தமிழக முதல்வருக்கு வாழ்த்தும், இன்னும் பிற செய்திகளும் – தாஜ்

அன்புடன்….
ஆபிதீன்
 
திகார் ஜெயில் ஜெயித்துவிட்டது.
போகட்டும்.
நமக்கெல்லாம்…
அந்த ஜெயிலைப் பற்றிய
புதுக் கவிதையொன்று
கட்டாயம் உண்டு!
 
*
ஜெ….
’ஜெயா டிவி’க்கு அளித்த
முதல் பேட்டியின் போதான
புகைப்படம் கிடைத்தால்
கட்டுரையோடு
பிரசுரிக்கவும்.
நன்றி.
தாஜ்

***

தமிழக முதல்வருக்கு வாழ்த்தும், இன்னும்பிற செய்திகளும்

2011 சட்டசபைக்கான தேர்தல் முடிவு
‘ஆட்சியாளர்களை உருட்டி, புரட்டி
வீசியெறிந்திருக்கும் சுனாமி’யென
அரசியல் கணிப்பாளர்கள்
கணித்திருக்கிறார்கள்!

ஆண்ட கட்சி
தன் முகம் சிதைய தூரவீசப்பட்டு
அநியாயத்திற்கு 
அய்யோ பாவமென
தலைகீழாய் வீழ்ந்து கிடக்கிறது.

இந்த அலங்கோல வீழ்ச்சி நிலையிலும்
‘மக்கள், தனக்கு
ஓய்வு தந்திருப்பதாக’
சொல்கிறார் முன்னால் முதல்வர்!
என்னத்த சொல்ல?

அரசியல்வாதிகளுக்கு
பிடரியில் கண் இருக்குமோ என்னவோ!
எப்பவும் அவர்கள்
யதார்த்தத்தைக் காண்பது இல்லை.
அதை ஒப்புக்கொள்வதென்பதும் இல்லை.

ஆண்ட கட்சியின்
இந்தப் படுதோல்விக்கு
கணிப்பாளர்கள் கணித்திருக்கும்
அந்தக் கணிப்பும்தான் என்ன?
அது கூறும்
அந்த யதார்த்தச் சங்கதிகளும்தான் என்ன?

கணிப்பாளர்கள் கூறும்
அந்த யதார்த்தங்கள்
ரொம்பவும் நிதர்சனமானது.
எல்லோருமே தீர அறிந்தது.
அது, முன்னால் முதல்வரின்
குடும்ப நபர்களின்
அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்டது.

கவனியுங்கள்.
முன்னால் முதல்வரின்
ஒரு பிள்ளை துணைமுதல்வர்
இன்னொரு பிள்ளை மத்திய மந்திரி
பேரன் மத்திய மந்திரி
மகள் மேல்சபை எம்.பி.
மற்றும், குடும்ப டி.வி.யின் நிர்வாகி!
மேலும்,
டெல்லி வழியிலான லஞ்சவரவின் காப்பாளர்!
முன்னால் முதல்வரின்
மூத்த மனைவிக்கும் ஓயவில்லை
அவர்களது, டி.வி.குருப்பின்
மறைமுக முதலாளி!

இன்னொரு பேரன்
21 சேனல்களை கட்டி ஆளும் அதிபதி!
நம்பர்-1, விற்பனை நாளிதழின் முதலாளி!
தவிர, சினிமா ஃபைனான்சியர், தயாரிப்பாளர்,
தமிழ் சினியுலக உயிர்நாடியை
கிட்டத்தட்ட கையடக்கத்திற்குள்
கொண்டுவந்துவிட்ட வித்தகர்!
மேலாய்….
ஆசிய பணக்கார வரிசையில்
இடம்பிடித்துவிட்ட கோமான்!

அடுத்தடுத்த பேரப் பட்டாளங்களும்
வலுவான சினிமா தயாரிப்பாளர்கள்,
ஃபைனான்சியர்கள், நடிகர்கள்…
24 மணிநேரமும்
குடும்பச் சேனல்கள் அத்தனையிலும்
விளம்பரமென வலம்வரும்
புகழ்கீர்த்தி கொண்டவர்கள்!
தமிழ் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம்
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும்
அவர்களது சினிமா கீர்த்திகள்
சமீப காலங்களில்
அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது!

இவர்களிடம்
ஏது இத்தனைப் பணம்?
கோடானக் கோடிகளை
இவர்கள் புழங்குகிறார்களே….
ஏது இத்தனைப் பணம்?
இப்படி…
மக்கள் தினம் தினம்
மனதிற்குள் கேட்டு மலைக்கிறார்கள்!
அவர்கள் தினைக்கும் காணும்
‘சமீபக் காலங்களில்
அமர்க்களப்படுத்தும் அந்த விளம்பரங்கள்’
அவர்களது மலைப்பை
அணையவிடாது
எரியூட்டிக்கொண்டே இருக்கிறது.

மக்களின் இந்த மலைப்பை
அந்தப் பேரன்களது
தாத்தாவோ, தகப்பன்களோ
உணர்ந்ததாகவே தெரியவில்லை.
மக்களின் நாடிபிடித்து
பார்க்கத் தெரிந்தவர்களாம் இவர்கள்!

மின்சாரமில்லாமல் நாட்டை
முழுமையாக
இந்த ஐந்துவருட காலமும்
இருட்டாக்கிவிட்டு
இப்படி அநியாயத்திற்கு கூத்தடித்தால்…
எவன் சகிப்பான்?

இன்னொரு பக்கம்…
வேறு ஒரு முரண்கூத்து…
ரொம்ப அவசியமாய்
சினிமாவுக்கு கதைவசனம் எழுத
முன்னால் முதல்வர்
கிளம்பிவிடும் ஜரூர் சாதாரண சங்கதியல்ல.

தான், முதல்வர் என்பதையோ
தள்ளாத வயதுக்காரன் என்பதையோ
துளியும் யோசிக்காமல்
கிளம்பிவிடுவார் முதல்வர்!

விலைவாசியாலும்,
மின்சாரத் தட்டுப்பாட்டாலும்
மக்கள் புழுங்க….
அதனை நிவர்த்திச் செய்யும்
உரிய உச்ச ஸ்தானத்தில் அமர்ந்திருப்பவர் 
தனது நிவர்த்திப் பணிகளை விட்டுவிட்டு
‘பார்க்க சகிக்காத சினிமாவுக்காக’
தனது அரிய நேரத்தை
செலவிடுவது குறித்து
கொஞ்சமும் உறுத்தலில்லை அவருக்கு!
முன்னால் முதல்வரின் இந்த முரண்
அவருக்கு வேண்டுமானால்
உறுத்தாமல் இருந்திருக்கலாம்
மக்கள் எப்படி சகிப்பார்கள்?

இதெல்லாம் இப்படியென்றால்…
தேர்தல் நேரத்துப் பிரச்சாரத்தில்
குடும்ப உறுப்பினர்களின் அணிவகுப்பு
கவனிக்கத்தக்க தனிக் கதை!

ஊர் ஊராக
முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள்
வி.ஐ.பி. கோதாவில்
அணிவகுத்து வலம்வந்ததை
மக்கள் வியந்து பார்த்தார்கள்.
என்றாலும்,
அவர்கள் பார்த்த கோணம் வேறு.
ஏகப்பட்ட கேள்விக் குறிகளோடு
கொண்ட கோணம் அது.

ஒரு திசையில் முதல்வர் கலைஞர் என்றால்
இன்னொரு திசையில் அவரது மகன் ஸ்டாலின்!
வேறொரு திசையில் மூத்த மகன் அழகிரி!
வடக்குப் பார்க்க பேரன் தயாநிதி!
நாலாபக்கமும் கவிமகள் கனிமொழி!
கலைஞரின் தொகுதிப் பக்கமாக
அவரின் மூத்தமகள் செல்வி!
தெற்கே மதுரையைச் சுற்றி
அழகிரியின் அருமை மகள்…
கலைஞரின் குடும்பத்தார்களே
தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து
முக்கியப் பேச்சாளர்களாக
மேலே துளையிடப்பட்ட வேனில்
வலம்வந்த பாங்கை என்னவென்றுச் சொல்ல?
கழகத்திற்கு வேறு சொந்தமோ
உடன்பிறப்புகளோ….
இல்லையோ என்கிற கேள்விகள் எழ
மக்கள் அவர்களின் பவனிகளை
எதிர்க் கொண்டார்கள்.

அறுபது வருட பாரம்பரியம் கொண்ட
திராவிட முன்னேற்ற கழகத்தில்
பிரமாண்ட பேச்சாளர்களுக்கு பஞ்சமாயென்ன?
தடுக்கிவிழுமிடமெல்லாம்
கழகப் பேச்சாளர்கள்
இரண்டுபேராவது இருப்பார்கள்!
ஊருக்கு நாலு
பிரச்சார பிரங்கிகளும் இருப்பார்கள்!
அத்தனைக்கு வலுவான இயக்கம் அது.
அவர்களில் எவர்களையும் சீண்டாது
தலைவரின் குடும்பத்து உறவுகளே
வலுகட்டாயமாக பவணி வந்து
கழகத்தின் பொறுப்புகள்
சகலத்தையும் சுற்றி வளைக்கும்போது
மக்கள்
தங்களது உணர்வுகள் எழுப்பும் கேள்விகளால்
வியக்கவே செய்வார்கள்!

இதன் இதன் பொருட்டுதான்…
எந்த தேர்தலிலும் இல்லாத அளவில்
இந்தத் தேர்தலில்
தன் வாக்குகளால் மக்கள்
அதிர்ச்சிகரமான தேர்தல் முடிவினை
சுனாமியாக
மாற்றி இருக்கிறார்களோ என்னவோ?

முன்பு,
‘ஜெ’ மன்னார்க்குடி குடும்பத்தை
அரசியலில் வலம்வர விட்டபோது
இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம்தான்
அதைக் குறைகண்டது.
கலைஞர்தான்
அவர்களின் பெரும்போக்கை
சுட்டிக் காண்பித்தார்.
இன்றைக்கு அவர்களை
காததூரம் தள்ளி
மௌனிக்கவைத்ததோடு அல்லாமல்
இந்தத் தேர்தலில்
அந்தச் சுற்றத்தின்
வாடையே இல்லாமல்தான்
‘ஜெ’.. வென்றிருக்கிறார்!

*
புதிய முதல்வராக
அதிசயத்தக்க வெற்றிகளோடு
அரியணையேறி இருக்கும்
‘அம்மா’ ஜெயலலிதாவுக்கு
நெஞ்சினிக்கும் வாழ்த்துகள்.

தேர்தல் வெற்றிச் செய்திக்குப்பின்
’தாமரைப் பூக்கள்’ வெய்யப்பட்ட
வெல்வெட் சோஃபாவில் அமர்ந்து
நீங்கள் உங்களின்
முதல் டி.வி. பேட்டியை அளித்திருந்தாலும்…

உங்களது பதவியேற்பு வைபவத்திற்கு
வலதுசாரி சிந்தையும்
பழமையின் பூசனைக் கொண்டவர்களுமான
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்
துக்ளக் சோவும் வந்திருந்தாலும்…

பெரியார் –
அண்ணா –
எம்.ஜி.ஆர் –
சிலைகளுக்கும், சமாதிகளுக்கும் மலர்தூவி
மாலையிட்டு
வணங்கியப் பிறகே நீங்கள்
உங்களது பதவியேற்பு வைபவத்தில்
கலந்துக் கொண்டீர்கள் என்பதில்
மக்களிடத்தில்
திராவிட மகிழ்ச்சி உண்டு.
 
*
பழுத்த அனுபவம் வாய்ந்த
அரசியல்வாதியும்…
இன்னும் பல திறமைகள்
கொண்டவருமான
முந்தைய முதல்வரை
மக்கள்
குமுறியெழத்தக்க காரணங்களால்
தூக்கியெறிந்துவிட்டு
அங்கு உங்களையும்
உங்களது கட்சியையும்
உட்கார அனுமதித்திருக்கிறார்கள் என்பதை
முதல்வர் ‘ஜெ’ மறந்தும் மறக்கக்க கூடாது.

தவிர,
நேற்று நமது கழகத்தை
தோற்கடித்த மக்கள்தான்
இன்றைக்கு…
நம்மை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்
என்பதையும்..
குமுறியெழும் கோபம்
என்றைக்கும் அவர்களிடம்
வற்றாது வாழும் என்பதையும்…
முதல்வர் ‘ஜெ’
கனவிலும் மறந்திடக் கூடாது.
குறிப்பாய்…
‘நிரந்தர முதல்வர்’ என்கிற
பழைய தெம்மாங்குப் பாட்டெல்லாம்
இன்றைக்கு வேண்டாம்.
அந்த ராக இசை
மக்களுக்கு பிடிப்பது இல்லை.

முன்பு ஆட்சி புரிந்தபோது
நீங்கள் செய்ததாக கருதப்படும்
தப்புகளையும் தவறுகளையும் கூட
மக்கள் மறந்துவிடவில்லை
அது அவர்களது அடிமனதில்
நீறுபூத்த நெருப்பாக
கனிந்துகொண்டுதான் இருக்கிறது.
இருந்தும்
அதனை அகத்தே இறுக்கிக் கொண்டு
குடும்ப ஆட்சியின்
கோரத்திற்கு முடிவெழுத
உங்களை மக்கள்
அனுமதித்திருக்கிறார்கள் என்கிற
நிஜத்தை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

காலத்திற்கும் நின்று நிலைத்து
நாடே வியந்து மெச்சத்தகு
காரியங்களை ஆற்றி
இன்னும் இன்னும்
புகழ் கொள்ளுங்கள்.
அதுதான் அழகிலும் அழகு!
காலத்திற்கும் அதுதான் நின்று பேசும்!

மீண்டும் உங்களுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

சென்ற முறை
கலைஞர் கருணாநிதி அவர்கள்
தமிழக முதல்வராக
பதவியேறிய போது
அவரது பார்வைக்கு வைத்த
அதே கோரிக்கைகளை
இப்போது
உங்களது பார்வைக்கும் வைத்திருக்கிறேன்.
நீங்களாவது அதனை
திரும்பிப் பார்க்கவேண்டும்.
திரும்பிப் பார்ப்பீர்களென நம்புகிறேன்.
எப்படியோ நல்லதே நடக்கணும்.
நல்லது சரியான தருணத்தில் நடந்தும் தீரும்.

*

1. வாழ்வின் ஆதாரமான மின்சார உற்பத்தியில்…
சுயதேவை பூர்த்திக்கு முயலுதல் வேண்டும்.

2. மாவட்டங்கள் தோறும்
பெரிய தொழில்வளங்களை
திட்டமிட்டு பெருக்குதல் வேண்டும்.

3. சிறு நகரங்கள் மற்றும்
சிறிய பஞ்சாயத்துகள் தோறும்
சிறுதொழில்களின் வளம் காண வேண்டும்.

4. தமிழகத்தின் உற்பத்திப் பொருட்கள்,
பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதை
ஊக்குவித்தல் வேண்டும்.

5. படித்து வெளிவரும் மாணவர்களுக்கு
தகுந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருதல் வேண்டும்.
அல்லது, அவர்களுக்கு அவர்களின் அடிப்படைக்கேற்ப
தொழில் தொடங்க, ‘கவுன்சிலிங்’ அமைத்து பயிற்சிகளுடன்
அவர்களை முன்னெடுத்துச் செல்லுதல் வேண்டும்.

6. தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில்
மாணவர்கள் சேர்க்கைக்காண கட்டணச் சுமையினையும்,
வருடாந்திர ‘பீஸ்’ என்கிற கட்டணச் சுமையினையும்
குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

7. விவசாய இடுபொருட்களின் விலையினை
குறைத்தல் வேண்டும்.

8. விவசாய சம்பந்தமான உபயோகப் பொருட்களுக்கு
தொடர்ந்து மானியம் தருதல் வேண்டும்.

9. விவசாயத்தின் ஆதாரமான நீர்ப்பாசனத்திற்கு
அரசு உறுதிசெய்தல் வேண்டும்.

10. முப்பது வருடகாலத்திற்கும் மேல் நீடித்துவரும்
காவிரிப் பிரச்சனைக்கு விரைவில்
சுமுகமுடிவு காணுதல் வேண்டும்.
மற்றும், பெரியார் அணையின் நீர் பாசனப்பிரச்சனைகள் குறித்து
கேரள அரசுடன் பேசி தீர்வுகாணுதல் வேண்டும்.

11. தலைநகரின் தண்ணீர் பிரச்சனைக்கு
நிறந்தரத் தீர்வுகாணுதல் வேண்டும்.

12. இனி ஒருமுறை,
சுனாமியால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாமல்
நிரந்தர பாதுகப்பு வளையங்கள் அமைத்தல் வேண்டும்.

13. பெருமழைக் காலத்தில்,
நகரங்கள் மழை நீர் சூழச் சிக்கி
மக்கள் அவதிக்குள்ளாகாத வண்ணம்,
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு
திட்டமிடல் வேண்டும்.

14. கடலோரத் தமிழகம் தழுவி,
கடல் வழியே வியாபாரப் போக்குவரத்திற்கு
கப்பல் சர்வீஸ்களை ஏற்படுத்தி
உள் நாட்டு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய
ஆவணம் செய்தல் வேண்டும்.

15. தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த,
மற்றும் பிரபல்யமான சுற்றுலாத் தலங்களை செம்மைப்படுத்தி,
உலகத்தரத்தில் உயர்த்தல் வேண்டும்.
உலக அளவில் விளம்பரம் செய்து,
உலசுற்றுலாப் பயணிகளைக் கவர்தலும் வேண்டும்.

16. மழைநீர் வீணே கடலில் விரயமாவதைத் தடுக்க,
தமிழகம் தழுவி
எல்லா இடங்களிலும் அதனைச் சேமிக்கும் பொருட்டு
ஏரிகள், அணைகள் அமைக்க திட்டங்கள் வகுத்து,
‘ஏரிகளே இல்லாத கிராமங்களே / டவுன்களே இல்லை’
என்கின்ற அளவுக்கு நீர் நிலைகளை
புதிதாக ஏற்படுத்துதல் வேண்டும்,
பழைய ஏரிகளையும், குளங்களையும் முழுமையாக
தூர்வாரி செப்பனிடுதலும் வேண்டும்.

17. ஐம்பது வடத்திற்குப் பிறகு
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்,
கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது
புவி ஆய்வாளர்களின் கணிப்பு கூறுகிறது.
அதையேதான் யு.என்.எ. வின் அறிக்கையும் கூறுகிறது.
ஆக, வருங்காலத்தில் நாம் எதிர்கொள்ள இருக்கும்
குடிநீர் வறட்சியை போக்க
இன்றே திட்டங்கள் வகுத்தல் வேண்டும்.

18. கிராமங்களை நகரங்களோடு இணைக்கும்
ஏனைய சாலைகளையும் அகலப்படுத்தல் வேண்டும்.
அந்தச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தலும் வேண்டும்.

19. நாட்டில் பருவ மழை தட்டாது பெய்யவும்,
நாட்டில் சுபிட்சம் தழைக்கவும்,
பலநோக்கு சிந்தனையின் அடிப்படையில்,
மலைகளிலும், மலைச்சார்ந்த பகுதிகளிலும்,
நாட்டின் நீர்நிலை கண்ட பகுதிகளிலெல்லாம்
மரக் காடுகளை ஏற்படுத்த வேண்டும்.

20. பெண் அடிமைத்தனம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,
ஆண்களுக்கு நிகரான சமஅந்தஸ்து அவர்களுக்கு
ஏனையத்துறைகளிலும் கிட்ட,
தீர்க்கமான சட்டங்களை இயற்றி,
செயல்படுத்தவும் வேண்டும்.

நன்றி…
தாழ்மையுடன்


தாஜ் | satajdeen@gmail.com

5 பின்னூட்டங்கள்

 1. 21/05/2011 இல் 10:35

  Taj,
  I haven’ Takil Font.Does’t matter
  Crocodile gone Alligater comes
  Nothing differance

 2. 21/05/2011 இல் 15:58

  எனக்கென்னவோ தாஜ் பாவம்னுதான் தோணுது.
  இதெல்லாம் அங்கே கேட்கவா போகுது?
  ஆயினும், அந்த ஆசைகள் எனக்கும், எல்லோருக்கும்
  இருக்கத்தான் செய்கிறது.

  சிலநூறு கிலோமீட்டர் (சொந்தப்)பயணத்துக்கே ஹெலிகாப்டர் தேவைப்படும் முதல்வரிடம், இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி.

  மக்கள்/தொண்டர்களிடம் காட்டும் அதிகபட்ச நெருக்கமே, உப்பரிகை தரிசனம்தான். (மம்தா பானர்ஜியைப் பார்த்து அவர்கள் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்)

  ஜெ. மீது போனதடவை மு.க., ஊழல் வழக்கெதுவும் போடாததால், இவர் மு.க. குடும்பத்தின் மீது வழக்குப்போடும் சிரமமும் இல்லை.
  ஒண்டிக்கட்டைக்கு அத்தனை பணத்தேவையும் இல்லை. உள்ளதே போதும்.

  பொது வாழ்வுக்கு வந்ததே புகழுக்காக எனில், இரண்டு தடவைகளில் என்னென்னவோ செய்து எங்கோ சென்றிருக்கலாம், புகழில். ஆனால் உண்மை அதுவல்லவே?

  உள்மன அரிப்பும், ஈகோவும் (நான்), தான் நம்புவதை மற்றவர் சிரமேற்றே ஆகவேண்டும் என்ற அகங்காரமுமே வெளித்தெரிந்தது அன்று.

  இன்னும் ஒன்றும் தாமதமாகவில்லை. இப்பொழுது ஆரம்பித்தால்கூட போதும். ஐந்து வருடத்தில் பழைய தவறுகளை நிரந்தரமாக மறக்கடித்துவிடலாம்.

  அதற்கான அறிவும் துணிவும் ஜெ.க்கு இருக்கிறது, நிறையவே.

  நமக்கென்ன?
  நம்புவோம்.
  நல்லதே
  நடக்கும் என்று;
  நம்மால் முடிந்தது அதுதான்.
  (போதும், இன்னொரு ‘ந’ வேண்டாம்)

 3. maleek said,

  22/05/2011 இல் 10:13

  முதல்வர் அவர்களுக்கு அன்புக்கட்டளைகள்

  நம் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம்
  வராமல் எல்லாத்தரப்பு மக்களையும் நீதியோடு
  நடத்துங்கள்.இந்த விசயத்தில் (மோடி)மஸ்தான்களின்
  ஜால வித்தையை நம்பாதீர்கள்.

  நமக்கு உணவளிக்கும் விவசாய பெருங்குடிமக்களின்
  நலனில் அக்கறைக்காட்டுங்கள்

  தொழிற்சாலைகள் இன்னும் பல திறந்து தொழில்துறையில்
  நம் மாநிலத்தை முன்னுக்கு கொண்டுவாருங்கள்.

  பள்ளிகளில் சிறப்பான திட்டங்களை அமுல்படுத்தி
  கல்வியின் தரத்தை உயர்த்த முற்படுங்கள்,மாணவ மாணவியர்கள்
  தான் நாளைய இந்தியா என்பதை அறியாதவல்லர் நீங்கள்.

  அண்டை மாநிலங்களோடு நேசக்கரம் நீட்டி துவேசஉணர்வின்றி
  மக்கள் வாழ துணை செய்யுங்கள்.

  பக்தியின் பெயரால் மனிதஅறிவுத்தின்னும் போலி(ஆ)சாமிகளின்
  முகத்திரையைக்கிழியுங்கள்.

  பழி வாங்குதல்,பழைய விரோதங்கள் போன்றவற்றை மறந்து
  மன்னித்து,மக்கள் “அம்மா என்றால் அன்பு” என்று சொல்லும்படி
  மேன்மைப்படுங்கள்.

  மக்களின் மறதியை மனதில் வைத்துக்கொண்டு வாக்குறுதிகளை
  மறந்துவிடாதீர்கள் ..அடுத்த தேர்தலில் அவர்கள் உங்களையும்
  மறப்பது எளிதல்ல.

  சட்டமன்ற உறுப்பினர்களை அவரவர் தொகுதிகளுக்குசென்று
  குறை நிறைகளைகேட்டு அறியச்சொல்லுங்கள் .

  நீங்களும் எல்லா ஊர்களுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும்
  மன்னார்குடிக்கு மட்டும் போகாதீர்கள்!

 4. ஹமீது said,

  22/05/2011 இல் 20:53

  நீங்களும் எல்லா ஊர்களுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும்
  மன்னார்குடிக்கு மட்டும் போகாதீர்கள். சுற்று பயணம் சென்றால் தங்களின் சுற்றும்(பருமனும்) கொஞ்சம் குறையும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s