போர்க்காலப்பாடல் – ஏ.ஜி.எம். ஸதக்கா

ஸதக்கா  அறிமுகம் –  ஹனீபாக்கா

ஸதக்காவின் வாப்பா ஓர் மௌலவி, மார்க்கப்பற்றாளர், ஆனாலும் பற்றற்ற வாழ்வின் பற்றாளர். அன்றைய நாள்களில் ஊருக்குச் சரியென்று உரத்துச் சொன்ன உலமாக்கள் மத்தியில் உண்மைக்குச் சரி என்றுபட்டதை நேருக்கு நேர் நின்று – உரத்துச் சொன்ன ஓர்மக்காரர்.

மார்க்கம் என்ற ஆன்மீகம் அங்காடிப் பொருளாகிவிட்ட இன்றைய நாட்களில் ஆலாய்ப்பறந்து பொருளீட்டத் தெரியாத ஆலிம் அவர். மர்ஹும் சதக்கத்துல்லாஹ் மௌலவி (அப்துல் கபூர்) அவர்கள்.

அந்த ஓர்மக்காரர் பெற்ற பிள்ளைகளில் “தலைச்சான்“ ஸதக்கா என்று அறிந்த நாள் – என் வாழ்வின் நிறைவான தருணங்களிலொன்று.

அவனை இழந்து தவிக்கும் இந்தத் தருணத்திலும் – அந்த நாளை தூசு தட்டித்துலக்குகிறேன்.

80 களின் மதியம் – இதம் தரும் சாய் பொழுதில் நானும் நண்பன் வை. அஹ்மதும் அவர் வீட்டில் உரையாடிக் கொண்டிருக்க பதின்ம வயதில் ஸதக்கா அங்கே..

கவிஞர் நுஃமான் சொன்னதைப்போல கண் விடுக்காத பூனைக்குட்டி – பதுங்கி பதுங்கி வருவது போல..

“வாடாப்பா வா, உன்டெ கதயப் பற்றித்தான் நானும் எஸ்ஸெல்லமும் கதைத்துக் கொண்டிருக்கிறம்“ வை சொல்கிறார்.

பாடசாலை மட்டத்தில் நடந்த சிறுகதைப் போட்டியில் ஸதக்காவுக்கு முதற்பரிசு.

நான் நடுவர்.

முதற்காதல், முதல் முத்தம், முதற்படைப்பு அவனுக்கே முதற்பரிசு.

பதினேழு வயதில், அன்றுக் கண்ட அதே புன்னகை முகம் –

“எனக்கு விதித்தது இவ்வளவுதான் நான் வருகிறேன்.” என மண்ணறைக்குள் மறைந்து விட்ட நாள் அதுவரைக்கும் எனக்கு தரிசனம் தந்த முகம்…

இருபத்தைந்தாண்டு கால உறவில் ஒரு பொழுதும் எங்கள் முகங்கள் கறுக்கவில்லை.

இரண்டு தசாப்தங்களாக அவன் நமக்குள் வாழ்ந்திருக்கிறான்.

அந்த வாழ்வு எனக்கும் உங்களுக்கும் சொன்னதென்ன?

பெற்றோரின் கண்களுக்கு குளிர்ச்சிதரும் பிள்ளையாக அவன் திகழ்ந்தான்.

பாடசாலை நாட்களில் ஆசிரியர்களிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான்.

நண்பர்களுக்கெல்லாம் நண்பனாகவும் தனது அன்பு மனைவியின் நேசனாகவும் தனது பிள்ளைகளில் பொறுப்பும் பாசமுமிகுந்த தகப்பனாகவும் – அவன் வாழ்ந்து காட்டினான்.

மிகவும் சொற்பமான அவனது கலை இலக்கிய முயற்சிகளும் – தமிழ் இலக்கியப்பரப்பில் அவனுக்கு நிலையான உரையாடலை விட்டுச் சென்றுள்ளது. இது எனது வாக்குமூலம்.

நமது சூழலில் ஆசிரியமாக சுடர்விட்டவன். நமக்கான கல்வி, கலை இலக்கியம், ஆன்மீகம், அரசியல் பொருளாதாரம் சார்ந்த மாற்றத்திலும் – மதிப்பீடுகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான்.

அந்தக் கனவுகள் கூடிவர தடையாக நின்ற கற்பனைகளையும் வெற்றுக் கோஷங்களையும் விலக்கிவைத்தான். அந்த அரசியலில் தற்காலிகமாக இணைந்தவன் பின்னாளில் அதினின்றும் மீண்டுவந்தான்.

கனவுகள் மெய்ப்பட காரியமே கதி எனக் கொண்டான்.

இடையில் –

மரணம் அவன் நெற்றிப் பொட்டில் அமர்ந்து கண் சிமிட்டிற்று.

காலத்தால் மறைக்க முடியாத சில பக்கங்களேனும் நம் முன்னே விரிந்து கிடக்கிறது.

எதையும் நாம் முழுமையோடு அறிந்துகொள்ள ஆக்கிரமிக்க – ஆட்டிப்படைக்க – ஆர்ப்பரிக்கும் போதெல்லாம் நம்மைக் காவு கொள்ள காத்திருக்கிறது மரணம்.

மரணம் மிகப் பழமையானது. பாராபட்சமற்றது. அதன் திடீர் முற்றுகையால் மிகப் புதுமை கொண்டு குதூகலிக்கிறது.

மனித வாழ்வின் முன் கூட்டிய கணிப்பீட்டிற்குள் அறிந்து கொள்ள முடியாத கணிப்பொறியே!

எம் இனிய மரணமே!

உன்னால் வீழ்ந்துவிட்ட அவனுடலம் உன்னால் காவு கொள்ளமுடியாத அவன் கவிதைகளும் கனவுகளும் – ஸதக்கா என்ற ஜீவிதத்தின் சுடர் இந்தக் கணம் என்னுள் புது அர்த்தம் கொள்கிறது. பிரவாகம் சுழிக்கிறது.

போர்க் காலப் பாடலாக மழைக்கிறது. இசைக்கிறது.

கனத்த மனம் களி கொண்டாட மரணமோ தோற்றுப் போகிறது.

இங்கே

வாத்ஷல்ய மிகு நேசமுடன்
எஸ்எல்எம். ஹனீபா /  http://kalkudahmuslims.com/?p=3649 

***

போர்க்காலப்பாடல்

ஏ.ஜி.எம். ஸதக்கா

சப்தங்களால் காயப்பட்டிருக்கிறது
என்னிதயம்

துப்பாக்கிகளால் வரையறுக்கப்பட்ட
என் வாழ்க்கை
ஒரு கைதியின் ஆடை போன்று
கறை படிந்தே உள்ளது

நிஜத்தை சொன்னால்
தசாப்த காலமாக
என் ஆத்மாவைச் சுற்றி
ஒரு தகிப்பு இருந்தே வந்துள்ளது

இன்னும்
பேச்சும் மூச்சும்
கேள்வியும் என்னுள்
தொலைந்துதான் போயிற்று

ஆனாலும் நான்
மனிதன்!

தோழமையுடன் நீ வா,
உறவாடு என்னிடம்
‘சுதந்திரம், போராட்டம்’
என்றெல்லாம்
என்னைச் சிரமப்படுத்தாதே.

சப்தங்களால் காயப்பட்டிருக்கிறது
என்னிதயம்

06111996

***

நன்றி : ஹனிபாக்கா

***

மேலும் பார்க்க :

கவிஞர் ஏ.ஜி.எம். ஸதக்கா – எழுத்தும் அரசியலும் இணைந்த அரிதான ஆளுமை – ஏபிஎம். இத்ரீஸ்

4 பின்னூட்டங்கள்

 1. 05/09/2011 இல் 13:12

  உயிருடன் இருக்கும் போது அறிமுகப்படுத்தி இருக்கலாமே நானா! சப்தங்களால் காயப்பட்ட அவரின் மௌணங்களால் காயப்படுகின்றது என்னிதயம்/நம் இதயம்.

  • abedheen said,

   05/09/2011 இல் 15:25

   அன்பின் அமீன், இரண்டுநாளைக்கு முன் ஹனிபாக்கா சொல்லித்தான் எனக்கும் ’ஸதக்கா’ அறிமுகம். இன்னும் அங்கே எத்தனை முத்துக்களோ… வெளிக்கொணர நம் ‘டார்லிங்’ உதவியைத்தான் நாடுகிறேன்.

 2. 05/09/2011 இல் 19:26

  முத்து உதிர்ந்த பிறகு வார்த்தைகள் வரவில்லை ஆபிதீன்.
  பிடரி நரம்பைவிட அருகிலிருப்பவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் அறியவில்லை.

 3. 06/09/2011 இல் 11:02

  நண்பர் ஸதகாவின் நினைவுகளை மீளவும் ஆப்தீன் பக்கங்களில் கிளறிவிட்டார் குருநாதர். ஆளுமை, மனித நேயம் , என்று வார்த்தைகளால் ஸதகாவை வாழ்த்த முடியாத அளவிற்கு ஒரு மகோன்னத மனிதனாக வாழ்ந்தவன். நெருக்கமில்லாத நண்பர்களுக்கும் தன்னை நெருக்கமாக உணரச்செய்தவன். ஸதகா ஒரு அழகிய நித்ய சரித்திரம்.அவன் தொடர்ந்தும் எங்கள் மனங்களில் பாராயணம் செய்யப்பட்டுக்கொண்டிருப்பான்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s