிஞர் சலீமின் பாடல்கள் (பக்கவாத்திய) ஓசைகளையும் விஞ்சி போதங்களின் நாதங்களாக நின்று நிலவுவது தனிச்சிறப்பு’ எனும் ’சிராஜுல் மில்லத்’ மர்ஹூம் அப்துஸ்ஸமது அவர்களின் மதிப்புரை (இந்த இரண்டும் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்தது – காலத்திமிங்கலம் கவ்வி விழுங்கியிருந்ததாம் இதுவரை) , ’இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால் இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்’ எனும் மு.மேத்தாவின் சிறப்புரை ஆகியவற்றைவிட சலீம்மாமா பற்றிய அறிமுகம் எனக்கு அதிகம் பிடித்தது. ‘இக்காலத்துக்குத் தேவையான பந்தா, பகட்டு இவரிடம் இல்லையே என்பது இவரது பாசத்துக்குரியவர்களின் வருத்தம்; அப்படி அவர்கள் கருதுவது இவருக்கு வருத்தம்’ என்று சொல்லியிருந்தார்கள். எழுதியது சலீம்மாமாதான் என்று நினைக்கிறேன்! ஆனால், ‘புகுமுன்’ எழுதியது சலீம்மாவேதான். சந்தேகம் வேண்டாம், ‘இதற்கு முன் என் பாடல்கள் பிரபல நிறுவனங்களின் முத்திரைகளையும் துணிச்சலாகச் சுமந்தபடி சிறுசிறு நூல்களாகச் சந்தைக்கு வந்திருக்கின்றன – திறந்த வீட்டில் புகுந்து சூறையாடப்பட்ட  நிலையாய்’ என்று என்று சொல்கிறார்கள்.

‘இதில் உள்ள இஸ்லாமியப் பாடல்கள் பலவற்றில் வழக்கிலுள்ள அரபுச் சொற்களை அங்கங்கே திணிக்க வேண்டிய அவசியத்தை சகோதர மத உள்ளங்கள் பொருந்திக் கொள்ள வேண்டும்’ என்று சலீம்மாமா சொல்வது அவரது இணைக்கமான மனநிலையைச் சொல்லும். ‘வணக்கம்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘இணக்கம்’ என்று சொல்லவேண்டும் என்பராயிற்றே! ‘முரண்பாடில்லா உடன்பாடு’ தலைப்பில் வரும் ஒரு சரணத்தைப் பாருங்கள். ஷேக் முஹம்மது பாடியது. :

’காசீம் உதிரம் செந்நிறம் என்றால்
காசியின் உதிரம் என்னநிறம்?
காதகர் நரம்பில் ஓடுவதொன்றே
களங்கம் அடைந்த நஞ்சு நிறம்!
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதம் – அதை
வெறுப்பது குர் ஆன் வேதம்’

இளைய தலைமுறைக்கு அவர் கூறும் நாட்டுப்பற்று இது :

’வழிகள் வேறாய் இருக்கலாம்
வழி பாடும் மாறாய் இருக்கலாம்
மொழிகள் நூறாய் இருக்கலாம் – நம்
உடையும் உணவும் மாறலாம்
இந்தியன் என்ற மந்திரமே – அது
இடைவெளி தவிர்த்த சுதந்திரமே
நேயம் என்ற பூரதமே – ஒரு
நிகரில்லா நம் பாரதமே!’

போதும். நூலிலிருந்த ஹனிபா பாடல்களில், ‘வாழ வாழ நல்ல வழிகளுண்டு நபி வழங்கிய நெறிகளிலே’ என்ற பாடலைவிட – ’நீரில் ஒரு குமிழி’ என்ற தலைப்பில் உள்ள , ’இன்று வந்து நாளை போகும் நிலையிலே என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே’ என்ற பாட்டு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ’இசைக்கு உருகார் எதற்கும் உருகார்’. நூலிலிருக்கும் மற்ற பாடல்களிலிருந்து இரண்டு பாடல்களை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் – இப்போதைக்கு. ஒன்று வரலாறு சொல்ல; இன்னொன்று ஒற்றுமை வெல்ல.

’மறைவுற்ற பிரபல திரைப்பட ஆர்ட்டைரக்டர் எஸ். செல்வராஜ் அவர்கள் முயற்சியில் தேதி வாங்கப்பட்டு ’சத்யா’வில் எம்.ஜி,.ஆர் அவர்களைச் சந்தித்தபோது, சொல்லிக்காட்டிய பாடல்களில் மூன்று பாடல்களை (இந்தப் பாட்டையும் சேர்த்து) விரும்பிக் கேட்டு வாங்கி தன் ‘பேண்ட் பாக்கெட்’டில் வைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர், ‘அடிக்கடி என்னைச் சந்தியுங்கள்’ என்றார். அதன் பின் நிகழ்ந்த அரசியில் புயலால் சந்திக்க முடியாமலேயே போயிற்று! எம்.ஜி.ஆர், பேச்சுக்கிடையே – ‘காலங்கடந்து வந்திருக்கிறீர்கள்’ என்றார். ‘காலமே இனிதான் உருவாக வேண்டும்’ என்றேன்; புன்னகைத்தார் மக்கள் திலகம்’ என்று ’கலைமாமணி’ கவிஞர் நாகூர் சலீம் குறிப்பிடும் பாடல் இது.  மக்கள் திலகத்தைப் பற்றி நாட்டிலேயே முதன்முதலாக இசைத்தட்டுக்குப் பாடல் எழுதியவர்கள் சலீம்மாமா. ’காய்ந்து சிவந்தது சூரியகாந்தி’ என்ற அந்தப் பாடலுக்காக 10,000 ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். (ஹனிபாஅண்ணன் அதையும் ’லபக்’ போட்டார். அவர் ஒரு சரித்திரம்!) .

உன்னைத்தான் தம்பி

கவிஞர் சலீம்

உன்னைத்தான் தம்பி
ஒரு சேதி கேளடா
தன்னைத் தானே நம்பி
தலை நிமிர்ந்து வாழடா

– உன்னைத்…

காலம் போற வேகத்திலே ரொம்ப
கவன மாகவே இருந்துக்கோ
நாலும் தெரிஞ்ச நல்லவர் பின்னே
நிழலைப் போலவே தொடர்ந்துக்கோ
நாளை உலகம் உன் சின்ன கைகளில்
நான் சொல்லுவதைக் குறிச்சுக்கோ
ஏழைப் பிள்ளைக்கு ஆண்டவன் காவல்
இரண்டு கண்களையும் துடைச்சுக்கோ

– உன்னைத்…

உன்னை நம்பிஉன் குடும்பம் இருந்தா
உறுதி தளராமெ ஏத்துக்கோ
சின்ன கொடியில் பெரும் காய்களும் தொங்கும்
சந்தேக மிருந்தா பாத்துக்கோ
படிக்கிற நேரம் போக இடையிலே
உழைக்கிற பழக்கத்தை வளர்த்துக்கோ
நடிக்கிற மனிதர்கள் வாழ்கிற பூமியில்
நாளுக்கு நாளும் விழிச்சுக்கோ

– உன்னைத்…

கத்துக் கொடுத்த ஆசானிடமே
கண்ணா மூச்சி ஆடாதே
பெத்து வளர்த்த அம்மா அப்பா
பெயருக்கு இழிவைத் தேடாதே
எத்திப் பிழைக்கும் கொடியவ ரோடு
எந்தக் காலத்திலும் கூடாதே
நத்திப் பிடித்த உத்தமர்களுக்கு
நன்றி காட்டாமல் ஓடாதே

– உன்னைத்…

இருப்பவ ரெல்லாம் ஒருதாய் பிள்ளை
இளமையிலேயே இதைப் புரிஞ்சுக்கோ
ஒருமரக் கிளையில் பலவிதப் பூக்கள்
உண்மை இதுதான் தெரிஞ்சுக்கோ
அறிஞர் சொன்ன அறநெறி முறையை
அரும்பு மனசிலெ நிறுத்திக்கோ
ஆரம்பத்தில் பிழை நடப்பது சகஜம்
அப்போதைக் கப்போது திருத்திக்கோ

– உன்னைத்…

***

ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த பாடல் , ஒற்றுமை வெல்ல:

எவ்வுயிருக்கும் இறைவன்!

நாகூர் சலீம்

(பாடியவர் : மர்ஹூம் எஸ். சாஷூல் ஹமீது)

எல்லா உயிர்களுக்கும் இறைவன் ஒன்றே
எல்லாரும் போற்றுகின்ற இறைவனும் ஒன்றே
செல்லுகின்ற வழிகள் வெவ்வேறு எனினும்
சேரும் நதிகளுக்குச் சமுத்திரம் ஒன்றே
எல்லாரும் ஒன்றே!
ஏகனும் ஒன்றே!

– எல்லா…

அகரம் தானே எழுத்தின் தொடக்கம்
அவன் தய வின்றி ஏதொரு இயக்கம்
அடிப்படை யானது ஓரிறை வணக்கம்
அதுதான் வள்ளுவன் குறளின் முழக்கம்
எல்லாரும் ஒன்றே!
ஏகனும் ஒன்றே!

– எல்லா…

கண்ணனின் கீதை போதிப்ப தென்ன?
கர்த்தரின் பைபிள் கூறுவதென்ன?
புண்ணிய குர்ஆன் புகல்வதும் என்ன?
பரம் பொருள் ஒன்றே! பொருள் வேறென்ன?
எல்லாரும் ஒன்றே!
ஏகனும் ஒன்றே!

– எல்லா…

ஆதியின் தாய்க்கு அனைவரும் பிள்ளை
ஆயிரம் பேதம் நமக்குள் இல்லை
கூடும் அன்பே நீதியில் எல்லை
கூட்டங்களே நாம் ஒருகொடி முல்லை
எல்லாரும் ஒன்றே!
ஏகனும் ஒன்றே!

– எல்லா…

***

குறிப்பு : சலீம்மாமாவின் பாடல்களை அவ்வப்போது வெளியிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். மாமாவின் அட்டகாசமான கிண்டல் ஒன்றை இப்போது சொல்கிறேன். ’காதில் விழுந்த கானங்கள்’ கொடுத்ததும், ‘கையெழுத்து ஒன்றை போடுங்கள்’ என்றேன்.

’அறிவுப் பொற்பேழை
அருமைக் கலைஞர்
இனிய இளவல்
ஆபிதீன் அவர்களுக்கு’

– சிரிக்காமல் எழுதி கையெழுத்திட்டார்!

நன்றி மாமா. உங்களைப் பழிவாங்க தாஜ் கவிதைகளை படிக்கச் சொல்லப் போகிறேன்!

***

’காதில் விழுந்த கானங்கள்’ நூல் கிடைக்குமிடம்:
பாரி பிரசுரம்
எண்: 18/1 ஏ, தலைமாட்டுத் தெரு
நாகூர் – 611 002 , நாகை மாவட்டம்
போன் : 00914365  250591 / 252928

***

தொடர்புடைய சுட்டிகள் :
நாகூர் தந்த கொடை – (கவிஞர் சலீம் பற்றி ) நாகூர் ரூமி

(கவிஞர் சலீமின் பாடலுக்கு) ’அகமியம்’ தளத்திலிருந்து விளக்கம்

***

போனஸாக ஒரு ஹனிபா பாட்டு. இதுவும் சலீம்மாமா எழுதியதுதான். ஆமாம்.. மேலே இரண்டு பாடல்களை இணைத்தேனே, கேட்டீர்களா? இது கச்சேரி. ’சீசன்’ ரிகார்டிங்.

4 பின்னூட்டங்கள்

 1. 03/11/2011 இல் 14:54

  ரூமி அவர்களின் பதிவிற்குப் பிறகு இன்னொரு நல்ல பதிவு- ஏராளமான தகவல்கள் கவிஞர் பற்றி – பீறிடும் ’டச்’களோடு.

  பல சமயங்களில் சில முத்துக்கள் சிப்பிக்குள்ளேயே இருக்க வைக்கப்பட்டு விடுகின்றன –
  சரியான உதாரணம் சலீம் ஐயாதான்.

  மோதிரம்லாம் என்னிக்கு கிடைச்சுச்சு?
  ’பொற்பேழை’ ஒரு கதைதான் எழுத முடியும்.
  ’குடவிளக்கு” அதுபத்தி இன்னொரு பாட்டுதான் எழுதலாம்!

 2. தாஜ் said,

  03/11/2011 இல் 22:41

  நான்
  கல்லூரிப் பருவத்தில்
  எங்கள் ஊரில் இருந்த
  (இஸ்லாமிய) வாலிபர்களின் அமைப்பான
  ‘சுத்தானந்த ஜோதி மறுமலர்ச்சி சங்கத்தின்’
  பைத்து சபாவுக்கு
  இஸ்லாம் சார்ந்த துதிப் பாடல்கள் பல
  எழுதித் தந்ததுண்டு.
  அப்படி எழுத
  எனக்கு மறைமுகமாகத் தூண்டுதல் தந்தவர்
  நாகூர் சலீம் அவர்கள்.
  அவரது மொழி அழகில்
  அன்றைக்கும் இன்றைக்கும் மயக்கம் உண்டு.
  அவரது மேதமைக்கும் வயதுக்கும் முன்னால்
  என் சிரம் தாழ்கிறது.

  -தாஜ்

 3. 12/11/2011 இல் 18:46

  நிறைய விஷய தானமுள்ள பதிவு நானா.பீறிட்டு அடித்திருக்கிறீர்கள்.

  MGR திமுக வில் இருந்தபோது ஹனீபா அண்ணனின் ஒரு பாட்டை மிகவும் பாராட்டி “யார் எழுதியது?” என்று கேட்டதாகவும், தன் அருகில் இருந்தும் சலீம் மாமாவை அறிமுகப்படுத்தி வைக்க விரும்பாமல் ஹனீபா அண்ணன் வேறேதோ தட்டிக்கழித்துச் சொன்னதாகவும் கேள்விபட்டிருக்கிறேன்.

  அப்புறம்,

 4. 17/01/2019 இல் 10:26

  Nagore Saleem Interview in Sun TV after being awarded Kalaimaamani in the year 2000 by Tamil Nadu Government
  Thanks : Jafar Sadik


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s