எது நடந்தாலும் நடக்கட்டும்

மனம் கசங்கும்போது தேடுவது இசையும் ஆன்மிக விசயங்களும்தான்.   இரண்டும் ஒன்றுதான் என்று உண்மையைச் சொன்னால் அடிக்க வரும் நீங்கள் , இந்த வியாழன் இரவு மட்டும் நான் தேடுவது வேறு என்று சொன்னால்… கொன்றே விடுவீர்கள்.  அப்படித்தான் இருக்க வேண்டும் அசல் முஸ்லிம்! அது போகட்டும், கம்பெனியில் நேற்று நடந்த ஒரு பிரச்சினையால் குழம்பித் தவித்தபோது அதைமாற்ற உதவியது எங்கள் ஹஜ்ரத்தின் வரிகள். அது – கவிஞர் தாஜைத் தவிர – மற்ற சகோதரர்களுக்கு உதவலாம் என்பதால் பதிவிடுகிறேன்.  இஸ்லாமிய இதழ்களில் ’ஆபிதீன் பக்கங்கள்’  இணைக்கப்படும் அதிசயம் இப்படித்தான் நிகழ்கிறது. வாழ்க!

***

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘மின்ஹாஜுல் ஆபிதீன்’ (பக்தர்களின் பாதை) – இரண்டாம் பாகத்திலிருந்து..

விரிவுரை : மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி.

**

இறைத் தீர்ப்பு

மனிதனின் வாழ்வில் உயர்வையும் தாழ்வையும் தோற்றுவிக்கிற விதியையே (இங்கே)  நான் இறைத் தீர்ப்பு என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில் இறைத் தீர்ப்பு இல்லாமல் எதுவும் எங்கும் நடக்க முடியாது.

உங்கள் விதி எப்படி அமையப் போகிறது? அது நல்லபடியாக அமையப் போகிறதா – இல்லை, உங்களைத் தூக்கிப் போட்டு விளையாடப் போகிறதா? – இறைவழியில் ஈடுபடத் துடிக்கும் உங்களுக்கு இப்படிப்பட்ட வினாக்கள் தோன்றக் கூடும். இவற்றிற்கு உங்களால் விடை காண முடியாது. இதனால் உங்களுக்குக் குழப்பமும் அவநம்பிக்கையும் தோன்றலாம். இதன் இறுதி விளைவு இது : உங்கள் வழிபாட்டுக்குத் தடை ஏற்பட்டுவிடும்.

எனவே இந்தப் பிரச்சினையில் இறைத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்; எது நடக்கக் கூடாதோ அது தவிர்க்கப்படட்டும். நடந்தே தீர வேண்டிய ஒன்றை நடக்கக் கூடாததாக மாற்ற முற்படாதீர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்வது மனிதப் பண்புகளில் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்று.

இறைவனின் தீர்ப்புப்படி எது நடந்தாலும் நடக்கட்டும் என்னும் உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நாம் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதற்காரணம் : உங்கள் வாழ்வில் தோன்றுகிற ஏற்றத் தாழ்வுகளை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றால், இந்தப் பிரச்சினையில் உங்களுக்கு அமைதி ஏற்பட வழியே கிடையாது. உங்கள் உள்ளத்தைக் கவலையும் அச்சமும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.  கடந்த கால அனுபவம் நிகழ்கால சூழலோடு கலந்து எதிர்காலத்தில் நடக்கப்போகும் காரியத்தைக் குழப்பம் கொண்டதாகக் காட்டும். ‘அது ஏன் அப்படி நடந்தது?’ ‘இது ஏன் இப்படி நடக்கவில்லை?’, ‘இன்னது நிச்சயமாக இப்படி நடக்குமா?’ எனும் சிந்தனைகள் உங்கள் உள்ளத்தைவிட்டு என்றைக்கும் நீங்காது.

உங்கள் உள்ளத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகள், குழப்பங்கள் இருக்கும்போது, உங்களால் இறைவழிபாட்டில் எப்படி ஈடுபட முடியும்? இறைவன் உங்களுக்கு ஒரே ஒரு உள்ளத்தைத்தான் கொடுத்திருக்கிறான். நடந்த காரியத்தைப் பற்றிய கவலைகளையும் நடக்கப்போகும் காரியத்தைப் பற்றிய அச்சத்தையும் போட்டு அந்த ஒரே ஒர் இதயத்தையும் நீங்கள் நிரப்பிவிட்டீர்கள். அப்புறம், இறைவனைப் பற்றிய நினைவுக்கும் மறுமை பற்றிய சிந்தனைக்கும் உங்கள் இதயத்தில் இடம் ஏது?

ஷகீக் பல்கி அவர்கள் கூறிய கூற்று ஒன்று இக்கருத்தை நமக்குத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. ’நடந்துபோன காரியங்களைப் பற்றிய வருத்தமும் நடக்கப் போகும் காரியங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் இந்த நேரத்தின் ‘பரக்கத்’தைக் கொண்டு சென்றுவிட்டன!’

இரண்டாம் காரணம் : வாழ்வில் தோன்றுகிற ஏற்றத் தாழ்வுகளை ஒரு மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அவன் இறைவனின் தீர்ப்பில் திருத்தம் செய்ய முற்படுகிறான் என்பதே பொருள். இதனால் அவன் இறைவனின் சினத்துக்கு இலக்காக வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன் இறைத் தீர்ப்பை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளும்போது இறைவனின் சினத்திலிருந்து அவனுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இறைவனின் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேனல்லவா? – இப்படி நான் கூறுவதற்கு இது இரண்டாம் காரணம்.

இறைத்தூதர் ஒருவரைப் பற்றிக் கூறப்படும் செய்தியொன்று இங்கு நினைவுகூரத் தகுந்தது. வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்ட துன்பங்கள் குறித்து அவர் இறைவனிடம் மனத்திற்குள்ளேயே முறையிட்டார். அந்த முறையீட்டுக்கு இறைவன் இப்படிச் செய்தி அனுப்பினான். ‘இழிவும் குறைபாடும் இல்லாதவன் நான் என்று அறிந்திருந்தும் நீர் என் மீது குறை சொல்கிறீரா? உமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நான் தீர்ப்பு வழங்கியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது என் தீர்ப்பு குறித்து நீர் என் வெறுப்புக் கொள்கிறீர்? உமக்காக உலகத்தையே நான் மாற்றியமைக்க வேண்டும் என்று விரும்புகிறீரா? என் விருப்பத்துக்கு மாறாக உம் விருப்பத்துக்குத் தக்கபடி நான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், நான் எண்ணுவதற்கு மாறாக, நீர் எண்ணுவது நடக்க வேண்டும் என்றும் நீர் ஆசைப்படுகிறீரா? என் கண்ணியத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: என் தீர்ப்புக்குத் திருத்தம் தேடும் எண்ணம் மீண்டும் ஒருமுறை உமது மனத்தில் தோன்றினால் உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘நபித்துவத்’தைப் பறித்துவிடுவேன்!’

இதில் மறைந்து கிடக்கிற ஆழ்ந்த தத்துவத்தையும் எச்சரிக்கையையும் பகுத்தறிவு படைத்தவர்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டும். ‘நபித்துவத்’தைப் பெற்ற ஒருவரே இப்படி எச்சரிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களைப்பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது? மனத்தில் தோன்றும் எண்ணத்துக்கே இப்படி தண்டனை கொடுக்கப்படும்போது, தமக்கு ஏற்படுகிற துன்பங்களை எடுத்துக் கூறி புலம்பியழுகிறவர்களின் நிலைமை எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள். இறைத் தீர்ப்பைப் பார்த்து ஒரே ஒருமுறை வெறுப்புக் கொண்ட இறைத்தூதருக்கு இப்படி எச்சரிக்கை செய்யப்பட்டால், தம் வாணாள் முழுவதும் இறைத் தீர்ப்புக்கு எதிராக ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்படி எச்சரிக்கப்பட வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த இறைத் தூதர் தமக்கு ஏற்பட்ட இன்னல் குறித்து இறைவனிடம் முறையிட்டார். அவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் அவர் முறையிடவில்லை. இறைவனிடம் நேரடியாக விடுக்கப்பட்ட முறையீட்டுக்கு இப்படி எதிர்ப்பு கிடைத்தால், இறைவனை மறந்துவிட்டு அவனல்லாத எல்லாரிடமும் விடுக்கப்படுகிற முறையீடுகளுக்கு எப்படி எதிர்ப்புக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

நமது மனத்தால் தோன்றுகிற தீமைகளிலிருந்தும் நமது செயல்களால் விளையும் விபரீதங்களிலிருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக! நமது நடைமுறையில் தோன்றுகிற ஒழுங்கீனங்களை மன்னித்தருள வேண்டும் என்றும், அவற்றைத் தனது அன்புக் கண் கொண்டு திருத்தியருள வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன்.

‘இறைவனின் தீர்ப்புகளைத் திருப்தியோடு ஏற்றுக் கொள்வது என்றால் என்ன பொருள்?’ என நீங்கள் கேட்கக் கூடும்.

உங்கள் வாணாளில் தோன்றுகிற துன்பங்கள் குறித்து உங்களுக்குச் சங்கடம் தோன்றவில்லை என்றால், நீங்கள் இறைத் திருப்தி எனும் படித்தரத்தை அடைந்திருக்கிறீர்கள் என்பது பொருள்.

உங்களுக்கு துன்பம் ஏற்படும்போது இது ஏற்படாமல் இருந்தால் நல்லது என்று எண்ணினால் அந்தப் படித்தரத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்பது பொருள். உலகில் நடைபெறும் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனின் தீர்ப்பே மூல காரணம் என்று உணரும் நீங்கள் இறைத் தீர்ப்பை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், உங்களால் இறைவழியில் முன்னேறவே முடியாது. ஏனெனில் கவலையும் அச்சமும் குடிகொண்டிருக்கும் இதயத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை தழைக்க முடியாது.

உங்கள் வாழ்வில், உங்கள் ஆத்மிகப் பயணத்தில் துன்பத்தைத் தவிர்த்து வேறு எதுவும் தோன்ற முடியாது என்று நான் கூறவில்லை. உலக வாழ்வில் துன்பத்தை விட இன்பமே அதிகமாகக் காணப்படுகிறது. உங்களுக்கு நல்லது நடந்தால் அதற்குக் காரணமான இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் இறைவனின் தீர்ப்பு இல்லாமல் எதுவும் நடக்க முடியாது. உங்களுக்கு கெட்டது வந்தால் அதனைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இறைவன் அளித்த தீர்ப்புக்குத் திருத்தம் காண முற்படாதீர்கள்.

நீங்கள் இப்படி நடந்து கொண்டால், உங்கள் மனத்தில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும். கவலைக்கும் அச்சத்துக்கும் குழப்பத்துக்கும் அங்கே இடம் இருக்காது. இப்படிப்பட்ட இதயத்தை வைத்து இறைவழியை அணுகும்போது அது ஒருபோதும் துணை நிற்கத் தவறாது.

ஆரம்பமும் முடிவுமில்லாத இறைவனே அனைத்துப் புகழுக்கும் உரியவன்.

**

நன்றி : அஃப்சரா பதிப்பகம்

8 பின்னூட்டங்கள்

 1. 09/06/2011 இல் 13:21

  ஹஜ்ரத் அவர்கள் இந்த நிலையை அடைய ஒரு சிம்பிளான அழகான பயிற்சி சொன்னார்களே அது நினைவிற்கு வருகிறது.

 2. 09/06/2011 இல் 13:22

  உண்மையிலேயே ஹஜ்ரத் அவர்களே என்னை என்லைட்டன் பண்ணியது போல் இருந்தது.

  பீஸ் டு மை ஹார்ட் அண்ட் சவ்ல்..

  பகிர்ந்தமைக்கு நன்றி..

 3. shahul said,

  09/06/2011 இல் 22:19

  இதுதான் ஞானம்.

 4. நாகூர் ரூமி said,

  09/06/2011 இல் 23:24

  அன்பு ஆபிதீன், மின்ஹாஜுல் ஆபிதீன் இருக்கட்டும், உமது அலுவலகத்தில் ஏதோ நடந்தது பற்றி நீர் கவலை கொண்டது தெரிந்தது. அது என்ன? சரி, சொல்ல முடியாவிட்டால், அது இப்போது தீர்ந்துவிட்டதா என்றாவது சொல்லவும்.

  • 10/06/2011 இல் 01:18

   //இறைவனின் தீர்ப்பு இல்லாமல் எதுவும் நடக்க முடியாது. உங்களுக்கு கெட்டது வந்தால் அதனைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்// –

   தீர்ந்துவிட்டதே!!

 5. siddique said,

  10/06/2011 இல் 19:46

  wonderful…!

  Please write more about Hazath article? May God help us to follow these in our daily day to day life.

  Siddique

 6. 11/06/2011 இல் 11:34

  ’நடந்துபோன காரியங்களைப் பற்றிய வருத்தமும் நடக்கப் போகும் காரியங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் இந்த நேரத்தின் ‘பரக்கத்’தைக் கொண்டு சென்றுவிட்டன!’ எத்தனை அற்புத வரிக்ள்.

  உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெற இறைவனை இறைஞ்சுகின்றேன்.

  பி.கு. நம்மை அவனை நோக்கி திருப்பும் முஸிபத் கூட ஒரு நிஃமத் என்பதும் நினைவுக்கு வருகின்றது.

 7. 11/06/2011 இல் 12:56

  // இந்த வியாழன் இரவு மட்டும் நான் தேடுவது வேறு என்று சொன்னால்… கொன்றே விடுவீர்கள் //

  அது தெரியும் எமக்கு ஹி ஹி…!! அதெல்லாம் இருந்தால் நல்ல நடப்புன்னு அர்த்தம் ‘கொல்லப்’படும், விடும் (என்று சொல்ல மாட்டேன்!!) சரீரீரீ… (உங்கள் சீதேவி வாப்பா கேட்பதாக எண்ணி) இந்த வியாழன் எதை கொன்றீர்! எதை வென்றீர்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s