’ஆசையினாலே மனம், அடியிலெ தொங்குது கனம், அப்பாட பிரிமிஸ் பழம்’ என்று வேடிக்கையான பாட்டு ஒன்றுண்டு – நாகூரில். அங்கே எல்லாமே வேடிக்கைதான். தாத்தாவை அப்பா என்று சொல்லும் வேடிக்கை உள்பட. ப்ரூம்ஸ் பழம்தான் பிரிமிஸ் பழம் என்றானதோ? தெரியவில்லை, அடியில் எல்லாம் ஆராய்ச்சி பண்ணக் கூடாது. ம்… பாட்டில் வரும் ’அப்பாஸ்’ அல்ல இந்த அப்பாஸ். அப்பாஸ் கிராஸ்தமி ( عباس کیارستمی ) . புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர். அதிகம் அறிந்தவர்கள்தான் நீங்கள். தெரியும். குரஸோவா யாரப்பா? என்று கனவில் குரலெழுப்பியவர் அப்பாஸ் யாரப்பா? என்று அலறக்கூடாதென்பதற்காகச் சொன்னேனப்பா.
‘Tast of Cherry‘ பாத்து அசந்துபோனத எழுதவாப்பா?
பழமென்றாலும் பழம், மன்னிக்கவும், படமென்றாலும் படம். ‘எந்த துணிச்சல்ல இத எடுத்தாரு?’ என்றே கேட்டார் நண்பர் சாதிக் – அநியாயமான ஆமைவேகம் காரணமாக. அபூர்வமான சினிமாக்களை அறிமுகம் செய்யும் சகோதரர் அய்யனாரின் பதிவை ( ’தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான் ) எடுத்துக் கொடுத்தேன். உடனே அவருக்கு படத்தின் வசனங்கள் பிடிக்க ஆரம்பித்தன – அந்த குழப்பமான முடிவு வரும் வரை. ’என்ன நானா இது, குழில படுத்து செத்தவன் திரும்பவும் வர்றான்?’ ‘நாம பாக்குறது படம்தான்னு சொல்றாரு. யார் செத்தாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிக்கிறதை காமிக்கிறாரே.’ ‘என்னமோ போங்க, ஆனா குரஸோவாவோட ’இகிரு’க்கு இது தேவலாம்.’ ’அதுவும் அருமையான படம்தான் சாதிக். என்னா, ரெண்டு மணிநேரம் ட்ரிம் பண்ணிடனும்!’ ‘சீரியஸாவே பேச மாட்டீங்களா நானா?’ – சலித்துக்கொண்டார்.
‘செர்ரியின் சுவை’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூக்கம் வந்தால் அருமையான சினிமா என்று அப்பாஸ் சொல்லியிருக்கிறார்!. (மதச் சட்டங்களால் தடுக்கப்பட்ட) தற்கொலை செய்யும் முடிவுடன் – தன் பிணத்தைப் புதைக்க உதவுபவர்களைத் தேடி – அலைகிறார் ஜனாப். பதீஈ. எதற்காக அந்த முடிவு என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ’உனக்கு துப்பாக்கி ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? என்று ஒரு இளைஞனைப் பார்த்து அவர் கேட்கும் ஒரேயொரு கேள்வி மட்டும் இருக்கிறது . போதுமா? ஆனாலும் எதுவும் சொல்லாத இறுக்கம் என்னென்னவோ சொல்வதை எடுத்துக் கூறவேண்டும். காரணத்தைச் சொல்லாமல் – ’பணம் நிறைய தருகிறேன், ஒரு உதவி செய்வாயா?’ என்று இளைஞர்களை அவர் ஆரம்பத்தில் கேட்கும்போது ஏதோ ஓரினப் புணர்ச்சிக்கு அழைப்பதுபோல இருக்கிறது என்று ஒரு விமர்சன மேதை எழுதியிருந்ததைப் பார்த்துத் தொலைத்தேன். ’பையன்வேலை’யில் முண்டன் போல அவர் ! எனக்கு அப்படிப் படவில்லை. விடுங்கள், விமர்சகர்கள் பார்த்துக் கொல்வார்கள். கதாநாயகரைப் பார்த்து பகேரி என்ற கிழவர் சொல்லும் ஆறுதலும் அதனூடே வரும் அட்டகாசமான நகைச்சுவைக்காகவும்தான் இந்தப் பதிவு.
தனக்கும் – கல்யாணமான சமயத்தில் – ரொம்ப பிரச்சனைகள் ஏற்பட்டன என்கிறார் அந்தக் கிழவர். (பாரடி அஸ்மா, உலகம் முழுதும் ஒரே மாதிரி பிரச்சனை!). அவர் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்:
’ஒருநாள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று தோன்றிற்று. அதிகாலையில் எழுந்து – ஒரு கயிறை எடுத்துக்கொண்டு – மல்பெரி பழத் தோட்டம் ஒன்றுக்குச் சென்றேன். மரத்தில் கயிற்றை மாட்டலாம் என்றால் முடியவில்லை. ஓரிருமுறை முயன்றேன். சரிவரவில்லை. நானே மரத்தில் ஏறி கயிற்றை இறுகக் கட்டினேன். அப்போது என் கையில் மென்மையாக ஒன்று நசுங்கியது. மல்பெரி பழம்! சுவையும் இனிப்புமுள்ள மல்பெரி! ஒன்றைத் தின்றேன். அதன் சாறும் சதையும்…ஆஹா.. அப்புறம் ரெண்டாவது, மூன்றாவது…! அப்போதுதான் பார்த்தேன், சூரியன் மலையுச்சியிலிருந்து எழுந்து கொண்டிருந்தான். என்ன அற்புதமான காட்சி! குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நின்றார்கள். மரத்தை உலுக்குங்களேன் என்றார்கள். உலுக்கினேன். பழங்கள் விழுந்தன. சாப்பிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கீழிறங்கி , கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். விழித்ததும் அந்தப் பழங்களை அனுபவித்துச் சாப்பிட்டாள். பார், தற்கொலை செய்வதற்காகப் போனேன். பழங்களுடன் திரும்பி வந்தேன்! ஒரு மல்பெரி பழம் என்னைக் காப்பாற்றி விட்டது. ஒரு மல்பெரி பழம்..!’
அவ்வளவுதான். ’ஒவ்வொரு பருவமும் தரும் விதவிதமான பழங்களைப் பாரேன். எந்தத் தாயாவது இப்படி வகைவகையான பழங்களை தன் பிள்ளைகளுகாக சேகரிக்க இயலுமா? தன் படைப்புகளுக்கு இறைவன் காட்டும் கருணையைப் போல உலகின் எந்தத் தாயாலும் செய்யவே இயலாது. இதையெல்லாம் மறுக்க விரும்புகிறாயா நீ? வாழ்வின் இனிமையை இழக்க விரும்புகிறாயா?’ என்று நெஞ்சை நிறைக்கும் நீண்ட போதனை… அட்வைஸ் பழம்தான் நமக்கு அதிகம் கசக்குமே, அதனால் அவர் சொல்லும் ’ஜோக்’கை மட்டும் அடியில் பதிவிடுகிறேன் – காணொளியாக. கண்டு சிரிப்பதும் கண்பட வாழ்வதும் உங்கள் இஷ்டம். பார்ப்பதற்கு முன் ஒரு விசயம் சொல்ல வேண்டும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, சகோதரர் சன்னாசியின் ‘மரணம் பற்றிய இரண்டு படங்கள்‘ பதிவில் ஜபருல்லா என்பவர் இந்தப் படத்தைச் சொல்லியிருந்தார் – மரணத்தின் மூலம் வாழ்வதற்கான காரணங்களை தேடும் சிறந்த (மற்றொரு) படைப்பு இதுவென்று. யாருப்பா இவர் புதுசா? அன்றிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றுவரை. கண்டுபிடிக்கவே முடியவில்லை என்னால். அறிந்தவர்கள் சொல்லுங்கள். சத்தியமாக நாகூர் ஜபருல்லாநானா கிடையாது. நம்ம நானா நல்ல சினிமாலாம் பாப்பாஹலா என்னா? பொழுதன்னைக்கிம் டி.வி சீரியல் பார்த்துக்கொண்டு , அதில் வரும் ஒலஹமஹா தத்துவங்களைக் சின்ஸியராக குறித்துக் கொண்டிருப்பதற்கே நானாவுக்கு நேரம் போதாது. இத்தனைக்கும் , சீரியல்காரன்கள் இவரைப் போன்றவர்களின் வரிகளிலிருந்துதான் சுட்டிருப்பான்கள். நாதஸ்வரத்தைப் பிடித்துக்கொண்டே சீரியல் தத்துவங்கள் சொல்லும் இன்னொரு நாகூர்க்காரரும் உண்டு. ஆல்ஃபா மன்னரை அப்புறம் கவனிக்கலாம். முதலில் இந்தக் காட்சியைப் பாருங்கள். சிரித்துவிட்டு , பிறகு சீரியஸ் ஆளான அப்பாஸ் கிராஸ்தமியின் நேர்காணலை அவசியம் பாருங்கள்.
’செர்ரியின் சுவை’ பற்றி விமர்சனம் செய்த நண்பர்கள் எவருமே கீழே காணும் ஜோக்கை ஏன் குறிப்பிடவில்லை என்பது சிந்தனை செய்யப்பட வேண்டிய விஷயம்.
சிரிக்கத்தானே ஐயா வாழ்வு – சாவையும் சேர்த்து ?
***
சில சுட்டிகள் :
’செர்ரியின் சுவை’யை மேலும் இங்கே பார்க்கலாம்.
அகிரா குரசோவாவுடன் உரையாடல் – அப்பாஸ் கிராஸ்தமி (எஸ்.ரா. பதிவிலிருந்து)
Taste of Cherry – Youtube | Taste Of Cherry Script – transcript from the screenplay | Taste of Cherry – Torrent File
தாஜ் said,
13/06/2011 இல் 13:49
உலக இயக்குனர்கள் வரிசையில்
இப்போது
‘அப்பாஸ் கிராஸ்தமி’ யை
நமக்கு
அறிமுகம் செய்து வைக்க
ஆபிதீன் கொள்ளும் சிரமங்களை
உணரமுடிகிறது.
நம்மை
பாக்கியசாலிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் ஆபிதீன்.
நன்றி ஆபிதீன்.
– தாஜ்
ஆபிதீன் said,
13/06/2011 இல் 15:40
//பாக்கியசாலிகளாக..// யோவ் , ஏன்யா இப்படி கிண்டல் பண்றே? நாளக்கி ஒம்ம ஓஷோவை போட்டுடுறேன். மக்கள் மேலும் பாக்கியசாலிகளாகட்டும். சரிதானே? அப்புறம் நண்பரே.. தற்கொலை செய்யப்போகும் கதாநாயகனுக்கு வாழும் ஆசையும் இருப்பதாக மெல்லச் சொல்வார் இயக்குநர் அப்பாஸ். காலையில் வந்து (குழியில் கிடக்கும்) என்மேல் இரண்டு கற்களை எடுத்து வீசு ’ என்று சொல்வான் கதாநாயகன் – அந்தக் கிழவரிடம். கிழவர் நம்பிக்கைவாதி. Be optimistic! என்பவர். ’மூன்று கல்லை எடுத்து வீசுகிறேன்’ என்பார்!. ரொம்பவும் ரசித்த இடம். எனக்கு வாய்ப்பிருந்தால் நாலு கற்கள் உபயோகிப்பேன். மூன்று கதாநாயகனுக்கு. ஒன்று உம்மை நோக்கி!
தாஜ் said,
13/06/2011 இல் 16:50
ஆபிதீன்….
அவுங்களாம் ….
‘Be optimistic!’
நான் தான் எந்த மிஸ்டுமில்லியே…..
எப்படி கல்லெறிவீங்க?
நீங்க கல்லெறிவதும் வீண்….
நான்….
எனக்கே தெரியாததோர் இடத்தில்
(அனேகமாக
அரபு நாட்டில்
இந்திய நடனக்காரிகளின்
குடியிருப்பில் இருக்கலாம்)
இறந்து
எத்தனை வருசமாச்சு!
‘இன்னும்….
இதுக்கு திமிர் அடங்கலப்பாருன்னு’
இப்பல்லாம் என்னை
என் வீட்லக் கூட(வீட்டுக்காரங்க) சொல்றாங்க…
நான் அத்தனைக்கு அட்டகாசம்
செய்றேனோ என்னவோ தெரியலை!
இப்படி…
உங்களோடல்லாம்
பேசும் பேச்சும்
என்னென்னவோவெல்லாம்
எழுதும் எழுத்தும்
அந்த அடங்கா
திமிராதான் இருக்குமோ?
-தாஜ்
மஜீத் said,
13/06/2011 இல் 19:38
படம், அதன் செய்தி, டைரக்டர் அவரது பார்வை – இதெல்லாம் இருக்கட்டும்.
இப்பல்லாம் ‘சாவுங்கலை’ பத்தி நண்பர்கள் சிலாகிப்பது அதிகமாகியிருச்சோன்னு தோணுது. அதுக்கு இந்தமாதிரி நல்ல படங்களும் அதுக்கு ஒரு சாக்கு.
என்னவோ தெரியல, இதெல்லாம் ரசிக்க முடியல. உண்மையச்சொன்னா சங்கடமா இருக்கு.
சாவு அதுபாட்டுக்கு வரட்டும். அதை வரவேற்கவோ, திருப்பி அனுப்பவோ நம்மால முடியாது.
(வேற எதத்தான்ய்யா உன்னால வரவேற்கவோ , விரட்டவோ முடியும்?- ஆபிதீன்)
சரிதான் – இருந்தாலும், வாழும்வரை ‘வாழுங்கலை’ பத்திப்
(அய்யோ, வில்லங்கமா வருதே; இது ‘அந்த வாழும் கலை’ இல்லை) – பேசும்போதுதான் சந்தோசமா இருக்கு.
தாஜ் said,
13/06/2011 இல் 20:04
அன்பு மஜீத்…
நெருப்புன்னா என்ன.
வாயா சுட்டுடும்?
நம்மயென்ன
அத்தனைக்கு லேசாவா
வளர்ந்திருக்கோம்?
எமன் கிட்டேயே
வாயிதா
வாங்கிடடுவோமில்ல.
.
(காதுலப் பூ பார்த்து
சிரியோ சிரின்னு
சிரிச்சதை…
மறந்திருக்க மாட்டேன்னு
நினைக்கிறேன்.)
நான் சொல்லி இருக்கிற
‘இறப்பு’
கவிதை சிராய்ப்பு கொண்டது!
ஆபிதீனே கேளு
அந்தக் கவிதைச் சிராய்ப்பின்
முழு ரணத்தையும் சொல்வார்.
இன்னொரு விசயம்….
சாவுக்குப் பிறகு
நம்ம சாவைப் பற்றி
பேச முடியாது.
அதான் கஷ்டம்.!
-தாஜ்
மஜீத் said,
14/06/2011 இல் 00:38
//காதுலப் பூ பார்த்து//
ஆமா ஆமா. எங்க மறக்கிறது?
கிங்கரர்கள்: மானிடா, எங்கே போகிறாய்?
ஹீரோ: (போச்சுடா) சாகப்போறேண்டா!!
கிங்கரர்கள்: அதுதான் கூடாது, கூடவே கூடாது!!
ஒருவழியா என்னையும் சாவப்பத்தி பேச வச்சாச்சுல்ல?
abedheen said,
14/06/2011 இல் 09:20
//சாவுக்குப் பிறகு நம்ம சாவைப் பற்றி பேச முடியாது. அதான் கஷ்டம்.! // பேசுறோமே!
தாஜ் said,
14/06/2011 இல் 10:19
//சாவுக்குப் பிறகு நம்ம சாவைப் பற்றி பேச முடியாது. அதான் கஷ்டம்.! //
//பேசுறோமே!//
கொன்னுட்டீங்க!
ஆமா…ல…
பேசுறோம்ல…
எங்கேருந்துப் பேசுறோம்?
நரகத்திலிருந்தா?
சொர்க்கத்திலிருந்தா?
-தாஜ்..