நோன்புப் பெருநாள் வரப்போகிறது… (முப்பதாம் நோன்பு பிடிப்பதற்கு முன்பே – ’நாளைக்கு பெருநாள்’ என்று நள்ளிரவில் அரசு ஒருமுறை ‘விஞ்ஞானபூர்வமாக’ அறிவித்தபோது – ‘குல்லுயவ்ம் அக்ல்’ (இனி தினமும் சாப்பாடுதான்!) என்று கத்திக்கொண்டே ஒரு அரபி குஷியாக ஓடினானாம். என்ன, இந்தமுறை சராசரியாக 5 கிலோ எடை கூடியிருப்போமா நாம்? ருசிக்காலத்தின் மகிமையே மகிமை! செரிப்பதற்கு உதவுவது சிறந்த இசைதான். கேளுங்கள். நுஸ்ரத்தின் ’கவாலி’ ஒன்றை பெருநாளன்று பதிவிடுவதாக பிராமிஸ் செய்திருந்தாயே என்று நினைவுபடுத்திய நண்பன் ஹமீதுக்கு நன்றி. இசை அசுரனுடன் சொர்க்கத்தில் இருந்துவிட்டு பிறகு இம்சை அசுரன் நாகூர் ரூமி எழுதிய கவிதையைப் படிக்கலாம்.
’நெஞ்சுக்கூட்டிலிருந்து காற்றை இயக்கிப் பாடும்’ கவாலியை மிக நுணுக்கமாக உணர்ந்திருக்கிற சகோதரர் வெங்கட்ரமணனின் கட்டுரைக்கான சுட்டியை கீழே இணைத்திருக்கிறேன். அதையும் அவசியம் வாசியுங்கள். இதயங்கனிந்த அனைவருக்கும் ஈத் முபாரக்! – ஆபிதீன்
***
Thanks to : SabriMaqbool
***
இசை அசுரன்
நாகூர் ரூமி
யானையின் கண்களைப்போன்ற
கீறல் விழுந்த உனது சின்ன குரல்
முதன் முதலாய்
என் செவிகளில் விழுந்தபோது
எனக்குப் பிடிக்கவே இல்லை உன்னை!
அபஸ்வரமாய் பட்டது
உன் பெரிய ஆகிருதி எனக்கு!
வெறும் காற்று என்று எண்ணினேன்
உனது குரலை!
காற்றுவாக்கில் ஒரு நாள்
மிதந்து வந்து எனக்குள்
புகுந்துகொண்டபோதுதான் புரிந்தது
காற்றின் உயிர் மூச்சுதான்
உன் குரல் என!
தூறலாகத்தான் தொடங்கும்
உனது பெரு மழை!
போகப்போகத்தான் பிடித்துக்கொள்ளும்
வெளியில் போகமுடியாதவாறு!
சளியும் பிடிக்காது
காய்ச்சலும் வராது
உனது மழையில் நனையும்போது!
நனைய நனைய கூடிக்கொண்டே போகும்
ஈர ஆரோக்கியம்!
அப்ரஹாவின் யானைப்படை
அபாபீல் பறவைகளினால் மாண்டதுபோல
கந்தர்வக் குரல்களும்
அதன் கர்வங்களும்
அடிபட்டுப் போகின்றன
புகை படிந்த உனது கீறல் குரலில்!
உன் வாமனக் குரலின்
விஸ்வரூபங்களுக்கும் விஸ்தாரங்களுக்கும்
தலைவணங்கித்தான் ஆகவேண்டும்
எந்த செவிப்பறையும்!
நீ உச்சரித்த வார்த்தைகள் என்
மூளைக்குப் புரியவில்லை!
ஆனால் என் கண்களுக்குப் புரிந்து விட்டன!
நீ உச்ச ஸ்தாயியில் சயனித்தபோது
என் கண்ணீர்ப் பூக்கள் செலுத்தின
உனக்கு அஞ்சலி!
பக்கத்தில் பக்கத்தில் வைத்து முகர்ந்தபோதுதான் தெரிந்தது
பல இசைவல்லுணர்களுடைய பூக்கள் பலவும்
உனது மொட்டுக்களைப் பிரித்து, பிய்த்து
செய்யப்பட்டவை என!
நீ வரைந்த கோட்டோவியத்திற்கு
சாயங்கள் பூசி
தமதென்று சொல்கின்றன
தப்புத்தாளங்கள்!
கிள்ளியும் அள்ளியும் எடுக்கும்
பிச்சைக்காரர்களைப் பற்றி
பேசுவதே இல்லை நீ!
அட்சய பாத்திரம்!
உனது கற்பனையின் சிறகுகள்
ஒன்றிலிருந்து ஒன்றாய்
கிளைத்து பிரிந்து விரிந்து
பறந்தபோது
ஒவ்வொன்றிலும் அடங்கியது
ஒரு உலகமே!
நர்மதையும் நைல் நதியும்
சேர்ந்து நடந்துபோனது
உனது கடலுக்குள்தான்!
பைங்கிளியும் பெங்குவினும்
மூக்கோடு மூக்கு உரசிக்கொண்டது
உனது கிளைகளில்தான்!
ஹிந்துஸ்தானும் பாகிஸ்தானும்கூட
எல்லைக்கோட்டை மறந்து ஒன்றியது
வானவிற்களால் ஆன
உனது வண்ண வண்ண வானத்தில்தான்!
கித்னா ப்யாரா துஜே
ரப்னே பனாயா!
(எவ்வளவு அழகாக உன்னை இறைவன் படைத்துள்ளான்!)
பாடல் மட்டும் உனதல்ல
அது பாடுவதும் உனையே!
நுஸ்ரத் ஃபதேஅலிகான்
ஒரு பாடகனின் பெயர்
என்று நினைத்திருந்தேன்
தவறாக!
மூழ்கியபோதுதான் தெரிந்தது
முத்துக்களால் ஆனதொரு
கடலின் பெயர் அது!
* (அப்ரஹா — யானைப்படையோடு புனித மக்கா ஆலயத்தை அழிக்க வந்து ஆண்டவன் அனுப்பிய அபாபீல் என்ற சின்னச் சின்னப் பறவைகள் போட்ட கற்களினால் படையோடு மாண்டான் என்கிறது திருக்குர்ஆன்)
21-10-2003
***
நன்றி : நாகூர் ரூமி
***
வெங்கட்ரமணனின் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்
***
மறுமொழியொன்றை இடுங்கள்