கத்தாமா (வேலைக்காரி) – ஹமீது ஜாஃபர்

மார்க்க விசயங்கள் எழுதும் ஜாபர்நானா ’இம்-மார்க்கமும்’ எழுதுவாராம். moral X immoral போல மார்க்கம் X இம்மார்க்கம்!  நம் மார்க்கத்தைச் சேர்ந்த நண்பர் மஜீதின் விளக்கம். புது வார்த்தை கண்டுபிடித்த புகழ் அவருக்கு சேரட்டும்.  மன்னியுங்கள்,  ஆத்மீகம் – கதைகள் என்று ஆனந்தமாக போய்க்கொண்டிருந்த நானாவை சினிமா விமர்சனம் எழுதச் சொன்ன பாவம் என்னையே சாரும்.  சொன்னதும் உடனே எழுதி அனுப்பினார்.  நன்றி. அடுத்து, ’ஆதமிண்டே மகன் அபு’ படத்திற்கும் எழுதச் சொல்லிவிட வேண்டியதுதான். ’கத்தாமா’ அவரை அந்த அளவு ‘டச்’ பண்ணிவிட்டாள்.

’கத்தாமா’வாக காவ்யாமாதவன் வந்தால் கடவுளுக்கே காமம் வரும்; காட்டரபிகளுக்கு வராதா என்ன? ’ அவ மாதிரி – எல்லாம் பெருசு பெருசா –  ஒருத்தி   உங்க வீட்டுக்கு வந்தா என்னா செய்வீங்க?’ என்று நானாவிடம் கேட்டதற்கு , ‘ஆஹா.. ராசாத்தி மாதிரி வச்சிக்குவேனே… வேலையே செய்ய வுட மாட்டேன்’ என்று அப்பாவியாகச் சொன்னார் நானா . அதாவது , இவர் வேலை செய்வாராம். அடச்சே, எதை எழுதினாலும் தப்பாவே எடுத்துக்குறீங்களே… அதாவது, அவள் வேலையை இவர் செய்வாராம். ஓ, இதுவும் தப்போ? வர வர ஒழுங்காகவே எழுத வரமாட்டேன் என்கிறது. எல்லாம் சேருவார் தோஷம்!

வேடிக்கைக்கு எழுதுகிறேனே தவிர அரபுநாட்டுக்கு வரும் ’கத்தமா’க்களின் வாழ்க்கை அவ்வளவு கொடூரமானது. சுட்டிகள் கொடுத்தால் சோதனை வந்துவிடும்.  போகட்டும்;  நல்வாய்ப்பாக, குடும்ப உறுப்பினர் போல் நடத்தப்படும் ஒருசில கத்தாமாக்களும் உண்டு. அப்படியொரு பெண் , தங்கநிகர் தமிழகத்திற்கு விடுமுறையில்  வரும்போது தன் ஊரிலிருக்கும் உயர்சாதியினர் வீட்டில் நுழையக்கூட இயலாமல் திரும்பும் சோகத்தை அருமையாக எழுதியிருப்பார் எழுத்தாளர் சிவகாமி. கதையின் தலைப்பு ஞாபகமில்லை. இணையத்தில் தேடினேன். இல்லவே இல்லை. ஊரில் இருக்கிறது. விரைவில் பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். இப்போது ஜாஃபர்நானாவின் ’கத்தாமா’வைப் படியுங்கள். சினிமாவையும் பாருங்கள். ’சுட்டெரிக்கும்  பாலைவனத்து வெயிலை சில செடிகள் தோற்கடிப்பதைப் பார்’ என்ற ஹலாலான ஒரு வசனத்திற்காகவே பார்க்க வேண்டும். சரி, இங்கே இருக்கும்  ‘Tree of Life’ பார்த்தீர்களா?

ஆபிதீன்

***

கத்தாமா (வேலைக்காரி) 

விமர்சனம் :  ஹமீது ஜாஃபர்

1930 – 40 களில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்திக்கொண்டு , ‘மலேயா போக விருப்பமுள்ளவர்கள் கப்பலில் செல்லலாம்’ என்று மணி அடித்து அழைப்பார்களாம். அப்போது கப்பல் டிக்கட் பதினைந்து பதினாறு ரூபாய் தானாம். பாஸ்போர்ட் விசா இதெல்லாம் கிடையாதாம், ஊரில் இருக்க விரும்பாதவர்கள், வீட்டில் சண்டை சச்சரவு செய்தவர்கள், பொண்டாட்டியின் ‘டார்ச்சர்’ தாங்காமல் கோபித்துக்கொண்டு , ரயிலுக்கு டிக்கட் எடுப்பது போல டிக்கட் எடுத்துக்கொண்டு , மலேயா போய்விடுவார்களாம். இரண்டு நாள் வீட்டுக்கு வரவில்லை என்றால் யாரும் கவலையோ தேடவோ மாட்டார்களாம். நிச்சயமாக கப்பல் ஏறிவிட்டான் என்று அவர்களுக்குத் தெரியுமாம். ஏன் , தீண்டாமைப் போராட்டத்தின் போதுகூட , ‘நீங்க இங்கெ இருந்தா இப்படித்தான் அவதிப் படணும் அதனாலெ ஒன்னு துலுக்கனா மாறிடுங்க இல்லேன்னா மலேயாவுக்குப் போயிடுங்க’ என்று தந்தை பெரியார் தலித்துக்களுக்கு அறிவுரை சொன்னார்.

அப்போதும் சரி அதன் பிறகும் சரி , இப்படி மலேயா போனவர்கள் அங்கே ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். சிலர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள். வேறு சிலர் தங்கள் மலேயா மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்கள். அவர்களை இங்கே இருக்கும் (முதல்) மனைவியும் மக்களும் ஏற்றுக்கொண்டனர். அத்தகைய உறவு இன்னும்கூட இருக்கிறது.

மொழி மாறுபட்டு இருந்தாலும், காலம் , சீதோஷ்ணம், கலாச்சாரம், பண்பாடு இவைகளில் ஓர் ஒற்றுமை இருந்தது. இப்போதும் அது இருக்கிறது. இத்தகைய கலாச்சாரப் பண்பு மலேயாவில் மட்டுமல்ல இந்தோனேசியா, சியாம், பர்மா, சைகோன்(வியட்னாம்) முதலான நாட்டிலும் இருந்தது. அதனால் அங்கு சென்றவர்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. அந்த நாட்டை இவர்கள் மதித்தார்கள், அந்த நாடும் இவர்களை மதித்தது. எனவே அந்த நாட்டைவிட்டு வர மனமில்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களைப் பொருத்தவரை அது சொர்க்க பூமி.

ஆனால் இதற்கு எல்லா வகையிலும் மாறுபட்டு, நேர் எதிராக இருப்பது அரபு நாடு. இங்கே வேலை தேடி வருபவர்கள் எத்தனை அல்லலுக்கு ஆளாகிறார்கள் என்று வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அதே நேரத்தில் , சிலர் உன்னதமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது. எவ்வளவுதான் உன்னதமாக இருந்தாலும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள்….. யாவரும் தாயகம் திரும்பியே ஆகவேண்டும். ’குல்லு நஃப்சுன் தாயிக்கத்துல் மௌத்’ (எல்லா உயிர்களும் மரணத்தை சுவைக்கக்கூடியதே) . இது இங்கே உள்ள சட்டம்.

அரபு நாடுகளுக்கு வேலை தேடி வந்து உன்னத நிலையில் இருப்பவர்களைச் சார்ந்து எத்தனையோ சினிமாக்கள் வந்துள்ளன ஆனால் அவை மனதைத் தொடுவதாக இல்லை. flourishing கற்பனையுடன் வந்து வேலை கிடைக்காமல், வேலை கிடைத்தும் சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டு அங்கேயும் சொத்துபத்தை இழந்து இங்கேயும் காசு கிடைக்காமல் பசிப் பட்டினியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதையுடன் வந்த சினிமாக்கள் சில மனதை உலுக்குகின்றன. அப்படி வந்த சினிமாக்களில் ஒன்றுதான் ‘கத்தாமா’ என்ற மலையாளப் படம்.

குடும்பச் சூழல் காரணமாக வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எத்தனை எத்தனைத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள், எவற்றையெல்லாம் சந்திக்கவேண்டி இருக்கிறது, தினம் தினம் எப்படி செத்துப் பிழைக்கிறார்கள், மெல்லமுடியாமலும் சொல்லமுடியாமலும் தொண்டையிலேயே நிற்கும் துன்பம் எப்படி வாட்டி வதைக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த படம். பல வருடங்களுக்கு முன்பு வந்த தமிழ் படம் ஒன்றில் (அரங்கேற்றம்) கதாநாயகி சூழலால் விலைமாதாக ஆகிவிடுவாள், இது தெரியாத பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது சொல்வாள் : ‘ஆம்பளை என்பதே மரத்துப்போச்சு’ என்று. அப்படிப்பட்ட ’கத்தாமா’க்கள் சிலருண்டு. அதே வீட்டில் வேலை பார்க்கும் ஆண் வேலையாட்களால் பதம் பார்க்கப்படும் கத்தாமக்களும் உண்டு.  கிடைக்கும் சம்பளம் போதாமல் வருமானத்தை உயர்த்தவேண்டி தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் கத்தாமக்களும் உண்டு. தன் முதலாளியின் நண்பர்களால் ’ரிங் டென்னிஸ்’ ஆடப்படும் கத்தாமக்களும் உண்டு. வீட்டு நிர்வாகத்தையே கவனித்துக்கொள்ளும் சில தூய்மையான கத்தாமக்களும் உண்டு. ஒரே வீட்டில் நீண்ட நாட்கள், பல வருடங்கள் வேலை பார்க்கும் கத்தாமக்களும் உண்டு. வந்த ஒரு சில மாதங்களில் திரும்பும் கத்தாமக்களும் உண்டு. ஆனால் ஒவ்வொரு கத்தாமாவின் பின்னாலும் ஒவ்வொரு வகையான சோகம் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அமைதியான குடும்பத்தில் துன்பம் நிகழ்கிறது.  தூரதிருஷ்டவசமாக கணவனை இழக்கிறாள்.  தாளாத தந்தை, எதிர்பார்க்கும் தங்கைகள், தலைக்குமேலான கடன் இவைகளின் நிர்ப்பந்தம்.  வேறு வழி தெரியாமல் அரபு நாட்டுக்கு வீட்டுவேலைக்குச் செல்கிறாள். சென்ற நாளிலிருந்து கொடுமை தாண்டவமாடுகிறது.  கூட வேலை செய்யும் இந்தோனேசிய வேலைக்காரப் பெண் செய்த தவறுக்கு இவளும் தண்டிக்கப்படுகிறாள். சித்திரவதை தாங்காமல் வீட்டைவிட்டு ஓடி சொல்லணா அவதிக்கு ஆளாகி சிறையில் அடைபட்டு பின் தாயகம் திரும்புகிறாள். இதுதான் கதை.  இதில் வரும் ஒவ்வொரு காட்சியும் மனதை உருக்குவதாக இருக்கிறது.  சொல்லப்படும் வசனங்கள்கூட மனதை நெருடுகிறது.

கத்தாமாக வரும் அஸ்வதியின் அவல நிலையை சாதகமாக்கி செய்தி வெளியிட துடிக்கும் பத்திரிக்கை ஆசிரியர் அஜித்தை, ’டையும் கட்டி ஏசி ரூமில் இருக்கும் உனக்கு வெளியே கஷ்டப்படுபவர்களின் முகம் தெரியாது. ஆனால் தினமும் அவர்களைக் காண்கின்ற எனக்குத் தெரியும். முதலில் நீ மனிதனாக ஆகு’ என்று ரசாக் சொல்லும் வார்த்தை மூன்றாம் தர பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு சாட்டையடி.

நகரத்தை விட்டு அதிக தூரத்திலுள்ள உள் கிராமங்களில் வேலை செய்யும் கத்தாமாக்கள் ஏர்போர்ட்டிலிருந்து அரபியின் வீட்டுக்குப் போகும்போது வழியில் காணும் காட்சிகள்தான் வெளிஉலகம். அதன் பிறகு திரும்ப தாயகம் போகும்போதுதான் உலகத்தையே பார்க்கமுடியும். அது ஒரு வகையான ஹவுஸ் அரஸ்ட். இப்போது ’மொபைல்’ இருப்பதினால் கொஞ்சம் நிம்மதி.

தன்னுடைய தாய் இறந்ததற்குகூட போகமுடியாத பொது சேவகர் ரசாக்கின் (சீனிவாசன்) பங்கு படத்திற்கு மெருகூட்டுகிறது. அஸ்சுவதியை காப்பாற்றப் போய் தானும் மாட்டிக்கொண்டு வெறுப்பிலிருந்த பரதனை, ’ஒரு வகையிலும் பயிரிடமுடியாத வரண்ட மணலிலும் ஆங்காங்கே சில செடிகள் பசுமையோடு இருப்பதைப் பார்க்கவில்லையா? சுட்டெரிக்கும்  பாலைவனத்து வெயிலை அந்தச் செடிகள் தோற்கடிப்பதைப் பார்க்கவில்லையா?” என்ற ஒரு சொல்லில் ரசாக் மாற்றுவது மனிதாபிமானத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.

கத்தாமாக்கள் ஒரு சிலரின் – இல்லை , பலரின் – உண்மையின் பிரதிபலிப்புதான் இந்தப் படம்.  ஒவ்வொருவரும் பார்ப்பது அவசியம். இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் கண்ணில் பட்டது இந்த வார ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கை. ‘சவுதியில் தவித்த தமிழர்களை மீட்ட த.மு.மு.க’ என்ற தலைப்பில் ஒரு செய்தி.  டிரைவர் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கியதையும் அவர்கள் இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்தும் பயனில்லாமல் ‘த.மு.மு.க’ முயன்று அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பியதையும் எழுதியிருந்தார்கள்.

கத்தாமாக்கள் மட்டுமல்ல ஆசையால் உந்தப்பட்டு அரபு நாடுகளை நோக்கி படை எடுக்கும் ஏழை தொழிலாளிகளுக்கு ஏற்படும் கதிகெட்ட நிலையும் கவலைக்குரியதுதான்.

வானத்தில் தெரியும் நிலாவுக்கும் சாக்கடையில் தெரியும் அதே நிலாவுக்குமுள்ள பாரதூரமான வித்தியாசம்தான் அரபு நாட்டு வாழ்க்கை. 1400 ஆண்டுகளுக்கு முன், வாப்பாவின் இரண்டாம் தாரத்தை தன் சொத்தாக பாவித்த அறிவீனர்களின் மத்தியில் மலர்ந்த மாணிக்கத்துக்கு (பெருமானார்) முழு வெற்றி இல்லை என சொல்லலாம்.

***

ஹமீது ஜாஃபர்

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

***

மேலும் பார்க்க… :

கத்தாமா (சினிமா) – விக்கிபீடியா | Gaddama – Review by  Unni

’கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!   (சிறுகதை) – வித்யாசாகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s