தமிழில்: வை. சுந்தரேசன்
வெளியீடு: குலசிங்கம் – உதயம் புத்தக மையம்
பருத்தித்துறை – புலாலி கிழக்கு – இலங்கை
***
பறவையின் காவியம்
லியு லீ
ஏ, குருவி வேட்டைக்காரா,
தயைகூர்ந்து என்னை மன்னிப்பாய்
மாளிகையில் உன் வாசம்,
பற்றை வேலியில் என் ஓய்வு
வலையில் என்னை அகப்படுத்தி
வலிமையான உன் கையில்
என்னைப் பற்றி,
சிறையில் இடுவதில்…
உனக்கேது மகிழ்ச்சி?
ஓ, குருவி வேட்டைக்காரா
உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன்,
சப்தம் எதுவுமற்ற உலகமும்
கண்ட துண்டமாய் வெட்டப்பட்ட
ஊணும் இரத்தமும் நிறைந்த
கசாப்புக் கடையும்தான்
உன் நாட்டமாய் இருப்பதனால்
இறக்கை மூடிய உடலையும்
இனிய குரலையும் நான் பெற்றமை
என் துரதிருஷ்டமே.
உயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்
தங்கமும் வைரமும் ஜொலிக்கும்
மாளிகை ஒன்றுக்காக
வனாந்தரத்தில் உள்ள
என் கூட்டிலிருந்து
நான் வேறிடம் செல்வதற்கில்லை,
அன்றேல் தங்கச் சங்கிலி ஒன்றுக்காக
பச்சை மரங்களையும்
நீல வானையும் பிரிந்து
வேறிடம் செல்வதற்கில்லை.
***
சுய ஓவியம்
யாங் ஷான்
ஓவியர்களே, என் ஓவியத்தை
வரையாதிருப்பீர்களாக
நான் நானாகவே உள்ளேன்.
நான் துயரம் உள்ள மனிதன்,
நான் மகிழ்வு நிறைந்த மனிதன்;
மகிழ்வின்றி நான் இல்லை.
மூடர்களால் நான்
இம்சிக்கப்பட்ட போதிலும்
எவரையும் நான்
அவமதித்ததேயில்லை
நான் வாழ்கிறேன்,
நான் பணிசெய்கிறேன்.
என்முகம் அவலட்சணமானது,
என் தோல் சுருக்கங்களில்
காலத்தின் அழகு பிரதிபலிக்கின்றது.
வசந்தத் தென்றலில்
புல் போல எனது கேசம்,
தயைகூர்ந்து என் விழிகளில் பாருங்கள்
நம்பிக்கைச் சுவாலைகள்
ஒளிர்வதைக் காணுங்கள்.
***
வேர்
நையூ ஹான்
நான் ஒரு வேர்
மென்மையாய் நிலத்தினுள்,
கீழநோக்கி, கீழ்நோக்கி-
வாழ்நாள் பூராக
வளர்வேன் நான் மையப் பூமியில்
என் நம்பிக்கை
ஒரு சூரியனில்.
கிளைகளில் ஒலிக்கும்
பறவையின் கானம்
என் செவிகளுக்கில்லை
இளந் தென்றலும்
என் உணர்வுக்கில்லை.
ஆனால் திறந்த மனதுடன்
சொல்வேன்,
நான் இதனால் சிறிதளவும்
துயரமோ துன்பமோ
அடையவில்லை.
மலரும் பருவத்தின்
இலையும் கிளையும் போல்
இரட்சிக்கப்படுகிறேன் நான்
பாரிய கனியினுள்
நிரம்பி இருப்பதெல்லாம்
என் இதயத்தின் முழு இரத்தமே.
***
நன்றி : வை. சுந்தரேசன் , உதயம் புத்தக மையம்
***
பின் குறிப்பு – தாஜ்:
இந்தச் சீனத்து கவிதைகளை
மொழிபெயர்த்த…
திரு.வை.சுந்தரேசன் அவர்கள்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில்
ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
(இப்போது? தெரியாது.)
இந்தக் கவிதைத் தொகுப்பு
1990-களின் மத்தியில்
வெளிவந்ததாக அறியமுடிகிறது.
(புத்தகத்தில், காலம் குறித்தோ/
தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை)
இக் கவிதைகள்
மொழிபெயர்ப்பே என்றாலும்..
தமிழீழப் பிரச்சனையின்
பின் புலத்தில்
வைத்துப் பார்க்க முடியும்.
உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில்,
அந் நாட்டில் வாழும்
மக்கள் கலைஞர்கள்
மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக,
இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள்.
உலகப் பார்வையிலும்
இது வரவேற்கப் படுகிறது.
***
தட்டச்சு, வடிவம்: தாஜ் | satajdeen@gmail.com
11:44 PM 23/09/2011
மறுமொழியொன்றை இடுங்கள்