ஹனிபாக்காவின் ’மச்சி’

’அடப்பு’ எழுத்தாளன் ஆபிதீனை அங்கீகரித்து, பாராட்டி, அத்தோடு நில்லாமல் அவனது மனைவி, பிள்ளைகளையும் பார்ப்பதற்காக இன்று நாகூர் சென்றிருக்கும் மதிப்பிற்குரிய ஹனிபாக்காவின் ’மச்சி’யை (சிறுகதை)  நெகிழ்ச்சியுடன் பதிவிடுகிறேன். ஆபிதீனை ஹனிபாக்காவுக்கு அறிமுகப்படுத்திய நண்பர் உமா வரதராஜனை என்றும் மறவேன். கொழும்பிலிருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி சென்ற காக்கா, காயல்பட்டிணம் சென்று தன் சொந்தங்களோடு இருந்துவிட்டு (எனக்கும் இருக்கிறார்கள் அங்கே சிலர்) இன்று போயிருக்கிறார் – நாகூருக்கு. நேற்று தொடர்புகொண்டபோது, ‘போவேண்டு ஒனக்கு வாக்கு கொடுத்திட்டன். நாளக்கி சுபுஹு தொழுவிட்டு போவேன் வாப்பா’ என்றார். ‘சுபுஹு தொழுவாமலும் போலாம் காக்கா’ என்றதும் சிரிப்பு வந்துவிட்டது. ஊரில் நம் ஜஃபருல்லாநானா தயாராக இருக்கிறார். இப்போதுகூட எஸ்.எம்.எஸ் வந்ததே , ‘சத்தியத்தை வெளியில் கொண்டு வருவது பொய்தான். சத்தியம் இல்லாமல் பொய் இருக்கும். பொய் இல்லாமல் சத்தியம் பிறக்காது’ என்று. ’சத்தியம்!’ என்று பதில் தந்ததற்கு,‘சத்தியமே பொய்யின் காவல்காரன்தானே..’ என்று மறு அடி!   மகனார் நதீமும் நேற்று இதற்காகவே ஊர் வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து ’மூளகுடிச்சான்சந்து’க்கு கூட்டிக்கொண்டு போகாமலிருந்தா சரி. அன்பு ஹனிபாக்கா, நீங்கள் என்னை பெரிதாக கௌரவித்திருக்கிறீர்கள். கண்டிப்பாக இதே கப்பலில் என்றாவது உங்களைப் பார்க்க வருவேன் (சுபுஹு தொழுதுவிட்டுத்தான்!) , இன்ஷா அல்லாஹ்.

இந்த ‘மச்சி’ சிறுகதை முதலில் ’சிஃபி.காம்’-ல் இருந்தது. இப்போது சுட்டி வேலை செய்யவில்லை. ஆதலால் இங்கே மீள்பதிவு செய்கிறேன் – ’சிஃபி’க்கு நன்றியுடன்.. – ஆபிதீன்

***

மச்சி – எஸ்.எல்.எம். ஹனீபா

என்னெ எழும்பலியா?

சுப்ஹு தொழுதுவிட்டு – குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த என்னைக் கேற்றில் முட்டிய வார்த்தைகள் அசத்தின.

ஆ . . . வாறன் . . . வாங்க அக்பர்!

எல்லாம் வேதனதான் ராவு நடந்திரிக்கி . . .

என்னெ? என்னெ? சொல்லுடாப்பா . . .

நான் அவசரப்படுத்துகிறேன்.

உங்கட வெள்ளமச்சி, ராவு மவுத்தாப் பெய்த்தா . . . ஆரோ. கொன்று கோவில் வெட் டைக்கு அங்காலெ . . .

பக்கத்தில்தான கம்பி வேலியும் காவலுமிரிக்சி . . .

எல்லாமிருந்தும் என்ன செய்ய? உசிருபோன புறகு . . .

உங்கட மச்சிர மக்கள் கத்துற கத்துவ எத்தின குடியக் கேக்குதோ . . .

அக்பரின் கண்களுக்குள் கடைப்பெடுத்திற்று. என் கண்களுக்குள் அன்று பிறந்த குளவியாக மச்சி மிதந்தாள்.

ஓடக்கடரயி மாமிர வூடு.

ஆலையடி வெட்டயால போய் கிறீன் துரை கடையைத் தாண்டி – தேத்தாவடி மூத்தம்மாட குடிலுக்கு அங்காலெ ஓடை . . .

ஓடைக்கு மேலால ரெண்டு தென்னை மரத்தத் தறிச்சு மாமா போட்டிருப்பாரு . . .

ராத்தாவும் நானும் மரத்திக்கு மேலால பய்யப் பய்ய நடந்து ஓடையைத் தாண்டுவம். சனியும் ஞாயித்துக் கிழமையும் எனக்கும் ராத்தாக்கும் மாமிட்டான் பொழுது விடியும் . . .

ஓடயத் தொட்டாப் போலதான் மாமிர வூடு. அழகான வூடு. ரெண்டறையும் மண்டபமும். வாசýல் பந்தல். புடலங்கொடி பரவிக்கிடக்கும். பச்சிலப் பாம்புகளெல்லாம் தூக்கில . . . அவ்வளவு காய்கள் . . . வளவு நிறைய பிலாவும் தென்னையும் மாவும் . . . குளு குளு என்றிருக்கும். மாமாட கையிலெ அரிவாள் கத்தி. ஓலமட்டர வால் பக்கத்தாலெ கரகரண்டு மாமா மட்டய ரெண்டாக் கீறிப் போடுவாரு. நாங்க மட்டய இளுத்து இளுத்து மாமி கிட்டயும் மச்சி கிட்டயும் போடுவம்.

மாமியப்போல மட்ட இழைக்க எங்கட ஊரில ஆருமில்ல. அன்னா பாத்திரிக்கக் கொள்ள மட்ட இழபட்டுப்போகும். அழகா தட்டுப் பின்னல் போட்டு . . . நண்டிர கால்களைப் போல மாமிர கை விரல்களெல்லாம் மட்டையில ஓடும்.

பொழுதும் உச்சிக்கி வர வெலயெல்லாம் முடிஞ்சிடும். பிறகென்ன நானும் மச்சியும் ராத்தாவும் ஓடையிலான் மிதப்பம் . . .

அடித்தென்னையிலிரிந்து மச்சி வாளமீனப்போல குதிப்பாள். குதிச்சவள் குதிச்சவள்தான். நானும் ராத்தாவும் மலங்க மலங்கப் பாப்பம். குசிச்சவள கொஞ்ச நேரத்தைக்கிக் கானேல்லா . . . அப்படியே சுழியோடிப்போய் . . . ஓடத் தொங்களிலே உடும்பு போலத் தலையைத் தூக்கி . . . சடாரெனத் தாண்டு போவாள் . . .

நான் அங்கால இஞ்சால பாராக்குப் பாத்துக்கிட்டு தண்ணிக்குள்ள தலைய தாட்டுத் தாட்டு வெளில பாப்பன்.

அப்படியே விலாங்கு மீனப் போல வந்து வந்து எனைக்கித் தெரியாம என்ட கவட்டுக்குள்ளால பூந்து கழியோடிப் பெய்த் திருவாள் . . . நான் பயத்திலெ அப்படியே தண்ணிக்குள்ள தாண்டு . . . தாண்டு தியாமுட்டிப் போவேன். எனைக்கிக் கண்ணாலயும் மூக்காலயும் வாயாலயும் தண்ணி புரையேறி சிலசிலடிச்சிடும்.

மச்சியோட கோவமிண்டா சரியான கோவம் வரும்.

பொழுது உச்சில நிக்கும். மச்சி தண்ணில மிதப்பாள். குட்டிக் குட்டி அலையெல்லாம் மச்சிர துண்டுப் புடவய்ய நீரில விலக்கி விலக்கிக் குடுக்கும் . . . மச்சிர தொடயில . . . கழுத்து மணிக்கோவியில . . . கால் கொலுசிலயெல்லாம் சூரியன்ட பார்வெ பட்டுப் பச்சை, சிவப்பு, நீலமென்டு ஜொýக்கும். அப்படியே அவள் தண்ணில மினுங்குவாள்.

இருந்தாப்லெ பெரிய அலை ஒண்டு அப்படியே மச்சிர துண்டுப் புடவய உருவி எடுத்திட்டு ஓடையில ஓடும் . . . மச்சியும் நிர்வாணத்தோட அப்பிடியே தண்ணில நீச்சலடிப்பாள் . . . நான் அவள்றத்த . . .

மச்சிர கால் எப்பிடி வெள்ள . . . மருங்கப்பழத்தப் போல . . .

மச்சி, துண்டு புடவய உரிஞ்சி உரிஞ்சி உடுப்பாள். நான் அவளக் கடக்கண்ணாலப் பாப்பன். என்ன அவளும் கடக்கண்ணாலப் பாத்திருவாள்.

குட்டியான் செரியான ஹறாங்குட்டிரி என்பாள். ராத்தா கைகொட்டிச் சிரிப்பாள்.

பொழுது உசில கெளியுமட்டும் ஓடையும் நாங்களும் பட்டதுபாடுதான்.

குளிச்சி முடிச்சி என்னையும் ராத்தாவையும் மச்சி தோணில ஏத்திக்கிட்டுச் சின்ன ஓடையைத் தாண்டி பெரியோடைக்குக் கொண்டுபோவாள். மச்சிர கையிலசவள். நான் அணியத்தோட ஒட்டினாப்போல இரிப்பன். ராத்தா நடுத்தோணிலயிருப்பாள்.

புறவிழுந்த காற்றில் தோணி, தொடுக்காமலே பெறயோடைப் பக்கம் போகும்.

எங்களோட பந்துக்கா, பூக்கள், புச்சிததேங்கா, அடிமட்ட எல்லாம் போட்டி போட்டுக்கிட்டு ஓடையில ஊர்வலமா மிதந்து வரும்.

எல்லாம் அப்படியே உப்பாத்துக்குப் போய் முகத்துவாரத்திலெ கடலுக்குப் பெய்த்திருமாம்.

பெரிய ஓடையிர மேட்டிலதான் வண்ணாரக்குடியெல்லாம் இரிக்காங்க . . . எங்கட பெரிய வண்ணாத்திர குடிலும் அதிலானிரிக்கி . . . வாசலெல்லாம் குருத்து மணல் . . .

பெரிய பெரிய புடலக்கொடிகள் . . . ஆற்றுப் பக்கமாக ஓடையோட ஒட்டினாப்போல நீண்டு கிடக்கும் . . .

பண்ருட்டிச் சோமன், மோகினிப் பட்டுச் சேலை, சுங்கவாடிச் சேலை, லங்கா நீலப் புடவை என்று வண்ணாத்திர வளவிலயும் கொடிலயும் நிறைஞ்சி கிடக்கும்.

மணச்சாமான் போட்டு வெளுத்த உடுப்புகள் காற்றில மணக்கும் . . . நானும் ராத்தாவும் மோந்து மோந்து பாப்பம் . . .

காற்றும் மணக்கும் . . . ஓடையும் மணம்தான் எங்கட ஊருக்குள்ள ஆடுகள் செத்தா வண்ணாரச் சீனியும் வெள்ளக் கட்டாடியும்தான் கொண்டுபோவாங்க. ஆடுகள் செத்தா அவங்கட பாடு கொண்டாட்டம்தான்.

சீனியன் கண்ணூத்துக்கும் காய்ச்சலுக்கும் ஊதிப்பாப்பான். செம்புக்குள்ள பாக்கட்டியப் போட்டு உருக் கொண்டாப்போல ஊதிப்பாப்பான். பயத்தில காய்ச்சல் பறந்திடும். வேர்த்துக் கொட்டும் . . . .

வண்ணாத்திர குடிலுக்குக் கூப்பிடு தூரத்திலான் அம்மன் கோவில். றோட்டுக்கு அங்கால தமிழாக்கள் . . . இஞ்சால எங்கட ஆக்கள். ஊர்த்தொங்கல்ல அவங்கட கோவில். எங்கட பள்ளி ஊருக்குள்ள . . .

ஒவ்வொரு வரிஷமும் திருவிழா நடக்கும். பெரிய வண்ணாத்தியும் கட்டாடியும் பாளையெல்லாம் வெட்டிப் போவாங்க. பாளய உரிச்சா மச்சி சிரிச்சாப் போலரிக்கும் . . .

நாங்க முழு ஊரும் திருவிழா பாக்கப் போவம். காத்தான் குடிýருந்து சீப்புக் காப்புச் சாமான் கண்ணாடி வளயல் கடைகளெல்லாம் வந்திருக்கும். சும்பு முட்டாசி, இழுக்க இழுக்க நீளும் சிவப்பு முட்டாசி . . . பையண்ணா மஸ் கொத்துக்கடை போட்ருப்பாரு . . . பசு நெய்யிர மணம் வாயூறும். . . . லெப்பத்தம்பி ஆசியர்ர லவுஸ்பீக்கர் . . . பெரிய குழல் ரெண்டையும் ஆலமர உச்சியில கட்டிரிப்பாங்க . . .

விடிய விடிய பாட்டுத்தான்.

நாங்கெல்லாம் கோவில் வெட்டையில தூங்கிடுவம். வாப்பா வந்து எழுப்பிக் கூட்டிட்டுப் போவாரு . . . மேலெல்லாம் குருத்து மணல் அப்பிரிக்கிம். விடியக்கொள வந்திருவம்.

அம்மன் சிலைக்குப் பட்டுப்புடவை, ஆலங்காய் மணிக்கோர்வை, தாýக்கொடி, முக்கணிக்காப்பு, தாவத்துக்கொடி என்று நகையாலெ நிறைச்சிரிப்பாங்க . . .

கோவில் வாசல்ல தீப்பாளயம் . . .

கிடங்கில வீரக்கொள்ளி பத்தி தகதக என்றிருக்கும். முதல்ல தட்டாரக் கந்தன்தான் தீப்பாளயத்தில இறங்குவான். நெருப்புத் தணலையெல்லாம் அள்ளி அள்ளித் தலையெல்லாம் கொட்டுவான். நாக்கு குலையோட வெü வந்திடும்.

அவண்ட் புறத்தாலெ ஓடைக்கர உமறு வருவான் . . . குமாரசாமி அண்ணன் வருவார் . . . எல்லாரும் நெருப்ப அள்ளி அள்ளி . . . இறஞ்சி இறஞ்சி . . . பாய்வாங்க . . . பாக்கப் பயமாரிக்கிம் . . .

இப்பெ கோவில் இருந்த இடமெல்லாம் காடாப் போய் . . . வண்ணாரக் குடிகளும் தூரப்பட்டுப் பெய்த்தாங்க . . .

கோவில் றோட்ட மறைச்சிக் கம்பிவேலி . . . மண்மூடைகள் . . . எல்லாம் மாறிப் பெய்த்து. மனிசரும் மாறிட்டாங்க.

மச்சிர மையத்து . . . கோவில் காட்டுக்குள்ள . . . அல்லாஹ் எண்ட மச்சிக்கு யார் இந்த அநியாயத்தச் செய்தாங்க?

வைரமுதிரையில் கடைஞ்செடுத்த மச்சி . . .

ஐம்பது வயசிலயும் முப்பது வயசின் முறுக்கும் அழகுத் திமிரும். சின்ன வயசிலேயே மச்சிர காக்கா கடலுக்குப் போனவரு திரும்பல்ல . . . மச்சிர புள்ளகளெல்லாம் வெளி நாட்டுக்குப் போய் வீடு கட்டிப் போட்டுதுகள். மச்சி மண்வூட்லதான். சூறாவளில தென்னையெல்லாம் கெளிஞ்சிட்டு ஓடையும் வந்திட்டு . . .

கொஞ்ச நாளா ஓடக்கரையில ஏதேதொ கததான். இளம் புள்ளகளெல்லாம் கொதிச்சிட்டானுகள். அவனுகள்ற கைகளெயெல்லாம் வயசாளிகள் கட்டிப்போட்டம்.

ஆம்புளைகளெல்லாம் பள்ளிக்குப் போன புறகால தனிய வூட்டில இரிக்கிற பொண்டுகளெயெல்லாம் புதுசா வந்தவனுகள் கஸ்டப்படுத்திறயாம். மெள்ள மெள்ளப் புகைஞ்சி . . . இன்டெய்க்கி நெஞ்சில நெருப்ப வச்சிட்டானுகள் . . .

செய்ரதயும் செஞ்சி போட்டு . . . உசிரயும் எடுத்திட்டானுகள். உரலுக்கு ஒரு பக்கமிடி. நாம தவிலாப் போனம்.

வாற இலக்ஷனில் மச்சியப் பத்தி எல்லாரும் பேசுவானுகள்.

என்ன. விளக்கமெல்லாம் முடிஞ்சி, மையத்தும் பள்ளிக்க பெய்த்து. போறýயா? இப்படியே யோசிச்சி யோசிச்சி மூளயப் பழுதாக்கிப் போட்றிவீங்க. மையத்திலயும் அவட அழகு. அவவும் பிலம் கொண்ட மட்டும் மல்லுக் கட்டித்தானிரிக்கணும் . . . நாசமாப் போவானுகள் இநத் அநியாயத்தச் செய்து போட்டானுகளே . . .

என்ட வூட்டுக்காரி கலங்குகிறாள். நான் தொப்பிய கையிலெடுத்தவனாக – நெஞ்சு முட்டிய வெப்பிசாரத்தோட என்ட மச்சியைக் கடைசிப் பயணம் அனுப்பி வைக்கப் போறன்.

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா | slmhanifa22@gmail.com

6 பின்னூட்டங்கள்

  1. 09/07/2011 இல் 18:29

    உள்ளத்தை உருக்குது. மச்சிண்டவுடன் என்னை நாப்பது அம்பது வருஷத்துக்கு முந்தி தள்ளிக்கிட்டுப் போயிடுச்சு. உம்மாடி அதல்லாம் வாணாம். இப்ப நெனச்சாலும் நெஞ்சு பொளக்குது.

  2. 10/07/2011 இல் 13:02

    சுபஹு தொழுதால் தான் பயணம் போலாம் போல! ம்ம்ம் நீர் தொழுதிடும்..!! இன்ஷா அல்லாஹ் என்று போட்டு வச்சிருந்தியுமே. அது தான் சின்ன டவுட்டு.(அதன் நேரம் தெரியுமா உமக்கு? கோச்சுக்காதியும். நான் உம்பட கூட்டாளி தானே! சும்மா தெரிஞ்சுக்கலாமெண்டு தான் கேட்டன்) மச்சியை அனுப்பி விட்டாலும் மனசுக்குள் நிலைத்து விட்டாக!!

  3. 10/07/2011 இல் 15:21

    //நேரம் தெரியுமா உமக்கு// ஒரு தொழுவாளிய பாத்து திடீர்னு இப்படி கேட்டா எப்படிங்கனி? இரியும், இஸ்மாயில கேட்டு சொல்றேன். அவர்தான் கலாட்டா பண்ணுவார். சுட்டி : http://nagoreismail.blogspot.com/2009/11/blog-post_20.html

  4. 10/07/2011 இல் 17:19

    ஹனீபாக்கா ஜூலையில தமிழ்நாட்டுக்கு வர்றேன்னு சொன்னதும் சந்திக்கலாமென நினைத்தேன். அவர் சொன்னபடி வந்துவிட்டார். (சும்மா இல்லை, மச்சியை துபாய்க்கு அனுப்பிவிட்டு)
    நான்தான்……..போக முடியவில்லை. அடுத்த தடவை நிய்யத்து வைக்கும்போது,

    //(சுபுஹு தொழுதுவிட்டுத்தான்!) , இன்ஷா அல்லாஹ்//

    ன்னு சேத்துக்கிட்டு வைக்கனும்!

    சரிதானே காதர்பாய்?

  5. Arafath sr said,

    19/07/2011 இல் 08:03

    என்ன இது சுபஹ் சுபஹ்ன்டு அடிச்சிக்கிறிங்க.நீங்க அடிச்சிக்கிறத பர்த்தா எனக்கு ஒரு கத நெனப்பு வருகுது. நல்லா இருக்கிற ஆப்தீன் காக்காட பக்கத்துல ‘முழுக்கு ‘ விழுந்துட்டுன்னு என்ன சபிக்கப்படாது.

    பள்ளியில் கடமை செய்கிற ஒரு ஆலிம்சா .புதுசா கலியாணம் முடிச்சிட்டார்.சுபஹீக்கு பள்ளிக்குப்போக மனுசன் கொஞ்சம் நேரத்தோட எழும்பி குளிச்சிட்டார். மனைவி சொன்னா ‘இவ்வளவு நேரத்தோட போய் என்ன செய்யப்போறீக, கொஞ்சம் சாய்ஞ்சிட்டுப்போங்க, அவரும் பார்த்தாரு ஆமா டைம் இரிக்கிண்டு அவவுக்கு பக்கத்துல சாஞ்சாரு .கொஞ்சம் நேரம் பொய்த்து, அவ சும்மா கால தூக்கிப்போட்ரிக்கா, இவரும் தூக்கிப்போட்ரிக்காரு,உச்சத்துக்கு ஆலிம்சா போற தருணம் பார்த்து பாங்கும் கேட்டிரிக்கி. இவரு அவளப்பிடிச்சிக்கிட்டு சுபஹ் சுபஹ் எண்டு பிதற்றினாராம்.
    உங்கட சண்டையப்பார்த்தா .இந்த சுபஹ்ல ஏதோ வில்லங்கம் நடந்திரிச்சி

    அறபாத்

    • 19/07/2011 இல் 09:42

      சுபஹ்மான , சுகமான மறுமொழி. அடிக்கடி இங்கே வந்து காலைப் போடுங்கள்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s