மாத்தி யோசிக்க வேண்டி…. – நூருல் அமீன்

உலகத்தமிழ் இலக்கிய மாநாடு பற்றி நண்பர் தாஜ் எழுதியதைத் தொடர்ந்து நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில வரிகள் உங்கள் அன்பான பார்வைக்கு:

நானறிந்த வரையில் இஸ்லாமிய உலக தமிழ் மாநாடுகள், தற்கால இஸ்லாமியர்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதிதாக பங்களிப்பதை ஊக்குவிக்கவும், பெரும்பான்மையினரால் அறியப் படாமல் இருக்கும் பழைய இஸ்லாமிய இலக்கிய வடிவங்களை விவாதிப்பது, புதிய பதிப்புகள் வெளியிடுவது போன்ற நோக்கத்துடனே நடத்தப்பட்டன.  இத்தகைய ஒரு மாநாட்டை நான் முன்பு பணியாற்றிய சீதக்காதி அறக்கட்டளை முன்னிலை வகித்து நடத்தியது. அதன் பொறுப்பாளராக  மறைந்த சொல்லரசு ஜாபர் முஹைதீன் (அவர்கள் மலேயா நண்பனில் ஆசிரியராக பணியாற்றியவர்கள்)  அவர்கள் அரும் பணியாற்றினார்கள். அந்த வகையில் இது பற்றி கொஞ்சம் தெரியும் எனபதால் இதை இங்கே குறிப்பிடுகின்றேன்.

அடுத்ததாக என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த  ஓர் பிராமண சகோதரி,  “நீங்கள் (அதாவது முஸ்லீம்கள்) வீட்டில் யாராவது இறந்தால் சிரிப்பீர்களாம். குழந்தை பிறந்தால் அழுவீர்களாமே” என கேட்ட கேள்வி , பிற சமுதாய மக்களிடையே இஸ்லாமியர்களின் சமூக வாழ்வு எந்த அளவு மூடு மந்திரமாக உள்ளது என்ற கேள்வியை என்னுள் எழுப்பியது. அறியப்படாத கோடானு கோடி வாழ்க்கை பக்கங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்த இலக்கியம் ஓர் மகத்தான வடிவம். பெரும்பான்மை வாசகர்களின் மனதில் இருளாய், திரையாய் மறைவில் இருக்கும் இஸ்லாமிய வாழ்வுகள், நிகழ்வுகளின்  நேர்மையான பதிவுகள் அதிகமதிகம்  பதியப்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் “இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாய்” அதிகம் எழுதப்படாத ஒரு பெரிய பகுதி  special attention க்காக முன்னிறுத்தப்படுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

‘அறம் செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என்பது போல தத்துவங்களை உரத்த குரலில் சொல்வது இலக்கியமாகாது என்பது முற்றிலும் உண்மை. அவைகள் கூட ரீமிசிக்ஸில் சக்கை போடு போடுவது வேறு விசயம்.  மனிதனை நெறிப்படுத்தும் தந்துவங்கள், வாழ்வின் அங்கமாய் போன விசயங்கள். அவற்றை புறந்தள்ளுவது கற்காலத்தை நோக்கிய பயணமாகிவிடும். தத்துவங்கள்   implied ஆக அமைந்து அகதரிசனங்களை ஏற்படுத்துவது பேரிலக்கியங்களின் ஒரு கூறாக கருதப்படுகின்றது.  ஜெயமோகன் கூட தத்துவம் கலந்த இலக்கியப் பரப்பை உன்னதமாக்கலின் (sublimationன்) ஓர் அங்கமாக்க விவாதித்து வருகின்றார். அந்த வகையில் உங்களை சிந்திக்க வேண்டுகின்றேன்.

இஸ்லாமிய இலக்கியம் எழுத நமக்கு சுதந்திரம் இல்லை. மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுக்கும் விபரீத நிலை ஏற்படும் என சொல்லுவதை விட Controversial ஆன விசயங்களை தற்காலிகமாவது முன்வைக்காமல் பிற விசயங்களை எழுத முடியாதா என சிந்திக்க வேண்டுகின்றேன். ஜெயகாந்தன் சொல்லுவார் ஒரு சமூகத்தை பற்றி எழுதினால் அது அந்த சமூகத்தவரால் விரும்புமாறு இருக்க வேண்டும் என்று. அதற்காக இஸ்லாம் ஜிந்தாபாத் என கொடிபிடிக்க சொல்லவில்லை. எப்படி இருக்கலாம் என்பதை இலக்கிய ஆர்வலர்களான உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

இலக்கியத் தரமற்ற ஒன்றை எந்தப் பெயரிட்டாலும் தேர்ந்த வாசகர்கள் புறந்தள்ளிவிடுவார்கள் என்பது தெளிவு. அதே நேரத்தில் அதிகம் எழுதப்படாத ஒரு சமூகத்தின் வாழ்வு, Controversial ஆன விசயங்களை கூடியவரை தவிர்த்து ஒரு special attention க்காக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற தனிப்பெயரில் / பெயரில்லாமல் முன்னிறுத்தப்படுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

ஓரளவு இலக்கியம் தெரிந்த தாஜ்,  ஆபிதீன் , நாகூர் ரூமிஹமீது ஜெஹபர்….  போன்ற தாஜின் லிஸ்டில் உள்ள கொஞ்சத்துக்கும் கொஞ்சம் இருக்கும் எழுத்தாளர்கள் கூட இது பற்றிய தங்கள் கருத்துகளை மாற்றி யோசிக்க தாயாராக இல்லை என்றால் தாஜே கூறியது போல இதை செய்ய மந்திரத்தால் இன்னொரு இஸ்லாமியன் திடுமென சாதனைக் கொம்புகளோடு தமிழ் இலக்கியத்திற்குள் படைப்பாளியாக வந்தால்தான் உண்டு!

எதிர்பார்ப்புகளுடன்,

நூருல் அமீன்  |  http://onameen.blogspot.com/

***

நன்றி : நூருல் அமீன் | onoorulameen@gmail.com

8 பின்னூட்டங்கள்

 1. 27/07/2011 இல் 17:21

  யுவர் ஹானர் ‘ஓரளவு’ என்ற வார்த்தை கற்றது கைமண்ணளவு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட வார்த்தை. அதற்காக சீர்காழி இயற்கை அன்பரும், மற்ற இறையன்பர்களும் சீற மாட்டார்கள் என நம்புகின்றேன்.

  • தாஜ் said,

   27/07/2011 இல் 22:52

   அன்புடன்
   நூருல் அமீன்….

   ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ என்கிற
   என் கட்டுரைக்கு
   நீங்கள் மறுப்பு தெரிவித்திருக்கும்
   பாங்கு
   மிக அழகு.
   ஒரு கட்டுரையின் உள்ளார்ந்தக் கருத்தை
   ஆதரிப்பதை விட
   எதிர்ப்பதும்/ முரண்படுவதும்
   மிக அழுத்தம் கொண்டது.

   உங்களது மாற்றுக் கருத்தை
   வரவேற்கிறேன்.

   *
   நீங்கள் குறிப்பிட்டு இருக்கும்
   உங்களது பழைய கம்பெனி,
   உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய அமைப்பில்
   அங்கம் கொண்டுள்ளதை
   நான் அறிவேன்.
   அவர்களுக்கும்
   ஸ்ரீலங்கா இஸ்லாமிய பெரிய அமைப்பினருக்கும்
   உள்ள தொடர்பையும்/உறவையும் அறிவேன்.

   சமீபகாலமாக
   ‘சீதக்காதி அறக்கட்டளை’ யின்
   பரவலான
   தமிழ்த் தொண்டையும் கூட அறிவேன்.

   மாவட்ட அளவில்
   இத் தொண்டைப் பரப்ப
   சீதக்காதி அறக்கட்டளையினர்
   முயல்வதையும் அறிவேன்.

   சுமார் ஆறு வருடங்களுக்கு முன்
   சென்னை-கலைவாணர் அரங்கில்
   ‘சீதகாதி அறக்கட்டளை’ நடத்திய
   உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய
   மாநாட்டு விழா ஒன்றுக்கும் போய் இருக்கிறேன்.
   அதற்கு
   கலைஞர் தலைமை தாங்கியதாகவும் நினைவு.

   என் மாயூரம் நண்பர் ஒருவர்
   கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார்
   அவர் முகலாய மன்னர்களைப் பற்றிய
   தொகுப்பு கட்டுரை ஒன்றை
   பெருமைப் பொங்க எழுதி
   ‘சீதக்காதி அறக்கட்டளை’க்கு
   அனுப்பி வைக்க
   அவர்கள்
   அதனைப் புத்தகமாக வெளியிட்டு,
   அந்த ஆசிரிய நண்பருக்கு
   ரூபாய் 25000/= பொற்கிழியும் தந்தார்கள்.

   என் கட்டுரை
   (உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு?’
   நீளமாக போன காரணத்தால்
   ‘அஸ்கான் குரூப்’ அரசியலை
   வேண்டுமென்றே தவிர்த்து விட்டேன்.
   *
   இங்கே
   இப்போது
   உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்து
   வெட்டியோ/ஒட்டியோ
   எந்தவொரு புதிய வார்த்தையும்
   பதிய நினைக்கவில்ல.
   இனி எதிர் நிற்கவும் விரும்பவில்லை..
   எழுதிய
   என் கட்டுரையில்
   நான் இருப்பதே போதும்.

   *
   -தாஜ்

   • 28/07/2011 இல் 08:39

    அதை விடுங்க தாஜ் இஸ்லாமிய பிண்ணனி கொண்ட படைப்பிலக்கியத்தில் உங்கள் சீரிய பங்களிப்பிற்கான என் கோரிக்கைக்கு உங்கள் பதில் என்ன? ஆபிதீன் நானா! முதல் கொண்ட உங்கள் அனைவரையும் தான் கேட்கின்றேன்?

 2. தாஜ் said,

  28/07/2011 இல் 11:45

  அன்பு
  நூருல் அமீன்…

  இஸ்லாமிய பின்னணி இல்லாமல்
  ஓர் இஸ்லாமியன்
  தனது யதார்த்தப் படைப்பை
  படைப்பதென்பது இயலாது.
  ஆனால்
  அது உங்கள் கட்டுக்குள் வராது.
  சுதந்திர வெளிப்பாடாகவே இருக்கும்.

  ஆபிதீனின்
  அத்தனைக் கதைகளும்
  இஸ்லாமிய வாழ்வு சார்ந்ததுதான்.
  ஆனாலும்
  சுய விமர்சனம் சார்ந்தது.

  எனது பல சிறு கதைகளில்
  இஸ்லாமிய வாழ்வு சார்ந்ததுதான்.
  ஆனால்
  அதில் என் யதார்த்த நடப்பை
  மிக சுத்தமாய்
  பதிவும் செய்திருக்கிறேன்.

  எனது நாடகம் சார்ந்த
  ஓர் குறு நாவலில்
  வலியவே
  மறைக்கப்பட்ட
  இஸ்லாமிய கீர்த்திகளை
  அப்பட்டமாக/ பெருமையாக
  வெளிகாமித்திருக்கிறேன்.
  ஆனால் அந்த நாடகம் சார்ந்த குறு நாவல்
  கற்பனை சுதந்திரம் கொண்டது.

  உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் மீது
  ஆர்வம் காட்டும்
  நூரை
  ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன்…
  இந்த இலக்கியம் கூறும் அளவீட்டின் படி
  ஒரு பெண்ணை
  படைப்பின் தேவைக் கருதி
  வர்ணிக்க வேண்டிவரும் பட்சம்
  உங்களால் வர்ணிக்க முடியுமா?

  போகட்டும்
  இன்னொரு யோசனையில்….
  உங்களுக்கு…

  இந்த இலக்கியப் பின்னணி இல்லாமல்
  நீங்கள் எழுதும் எழுத்தை
  பிறர் ஒப்புக் கொள்ள மாட்டார்களா என்ன?
  உங்களது இஸ்லாமிய மஹாத்மியங்களை
  தாராளமாக எழுதுங்களேன்!
  உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு கீ
  எழுதினால்தான் ஆச்சா?
  -தாஜ்

 3. 28/07/2011 இல் 13:25

  அன்பு தாஜ்,
  இஸ்லாமிய புகழ் பாடும் மஹாத்மியங்களை எழுதுங்கள் என நான் கூறவில்லை. ஒரு சுமாரான வாசகன் என்ற அளவில் அந்த அளவு அசடல்ல நான்.

  உங்களின் எழுத்துகளில், ஆபிதீன் நானாவின் எழுத்துகளில் மண்ணின் மணம் கமழ என்னமாய் எழுதுகிறார்கள் என வியக்க வைத்த பகுதிகள் 98% இருக்க, இத்தனை நேசமிக்க எழுத்தில் நெருடலான அம்சம் 2% மட்டுமே. என் தாயும், மகளும் என்னுடன் சேர்ந்து படிக்கும் அளவு முடியாமல் போவது அந்த 2%னால் மட்டுமே.

  ஒரு முறை ஹமீது ஜெஹபர் நானாவிடம் ஆபிதீன் நானா எத்தனை அழகாக எழுதுகிறார்.அவரை மாதிரி எழுதக் கூடியவர்கள் அரிது. கொஞ்சம் ஆபாச பகுதிகளை நீக்கி விட்டால் எத்தனை சிறப்பாக இருக்கும். அந்த பகுதிகள்/அம்சங்கள் இல்லாவிட்டாலும் அவரது கதை சூப்பராகத் தான் இருக்கும் என கூறினேன். அந்த 2% தான் அவருடைய சிக்னேச்சர் என்றார் ஹ.ஜெ. நானா!

  பேண்டால் செக்குல பேழுவேன். இல்லேன்னா பரதேசம் போவேன் என ஒரு சொலவடை உண்டு.

  நீங்கள் எல்லாம் இவ்வளவு திறமையை கொண்டிருந்தும் கொஞ்சம் ….கொஞ்சம் உங்கள் சுதந்திரத்தை துளியளவே விட்டுக் கொடுத்தால். சற்றே அடக்கி வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது என் கோரிக்கை அல்ல பேராசை.

  • தாஜ் said,

   28/07/2011 இல் 16:03

   கபுல்லாக்கி வைப்பானாக.
   ஆமீன்.
   -தாஜ்

 4. 28/07/2011 இல் 22:40

  ஆமீன். குறிப்பாக் உங்கள் இருவருக்காகவும் இன்று துவா செய்தேன்.

 5. 30/07/2011 இல் 12:00

  மவுனம் கலையாதா ஆபிதீன் நானா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s