அறிவை மறைக்க விரும்பாத அறிஞர் : அல்-பைரூனி பற்றி ஹமீது ஜாஃபர்

நானாவும் எதையும் மறைக்க மாட்டார்!  சார்வாகனின் பதிவைப் பார்த்ததிலிருந்து அதுபோல் ஒன்று எழுதச்சொல்லி நச்சரித்ததற்கு நல்ல பலன். ஓரிருநாளிலேயே எழுதிமுடித்து அனுப்பி வைத்துவிட்டார் மனுசன் –  நிறைய தகவல்களுடன். நல்ல உழைப்பு. வாழ்க. ’அஹமியம்’ இணையதளத்தில் நானா எழுதிய ’ஷிப்லிபாவா வரலாறு’ம் இடம் பெற்றுள்ளது. ஆன்மீக நாட்டமுள்ள அன்பர்கள் (மட்டும்) வாசிக்கலாம்.  அருட் கொடையாளர்கள் வரிசையை அருமையாகவும் நிறைவாகவும் அவர் செய்யட்டும். ’ஃபத்வா ஃபாக்டரிகள்’ இப்போது பரவசப்படும் என்று நம்புகிறேன்.  தகவற்பிழை இருப்பின் தவறாது சு(ட்)டுங்கள். நன்றி. – ஆபிதீன்.

***

அருட் கொடையாளர்கள் – 1   

ஹமீது ஜாஃபர்

வித்தியாசமான தலைப்பு என்று நினைக்க வேண்டாம் ; சில வருடங்களுக்கு முன் , ‘சில மனிதர்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்த சாதனைகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பமும் செய்துவிட்டேன். போதுமான குறிப்புகள் கிடைக்காததினாலும், அவைகளை தேடி எடுக்க பொறுமை இல்லாததினாலும், சோம்பேறித்தனத்தினாலும் எழுதிய நோட்டை கிடப்பில் போட்டுவிட்டேன். உறங்கிக்கொண்டிருந்த நோட்டைத் தூசித் தட்டி உசுப்பியதன் பெருமை ஆபிதீனை சாரும்.

எப்போதுமே அவரிடமிருந்து திடீர் கேள்விதான் வரும். அதுபோல்தான் இதையும் கேட்டார். “நானா , காம்பஸைக் கண்டுபிடிச்சவர் யார்? இதில் அரபிகளுடைய பங்கு நிறைய இருக்கிதாம், கொஞ்சம் பாருங்க” என்றார். விளைவு நோக்குவார்க்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுள்?. திசை காட்டும் கருவியை கி.மு. 247 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். இதில் அரபிகளின் பங்கு என்ன? விடவில்லை , ஏற்கனவே எடுத்து, குப்பையில் போட்டிருந்த குறிப்பைத் தேடினேன். பலன் கிடைத்தது. ‘Bayrooni discovered seven distinct methods of finding the direction of the North and South, and constructed mathematical techinques to determine the exact time of the commencement of the seasons’ என்ற குறிப்பு அதில் இருந்தது. ஆபிதீனின் கேள்வியால் ஆர்வம் உந்த இன்னும் தேடினேன். அள்ள அள்ளக் கிடைத்தன. அள்ளுவதற்குத்தான் பாத்திரம் இல்லை. அவரைப் பற்றி அவ்வளவு செய்திகள். அதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய ஆராய்ச்சியாளனுமல்ல, சரித்திர ஆசிரியனுமல்ல. ஒன்றும் தெரியாத சாதாரண குப்பை நான். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இதுவே முழு செய்தி அல்ல. இன்னும், இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன, விரிவான செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை தேடிக்கொள்வது ஆர்வமுள்ளவர்களின் பொறுப்பு.

சரித்திரம் படைத்தவர்கள் அனேகர் இருக்கலாம் ஆனால் மனித சமுதாயத்துக்கு காலங்காலமாக பயனுள்ள வகையில் தங்கள் சாதனைகளைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அந்த சிலர் யார் என்று தெரியாத வகையில் காலம் மறைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் மறந்திருக்கிறோம். சாதனைகள் படைத்த மேற்கத்தியவர்களையே பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கும் நாம் மத்திய கிழக்கில் உள்ளவர்களையோ அல்லது கிழக்கில் உள்ளவர்களையோ கண்டுகொள்வதில்லை. அறிவியல், கணிதம், மருத்துவம், வானவியல், உளவியல் இவைகளின் தந்தையர்களை இஸ்லாம் தந்திருக்கிறது என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை நினைவுகூறத்தான் இது. எனவே அவர்களைப் பற்றிய நான் அறிந்த செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன்.

அல்  பைரூனி (973 – 1048)

பிறப்பு: 4 or 15 Sep 973 in Kath, Khwarazm (now Khiva, Uzbekistan)
இறப்பு: 13 Dec 1048 in Ghazna (now Ghazni, Afganistan)
முழு பெயர்: அபு ரய்ஹான் முஹம்மது இப்னு அஹ்மது அல் பைரூனி

இன்று உஸ்பெகிஸ்தானில் ஒரு பகுதியும் டர்க்மெனிஸ்தானில் ஒரு பகுதியுமாக இருக்கிறது குவார்ஜம் அல்லது கொரஸ்மியா பகுதி. உஸ்பெகிஸ்தானிலுள்ள  குவார்ஜமில் கேத்(Kath) எனும் பட்டணத்தின் புறநகரில் பிறந்தார். பைரூன் என்றால் பாரஸீக மொழியில் புறநகர் என்று பொருள். பிறந்த இடத்தை பெயருடன் இணைத்து அழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே அவருடைய பெயராகிவிட்டது. அவர் பிறந்த நகரத்தை இன்று பைரூனி என்று அழைக்கப்படுகிறது.

தன்னுடைய இளமைப் பருவத்திலேயே கல்வியில் ஆர்வம் கொண்ட அவர் ஏறக்குறைய இருபத்தைந்தாண்டு காலம் குவார்ஜம்மில் ‘அல் உலுமுல் அரபியா’ என்று சொல்லப்படும் ஃபிக்ஹ், இஸ்லாமிய அறிவு, அரபி இலக்கணம் முதலியவைகளை கற்றதோடு நில்லாமல் ‘அல் உலூமுல் அஜமியா’ எனும் அரபியல்லாத கிரேக்க ஞானம், கணிதம், வானவியல், மருத்துவம் முதலான கல்வியை புகழ் பெற்ற வானவியல் கணிதவியல் நிபுணரான அபு நாசர் மன்சூர் (அபு நாசர் ஜிலானி என்று சிலர் சொல்கின்றார்கள்) என்பவரிடம் பயின்றதாக சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இரண்டு கல்விகளையும் சமகாலத்தில் பயின்றதாகவே ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இவர் அரபி, ஃபார்ஸி, சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், சிரியாக் முதலான மொழிகளில் பாண்டித்துவம் பெற்றிருந்ததோடு பல கலைகளில் தலை சிறந்த மேதையாகவும் விளங்கினார். தன்னுடைய பதினேழாம் வயதில் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர் தன்னுடைய கேத் நகரத்தின் அட்ச ரேகையை (Latitude) கண்டுபிடித்தார். 995 ல் தன்னுடைய 22 ம் வயதில் ஏற்கனவே பல ஆய்வாளர்களால் கண்டுபிடித்த உலக வரைபடங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் ஒரு பகுதியின் வரை படத்தை உருவாக்கினார். He described his own projection of hemisphere onto plan என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அது southern hemisphere or northern hemisphere என்ற விபரமில்லை. அவர்  முதன் முதலில் பூமியின் ஆரத்தை எளிதாக கணக்கிடும் முறையை உருவாக்கினார். இது சிறிது மாற்றங்களுடன் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. (பார்க்க யுடியூப்)

அல் பைருனியின் செயல் முறை :

மலையின் உயரத்தை அளத்தல்

1. இதற்கு ஒரு கடல் அருகில் உள்ள ஒரு மலை அடிவாரத்தில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து கோணமாணியின் மூலம் மலை உச்சி வரையிலான கோணத்தை அளக்கவேண்டும்(Ø1).
2. பின் சற்று தூரம் சென்று மீண்டும் மலை உச்சி வரையிலான கோணத்தை அளக்கவேண்டும் (Ø2).
3. முதல் இடத்துக்கும் இரண்டாவது இடத்துக்குமுள்ள தூரத்தை(d) சரியாக அளந்துக்கொள்ளவேண்டும்.  அவை இரண்டும் நேர்கோட்டிலும் இருக்கவேண்டும்.
4. ட்ரிக்னாமெட்ரிக், அல்ஜிப்ரா மூலம் மலையின் உயரத்தை(h) அளக்கவேண்டும்(h=(d tanØ1 tanØ2)/( tanØ2- tanØ1)இப்போது மலையின் உயரம் கிடைத்துவிடும்.
5. பின் மலையுச்சிக்கு சென்று  கடலும் வானமும்(Horizon) சந்திக்கும் இடத்தின் கோணத்தை அளக்க வேண்டும்.
6. மலையின் உச்சி, தொடுவானம், பூமியின் மையம் இவை மூன்றையும் இணைத்து ஒரு செங்குத்து முக்கோணம்(90°tri angle) வரையவேண்டும்.
7. ட்ரிக்னாமெட்ரிக்(trigonometric) முறைபடி மலையின் உயரம், பூமியின் ஆரத்தினோடு தொடர்பு உள்ளதை காண்பிக்கும். இப்போது அல்ஜிப்ராவை உபயோகித்து ஆரத்தைக் கணக்கிடமுடியும் R=(h cosØ)/(1-cosØ). இதை வைத்து பூமியின் சுற்றளவை மிகத் துள்ளியமாக கணக்கிட்டார்.

பூமியின் ஆரத்தைக் கண்டறிதல் (c மஞ்சள் கட்டம் இரு இடங்களின் தேர்வு (Ø1& Ø2))

தன்னுடைய இளம் வயதிலேயே இப்னு சினாவுடன் தொடர்பு வைத்திருந்து கருத்து பறிமாற்றங்கள் செய்திருக்கிறார்கள். 10 ம் நூற்றாண்டின் இறுதியிலும் 11 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பைரூனிக்கு சோதனைக் காலமாக அமைந்திருந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் கலவரம், பிற மன்னர்களின் படை எடுப்புக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டார். குவார்ஜம்மின் ஆட்சியாளரான பனு ஈராக் கவிழ்ந்தபின் இளவரசரும் ஆசிரியருமான அபு நாசர் மன்சூர் என்ன ஆனார் என்ற விபரம் பைரூனிக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த நெருக்கடியான சூழலில்  பைரூனி ரேய்(Rayy) இப்போதைய டெஹ்ரானுக்குச்  சென்று சில வருட காலம் அங்கு வாழ்ந்து பின் தன் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். ரேய்யில் வாழ்ந்த காலம் தனக்கு மிகவும் சோதனைகள் நிறைந்திருந்தது, அங்கு தன்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை, வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றதாக குறிப்பிடுகிறார்.

அப்போதும் தன் ஆய்வை விடவில்லை. அப்போது ரேய்யில் வாழ்ந்த குஜாண்டி(Khujandi) என்பவர் ரேய் மலை மீது வான் ஆய்வகம் (observatory) ஒன்றை அமைத்து மிகப்பெரிய கருவிகளைக் கொண்டு ஜூன் 994-ல் summer solestice டிசம்பரில் winter solestice ஆரய்ந்து கிரகணங்கள் நிகழ்வை முன்கூட்டியே கணக்கிட்டார்.  அதில் சில தவறுகள் இருப்பதை பைரூனி பின்னர் சுட்டிக்காட்டினார். 995 முதல் 997 வரை ரேய்யில் காலங்கழித்துவிட்டு பின் காஸ்பியன் நகரமான ஜிலான்(ஜைலானி) நகருக்கு சென்றார். அங்கு ஆட்சிபுரிந்த  இப்னு ருஷ்தத்தின் ஆதரவோடு தன் ஆராய்ச்சியை தொடர்ந்தார். சந்திர கிரகணம் நிகழப்போவதையும் அது ’கேத்’திலிருந்து ’பாக்தாத்’ வரை தெரியும் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்.  கி.பி 1000-த்தில் பல பாகங்களுக்கும் பயணம் செய்து ஆராய்ந்தார். அதே ஆண்டு குர்கான்(Gurgan) என்ற நகரில் தங்கி மன்னர் கபூஸின் ஆதரவுடன் ஆய்வுகள் பல நடத்தினார். காலமாணியை உருவாக்கி நன்றிக்கடனாக மன்னர் கபூஸுக்கு சமர்ப்பித்தார். பண்டைய பாரசீகர்கள், யூதர்கள், சிரியர்கள், ஹரானியர்கள், அரபியர்கள், கிரேக்கர்கள் உபயோகித்த காலண்டர்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார், ஆனால் இந்திய காலண்டரை விவரிக்கவில்லை. காரணம் அந்த சமயம் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் இந்த படைப்பு காலண்டரின் கலைக் களஞ்சியமாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பின்னத்தைப்( decimal system) பற்றி ஒரு புத்தகம், உயரத்தை (altitude) அளக்கும் astrolabe பற்றி ஒரு புத்தகம், வான் ஆராய்ச்சி பற்றி ஒன்றும், சோதிடம் பற்றி மூன்றும், சரித்திரம் பற்றி இரண்டு புத்தகங்களும் எழுதியிருந்தார். 

1004 ல் பைரூனி தன் சொந்த நாட்டுக்குத் திரும்பியபோது அங்கு மஃமூன் சகோதரர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய அரசவையில் விஞ்ஞானிகளுக்கு தனி மதிப்பு கொடுக்கப்பட்டது. பல விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை நடத்தி வந்தனர். பைரூனியின் ஆசிரியர் அபு நாசர் மன்சூரும் அவர்களில் ஒருவராக இருந்தார். மஃமூன் சகோதரர்களின் ஆதரவு பைரூனிக்கு உதவியாக இருந்தது. அப்போது அவர் ஜர்ஜானியாவில் ஒரு கருவியை உண்டாக்கி 1016 ஜூன் 7 முதல் டிசம்பர் 7 வரை ஆறு மாத காலம் சூரியன் தீர்க்க ரேகையை(Meridian) கடப்பதை பற்றி பதினைந்து முறை ஆராய்ந்தார்.

மஃமூன் சகோதரர்கள் இருவரும் கஜ்னாவை(Ghazna) ஆண்ட சுல்தான் மஹ்மூது (கஜ்னி முஹம்மது) வின் சகோதரிகளைத் திருமணம் முடித்திருந்தார்கள். அது, கஜ்னி தன் ஆட்சியை கேத் வரை விரிவு படுத்துவது எளிதாக இருந்தது. சொந்த ராணுவத்தால் மஃமூன் கொல்லப்பட்டபிறகு பைரூனியும் அவர் ஆசிரியர் அபு நாசர் மன்சூரும் கஜ்னி முகம்மதுவால் தன் சொந்த நாடான கஜ்னாவுக்கு கைதிகளைப்போல் அழைத்துச் செல்லப்பட்டனர் J.J.O’Connor and E.F Robertson குறிப்பிடுகிறார். ஆனால் மஹ்மூது (கஜ்னி) மஃமூன் மீது பொறாமைக் கொண்டு அவரிடம் இருந்த அனைத்து விஞ்ஞானிகளையும் தன்னிடம் அனுப்பி வைக்கவேண்டும் என்று மிரட்டினார். அதனால் இபுன் சீனா, அபு சாஹல் ஈசா மஸிஹி ஆகியோர் மேற்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். ஆனால் பைரூனி, அபு நாசர் மன்சூர், அபுல் கைர் கம்மார் ஆகியோர் கஜ்னா சென்று சுல்தான் மஹ்மூது அரசவையில் பணியாற்றினர். பைரூனி தன் எஞ்சிய காலம் வரை சுல்தான் மஹ்மூது (கஜ்னி), அவர் மகன் மசூது, பின் பேரன் மவ்தூத் ஆகியோர் அரசவையில் பணியாற்றியதாக பல்காகோவ் குறிப்பிடுகிறார்.

சுல்தான் மஹ்மூது பைரூனி மீது ஆரம்பத்தில் பொறாமை கொண்டிருந்தாலும் பின்னர் ஆதரவு அளித்தார். ஆனால் பைரூனி குறித்து வைத்திருந்த வின்னக நிகழ்வுகளை திருத்தி அமைத்தார். பைரூனியை சுதந்திரமாக செயல்பட விடாமல் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். 1026 ல் இந்தியா மீது படை எடுத்தபோது கூடவே பைரூனியையும் அழைத்துச் சென்றார். இந்தியா மீது கஜ்னி பதினேழு முறை படை எடுத்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் பைரூனியை எத்தனை முறை அழைத்துச் சென்றார் என்ற குறிப்பு இல்லை.

1030 ல் சுல்தான் மஹ்மூது(கஜ்னி முகம்மது) இறந்தபின் அவர் மகன் மசூது ஆட்சி பொறுப்பை ஏற்றார். தன் தந்தையைப் போல் இல்லாமல் பைரூனிக்கு முழு சுதந்திரம் அளித்தார். இது அவருடைய ஆய்வுகளுக்கு பெரும் துணையாக இருந்தது மட்டுமல்ல உத்வேகம் பெற்று பெரும்

சாதனைப் படைத்தார் என சொல்லலாம். தனக்கு பெரும் ஆதரவளித்த சுல்தான் மசூதுக்கு நன்றிக்கடனாக  ‘அல் கானூன் அல் மசூதி ஃபில் ஹையா வல் நுஜும்’ (Masudic canon of astronomy) என்ற புத்தகம் பிரசித்தி வாய்ந்த புத்தகத்தை எழுதினார். பதினோரு பாகங்கள் அடங்கிய  அப்புத்தகம் ஒவ்வொரு பாகமும் ஏழு அத்தியாயங்களையும் சில அதற்கு மேலும் கொண்டது. முதல் பாகத்தில் அறிமுகம், வானசாஸ்திரம், பிரபஞ்சம், நேரம், இடைவெளி (space) இவைகளைப் பற்றியது. இரண்டாம் பாகம் ஹிஜ்ரி, கிரேக்கம் மற்றும் பாரசீக காலண்டரைப் பற்றிய விளக்கம். மூன்றாம் பாகம் கோணவியல் (trigonometry). நான்காம் பாகம்  special astronomy. ஐந்தாம் பாகம் புவிப்புறவியல் ( geodesy), புவி இயல் கணிதம்( mathenatical geography). ஆறாம் பாகம் நேர வித்தியாசம், சூரியனின் நகர்வு(solar motion). ஏழாம் பாகம் சந்திரனின் சுழற்சி. எட்டாம் பாகம் கிரகணம் மற்றும் பிறையின் தோற்ற நேரம். ஒன்பதாம் பாகம் நிலையான நட்சத்திரங்கள் (stable stars). பத்தாம் பாகம் மற்ற கிரகங்கள். பதினொன்றாம் பாகம் சோதிட செயல்முறை விளக்கம்(Astrological operations) என வரிசைப் படுத்தி எழுதியுள்ளார். 1040 ல் மசூது கொல்லப்பட்டபிறகு அவர் மகன் மவ்தூது அரசரானார். அப்போது பைரூனிக்கு முதுமை அடைந்தார். முதிர்ந்த வயதிலும் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து வந்தார்.

கணிதம் மற்றும் வானவியல்

146 புத்தகங்களில் 95 புத்தகங்கள் பைரூனி கைபட எழுதியவை. அவற்றில் பெரும்பாலும் வானவியல், கணிதம், புவி இயல் கணிதம் சார்ந்ததாகவே இருந்தது. கணிதவியலில் விளக்கத்தைவிட அதில் எழுந்த கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் மிகவு ஆர்வம் கொண்டிருந்தார். வானவியலில் ஆய்வு சம்பந்தமாக பலருடன் கலந்தாய்வு நடத்தி அவை பற்றி விளக்கம் அளிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

கணிதவியலில் அல்ஜிப்ரா பற்றியோ அல்லது ஜியாமெண்ட்ரி பற்றியோ விளக்கங்கள் எழுதவில்லை, தவிர பொது கணிதத்திலும் (arithmetic) கவனம் செலுத்தவில்லை.  மாறாக வானசாத்திரத்தில் கோணவியலின் செயல்பாட்டைப் (trigonometric function) புகுத்தி புதுமை செய்தார். சூரியனின் சுழற்சியையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் அறிந்தார். ‘கித்தாப் மக்காலித் இல்ம் அல் ஹையா(Compendium on astronomy)  என்ற புத்தகத்தில் கோள வடிவ கோணவியல் கணிதத்தை (spherical trigonometry) வானசாத்திரத்தில் பயன்படுத்தும் முறையையும் அதில் ஏற்படும் சிக்கல்களையும் அவற்றை நிவர்த்திபடுத்தும் முறையையும் எழுதியுள்ளார். ‘கித்தாப் ஃபி இஃப்ராத் அல் மக்கால் ஃபி அம்ரு அல் ஜிலால்’ (exhaustive treatise of shadow) என்ற புத்தகத்தில் கோணவியலைப் (trigonometry) பயன்படுத்தி தொழுகை நேரத்தையும் கிப்லாவின் திசையையும் கணக்கிடும் முறையையும் விளக்கியுள்ளார். பூகோள கணிதத்தில் புதிய உக்தியைக் கையாண்டு இரண்டு நகரங்களுக்கான தீர்க்கரேகையை கணக்கிடும் முறையை கண்டுபிடித்தார். அம்முறையில் பாக்தாதுக்கும் கஜ்னாவுக்கும் 24;20° வித்தியாசம் இருப்பதை கண்டறிந்தார். அவ்விரு நகரங்களுக்கும் இப்போதைய நவீன முறையில் 18 மினிட்( ஒரு டிக்ரியை  அறுபதாகப் பிரித்து அதில் பதினெட்டு பாகம், அதாவது 24;20°:18′:00” ) வித்தியாசமே உள்ளது. அல் கானூன் அல் மஸூதி (al qanun al masudi) என்ற புத்தகத்தில் கிரேக்க ஞானி தாலமியின் புவி இயலைச் சார்ந்து இன்னும் தெளிவான கருத்தை தெரிவிக்கும் பைரூனி, படிமங்கள், கடல் சிப்பிகள், படிம அடுக்குகளை மிக கவனமாக ஆராய்ந்து சீதோஷ்ணம் மற்றும் நில பரப்பின் மாற்றங்களை கண்டறிந்தார்.

சந்திரக் கிரகணம் பற்றி பைரூனியின் வரை படம்

இந்தியாவில் பைரூனி

சுல்தான் மஹ்மூது (கஜ்னி முகம்மது) உடன் வந்து இந்தியாவில் தங்கி இருந்த காலத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்று பாதஞ்சலி யோகசூத்ரா என்ற சமஸ்கிருத புத்தகத்தை ’கித்தாப் பாதஞ்சல்’ என்ற பெயரில் அரபியில் மொழி பெயர்த்தார். ‘கித்தாப் தஹ்கிக் மஆலில் ஹிந்த் மின் மகூலா மக்பூலா ஃபில் அக்ல் அவ் மர்தூலா’ (The book confirming what pertains to India, wether rational or despicable) இந்தியாவில் இருந்த ஜாதி வேறுபாட்டினையும் உயர் ஜாதிக்காரர்களால் தலித்துக்கள் கொடுமைப் படுத்தப்பட்டதையும் விவரித்திருக்கிறார்.  இந்தியாவில் பல பாகங்களுக்குச் சென்று அந்தந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, திருமண உறவுகள், உணவு என அனைத்தையும் விவரித்திருக்கிறார். பல பண்டிதர்களை சந்தித்து நடைமுறையில் இருந்த வானசாஸ்த்திரம், சோதிடம், கணிதம் முதலியவற்றை தெரிந்துக்கொண்டார். ஒரு பக்கம் கடுமையாக சாடியும் மறுபக்கம் பரிவும் காட்டும் பைரூனி, இந்தியாவைப் பற்றி இருவகை மனப்பாண்மை கொண்டிருந்தது தெரியவருகிறது.

’கித்தாப் பாதஞ்சல்’-ஐ மூலத்தில் உள்ளதுபோல் நான்கு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். முதல் பாகத்தில் கேள்வி பதில் ரூபத்தில் விளக்கம் ஆரம்பித்து மனக்கட்டுப்பாட்டை(mind control) சொல்கிறது. அப்பியாசம், வைராக்கியம், பக்தி என முறையே தஃவீது, அல் ஜொஹத் அல் ஃபிக்கர், இபாதத் என மூன்றாக பிரித்து சொல்லப்படும் இந்நிலை பகவத் கீதையில் கர்ம யோகா, ஜனன யோகா, பக்தி யோகா என விவரித்து சொல்லப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாகங்களில் தன்னை உணருதல் (Introspection) பற்றி விரிவாக்கமும், அஷ்டாங்க யோகா நிலைகளையும், மூச்சுப் பயிற்சி(ப்ராணா)யும் சித்தி (அஜாயிபு அல் அஃப் ஆல்) பற்றியும் விளக்கியுள்ளார். மொத்தத்தில் இது மூலதத்துவத்தைப் பற்றி விளக்கும் நூல் என்றாலும் இந்திய ஞானத்திலும் கிரேக்க ஞானத்திலும் சூஃபித்துவத்திலும் ஒற்றுமை இருப்பதை காணமுடிகிறது.

பைரூனியின் சோதிடக் கலை

1017ம் ஆண்டு சுல்தான் மஹ்மூதால் (கஜ்னி முகம்மது) அழைத்துச் செல்லப்பட்ட குவார்ஜம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரைஹானா என்ற பெண்ணிற்காக ‘தஃப்ஹிம்’ என்று சுருக்கமாக சொல்லப்படும் ‘கித்தாப் அல் தஃப்ஹிம் லி அவாயில் சினாஅத் அல் தன்ஜிம்’ (the Book of Instructions in the Elements of the Art of Astrology) என்ற புத்தகத்தை எழுதினார். அதை ஐந்து பாகமாகப் பிரித்து முதல் பாகத்தில் பெரு வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றி எழுதியுள்ளார். இரண்டாம் பாகத்தில் அரசியல் சம்பந்தமானது, இதில் அரசர்களின் உயர்வும் வீழ்ச்சியும், சண்டை, புரட்சி பற்றி எழுதியுள்ளார். மூன்றாம் பாகத்தில் தனி மனிதனின் வாழ்க்கை ஏற்றத்தாழ்வு, பரம்பரை இவைகளைப் பற்றியது. நான்காம் பாகத்தில் சமுதாயத்தின் நிலைபாடு, தொழில் முதலானவற்றை குறிக்கிறது. ஐந்தாம் பாகம் பயங்கரங்கள் அத்துமீறல்கள் பற்றி கூறுகிறது. என்றாலும் இதில் சோதிடர்கள் ஒருபக்கமும் மந்திரவாதிகள் மறுபக்கமும் நிற்கிறார்கள்.

இந்தியாவில் சோதிடக்கலையில் பெரும்பாலும் பிரம்மகுப்தாவின் சோதிடத்தை மேற்கோள் காட்டுகிறார். பிரம்மகுப்தாவின் ‘பிரம்மகுப்தா சித்தாடந்தம்’ என்ற புத்தகத்தை முழுமையாக அரபியில் மொழிபெயர்ப்பு செய்யமுடியாவிட்டாலும் அதிலுள்ள அம்சங்களை (table of contents) அரபியில் எழுதியுள்ளார்.

கிரேக்கம், பாரசீகம், இந்தியா ஆகிய மூன்று நாட்டிலிருந்து சோதிடக்கலை அரபு நாட்டில் நுழைந்தது. கி.பி 770 ல் சித்தாந்தா என்ற சோதிடப் புத்தகம் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் கிரேக்க சோதிடக் கலை அரபு கலைக்கு முக்கிய பங்கு அளித்தது. பைரூனி, இந்திய கலையுடன் அரபி கலையை ஒப்பிட்டுப் பார்க்கிறார். தன்னுடைய பிறப்பை கணித்து கூறும்போது செப்டம்பர் 4 என்று வருகிறது ஆனால் சில ஆய்வாளர்கள் செப்டம்பர் 5 என்றும், சிலர் 15 என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பைரூனி பிறந்த ஜாதகம்

மருந்தும் கனிமமும்

மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர் தாவரங்களின் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும், மருந்து செய்யும் முறையையும் விளக்கியதோடல்லாமல் அவற்றை வரிசையப்படுத்தி ‘கித்தாப் அல் சைதலியா’ (Book of medicine) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் மருந்தின் வகை(dawa), விஷம்(somun), உணவு வகைகள்(agdia), ஒவ்வாமை(hadf), மாற்று மருந்து(tabdil) முதலியவற்றை குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய 1197 வகையான மருந்துக்கள் பற்றி எழுதியுள்ளார். இவருடைய இப் புத்தகம் பார்சி மொழியில் மொழி பெயற்கப்பட்டு கிடைத்துவந்தது. ஆனால் அரபியில் எழுதப்பட்ட மூல புத்தகம்(கையெழுத்துப் பிரதி) 1926ல் பஸராவில் Velidi Togan என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு ஹக்கிம் முஹம்மது சயீது (Hamdard National Foundation, Karachi) என்பவரால் ஆங்கிலத்தில் 1973 ம் ஆண்டு மொழிபெயர்கப் பட்டுள்ளது.

கித்தாப் அல் ஜமாஹிர் ஃபி மஅரிஃபத்துல் ஜவாஹிர்(The sum knowledge of precious stones) என்ற புத்தகத்தில் வைரம், வைடூரியம், கோமேதகம், முத்து என பதினெட்டு வகையான கற்களின் specific gravity யை முதன்முதலில் கண்டறிந்து அவற்றின் தன்மைகளை விளக்கியுள்ளார்.  இந்த புத்தகத்தின் பல பகுதிகளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்திருந்தாலும் முழு புத்தகத்தையும் ரஷ்ய மொழியில் 1968 ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு கிரேக்க, அரேபிய அறிஞர்களின் ஆய்வுகளையும் அரேபிய பாரசீக புலவர்களின் மேற்கோள்களையும் ஆதாரமாக வைத்து கனிமங்களை ஆய்வு செய்தார். ரசவாதத்தை மறுத்த அவர் இயற்கையாக உலோகம் படிப்படியாக தங்கமாக மாறுவதை ஏற்கிறார்.  குடுவை போன்று ஒரு உபகரணத்தை உருவாக்கி சில உலோகம் மற்றும் கனிமங்களின் specific gravity யைக் கண்டுபிடித்தார். Specific gravity of Gold at 19.0 (actually 19.3); Specific gravity of Iron at 7.92 (actualluy 7.9).

மதம்

பைரூனி ஷியா பிரிவை சேர்ந்தவர் என்று encyclopedia britannica கூறுகிறது. ஆனால் அவர் இஸ்லாத்தில் எதை சார்ந்திருந்தார் என்ற தெளிவில்லை என்று  encyclopedia iranica கூறுகிறது. ஆனால் அவர் எழுதிய சில புத்தகங்களில் ஈரானிய மதத்தைத் தழுவி கிருஸ்துவத்தையும் ஜூடாயிஸத்தையும், இந்திய மதங்களைப் பற்றியும் வாதிக்கிறார். ஷியாக்கள் மிக விஷேசமாகக் கொண்டாடும் ‘ஆஷுராவுக்கும் ,   ghadir khomm غدير خم க்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவர் ஷியாவில் ஜைதி பிரிவை ஆதரிக்கவில்லை. பெருமானார் அவர்கள் குடும்பத்தையும் அலி(ரலி) அவர்களையும் சிலாகித்து சொல்கிறார். ஹஜ்ரத் அபூபக்கர்(ரலி), ஹஜ்ரத் உமர்(ரலி), ஹஜ்ரத் உதுமான்(ரலி), ஹஜ்ரத் அலி(ரலி), ஹஜ்ரத் ஹஸன்(ரலி) ஆகிய ஐவரையும் கலிஃபாக்களாக ஏற்றுகொள்ளும் அதே சமயம் உமையாக்களை அரசர்கள் என்றும் அப்பாஸியர்களை இமாம்கள் என்றும் ‘கித்தாப் அல் அத்தார்’ல் குறிப்பிடுகிறார். எனவே அவர் ஷியா முஸ்லிம் என்று உறுதிப்படுத்த முடிகிறது என்றாலும் சுல்தான் மஹ்மூதுவால் (கஜ்னி முகம்மது) கஜ்னாவுக்கு அழைத்துச் சென்ற பிறகு ஷியா வகுப்பின் மீது இருந்த பற்று குறைந்தது ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம்  சுல்தான் மஹ்மூது(கஜ்னி முகம்மது) தீவிர ஸுன்னி பிரிவை சேர்ந்தவர். ஷியாப் பிரிவை சார்ந்தவர்கள் வெள்ளைக் கல் மோதிரமும் ஸுன்னி பிரிவை சார்ந்தவர்கள் கருப்புக் கல் மோதிரமும் அணியவேண்டும் என்று  குறிப்பிடும் பைரூனி  தன் கையில் இரண்டு வகை மோதிரங்களையும் அணிந்திருந்ததாக ‘கித்தாப் அல் ஜமாஹர் ஃபி மஆ ரிஃபத்துல் ஜவாஹரில்’(Book of the sum of knowedge and precious stones) குறிப்பிடுகிறார்.

பெருமானார் மீது மாறாத அன்பு வைத்திருந்த அவர் தொழுகை நேரங்களைப் பற்றி விவாதிக்கும்போது ஹஜ்ரத் உமர்(ரலி) மற்றும் இமாம் ஜாபர் சாதிக்(ரலி) அவர்களை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார். மற்ற மதங்களை மதிக்கும் அவர் இஸ்லாமியர்கள் வேற்று மதங்கள்மீது வெறுப்புக்கொள்வதை கடுமையாகச் சாடுகிறார். இந்து மதத்தில் சொல்லப்படும் ‘ஓம்’ என்ற வார்த்தையையும் இஸ்லாத்தின் ‘பிஸ்மில்லாஹ்’வையும்  இறைவனை அழைக்குக்கும் ஒப்பிடமுடியாத வார்த்தைகள் என்கிறார். பௌத்தம், கிருஸ்துவம், யூதம், ஜொராஸ்ட்ரம் என பல மதங்களை ஆய்வு செய்த பைரூனி சூஃபிஸத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இறுதி நாட்கள்

இந்தியாவில் இருந்த பைரூனி எப்போது கஜ்னாவுக்கு சென்றார் என்ற விபரமில்ல. நீதிபதி அல் ஜஸபூரி என்பவர் சொல்கிறார், “நான், அபு ரைஹான் முஹம்மது மரணப் படுக்கையில் இருந்த சமயம் பார்க்கச் சென்றேன், அப்போது என்னிடம் கேட்டார், “ஒரு நாள் ஒரு விஷயமாக முன்பு என்னிடம் கேட்டீரே அதை இப்போது சொல்லட்டுமா?”.  நான் கேட்டேன் “இந்த சூழ்நிலையிலா சொல்ல ஆசைப் படுகிறீர்?” என்று. “அறிவை மறைத்த குற்றத்துக்கு ஆளாக விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டு அதை விளக்கினார். அவர் சொன்னது என்னை சிந்திக்க வைத்தது. அந்த விளக்கத்தின் பிரமிப்பு நீங்காமல் அவரிடம் விடை பெற்று வெளியே வந்தபோது வீட்டினுள்ளே அழுகை சத்தம் கேட்டது, மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை என்னிடம் சொன்னார்கள் ” என்கிறார்

மரணத்தின் எல்லை வரை   அறிவுக்காக பாடுபட்டு அறிய கண்டுபிடிப்புகள் பலவற்றை இவ்வுலகுக்கு அளித்த இந்தப் பல்கலை வித்தகர் விட்டுச் சென்ற சாதனைகள் இன்னும் நம்மை வழிநடத்துகின்றன.

***

Sources :

http://www.youtube.com/watch?v=MfIUO4SP3oQ

http://www.youtube.com/watch?v=6gpENYL3mvk&feature=related

http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=135373

http://saarvaakan.blogspot.com/2011/02/blog-post.html

http://en.wikipedia.org/wiki/Ab%C5%AB_Ray%E1%B8%A5%C4%81n_al-B%C4%ABr%C5%ABn%C4%AB

http://en.wikipedia.org/wiki/Spherical_Earth

http://en.wikipedia.org/wiki/File:Lunar_eclipse_al-Biruni.jpg

http://islamsci.mcgill.ca/RASI/BEA/Biruni_BEA.htm

http://www.renaissanceastrology.com/albiruni.html

http://www.skyscript.co.uk/albiruni.html 

http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Al-Biruni.html

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-i-life

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-iii

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-iv

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-v

http://iranica.com/articles/biruni-abu-rayhan-vi

http://iranica.com/articles/biruni-abu-rayhan-vii

http://iranica.com/articles/biruni-abu-rayhan-viii

http://unesdoc.unesco.org/images/0007/000748/074875eo.pdf

***

ஹமீது ஜாஃபர்

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

7 பின்னூட்டங்கள்

 1. 28/07/2011 இல் 11:41

  அபாரமான உழைப்பு. தகவல்களுக்கு நன்றி நானா!

 2. 28/07/2011 இல் 14:41

  //விளைவு நோக்குவார்க்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுள்?.//
  கூகிளைப் பெண்ணாக வர்ணித்ததன் விளைவோ என்னவோ நிறையவே அள்ளியிருக்கிறீர்கள் நானா 🙂
  அருமையான அபாரமான தகவல்கள். மிக்க நன்றிகள்
  இனி நீங்களும் Phd டாக்டர்தான் போங்க‌ 🙂

 3. தாஜ் said,

  28/07/2011 இல் 15:59

  பாராட்டத் தகுந்தப் பதிவு.
  -தாஜ்

 4. maleek said,

  28/07/2011 இல் 18:02

  மஞ்சக்கொல்லையில் ஓர் புதையல்!

 5. 29/07/2011 இல் 02:36

  ஆதாரபூர்வமான தகவல் களஞ்சியம்
  நல்ல பதிவு நானா

 6. 29/07/2012 இல் 13:07

  பிர்தவ்ஸ் ராஜகுமாரன்.
  மிக நல்ல பதிவு .தகவல்களுக்கு நன்றி நானா!

 7. kulachal yoosuf said,

  22/06/2013 இல் 13:44

  ஆபிதீனின் ’எதையும் மறைக்காத நானா’ என்பதை வாசித்த போது திகம்பர நினைவு வந்ததற்கு நான் காரணமில்லை. கூகுளைப் பெண்பாலாகப் பார்த்தற்கும் இதற்குமான தொடர்பைக் கட்டுடைத்தும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தலாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s