காலத்தை வென்ற கவிதைகள் – மகாகவியின் ’புள்ளி அளவில் ஒரு பூச்சி’

இனிவரும் நாட்களில் ஆபிதீன் பக்கங்களில் ’காலத்தை வென்ற கவிதைகள்’ என்ற தலைப்பில் ஈழத்தின் சிறந்த சில கவிதைகளை உங்களுக்குத் தரவிருக்கிறேன். இதோ மகாகவி என்ற ருத்ரமூர்த்தி அவர்களின் கவிதை. மஹாகவி இறந்து பல வருடங்கள் என்றாலும் அந்த மகத்தான கவிஞனின் கவிதைகள் இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டாலும் அதற்காக இரங்குவார் இன்று யாருமில்லை. ஒரு சிறு பூச்சியைக் கொன்றதற்காக வருந்தி அழும் கவிஞனின் உள்ளத்தைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. – எஸ்.எல்.எம். ஹனீபா

***

புள்ளி அளவில் ஒரு பூச்சி

மகாகவி

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!

ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.

நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு

வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.

காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.

மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!

காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.

***

நன்றி : ஹனிபாக்கா

***

மேலும் பார்க்க:

மகாகவியின் இன்னொரு கவிதை : தேரும் திங்களும்

மகாகவி பற்றி விக்கிப்பீடியா

5 பின்னூட்டங்கள்

 1. 27/09/2011 இல் 21:20

  /வாய் திறந்தாய், காணேன்,
  வலியால் உலைவுற்றுத்
  “தாயே’ என அழுத
  சத்தமும் கேட்கவில்லை./- அற்புதமான வரிகள்.

 2. anar said,

  27/09/2011 இல் 21:46

  எஸ்எல்எம் மஹாகவியை நினைவுபடுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

  மஹாகவி பற்றி எண்ணும்போது எனக்கு அவரது,

  “சிறு நண்டு மணல்மீது
  படமொன்று கீறும்
  சிலவேளை இதைவந்து
  கடல் கொண்டுபோகும்“ என ஆரம்பிக்கும் அழகிய கவிதை உடன் ஞாபகத்துக்கு வந்தது.

  மஹாகவியைப் மேலும் புரிந்து கொள்வதற்கு அண்மையில் வெளிவந்த ”மஹாகவியியல்“ ( தொ.ஆ – ஸ்ரீ. பிரசாந்தன் ) நூல் உதவுகின்றது.

  அனார்

 3. 28/09/2011 இல் 08:52

  தமிழ் கவிதை உலகில் தனித்துவ முத்திரை பதித்தவர் மஹாகவி அவர் அறிமுகப்படுத்திய குறுமபாக்கள் குறும்பும் கருத்தும் மிக்க ஆழமான தத்துவ வரிகள் அறிமுகப்படுத்திய ஆப்தீன் பக்கங்களுக்கும் அள்ளித்தந்த வளள்ல் எஸ்.எல.எம். முக்கும் நன்றிகள்
  அறபாத்

 4. 28/09/2011 இல் 15:44

  மகாகவியின் கவிதை படித்தோம். சிறப்பான கவிதை. ஆப்தீனுக்கு நன்றி. மகாகவியை தமிழ்நாட்டு விமர்சகர்களுக்குப் பிடிக்காது போலும். அண்மையில் ஜெயமோகனின் நவீன தமிழ் இலக்கியம் அறிமுக நூல் படித்தேன். அவர் விமர்சகராக நின்று வாசகர்களுக்கு எமது கவிஞர்கள் சிலரையும் சில கவிதைகளையும் அறிமுகம் செய்கிறார். அதில் மகாகவி, நீலாவணன், எம்.ஏ.நுஃமான், முருகையன் என்று எமது கவிதைக்கு வளம் சேர்த்தவர்கள் யாருமில்லை. சுந்தர ராமசாமி அவர்களுக்கும் ஈழத்துக் கவிதை பற்றி அவ்வளவு சிறப்பான எண்ணம் கிடையாது. என்ன செய்வது! சிலவேளையில் எங்களை நாங்களே கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான்.

 5. 28/09/2011 இல் 19:21

  ஹாபிஸ் அவர்களே..!

  விசமிக்க வேண்டாம், தமிழ் பற்றுள்ளவர்கள் தேசத்தைக் கடந்தே நிற்பார்கள்.
  தன்னைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டவர்கள் கவிஞர்களே அல்ல….

  அவர் மகா மகாகவிதான்.
  ஒவ்வொரு வரியுமே எதிரொலிக்கிறது,
  எதை பாராட்டுவது..?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s