‘சு.ரா.வுக்கு இறப்பே இல்லை!‘ எனும் முதலாம் ஆண்டு அஞ்சலியை ’திண்ணை’யில் வாசித்துவிட்டு தொடருங்கள். ’ஏதாவது குறிப்பு முதலில் எழுதுய்யா’ என்றார் கத்திரிக்காவோடு வெண்டைக்காயும் வாங்கச்சொல்லும் கவிஞர் தாஜ் ஐயா. என்ன எழுதுவது? ஓயாமல் சண்டையிடும் ஓர் இலக்கியக் குழு பற்றி நம் ஹனீபாக்காவிடம் கேட்டபோது , ‘தம்பி ஆப்தீன்…, துணிக்கடை வச்சவனெல்லாம் சுந்தரராமசாமி ஆயிடமுடியுமா?’ என்று அட்டகாசமாகக் கிண்டல் செய்ததுதான் உடனே ஞாபகம் வருகிறது (அஸ்மா, இதை டைப் செய்யும்போதுகூட சிரிப்பு வருதுடீ!).
***
சுந்தரராமசாமிக்கு ஒரு கடிதம் (அஞ்சலி – 6)
அன்புடன் சு.ரா.வுக்கு
நலம்.
நலமறிய நாட்டம்.
ஆறு வருடங்களுக்கு முன்
இதே அக்டோபர்-15ல்தான்
அடைமழையில் நீங்கள்
எங்களை விட்டும் பிரிந்தீர்கள். அது
ஓர் நிரந்தரப் பிரிவாகிப் போனதில்
பல இலக்கிய அன்பர்களைப் போல்
நானும் மனதால் அலைக்கழிக்கப் பட்டேன்.
துக்கமும் துயரமும் அழுத்த
அதிகத்திற்கும் கையிழந்த நிலையில்
செய்வதறியாது திரிந்தேன்
ஒத்த நண்பர்களிடம் புலம்பினேன்.
ஆனாலும் பாருங்கள்…
அழவில்லை.
இறப்பு அழுவதற்குரிய நிகழ்வா?
ஒருவரின் தலையாய விடுதலை
அடுத்தவர்களுக்கு
எப்படி அழுவதற்குரிய நிகழ்வாகும்?
அதுவும் ஓர் இலக்கியவாதியால்
அதற்காக அழ முடியுமா?
அழுதிருந்தால்
நீங்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.
‘சாவின் நிதர்சனத்தை
கூடுதலாக அறிந்த அவனால்
எப்படி அழ முடியும்?’
சாவுக்கு அழுவது சரியா? என
நீங்கள் ஜீவித்திருந்த நாளில்
எவரேனும்
உங்களை கேட்டிருக்கும் பட்சம்
இவ்விதமோ… அல்லது
இன்னும் அழுத்தம் தந்தோ..
கருத்தை முன் வைத்திருப்பீர்கள்.
அறிவேன்.
இலக்கியக்காரன்
கொண்ட தாகத்திற்காகவே
இறந்திருப்பான்…
பிறப்பான்…
திரும்பவும் இறப்பான்.
அவனது இந்தப் பிறப்பிற்கும் இறப்பிற்கும்
எண்ணிக்கையே இல்லை!
தெரியவில்லை.
நான் இதனை
உயிரோடுதான் எழுதுகிறேனா?
என்ன சொல்கின்றீர்கள்…
வேகமாகச் சொல்லுங்கள்…
ஆமாவா..?.
பேஷ்.
சந்தோஷம்.
சு.ரா. அவர்களே
நீங்கள் உங்களது இருப்பை
படைப்பின் பக்கங்களில்
திறமாய் நிறுவிவிட்டுதான்
மறைந்திருக்கின்றீர்கள்.
மறுக்க முடியாது.
இறந்தும் வாழ்வதென்பது இதுதானா?
கவிதையாக அல்லவா இருக்கிறது!
அப்போ…
உங்களுக்கு சாவே கிடையாதா?
சாத்தியமா அது?
எப்படி இல்லாமல் போகும்?
இயற்கைச் சித்தாந்தமே தடுமாறி விடாதா?
இத்துப் பொட்டாய் அழிதல்தானே
ஒன்றின் பரிபூர்ண நிலை.
முற்றில்தானே பிறப்பின் மோட்சம்!
நீங்கள் எப்படி விதிவிலக்காக முடியும்?
முடியாது.
முடியவே முடியாது.
நீங்கள் இருப்பை மட்டும்
விட்டுவிட்டுப் போகவில்லை.
வேரறுக்கும் விஷஜந்துக்களை
தேடிப் பிடித்து
உயிர்பேணி
வளர போசாக்கு இட்டல்லவா
போய் இருக்கின்றீர்கள்?
இது ஒன்று போதாதா
நீங்கள் ஒரு நாள் முற்றுப் பெற.
பசிகூடிய நேரமெல்லாம்
கண் பார்க்க
உங்களின் மீது
ஊர்ந்த அதுகளின்
மேதமைக் கொட்டமும்
விஷக்கொடுக்கின் கடியுமாய்
சொல்ல முடியாத அருவருப்பில்
நெளிந்தீர்களா இல்லையா?
சுவைகண்ட அதுகளின் மீதப் பசிக்கு
இருக்கவே இருக்கிறது
உங்களது கவிதையான இருப்பு!
இன்றைக்கோ நாளைக்கோ
மகத்தான அந்த இருப்பு
என்னையொத்தவர்கள் மலைக்கிற
அந்த இருப்பு
முழுமையாய் செல்லரிக்கப்பட்டு விடும்.
அதுகளின் திறமை சாதாரணமானதல்ல.
நீங்களே மெச்சியத் திறமை!
நம்பலாம்.
அது நடக்கும்.
கஷ்டமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
நியதிபடியும் கூட
ஜீவன்களின் முழுமரணம்
தவிர்க்க முடியாததுதான்.
*
உங்களுக்குத் தெரியுமா…?
இந்த ஆறு வருடமாய்
கர்மசிரத்தையாக
உங்களுக்கு நான்…
அஞ்சலி எழுதிக் கொண்டிருக்கிறேன்!
யோசிக்கிற போது
அதிகமாகத்தான்
உணர்ச்சிவசப்படுகிறேன் என்றும் தோன்றுகிறது.
நீங்கள் இறந்த நாட்களில்
உடனே நான் அஞ்சலி எழுதவில்லை.
பதிலாய்…
இக்கவிதையைத்தான் எழுதினேன்:.
**
கதவை மூடு.
—————-
(சுந்தர ராமசாமி நினைவாக)
கதவை மூடு
காற்று வருகிறது
குப்பைக் கூளமாக
சாக்கடை நாற்றமும்
சுவாசத்தை அறுக்கிறது.
கதவை மூடு
ஏதேதோ அலைகிறது
பனிமூட்ட விடியலில்
குளிர் காயும் வெறியோடு
ஒழுங்குகளைத் துவைக்கிறது.
கதவை மூடு
ஊர்வன மேவும் நேரமிது
விஷக் கொடுக்குகளின்
வலியற்ற தீண்டலில்
மெய்யுடல் தடிக்கிறது.
கதவை மூடு
இரைச்சல் எழுகிறது
தலையெடுப்பவர்களது
காலடிப் பதிவின் அதிர்வில்
நினைவுகளும் சிதைகிறது.
கதவைத் திற
காற்று வரட்டுமென்ற
காலம் போய்விட்டது.
திசைகளற்ற பேரோசைப்
பெருவெளிக் காட்டி.
**
‘கதவைத் திற காற்று வரட்டும்’ -என்கிற
உங்களது பிரபலமான
கவிதையை மையப்படுத்தி
எழுதியக் கவிதையிது.
உங்களுக்குப் பிறகு
நல்ல இலக்கியம் நசிவுறும்
என்கிற தடுமாற்றத்தால்
எழுதிய கவிதையிது.
இன்றைக்கு வாசித்துப் பார்க்கிற போது
கொஞ்சம் அநியாயத்திற்கு நான்
உணர்ச்சிவசப்பட்டிருப்பது
ஊர்ஜிதப் படுகிறது.
போகட்டும்.
இத்தனைக்கு
உங்களின்பால்
உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடு கொள்ள
காரணங்களும்தான் என்ன?
நான்
இலக்கிய ஈடுபாடு கொண்ட பருவத்தில்
நீங்கள் எனக்கு இன்னொரு படைப்பாளி.
என் உணர்வுகளில் தைத்த எழுத்தை எழுதிய
இன்னும் சில படைப்பாளிகள் மாதிரிதான்
நீங்களும் எனக்கு.
இலக்கிய நுட்பங்களை
உங்களிடம் கற்ற மாதிரி
அவர்களிடமும் கற்றிருக்கிறேன்.
நீங்களே மதித்து வியந்த
மூத்த படைப்பாளிகளின்
எழுத்துக்களையும் படித்துக் கற்றிருக்கிறேன்.
பிறகு எப்படி உங்களின்பால்
இத்தனைக்கு
தனித்துவமான ஈடுபாடு?
இழைபிரித்து சொல்வது கஷ்டம்தான்.
உங்களைத் தவிர்த்து
நான் குறிப்பிடுகிற படைப்பாளிகள் எல்லாம்
இலக்கியம் சார்ந்து மட்டும்தான்
உச்சம் தொட்டவர்கள்.
நீங்கள் அப்படியல்ல
இலக்கியம் தாண்டி வெளிவட்டச் சங்கதிகளில்
இலக்கியக்காரனின் பார்வையை
அச்சமின்றி..
எந்தவோர் ஆளுமையோடும்
சமரசம் செய்துக் கொள்ளாமல்
கருத்துக்களை பதிவேற்றியவர்.
கொண்ட கருத்திலிருந்து முரண்படும் போதும்
தக்க காரணங்களை முன் வைத்து
நிஜத்தைப் பேசியவர்.
எல்லா முற்போக்குக் கருத்துக்களுடனும்
உங்கள் அளவில் பரிச்சியம் கொண்ட
படைப்பாளிகள் நம்மில் உண்டென்றாலும்
அது குறித்தெல்லாம்
நீங்கள் தீர்க்கமாய் பேசியதை மாதிரி
இன்னொரு படைப்பாளி பேசியதில்லை.
குறிப்பாய்…
பிறப்பால்
உங்களையொத்து
உயர்ந்தக் குலத்தில் பிறந்த
படைப்பாளிகளிகள் எவரும்
உடைக்கப் பயந்த
பழமையான
கர்ண கொடூரமான
மூர்க்கமான
சமூகக் கட்டுக்களை
மிகச் சுளுவாய்…
அச்சமின்றி உடைத்து
அதனை எழுத்தில் பதிவு கண்டவர் நீங்கள்.
உங்களைத் தொடர்ந்து நான்
கவனித்தும் வந்திருக்கிறேன்.
என்றைக்குமே நீங்கள்
சொன்ன ஒன்றை மறந்தும்
மறைத்துப் பேசியதில்லை.
இந் நிலை
உங்களைத் தவிர
நம் படைப்பாளிகள் வேறு எவரிடமும்
நான் காணாத ஒன்று.
சிந்தனைப் பரப்பில்
தீர்க்கமான தெளிவு இருந்தாலே
இப்பேறு கிட்டும்.
என் கணிப்பு சரியாக இருக்குமானால்
உங்களிடம்
பெரியதோர் மரியாதையோடு
நான் ஒடுங்கிக் கவிழ்ந்தது இங்கேதான்.
உன்னதங்களின் முன்
விழுந்து தரிசிப்பதில்
தவறேதுமில்லை என்றே நினைக்கிறேன்.
சு.ரா. அவர்களே
தொடர்ந்து
உங்களைக் கொண்டாடுவதில்
பிறர் எவரையும்விட
சந்தோசம் கொள்கிறேன்.
முடிந்தால் பதில் எழுதுங்கள்.
இல்லாது போனாலும் வருத்தமில்லை.
வாய்ப்பென்று ஒன்று கிட்டுமானால்…
மற்றவைகளை
நேரில் பேசிக் கொள்ளலாம்.
1:29 PM 26/10/2011
***
மேலும் பார்க்க :
ஒ.நூருல் அமீன் said,
27/10/2011 இல் 14:12
இலக்கிய உலகில் சுந்தர ராமசாமி ஒரு மகத்தான ஆளுமை. எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் தான். ஆனால் தாஜின் பக்தி மணம் கமழும் எழுத்துகள் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது.
மஜீத் said,
27/10/2011 இல் 17:47
//கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது//
தெரியட்டும் அமீன்.
உணர்ச்சிவயப்படுவதும் எழுத்தாளனுக்கு அழகுதான்.
கட்டுரை சுராவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.
//இலக்கியம் தாண்டி வெளிவட்டச் சங்கதிகளில்
இலக்கியக்காரனின் பார்வையை அச்சமின்றி..
எந்தவோர் ஆளுமையோடும் சமரசம் செய்துக் கொள்ளாமல் கருத்துக்களை பதிவேற்றியவர்//
இதுபற்றி தனியாக – விரிவான – ஒரு கட்டுரையும் தாஜ் எழுதனும்…..
ஹ்மீது ஜாஃபர் said,
27/10/2011 இல் 20:18
இதில் ஓவருமில்லை லோயருமில்லை
அவர் மீது இவருக்குள்ள காதல்
இது இலக்கியக் காதல்
கவிதைத் தாண்டியக் காதல்
எழுதுங்கள் தாஜ்
எழுதவிடுங்கள் அமீன்
ஒ.நூருல் அமீன் said,
28/10/2011 இல் 00:55
சு.ரா.வின் ஆணிதரமான வசீகர எழுத்திலிருந்து ரசித்ததை எடுத்து எங்களுக்கு தந்த்தால் (தாருங்கள் தாஜ்) ரெட்டை மகிழ்ச்சி அதை விட்டு விட்டு சு.ரா.விற்கு கட்டவுட் வைத்து கற்பூரம் காட்டி, பாலாபிசேகம் பண்ண தேவை என்ன? இது தாஜின் எழுத்தின் மேல் உள்ள காதலால் சொன்ன வார்த்தை.
ஹ்மீது ஜாஃபர் said,
28/10/2011 இல் 16:09
கட்டவுட்டும், கற்பூரமும், அபிஷேகமும் கடவுளாக்கிவிடாது சு.ராவை..?!
கடவுள்-அது காலத்திற்கு அடங்காதது
சு.ரா. இது இலக்கியத்தில் அடங்கியது.
மஜீத் said,
29/10/2011 இல் 15:57
எவ்வளவு சீரியஸான கட்டுரை/பேட்டியிலும் கி.ரா. ஐயா தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை.
//(நாவல் இல்லை; சரி அப்பொ இது என்னது? அதை யாரும் சொல்லவில்லை. ஒட்டகச்சிவிங்கியை முதன் முதலில் பார்த்தவன் சொன்னானாம் இது மிருகமே இல்லை என்று!) //
என்ன லாவகமான நகைச்சுவை!!