முருகனோடு கொஞ்ச நேரம்…

கொள்ளை அழகனான ‘கோவணாண்டி’ முருகன்  அல்ல இவர்.  ’கூளமாதாரி’ நாவல் எழுதிய பெருமாள்முருகனோ ’ஏழ மாதிரி’ எழுதும் நண்பர் இரா. முருகனோ அல்ல. இது ஜீ. முருகன். அதான் குறிச்சொல்லிலேயே தெரிகிறதே, சஸ்பென்ஸ் எதற்கு பாய் என்று கேட்கிறீர்களோ? சரி.   ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது!) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை.  திருவண்ணாமலையில் இருக்கும்  முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்?’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல!’ என்று பதில் வந்தது!

’ஓய், ஒம்ம அட்ரஸ் என்னா?’ என்று செய்மீரான் என்பவரைக் கேட்டதற்கு ‘செய்மீரான், நாகூர் பஸ் ஸ்டாண்ட்’ என்று அலட்டலாக பதில் சொன்னார்; அதுமாதிரி அல்லவா இருக்கிறது!

எப்படியோ , வந்து சேர்ந்தார்  முருகன். இலக்கியம் பேசினோம். அலுத்துக்கொண்டபடி ’பேஜ்மேக்கர்’  நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தார். ‘இடம்’ அட்டை மட்டும் வந்திருந்தது. காட்டினேன். ‘பெரிய காஃப்கான்னு நெனைப்போ?’ என்று கிண்டல் செய்தார்.  காஃப்கா தெரியுமாம்! பதில் சொல்லவில்லை; சிரித்துக்கொண்டேன். எனக்குப் பிடித்த முருகனின் கதையில் அந்தக் கடைசி பத்திகள் தேவைதானா என்று மட்டும் கேட்டேன். ‘அதுதான் ரொம்ப முக்கியம்’ என்றார். இப்போது மீண்டும் படித்துப் பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள். முன்பு வெப்துனியா தளத்தில் இருந்த ஞாபகம். இப்போது கீற்று தளத்தில் இருக்கிறான் ’அதிர்ஷ்டமற்ற பயணி’. டிக்கெட் எடுக்காத பயணி முருகனை மாட்டிவிடுவது பிரமாதம். எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள்!

ஒரு சந்தேகம்,  http://gmuruganwritings.wordpress.com/  ஜீ.முருகன் நடத்தும்  தளம்தானா? அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா? இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே….  எதற்குக் கேட்கிறேன் என்றால்…  சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை! இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’  இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது! இருக்கட்டும்,  இங்கேயுள்ள  ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும்  எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை!) என்பதால் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர்கள் எல்லாரையும் – கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன். (என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).

மாய யதார்த்தத்தை வலிய இழுத்து நம் மண்டைகளை சிலர் உடைக்கும்போது மிக எளிமையாகத் தாண்டும் ஜீ. முருகன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.  என்ன, பாலியல் சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இரண்டு சிறுகதைத் தொகுதிகள் முழுதாக ( சாயும் காலம் , கறுப்பு நாய்க்குட்டி ) முருகனின் தளத்தில் இருக்கின்றன. வாசித்தால் , நிச்சயம் ’அஞ்சாம் நம்பர் கடைக்கு’ அருகில் போகலாம்!

’மரம்’ நாவல் இன்னும் நான் வாசிக்கவில்லை.

அதிர்ஷ்டமற்ற பயணி,
ஆபிதீன்

***

மேலும்…

ஜீ. முருகன் படைப்புகள் – கீற்று இணையதளம்

விளிம்புநிலை படைப்பாளி-ஜீ.முருகன் – இரத்தின புகழேந்தி

ஜீ.முருகன் கதைகள் ஓர் விவாதம் (காணொளி)

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… – ஜெயமோகன்

கதை சொல்லி – ஜீ. முருகன்   / தமிழ்ஸ்டூடியோ

வனம் – சிற்றிதழ்

8 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  21/09/2011 இல் 12:27

  //கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன்.
  (என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).//

  *
  அருமை ஆபிதீன்…

  கண்ணில் சிக்குபவர்களை
  அவர்களின்
  இலக்கிய நேர்த்திக்காக மட்டும்தான்
  இணைத்துக் கொண்டிருப்பீர்கள்.

  இலக்கியம் தாண்டி
  முற்போக்கின்
  அத்தனை துல்லியமும்
  கொண்டவன் நான்.

  உங்களது…
  அந்தப் பட்டியலில்
  தனித்துவம் கொண்டவன்
  நான் மட்டும்தான்!

  என்ன…
  நான் குழுவாக இல்லை.
  ஒத்தை மரமாக நிற்கிறேன்.
  என் உயரம்
  வெட்டவெளியில்
  தெரிய நியாமில்லாமல் போய்விட்டது..

  என்னுடைய அருமை
  இப்பொழுதின்
  நிழலில் உங்களுக்கு தெரியாது போனாலும்
  வெய்யலில் தெரியும்.
  -தாஜ்

 2. 21/09/2011 இல் 12:47

  என்ன தாஜ் இது, மனபாரத்தை அதிகப்படுத்துகிறீர்களே…உங்கள் அருமை தெரிவதால்தானே இழுத்து இழுத்து கிண்டல் செய்கிறேன் உரிமையோடு. அது தவறா? காயப்பட்டிருந்தால் மன்னியுங்கள். நீங்களாவது ஒத்தை மரம்; நான் பட்ட மரம்.

  • தாஜ் said,

   21/09/2011 இல் 13:20

   மன்னியுங்கள்
   ஆபிதீன்…
   மண்டை சரியில்லை.
   -தாஜ்

   • 21/09/2011 இல் 13:27

    //மண்டை சரியில்லை.// அது என்றைக்கு சரியாக இருந்தது? (யோவ், இதும் கிண்டல்தான்!)

 3. 21/09/2011 இல் 13:37

  தாஜ், நீங்கள் சிரிப்பதற்காக ஒரு விசயம் சொல்கிறேன். ’மவுத்தான நாகூர் எழுத்தாளர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதப்போகிறேன்; விபரங்கள் தேவை’ என்று மெயில் போட்டிருந்தார் நம்ம நாகூர் ரூமி. ’தருகிறேன்; ஒரேயொரு கண்டிசன். நாகூர் ரூமி பற்றி மட்டும் அதில் எழுதக்கூடாது’ என்று பதில் போட்டதும் மனுசனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதான் ரஃபி!

  • தாஜ் said,

   21/09/2011 இல் 15:43

   //அதான் ரஃபி!//
   நான் ரஃபிக்கு அண்ணன்
   எனக்கும் சிரிக்கத் தெரியும்.
   நிஜமாகவே
   மண்டை சரியில்லையா.

   சரி போகட்டும்.
   நாகூர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்
   நாகூர் ரூமியின்.
   விசயத்திற்கு வருவோம்.

   ரஃபிதான்
   அவரது குடும்பத்தினரைப் பற்றி
   அவ்வப்போது
   சொல்லித் தீர்த்துவிட்டாரே?
   இன்னுமா
   எழுத்தாளர்கள்/
   கவிஞர்கள்/
   சினிமா வசனகர்த்தாக்கள்
   பாக்கி இருக்கிறார்கள்?
   -தாஜ்

 4. 22/09/2011 இல் 08:55

  முருகனின் கதை கொஞ்சம் சுஜாதா பாணியில் சுவராஸ்யமாக உள்ளது.

 5. 22/09/2011 இல் 11:13

  நல்ல எழுத்தாளர்களின் அறிமுகம். போனசாக தொடர்புள்ள இணைப்புச் சுட்டிகள் என்பவை என் போன்றவர்களுக்கு வரப்பிரசாதம். இவை ஆபிதீன் பக்கங்களின் தொடர வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s