பேனாக்கள் – பூமணி

’தேடல்’ இதழில் வெளிவந்த சிறுகதை ( ஜூன் 1978) இது. புகழ்பெற்ற நாவலான ‘பிறகு’ தந்த பூமணியின் வேறு சில சிறுகதைகளை சகோதரர் ராம்ப்ரசாத்தின் ‘அழியாச் சுடர்கள்’ தளத்தில் வாசிக்கலாம். சுட்டிகளை பதிவின் கீழே தந்துள்ளேன்.

***

பேனாக்கள் – பூமணி

அவன் தாத்தா ரொம்பநாளாய் ஒரு பேனா வைத்திருந்தார். அவன் சின்ன வயசாயிருக்கும்போதே அவர் பையில் இருந்தது. கடைசிவரைக்கும் புதிசுமங்காமல் வைத்திருந்தாரே அதுதான் பெரிய காரியம். பையிலிருந்து அபூர்வமாய்த்தான் எடுத்து இரண்டு வரி எழுதுவார். எழுதும்போது கவரைப் பையில் குத்தியாகணும். பேனாவுக்குப் பின்னால் சொருகி எழுதுவதேயில்லை. கை நடுக்கத்திலும் தானாகவே மையடைப்பார். வெள்ளைத் துணி வைத்து மெனக்கிட்டு துடைத்து வெண்கலக் குடம் மாதிரி விளக்குவார்.

இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து ராம ஜெயம், நாலு பிள்ளையார் சுழிதான் எழுதியிருப்பார்.

தாத்தா கம்பூன்றி போகும் போதும் வரும்போதும் சட்டையில் மினுங்கிய பேனா அவனைத் தொடர்ந்து உறுத்தியது. எத்தனையோ தடவை அபேஸ் பண்ணத் திட்டம் போட்டிருக்கிறான். பாச்சா பலிக்கவில்லை. அவர் பேனாவை கண்ணுக்குப் படும்படியாய் வைத்தால்தானே. ஒன்று அவர் போட்டிருக்கும் சட்டையில் இருக்கும் அல்லது மேஜை டிராயருக்குள்ளிருக்கும். டிராயர் சாவியையாவது வெளியே வைக்கட்டுமே. அரணாக் கயிற்றில் வாளிப்பு போட்டு வேட்டி மடியில் வைத்துக்கொள்வார். சில சமயம் குளிக்கையில் கழட்டி வைத்துவிடுவார் என்று கொட்டாவி விட்டிருக்கிறான். ஆனால் கைத்தடி மட்டுமே வீட்டு மூலையில் சாத்தியிருக்கும். சாவி அரணாக்கயிற்றில் மணியாட்டும்.

அவர் அசந்த நேரம் பார்த்து சாவியைக் கழட்டி விடலாமா என்றுகூட யோசித்தான். அப்படி அசந்த நேரமே தெரியாது. முக்கால் வாசி கண்ணை மூடிக்கொண்டுதான் இருப்பார். தூங்குகிற மாதிரி இருக்கும். எதிரே பூச்சி பறந்தால்கூட அருவங் கேட்டு விடுவார். எக்குத் தப்பாய் மாட்டிக்கொண்டால் கம்படி வாங்கிகட்ட வேண்டியதுதான்.

அவன் அப்பாவிடமும் ஒரு பேனா இருக்கத்தான் செய்தது. அது தாத்தா பேனா போல் இல்லை. அவன் வைத்திருந்த பேனாவுக்கும் மோசமாயிருந்தது. அவர் பஞ்சுக் கணக்கெழுதி பேனாவைப் படாதபாடு படுத்தியிருந்தார். அப்பா கூட தாத்தா பேனாவில் கண் வைத்திருப்பது பிந்தித்தான் தெரிய வந்தது. ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னார்:

”நயினா ஒங்களுக்கு இனி அந்தப்பேனா எதுக்கு சும்மாதானே வச்சிருக்கீக எனக்குக் குடுத்திருங்க. நாண் கணக்கெழுதிக்கிறென்”.

“ஏம்பா வேறபேனா கணக்கெழுத மாட்டன்னா சொல்லுது”.

அப்பா மறு பேச்செடுக்க வில்லை. தாத்தாவா கொக்கா.

அதற்குப் பிறகு தாத்தா அப்பாவிடம் அடிக்கடி பேனா கேட்க ஆரம்பித்தார்.

“ராமானுஜம் ஒம் பேனாவைக் கொஞ்சம் குடுத்து வாங்கிறயா. என்னதில் மையில்லையோ என்னமோ எழுத்து சரியாவே தெரியலே. கசியிற மாதிரியும் தோணுது.”

அப்பா முணுமுணுத்தவாறே பேனா கொடுப்பார்.

“கசியிதோ புதுசா”

அவன் பாட்டி அதைவிடக் கில்லாடி. கழுத்துப் பிடிக்காமல் நகை போட்டுக் கொண்டு கிறுங்காது. அவன் அம்மாவும் எத்தனையோ பிரயத்தனம் பண்ணிப் பார்த்து விட்டாள். மசியவில்லை.

பாட்டி குளிக்கும்போது நீட்டி முழக்கிக் கூப்பிடுவாள்.

“நாகலெச்சிமி ஓரெட்டு வந்து முதுகத் தேச்சுத் தண்ணி ஊத்தீட்டுப் போயிரு”

அம்மா காசலையாய்ப் போய் உடம்பெல்லாம் தேய்த்து விடுவாள். கழுத்தோரம் தேய்க்க வரும்போது மட்டும் பாட்டி சாதாரணமாயச் சொல்வாள்.

“இனி நான் தேச்சுக்கிறம்மா. நீ போயி வீட்டு வேலையப் பாரு”

திரும்பும்போது அம்மா சத்தம் கேட்கும்.

“அவ்வளவு சாமானவும் கழுத்திலை போட்டுக் குளிக்கீகளே, அடிக்கடி தண்ணி பட்ட என்னாத்துக்காகும் கண்ணி இத்துப்போகாதோ”

அதற்குங் கூட பாட்டி நடுக்கத்திலே பதில் வைத்திருப்பாள்.

“ஆமடியம்மா தண்ணிக்கு இத்துப்போற சாமானும் செஞ்சு குடுப்பான் பாரு எனக்கு”

அம்மா வெளியூருக்குப் போகிற சமயம் நகைகளை இரவல் கேட்டால்கூட பாட்டி கொடுப்பதில்லை.

“காலங் கெடக்கிற கெடையில சாமான் போடவா முடியுது. ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவே பயந்து கெடக்குது. இருக்கிறதப் போட்டுட்டுப் போனாப் போதும். ஆரும் கேட்க மாட்டாக”

நல்லவேளை அவன் அப்பா கூடப் பிறந்த அத்தையோ சித்தப்பாவோ இல்லை. அப்பா ஒருவர்தான். எப்படித்தான் அவரைப் பத்துவரை படிக்க வைத்தார்களோ.

தாத்தா சாக நாள் பிடித்தது. சட்டை போட்ட வாக்கில் ஈஸி சேரில் கண்ணயர்ந்திருந்தவர் எழுந்திருக்கவில்லை. சட்டைப்பையில் குத்தியிருந்த பேனாவை அப்பா எடுத்து அவர் பையில் சொருகிக் கொண்டார்.

அவன் கல்யாணச் சோறு தின்றுவிட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று அடிக்கடி சொல்லுவார். பாவம், அதுவரை கூட்டில் உயிர் தங்கவில்லை.

அந்த யோகம் பாட்டிக்குத்தான் அடித்தது. அவன் வாத்தியார் வேலைக்குப் போய் கல்யாணம் முடித்து ஒரு மகனைப் பார்க்கும்வரை திடமாகவே இருந்தாள்.

எத்தனையோ முறை உயிர் இந்தா போகிறேன் என்று மிரட்டி முடக்குவாள். இரண்டாவது நாள் புடைத்தெடுத்த மாதிரி எழுந்து வெயில் காய்வாள்.

அம்மாவும் பீ மோத்திரம் எடுப்பதிலிருந்து சகல வேளைக்கும் சளைக்கவில்லை. அவன் மனைவியும் அம்மாவும் நான் முந்தி நீ முந்தி என்று பணிவிடை செய்தார்கள். காணாக்குறைக்கு அயலூரிலிருந்து அவன் அக்கா வேறு வந்து இருப்பு போட்டுக் கவனித்தாள்.

கடைசியில் தாமதமாய்த்தான் மூன்று பேருக்கும் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து அழ வாய்த்தது. மயானத்திலிருந்து அப்பா கொண்டுவந்த பாட்டியின் நகைகளை அம்மா வாங்கிக் கொண்டாள். அவ்வளவையும் மறுநாளே மஞ்சள் தேய்த்துக் கழுவி அழுக்கெடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.

அவன் அக்கா அதற்குப் பிற்கு அவ்வளவாய் வீட்டுக்கு வருவதில்லை. முக்கியமான காரியத்திற்கு வந்தாலும் அவன் மனைவியுடன்தான் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படுவாள்.

தாத்தா பேனாவை அப்பா வைத்துக் கொண்டது அவனுக்குக் கூட வருத்தந்தான். வெளியே எவ்வளவோ நல்ல பேனா விற்கத்தான் செய்கிறான். எல்லாம் தாத்தா பேனாவாக முடியாது. என்னேரமும் தங்கமாய் மினுங்கும். மூடியெது கீழ்ப்பாகமெது என்று கண்டுபிடிக்க முடியாதபடி திரடில்லாத வழவழப்பு. பேப்பரில் வைத்தால் பொரிந்து தள்ளும். முந்தி ஒருநாள் எழுதிப்பார்த்தது. வைத்திருந்தால் அப்படிப் பேனா வைத்திருக்கணும்.

பள்ளிக்கூடம் போய் கொஞ்ச நாளில் அவன் மகன் பேனா கேட்டு அடம் பிடித்தான்.

ஒரு பழைய பேனாவை எடுத்து ஒக்கிட்டுக் கொடுத்தான். அது மறுநாளே இருந்த இடத்தில் வாய் பிளந்து கொண்டு கிடந்தது. அவன் வைத்திருந்த பேனாவையே கேட்டு அழுதான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்பா மேஜைப்பக்கம் கைகாட்டி விட்டான். அவ்வளவுதான் அவர் குளிக்கப் போன சமயம் பேனாவை எடுத்து தரையில் எழுதி பின்னால் வளைத்து நெக்கைத் திருகி மறை கழண்டு ஆட்டம் குளோஸ். தாத்தாவைப் போல் அப்பாவுக்கு முன்னெச்சரிக்கை கிடையாது.

அப்பா பையனை பிடித்து கண்டபடி காதைத் திருகி வீங்கவைத்த பிறகும் கோபம் தணியவில்லை. எல்லோரையும் திட்டித் தீர்த்தார்.

“வீட்ல புள்ளையா பெத்து வச்சிருக்குதுக. கால சனியனா எறங்கியிருக்கானே..ஆகமான பேனா போச்சே.”

“என்னமோ பேனா போனதுக்குப் போயி புள்ளய இந்தப்பாடு படுத்தியிருக்கீகளே. இதுல்லனா வேற ஒண்ணு வாங்கிக்கிறது.”

“ஒனக்கென்ன தெரியும் அறிவு கெட்டவளே. இப்படிப் பேனா எவங்கிட்ட இருக்கும்.”

அவனும் அவன் மனைவியும் ஒன்றுமே பேசவில்லை. பிறகும் இரண்டு மூன்று நாட்கள் பையனை அவர் கண்ணில் படவிடாமல் வைத்துக்கொண்டதோடு அவன் பேனாவைப் பத்திரப் படுத்தவும் செய்தான்.

தாத்தா பேனாவுக்கு எங்கும் நெக்குக் கிடைக்கவில்லை. அவன் கேட்டான்.

“அத எங்கிட்டக் குடுந்திருங்களேம்ப்பா. எப்படியாச்சும் நெக்குச் சம்பாரிச்சு எழுக்கிறேன்.”

“நீ சம்பாரிச்சு எழுதிக் கிழிச்சது போதும். அது எங்கிட்டயே இருக்கட்டும்.”

அவர் வேறு பேனாவை எழுதப் பயன்படுத்திய போதும் தாத்தா பேனாவை ஒரு பார்வைக்காக பையில் குத்தில் கொள்ளத் தவறுவதில்லை.

ஒருநாள் அவன் பள்ளிக்கூடன் கிளம்பிக்கொண்டிருந்த போது பையில் பேனாவைக் கவனித்து விட்ட அப்பா கேட்டார்.

“நல்லா பேனாவா சம்பாரிச்சிருக்கயே. இண்ணக்கி ஒருநாள் எழுதக்குடேன். என் பேனாவ ரிப்பேருக்குக் குடுத்திருக்கென்.”

அவனும் தயங்காமல் சொன்னான்.

“இது ஏற்கனவே ரிப்பேருப்பா. சும்மா கெடந்துச்சு. இண்ணக்கித்தான் ரிப்பேருக்குக் குடுக்கலாம்னு எடுத்திட்டுப் போறென்.”

நாலாவது நாள் அவன் ஒரு விளாரை எடுத்துக்கொண்டு மகனை விரட்டி விரட்டி அடித்தான். எல்லோரும் பிடிக்கப் பிடிக்க அடித்தான். அவன் அப்பா மிரண்டு போய் கண்டித்தார்.

“அடே ஒனக்கென்ன வந்திருச்சு இப்ப. புள்ளையா என்னன்னு நெனச்ச. மடத்தனமா அடிக்கயே.”

அவன் வயிற்றெரிச்சலில் கத்தினான்.

“அவன் பண்ணீருக்கிற காரியத்துக்கு முதுகுத் தொலிய உரிச்சாக் கூடக் காணாது. அருமையான பேனாவ ஆணிவேற அக்கு வேற கழட்டிப் போட்டுட்டானே பாவி.”

“பெரிய பேனா. போடா போ. அண்ணைக்கே ரிப்பேர்னு சொன்னயே. அது போயித் தொலஞ்சா இனியொண்ணு வாங்கிக்கயேன்.”

அவன் மகன் அவருக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தான்.

***

நன்றி : பூமணி , ’தேடல்’

***

பூமணியின்  சில சிறுகதைகள் :

எதிர்கொண்டு

போட்டி

ரீதி

தொலைவு

ஆழம்

கோலி

3 பின்னூட்டங்கள்

 1. 20/07/2011 இல் 21:22

  அருமையானக் கதை.
  எந்த பொருளும் அதனதன் இடத்தில் இருக்கும் வரைதான் மதிப்பு. சற்று மாறினாலும் மதிப்பை இழந்துவிடுவதை இக்கதை சொல்கிறது.

 2. 22/07/2011 இல் 14:08

  மூன்று தலைமுறை உணர்வுகளை லாவகமாகச் சொல்லியிருக்கிறார். மற்ற கதைகளையும் படிக்கனும்.

  பூமணி அறிமுகத்துக்கு தாங்க்ஸ் நானா!
  (அந்த ஃபோட்டோ எங்க சுட்டது? அருமை)

  • 23/07/2011 இல் 11:17

   அறிமுகமா?! அவர் பெரிய ஆளு மஜீத். ’பிறகு’ நாவலில் வரும் ஒரு காட்சியை நண்பர் ராஜநாயஹம் எழுதியிருக்கிறார். பாருங்கள். சுட்டி : http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_04.html

   பூமணியின் புகைப்படத்தை அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து சுட்டேன். அனுமதியெல்லாம் சகோதரர் ராமிடம் நான் வாங்குவதில்லை – மாற்றி மாற்றி சுட்டுக்கொள்வதால்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s