வாங்க விற்க வான் கோ

ஒவியன் வான்கோ பற்றிய பதிவு இது. ‘வான்கோன்னா யாருப்பா?’ என்று மீண்டும் கேட்கும் வாலிப வயோதிகர்களுக்கு, ’இப்ப சொல்லுதேன் சரியா கேட்டுக்க,  வாங்கோன்னா எந்திரிச்சிக்க ; கோங்கோன்னா விடிஞ்சிரிச்சி’ என்பதுதான் பதில். கொஞ்சம் சீரியஸா பேசுவோமா? நண்பர் சுகுமாரன் சொல்வதை காதுதாழ்த்திக் கேட்போம்: ‘எதார்த்தத்தின் மீது நாம் உருவாக்கியிருக்கும் பாதுகாப்பை ஊடுருவிச் சென்றதிலும் தன்னுடைய அகஉணர்வுக்கு எதார்த்தத்தின் படிமத்தை வழங்கியதிலுமே வான்கோவின் கலை மகத்துவம் பெறுகிறது. கடிதம் ஒன்றில் குறிப்பிட்டார்: “ஒரு நல்ல ஓவியத்தைப் படைப்பது முத்தையோ வைரத்தையோ கண்டெடுப்பதைவிட எளிதானதல்ல. அதேபோல, சிரமப்படவேண்டும்; வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்’. மேலும் பார்க்க : வான்கோவின் கடிதங்கள் – சுகுமாரன் . பதிவுக்கு வருகிறேன். ’வான்கோவின் காது’ சிறுகதையை – தன் ’சமாதி’யுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார் தாஜ். ‘சமாதி’ என்றதும் பயப்பட வேண்டாம்,  கவிதையின் தலைப்பாக்கும்  அது. இவருக்கு வேறு உடம்பு சரியில்லையே , யார் சொல்வதையும் கேட்க மாட்டேங்கிறாரே என்று பயந்துகொண்டேதான் வாசித்தேன். சே, நம்மை சாகடிப்பதுதான் அவர் குறிக்கோள். கவிஞர் வாழ்க!  ஓவியனாக உதார் விட்டுக்கொண்டிருக்கிற என்னையும் கொஞ்சம் உளறச் சொல்லியிருக்கிறார். அது பதிவின் கடைசியில் – வான்கோ ஓவியத்தின் கீழே – இடம் பெறுகிறது. 

***

தாஜ் குறிப்புகள் :

இந்த ஆண்டு
சென்னையில் நடந்தேறிய
புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தபோது
என்னையும் அறியாமல் வாங்கிய
சில நல்ல புத்தகங்களில்
இதுவும் (உலக அதி நவீன சிறுகதைகள்) ஒன்று.

நவீன இலக்கியம் சார்ந்து
உலகளாவிய வாசகர்களது
கவனத்தை ஈர்த்த
பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களின்
சில கதைகள் இந்தத் தொகுப்பில்
இடம் பெற்றிருக்கிறது.

நான் வாசிக்க விரும்பிய
‘வான்கோவின் காது’
இந்தத் தொகுப்பில்
இடம் பெற்றிருந்ததில்
மிகுந்த சந்தோஷமெனக்கு.

அமரர். வெங்கட்ராம் அவர்களின்
சாகித்திய அக்கெடமி விருது பெற்ற
‘காதுகள்’ நாவலை
ரசித்துப் படித்து
உள்வாங்கி உருகிப்போன என்னால்
‘வான்கோவின் காது’ என்கிற
இந்தச் சிறுகதையின்
முடிவை உள்வாங்க முடியாமல் போனது.
திணறிப் போனேன்.
முழுமையாய்
விளங்கிவிட்டது என்று
இப்பவும் என்னால் சொல்ல முடியாது.
இக்கதையினால் என் முன் எழுந்து நிற்கும்
இந்தச் சவாலினால்
நான் விண்டுபோகாமல் இருக்க
ஆபிதீன்
அதற்கு பதவுரை எழுதி உதவினால்தான் உண்டு.

*

இந்தத் தொகுப்பில் உள்ள
பல கதைகள்
சிறிய வடிவிலானவை.
பத்து பதினைந்து வரிகளில்
பல கதைகள் இருக்கிறது.
அத்தனையையும்
சிறந்த உலக இலக்கியக் கர்த்தாக்களால்
எழுதப்பட்டதாகும்.
வாசகர்களின் பார்வையில்
அவற்றை வைக்க எண்ணமுண்டு.
காலம் கனியட்டும்.

இந்தத் தொகுப்பில் காணும்
ஒரு கதை
இரண்டே வார்த்தைகளைக் கொண்டது.
எழுதியவர்: எம்.ஸ்டேன்லி பபின்
தலைப்பு:
‘கரடி வேஷம் போட்டவன் வாழ்வில் ஒருநாள்’

கதை:

“என்னைச் சுடாதே”

மதிப்பிற்குரிய
மறைந்த நம்ம சுஜாதா அவர்கள்
இருபது வருஷத்துக்கு முன்னால்
இரண்டு வரிகளில்
கதையொன்று சொன்னது
நினைவில் நிற்கிறது.

‘ஒரு ஊர்ல ஒரு நரியாம்
அதோடு கதைச் சரியாம்’

ஸ்டேன்லி பபினைவிட
நம்ம சுஜாதாவின்
இந்த இரண்டுவரிகள்
இன்னும் அழுத்தமாக இருக்குல!

சுஜாதாவின்
இந்த இலக்கிய வித்தையை
ரசித்து வாசித்த நான்
என் பங்கிற்கு
ஒரே வார்த்தையில் கவிதையென்றை
நெட்டுக் குத்தாக எழுதினேன்.
(சிஷ்யன் பதினாறு அடி பாயனுமுல்ல!)

தலைப்பு: சமாதி


வ்


வு
தான்.

*
அவ்வளவுதாங்க
இனி நீங்க
’வான்கோவின் காதை’
வாசிப்பில் காணலாம்.


தாஜ் (1985 ! )

***

வான்கோவின் காது:
மோயாகிர் ஸ்கிளியர்

தமிழில் : கீதாஞ்சலி

வழக்கம்போல நாங்கள் அழிவின் விளிம்பில் இருந்தோம். என் அப்பா, ஒரு சின்ன மளிகைக் கடையின் முதலாளி. ஒரு வியாபாரியிடம் கணிசமான ஒரு தொகைக்காக அவர் கடன்பட்டிருந்தார். மேலும் அவர் அந்த கடனை அடைப்பதற்கு எந்த வழியுமே இல்லை.

என் அப்பாவிற்கு பணத்தட்டுப்பாடு இருந்ததே தவிர அவருடைய கற்பனை சக்தியில் எந்த தட்டுப்பாடும் இல்லை. அவர் புத்தி கூர்மையான, நாகரீக மனிதன். அவர் சரிகட்ட வேண்டிய விஷயங்களை சந்தோஷத்துடன் செய்தார். அவர் பள்ளிப் படிப்பைக் கூட முடித்திருக்கவில்லை. ஒரு அளவான மளிகைக்கடை மட்டுமே அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. மளிகை சாமான்களுக்கு மத்தியில் அவர் வாழ்க்கையின் தாக்குதல்களுக்கு தைரியமாக ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய வாடிக்கையாளர்கள் அவரை மிகவும் நேசித்தனர். ஏனென்றால் அவர் மற்ற பொருள்களுக்கு மத்தியில் கடன்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும் கறாராக பணத்தை கட்டச் சொல்லி அவர் எப்போதும் கேட்டதேயில்லை. ஆனால் அவருக்கு பொருள்கள் அளித்தவர்களின் கதையோ அதற்கு நேர்மாறாக இருந்தது. அவர்கள் கனமான இருதயம் படைத்த கனவான்கள். அப்பாவுக்கு கடன் கொடுத்திருந்த மனிதன் ஒரு இரக்கமற்றவன் என்று எல்லோராலும் அறியப்பட்டிருந்தான்.

அந்த நேரத்தில் மற்ற ஒரு மனிதனாக இருந்தால் துயரத்தில் தள்ளப்பட்டிருப்பான். அவ்விடத்தை விட்டு ஓடிப்போவதைத் பற்றி அல்லது தற்கொலை செய்து கொள்வதைப்பற்றியோ கூட சிந்தித்துப் பார்த்திருப்பான். ஆனால் அப்பா அப்படிச் செய்யவில்லை. நல்லதையே யோசிக்கும் அப்பா இதிலிருந்து வெளியே வர ஒரு வழியைக் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்துச் சமாதானமானார்.

இந்த மனிதனுக்கு ஏதாவது ஒரு பலகீனம் இருந்தே தீரவேண்டும் என்று அவர் சொன்னார். அந்த வழியில்தான் நாம் அவனை மடக்கப்போகிறோம். இங்கும் அங்கும் விசாரித்து, உறுதியளிக்கக் கூடிய ஒரு விசயத்தை அவர் தோண்டியெடுத்து வந்தார். தோற்றத்தில் மனிதனாகவும் தோன்றிய அவன், ஓவியர் வான்கோ மீது அளவு கடந்த ஆசையை மறைத்து வைத்திருந்தான். அந்தச் சிறந்த ஓவியரின் கலைப் படைப்பின் மறுபிரதிதிகளைத் தன் வீடு முழுக்க வைத்திருந்தான். கிரிக்டக்லஸ் முக்கிய கதாபாத்திரம் எடுத்து நடித்த, அந்த ஓவியரின் சோகமான வாழ்க்கையை பற்றிய படத்தை குறைந்தபட்சம் ஆறுமுறையாவது அவன் பார்த்திருப்பான். 

வான்கோவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அப்பா நூலகத்திலிருந்து கடனாக வாங்கி வந்து, அதிலேயே ஒரு வாரமாக மூழ்கியிருந்தார். பிறகு ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் அவருடைய படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. அதிலிருந்து அவர் வெற்றியுடன் வெளியே வந்தார்.

“நான் கண்டுபிடித்து விட்டேன்.”
 
எனக்கு பன்னிரெண்டு வயதாயிருந்த போது நான் அவருக்கு உண்மையாகவும், ஒத்துழைப்பு தருபவனாகவும் இருந்தேன். அதனால் அவர் என்னை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று, அவர் கண்கள் மினுக்க என்னிடம் கிசுகிசுத்தார்.

“வான் கோவின் காது, அது நம்மைக் காப்பாற்றும்”

“நீங்கள் இருவரும் என்ன கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அம்மா கேட்டாள். அவள் தனது கணவனின் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு பொறுமைசாலி இல்லை.

“ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை”, என்று அவளிடம் கூறிவிட்டு, குரலை தாழ்த்திக் கொண்டு என்னிடம், “அதைப்பற்றி அப்புறம் விளக்குகிறேன்” என்று கூறினார்.

அவர் கூறியபோது கதை இப்படியாகச் சென்றது. அதாவது வான்கோ பைத்தியக்காரத்தனதுடன் தன் காதை வெட்டி எடுத்துத் தன் காதலிக்கு அனுப்பியிருக்கிறார். அப்பா, தன் திட்டத்தைத் தீட்டுவதற்கு இந்த உண்மைக்கதைதான் வழிவகுத்தது. அப்பா, கடனளித்தவனிடம் சென்று, வான்கோவின் காதலிதான் தன் கொள்ளுத்தாத்தாவின் காதலி என்றும், அவள் பதப்படுத்தி வைத்திருந்த அந்த ஓவியனின் காதை தன் கொள்ளுத்தாத்தாவுக்குக் கொடுத்ததாகவும் கூறுவார். பிறகு, இந்தக் காதை மாற்றிக் கொள்வதற்கு பலனாக தன்னுடைய கடனையெல்லாம் தள்ளுபடிசெய்துவிட்டு, இன்னும் கொஞ்சம் பணத்தையும் அப்பா அவனிடம் கேட்பார்.

“இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றார் அப்பா. அப்பா கூறுவது சரிதான். அப்பா வேறு ஒரு கனவுலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தார். இப்போது பிரச்சனை அவருடைய அபத்தமான, யோசனை அல்ல. ஏனென்றால் நாங்கள் அவ்வளவு மோசமான நிலையில் இருந்தோம். இப்போது எதை முயற்சி செய்து பார்த்தாலும் அது எங்களுக்கு நல்லதுதான். ஆனால் இப்போது ’காதுக்கு’ என்ன செய்யப்போகிறோம்?

காதா? இதுவரை அது தனது மனதில் உதிக்காததுபோல அவர் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்.

“ஆமாம், வான்கோவின் காதுகள். அதை இந்த உலகத்தில் எங்கிருந்து வாங்கப் போகிறீர்கள்?”

“ஆம், பிரச்சினை இல்லை. நாம் பிணவறையிருந்து காது ஒன்றை வாங்கிக் கொள்ளலாம்; என்னுடைய நண்பன் ஒருவன் அங்கு வேலை செய்கிறான். அவன் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.”

மறுநாள் காலை சீக்கிரமாகவே அவர் வெளியே கிளம்பிவிட்டார். மதியம் அவர் முகத்தில் பிரகாசத்துடன் ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்தார். பிறகு அதை கவனமாகப் பிரிக்கத் தொடங்கினார். ஒரு ப்ளாஸ்கில் ரசாயனக்கலவையுடன் ஏதோ ஒன்று கறுத்துப்போய், ஒழுங்கீனமான வடிவத்தில் இருந்தது. அதை வான்கோவின் காதுகள் என்று வெற்றியுடன் அறிவித்தார்.

“யார் அதை இல்லை என்று கூறப்போகிறார்கள்?” எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு தேவைக்காக, “வான்கோவின் காது” என்ற வாசகத்தை அதன் மீது ஒட்டினார்.

மதியம், கடனளித்தவனின் வீட்டை நோக்கி நாங்கள் இருவரும் சென்றோம். அப்பா உள்ளே சென்றார். நான் வெளியே காத்திருந்தேன். ஐந்து நிமிடம் கழித்து குழப்பத்துடன் வெறித்தனமாக வெளியே வந்தார். அந்த மனிதன் அந்தத் திட்டத்தை மறுத்ததுமட்டுமல்லாமல் அந்த ப்ளாஸ்கை அப்பாவிடமிருந்து பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே தூக்கியும் போட்டுவிட்டான்.

“அவமானம் ”

அவரோடு நான் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இப்படியான ஒரு வெளிப்பாட்டை ஓரளவுக்கு தவிர்க்க முடியாது என்று நான் நினைத்தேன். அந்தச் சாலையில் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அப்பா வழிநெடுக்க “அவமானம், அவமானம்” என்றே முனகிக் கொண்டே வந்தார். வழியில் திடீரென்று உறைந்துபோய் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அது இடது பக்கத்தினுடையதா அல்லது வலது பக்கத்தினுடையதா?”

“என்னது?” என்று புரியாமல் நான் கேட்டேன்.

“வான்கோவின் வெட்டப்பட்ட காது இடது பக்கத்துடையதா அல்லது வலது பக்கத்தினுடையதா?” “எனக்கெப்படி தெரியும்?” ஏற்கனவே மொத்த விஷயத்தினாலும் எரிச்சலூட்டப்பட்டவனாக நான் கேட்டேன். “நீங்கள்தானே அந்தப் புத்தகத்தைப் படித்தவர். உங்களுக்குத்தானே அது தெரிந்திருக்க வேண்டும்.”

“ஆனால் எனக்கு தெரியவில்லை” என்று சமாதானமற்றவராய் கூறினார். “எனக்குத் தெரியவில்லை என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.”

நாங்கள் சிறிதுநேரம் நிசப்தமாக நின்றுக்கொண்டிருந்தோம். அப்போது நான் நச்சரிக்கும் சந்தேகத்தால் தாக்கப்பட்டிருந்தேன். நான் அந்தச் சந்தேகத்தை வெளிப்படுத்தவே பயந்தேன். ஏனென்றால், அதற்கான விடை என்னுடைய பால்யகாலத்தின், இறுதிக்கட்டமாக இருக்கக்கூடும் என்பது எனக்கு தோன்றியது.

“அப்போது அந்த ப்ளாஸ்கில் இருந்தது வலது பக்கத்தினுடையதா அல்லது இடது பக்கத்தினுடையதா?” என்றேன் நான்.

வாயடைத்துப் போனவராய் என்னை வெறித்துப் பார்த்தார்.

“உனக்கு ஒன்று தெரியுமா? அதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று சோர்வான கரகரத்தக் குரலில் முணுமுணுத்தார்.

அதன் பிறகு நாங்கள் வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினோம். நீங்கள் ஒரு காதை கவனத்துடன் ஆராய்ந்து பார்த்தீர்களானால் எந்த காதாக இருந்தாலும், அது வான்கோவினுடையதாக இருந்தாலும் இல்லையென்றாலும் அது ஒரு கேள்விக்குறியைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணமுடியும். இந்தப் புதிரில்தான் நான் தொலைந்து போனேன். இதிலிருந்து திரும்ப வெளியேவரும் வழியை இனி எப்போதுமே என்னால் கண்டுபிடிக்க முடியாது.

***

நன்றி :  கீதாஞ்சலி / அம்ருதா பதிப்பகம் & தாஜ்

***

இந்தக் கதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இணையத்தில் வந்துவிட்டது- ’வெப்துனியா’வில். ஆர்.முத்துக்குமார் மொழிபெயர்த்திருக்கிறார்.  இப்போது கிடைத்ததை இன்னொரு மொழிபெயர்ப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். ஏன், இன்னொரு கதையென்றும் எடுத்துக்கொள்ளலாம்.  எதையும் அனுப்புவதற்கு முன்பு தேடிப்பாரேன்யா என்றால் கேட்கிறாரா இந்த தாஜ் ? என்ன செய்வது, ஆர்வம் ஊற்றெடுக்கிறது அவருக்கு. அதுவாவது ஊறட்டும்!  அவர் கேட்டதற்காக நானும் கொஞ்சம் சொல்கிறேன். 

இந்தச் சிறுகதையின் முடிவை தாஜால் ஏன் உள்வாங்க முடியவில்லை? பதவுரைக்கு என்னை வேறு அழைக்கிறாரே… இதுதானே வேணாங்கிறது, நான் என்ன விமர்சகனா ,  கதையென்பதுவும் கணித சூத்திரமா? அவரவர்க்கு தோன்றியதை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே, இதிலென்ன பிரச்சனை? என் எழுத்தை வாசித்த ஒருவர்,  ஆப்ரிக்காவின் அடியிலெபுடுக்குங்கோ எழுதியது போல இருக்கிறது என்றார். ’யாருங்கோ அதுங்கோ?’.  ‘ஆடுமாடு மேய்க்கிறவங்கோ’. உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

’வான்கோவின் காதின்’ முடிவு எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது . தத்துவ விளக்கங்களில ஈடுபட்டு தடுமாற விரும்பவில்லை. கண் எட்டும் தூரத்திற்கு கவலைகள் இருக்கின்றன. வான்கோ அறுத்துக்கொண்ட்து அவனது வலது காதையா இடது காதையா என்பது காசோடு காதும் உள்ளவர்கள் கேட்டறிந்ததே. இடது காதுதான். இடது காதேதான் ஐயா. பின்னே மண்டபத்திலிருந்து…. இழுக்க வேண்டாம், அவன் வெட்டிக்கொள்ளும்போது நான் அங்கே இல்லையென்றாலும் (காகினுடன் காப்பி சாப்பிடப் போயிருந்தேன்) விருப்போடு ‘விக்கி’ உதவிற்று. ’Lust for Life’ சினிமாவும்தான். (சுகுமாரனின் கட்டுரையை படித்த அன்றே இறக்கி விட்டேன், தெரியுமோ? Torrent லிங்க் கொடுக்க மாட்டேன். நீங்களே தேடிக்கொள்ளுங்கள்). சிலர் சித்தரிப்பதுபோல காதலிக்கு பரிசு கொடுப்பதற்காகவே அவன் காதை வெட்டிக் கொள்ளவில்லை என்பது என் முடிபு. வெட்டிக்கொண்டதும் கொடுத்தான், முன்பு ஆசைப்பட்டுக் கேட்டாளே என்று. பழைய பாக்கியாக இருக்கலாம். பரிசா அது ரேச்சல்? நண்பன் காகினுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பின் – மன அழுத்தம் மேலும் அதிகமாகி – தன் காதை அறுத்துக் கொள்கிறான் வான்கோ. காகின்தான் வெட்டினார் என்றெல்லாம்கூட அவரவர் போக்கிற்கு இன்னும் ’வெட்டி’ விவாதங்களில் பலர் ஈடுபட்டாலும் புதிரைக் கண்டுபிடித்துவிட்டதாக இரு வருடங்களுக்கு முன் டைம்ஸ் இதழ் விட்டிருக்கிறது, தம்பி தியோவின் திருமண செய்தி கிடைத்ததும் வெட்டிக்கொண்டதாக.  ‘Dreams‘ சினிமாவிலோ , ‘என்னை வரைந்து கொண்டிருந்தேன். பாரு, இந்த காது மட்டும் ஒழுங்கா வரலே. அதனால ’கட்’ பண்ணிப் பார்த்து வரையவேண்டியிருந்தது’ என்று வான்கோ சொல்வதாக ஒரு காட்சி வரும்.  வான்கோவை சந்திக்கப் போகும் இளைஞன் அவருடைய ஓவியங்களின் இடையே நடந்து வரும் இந்த கனவுப்பகுதி அற்புதமான கவிதையாக – நம்ம தாஜ்ஐயா கவிதை போல அல்ல  (அப்பாடா, பழிவாங்கிவிட்டேன்!) – எடுக்கப்பட்டிருக்கும். ரொம்பவும் ரசித்த சினிமா. எல்லாமே சரியாக இருக்கட்டும், என்னிடமுள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா  (2010) தமிழில் சொல்வதையே தயங்காது எடுத்துக் கொள்வோம். Disaster struck on Christmas Eve 1888. Physically and emotionally exhausted, van Gogh snapped under the strain. He argued with Gauguin, reportedly chased him with a razor, and then cut off the lower half of his own left ear…

ஒரு சுவாரஸ்யம், மேலேயுள்ள வான்கோவின் ஓவியத்தில் வலது காதில் அல்லவா பேண்டேஜ் போடப்பட்டிருக்கிறது!  கண்ணாடியில் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; குழப்பம் தெளியும். என்னைப்போல் Irfanview பிரியரா? இமேஜைத் திறந்து , மாற்றி மாற்றி ’H’ அழுத்தி விளையாடுங்கள். சுவாரஸ்யம் கூடும். கதையில் , பிணவறையிலிருந்து பெறப்படும் போலி காது இடது பக்கத்தினுடையதா அல்லது வலது பக்கத்தினுடையதா என்ற கேள்விக்கு மட்டும்  எதையும் அழுத்த வேண்டாம். ’உங்களுடையதை’ அழுத்தினால் போதும்  அதுவும் ஒரு தூரிகைதான். இல்லையா? (சிறுவயதில் நிறைய ‘பெயிண்ட்’ அடித்ததுண்டு நான்!) காது ஏன் கேள்விக்குறி போல இருக்கிறது என்ற அபத்தமான கேள்வியை மட்டும் ( ’கேள்விக்குறி’ வடிவமென்று கீதாஞ்சலி சொன்னால் , ’கிருக்கு மறுக்கான பல்வழி அமைப்பு வடிவத்தில்’ என்று ஆர்.முத்துக்குமார் ஏன் சொல்கிறார் என்பது இன்னொரு கேள்வி.  ஆங்கிலம் அறிந்த ரூமிசார்தான் அதிகம் சொல்லனும்.)  கடவுளிடம்தான் கேட்க வேண்டும். கடவுளே ஒரு அபத்தம் என்று சொல்பவர்களுக்கு காதுகள் தேவையில்லை. 

நம்ம கடவுள் இருக்கிறாரே, அவருக்கும் ஏகப்பட்ட குழப்பம்தான். இதுக்குத்தாங்கனி எல்லாமே ஒண்ணா படைக்கனும்ங்குறது..! 

’வயசானவங்களக்கு ஏன் காது கேக்காம போவுது, தெரியுமா? அவங்க சொல்றதை யாருமே கேக்குறது இல்லே. அதனாலதான்’ என்று ’யங்’ தெரியாத கிழவர் ஒருவர் சொன்னது இப்போது ஞாபகம் வருகிறது. அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை! என்னைப் பொறுத்தவரை , அபத்தமான முறையில் கடனைத் தீர்க்க நினைப்பதற்கு , காமெடியான கேள்வியுடன் கதை முடிகிறது. அபத்தமாக முடிகிறது. என்றும் சொல்லலாம். அவ்வளவுதான். கதைசொல்லியான அந்தப் பையன் , விடை தெரிந்துவிடுமோ என்று பயப்படுவதைப் பார்த்தால் நம் பிரச்சினைகளே கேள்விஞானம் கிடைத்தபிறகுதான் ஆரம்பமாகிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் ’மதமற்ற’ ஷைத்தான் சாதிக். மங்கலம் பொங்கும் மதவாதிகளிடம் போகலாமா மனத்தெளிவு பெற? ஐய்யய்யோ, நம் காதுகளிலிருந்து உடனே ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிடும்.

அன்பின் தாஜ்… இதற்குத்தான் பத(க்)உரை எழுத நான் வரமாட்டேன் என்றேன். எனக்கு வான்கோ தெய்வம் (அடி, ஷிர்க்!). பிரஷுக்குப் பதிலாக எரியும் நெருப்புக் கட்டையை தொடர்ந்து சொருகியதுபோல் வலிமையாக விழும் அவனது ஒவ்வொரு ’ஸ்ட்ரோக்’க்கிற்கும் அடிமை நான். அப்புறம் இருக்கவே இருக்கிறது, வாழும்வரை அங்கீகரிக்கப்படாமல் அவன் புழுங்கிச் செத்தது. பைத்தியம் பைத்தியம் என்று அடித்துவிரட்டி, செத்ததும் அவனைச் சீராட்டும் சீர்கெட்ட சமூகத்தில் இன்று வான்கோ பொம்மையாகிப் போனான் – ஸ்க்ளையருக்கும். அவருடைய இந்த கதையில் நிஜமான வான்கோ வராதது எனக்கு பெரிய ஏமாற்றம்.  நம்போன்ற சாதாரணர்களின் குழப்பம் நீங்க – தன் மயக்கும் மொழியால் –’அன்பு தியோ’ எழுதிய அன்பர் எஸ்.ரா சொல்லலாம். ஹா, என்னமாதிரி அனுபவித்திருக்கிறார் மனுசன், வான்கோவின் இரவை!  ’சூரிய மஞ்சள்’ எழுதிய தேணுகாவும் சூப்பராக விளக்கலாம். ஆதிமூலத்தை தொடர்புகொள்ள ‘ஆல்ஃபா தியானம்’ தேவைப்படுமாதலால் ஓவியர் அரவக்கோன்ஐயா அவர்களே இப்போதைய என் தேர்வு. அவரை எங்கே தேடுவது இப்ப? ’ராயர்கிளப்’ போய் ரொம்ப நாளாச்சி. அதுவரை, கண்களை செங்குத்தாக தனித்தனியாக வரைந்து , கோணலான மனித முகத்தின் இரு பக்கங்களிலும் பொருத்தி , ’இதுதான் காது வாப்பா’ என்று சிறுவயதில் சொன்ன என் செல்லப் பிள்ளைகள் அனீகாவும் நதீமும்தான் இன்றுவரை எனக்கு செம்ம புதிர். ஏன், வேலைமெனக்கெட்டு இதைப் படிக்கிற நீங்களும்தான்!

கடைசியாக ஒன்றும் சொல்லவேண்டுமே… அதாவதுங்க…, நாகூர் மியான்தெருவிலுள்ள ஒரு வீட்டில் (8/54A) பத்திரமாக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அறுபட்ட காதுகளை நீங்கள் கவனத்துடன் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அது ஆன்மிகத்திற்குள் விழுந்த ஆபிதீனுடையது என்று தெரியவரும். இதில் புதிர் ஏதுமில்லை. தொலைந்துபோகவும் வேண்டாம். எத்தனை முறை ஊர் போனாலும் ‘விசாவோடுதானே வந்திக்கிறீங்க?’ என்று ஊரான்களோடு சேர்ந்துகொண்டு உள்ளன்போடு விசா-ரிக்கும் எங்கவூட்டு ’மஹாலெட்சுமி’  (அஸ்மான்னு சொன்னா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்) கேட்கும் கேள்வியால் நேர்ந்த கொடுமை அது.  யாரும் கேட்காமலேயே கேட்பாரற்றவர்களையும்  காத்து ரட்சிக்கும் என் கடவுளே , கேக்குதா?

’அன்புள்ள வின்சென்ட்’ கட்டுரையிலுள்ள சுகுமாரன் வரிகளோடு முடித்து விடுகிறேன். ‘ கலைக்கும் அதன் மூலமாக மனித இனத்துக்கும் முழுமையாக தன்னை சமர்ப்பித்துக்கொண்ட கலைஞன், வான்கோவைப் போல எவருமில்லை. கலையே வாழ்வின் அர்த்தமாகவும் தான் வாழ்ந்த வாழ்க்கையே கலையாகவும் இயங்கிய பெரும் கலைஞன் வான்கோ. கலையும் கலைஞனும் வேறு வேறு என்று கருதப்படும் சிந்தனைச் சூழலில் இன்னொரு வான்கோவைக் கற்பனைதான் செய்ய முடியும்.’ 

ஆபிதீன்

***

தொடர்புடைய பதிவுகள் :

வான்கோவின் கடிதங்கள் – சுகுமாரன் & வான்கோவின் வயல் –  எஸ். ராமகிருஷ்ணன்

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

3 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  28/05/2011 இல் 19:13

  நன்றி… ஆபிதீன்.

  உங்களோடு
  தோழமைக் கொண்ட
  இந்த நாற்பது வருடக்காலத்தில்…
  உங்களிடம்
  தேடி அடைய பலதைப்பற்றியும்
  எத்தனை எத்தனையோ
  கேள்விகளை கேட்டிருக்கிறேன்.
  இந்த என் கேள்விக்கு
  இத்தனை நுட்பமாய் அடர்த்தியாய்
  பதில் அளித்த மாதிரி
  முன் எப்பவும்
  இப்படியானதோர் முழுமையோடு
  நெகிழ்ந்ததில்லை நீங்கள்.

  வான்கோவின் காதுக் குறித்த
  உங்களது ஆய்வில்…
  ‘நாகூர் சின்ன வான்கோ’வின்
  காதுகள் அறுப்பட்டு
  வீட்டில் பாதுக்காக்கப்படுவதாக
  நீங்கள் துணுக்காக ஒரு செய்தியை எழுதி விட்டீர்கள்.
  நான் இங்கே நினைத்து நினைத்து
  வற்றாமல் சிரித்தவனாக இருக்கிறேன்.
  நன்றி
  வணக்கம்.
  -தாஜ்

 2. JAFAR SADIQ said,

  31/05/2011 இல் 07:59

  Brother Abedheen does not come forward to interpret anything. He usually has the habit of mocking at everything. Brother Taj has more or less succeeded in getting him bring his point of view on the theme of this short story. Hats off to Taj.

 3. 12/01/2016 இல் 15:46

  Simon Schama’s Power of Art: Van Gogh


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s