ஸமா : சூஃபி இசையும் நடனமும் – நாகூர் ரூமி

நண்பர் நாகூர் ரூமியின் ‘சூஃபி வழி – ஓர் எளிய அறிமுகம்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன் – கிழக்கு பதிப்பகத்தாருக்கு நன்றிகளுடன். பிரியத்திற்குரிய இன்னொரு நண்பரான ஹெச்.ஜி. ரசூலின் ’சூஃபி இசை –  இதயத்திலிருந்து ஒரு செய்தி’ கட்டுரையைப் படித்துவிட்டு மேலே செல்க. ‘ஸமா’ நடனம் காணொளி  காண கீழே செல்க!  Read also :  Sema, Yesterday and Today.   ‘அய்யய்யோ ஷிர்க்!’ என்று உதடு ஒட்டாமல் அலறுவோர்களுக்காக அறிஞர் ஆர்.பி.எம். கனி எழுதிய ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ எனும் நூலிருந்து கவிஞானி ரூமியின் ஆத்மீக குரு (ஷம்ஸே தப்ரேஸ்) பற்றிய பகுதியை பிறகு பதிவிடுவேன், இன்ஷா அல்லாஹ்.

***

மௌலவிய்யா தரீக்காவின் ஸமா என்ற இசை தெய்வீக அன்பையும் ஆன்மிக பரவச நிலையையும் குறிப்பதாக உள்ளது. இறைவனோடு இணைதலை அது உணர்த்துகிறது. ஒருவிதமான தியான மன நிலையை உருவாக்க அந்த இசையும் நடனமும் முயல்கின்றன. கிழக்கின் சாஸ்த்ரீய சங்கீதத்தின் உயிரான பல அம்சங்கள் இந்த இசையில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக ரூமி மற்றும் பல சூஃபிகளின் கவிதைகள் பாடப்படும்போது அவற்றுக்கான இசையை அவை வழங்குகின்றன.

இந்த ஸமாவில் முக்கியமானவர் ட்ரம் வாசிப்பவர்தான்.  குடும், சிம்பல் போன்ற  சின்ன தபேலா மாதிரியான இசைக்கருவிகளும் வாசிக்கப்படுகின்றன. நே என்னும் ஒருவித புல்லாங்குழல் ராகம் தருகிறது. அதோடு கம்பிக் கருவிகளும் மனிதக் குரலும் இணந்து கொள்கின்றன.

வார்த்தைகளும் கவிதைகளின் அசைகளும்கூட இசையோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. சூ·பி இசைக்கு ஸ்வரம் எழுத முடியாது. ஸ்வரங்களின் சூ·பி ஆன்மா கட்டுப்படாதது.

தர்வேஷ்கள் என்று சொல்லப்படும் சூ·பிகள் நேரமும் முயற்சியும் இன்றி சுழல ஆரம்பிக்கின்றனர். தங்களைச் சுற்றிக் கொண்டும், ஒரு வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டும். அவர்களின் வலது கை இறையருளை பெற்றுக்கொள்வதற்காக மேலே திறந்திருக்கும். அது அவர்களின் கைகள் வழியாக இதயத்துள் நுழைந்து மின்சாரத்தைப் போல பூமியை நோக்கி இருக்கும் இடது கை வழியாக பூமிக்குள் இறங்கும். ஒரு காலை நிலையில் வைத்து இன்னொன்றால் சுழல்வார்கள் அவர்கள். கால்கள் எழுவதும் விழுவதும் “அல்லாஹ் அல்லாஹ்” என்ற முழக்கத்தோடு இயைந்து நடக்கும்.

இறைவனை அறிதல், இறைவனைப் பார்த்தல், இறைவனில் கலத்தல் என்ற மூன்று நிலைகளில் இந்த ஸமா மெல்ல மெல்ல மேலே உயர்த்திச் செல்வதாக நடத்தப்படுகிறது.

ஸமா என்பதென்ன?
உங்கள் மனதில் மறைந்திருக்கும் வானவரின் செய்திதான் அது.
அதன் எழுத்தோடு வருகிறது அமைதி
அலைபாயும் மனதுக்கு
ஞான மரம் பூக்கிறது
இந்த தென்றலுடன்
இருப்பின் உள் துளைகள் திறக்கின்றன
இந்த மெட்டுக்கு
ஆன்மிக சேவல் கூவும்போது
விடிகிறது
முரசு கொட்டப்படும்போது
வெற்றி நமதே

என்றார் ரூமி ஒரு கவிதையில்.

ஒரு சூஃபி இசை கேட்க இருந்த கூட்டத்தில் நுழைந்து அமர்ந்தார். இசை துவங்கி அதைக் கேட்டவுடன் இறந்து விட்டார். அதுதான் சூ·பி இசையைக் கேட்கும் சரியான முறை என்றார் ஞானி ஜுனைதுல் பக்தாதி!

‘ஸமா’ என்பது உள்ளத்தில் எழுப்பும் இறைக்காதலின் மூலமாக மனிதனின் ஆன்மா செல்லும் உயர் ஆன்மிகப் பயணத்தின் குறியீடு. தன்னை இழப்பதன் மூலம் முழுமையை அடைய அது உதவுகிறது. இப்படி முழுமை பெறுபவர்கள் அந்த நிலையில் ஜாதி, மத, இன, குல, நம்பிக்கை இத்யாதிகளுடைய வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனித குலமனைத்தையும் நேசிக்கும் மனம் கொண்டவர்களாவர்.

இந்த தரீக்காவினரின் சுழல் நடனம் வேதகால இந்தியாவில் இருந்த ஒன்றென்று ஒரு கருத்து உண்டு. முதுகுத் தண்டை அடிப்படையாக வைத்து சுழல்வதைத்தான் மேரு மலையை வைத்து பாற்கடலைக் கடைதல் என்று அந்தக்கால இந்திய சூ·பிகள் குறிப்பிட்டனராம். சமஸ்கிருதத்தில் ‘மேருதண்டம்’ என்றால் ‘சுழல்தல்’ என்று பொருளாம்.

திறந்த கண்களோடே சுழல வேண்டும். இந்த சுழற்சியில் மனித உடல் ஒரு பம்பரத்தைப்போல ஆக வேண்டும். சுழற்சியின் மயக்கத்தில் தன்ன இழக்க வேண்டும். இந்த சுழற்சிக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே சாப்பிடுவது, குடிப்பது போன்றவற்றை நிறுத்திவிட வேண்டும் என்றும், வெறுங் கால்களுடனும் நெகிழ்வான ஆடைகளுடனும் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சுழல் நடனம் எவ்வளவு நேரத்துப் போகும் என்று சொல்ல முடியாது. பல மணி நேரங்களோ அல்லது பல நாட்களுக்கோகூட போகலாம். ரூமி பல நாட்கள் இவ்விதமாக சுழன்று கொண்டிருப்பாராம். குறைந்தது ஒரு மணி நேரமாவது பயிற்சி எடுத்தால்தான் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆற்றலின் புயல் வீச்சை உணர முடியுமாம்.

இடது காலை நிலையாக வைத்து, உடம்பை சுழற்ற வலது காலை பயன்படுத்துவார்களாம். கடிகாரச் சுழற்சிக்கு எதிர் திசையில் சுழலுவார்கள். வலது உள்ளங்கை மேலே வானத்தைப் பார்த்தபடி திறந்தபடி இருக்க, இடது உள்ளங்கை கீழே தரையைப் பார்த்தபடி குப்புற இருக்கும். கண்கள் திறந்தபடி இருந்தாலும் எதையும் உன்னிப்பாக அவர்கள் பார்ப்பதில்லை. முதல் 15 நிமிடங்களுக்கு மெதுவாக சுழல்வார்கள். அடுத்த 30 நிமிடங்களில் வேகம் மெல்ல மெல்ல கூட்டப்படும். சுழல்பவரும் சுழற்சியும் போய் எல்லாமே ஒரு ஆற்றலின் வீச்சாக மாறி இருப்பர். புயலும் அதன் மையத்தையும் போல.

சுழல்பவர் கீழே விழுந்தவுடன் — வேண்டுமென்றே அல்ல — சுழற்சியின் அடுத்த கட்டம் துவங்குகிறது. உடனே அவர் தரையில் சுழன்று தன் தொப்புள் பூமியின் மீது இருக்குமாறு செய்வார். பூமியோடு தன் உடல் இணைவதை அவர் உணர்வார். ஒரு குழந்தை தன் தாய் மார்பில் அழுத்தப்படுவதுபோல. கண்கள் மூடியிருக்கும். குறைந்தது 15 நிமிடங்களுக்காவது அந்த நிலையிலேயே அவர் அமைதியாக இருப்பார். முடிந்த பிறகு பயிற்சியாளர்கள் முடிந்த வரை அமைதியாக இருக்க முயல்வார்கள்.

**

நன்றி : நாகூர் ரூமி , கிழக்கு பதிப்பகம்

**

15 பின்னூட்டங்கள்

 1. 18/06/2011 இல் 19:26

  அய்யய்யோ….ஷிர்க் அல்ல ‘அல்லாஹு ஷிர்க்’ என்று உதடு ஒட்டாமல் சொல்பவர்களை மன்னித்துவிடலாம். பாவம் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டவரைக்குள் நின்று சுழல்பவர்கள். கொச்சையாக சொல்வதானால் ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்’.

  இறை தியானத்தில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைவரை தன்னை உணர்ந்திருப்பார்கள், அதன்பிறகு தன்நிலை மறந்து தான் யார்? இருக்கும் இடம் எது? தான் ஆணா பெண்ணா இல்லை அதுவா? இதெல்லாம் மறைந்துவிடும் அங்கே இருப்பது ஒன்று மட்டுமே; இஷ்க் எனும் இறைக்காதல் மட்டுமே எஞ்சி நிற்கும். (காதலிக்கு முன்னால் உலகையே மறந்திருக்கும் காதலன் போல)

  இது அனைத்து தரீக்காக்களிலும் காணப்படும் பேரின்ப நிலை அல்லது பரவச நிலை. இதனை உணர்ச்சிப் பூர்வமாக அனுபவிக்கமுடியுமே தவிர சொல்லி விளக்க இயலாது. இது அவரவர் தகுதிக்கு ஏற்ப அமைந்திருக்கும். வேறு வார்த்தையில் சொன்னால் மனைவியுடன் அனுபவிக்கும் இன்பத்தை எப்படி விளக்கமுடியாதோ அப்படி…! அல்ல, அதைவிட மேல் என்று வைத்துக்கொள்ளலாம்.

  ஆசை உள்ளவர்கள் அனுபவித்துப் பார்க்கட்டும்……!

  • தாஜ் said,

   19/06/2011 இல் 00:19

   //வேறு வார்த்தையில் சொன்னால்
   மனைவியுடன் அனுபவிக்கும்
   இன்பத்தை
   எப்படி விளக்கமுடியாதோ
   அப்படி…!//

   நாநா….. குழப்புறீங்க.
   மனைவியுடன் அனுபவிக்கும் இன்பத்தை
   விளக்க முடியாதாயென்ன?
   அனுபவித்து அனுபவித்து விளக்கலாம்!
   பீடிகைப் போடாமல்…
   (//இஷ்க் எனும் இறைக்காதல்//)
   அந்த மஹா காதலை
   கொஞ்சம் முயன்று விளக்குங்கள்.
   மெனி சிலிர்க்க
   நாங்களும்தான் அனுபவிக்கிறோமே.
   -தாஜ்

   • 19/06/2011 இல் 16:20

    அது அப்டியில்லண்ணே,
    அதெல்லாம் அந்தரங்கம்கிறதுனால,
    நம்மால அதை விளக்க ” முடியாது” 🙂
    (ஹிஹி – நானும் குழப்புவேன்)

 2. 19/06/2011 இல் 05:15

  கம்பராமாயணத்திலே இப்படி இருக்காமே, “சொல் நலம் கடந்த காமச்சுவை” என்று.
  அதாவது சொற்ப நேரம் அனுபவித்து போகும் போது அனுபவத்திவனின் சக்தியையும் குறைத்து விட்டு போகக் கூடிய அந்த காமச்சுவையே சொல் நலம் கடந்தது என்றால்
  நிரந்தரமான இன்பத்தையும், எண்ணிபார்க்க முடியாத சக்தியையும் தரக்கூடியதாக அமைந்திருக்கும் திக்ரின் இன்னொரு வடிவம் தான் இந்த ’சமா’
  இது தரும் வார்த்தைகளால் விளக்க முடியாத பேரின்பத்தை தான் இறை அனுபவம் என்று சூஃபியாக்களால் போற்றப்படுகிறது.

 3. 19/06/2011 இல் 18:34

  ”””அனுபவித்து அனுபவித்து விளக்கலாம்!”””’

  தாஜ் நீங்கதான் விளக்கணும், வைதீஸ்வரன் கோயில்லேந்து சீர்காழி வரை உள்ள அனுபவம் உங்கள்டெத்தானே இருக்கு….!

  • தாஜ் said,

   20/06/2011 இல் 10:13

   நாநா….
   பதில்னா இதான் பதில்!
   சூப்பர்.

   “செக்ஸ் என்பது
   ஓர் இயற்கையான நிகழ்வு.
   ஆழ்நிலை சிந்தனை என்றால்
   என்ன என்று
   அது கோடி காட்டுகிறது.
   செக்சில் இருந்து
   நீங்கள் நேரடியாக
   தியானத்துக்குப் போகலாம்.”

   “செக்ஸில்
   நீங்கள் உச்சகட்டதுக்குப் போகும் போது
   நீங்கள் உருகி,
   ஒருவரோடு ஒருவர் கலந்து
   தான் என்பதே இல்லாத
   ஒரு பரமானந்தமான
   நிலையை அடைகிறீர்கள்.”
   -ஓஸோ
   செக்ஸ் வழியிலான தியானத்தை
   ஓஸோ இப்படி சொல்கிறார்.
   நீங்கள்
   தரிக்காவின் அடிப்படையில்
   எப்படி விளக்குகிறீர்கள்
   என தெரிந்துக் கொள்ள இப்பவும் ஆசை.

   எனக்கும்
   வைதீஸ்வரன் கோவிலுக்குமான
   பந்தமெல்லாம்
   ஓஸோ சொல்லும் தியானமோ
   நீங்கள் குறிப்பிடும்
   தரிக்கா சங்கதிகளோ அல்ல.
   அது…
   கத்தரிக்கா…
   சொரைக்கா சங்கதி.
   -தாஜ்

   • abedheen said,

    20/06/2011 இல் 10:48

    தாஜ், ‘சொரைக்கா’ உங்களுடையதுதானே?

 4. தாஜ் said,

  20/06/2011 இல் 13:39

  ஆபிதீன்…
  சொரைக்கால்லாம் இருக்கட்டும்.

  நம்ம ஜனங்கல சிலர்
  ஏன் இப்படி
  ஆண்டவனைப் பார்க்க
  ஆளாப்பறக்குறாங்க?

  அவனுக்கு உருவமே
  இல்லைன்னு
  ஈமான் கொண்டுட்டு
  பார்த்தே தீர்வேன்னா எப்படி?
  புரிய மாட்டேங்குது
  ஸ்வாமி!

  மீராவையும்
  ஆண்டாளையும்
  ஏனோதானோன்னு
  பார்க்கிறக் கூட்டம் நாம்,
  நாள் கணக்கா டான்ஸ் ஆடி
  மௌலானா ரூமி
  ஆண்டவனை
  தரிசனம் கொண்டார்னா எப்படி?
  உதைக்குதுல?

  அதுக்குன்னு ஓரு இசை இருக்காம்.
  அதை சரியா கேட்டா
  செத்துடுவாங்களாம்.
  ஆனா,
  அப்படித்தான் கேட்கணுமாம்.
  இதுல
  ஏதாது லாஜிக் இருக்கா?

  எங்க ஊர்ல
  யாராவது என் கிட்டே
  இப்படி எல்லாம் சொன்னா…
  போடாம்பேன்.

  மண்டையை கழுவதற்கும்
  ஒரு வரம்பு இருக்கு.

  ஆபிதீன்
  தப்பா நினைக்காதிங்க..
  எழுதாமல் என்னாலும்
  இருக்க முடியவில்லை.
  ஸாரி.
  -தாஜ்

  -தாஜ்

  • 20/06/2011 இல் 17:36

   தன்னிலை மறந்து இன்னோர் நிலை அடையும் மற்ற சில நிகழ்வுகளை நாம் எவ்வாறு பார்க்கவேண்டும்?
   (உ.ம்:)

   1. கோடாங்கி(!) அடித்துக்கொண்டே தன்னை மறந்து ‘சாமி’ பெயரில் குறிசொல்வது
   2. பால்குடம்/காவடி தூக்கிக்கொண்டு தன்னிலை மறந்து ஆடு ஆடுன்னு ஆடுவது. (அவர்களோடு கூட செல்லும்போது வாய்ப்பைப் பயன்படுத்தி, சாமிவந்து, பொதுவிடத்தில் ஆட்டம் போடுவதும் அடக்கம்)
   3. முன்னோர்கள் யாராவது அல்லது குலதெய்வம் தன்மீது இறங்கிவிட்டதாகக் கூறி, தன்னிலை மறந்து, சிலிர்த்துக் கொண்டு, ‘அவர்கள்’ மாதிரியே பேசுவது/நடந்து கொள்வது

   இது எல்லாமே, இறைவனை நெருங்கி விடும் சமாச்சாரங்கள்
   இது போக,

   4. கெட்டசக்தி ஏதாவது ‘பிடித்து’விட்டதாகக் கூறிக்கொண்டு, பலர்மத்தியில் தன்னிலை மறந்து, ஏதாவது ஒருவகையில் வரையறை, மீறி ஆட்டம் போடுவது
   5. மேற்சொன்ன எந்த பெயரிலும் இல்லாது, ஆனால் தன்னிலை மறந்து மேற்சொன்னதில் ஏதாவது ஒன்றைச் செய்து, மருத்துவரால் மனநிலை பிறழ்வாக (Hysteria) அறிவிக்கப்படுவது

   மற்றும்,

   6. நம்மால் ‘காஃபிர்’களாக அறியப்படும் முனிவர்கள், சாதுக்கள், யோகிகள் தன்னிலை மறந்து (இறைவனை நெருங்க) செய்யும் தவம்
   7. சாமியார்கள், போலிச்சாமியார்கள், சில குழுக்கள் செயல்படுத்தும் சில, தன்னிலை மறக்கும், வழிமுறைகள்…………

   இது அத்தனையையும் நம்மால் ஏதோ ஒரு வகையில், ஏற்றுக்கொள்ள – நியாயப்படுத்த – முடியுமா?

   அது முடியாதெனில்
   சூஃபி இசையை மட்டும் நியாயப்படுத்தினால்,
   நம்மை நாம் என்னவென்று சொல்லிக்கொள்வது?

 5. Subbaraman said,

  20/06/2011 இல் 19:40

  இதையும் பாருங்கள்.

  • 21/06/2011 இல் 10:16

   அன்பின் ராமன், நன்றி. நண்பர் ரௌத்ரனும் இதே சினிமாவிலிருந்து இன்னொரு காணொளிக்கான இணைப்பை – அவர் பதிவில் – கொடுத்திருந்தார். தர்வேஷ்களின் நடனங்கள் இணையத்தில் பல கிடைத்தாலும் ’அல்லாஹும்ம சல்லி’ என்கிற இந்த ’நஷீத்’ எனக்கு மிகவும் பிடித்தது. பாருங்கள்.

 6. 21/06/2011 இல் 20:58

  தாஜ்,

  ஆண்டவனைப் பார்க்க முடியாது, அவனது தஜல்லியாத்தை தரிசிக்கலாம். அந்த தரிசனை பரவச நிலையில் ஏற்படும் அதைத்தான் பேரின்பம் என்கிறார்கள் சூஃபியாக்கள். அதை அரபியில் ‘முஆயினா’ என்பார்கள்.

  அந்த பரவச நிலையை அடைய அருணகிரிநாதரின் ஏக்கத்தைப் பாருங்கள்.

  “பக்திப் பெருக்கில் என்தன் ஊனுருக – அந்த
  பரவசத்தினுள்ளே என் உயிருருக..
  சக்தி எல்லாம் வந்து நிலைபெறுக – என்தன்
  சந்ததியே உந்தனுக்கு அடிபணிய.. இறைவா…!”

  • தாஜ் said,

   22/06/2011 இல் 11:18

   அன்புடன் நாநாவுக்கு…..
   பொறுப்புப்பான
   பதில் எழுதியதற்கு நன்றி.

   //தஜல்லியாத்,
   முஆயினா,
   அருணகிரிநாதர்,
   சக்தி,
   சந்ததி,
   அடிபணிய இறைவா…..//

   இப்படி எதையாவது யோசிக்கணும்.
   அப்பத்தான் மனிஷன் உசத்தி. இல்ல…
   நர்மல் என்கிறதே தப்பு.
   அப்படித்தானே நாநா?
   -தாஜ்

   • 23/06/2011 இல் 09:33

    செவ்விலக்கியம், கவிதை, ஆய்வு, பெரியாரிஸம் என நீங்கள் நார்மலாகவே இருங்கள் தாஜ். பாவம் அப்நார்மல் ஹமீது ஜாஃபர் நானா! பொழைத்து போகட்டும் விட்டு விடுங்கள்!.

 7. 22/06/2011 இல் 09:10

  /’அய்யய்யோ ஷிர்க்!’ என்று உதடு ஒட்டாமல் அலறுவோர்களுக்காக அறிஞர் ஆர்.பி.எம். கனி எழுதிய ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ எனும் நூலிருந்து கவிஞானி ரூமியின் ஆத்மீக குரு (ஷம்ஸே தப்ரேஸ்) பற்றிய பகுதியை பிறகு பதிவிடுவேன./

  நல்ல விசயத்தை தள்ளி போட வேண்டாம். சீக்கிரம் செய்யுங்கள் நானா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s