தாத்தாவான தாஜுக்கு தி.ஜானகிராமன் துணை

பேத்தி பிறந்ததில் பூரித்துப் போயிருக்கிற தாஜ்தாத்தாவுக்கு ‘புன்னகை மன்னன்’ தி,ஜானகிராமனின் தாத்தா கதை அர்ப்பணம் – வருங்கால தாத்தாவான ஆபிதீனின் வாழ்த்துக்களுடன். நம்ம தாஜ், ஏற்கனவே பார்ப்பதற்கு தாத்தா மாதிரிதான் இருப்பார். ‘விமர்சனம் செய்தால் பல்லை கழற்றி விடுவேன்’  என்று பிரபல எழுத்தாள நண்பர் ஒருவர் அவரை எச்சரித்தபோது ’எதுக்கு கஷ்டம், நீயே வச்சுக்க!’ என்று பவ்யமாக தன் பல்செட்டை கழட்டிக் கொடுத்துவிட்டதை வைத்து இந்த தகவலைத் தருகிறேன். ஏன் இப்போது உண்மையை கழற்றுகிறேன் என்றால்..அட, தருணம் வரவேண்டாமா எல்லாவற்றுக்கும்?

’மகனோ மகளோ பிறந்தால் வெறும் இன்பம்; பேரனோ பேத்தியோ பிறந்தால் பேரின்பம்’ என்று சொல்லும் சீனியர் தாத்தாவான ஜாஃபர்நானாவுடன் (ஒரு பேரன், இரு பேத்திகள்!) சேர்ந்துகொண்டு எல்லா கிழங்களும் வாழ்த்துவோம்.

ஒரு வேடிக்கை. தாஜ்தாத்தாவுக்காக ஜானகிராமனின் ’துணை’ கதையை நான் செலக்ட் செய்திருக்க தாத்தாவோ வேறு ஒரு சூப்பர் ஜானகிராமன் கதையை இன்று அனுப்பியிருக்கிறார். தாஜுக்கு ஜானகிராமன் துணையா ஜானகிராமனுக்கு தாஜ் துணையா? ’போடு சாம்பிராணி!’.  இரண்டும்தான். இணையத்தில் அது (பெயரைச் சொல்ல மாட்டேன்)  வந்திருக்கிறதா என்று ’செக்’ செய்துவிட்டு பிறகு அதை வெளியிடுவேன், இன்ஷா அல்லாஹ்.

”ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை..” என்று அட்டகாசமாக விவரிக்கப்படும் ‘துணை’யின் முதல் பகுதியை இமேஜ் ஃபைலாக முதலில் பார்த்துவிடுங்கள். பக்கம் 1 | பக்கம் 2 | பக்கம் 3 | பக்கம் 4 | பக்கம் 5 | பக்கம் 6 .

பின்பகுதியை மட்டும் மெல்லத் தட்டி இங்கே இடுகிறேன். அது ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த செயல் என்பது அவனது முன்பக்கத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். அது இருக்கட்டும்;  ‘கோலி சோடாவை உடைத்தது போல குபுக்கென்று சிரிக்க வைக்கும் கோத்திரம் அல்ல ஜானகிராமனின் நகைச்சுவைகள். அவை, வேள்விகளிலிருந்து வெளிவரும் மெல்லிய தங்கப் புகைச்சுருள்கள்’ என்று எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் சொல்வதை மறுக்க எவருக்கேனும் துணிவிருக்கிறதா?

ஒரு தாத்தாவுக்கு ஜானகிராமன் வைக்கும் பெயரைப் பாருங்களேன். சின்னக்குழந்தை! ஹாஹா… இணையில்லை, எங்கள் தி.ஜானகிராமனின் ’துணை’க்கு! .

ஆனந்தவிகடனுக்கு நன்றிகள். –  ஆபிதீன்
***

துணை – தி. ஜானகிராமன்

நான் போகும்போது சின்னக்குழந்தை சாப்பிட்டுவிட்டு வாய்நிறைய வெற்றிலையை மென்றுகொண்டு திண்ணையில் உட்கார்ந்து ‘தினமணி’ படித்துக் கொண்டிருந்தார்.

“என்ன தாத்தா?”

“வாப்பா, வா. அடே! பத்தேகாலுக்கு வந்துட்டியே, சொன்னாப்போலே. ஒரு நல்ல வண்டியா கூப்பிடேன்.”

வண்டிப்பேட்டை பக்கத்தில்தான் இருந்தது. ஒரு குரலுக்கு நல்ல வண்டி வந்து சேர்ந்தது.

“உள்ளே வாப்பா!”

கூடத்தில் ஒரு பெஞ்சின்மீது லேடிக்கிழவர். சின்னக்குழந்தையின் தகப்பனார் உட்கார்ந்திருந்தார். லேடியென்று இப்போது சொல்ல முடியாதுதான். தலை முழுவதும் ஒரு அணு விடாமல் வழுக்கை பளபளத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் விபூதியிட்டாற்போல மூன்று கோடு சந்தனம். கையில் உத்திராட்சமாலை. வாயில் பாக்குரலில் இடித்த வெற்றிலைப்பாக்கு. அவர் வெகு நாழியாகக் கிளம்பச் சித்தமாகி விட்டார் என்று அல்பாகா கோட்டும்  கழுத்தில் வளைந்த பழுப்படைந்த வெண்பட்டும் சொல்லின. நூற்றிரண்டு வயசாகி விட்டதற்காக ஒரு அங்கமும் குறைந்து விடவில்லை அவருக்கு. சாதாரணக் கிழவர்களைப் போலத்தான் இருந்தார். அவர் மனம் வெற்றிலை மணத்தில் லயித்திருந்தது.

அருகில் போய் “தாத்தா, சௌக்கியமா?’ என்று கேட்டேன்.

“யாரது, எனக்குக் கண்தான் சரியாகத் தெரியாது. காது கேட்கும்” என்று பதில் வந்தது. இந்தக் கிழங்களுக்கு முன் இயல்பாகவே குரல் உச்சஸ்தாயில். நான் பேசுகிறது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.

“ஸப் ரிஜிஸ்ட்ரார் பையனப்பா. துணைக்கு வந்திருக்கிறான்.”

“ஓஹோ, அப்படியா, உன் பேர் கிருஷ்ணசாமிதானே?”

“ஆமாம்”

“நீதானே புனா மிலிடரி அக்கௌண்ட்ஸிலே இருக்கே?”

“ஆமாம்.”

“லீவு எடுத்துண்டு வந்திருக்கியோ?”

“ஆமாம்”

“ஒரு மாசமா?”

“ஆமாம்.”

“சரிதான்.”

“கல்யாணத்தைப் பண்ணிண்டு குடித்தனம் வைக்கப்படாதோ?”

“…………………”

“என்ன வயசாறது உனக்கு?”

“இருபத்தேழு.”

“என்னடாப்பா இது? இன்னும் சும்மா இருந்தா?”

“மணி பத்தரையாகப் போறது.”

“பத்தரையாகிறதா! அப்படின்னா கிளம்பலாமே. என்னடா சின்னக்குழந்தை. கிளம்பலாமோல்லியோ?”

மணி சொன்னது பெரியவரைப் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.

“சின்னக் குழந்தை!”

“இதோ ஆச்சுப்பா, சட்டையைப் போட்டுண்டு வந்துடுறேன்.”

“………………….”

“என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப் போறியோ, தெரியலை, சரி சரி, வா, சட்டுனு.”

சின்னக்குழந்தை புன்முறுவல் பூத்துக்கொண்டே உள்ளேபோய் ஒரு ஒட்டுப்போட்ட கறுப்புக் கோட்டும், அதைச் சுற்று ஒரு நாட்டுத் துணுக்கும் போட்டுக்கொண்டு வந்தார். கோட் ஸ்டாண்டிலிருந்த ஒரு வெண்பட்டை எடுத்து, கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு முண்டாசு அல்லது தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, “போகலாமா?” என்றார்.

“ம்..”

“யாரங்கே, போயிட்டு வந்துடுறோம் நாங்க. அம்மா வரட்டுமா?”

இப்பொழுதுதான் அவர் அம்மா இருக்கிற இடம் தெரிந்தது. கூடத்திலேயே ஒரு மூலையில் நீட்டின காலோடு உட்கார்ந்திருந்தாள். தலை கத்தாழை நாராக வெளுத்திருந்தது. காதில் பெரிய சம்புட அகலத்திற்கு ஒரு சிகப்புத் தோடு தொங்கி ஆடிக் கொண்டிருந்தது.

பூஜை அலமாரியைத் திறந்தார் பெரியவர். பிரார்த்தித்துக் கொண்டார். சின்னக் குழந்தையும் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினார்.

“குழந்தே, ஜாக்கிரதையாப் பார்த்துகோடாப்பா” என்று சின்னக் குழந்தை சம்சாரம் வந்து சிபார்சு செய்தாள். அவளுக்கும் மாமியார்க் கிழவிக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பெரிய கிழவி நடக்க முடியாமல் மூலையில் கிடந்ததுதான் குறை.

சின்னக் குழந்தை தகப்பானரின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்தார்.

“காலைத் தூக்கிவச்சு வாங்கோப்பா.”

“தூக்கித்தாண்டா வக்கறேன். தெரியலியா?”

“நிலை குனிஞ்சு வாங்கோ.”

“தெரியறது.”

“திண்ணையைப் புடிச்சிண்டு இறங்குங்கோ!”

“ஏன், இல்லாட்டா விழுந்துடுவேனோ? ஏண்டாப்பா!”

“இல்லே, சொன்னேன்.”

“என்னத்தைச் சொன்னேன்?”

வண்டியில் அவரை முன்னால் ஏற்றிவிட்டு, சின்னக் குழந்தை ஏற, நானும் உட்கார்ந்துகொண்டேன்.

கஜானாவுக்கு அருகில் கூட்டத்திற்கா பஞ்சம்? அதுவும் பக்கத்தில் கலெக்டர் ஆபீஸ், கோர்ட்டுகள், நெல் கொள்முதல் ஆபீஸ் இவ்வளவு ஆபீஸுகளும் இருக்கும்போது பெரிய காம்பவுண்டு தூங்குமூஞ்சி மரங்கள் பரந்து நெருங்கி வளர்ந்து நிழல் எறிந்து இருந்தன. நிழல் விழுந்த இடமெல்லாம் கிழங்கள் படுத்திருந்தன. முழங்காலைக் கட்டி அமர்ந்திருந்தன. போனவருடம் பதவி விட்ட கிழம் முதல் சின்ன குழந்தை வரையில் பல கிழங்கள்.

வண்டி காம்பவுண்டுக்குள் நின்றது. மெதுவாக லேடிக் கிழவரை கீழே இறக்கி ஒரு தூங்குமூஞ்சி நிழலில் உட்கார வைத்தோம்.

“என்னப்பா லேடி! சௌக்யமா? மஸ்டர் நாளைத் தவிர மத்த நாளில் உன்னைப் பார்க்க முடியாதுன்னு ஆயிட்டது இப்ப.”

“யாருடா அது கேதாரி ராமனா?”

“ஆமாம்பா, ஆமாம்.”

“என்ன போ, இந்த வருஷம் ஆஸ்த்மா என்னைப் போட்டுக் கொன்னுடுத்து. ஏதோ போ, இழுத்துண்டு கிடக்கேன்.”

”யாரு நீயா? காந்தி போயிட்டார் நூத்திருவத்தஞ்சு நூத்திருவத்தஞ்சுன்னு சொல்லிப்புட்டு! நீ கட்டாயமா இருந்துதான் காமிக்கப் போறே.:”

“எதுக்காக? என்னடாப்பா முடை? தேசோத்தாரணம் பாழாப்போறதே, அதுக்காகவா?”

“தேசோத்தாரணம் பண்ணினாத்தான் இருக்கணுமா? இல்லாட்டா இருக்கப்படாதா என்ன? ஏன் பிள்ளையை மாத்திரம் அழைச்சிண்டு வந்திருக்கே? பேரன் எங்கே?”

“காசிக்குப் போயிருக்கான்.”

“காசிக்கா! போடு சாம்பிராணி. ஏன்? நீயும் போயிட்டு வரப்படாதோ?”

“நானுமா? பேஷ் ஹுசூர் கஜானாவே காசியா இருக்கு நமக்கு. நன்னாச்சொன்னே போ, உன் பேத்தி பிரசவிச்சுட்டாளா?”

“ என் பேத்தியா? குழந்தை பிறந்து எத்தனை மாசமாச்சு. அடுத்த மாசம் ஆண்டு நிறைவு.”

“பிள்ளையா , பெண்ணா?”

“பிள்ளை.”

“பேஷ்!”

“உன் பிள்ளை லீவிலே வந்திருந்தானே, டூட்டியிலே ஜாயினாட்டானா?”

“போன ஏப்ரல்லே வந்தானே, அதைச் சொல்றயா?”

“அதுதானே எனக்குத் தெரியும்.”

“ஜாயினாகி, இப்ப வேறே இரண்டு மாசம் மெடிகல் லீவிலே வந்துட்டு, மறுபடியும் போனமாசம் ஜாயினாட்டான். இன்னும் என்ன கேட்கப்போறே?”

“என்னத்தைக் கேக்கறது! வருஷத்துக்கு ஒருநாள் சந்திக்கறபோது கேட்டுத்தானே ஆகணும்.”

அப்போதுதான் நானும் கவனித்தேன். லேடிக்கிழவரை எத்தனையோ பேர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி ஒரு கூட்டம். அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இது யார் பையன்? கொள்ளுப் பேரனா?” என்று கேதாரிராமன் கேட்டார்.

“நாலு வீடுபோட்டு அந்தண்டை இருக்கான். சப் ரிஜிஸ்ட்ரார் பிள்ளை. துணைக்கு வந்திருக்கான்.”

“போடு சாம்பிராணி! துணை வேறயா? நீ அவனுக்குத் துணையா? அவன் உனக்குத் துணையா?”

“என்னடாப்பா இது? எனக்கு உயிர் இருக்குன்னா பலம் கூட இருக்கணும்னு அவசியமா என்ன? ஏண்டாப்பா?”

“அது சரி, இதோட எத்தனை மஸ்டர் ஆச்சு?”

“ஞாபகம் இல்லையே.”

“அறுபது இருக்குமா?”

“அறுபதா? 55-ம் 60-ம் நூத்திப் பதினைந்துன்ணா? என்னடா இது? நூத்திப் பதினைஞ்சு வயசா ஆயிடுத்து எனக்கு?”

“பின்னே சொல்லேன்.”

“என்னமோ போ. இதெல்லாம் என்ன கேள்வி?”

“ஏன் கேக்கப்படாதோ?”

”கேட்டுண்டே இரு. போ.”

சின்னக் குழந்தை எழுப்பியபோதுதான் மணி மூன்று என்று தெரிந்தது. சுயராஜ்யத்தைத் திட்டிக்கொண்டே வண்டியை கட்டச் சொன்னார் அவர்.

வண்டிக்காரன் மாட்டைப் பூட்டும்போது நான் கண்ட கனவு ஞாபகம் வந்தது. நான் ரொம்ப கிழவனாகப் போய் விட்டதாகவும், ஆனால் ரிடயர் ஆகாமலே பென்ஷன் கொடுக்கும் குமாஸ்தாவாக இருப்பது போலவும் சொப்பனம்.

எனக்கே சிரிப்பு வந்தது.

“என்னடா குழந்தை சிரிக்கறே?” என்று கேட்டார் சின்னக் குழந்தை.

“ஒன்ணுமில்லே.”

“என்ன, சொல்லேன்?”

“எல்லாரும் ஏன் ரிடயர் ஆறா?”

“அப்படின்னா?”

“ரிடயர் ஆகாமலே வேலை பார்க்கறது?”

“வயசாயிடுத்துன்னா என்ன பண்ணறது?”

“அப்படின்னா இப்ப வேலை செய்ய முடியாதா உங்களுக்கு?”

திடீரென்று லேடிக் கிழவர் குறுக்கிட்டார். “ஏன் முடியாது? பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுதுன்னா முட்டாளாப் போயிடறான், கபோதியா போயிடறான்னு கவர்ன்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55ன்னு வக்யறது, என்னடா பேத்தல்!”

“சரி வண்டியிலே ஏறுங்கோ.”

எல்லோரும் ஏறிக்கொண்டோம். வண்டி கிளம்பிற்று. காம்பவுண்டு தாண்டியதும் பறந்தது. மெயின்ரோட்டைக் கண்டால்தான் இந்த நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம். வண்டிக்காரன் சொன்னான்.

நல்ல மேற்கத்திக் காளை மாடு. வண்டிக் குடமும் நல்ல அழுத்தமான குடம். குடுகுடுவென்று , அமர்ந்து கேட்கும் இடிபோல முழங்கி காதில் இனிமை ஊற்றிற்று.

“என்னடாப்பா விலை மாடு?” என்று லேடிக் கிழவர் கேட்டார்.

“முந்நூறு ரூபாய்ங்க.”

“வண்டி?”

“இருநூற்றைம்பது.”

”பேஷ். இரண்டும் நல்ல அமைச்சல்.”

“பாவ்  பாவ்  டேய். க்…க். ஆவ்.”

***

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் கீழே கிடந்தேன். எனக்கு மேல் சின்னக் குழந்தையும் லேடிக் கிழவருந்தான் கிடந்திருக்க வேண்டும். வேறு யார் கிடப்பார்கள்? வண்டி பின்பக்கமாகக் குடை சாய்ந்து விட்டது. ஏர்க்கால் ஆகாயத்தை எட்டிற்று. மாட்டுக் கழுத்துக் கயிறுதான் அறுந்திருக்க வேண்டும்.

“எலே, வண்டியைத் தூக்குடா, கூறு கெட்ட பயலே.”

லேடிக் கிழவரின் குரல்.

எனக்குக் கை வலித்தது.

வண்டியை இழுத்தார்கள்.

லேடிக் கிழவரைத் தூக்கினார்கள். சின்னக் குழந்தை எழுந்து கொண்டார்.

எனக்கு எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைத்திருந்தது. ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும். கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.

கண்ணாடி போட்ட ஆசாமி? “ஓ’ டாக்டர், பிறகு நர்ஸு.

சர்க்கார் ஆஸ்பத்திரி என்று தெரிந்தது. சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தார்.

”எக்ஸ்ரே எடுக்க வேண்டும்” என்றார் டாக்டர்.

எக்ஸ்ரே அறைக்கு என்னைக் கொண்டு செல்லும்போது, நடையில் ஒரு பெஞ்சில் லேடிக்கிழவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.

எக்ஸ்ரே எடுத்தார்கள். இரட்டை முறிவாம். பொருத்தி, பாரிஸ் பிளாஸ்திரி போட்டு கையைக் கழுத்தோடு மாட்டி விட்டார்கள். வேறு ஏதோ வண்டியில் தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு லேடிக் கிழவரும் சின்னக் குழந்தையும் ஏறிக் கொண்டனர்.

வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. எல்லோடும் இறங்கிய பிறகு இறங்கினேன்.

வண்டி நிற்கும் சத்தத்தைக்ல் கேட்டு அம்மா வாசலுக்கு ஓடி வந்தவள், என் கோலத்தைக் கண்டதும் “என்னடா குழந்தஏ என்னடா இது” என்று பதறி அருகில் வந்தாள்.

“ஒண்ணுமில்லேம்மா, சும்மா கத்தாதே வாசலிலே நின்னுண்டு.. வண்டி குடை சாஞ்சுது. கை லேசா முறிஞ்சிருக்கு. தாத்தா அழைச்சுண்டு போய் க்ளீனா காட்டி அழைச்சிண்டு வந்துட்டார்.”

சின்னக் குழந்தையின் நெற்றியில் ஒரு சிறிய குறுக்குப் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அவர் வெறும் சிராய்ப்போடு பிழைத்து விட்டார். லேடிக் கிழவருக்கு குதிரை முகத்தில் அடியாம். வேறு காயம் இல்லை.

“அம்மா, எங்களோடு வந்ததுக்கு தண்டனை உங்க குழந்தைக்கு. படுகிழங்கள் இருக்கோமோ, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ? ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை..”

“நாம அழச்சிண்டு வந்துவிட்டோம்” என்று முடித்தார் லேடிக் கிழவர்.

அம்மா மெத்தையைப் போட்டாள். படுத்துக் கொண்டேன்.

“மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டு விடப்பா, ஆமாம்” என்றார் லேடிக் கிழவர்.

“சரி தாத்தா.”

**

நன்றி : ஆனந்தவிகடன்

8 பின்னூட்டங்கள்

 1. 27/08/2011 இல் 21:08

  (ஏதோ வயசானவுங்க சமாச்சாரம் போல தெரியுது.)

  அவங்களோட சேர்ந்துகொண்டு, இளைஞர்கள் சார்பா
  தாஜ் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள தெரிவிச்சுக்கிறேன்

  புதிதாய்ப் பூத்த பூவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

 2. தாஜ் said,

  27/08/2011 இல் 22:10

  எல்லோரும் சேர்ந்து
  வேண்டாதப் பட்டத்தை
  எனக்கு கட்டி மகிழ்கின்றீர்கள்.
  என்றாலும்….
  தப்பிக்கவெல்லாம் முடியாது.
  விடாது கருப்பு.

  இப் பட்டமும்
  அத்தனை எளிதன்று.
  மாமனாராகி
  தலையசைத்து தலையசைத்து,
  சம்மந்தியாகி
  விளங்காத சச்சரவுகளையும்
  பரிபாலனம் பண்ணி
  சுயத்தை இழக்கும் நாளொன்றில்.
  கிட்டும் பட்டம் அது!
  தாத்தா…
  சொல்லிப் பார்க்கவே இனிக்கிறது.

  உங்களுக்குத் தெரியுமா…
  இன்னொரு நிஜம்?
  என் மனம் இன்னும்
  ஓட்டுப் போடும்
  வயதை எட்டவேயில்லை!
  எட்டவும் எட்டாது.
  இளமையும் கூட தட்டிப் போகாது!
  காலத்து
  நெருக்குதலின் போதெல்லாம்
  நான்…
  பிறந்துக் கொண்டல்லவா இருக்கிறேன்.
  -தாஜ்

 3. 28/08/2011 இல் 01:08

  தாஜ் உங்கள் புதிய உறவின் வரவு மகிழ்சியை தந்தது. இறைவனுக்கு நன்றி!

 4. 28/08/2011 இல் 05:47

  புனித ரமழானில் தாஜிக்கு பேரக்குழந்தை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.அனைத்துப்பாக்கியங்களையும் அல்லாஹ் அந்தக்குழந்தைக்கு அருள்வானாக! எனக்கும் ஐந்து பேரக்குழந்தைகள் . மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் .
  ஆண்கள் இரண்டும் இரண்டாயிரம் சைத்தான்களுக்கு நிகரானவர்கள்.பெண்கள் மூன்றும் மலக்குகளாக்கும்.

  அன்புடன்
  எஸ்.எல்.எம்.ஹனீபா

  • 28/08/2011 இல் 09:29

   காக்கா, இந்த கூத்தைக் கேளுங்கள். ’பேத்திக்கு என்னய்யா பேரு வச்சிருக்கே’ என்று நேற்று கேட்டேன். ‘ரமலான்’னு வைக்கலாமான்னு வீட்டுல கேட்டேன். முறைக்கிறா..!’ என்கிறார்.

  • தாஜ் said,

   28/08/2011 இல் 11:44

   என்ன காக்கா…
   உண்மையை இப்படி
   பளீச்சென்று எழுதுறீங்க?
   சரி, சவகாசமா பேசலாம்.
   இப்போ
   வாழ்த்துக்கு நன்றி.
   -தாஜ்

 5. 28/08/2011 இல் 19:31

  ஹனிபா காக்காவுக்குப் பரவாயில்லை, மூணு மலக்காவது இருக்கு.
  என்னட்டெ இருக்கிற மூணும் மூவாயிரம். ஒன்னு ஒன்னைவிட மிஞ்சினது, கடைசி ஒன்னரை முழம், எல்லாத்தையும் மிஞ்சிடுச்சு.

  • தாஜ் said,

   28/08/2011 இல் 20:02

   என்ன சொல்ல வறீங்க
   ஹஜஃபர் நாநா…
   புரியலையே.
   பொம்பளைப் புள்ளீங்கன்னா
   அப்படித்தான்.
   பயம் காட்டிக்கிட்டே இருக்கும்.
   நம்ம தைரியமா இருக்கணும்.
   பயப்படவே கூடாது.
   வேற வழியும் இல்லை.
   – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s